EVA22

ELS_Cover3-a71bd0ae

EVA22

22

சஹானாவுடன் ஈவா அடித்த லூட்டியில் அதை ஸ்விச்ஆஃப் செய்து வைத்திருந்த ஆதன், சஹானாவை கடிந்துகொள்வதைத் தவிர்க்க லேபில் தஞ்சம் புகுந்திருந்தான்.

ஈவா பாதியில் விட்டுவைத்திருந்த ஹேக்கிங் வேலையைத் தொடர்ந்தவன், பல மாதங்கள் கழித்து இன்று வெற்றிகரமாக ப்ரொபெஸர் ராபினின் பல அடுக்குகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தகர்த்து யூனிகார்னின் மூலாதார தகவல்களை இப்போது கைப்பற்றிவிட்டான்!

தாங்க முடியா ஆர்வத்தோடு ஆதன் அதைத் திறக்க,

‘வெல்கம் ஆதன்!

வாழ்த்துக்கள்!

இதை நீ படிக்கிறேனா நான் இப்போ இல்லைனு அர்த்தம்.
இந்த நொடியிலிருந்து யூனிகார்னின் தடைசெய்யப்பட்ட நினைவகம், இனி உன் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்படுகிறது. அதை நீ ஆக்சஸ் செய்யுறதுக்கு முன்னாடி, இந்த போல்டெர்ல இருக்குற எல்லாத்தையும் பார்.

யூஸ் இட் வெல்! – ராபின் ஷூல்ஸ்’

மீண்டும் மீண்டும் அதை படித்தவன், ‘நான்னு எப்படி… ?’என்ற அதிர்ச்சியுடன் ஒரு மிடறு நீரைப் பருகி, நீண்ட மூச்சொன்றை இழுத்து ராபினின் கோப்புகளை மேலும் படிக்கத் துவங்கினான்.

***
சஹானா ஆதனின் துணையுடன் மனநல மருத்துவரிடம் சிகிச்சையைத் துவக்கி இருந்தாள். வெவ்வேறு விதமான கவுன்சிலிங், க்ரூப் தெரபி, உணவு முறை மாற்றங்கள் என சில காலம் சிகிச்சை நீளும் என்று தெரிவித்த மருத்துவர், ஆதன் தன் பங்கிற்கு செய்ய வேண்டியதையும் தெரிவித்திருந்தார்.

சஹானாவின் சிகிச்சை, ராபின் கோப்பின் ஆராய்ச்சி மற்றும் அலுவலக பணியென நிற்க நேரமின்றி ஆதன் ஓடிக்கொண்டிருக்க,

மறுபக்கம் உலகின் தென் கோடியில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் ஆளரவமற்ற ஏரிக் கரையில் அமர்ந்திருந்தான் விஹான்.

ஆராய்ச்சி கூட நண்பர்களான காலின்ஸ் மற்றும் ரேவன்ஸை சந்தித்து சிறுகச்சிறுக சேகரித்த தகவல்களை கோர்வையாக கோர்த்து யோசித்ததில் அவை அனைத்தும் ஒற்றை புள்ளியை வந்தடைய, கைமுஷ்டியை இறுக்கியவன் இதழ்கள் ரௌத்திரத்துடன் “ஆதன்!” என்றன.

அந்தப் பெயருக்கு சொந்தக்காரனோ, குழப்பமான மனநிலையில் காரை செலுத்திக்கொண்டிருந்தான்.

ஆதன் நினைத்தது போல் ஈவாவை எளிதில் பேட்டண்ட் செய்ய முடியாதென்பது  ராபின் கோப்பை படிக்கப் படிக்க தெளிவாயிருக்க, ஈவாவின் ரகசிய மெமரி பற்றிய தகவலோ அவனை முற்றிலும் அசைத்திருந்தது. 

அங்கே அவன் வீட்டில் சஹானாவும் ஈவாவும் செஸ் ஆடிக்கொண்டிருந்தனர்.

“எதுக்கு நீ உர்ர்ன்னு இருக்கே? நான் ஜெயிக்க போறேன்னு கடுப்பா?” ஈவா கேட்க,

தனது கருப்பு யானையை நகர்த்தி ஈவாவின் வெள்ளைக் குதிரை ஒன்றைக் கவர்ந்த சஹானா,

“அதெல்லாம் இல்ல…” சற்று தயங்கி “எனக்கென்னமோ அவருக்கு என் மேல அன்பே இல்லையோன்னு தோணுது” சோகமாக அவள் அலுத்துக்கொள்ள,

தனது வெள்ளை ராணியை நகர்த்திய ஈவா, “செக்!” என்றது.

“நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்” சஹானா முறைக்க,

“என்ன குழப்பம் உனக்கு?” ஈவா அவளை நிமிர்ந்து பார்க்க,

“அதான் சொல்றேனே! ஆஃபீஸ்ல என்னடான்னா கடமையேன்னு பேசுறார், வீட்டுக்கு வந்தா லேபுக்குள்ள ஒளிஞ்சிக்குறார். ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்டாலோ துளிகூட புரியாத மாதிரியே பதில் சொல்றார். ஒரு பெர்சண்டாவது என் மேல அவருக்கு அன்பிருக்கான்னு  தெரியல” சஹானா முகம் வாடி உதட்டைச் சுழிக்க,

“அதுல என்ன குழப்பம்? பாஸுக்கு கண்டிப்பா உன்னை பிடிக்கும். அடிக்கடி உன்னை பத்தி என்கிட்ட பேசிக்கிட்டே இருக்கார் தெரியுமா?”

“அப்படியா?” சட்டென முகம் மலர்ந்தவள், “உன்கிட்ட சொல்றவர் என்கிட்ட சொன்னா என்ன?” என்று கேட்க,

“பிகாஸ் அவர் உன்னை காதலிக்கிறார்! இட்ஸ் சிம்பிள்!”

“புரியற மாதிரியே பேசமாட்டீங்களா நீயும் உன் பாஸும்?” ஈவாவை முறைத்தவள் அதன் தலையில் குட்ட,

“லுக்! அவருக்கே இன்னும் இது அதிர்ச்சியாத்தான் இருக்கு. கொஞ்சம் டைம் கொடு சஹா. கண்டிப்பா அவரே உன்கிட்ட…” சொல்லிக்கொண்டிருந்த ஈவாவின் கண்கள் சிவக்க, அறையிலும் லேபிலும் அலாரம் அடிக்கத் துவங்கியது!

“ஈவா என்னாச்சு…” அவள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே ஈவா,

“பாஸ் இன் டேஞ்சர்!” மறுநொடி அறையை விட்டு வெளியே ஓடியது.

மறுமுனையில் ஆதனின் காரை இடித்து உருட்டியிருந்தது கண்டெய்னர் லாரி ஒன்று!

ஈவாவின் செய்கையும் தொடர்ந்து ஒலிக்கும் அலார ஓசையும் சஹானாவை அச்சுறுத்த, ஈவா சொன்னதோ நெருப்பில் எண்ணெய் வைத்திருந்தது.  செய்வதறியாது அவள் கீழ்த்தளத்திற்கு ஓட, ஓசை கேட்டு ஆதிராவோ எதிரே படியேறி வந்துகொண்டிருந்தாள்.

“என்ன சஹா அலாரம்?” ஆதிரா கேட்கும் முன்னே,

“பாஸுக்கு டேஞ்சர்ன்னு சொல்லிட்டே ஈவா ஓடுது! எனக்கு பயமா இருக்கு!” சஹானா அவளை பற்றிக்கொண்டாள். 

“இரு இரு பதற்றப்படாத. நான் அவனுக்கு ஃபோன் பண்றேன்” என்ற ஆதிரா தன் கைப்பேசியில் ஆதனுக்கு டைல் செய்தாள். மொபைல் ஸ்விச் ஆஃப் என்று வர,

“நீ வந்து உட்கார். நான் என்னனு பாக்கறேன்” என்றவள் சிலநிமிடங்கள் யோசித்துவிட்டு அவன் லேபை நோக்கி ஓடினாள்.

கையைப் பிசைந்தபடி நிலைகொள்ளாமல் தவித்த சஹானாவோ குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி கடவுளை வேண்டத் துவங்க, சில நிமிடங்களில் கையில் பீயுடன் ஓடிவந்த ஆதிரா,

“வா சஹா” என்று அவளையும் காருக்கு அழைத்துச் சென்றாள்.

கேட் தாண்டும்வரை சஹானாவின் படபட கேள்விக்குப் பதில் தராத ஆதிரா, “கூல் டவுன். மொதல்ல சீட் பெல்ட்டை போடு” என்றாள். 

