EVA17

ELS_Cover3-917566ae

EVA17

17 

ஆதன், பார்கவ் குடும்பத்தினர் திருமண பேச்சுவார்த்தைகள் முடிந்து, கீழ்தளம் வந்தபோது அவ்விடமே அல்லோலக் கல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. 

ஏற்கனவே யோசனையாய் இருந்த பார்கவ் குடும்பத்தினரை உறவினர்கள் சூழ்ந்துகொண்டனர். வெவ்வேறு வார்த்தைகளாலும் முறைப்புகளாலும் சலிப்புகளாலும் கேள்விகளின் வடிவங்கள் மாறினாலும், பொதுவாக அவை அனைத்தும் வந்து நின்றது, “அப்பாவி பையன் மனசுல ஆசையை வளர்த்துட்டு இப்படி வாக்கு தவறலாமா?”   

“பெண் பிள்ளையை ரொம்ப படிக்கவச்சு செல்லம் கொடுத்து வளர்த்தா இப்படித்தான் ஆகும்!” என்ற இரண்டில்தான். 

பொறுமையாக சந்திரனும் பார்கவும் பதில்கள் தந்தபோதிலும் ஓரிரு நபர்கள் வம்புவளர்க்கவே தீர்மானம் செய்தவர்கள் போல், மானம், மரியாதை, வாக்கு என்ற தர்க்கங்களை கையிலெடுத்து பேச்சை வளர்த்தனர். 

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த சந்திரன், “ஏதோ சொந்தகாரங்கன்னு மரியாதைக்கு பொறுமையா பேசிகிட்டு இருக்கேன். இதுக்குமேல இதுல பேச உங்களுக்கு உரிமை இல்லை” என்ற அதட்டலில் முணுமுணுப்புடன் அமைதியாகினர். 

அவரிடம் ஜம்பம் எடுபடாமல் சிலர் பூர்ணிமாவிடமும் புலம்ப, 

“என் பேச்சை கேட்டுத்தான் இங்க எல்லாம் நடக்குதா? அந்த ஊர் சுத்தி கழுத என்ன செஞ்சா எனக்கென்ன?….” பூர்ணிமாவும் ஒருவர் விடாமல்  நீட்டிமுழக்கி பதிலுக்குபுலம்பியதில்,  விட்டால் போதுமென்று விஷமிகள் நழுவ, சிலர் சஹானாவிற்கு பரிந்தும் பேசினர். 

தாத்தா, பாட்டி தலைமைதாங்க, சந்திரன் உறவினர் சூழ,  நல்லநேரம் பார்த்து ரகுநாத், சந்திரன் குடும்பத்தினர் பாக்கு, வெற்றிலை மாற்றிக்கொள்ள இனிதே ஆதன், சஹானா திருமணம் நிச்சயமானது. 

பெற்றோர் அருகே புன்னகையுடன் விஹானிடம் சிரித்தமுகமாய் பேசிக்கொண்டிருந்த ஆதனை கண்ணால் மனதுள் நிறைத்துக்கொண்டாள் சஹானா.

தருணிடமிருந்து தான் தப்பித்ததும், அவனே தன் குற்றங்களை ஒப்புக்கொண்டதும், ஆதன் மனதார தன்னை மணக்கும் படி கேட்டதும் கனவோ என்று தோன்ற உணர்ச்சி பெருக்கில் கண்கலங்க இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டாள்.

மதிய உணவு முடிந்து உறவினர்களில் பெரும்பாலானோர் கிளம்பிவிட, வெகு சில நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே பெரியோர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். 

ஹாலில் ஆதன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் பின் ஐம்பதுகளில் இருந்த பெண் ஒருவர், “அத்தை!” என்று அவரை அழைத்தபடி நெருங்கிய பார்கவ் பார்வையால் சஹானாவை அழைத்து அவர் அருகில் அமரவைத்தான். 

“இவங்க பொண்ணைத்தான் நான் கல்யாணம் செஞ்சுக்க போறேன்” தன் அத்தையும் வருங்கால மாமியாருமான அவரை அறிமுகம் செய்தான்.  

சில பொதுவான பேச்சுகளுக்கு பிறகு,  அவர் ஆதனிடம் “சஹானா பொறந்த போது முதல் முதலா கையில வாங்கினது நான் தான்” என்று சிலாகித்தவர் சஹானாவிடம், “நீ அழக்கூட தெம்பில்லாம…” அவளிடம் பார்வையை திருப்பிய நொடி, 

பார்கவ், ஆதன் காதில், “நான் கிளம்பும்போது ஆரம்பிச்சதா இன்னும் ஓடுது?” வியப்புடன் கேட்க, பாவமாக தலையசைத்தான் ஆதன். 

“அப்போ, நீ பொறந்த கதை. இப்போ உன் தங்கை! நல்லவேளை சஹானாவுக்கு அப்புறம் யாரும் பிறக்கல” அலுத்துகொண்டவன், தோட்டத்தில் நடக்க சென்ற விஹானை அழைக்க செல்வதாக சாக்கு சொல்லி, பலநிமிடங்களாக அனுபவிக்கும் அறுவையிலிருந்து தப்பிக்க எழ முயல, 

அண்ணனின் நோக்கத்தை புரிந்துகொண்ட ஆதிரா விஷம புன்னகையுடன், “நான் கூட்டிகிட்டு வரேன். நீங்க பேசிகிட்டு இருங்க” கண்ணடித்து அவன் தடுக்கும் முன்பே நழுவ, தங்கையை மூடிய இதழுக்குள் திட்டி தீர்த்தான் ஆதன்.

