EVA16

ELS_Cover3-7216aab5

EVA16

16

மிகைப்படுத்தப்பட்ட அலங்காரங்களைக் கொண்ட அந்த விசாலமான மேல் தள அறையில் திரைச்சீலை போர்த்திய ஜன்னல்கள் நடுவே, அருவி கரையில் அமர்ந்தபடி நிலையான புன்னகையுடன் ஐரோப்பிய ஓவிய பெண்களின் பெரிய அளவிலான அழகோவியம் அழகு சேர்த்திருந்தது.  

கார்பெட் விரித்த தரையில் எதிர் எதிரே L வடிவ வெள்ளை சோபாக்களில், ஆதன், பார்கவ் மற்றும் தருண் குடும்பத்தார் அமர்ந்திருந்தனர். 

அருகில் தேக்கு நாற்காலிகளில் சந்திரன், அருகில் ஆதன் உடன் விஹான் அமர்ந்து இருந்தனர்.

அறையில் குழுமியிருந்தவர்கள் மனதிலிருந்த உஷ்ணத்தைக் குளிர் விக்க முடியாமல் ஏசி திணறிக் கொண்டிருந்தது.

கதவு திறக்கப்பட பார்கவின் பின்னாலிருந்து அழகிய இளம் கத்திரிப்பூ வண்ண பட்டுப் புடவையில், புதுப்பெண் அலங்காரத்துடன் வெளிப்பட்டாள் சஹானா. 

ஒருவித இறுக்கத்தோடு அமர்ந்திருந்த ஆதன், பெண்ணவள் வருகையால் நிமிர்ந்து பார்க்க, அவள் தோற்றத்தில் விழிகள் விரிந்தான். புடவையில் எந்தப் பெண்ணுமே அழகு கூடித்தான் தெரிவாளோ?

சந்திரன் மகளைக் கண்ணால் அழைக்க, தந்தையின் அருகே சென்று பணிவுடன் நின்றாள். 

ஆதனின் திட்டப்படி ஈவா சஹானாவை தொடர்பு கொள்ள, காதிலிருந்த கருவியின் மென் அதிர்வில் காதோரம் விளையாடிய கூந்தல் கற்றையைச் சரி செய்வதுபோல் இயர் பட்டை உயிர்ப்பித்தவள், ஓரக்கண்ணால் ஆதனை பார்க்க அவனோ, ‘நான் இருக்கிறேன்’ என்பதுபோல் ஒரு முறை மென்மையாகக் கண்களை மூடித் திறந்தான்.

சந்திரன், “சஹானா நான் கேக்குறதுக்கு எல்லாம் எனக்கு பதில் வேணும். புரியுதா?” மென்மையான கண்டிப்புடன் கேட்க, சஹானா சரியென்று தலையசைத்தாள். 

“சில வருஷங்களுக்கு முன்னாடி உனக்கு ஒரு பையன் கூட பழக்கம் இருந்ததா சொன்னாங்களே, அது ஆதனா?”  

அதிர்ந்து நிமிர்ந்தவள் பேசும் முன்னே, ஈவா அவள் காதில், “ஹலோ கேக்குதா? ஹலோ!” கூச்சலிட, அதேநேரம் சந்திரனும், “அந்த பையன் ஆதன் தானா சொல்லு?” தன் கேள்வியை மறுபடி கேட்க, 

பதற்றமும் கோபமும் சேர சஹானா, “கேக்குது ஏன் கத்தற?” உரக்கக் கேட்டுவிட்டாள். 

ஆதன் நெற்றியைப் பிடித்துக்கொள்ள, பார்கவ் கண்களை மூடிக்கொண்டான்.

சந்திரன் அதிர்ந்து, “என்ன? யார் கத்துறா?” என்று குரல் உயர்த்த, 

“அப்பா அது… அது ஏதோ ஒரு…” தடுமாறியவள் பார்வையால் பார்கவை துணைக்கு அழைக்க, 

அவனோ, “பயப்படாத பதில் சொல்லுடா, அப்பா என்ன கேட்க…” அவனை குறுக்கிட்ட சந்திரனின், “பார்கவா அவ பேசட்டும்” என்ற ஸஅதட்டலில், “சாரி பா” என்றவன் கண்களால் பேசும்படி தங்கையை தூண்டினான்.  

சந்திரன் மூன்றாவது முறையும் அதே கேள்வியைக் கேட்க, “அது அன்னைக்கு…” துவங்கியவள், 

“கேக்குறார்ல ஆமாம்ன்னு சொல்லு, ஆமாம்னு சொல்லு ஜூனியர்” காதுக்குள் ஈவாவின் படபடப்பில் அவசரத்தில் பொறுமையிழந்து,  “ஆமாம்ன்னு தான் சொல்றேன்ல?” கோபமாக பதில் தந்து விட்டாள். 

அங்கிருந்த அனைவரின் முகங்களும் மாறியது.

மறுபடி ஈவா, “பாஸ் சொன்னார், நீ என்கிட்டே பேசக் கூடாது அங்க மட்டும் தான் பேசணும்னு. கத்தி கத்தி பதில் பேசுறியாம்” எச்சரிக்க நடந்ததை உணர்ந்தவள், ஆதனை பார்க்க மொபைலில் எதையோ டைப் செய்து கொண்டிருந்தவன் காதை தடவினான். 