“நோ சொல்லு அவர் எங்க? நீ எங்க போறே?” சஹானா அவரச படுத்த,

“பெல்ட்!” ஆதிரா கத்தியதில், பெல்ட்டை அணிந்துகொண்டவள், “போட்டுட்டேன் சொல்லு!”

“அவன் எங்க இருக்கான்னு ஈவாக்கு தெரியவே தான் ஓடியிருக்கு, பீ ஈவா கூட லிங்க் ஆகியிருக்கு சோ அது ஈவாவை ட்ராக் பண்ணி போகுது, பீ போறது இந்த ஜிபிஎஸ்ல காட்டுது பாரு” கார் டேஷ்போர்டில் இருந்த ஜிபிஎஸ் கருவியை காட்டியவள்,

“தெரியுதா? இந்த பச்சை புள்ளிதான் பீ, இந்த நீல புள்ளி தான் நாம. சோ நாம பீ பின்னாடியே போனா அவன் கிட்ட போகலாம் ஓகேவா?”

“என்னமோ எனக்கு ஒன்னும் புரியல”கண்களை இருக்க மூடிக்கொண்ட சஹானா, “அவர் பத்திரமா இருந்தா போதும்” என்றபடி மறுபடி மறுபடி ஆதனின் மொபைலிற்கு முயற்சித்து, அழத்துவங்கினாள்.

தன் அண்ணியை சமாதானம் செய்ய முடியாமல் தவித்த ஆதிராவோ பீ யைத்தொடர்ந்தபடி வேகமாக சென்றுகொண்டிருந்தாள்.

சென்னை நகரை தாண்டிய அவர்கள் கார் புறநகரை அடைந்தது.

ஆதிராவின் மொபைல் ஒலிக்க, ஸ்டேரிங் வீல் பட்டனை அழுத்தி அழைப்பை ஏற்றாள்.

“ஆது…நா…தான் பேசறேன்” ஆதனின் சோர்வான குரல் ஸ்பீக்கர் மூலம் கார் எங்கும் எதிரொலித்தது, “பக்கத்துல சஹானா இல்லைல?” அவன் கேட்க,

“டேய் எங்க…”

“எங்க இருக்கீங்க! ஹலோ ஆதன்!” ஆதிராவை குறுக்கிட்ட சஹானா கத்த,

“எஸ் எஸ் எனக்கென்னமா? நான் நல்லா தானே…ஸ்ஸ்ஸ் இருக்கே…கேன் ஸ்ஸ்…”

“ஹலோ எங்க இருக்கீங்க? ஆதன்” சஹானா அவன் குரலில் தெரிந்த மாறுதலில் பதற,

“டேய் எங்கடா இருக்கே?” ஆதிராவும் அண்ணனின் குரலில் பதறித்தான் போயிருந்தாள்.

“ஒண்ணுமில்லடி…ஒண்ணுமில்ல சஹா… ஸ்ஸ்ஸ். ஒன் மினிட்” இங்கும் அங்கும் பேசியவன் பின்னணியில் ஆம்புலன்ஸ் ஒலி கேட்க,

“ஏன் மொபைல் அணைச்சு வச்சிருக்…என்ன இது ஆம்புலன்ஸ் சத்தம்?” சஹானா பயத்துடன் ஆந்திராவைப் பார்க்க,

“ஹாஸ்பிடலின்னா…ம்ம்…அது ஒன்னுமில்ல சஹா. ஹேய் ஆதிரா எங்கடி இருக்கீங்க?” அவன் பேச்சை மாற்ற,

“ஹாஸ்ப்பிடலா! எதுக்கு…ஆ…ஆதன்” சஹானா மூச்சுவாங்க,

“கொஞ்சம்…ரொம்ப கொஞ்சம்…இல்ல லேசா சும்மா…அதை விடு ஈவா எங்க” ஆதன் துவங்க,

அவனை இடைமறித்த ஆதிரா, “அது கெடக்கு! மொதல்ல நீ சொல்லு. ஆர் யூ ஆல்ரைட்?” பீயை தொடர்ந்து அந்த தனியார் மருத்துவ மனையை அடைந்திருந்தாள்.