அத்தை, “அன்னிக்கி இப்படித்தான் பூரணி கொஞ்சமும் பொறுப்பே இல்லாம இவளை தனியா விட்டுட்டு குளிக்க போயிட்டா, நான் தான் அழற குழந்தையை தூக்கி சமாதானம் செஞ்சு பாலை கொடுத்து தூங்கவச்சேன். ஒருவழியா கிளம்பலாம்னு பாத்தா மறுபடி அழ ஆரம்பிச்சுட்டா, என்னடான்னா லங்கோட்டால ஈரம் பண்ணிருக்கா!” கன்னத்தில் கைவைத்து ஆச்சர்யமாக சொன்னதில்,  

“குழந்தைனா கோவணத்துல போகாம வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கா போகும்? படுத்துறாங்கபா  பார்கவா” ஆதன் குசுகுசுவென புலம்பினான். 

அவரோ, “பரவால்லன்னு வேற துணி மாத்தினா… உடனே  கக்கா பண்ணிட்டா!”  என்றவர் மறுபடி ஆச்சர்யமாக சொல்ல, சஹானாவிற்கோ ஆதனிடம் இவர் இதையெல்லாம் சொல்வதில் வெட்கம் தாங்காமல் குனிந்து கொண்டாள். 

ஆதனின், “உன் தங்கை என்ன உலக அதிசயமா? நாங்களும் தான் பா குழந்தைல இதெல்லாம் செஞ்சு இருக்கோம்” ரகசிய புலம்பலில் சிரிக்காமல் இருக்க பார்கவ் திண்டாடினான். 

அதை கவனிக்காத அத்தை, “நான் மட்டும் அன்னிக்கி இவளை கவனிக்காம விட்டுருந்தா என்ன ஆகி இருக்கும்?” சஹானாவின் தலையை வாஞ்சையாய் வருட, 

ஆதன், “ஆமா ஆன்ட்டி சஹானாவுக்கு அந்த காலத்துல டையப்பர் போட மாட்டாங்களா? கோவணம்… லங்கோட்டு தானா?” சஹானாவை ஓரக்கண்ணால் பார்த்து கிண்டல் சிரிப்புடன் கேட்க, தரையை பிளந்துகொண்டு உள்ளே சென்றுவிட அவள் நெளிய, பார்கவ் வாய்விட்டு சிரித்து விட்டான். 

அத்தையோ, “இருக்கும். ஆனா, அதெல்லாம் பார்க்கவுக்கு மட்டும் தான். ரெண்டாவதும் ஆண் பிள்ளையா இருக்கும்னு நினைச்சு பெண்ணா பிறந்ததுல பூர்ணிக்கு ஒரே வருத்தம். பிறந்ததுலேந்து இந்த பொண்ணை அவ ஒழுங்கா கவனிச்சதே இல்லை. 

கேட்டா, கல்யாணம் செஞ்சுகிட்டு வேற வீட்டுக்கு போகப்போற பொண்ணு பெருசா? கூடவே இருந்து பாத்துக்குற பையன் பெருசா?ன்னு கிறுக்குத்தனமா பேசுவா! ஒரு குழந்தையாவது வேணும்னு திண்டாடிகிட்டு இருந்த எங்களுக்கு பூரணி பேச்சு சுத்தமா பிடிக்கல.

இவளை சுவீகாரம் கேட்கலாம்னா மாமியார் விடல. சில வருஷங்கள் அப்புறம் எங்களுக்குன்னு எங்க பொண்ணு பிறந்தாலும் சஹானா தான் எங்க மூத்த மக” என்றவர் குரல் தழுதழுத்தது. 

“அத்தை” அவர் தோளில் சஹானா சாய்ந்துகொள்ள, பார்கவ், “விடுங்க அத்தை அம்மா அப்படிதான்னு உங்களுக்கு தெரியாதா? பேசாம நானும் கல்யாணத்துக்கு அப்புறம் உங்க வீட்டோட மாப்பிள்ளையா வந்துடவா?” என்று கண்சிமிட்டி புன்னகைத்தான். 

“வந்துருடா கண்ணு. எனக்கும் என் பொண்ணை…” அத்தை மேலும் பேச, ஆதன் மனமோ பேச்சைவிட்டு சஹானா மீது தாவியிருந்தது.  

பெண் சிசுவென்றால் சுமையாய் பார்ப்பது இன்னும் அங்கங்கே நடக்கும் அவலம் தான் என்றாலும், பெண்ணை பெண்ணே, அதுவும் ஈன்றவளே உதாசீனமாகவும், ஏளனமாகவும் ஒதுக்குவதென்றால்…யோசிக்ககூட வெறுப்பாக இருக்க, அந்த நொடிமுதல் பூர்ணிமாவை மனதளவில் முழுவதுமாக வெறுக்க துவங்கினான் ஆதன். 