தன்னை முறைத்திருந்த தந்தையிடம், “அது ஆதன் தான்” என்றாள்.

“பொய் சொல்றா” என்று ஆத்திரமாக எழுந்த தருண், சந்திரனின் பார்வையில் வேண்டா வெறுப்பாக அமர்ந்து கொண்டான்.  

சில நொடிகள் மௌனமாகச் சுவாசித்தவர், “ஆதன் உன்னை பார்க்க அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு வருவானா?” என்று கேட்க, 

ஆதன் காதைத் தொட, சஹானா ஆமென்று தலையசைத்தாள். 

“எப்படி உங்க ரெண்டு பேருக்கும் பழக்கம்?” சந்திரன் கேட்க, 

ஈவா, “நான் சொல்றதை இனிமே அப்படியே உணர்ச்சியோட சொல்லனும். அப்பா… ம்ம் ஸ்டார்ட். அப்பா…” 

எச்சிலை விழுங்கியவள், “அப்பா அது…” பயத்தில் புடவை தலைப்பை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

“ஒரு நாள் என் ஸ்கூல் பேக்கை பஸ் ஸ்டாப்பிலே பஸ்ல ஏறுற அவசரத்துல மறந்து வச்சுட்டேன். ஆதன் அதை கொடுக்க, பஸ்ஸை பைக்ல துரத்திக்கிட்டே வந்தார். அப்போ தான் முதல் தடவை அவரை பார்த்தேன்” ஆதனை பார்த்தாள். அவன் காதை தடவிக் கொண்டான்.  

“ஆமா” என்று சம்பந்தமே இல்லாமல் சொன்னவள் ஆதனின் முறைப்பில்  நாக்கை கடித்துக்கொண்டு, 

“அப்போ அப்போ ஸ்கூல் வாசல்ல வந்து என்னை சந்திப்பார்” என்றவள் நிறுத்தினாள். 

ஆதன், “பரவாயில்ல சொல்லிடு. எல்லாத்தையுமே சொல்லிடு” அப்பாவியாகச் சொல்ல, திருதிருவென விழித்தவள், பார்கவை பார்க்க அவனும் கண்களால் கெஞ்ச,  ‘ஐயோ என்னடா சொல்ல வைக்க போறீங்க?’ அவள் உடல் சில்லிட்டது. 

சந்திரன், “ம்ம்” என்ற நொடி,  

ஈவாவின் சொல்படி, 

“ஒரு நாள் என்னை காதலிக்கிறதா சொன்னார்…” என்றவள்  ‘அடப்பாவிகளா!’  தோளைச் சோர்வாகத் தொங்கவிட்டு நிறுத்த, சந்திரன் சஹானாவைத் தொடர ஆணையிட்டார்.  

அவளும் இஷ்டதெய்வத்தை வேண்டிக்கொண்டு,  “ஒரு நாள் ஆதன் என்னைக் காதலிக்கிறதா சொன்னார்” வேகமாகச் சுவாசித்தவள் ஆதனின் விரல்களை மூக்கில் கண்டும், 

“எனக்கும் அவரை பிடிச்சிருந்தது, அவரோட வசீகரமான முகம்…” ஆதனை பார்த்தாள்.  வசீகரன் தான். மனம் ஒப்புக்கொண்டது. 

சஹானாவை விட்டுப் பார்வையை விலக்காதவன், கண் இமைக்காமல் அவளையே பார்க்க உடலெங்கும் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தவள் பதற்றத்தில் மறுபடி, “என்னை காதலிக்கிறதா சொன்னார்… சொல்லி…” என்று திக்கி திணறினாள். 

“நீ என்ன சொன்ன?” சந்திரன் கடுமையாகக் கேட்டும் அமைதியாக நின்றவள், ஈவாவின், “ஜூனியர் ம்ம்ம்” மிரட்டலில் ஆதனை பார்க்க, மூக்கை அழுத்தமாகத் தேய்த்துக் கொண்டவன் எங்கோ பார்த்தான். 

அவன் குறிப்பை உணர்ந்தவள், “மறுத்துட்டேன்” புரியாத பாரம் மனதை அழுத்த வார்த்தைகள் வருத்தமாகவே வெளிவந்தன. “அவர் கோச்சுக்கிட்டு போயிட்டார். அன்னிக்கி தான் நான் இவர்கூட பேசிகிட்டு இருந்ததை யாரோ உங்ககிட்ட சொல்லி… நீங்க என்னை…” 

தன்னை நம்ப மறுத்துத் தன் பெற்றோர்களே தன் சின்னஞ்சிறு மனதை உடைத்தெறியத் துவங்கிய நினைவுகள் கண்முன்னே தோன்ற, முகம் இறுகி நின்றாள். 

ஈவா காதில் தொடர சொல்லி கத்த, சந்திரன் தொண்டையை செரும, பூர்ணிமாவின், “என்னடி சொல்றே?“ அனைத்தும் ஒரே நேரத்தில் அவளை துளைக்க, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். 