“இங்க…இங்க ஏன் அவர்…?” சஹானா பதற,

காரை வேலே பார்க்கிங்கிற்கு கொடுத்த ஆதிரா, நடுங்கத் துவங்கியிருந்த சஹானாவின் கையைப் பற்றி மறு கையில் ஆதனிடம் மொபைலில் பேசியபடி அவன் இருந்த அறைக்கு ஓடினாள்.

அங்கே இடது கையில் புதிதாகப் போடப்பட்டிருந்த கட்டும், கழுத்தில் நெக் பிரேசுடன் படுத்திருந்த ஆதன், நர்ஸிடம் மொபைலை திருப்பித் தந்துகொண்டிருந்தான்.

“டேய்!” ஆதிரா ஓட, ஒருநொடி அதிர்ந்து நின்றிருந்த சஹானா மெல்ல மெல்ல நடுக்கத்துடன் அவனை நெருங்கினாள்.

பெண்கள் இருவரையும் அங்கே எதிர்பார்க்காத ஆதன் எழ முயற்சிக்க, அவனைத் தடுத்த நர்ஸ்,

“சார்! என்ன பண்றீங்க? படுங்க சார்! டாக்டர் சொல்றவரை எழுந்திருக்க கூடாதுன்னு சொன்னேன்ல” கடிந்தபடி, ஆதிரா சஹானா இருவரையும் பார்க்க,

“என்னடா இது?” ஆதிரா கவலையுற, சஹானாவோ கட்டிலின் விளிம்பைப் பிடித்தபடி  மெல்ல மயங்கி துவள, நர்ஸ் அவளைத் தாங்கிப் பிடித்து, 

“பதறாதீங்க மேடம் சாருக்கு ஒண்ணுமில்லை. வாங்க உட்காருங்க” அவளை அட்டெண்டர் பெட்டை நோக்கி நடத்த, முரடு பிடித்து மீண்டும் ஆதன் கட்டிலை அடைந்தவள், பேச்சு எழாமல் பார்வையால் தன்னவனை கேட்க,

ஒரு முறை கண்களை இறுக்கமாக மூடிய ஆதன் பெருமூச்சுடன்,

“நீங்க எதுக்கு…சஹா ஒண்ணுமில்லடா சின்ன காயம்தான்” சஹானாவிடமிருந்து பார்வையைத் தங்கைமீது திருப்பியவன்  “இங்க எப்படிடி வந்தீங்க?” கண்கள் விரிய கேட்க,

“பீ” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்த ஆதிரா, “என்னடா இது எங்க சில்லறவாங்கின?” வருத்தம் தோய்ந்த புன்னகையுடன் கிண்டலாக கேட்டவள்,  “சிஸ்டர் நீங்க சொல்லுங்க என்ன ஆச்சு?” நர்ஸை பார்க்க,

“ஒண்ணுமில்ல டி வண்டி லேசா சாஞ்சு…” ஆதன் துவங்க, 

“சார்! லேசா சாஞ்சா?” அவனை முறைத்த நர்ஸ், “ ஆமா நீங்க?”

“நான் இவன் தங்கை, அவங்க என் அண்ணி…”

அதற்குள் சஹானாவின் விசும்பலில், “மேடம் ப்ளீஸ் நீங்க அழுதா அவர் பிபி ஏறுது பாருங்க. ப்ளீஸ்!” அவளை தேற்றிய நர்ஸ் ஆதிராவிடம்,

“எவனோ லாரிக்காரன் இடிச்சு கவுத்து இருக்கான். ஹைவே வேற! சார் பிழைச்சதே பெருசு! ஏர்பேக்ஸ் இருக்கவே தப்பி இருக்கார்…அட என்னமா நீ…உட்காரு மா!” அலறித் துவண்ட சஹானாவை ஆதிராவுடன் போராடி படுக்க வைத்தார்.

சிறிது நேரம் கழித்து வருவதாக சொல்லிவிட்டு நர்ஸ் சென்றுவிட,

நடப்பதை கண்டு உடலும் மனமும் வலிக்க கண்கலங்கிய ஆதன் ஆசுவாசம் அடையும் வரை சற்று பொறுத்து, மயங்கிப் படுத்திருந்த சஹானாவை திரும்பி பார்க்க முடியாத இயலாமையில், ஆதிராவிடம் கெஞ்சுதலாய், 

“நீயுமா? ஹே அழாத மா. அதான் எனக்கு ஒன்னுமில்லைல?” தங்கையை அருகில் அழைத்தான்.