பாட்டி, தாத்தா வளர்ப்பில், பெற்றோரின் அரவணைப்பின்றி வளர்ந்தவள், அனைத்தும் இருந்தும் தனிமையில் வாடுவதென்பது எத்தனை கொடுமை! 

இயல்பாக ஏதோ அத்தைக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும் சஹானாவை பார்க்கையில் அவன் மனம் பாரமானது. 

மாலை ஆதன் குடும்பத்தினர் கிளம்ப, சஹானா அவனை ஏக்கமாக பார்ப்பதை கவனித்த சந்திரன், அவளையும் அவர்களுடன் கிளம்பும்படி சொல்ல சஹானா உற்சாகமாக தயாரானாள்.

வேகமாக கிளம்பியவளை அனைவரும் சந்தோஷமாகவே அனுப்பிவைத்தனர் பூர்ணிமா தவிர்த்து. 

மாடி அறையில் இருக்கும் அண்ணன் குடும்பத்தினரிடமும் செல்ல தன்மானம் இடம்தராமல், தன் விருப்பத்தை மீறி நடக்கும் மகளையும் தட்டிக்கேட்க முடியாமல் துவண்டு அறைக்குள்ளேயே அடைபட்டுக்கொண்டார் அவர். 

சந்திரனும் அது நாள் வரை தன்னை எதிர்த்துப்பேசாத தன் மனைவியே குடும்பத்தினரை விட அண்ணன் குடும்பம் முக்கியம் என்று எப்படி நடக்கலாம் என்ற கோவமும் வெறுப்பும் அவரை பூர்ணிமாவிடம் பேசவிடாமல் தடுத்தது.  

***

ஆதன், விஹான், சஹானா ஆதனின் காரிலும், அவன் குடும்பத்தினர் ரகுநாத்தின் காரிலும் சென்னை நோக்கி பயணிக்க துவங்கினர். 

மருந்தின் வீரியத்தில் விஹான் சில நிமிடங்களில் முன் இருக்கையில் உறங்கிவிட, ஆதனுக்கு பின்னிருக்கையில் பக்கவாட்டாக அமர்ந்திருந்த சஹானா மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். 

ரியர்வியு கண்ணாடியில் அவளை அவ்வப்போது கவனித்தபடி ஆதன் காரை ஒட்டிக்கொண்டிருந்தான். 

சஹானாவின் கையை தடவிய ஈவா, “ஹோய் ஜுனியர்” என்று அழைக்க, இதமான மனநிலையில் இருந்த சஹானா அதை கையில் ஏந்திக்கொண்டு, புருவங்கள் உயர்த்தி வினவ, 

ஈவா, “கல்யாணம் செஞ்சுகிட்டு வர பொண்ணு டௌரி கொண்டு வருவாங்களாமே, எனக்காக என்ன கொண்டு வரபோற?” அதிகாரமாக கேட்டதில்,  

“ஹேய் ஈவா!” கோவமாக அழைத்த ஆதன், “அதெல்லாம் கேவலமான பழக்கம்!” என்று கடுகடுத்தான்.  

“கேவலம் அவமானம் எல்லாம் மனுஷங்களுக்கு தான் பாஸ். நான் ரோபோ!” என்ற ஈவா, சஹானாவிடம், “சொல்லு எனக்கு என்ன தருவே?” என்று கேட்க, அதை திட்ட வாயெடுத்த ஆதனை, புன்னகையுடன் தடுத்தவள், ஈவாவிடம், 

“உனக்கு என்ன வேணும் சொல்லு முடிஞ்சா தரேன்” அதன் தலையை மென்மையாய் வருடி கேட்டாள். 

“எனக்கு ஒரு ஒரிஜினல் எலி வேணும்!” என்றது ஈவா.

சிரித்துவிட்டவள், “அது எதுக்கு உனக்கு?” ஆதனை பார்த்தபடி கேட்க, 

அவனோ, “அதானே உனக்கு எதுக்கு எலி? ஏற்கனவே நீ பொறிக்குள்ள போயி உட்காந்த பஞ்சாயத்தே பாக்கி இருக்கு” என்று மிரட்ட, 

“பொறியா?” புருவம் சுருக்கிய சஹானாவிடம், அன்று காலை நடந்த கூத்தை சொல்லி ஆதன் சிரிக்க, சிரித்தவள், ஏனோ தருண் பேச்சும் நினைவிற்கு வர முகம் வாடினாள். 

“ஆதன் ஒன்னு கேக்கணும்…” அவள் தயங்க, 

“கேளு” என்றவன் ரியர்வியு கண்ணாடி வழியாக கண்ணால் புன்னகைக்க, 

“ஏன் கார்த்தால பார்கவும் நீங்களும் தருணை பத்தி அப்படி சொன்னீங்க?” ஈவாவின் முதுகை வருடியபடி கேட்டாள். 

“எப்படி?”