உடல் நடுங்கி, வியர்த்து, கால்கள் வலிமையிழந்து தடுமாறியவளை முந்திக்கொண்டு தங்கியிருந்தான் ஆதன்.

“உட்கார்ந்து பேசு சஹா. தண்ணி வேணுமா?” பார்கவ் இழுத்துப்போட்ட நாற்காலியில் அவளை அமரவைத்தான்.

பார்கவ் தண்ணீர் கொடுக்க அதை வேகமாகப் பருகியவள் நெஞ்சைத் தடவிக்கொள்ள,  ஆதன் அவள் முகத்தின் அருகே குனிந்து, கைக்குட்டையால் வியர்வையைத் துடைத்து அவள் காதோடு, “உன்னால முடியும். வெண்ணெய் திரண்டு வர நேரம், தாழியை உடைச்சுடாதே ப்ளீஸ் டா” என்று தைரியம் சொன்னான்.  

அவளை நெருங்கியிருந்த பூர்ணிமா, “என்னங்க இது? நம்ம கண்ணு முன்னாடியே நம்ம பெண்ணை தொடுறான்” என்று அவன் கையைத் தட்டப்போக, அவரை ஒரு முறை விட்ட ஆதன், 

“பொண்ணு தள்ளாடுறது உங்க கண்ணுக்கு தெரியலை, நான் தாங்கினது தப்பா போச்சோ?” 

“ஆதன்!” ரகுநாத்தின் கண்டிப்பான அழைப்பில் திரும்பியவன், “பின்ன என்ன டேட்?” என்று ஆரம்பிக்க, 

“பெரியவங்க கிட்ட இப்படியா பேசுவ?” தந்தையின் மிரட்டலில் வேண்டா வெறுப்பாகப் பூர்ணிமாவிடம் மன்னிப்பைக் கேட்டவன்,  மீண்டும் சஹானாவின் முன் அமர்ந்தான். 

அனைத்தையும் சந்திரன் குறுக்கிடாமல் கவனித்திருந்தார். கூடவே தருணின் பெற்றோர் சஹானாவை முறைப்பதையும், தருணும் பூர்ணிமாவும் ஜாடை பேசுவதையும் கண்டும் காணாமல் திரும்பியவர், “அதுக்கு அப்புறம் சந்திச்சுக்கிட்டிங்களா?” மகளைக் கேட்டார்.   

சில நிமிடங்கள் ஆழமாகச் சுவாசித்து வலுக்கட்டாயமாகச் சுதாரித்தவள், “ஆமா சில தடவ பார்த்து பேசிக்கிட்டோம்” என்றாள் சன்னமாக. 

ஈவாவின் “ஜுனியர்  பாஸ் சொல்ல சொன்னார் உன் கண்ணுல காதலே இல்லையாம் கண்றாவியா முழிக்கிறியாம்” ஏளனமாகப் பேச்சில் கோவமாக நிமிர்ந்து ஆதனை, ‘வா உன்னை கவனிச்சுக்கறேன்’ என்று பல்லைக்கடித்துக் கொண்டு பார்த்தாள். 

அதுவரை மௌனமாக இருந்த விஹான் ஆதனிடம், “மேட்! உன் லவ்வரா?” குசுகுசுக்க, சஹானாவின் முறைப்பின் அர்த்தம் புரிந்து புன்னகைத்த ஆதன் ஆமென்று தலையசைத்தான். 

சந்திரன், “அப்புறம்?” மகளைப் பார்க்க, 

“எனக்கும் அவரை பிடிக்க ஆரம்பிச்சு…”  நொடி நேரம் நிறுத்தியவள், திடீரென்று புது உத்வேகத்துடன்,  

“அவரோட உருவம் என் மனசுல பதிஞ்சு போச்சு. அவருக்கே தெரியாம ஆதன் எனக்குள்ள ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திட்டார். அவரை முதல் முதலா பார்த்த அந்த நொடி தொடங்கி இப்போ வரை ஒரு நாள் கூட அவரை நான் நினைக்காம இருந்ததில்லை. 

ஆதன் வந்த அப்புறம்தான் என் வாழ்க்கையே இத்தனை அழகா ஆகியிருக்கு…”  கண்களில் காதலும் உணர்ச்சியும் ததும்ப சொல்பவளை, அதிர்ந்து பார்த்திருந்த ஆதனின் இதயம் அதிவேகமாக துடித்தது.  

அவன் ஈவாவிடம் சொன்னது இது இல்லையே? ‘ஒரு வேளை ஈவா டைலாக்கை மாத்தி சொல்லிக்கொடுக்குதா?’ 

சஹானாவை அவன் உற்று பார்க்க, அவளோ உள்ளதைத் துளைக்கும் அந்த பார்வையில் கன்னங்கள் சூடேற தாளாமல் பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள். 

ஈவா, “நான் சொல்றதை மட்டும் பேசு முட்டாள்” என்ற கூச்சலில் நினைவுக்கு வந்தவள் மறுபடி பேச வாய் திறக்கும் முன்னே, அந்த அழகிய நொடி நேர அமைதியைக் கலைத்தது தருணின்,  “அவ பொய் சொல்றா மாமா!” என்ற கூச்சல்.