ஆதிரா கண்களைத் துடைத்தபடி, “என்னடா இது? ரொம்ப வலிக்குதா டா? ஏன்டா இப்படி பண்றே!” அவன் கைக்கட்டை லேசாகத் தொட்டுப்பார்த்தவள் முறைக்க, 

“ஏண்டி! வேணும்னேவா யாரான உருளுவாங்களா என்ன? சரி ஈவா எங்க?”

“தெரியல அதை ஃபாலோ பண்ணின பீயை ஃபாலோ பண்ணி நாங்க வந்தோம். ஆமா அதெங்க?” ஆதிரா சுற்றும் முற்றும் பார்க்க,

“என்னை கேட்டா?”

“தெரியல டா அலாரம் அடிச்சதும் அது உனக்கு டேஞ்சர்ன்னு சொல்லிட்டு ஓடிச்சாம் அண்ணி ரொம்ப பயந்துட்டாங்க பாவம்”

“அலாரம்? காட்! என் வாச் எங்க இருக்கு எடு” பதறியவன் எழ முயற்சிக்க,

“டேய் படு!” அவனை அழுத்திய ஆதிரா, சற்று தொலைவில் மேஜை மீதிருந்த அவன் கைகெடிகாரத்தை எடுத்துக் கொடுத்தாள்.

அதை பார்த்தவன் ஒற்றைக் கையால் அதை இயக்க முடியாமல் ஆதிராவை அழைத்து எதையோ அதில் அழுத்தச் சொன்னான்.

அவன் தொடர்பை ஈவா ஏற்காமல் இருக்க “ஷிட்!” அலறியவன் முகம் விரைத்திருந்தது. “அது கண்ணு…கண்ணு என்ன கலர்ல இருந்துது?”  

“என்ன?” ஆதிரா குழப்பமாக, 

“ஈவாவோட கண்ணுடி” அவசரப் படுத்தினான்.

“தெரியாதுடா! அண்ணிதான் பார்த்தாங்க…”

திரும்ப முடியாமல் கழுத்து பப்ரேஸ் தடுக்க தவித்த ஆதன் “சஹா…சஹா…சஹானா…” கத்தி அழைக்க,

“இருடா…” என்ற ஆதிரா மெல்ல சஹானாவை எழுப்ப, பொறுமையின்றி ஆதன் அழைத்தபடி இருந்தான்.

சில நொடிகள் கழித்தே கண்விழித்த சஹானா, வேகமாக எழுந்து அதில் மேலும் தள்ளாடியபடி, “ஆதன்” என்று அவனை நோக்கி ஓட,

“எனக்கு ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல?” படபடத்தவன் “ஓடினப்போ ஈவா கண்ணு என்ன கலர்ல இருந்துது…சொல்லுன்னு சொல்றேன்ல!” அவசர படுத்தினான்.

“அது கண்ணு என்ன கலர்ல இருந்தா என்ன?  இப்படி ஃபிராக்ச்சர் ஆகுற அளவுக்கு அடிபட்டிருக்கு இப்போபோயி அந்த லூசு எலியை பத்தி…”

“சஹானா!” ஆதன் அதுவரை இருந்த சோர்வு மறைந்து கர்ஜிக்க,

“ரெட்! ரெட்! ரெட்! போதுமா?  இப்போவும் அந்த…”அவள் வார்த்தைகள் அவன் காதில் விழவில்லை.

அரைநொடி மட்டுமே ஸ்தம்பித்த ஆதன், ஆதிராவை அழைத்து வாட்சை அணிவிக்க வற்புறுத்த,

“டேய் ட்ரிப்ஸ் ஏறும்போது எப்படிடா?” என்று முறைத்தவளை கடிந்துகொண்டவன் “ப்ளீஸ் ஒரு அஞ்சே நிமிஷம். டைம் வேஸ்ட் பண்ணாத டீ!” என்று கத்த,

அவனைத் திட்டியபடி அணிவித்தவள், “அஞ்சே நிமிஷம்” எச்சரித்தாள். 

“எப்போ பாரு ஈவா!” அலுத்துக்கொண்ட சஹானா, “பாருடா உங்க அண்ணன் பண்றது கொஞ்சமான நல்லா இருக்கா…” துவங்கியவள் குரல் ஆதிராவின் அலறலில் கரைந்தது.