“அதான் அவனுக்கு ஆண்மை…” என்று தயங்க,  முகம் இறுகிய ஆதன்,

“ஒரு ஆம்பளைய எங்க தட்டினா எங்க வலிக்கும்னு ஒரு ஆம்பளையா எனக்கு தெரியாதா? தட்டினேன் துடிச்சுக்கிட்டு கொட்டினானா இல்லையா எல்லாத்தையும்?” ஏளனமாக கேட்டவன், 

“பார்க்கவுக்குத்தான் நன்றி சொல்லணும். நீ உடைஞ்சு அழும்போது எனக்கே என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியல, ஓடிவந்து சமாதானம் செய்யனும்னு….” பெருமூச்சுவிட்டவன், 

“எனக்கே அப்படி இருந்ததே பார்கவுக்கு எப்படி வலிச்சுருக்கும்? பாசத்துல சொதப்பிடுவானோனு பயந்தேன். ஆனா, செம கூலா அடிச்சான் பாரு சிக்ஸர்! தருண் முகத்தை நீ அந்த நிமிஷம் பார்த்திருக்கனுமே பய அப்படியே நெருப்புல நிக்குறமாதிரி துடிச்சான். பாஸ்டர்ட்! அவனை சும்மா விட்றதா இல்லை…” டக்கென பேச்சை நிறுத்தியவன் எதையோ மறைப்பதை கண்டுகொண்டாள். 

“என்ன பண்ண போறீங்க? பாவம் அதான் அவன் தான் இப்போ…” ஆதன் ஒருநொடி திரும்பி முறைத்ததில் மௌனமானாள்.

“ஏன் எதாவது பாசம் தடுக்குதோ?” ஏளனமாக ஆதன் பல்லைக்கடிக்க, 

“ச்சே! ஏன் இப்படி…” அவனை முறைத்தாள். 

“பின்ன? உன்னை ஒருத்தன் சுக்கல் சுக்கலா உடைச்சுட்டு போயிருக்கான். நீ அவனுக்காக யோசிக்கிற… உனக்காக மண்டையை பிச்சுக்கிட்டு நின்ன என்னை பார்த்தா கேனை கிறுக்கன்னு தோனுதோ?” என்று கடுகடுத்தான். 

“இல்ல…” சமாதானம் சொல்ல துவங்கியவளை ஆதன் விடாமல் விளாச, ஆதன் குடும்பத்தினர் பயணிக்கும் காரிலும் அதே நிலை.

ஆதிரா காரை ஒட்டிக்கொண்டிருக்க, ரகுநாத்தை கடித்து குதறிக்கொண்டிருந்தார் மீனாட்சி. 

“அவன் கல்யாணத்துல எத்தனை கனவு கண்டேன். இப்படி யாரு என்னன்னே தெரியாத ஒரு குடும்பத்துல அவனை தள்ளவா? அவன் தான் புத்திகெட்டுப்போயி இப்படி செய்றான்னா உங்களுக்கு எங்க போச்சு அறிவு?” கணவரை முறைக்க, 

“என்னை ஏன் கேக்குற? உன் பையன் தானே, நீ தானே வளர்த்த?” என்றவர் நமுட்டு சிரிப்புடன் வெளியே சாலைபுறம் திரும்பிக்கொண்டார்.  

“ஏன் சொல்ல மாட்டீங்க? நல்ல மார்க் வாங்கினா, அவார்டு வாங்கினா, எதாவது சாதிச்சா என் பையன்னு பெருமை பீத்துங்க, இதுவே இப்படி ஏதாவது கிறுக்கு தனம் செஞ்சா, குறும்பு செஞ்சா உடனே உன் பையன்னு அப்படியே என் தலையில கட்டிடுங்க! ஏன் நீங்களும் தானே கூட சேர்ந்து வளர்த்தீங்க?” மீனாக்ஷி பல்லை கடித்தார். 

குறுக்கே புகுந்த ஆதிரா, “அப்பா பாசமா வளர்த்தாலும் நீ தான் சேர்த்துவச்சு எங்களை மொத்தி எடுத்தியே! ஒரு காரணம் சிக்க கூடாதே, அதுல அவனை அடிக்க முடியலைன்னா சேர்த்துவச்சு என்னை அடிக்க வேண்டியது! நீ பண்ண அநியாயத்துக்கு தான் கடவுள் சரியான கரடுமுரடு காஞ்சனா கிட்ட கோர்த்து விட்டிருக்கார்” என்று கேலியாக தோளை குலுக்க, 

“அது யாரு கண்ணா காஞ்சனா?” ரகுநாத் கேட்க, 

ஆதிரா, “பூரணி ஆன்ட்டி தான். சும்மா முகத்துல ஒரு வண்டி கடுகு தாளிக்கலாம். ப்பா நீ பார்க்கனுமே, நீங்க தட்டு மாத்துறப்போ அவங்க சஹானாவை முறைச்சதை” சிரிப்புடன் துவங்கி கடுப்புடன் முடித்தாள். 

மீனாட்சி அவள் தோளில் அடித்து, “ஏன்டி நான் என்ன அந்த மாதிரியா இருக்கேன். ஐயோ என்ன டெரர் லேடி” கண்களை ஒருமுறை இறுக்கமாக மூடி திறந்தவர், கோவத்தை மறந்து ரகுநாத்திடம், 

“அந்தம்மா சரியான சிடுமூஞ்சி ரகு. இவ சொன்னமாதிரி அந்த பொண்ணை என்ன முறை முறைக்கிறாங்க. நாமளா இருந்தா அந்த மாதிரி ஒரு தறுதலைக்கு பொண்ணை குடுக்க நினைப்போமா? பாவம் அந்த பொண்ணு கதறினது கண்ணுலயே இருக்கு” ஆதங்கப்பட்டார். 