அனைவரின் பார்வையும் இப்பொழுது அவன்மேல் பாய, சந்திரன், “என்ன பொய்?” அதட்டலாகவே கேட்டார். 

தருண் ஆதனை சுட்டிக்காட்டி, “அது இவன் இல்ல. அவன் வேற. சஹானா காதலிக்கிறதா நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டு உங்க கிட்ட சொல்லிட்டேன்” என்று வேக வேகமாகச் சொல்லிப் பூர்ணிமாவைப் பார்க்க அவரோ அவனை முறைத்துவிட்டு, 

“நீயேன் பயப்படுறே மாப்பிள்ள? அவ சொல்றது எல்லாமே பொய்தான், அந்த பையன் ஆதன் இல்ல” என்றார்.

சந்திரன் மனைவியை வினோதமாகப் பார்த்து, “உனக்கு அந்த பையன் யார்னு தெரியுமா? எப்போ பார்த்தே?” என்று கேட்டதில், உதட்டைக் கடித்துக்கொண்ட பூர்ணிமா, “அது… அது… எனக்கு தெரியும் அது ஆதன் இல்ல” என்றார் உறுதியாக. 

“சம்மந்தப்பட்ட பெண்ணே சொல்லும்போது நீ என்னமா குறுக்க? அப்போ அது யாருன்னு நீயே சொல்லு!” தாத்தா கத்த, சந்திரனும் பார்வையால் அதையே கேட்க, தருணை பார்த்த பூர்ணிமா, 

“தருண் அந்த பையனை எனக்கு காட்டினான். பள்ளிக்கூட வாசல்ல, அது இவன் இல்ல” ஆதனை பார்த்தபடி அவர் சாதித்தார்.  

“அவன் நான் தான்னு நானே சொல்றேன், உங்க பொண்ணும் சொல்றா. ஆறு வருஷத்துக்கு முன்னாடி அதுவும் தூரத்திலிருந்து பார்த்த நீங்க எப்படி மறுக்க முடியும்?” ஆதன் கேட்க, தடுமாறிய பூர்ணிமா, “எனக்கு தெரியும். அது நீ இல்ல” என்று கத்தினார். 

“அது ஆதனோ இல்லையோ எனக்கு அது தேவை இல்லை. நீ சும்மா உட்கார்! நான் சஹானாவை கேக்கனும்” சந்திரன் அவரை அடக்க, அடிபட்ட  பார்வை பார்த்தவர் தருணை பார்வையால் தூண்ட, தருண், “மாமா நான் சொல்…” துவங்க, 

ஆவேசமாக அவன் பேச்சை நிறுத்திய சந்திரன், “நடுவுல யாரவது மறுபடி குறுக்கிட்டீங்க தொலைச்சு கட்டிடுவேன் சொல்லிட்டேன்!” எழுந்து துண்டை உதறிக் கர்ஜித்தவரின் குரலிலிருந்த வலிமையில் அந்த அறை நிசப்தமானது. 

தன் பெற்றோரின் உணர்வுகளைத் தெரிந்துகொள்ளத் திரும்பிப் பார்க்க நினைத்த ஆதன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

அசாத்திய பொறுமையுடன் ரகுநாத் எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாது அமைதியாக இருக்க,  மீனாட்சி, எத்தனை வருடங்களாக ஆதன் தங்களுக்குத் தெரியாமல் இந்த பெண்ணை காதலிக்கிறான்? ஏன் மறைத்தான்? தான் அண்ணனுக்குக் கொடுத்த வாக்கு? என்னென்னவோ எண்ணங்கள் குழப்பங்கள், வலி, அதிர்ச்சி மனதை உணர்ச்சி குவியலாக அழுத்த இயலாமையில் அமைதியாக இருந்தார். 

விஹானுக்கோ புரியாத மொழி திரைப்படத்தை பார்க்கும் வினோத உணர்வு, நண்பனே புதிதாகத் தெரிய, விளங்காமல் மலங்க மலங்க விழித்திருந்தான். 

சந்திரன், சஹானாவிடம் திரும்பி, “மேல சொல்லு. அப்போ நாங்க மறுத்த அப்புறமும் நீ அவனை சந்திச்சியா சென்னைல?” கேட்டார்.

ஆதன் காதை தடவ, சஹானா ஆமென்று சொல்லும்போதே, மூக்கு அரிக்க அவன் அனிச்சையாய் சொரிந்துகொள்ள, சஹானாவோ வேகமாக “இல்லை” என்றாள். 

ஆதன் மீண்டும் வேகமாகக் காதை தொட அவள் குழப்பத்துடன், “ஆமா… இல்ல… அப்படி இல்ல, ஆனா” என்று தடுமாற, ஆதன் கண்களால் அவளை எச்சரிக்க, பார்கவ் பெருமூச்சு விட்டான். 

“ஆமா. எனக்கு உதவி தேவைப்பட்டது. தருண் என்கிட்டே தப்பா நடந்துகிட்டபோது…” பேச்சை நிறுத்தியவள் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். 

ஆக்ரோஷமாகக் குறுக்கிட்ட தவமதி, “ஏய்! எவ்வளவு தைரியமிருந்தா என் பையனை பத்தி இப்படி சொல்லுவ?” கத்த, 

அவரை அடக்கிய தருண், “நான் அப்படி பட்டவன் இல்ல. அவ தப்பிக்க என்மேல பழிபோடுறா“ குற்றம்சாட்டினான்.   