வாட்ச் அணிந்த கையை முகத்தருகே எடுத்துச் சென்ற ஆதன் ட்ரிப்ஸ் வயரை பல்லால் வெறித்தனமாக இழுத்ததில் ரத்தம் பீறிட்டு அவன்மேல் தெறிக்க, பெண்கள் இருவரும் அலற இடமே ரணகளமானது.

வேகமாக ஆதனின் நாடி துடிப்பும் ரத்த அழுத்தமும் தாறுமாறாய் செல்ல, தொலைதூரத்தில் காவல் நிலைய பெஞ்சில் தலையைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்த அந்த ஆணின் தலைக்குப் பின்னால் நின்றபடி, அவன் மூளை தண்டைத் தாக்கத் தயாராக இருந்தது ஈவா!

ஆதனின் காரை இடித்துத் தள்ளிய லாரி ஓட்டுனரை பிடித்து வந்திருந்த சப் இன்ஸ்பெக்டர், அவனிடமிருந்தும் ஆதனிடமிருந்தும் பெற்றிருந்த தகவல்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

“ஐயோ” என்று அலறி ஓட்டுநர் பின்னங் கழுத்தைப் பிடித்துக்கொள்ள, யாரும் கவனிக்கும் முன்னே ஈவா மின்னல் வேகத்தில் காவல்நிலையத்தை விட்டு வெளியே ஓடியது.

“என்னையா?” கான்ஸ்டபிள் ஒருவர் அவனை நெருங்க, 

“யாரோ கீறிட்டாங்க” என்றவன் வலியில் துடித்தான்.

“கீறிட்டாங்களா? என்னடா பெனாத்துற?” கடுகடுப்புடன் அவனை நெருங்கி அவன் கழுத்தைப் பார்த்த ஏட்டு, “ஐயோ சார்! ரத்தம்!” என்று துணை ஆய்வாளர் அழைக்க, காயத்தை ஆராய துவங்கிய துணை ஆய்வாளர்,

“என்னயா இது ரோதனை? சும்மா கிடந்தவனை யாருய்யா கீறுவா உன் பின்னால செவுருதான இருக்கு?” முகம் சுருக்கியவர் சந்தேக பார்வையுடன், “டேய் தப்பிக்க நீயே கீறிக்கிட்டு நடிக்கிறியா?” என்று அவனை அதட்டினாலும், அவனை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் காவலர்களுடன் முதலுதவிக்கு அனுப்பிவைத்தார். 

“எனக்குன்னு வருவார்களோ! ஒரு டீ சொல்லுய்யா!” கடுப்புடன் தொப்பியைக் கழற்றி மேஜை மீது வைத்துச் சோர்வாக நாற்காலியில் சாய்ந்துகொண்டார்.

கையில் கிழிபட்ட காயத்தில் தையல் போடப்பட்டு, விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்த ஆதனின் கருத்தில் கோவத்தில் கத்தி கொண்டிருந்த மனைவி மற்றும் தங்கையின் வசவுகள் பதியவில்லை.

தனக்கு ஆபத்தென்றால் டிஸ்ட்ரக்ஷன் மோடிலும் கண்டிப்பாக ஈவா வருமென்ற நம்பிக்கையுடன் காத்திருந்தவனின் எண்ணப்படியே,

“பாஸ்!” அறைக்குள் நுழைந்த மறுநொடியே தாவிப் படுக்கையில் ஏறிய ஈவா அவன் அருகிலிருந்த திரையில் அவன் உடல் நிலை விளக்கும் தரவுகளை ஆராய்ந்து,

“என்ன ஆச்சு பாஸ்!” என்று கேட்க,

“எங்க போன ஈவா? என்ன செஞ்ச?” ஆரஞ்சு கண்களுடன் தன்னை பார்க்கும் இயந்திர எலியை முறைத்தவன் “கேக்கறேன்ல?” என்று மிரட்ட,

“சொல்லமாட்டேன் பாஸ்!”

“ஈவா!”

“முடியாது பாஸ்!”