மனைவியின் கையை பற்றிகொண்டவர், “பாத்தேன். தாங்கமுடியாம நீ ஓடிப்போய் அந்த பொண்ணை கட்டிக்கிட்டு சமாதானம் செஞ்சதையும் பார்த்தேன். நீ எவ்ளோ கத்தினாலும் உனக்குள்ள இருக்க இந்த அன்பும் தாய்மையும் இத்தனை வருஷமா கொடுத்த அந்த நம்பிக்கைல தான் நான் துணிஞ்சு பொண்ணு கேட்டேன்” என்றவர் முறைப்புடன் ஏதோ பேச துவங்கிய மனைவியை ஒற்றை விரலை உதட்டில் வைத்து மௌனமாக்கி, 

“பாரு மீனு உனக்கு என் மேல கோவம் வருத்தம் இருக்கும்னு தெரியும், அந்த பொண்ணோட அப்பா எனக்கு போன் பண்ணி உங்க பையன் என் பெண்ணை விரும்புறதா சொல்றான், என் மகளுக்கு நாளைக்கு நிச்சயம் வச்சுருக்கேன்ன்னு ஆரம்பிச்சவர், தனக்கு தெரிஞ்சவரை வருண் பத்தி கூட சொன்னார்” என்று சொல்ல, 

“வருண் இல்லை தருண்” திருத்திய மீனாட்சியை பார்த்து புன்னகைத்தவர்,

“அவர் சொன்னது உண்மையா இல்லையான்னு எனக்கு விசாரிக்க முடியலை. ஆனா, இதுநாள் வரை ஆதன் சஹானாவை பத்தி என்கிட்டே பகிர்ந்துக்கிட்ட விஷயங்கள். அவனுக்குள்ள இருந்த குற்ற உணர்வு…” என்று தயங்கி நிறுத்தினார். 

“என்ன குற்ற உணர்வு?” மீனாட்சி புருவம் சுருக்க, 

“நான் சொல்றேன்” என்ற ஆதிரா அன்று சஹானாவிடம் கேட்டறிந்த பழங்கதையை சொல்ல, மீனாட்சி மனம் அடித்துக்கொண்டது. 

“இதெல்லாம் என்ன விளையாட்டு? இவன் ஒரு அறை அறைஞ்சானாம் அதுல அந்த பொண்ணு வாழ்க்கையே இவனால மாறி போச்சாம்! என்ன ரகு இது? மன்னிப்பு கேக்குறதை விட்டுட்டு இப்படித்தான் என் பிள்ளையை தாரைவார்த்து கொடுப்பீங்களா? இது சரி வராது அவங்களை கூப்பிட்டு இந்த கல்யாணம்…”  அவரை பதறி தடுத்த ரகுநாத், 

“எதுவும் நெகட்டிவா சொல்லிடாதே மீனு ப்ளீஸ்! நாமளும் ஒரு பொண்ணை வச்சிருக்கோம். அந்த நிலைல நம்ம ஆதிரா இருந்தா இந்த வார்த்தையை நீ சொல்லுவியா?” என்று கடிந்து கொண்டார்.

நெற்றியை பிடித்துக்கொண்ட மீனாட்சி, “அதுக்காக பரிகாரம் கல்யாணமா? என்ன ரகு, இது அவன் வாழ்க்கை” ஆதங்கப்பட, 

“நான் என்ன அவ்ளோ முட்டாளா அந்த காரணத்துக்கு என் பிள்ளையை கல்யாணம் செஞ்சு தர?” கேட்ட ரகுநாத்தின் முகத்தை பார்த்த மீனாட்சி மறுப்பாக தலையசைத்தார். 

“பாரு மீனு, ஆதன் சஹானாவை விரும்புறான்மா! ஆனா அதை சொன்னா ஒத்துக்க மாட்டேங்குறான். காதலுக்கு அக்கறை சாயம் பூசுறான். முன்னாடியே ஒருநாள் அந்த பொண்ணு ஹாஸ்டல்ல இருக்குறது தாங்காம நம்ம பிளாட்டை கம்பெனி வீடுன்னு பொய் சொல்லி அவளை தங்கவைக்க பர்மிஷன் கேட்டான்” சிரித்துக்கொள்ள, கண்கள் விரிந்த மீனாட்சி, 

“அப்பனும் பிள்ளையும் எனக்கு தெரியாம….” என்று துவங்க, குறுக்கிட்ட ரகுநாத்,

“எனக்கு உங்கிட்டேந்து ஒரு வாக்குறுதி வேணும் மீனு!” என்று சீரியஸாக கேட்க, கோவமாகவே “என்ன?” என்று கேட்டார். 