“ஆமா அவன் அப்படி இல்ல” பூர்ணிமாவும் சேர்ந்துகொள்ள, சஹானாவின் மனம் துவண்டது.

“மாமா, உண்மையை சொல்ல வேண்டாம்னு இருந்தேன். சஹானா தான் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டா! சென்னையில நான் கண்டிச்சு அறிவுரை சொன்னேன். ஆனா, மறுபடி காஞ்சிபுரத்துலயும்  ஒருநாள் ரொம்ப அத்து மீறிட்டா, நான் என்ன செய்ய முடியும்? அதான்…” தருண் முடிக்கும் முன்னே, ஆதன் தருணை அறைந்திருந்தான்.  

ரங்கசாமி தடுக்க, ரகளை துவங்க, இடையில் விஹான் ஆதனை இழுக்க, மறுபக்கம் அரும்பாடு பட்டுச் சந்திரனும் ரகுநாத்தும் அனைவரையும் சமாதானம் செய்ய,  இங்கே சஹானாவின் உலகமோ ஸ்தம்பித்து நின்றிருந்தது. 

‘எவ்வளவு பெரிய பழி! நான் இவன்கிட்ட தப்பான்னா… என்ன அர்த்தம்? ஐயோ!’ கண்கள் மடைதிறக்க முகத்தை கைகளால் மூடிக்கொண்டு கேவிய பேத்தியைச் சமாதானம் செய்ய ஓடிய பாட்டியைத் தடுத்த சந்திரன், “இப்ப உண்மையை சொல்லு சஹானா” என்று அதட்டினார். 

“அவ சொல்றது எல்லாம் பொய் பா!” என்றான் பார்கவ்.

திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அண்ணனைப் பார்க்க, அவள் பார்வையைத் தவிர்த்த பார்கவோ, “தருண் அப்படி பட்டவன் இல்ல, எனக்கு தெரியும்” என்றான் தீர்க்கமாக. 

“அப்படி சொல்லுடா என் தங்கம்” பூர்ணிமா ஏளனமாக மகளை பார்க்க, தருண் வாயடைத்துப் போயிருந்தான்.

சந்திரனோ அதிர்ந்தாலும் வெளிக்காட்டாது, “என்ன சொல்றே?” என்று மகனைக் கேட்க,  

“தருண் தப்பா நடக்க மாட்டான்னு சொல்றேன். அவனுக்கு…” நிறுத்தம் கொடுத்துத் தருணை பார்த்த பார்கவ்,  “என்னை மன்னிச்சுடு உண்மையை சொல்ல வேண்டிய இக்கட்டில் இருக்கேன்” என்றவன் வருத்தத்துடன்,  

“அவனால எந்த பெண்ணையும் தொட முடியாதுப்பா, சின்ன வயசுல நடந்த ஒரு விபத்துல தருணுக்கு ஆண்மை போயிடுச்சு” என்றான் சாதாரணமாக. 

“டேய்! என்னடா சொல்ற?” என்று ரங்கசாமி அவனை அடிக்கப் பாய, அவரை தள்ளிவிட்டு பார்கவை நெருங்கிய தருண், “ஏன் பொய் சொல்றே?” என்ற முறைத்தான். 

ஆதன், “பார்கவ் சொல்றது உண்மை தான்!” என்றான். 

“டேய்!” தருண் பேசும் முன்னே, ஆதன் சந்திரனிடம், “அங்கிள், ட்ரீட்மெண்ட் எடுக்க தருண் அடிக்கடி வெளிநாட்டுக்கு போறான்” சில காகிதங்களை அருகிலிருந்த பையிலிருந்து எடுத்து சந்திரனிடம் கொடுத்து,  

“இதெல்லாம் தருணோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ், பயண விவரங்கள், பேங்க் ஸ்டேட்மெண்ட்ஸ். பாருங்க எப்படி கொட்டி கொட்டி செலவு செஞ்சுருக்காங்கன்னு. இன்னும் செய்றாங்க” என்று விளக்கினான். 

“டேய்! ஏன்டா பொய் சொல்றீங்க? நான் அப்படி இல்ல மாமா! நான்… நல்லா தான் இருக்கேன். அதெல்லாம் நான்… அதுக்காக செஞ்ச பிரயாணம் இல்ல மாமா” தருண் துடித்தான். 

“தருண் உக்காரு” பதறிய ரங்கசாமியும் தவமதியும் மகனை அடக்க, அவர்களை உதறித் தள்ளிய தருண், 

“மாமா என்னை நம்புங்க அதெல்லாம்” நொடி தயங்கியவன், “நான்… சூதாட போன ட்ரிப்ஸ். எல்லாமே கசினோ, க்ளப். தயவுசெஞ்சு அப்படி என்னை அப்படி பாக்காதீங்க மாமா… நான் ஆண்மை இல்லாதவனா இருந்தா எப்படி சஹானாவை தொட போவேன்?” கத்தியவன் அனைவரும் தன்னை ஒருமாதிரி பார்ப்பதைத் தாங்காது, 

“ஐயோ நம்புங்களேன் நான் நல்லாத்தான் இருக்கேன்” கூச்சலிட்டபடி ஆவேசமாக சஹானாவை நெருங்கியவன், “சகு நீ சொல்லு! நீயே சொல்லு நான்… நான் உன்னை… ஐயோ ! சொல்லேன் நான் அப்படி இல்லைனு சொல்லேன்!” வெறிபிடித்தவன் போல அவள் தோளைப்பிடித்து உலுக்க, “ஐயோ!” அலறிய சஹானா இறுக்கமாகக் கண்களை மூடிக்கொண்டாள்.