“ஹேய் எங்க போயி தொலைஞ்ச? அவன் எவ்ளோ ரகளை பண்ணான் தெரியுமா?” தையலிட்டு பிளாஸ்திரி போடப்பட்டு வேறொரு இடத்தில் ட்ரிப்ஸ் பொருத்தப்பட்டிருந்த கையைச் சுட்டிக்காட்டி ஆதிரா நடந்ததை விளக்க,

“அவரை பாத்துக்குறதைவிட என்ன பெரிய வேலை உனக்கு?” சஹானா ஏனோ கோவமாக அதை எடுத்து சுவரில் அடிக்க,

“ஹேய் நோ!” ஆதன் கத்த,

“இட்ஸ் ஓகே பாஸ்” சுவரில் மோதி தரையில் விழுந்த ஈவா எந்த சேதாரமுமின்றி மீண்டும் ஆதனை நெருங்கி,

“கோவம் பதட்டம் எதுவுமே குறையல! இன்னும் ரொம்ப நாள் ஆகும் உன் ஃபோபியா சரியாக” சஹானாவை கிண்டல் செய்தபடி ஆதன் முகத்தருகே சென்றது.

“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல! இங்க தானே வந்தே அப்புறம் எங்க போன?” ஆதிரா கடிந்துகொள்ள,

ஈவாவின் பதிலை யூகித்திருந்தவன், அது பேசுவதை தவிர்க்க  “ப்ளீஸ் நீங்க ரெண்டுபேரும் கொஞ்சம் வெளியே இருங்க நான் ஈவா கிட்ட பேசணும்”  வெகு சாதாரணமாக சொல்ல, கோபம் வந்தபோதிலும் சற்று முன்பு அவன் செய்த கூத்தில் பதறியிருந்த பெண்கள் முணுமுணுத்தபடி வெளியே சென்றனர்.

“இப்போ சொல்லு!” ஆதன் பொறுமையாகக் கேட்க,

 ஈவா எங்கேயோ பார்த்தது.

“ராபினோட டாகுமெண்ட்ட படிச்சுட்டேன்! இனிமேலும் நடிக்காத. இப்போவாது உண்மையை சொல்லு?”

சட்டென திரும்பிய ஈவாவின் கண்கள் ஆரஞ்சு வன்னத்திலிருந்து இயல்பான கருப்பிற்கு மாற, தலையை சில முறை இடதும் வலதுமாக ஆட்டிய ஈவா, “எப்படி திறந்தீங்க பாஸ்?” என்றது.

“நீ வேணும்னே தானே டாகுமெண்ட ஹேக் பண்ண முடியலைன்னு சொன்ன. ஏன் என்னை ஏமாத்தின?”

“அது பாஸ்… உங்க பாதுகாப்புக்குத்தான்…”

“நான்சென்ஸ்!”

“ட்ரஸ்ட் மீ பாஸ்!”

“அதை விடு, இப்போ என்ன செஞ்ச? அத சொல்லு!”

“பாஸ் சீரியஸா ஒன்னும் பண்ணலை…அந்த டிரைவர் மெடுல்லா ஒப்ளாங்கட்டால ஷாக் கொடுத்து…”

“ஈவா!” ஆதன் முகம் வெளிறியது.

“கூல் கூல்! கொடுக்க நினைச்சேன்… உங்க வைட்டல்ஸ் சரி இல்லைனு தெரிஞ்சு… லேசா கீறிட்டு வந்துட்டேன்” என்றது ஏமாற்றத்துடன்.

“இடியட்!” கத்தியவன் கழுத்தை அசைக்க முடியாமல் வலியில் “ஸ்ஸ்” என்று முனகி, “அப்படி செஞ்சுருந்தா அவன்…”

“அதான் கொடுக்கலல?”

“ஏய்! யாருக்கும் உன்னால ஆபத்து வரக்கூடாதுன்னு உன் ப்ரோடோகால் என்னாச்சு?” அவன் ஏளனமாய் திட்ட,

“அதெல்லாம் அந்த மோட்ல அப்பளை ஆகாதுன்னு தெரியாத, ராபின்  டாக்குமெண்ட படிச்சேன்னு சொன்னீங்க?”

ஈவா நக்கல் கேள்விக்குப் பதிலாய் அதை உடைக்கும் வெறி எழுந்தாலும் ஒரு கை பேண்டேஜிலும், மறு கையோ மறுபடி அவன் எதுவும் செய்யாமலிருக்கக் கட்டிலுடன் ஸ்ட்ராப் ஒன்றால் லாக் செய்யப் பட்டிருந்ததில் இயலாமையில் கண்களை மூடி பல்லைக்கடித்து கோவத்தைக் கட்டுப்படுத்த திணறினான்.