“அந்த பொண்ணு எப்படி கஷ்டப்பட்டிருக்கான்னு நீயே கண்கூடா இன்னிக்கி பார்த்தே, அவ நம்ம வீட்டுக்கு வர்றது உன் பிள்ளையை மட்டும் நம்பி இல்ல, நம்மளை நம்பியும் தான்! நீ அவளை புண்படுத்தாம பார்த்துக்கனும். பார்த்துப்பியா?” என்று தீர்க்கமாக கேட்க, கண்கலங்கிவிட்ட மீனாட்சியோ கோவமாக,  

“ஏதோ ஆதங்கத்துல புலம்பறேன் அதுக்குன்னு வீட்டுக்கு வர மருமகளை துன்புறுத்துற கேடுகெட்ட பொம்பளை மாதிரியா இருக்கு என்னை பார்த்தா?” என்று முறைத்தார். 

 “உன் வாயால எனக்கு வாக்கு கொடு மீனு!” ரகுநாத் விடாப்பிடியாய் நின்றார்.  

“கண்டிப்பா ஆதிராவை பார்த்துக்குற மாதிரி பார்த்துப்பேன் ரகு. ப்ராமிஸ்! ஆனா எனக்கு கொஞ்சம் டைம் வேணும் நடக்குறதெல்லாம் ரொம்ப வேகமா நடக்குது. புரிஞ்சுக்கோங்க…” என்றவர், “இப்படி ஏடாகூடமா செஞ்சதுக்கு நீங்கதான் எங்கண்ணன் கிட்ட சமாளிச்சு அவரை சமாதானம் செய்யனும் புரிஞ்சுதா?” செல்லமாக கட்டளையிட்டார். 

மனைவியின் அன்பான குணம் தெரிந்தாலும் அவர் வாயால் வாக்குறுதியை பெற நினைத்தவர், அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டார். 

சஹானாவை ஹாஸ்டலில் இறக்கிவிட்ட ஆதன்  கோவமாகவே கிளம்பி விட்டான். 

ஹாஸ்டல் வளாகத்தை தாண்டி சென்ற ஆதனின் காரை பார்த்தபடி, “தெரியாம ஒருவார்த்தை சொன்னதுக்கு ரெண்டு மணிநேரமா காச்சு காச்சுன்னு காச்சனுமா?”முணுமுணுத்து கொண்டவள், “ஆனா என் செல்லக்குட்டிக்கு என் மேல எவ்ளோ பாசம்” துள்ளல் நடையுடன் தன் அறைக்கு சென்றாள். 

***

இரவு விஹானுடன் பால்கனியில் பழங்கதைகளை பேசிக்கொண்டிருந்த ஆதன், 

“இப்போகூட நம்பவே முடியலைடா. அன்னிக்கி ப்ரொபெஸர் ராபின் பத்தின நியூஸ் கேட்டு, ஓடிவந்தப்பத்தான் நீயும் அந்த விபத்துல சிக்கி சீரியஸா இருக்கேன்னு தெரிஞ்சுது” நினைவுகள் மனதில் விரிய, “ச்சே மறக்கவே முடியல. ஹாரிபில் டே!” நண்பனின் கையை பற்றிக்கொண்ட ஆதன் முகம் வாடினான். 

முகம் இறுகி அமர்ந்திருந்த விஹான், “எனக்கும் மறக்கவே முடியல, நினைக்க நினைக்க…” வலியுடன் கண்களை இருக்க முடிகொண்டவன், “ராபின் என்னை கடைசியா பார்த்த அந்த பார்வை இன்னும் கண்ணுக்குள்ளயே வந்து டார்ச்சர் பண்ணுது!” கைத்தடியை இறுக்கமாக பிடித்துக்கொண்டான்.

ஆதன் “கேட்க கூடாதுன்னு நினைச்சேன்” தயக்க பார்வை பார்க்க, விஹான் பார்வையால் கேள் என்றான்.

“விபத்து நடந்த அன்னிக்கி  என்னதான்டா ஆச்சு? எப்படி லேப்ல தீ பிடிக்கும்? அத்தனை சேப்டி ப்ரொசீஜர் ஃபாலோ பண்ணோமே? எப்படி ஷார்ட் சர்கியூட் ஆகும்? எனக்கென்னமோ ஒத்துக்கவே முடியலை!” ஆதன் யோசனையாக, நொடியில் விஹானின் முகம் வெளிறியது. 

விபத்து நடந்த அன்றைய இரவு காட்சியாய் விரிய, விஹான் “இனிமே அதை ஆராய்ஞ்சு என்ன நடக்க போகுது? ராபின் கூடவே நாம ராத்திரி, பகலா உழைச்சு உருவாக்கின அந்த ப்ராஜெக்ட் யூனிகார்னும் அழிஞ்சு போச்சே! இந்நேரத்துக்கு எத்தனை சக்திவாய்ந்த ரோபோவா, ஆயுதமா வளர்ந்திருக்கும்!” முகம்சுருக்கி வலியை வெளிப்படுத்தும் நண்பனின் முகத்தில் தோன்றிய கவலை கோடுகள் ஆதனை வதைக்க,  

‘அந்த ப்ராஜெக்ட் தான் நீ பார்த்த ஈவாவா உருப்பெற்று நம்ம பக்கத்துல இருக்குடா!’ என்று சொல்ல நினைத்தவன், பேச்சுவாக்கில் விஹான் சொன்ன ‘ஆயுதம்’ என்ற வார்த்தையில் சுதாரித்தான். எக்காரணம் கொண்டும் அவசரப்பட்டு உண்மையை சொல்லிவிட கூடாதென்று தீர்மானித்தான். 