தருணை அடித்துத்தள்ளி சஹானாவை அணைத்துக்கொள்ள மனம் துடிக்க, கைமுஷ்டியை இறுக்கமாக மூடிக்கொண்ட ஆதன் மார்பு அதிவேகமாக ஏறி இறங்க நின்றிருந்தான். 

பார்க்கவும் கண்கள் கலங்கினாலும் அரும்பாடுபட்டு அமைதியாக நின்றான்.  

நடப்பது பிடிக்காவிடினும் ஒரு பெண் இப்படி பலரால் துன்புறுத்தப்படுவது தாங்காமல் மீனாக்ஷி அனிச்சையாய் வேகமாக சஹானாவை நெருங்கி தருணை தள்ளிவிட்டு, அவளை அணைத்து ஆறுதல் படுத்த,  பூர்ணிமாவோ அனைத்தும் நடிப்பென்று கத்தி மகளைத் தூற்ற துவங்கினார். 

பொறுமையிழந்த ஆதன் பேசும் முன்னே சஹானா, “நிறுத்துங்க! நிறுத்துங்க! நிறுத்து…ங்க!” அழுகை தோய்ந்த முகத்தோடு ஆவேசமாகக் காதை பொத்தி அலறி நிமிர்ந்தவள், “அன்னிக்கு ஒரே ஒரு தடவை என்னை என்ன நடந்ததுன்னு கேட்டீங்களா? கேட்டிருந்தா இப்படி அசிங்கப்படுவேனா?” ஆக்ரோஷமாகக் கத்தினாள். 

முதல்முறை அதிர்ந்து பேசும் அவளை திடுக்கிட்டுப் பார்த்தனர் அவள் குடும்பத்தினர்.  

பேச வாயெடுத்த சந்திரனையே கைகாட்டி அடக்கினாள் சஹானா. 

சர்வ அலங்காரத்துடன் கண்ணில் விடாது வழியும் கண்ணீரை மறுபடி மறுபடி கோபமாகத்  துடைத்துக்கொண்டு  அனல் பறக்க நிற்பவள் தோற்றம் பார்கவிற்குமே புதிது. 

ஆதனோ தன் முன்னே மூச்சுவாங்க உதடு துடிக்க  நிற்கும் பெண்ணவள், தோற்றமே சொன்னது, பல வருடங்களாக தன் சுக தூங்ககங்களையோ, பயங்களையோ கேட்க யாருமே இல்லாமல் தவித்த பேதை அவளென. 

‘ஒருத்தராவது தன் பேச்சை கேளுங்களேன். ஒரே ஒரு முறை கேளுங்களேன்’ சஹானாவின் மனம் சத்தமின்றி கதறுவது அவள் கண்ணில் தெரிந்தது. 

தங்கள் திட்டத்திற்கு புறம்பாக நடந்தாலும் சஹானாவின் உணர்வுகளே முதன்மையானது என்று தீர்மானித்த ஆதன், “சொல்லு சஹா உன் மனசுல வர எல்லாத்தையும் சொல்லிடு. பயப்படாம சொல்லு நான் இருக்கேன்” என்றான். 

ஆற்றாமையுடன் அவனை பார்த்தவள், “என்ன சொல்ல சொல்றீங்க? உண்மையை பேசு பேசுன்னு வளக்குறாங்க ஆனா உண்மையை சொன்னா பொய்யின்னு பழிக்கிறாங்க. யாருக்கும் இங்க உண்மை வேண்டாம் ஆதன். வேண்டாம்” அலறினாள். 

“அவங்க கேக்கலைனா என்ன நாங்க கேக்குறோம்  நீ சொல்லுமா” தாத்தா கேட்க, பாட்டியும், “ஆமா சொல்லு கண்ணு” என்று கண் கலங்க, மீனாட்சியும், “சொல்லுமா” என்று பரிவுடன் கேட்க, சஹானாவின் பார்வையோ தந்தை தாயின் மீதே இருந்தது. 

“சொல்லுமா நான் என்ன செய்யனும்? எதுக்கு நான் இங்க இப்போ மன்னிப்பு கேக்கனும்? என்னை கெடுக்க வந்த உன் அண்ணன் பிள்ளையை இத்தனை வருமா காட்டிக்கொடுக்காமல் இருந்த தப்புக்கா? 

எதை நினைச்சு நான் வெக்கப்படனும்ப்பா? என்னை பெத்த நீங்களே என்னை நம்பாம கேள்வி கேட்டதுக்கா? பூட்டிவச்சு என் உலகத்தையே இருட்டடிச்சதுக்கா? 