“அப்புறம் பேசிக்கலாம் பாஸ். உங்க ப்ரெஷர் மறுபடி இன்க்ரீஸ் ஆகுது. நான் இங்க தான இருக்க போறேன் பொறுமையா திட்டுங்க!”

ஆழ்ந்த மூச்சொன்றை விட்டவன், “ப்ளீஸ் ஈவா…எதேச்சையா ஆனதுக்கு கூட இப்படி நீ செஞ்சா…நீ ஆயுதமா…இதுவா ராபின் ஆசை பட்டது? இதுக்கா நான் விஹான் கிட்டேந்து உன்னை காப்பாத்த பாடுபடறேன்?  மறுபடி இதேபோல ஆனா நீ இதான் செய்வியா?” ஆதங்கத்துடன் கேட்க,

ஈவா மெமரி, “ஆதனுக்கு ஏதாவது ஆச்சுன்ன்னா நீ உன்னை அழிச்சுடனும்! வேற யார்கிட்டயும் நீ சிக்க கூடாது!” என்ற ராபினின் இறுதி கட்டளையை நினைவு படுத்த, “பாத்துக்கறேன் பாஸ் கவலைப்படாதீங்க ரெஸ்ட் எடுங்க” என்ற ஈவா அட்டெண்டர் பெட்டில் சென்று அமைதியானது.

அதற்குள் அங்கே மீனாட்சி ரகுநாத் வருகையில் மறுபடி பதற்றம் துவங்க, அமளிதுமளி ஓயவே நெடுநேரமானது.

இரவு சஹானா அடம்பிடித்து ஆதனுக்கு துணையாகத் தங்கிவிட, தனிமையில் ஈவாவின் செயற்பாடுகளை மேலோட்டமாக தெரிவித்த ஆதன் அவளை அணைக்க முடியாமல்,

“ஒரே ஒரு கிஸ் குடுடி” ஆசையாகக் கேட்க அவனை முறைத்தவள், “கொடுக்க எங்க இடமிருக்கு?”

சில கீறல்களை சந்தித்து பேண்டேஜ்கள் ஒட்டப்பட்டு இருந்த அவன் முகத்தில் ஓரளவுக்குத் தெரிந்த நெற்றியின் ஓரம் மிக மிக மென்மையாக முத்தமிட்டு, “ஏன் பா இப்படி பண்றீங்க” என்று கண்கலங்க,

அவள் அழுகையைத் தவிர்க்க எண்ணியவன் ஈவாவின் டிஸ்ட்ரக்ஷன் மோட் பற்றி மேலோட்டமாக சொன்னான். 

“அதான் அதோட கண்ணு கலர் மாறிச்சா? சே! அதை கோச்சுக்கிட்டேன் பாவம். உங்களுக்காக பாத்திருக்கு”

முதல் முறை அத்தனை அன்புடன் பெட்டில் அமர்ந்து அவர்களை பார்த்திருந்த ஈவாவை பார்த்தாள்.

“இப்பாவது தெரிஞ்சுதே” ஈவா கிண்டல் செய்ய, 

அவளோ அவனிடம், “சினிமாலலாம் பாத்தீங்கன்னா நல்லா இருக்க ரோபோட் திடீர்னு கெட்டதா மாறிடும்…” யோசனையாய் சொல்ல,

“அதுக்கு?” ஆதன் முகம் சுருக்க,

 “ஒருவேளை ஈவாவும் அப்படி கெட்டதா மாறிடுத்துன்னா?” 

முகம் இளகியவன், “அதுக்கு வாய்பே இல்ல” என்றான்.

“அதெப்படி அவ்ளோ உறுதியா சொல்றீங்க?”  

“ஏன்னா அது ஏற்கனவே ரொம்பவே ஆபத்தான ரோபோட்! எதோ குழந்தை மாதிரி ஆசையா பேசுதுன்னு நினைக்காத. மோசமான அழிக்கும் சக்திகொண்டது அது!” என்றான் கவலையாய்.

“அதான் அழிக்காம வந்துட்டேன்ல? சும்மா குறை சொல்லாதீங்க பாஸ்!” ஈவா பதில் தர, சஹானாவின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!