சரியாக தவறான சமயத்தில் ஓடி வந்தது ஈவா! “பாஸ், பீ பேக்கப் எடுத்துட்டேன், தருண் ஃபைல்ஸ் பார்க்கவுக்கு அனுப்பிட்டேன். சஹானாவுக்கு ‘சாரி நிம்மதியா தூங்கு’ன்னு நீங்க அனுப்புற மாதிரி மெசேஜ் அனுப்பிட்டேன். அப்புறம் கல்யாணத்துக்கு நல்ல நாள் லிஸ்ட்ல உங்க அப்பாயிண்ட்மெண்ட்ஸ் பார்த்து ரெண்டு டேட்ஸ் தேர்ந்தெடுத்து உங்க அப்பாவுக்கு சொல்லிட்டு வந்துட்டேன். அப்புறம்…”

கடகடவென ஒப்பிக்கும் இயந்திர எலியை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் விஹான். 

“மேட்! இட்ஸ் மார்வெலஸ்! எப்படி கொஞ்ச வருஷத்துலயே இவ்வளவு ஹையிலி இன்டெலிஜெண்ட் ரோபோ ரெடி பண்ணே? ராபின்கூட  திணறி இருப்பாரே” ஆச்சரியமாக கேட்க, ஆதனுக்கு வியர்த்து விட்டது. 

“ஈவா நீ போ நான் வந்து அப்டேட்ஸ் கேட்கறேன்” அதை அனுப்பிவைத்தவன், விஹானின் பார்வையை தவிர்த்தான்.

“அந்த விபத்திலிருந்து வெளிய வர எனக்கு வேற வழி தெரியலை டா. முழுநேரம் இதுவே குறிக்கோளா இறங்கித்தான் ஈவாவை உருவாக்கினேன்”

தன்னை பாராது எங்கோ பார்த்து புது பதட்டத்துடன் சொன்ன ஆதனின் உடல்மொழியை படித்த விஹான் முதன்முறை நண்பனின் மீது சந்தேகம் கொண்டான். 

“மேட்! ராபின் ப்ராஜெக்ட் யுனிகார்ன் சம்மந்தப்பட்ட டாகுமெண்ட்ஸ் பேக்கப்  எங்க வச்சுருக்கார்ன்னு உன்கிட்ட சொல்லியிருக்காரா? அதைபத்தி எதாவது தெரியுமா?” விஹான் ஆதனின் முகத்தை கூர்ந்து கவனித்து பதிலுக்காக காத்திருக்க, 

ஆதன் பதட்டத்தை மறைக்க  வானத்தை பார்பதைபோல் திரும்பிக்கொண்டான்.

“தெரியலை டா! லேப் எரிஞ்சுபோன போது அவரோட மொபைலும் ரெக்கவர் பண்ண முடியாத அளவுக்கு சிதைஞ்சு போனதுல என்னால மேற்கொண்டு தேட முடியல” தாடை இறுகி உதட்டை கடித்துக்கொண்டான். 

மெல்ல நடந்துவந்து அவன் தோளை பற்றிய விஹான், “விடு, நம்ம டீம் மேட்ஸ் ரேவன், காலின்ஸ் ரெண்டு பேரையும் அடுத்தவாரம் சந்திக்க போறேன், ஏதாவது க்ளூ கிடைக்கும்” என்றான். 

உள்ளுக்குள் நடுக்கம் பிறந்தாலும் வெளிகாட்டி கொள்ளாத ஆதன் “யுனிகார்ன் கிடைச்சாலும் ராபின் கிடைக்க மாட்டாரே டா! அவர் இந்த உலகத்துக்கு, ஏன் சயின்ஸுக்கே பேரிழப்பு! நாற்பது வருஷத்துக்கு மேலா அந்த லேபுக்குள்ளயே அடைபட்டு கிடந்தவர் அந்த லேபிலையே…” 

விஹான் ஆதனின் முகத்தை ஆராய்ந்தான். யுனிகார்ன் பற்றி தங்கள் முன்னால் குழுவினரை தான் விசாரிக்க போவதாக சொன்னதால் எந்த ஒரு தாக்கமும்ஏற்படாமல் வலியுடன் பேசிக்கொண்டிருந்தான். 

‘இவன் என்னை ஏமாத்தல’ விஹான் நிம்மதியான போதிலும் ஒரு மூலையில், ‘ஆதன் அதிபுத்திசாலி ராபினோட வாரிசுன்னு அவரையே அடிக்கடி சொல்லவச்ச ஆதர்ஷ சிஷ்யன். மத்தவங்களை விசாரிச்சலும் இவன் மேல ஒரு கண்ணு இவன்மேல வச்சுக்கனும்’ தீர்மானித்துக் கொண்டான். 

இரவு உறக்கம் வராமல் பிரண்டு பிரண்டு படுத்திருந்த ஆதன் மனம் ஈவாவை எச்சரிக்க அழைத்தான். 