நான் என்ன செய்யனும் சொல்லுங்க? இப்போ இங்கே வந்து துணிச்சலா பொண்ணு கேக்குற இவனை கட்டிக்கனுமா? என்னை கெடுக்க வந்தவன் கிட்டயே என் வாழ்க்கையை, என்னை, நான் கொடுக்கனுமா? இல்லை எந்த விதத்திலுமே எனக்கு சம்மந்தமே இல்லாம, என்னை யார்னே தெரியாதபோது கூட, என்னை காப்பாத்த தன்னோட வாழ்க்கையை பணயம் வச்சுட்டு செய்யாத தப்புக்கு உங்க எல்லார் கிட்டவும் கெட்ட பேர் வாங்கிகிட்டு,  நிக்கிற இந்த மனுஷனுக்கு என்னை கொடுக்கவா?  

இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க! நான் ஸ்கூல் படிக்கும்போது யாரையுமே காதலிக்கவே இல்லை! ஆனா இப்போ காதலிக்கிறேன். இவரை!” ஆதனை சுட்டிக்காட்டியவள், 

“இதெல்லாம் உங்க தப்பு!” என்றாள் பெற்றோரிடம். 

“நீங்கதான் என்னை உங்ககிட்டேந்து விலக வச்சீங்க. நீங்கதான் என்னை தனிமையில தள்ளினீங்க. நீங்கதான் என்னை ஆதனோட சஹானாவா மாத்தினீங்க. உலகத்தை பார்க்கவே பயந்துகிட்டு ஒடுங்கின என்னை ஆதன் இல்லைனா வாழவே முடியாதுன்னு நினைக்கவும் வச்சீங்க.  மனசளவுல  நான் ஆதன் கூடத்தான் வாழறேன். வாழப்போறேன்!” படபடவெனக் கொட்டித்தீர்த்தவள்,

தருணிடம் அதே ஆவேசமும் ஏளனமுமாக, “இதுக்கு அப்புறமும் நான் உனக்கு வேணுமா? வாடா கல்யாணம் செஞ்சுக்கலாம். ஆனா நான் மனசுல இவரை மட்டுமே சுமந்துக்கிட்டு  உன்கூட உணர்ச்சியே இல்லாம வாழ்வேன்.  சம்மதம்னா வா உனக்கு வேண்டியது நான் தானே என் மனசு இல்லையே” என்று கூற, தருண் அதிர்ந்து முகம் சுருக்கி எச்சில் விழுங்க, அவன் பெற்றோரோ தலை கவிழ்ந்திருந்தனர். 

பூர்ணிமா உடைந்து அமர்ந்துவிட, சந்திரன் மொத்தமாக நிலை தடுமாறிப் போனார். 

துவண்டு தரையில் அமர்ந்த சஹானா, “என்னால முடியல! எல்லாத்துக்கும் எல்லாருக்கும் பயந்து பயந்து, எதையும் மாத்தவும் முடியாம தாங்கவும் முடியாம கோழை மாதிரி ஓடி ஓடி ஒளிஞ்சு வாழவே பிடிக்கல. என் அம்மாகூட என்னை ஓடுகாலின்னு தானே…” பேசமுடியாமல் வெடித்தழ துவங்கினாள்.

எதையுமே யோசிக்கும் நிலையைக் கடந்திருந்த ஆதன் புயலென அவளை நெருங்கி மார்போடு சேர்த்துக்கொண்டான். அவர்களை விலக்க வந்த தருணை அடித்துக் கீழே தள்ளியிருந்தான் பார்கவ். விஹானோ ஆதனையும் சஹானாவையும் மறைத்தபடி அரணாய் வந்து நின்றான். 

பார்கவின் ஆக்ரோஷமான தாக்குதலிலிருந்து தருணை காப்பற்ற சந்திரனும், ரகுநாத்தும், ரங்கசாமியும் திண்டாடிப் போயினர். 

கலவரமாக இருந்த அந்த அறையில், எதையும் பொருட்படுத்தாது கண்களை மூடி சஹானாவை அணைத்தபடி மண்டியிட்டு அமர்ந்திருக்கும் மகனின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை வார்த்தைகளின்றி புரிந்துகொண்டார் ரகுநாத். 

உலகை மறந்து ஆதன் மார்பில் துவண்டிருந்த சஹானாவுக்கோ பலவருட வலியைச் சுமையை முதல் முறை கொஞ்சமேனும் வெளிப்படுத்திய நிம்மதியும், அவன் அணைப்பு தரும் பாதுகாப்பு உணர்வும் அவளை இன்னும் இன்னும் அவனுள் புதைந்துகொள்ளச் செய்தது. 

சஹானாவை இறுக்கமாக அணைத்துக்கொண்டிருந்த ஆதனுக்கு தன்னுள் எழும் உணர்வு குழப்பமளித்தாலும், இனி எதுவாயினும், எவர் தடுத்தாலும், அனைவரையும் உதறி, தன்னிடம் தஞ்சம் புகுந்த பெண்ணிவள் இனி என்றும் தன் பொறுப்பு என்று மானசீகமாக ஏற்றுக்கொண்டான்.

