EVA3

ELS_Cover3-1a73641b

3

கால்கள் சில்லிட்டு, உடலெங்கும் வியர்வை அரும்ப திரும்பிச்செல்ல நினைத்தவளின் மன கண்ணில் நொடி நேர பிம்பமாய் ஆதனின் முகம்.

இல்லாத தைரியத்தை இழுத்து பிடித்துக் கொண்டவள், காஃபி கப்பை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.

முறைப்பும் வெறுப்புமாய் அவளை மொய்த்துக்கொண்டிருந்த பல ஜோடி கண்களை தவிர்த்தவள், அவர்களை கடந்து பேன்ட்ரி அறைக்குள் சென்றாள்.

மறந்தும் நிமிராமல் காஃபி இயந்திரத்தில் கப்பை வைத்தவளை சுற்றி,

“நீ ஆதன் சாரோட செக்ரெட்டரி தானே?”

“அவர் வரலையா? நீ ஏன் வந்த?”

“அவரை பாக்க தானே இங்க வந்து நிக்குறோம்! நீ புது பழக்கம் பண்ணாத”

“இதெல்லாம் செஞ்சு அவரை உன்பக்கம் இழுக்க பிளேனா?”

“இவளுக்கெல்லாம் அவர் செட் ஆகமாட்டார், அதுக்குன்னு ஒரு தகுதி வேணும்”

வார்த்தைகள் சஹானாவின் சுயத்தை சீண்ட, பயத்தையும் மீறி பொங்கிவந்த கோபத்தை அவள் உணருமுன்னே,

“ஷட்டப்! மைண்ட் யுவர் ஒர்க்!” முறைத்துவிட்டு, வெளியேறிவள் அவர்கள் முகத்தில் தெரிந்த மாறுதல்களை கவனித்திருந்தால் கோபம் அவ்வப்போது பாதுகாப்பு கவசமாகும் என்பதை உணர்ந்திருப்பாள்.

சஹானாவின் வரவை ஆர்வமாக எதிர்பாத்திருந்தவனுக்கு அரக்கப்பரக்க அறைக்குள் நுழைந்து நடுக்கம் குறையாத நெஞ்சில் வலது கையை வைத்தபடி நின்றவளை காணுகையில், மனதை குற்றவுணர்வு அழுத்தத் துவங்கியது.

“ஆர் யு ஓகே?”

வெறுமையாக காஃபி கப்பை அவனிடம் கொடுத்தவள், நாற்காலியில் அமர்ந்துவிட்டாள்.

“உனக்கு இவ்ளோ கஷ்டம்னா நீ ஏன் போன?” ஆதன் கடிந்து கொள்ள,

அவனை நிமிர்ந்து பார்த்தவளோ, “அ..அ..அதெல்லாம் ஒண்ணுமில்ல” சிலநொடிகள் கழிய கொஞ்சம் ஆசுவாசமானவள் “சரியான முரட்டுக்கூட்டம்!” என்று புன்னகைத்தாள்.

ஏதோ சொல்ல நினைத்தவன் பேசத்துவங்கும் முன்பே,

“உங்களுக்கு இவ்ளோ விசிறிகளா? இருந்தாலும் ஒருத்தருக்கு இவ்ளோ டிமேண்ட் டு மச்” அதிகமாக பேசியதாக உணர்ந்து, “சாரி! ஓவரா பேசினாங்களா அதான் கோவபட்டுட்டு வந்து அப்படியே…”

“நீ கோவப்பட்டியா?” நம்பமுடியாமல் பார்த்தவனிடம், பெருமையான முகத்துடன் நடந்ததை விவரித்தாள்.

வாயை பொத்தி சிரித்தவனோ, “உங்க ஊர்ல இதான் கோவப்பட்டு கத்துறதா?” என்று கிண்டல் செய்ய,

“நான்லாம் கோவப்படறதே பெருசு” என்றாள்.

விளையாட்டை கைவிட்டவன், “இப்போ நீ ஓகேவா சஹா?” என்று கேட்க, அவளின் ஆம் என்ற தலையசைப்பில் நிம்மதியானான்.

நாற்காலியை விட்டு எழுந்தவன், காஃபியை குடித்தபடி, “நான் அப்பாவி! எனக்கு விசிறிகள்னு நீ சொல்ற குற்றச்சாட்டை ஏற்க மாட்டேன்” என்று சிரிக்க,

“உங்களை காரணம் சொல்லல, இருந்தாலும்…” அவள் நிறுத்த,

“நான் தான் வேணும்னே எல்லாரையும் சுத்தல்ல விடுறேன்னு சொல்றல?” விஷமமாய் கேட்க,

“இல்ல” கைகளை மறுப்பாக ஆட்டியவள், “அவங்க டேன்ஜரஸ் கேங், அஞ்சு நிமிஷத்துக்குள்ள எத்தனை கேள்வி கேக்குறாங்க தெரியுமா?”