“ஈவா! விஹான் எதாவது உன்னை பத்தி கேட்டானா?” என்றான் பதட்டடமாக. 

“நோ!” என்ற ஈவா, “ஏன் பாஸ்?” 

“சொன்னேனே ராபின் கூட அன்னிக்கி லேப்ல இருந்தது விஹானும் லின்சியும் தான். மூனு பேர்ல பிழைச்சதும் விஹான் மட்டும் தான். என்னமோ நெருடலா இருக்கு ஈவா. அந்த விபத்து விபத்துதானான்னு ஊர்ஜிதமாகும் வரை உன்ன பத்தின எந்த தகவலும் விஹானுக்கு நீ சொல்ல கூடாது” என்றபடி புருவங்களை தேய்த்துக்கொண்டான். 

“பாஸ் நீங்க டென்சன் ஆகாதீங்க. பல்ஸ் எகிறுது பீப்பி எக்குத்தப்பா காட்டுது.  ராபின் என் கிரியேட்டர்! என் மாஸ்டர்! உங்களை மாதிரி உணர்வுகள் எனக்கு இல்லைனாலும் அந்த கேஸை சால்வ் பண்ணியே ஆகனும்னு எனக்குள்ள பதிய வச்சுச்சுருக்கேன்.

ராபின் எனக்கு கடைசியா பிறப்பித்த கட்டளை,

‘ஆதன் தான் இனி உன் பாஸ்! அவனை காப்பாத்துறது தான் உன்னோட முதல் நோக்கம். அவனை தவிர யாரையும் நீ பாஸா ஏற்க கூடாது அப்படி ஏற்கவேண்டியது வந்தால் நீயே உன்னை அழிச்சுக்கனும்’ன்னு சொல்லி இருக்கார்“ என்றதில் பதறி எழுந்து அமர்ந்தவன், 

“ஈவா என்ன சொல்ற? உன்னை நீயே ஸெல்ப் டிஸ்ட்ரக்ட் பண்ணிக்கனுமா! என்கிட்டே ஏன் சொல்லலை?” நெற்றியில் அடித்துக்கொண்டு அதைஎடுக்கப்போக , பின்னோக்கி சென்ற ஈவா, 

“உங்களால அந்த உத்தரவை மாத்தவே முடியாது பாஸ், உங்களுக்கு அந்த பெர்மிஷன் இல்லை” என்றது கட்டளையாக. 

“ஈவா!” கத்திவிட்டவன், “ராபினோட வால்டை ஹேக் பண்ணியா இல்லையா? நிஜமாவே இத்தனை மாசமா நீ  திறக்க முடியாம திணறியா இல்ல…” சந்தேகமாக ஈவாவை முறைத்தான். 

*மாஸ்டர், அப்படி ஈஸியா திறக்கும்படியாவா டாகுமெண்ட்ஸை சேவ் பண்ணி வைப்பார்?” என்று ஏளனமாக கேட்ட ஈவா, “நீங்க தூங்குங்க பாஸ்” என்று வெளியேற முற்பட, 

“நில்லு ஈவா. நீ எதையோ மறைக்கிற! அந்த டாகுமெண்ட்ஸ் கைட்ஸ் இல்லாம என்னால உன்னை முழுமையா கண்ட்ரோல் பண்ண முடியாது. நீ உதவினா தான் உனக்குள்ள இருக்க அழிக்கும் திறனை நான் நிரந்தரமா செயலிழக்க செய்ய முடியும்” கோவமும் ஆதங்கமும் மிரட்டலுமாக சொல்ல, 

“நான் என்ன எந்திரன் ரோபோவா இல்ல டெர்மினேட்டரா? நான் யாரை என்ன செய்ய போறேன்? எலிப்பொறிக்குள்ள மாட்டிக்கிட்டா கூட உங்களை உதவிக்கு கூப்பிடுற அப்பாவி எலி நான்”  கிண்டலாக சொல்லியது.

ஒப்புக்கொள்ளாத ஆதன், “உன் பலம் என்னன்னு எனக்கு தெரியும் ஈவா, உன்னை அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு மேஞ்சவன் நான்! உன் உருவாக்கத்துல பெரும் பங்கு என் மூளையுடையது. ராபின் மாஸ்டர்னாலும்  உனக்கு அடித்தளம் போட்டு உருவாக்கியவன் நான்!

என்கிட்டே உன் சால்ஜாப்பு வேண்டாம். மரியாதையா சீக்கிரம் வால்டை ஹேக் பண்ணி டாகுமெண்ட்ஸை எடு, விஹான் எதுவும் கண்டுபிடிக்கும் முன்னாடி உன்னை நான் பேட்டண்ட் பண்ணியே ஆகனும்!” கட்டளையிட்டான். 

“எஸ் பாஸ்! நீங்க இப்போ ப்ளீஸ் ரெஸ்ட் எடுங்க” என்ற ஈவா லேபுக்கு ஓட, ஒருபுறம் ஆருயிர் நண்பன் விஹானின் நடவடிக்கை மனதை நெருட, ஈவா மீது முதல் முதலாக சந்தேகம் எழுந்தது .  

***

Leave a Reply

error: Content is protected !!