பார்கவிடமிருந்து தருணை மீட்ட ஆண்கள்  தவமதியுடன் அவனை வேறொரு அறைக்கு அனுப்பி வைத்து, தலை கவிழ்ந்து நின்ற ரங்கசாமியிடம் ஏதோ சொல்ல, அவரும் ஒப்புக் கொண்டார். 

ரகுநாத்தை தனியாக அழைத்து அறையின் ஒரு மூலையில் நின்று சந்திரன் பேச, பூர்ணிமாவோ இருந்த இடத்தை விட்டு இம்மியும் நகரவில்லை. 

தான் என்றுமே மகனுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை மகளுக்குக் கொடுக்கவில்லை, அவள் வலியை பொருட்படுத்தாமல் அவள் வாழ்க்கையையே பணயம் வைக்க இருந்தோம் என்ற குற்றவுணர்வு தோன்றினாலும், அதை ஒப்புக்கொள்ள விடாமல் பிடிவாதம் அழுத்தியது. 

தாத்தா, சந்திரனின் முகத்தில் தெரிந்த மாற்றத்தில் திருப்தி அடைந்தாலும் ஏனோ தாங்கமுடியாமல், சூழலை இயல்பாக்க, “சரி சரி சீக்கிரம் நல்ல விஷயமா சொல்லுங்க. கீழ சொந்தகாரங்க எல்லாரும் வெறும் வாயை மெல்ல ஆரம்பிப்பாங்க, இந்நேரம் நீங்க சொன்னபடி ரங்கா, தருண் சஹானாவை ஆதனுக்கு பெரியமனசு பண்ணி விட்டுக்கொடுத்ததா சொல்லி இருப்பான்” என்று நினைவூட்டினார்.  

மெல்ல அணைப்பைத் தளர்த்திய சஹானாவும் ஆதனும் கொஞ்சம் விலகி நின்றனர். அறைக்கு நடுவே வந்த சந்திரன் தயத்துடன் உடன் வந்த ரகுநாத்தை பார்க்க, 

அவரோ, “அப்போ எங்க ஆதனுக்கு உங்க மக சஹானாவைத் தரச் சம்மதம் தானே சார்?” புன்னகையுடன் கேட்டார்.  

“டேட்!” ஆதனின் தயக்கமான அழைப்பில், ரகுநாத் மகனைப் பார்க்க, அவனோ முதலில் தாயின் முகத்தைப் பார்த்தான். மீனாட்சி ஏமாற்றமான முகத்துடன் எங்கோ பார்த்திருந்தார். 

அதில் ஆதன் தயங்க, ரகுநாத் “சொல்லுப்பா என்ன சொல்ல வந்த?” 

சஹானா தேம்பியபடி, “அவருக்கு நான் சரியானவ இல்ல அங்கிள். இந்த கல்யாணம் வேண்டாம்” என்றாள். 

இதை எதிர்பாராத ஆதன், “ஹேய்! என்ன பேச்சு இது?” கோபமாக அவள் புறம் திரும்ப, 

அவனை அண்ணாந்து பார்த்தவளோ  கண்களில் சிந்திவிட ஆயத்தமான கண்ணீருடன், “இல்ல பாஸ் நான் உங்களுக்கு சரியானவ இல்ல. நீங்க பர்ஃபெக்ட் நான்… எனக்கு எந்த தகுதியும் இல்ல. நான் வேஸ்ட். யாருக்குமே நான் வேண்டாம். ஏன் எனக்கே நான் வேண்டாம்!” முகத்தை மூடிக்கொண்டு தலைகுனிந்தாள். 

“நான்சென்ஸ்! யார் சொன்னா உன்னை யாருக்கும் வேண்டாம்னு? எனக்கு நீ வேணும்! இங்க நிக்கிறான் பாரு உங்க அண்ணன் அவனுக்கு நீ வேணும்!” என்றான். 

“எனக்கு இந்த பயம்…” அவள் திக்க, 

“அதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல. ட்ரீட்மெண்ட் எடுத்தா சரி ஆயிடும். ஆகலைனாலும் எனக்கு அதை பத்தி கவலை இல்ல. நாம கல்யாணம் செஞ்சுக்கலாம். என்னை வேண்டாம்னு ஒதுக்காதே சஹா” ஆதன் குரல் உடைய பதறி நிமிர்ந்தவள் தன் முன்னே கண்களால் கெஞ்சுபவனைப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்தாள். 

‘சிலநேரம் நண்பனாய், சிலநேரம் காதலனாய், சிலநேரம் அந்நியனாய் தோன்றும் நீ யார் எனக்கு?’ மனம் அடித்துக்கொள்ள அமைதியாக இருந்தாள். 

அவள் அருகே குனிந்த பார்கவ், “உன் வாழ்க்கையே நல்லபடியா மாறிடும்னு நான் நம்பறேன். தயவுசெஞ்சு சம்மதம்ன்னு சொல்லுடி” ரகசியமாகக் கெஞ்ச, கண்களை ஒருநொடி மூடிக்கொண்டவள் மனதில் ஆதனின் முகம் தோன்ற,

“கல்யாணம் செஞ்சுக்கலாம். உங்களுக்கு சம்மதம்னா எனக்கு சம்மதம்” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

***

Leave a Reply

error: Content is protected !!