“இப்போ புரியுதா ஒரு பையனுக்கு நாட்டுல பாதுகாப்பே இல்லைனு” போலியாக புலம்பியவன், சஹானாவின் முகத்தில் வந்த புன்னகையில் நிம்மதியடைந்து, “தினம் உனக்கு இந்த தலைவலி வேண்டாம், நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்றான் சினேகமாக.

“இல்ல, பரவால்ல…” என்று எழுந்தவள், “நீங்க தப்பா எடுத்துக்கலன்னா, ஒன்னு சொல்லவா?”

அவன் பார்வையால் அனுமதிக்க,

“இந்த ரூம் தான் இவ்ளோ பெருசா இருக்கே, இங்க கண்ணாடி பக்கத்துல சின்னதா ஒரு காஃபீ மேக்கர் வச்சுக்கலாமே, பிரிட்ஜ் கூட வச்சுக்கலாம். பார்க்கவும் அழகா இருக்கும். உங்க ப்ரைவசியும் பாதிக்காது”

“ம்ம் நைஸ் ஐடியா. இன்டீரியர் டீம்கிட்ட, டிசைன்ஸ் கொடுக்க சொல்லு”

ப்ரகாசமானவள் “தேங்க்ஸ்” என்றாள் விழிகள் விரிய.

“எதுக்கு?”

“இதுவரை நான் சொன்ன எதையும் யாருமே காதுகொடுத்து கூட கேட்டதில்லை. அதுக்குதான் தேங்க்ஸ்”

அவளை மௌனமாக பார்த்தவன், “நான் ப்ரோபோசல்ஸ் படிச்சுட்டு உனக்கு மெசேஜ் பண்றேன்” என்று சொல்ல, சஹானா தன் கேபினுக்கு சென்றாள்.

காஃபியை குடித்துக் கொண்டிருந்தவன் மூளையில் அவள் சொன்னது பதிவானது. அந்த வாரயிறுதியே ஆதனின் அறையில் காஃபி கவுண்டரும் குடி புகுந்தது.

***

அன்று ஆதன் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் போர்ட் மீட்டிங் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை சரிபார்த்து கொண்டிருந்தவன் சஹானாவை அழைத்து,

“நாம கொஞ்சம் முன்னாடியே போயி அங்க எல்லாம் சரியா இருக்கா பார்க்கணும். நீ சீக்கிரமா சாப்பிட்டு வந்துடு” என்றான்.

பதறியவள், “ஐயோ! நான் வரல!” என்று கத்திவிட,

“ரிலேக்ஸ்! நீ சும்மா கூட வந்தா போதும், எதுவும் பேச வேண்டியது இல்ல” லேப்டாப்பை மூடினான்.

“எனக்கு பயமா இருக்கு, ப்ளீஸ் நான் வரலையே…” அவள் கை நடுங்க,

அவளை நிமிர்ந்து பார்த்தவன், “நீ வரியான்னு கேட்டேனா?” என்றான் கண்டிப்பான குரலில்.

“ப்ளீஸ்” அவள் பார்வையால் கெஞ்ச,

ஒற்றை புருவம் உயர்த்தி, “வரியான்னு கேட்டேனா?” என்றவன் குரலில் கடுமை கூடியது.

“இல்ல…” தலையை தாழ்த்தி கொண்டாள்.

தன் அறைக்கு மதிய உணவு வரவும் சாப்பிட அமர்ந்தவன், பார்வையை மீண்டும் சஹானாவின் பக்கம் திருப்ப அவளோ முகத்தை தொங்க போட்டுக்கொண்டு அவள் கேபினிலிருந்து வெளியே கிளம்பி கொண்டிருந்தாள்.

அவளை தன் அறைக்கு அழைத்தவன், “சாப்பிடாம எங்க போற?” அவளை குழப்பமாக பார்க்க,

“ஹோட்டலுக்கு” என்றாள் பாவமாக.

“தினம் லன்ச் எடுத்துட்டு வருவியே?”

“எப்போவும் லஞ்ச் வாங்கற ஹோட்டல் இன்னிக்கி லீவ் அதான்…”

“ஏன் வீட்லேந்து கொண்டுவர நேரமில்லையா, ஆஃபீஸ் 8:30க்கு தானே?” அவன் புருவம் சுருக்க,

“வீடா? நான் லேடிஸ் ஹாஸ்டல்ல தங்கி இருக்கேன்” என்றதில் ஆதனின் முகத்தில் தெரிந்த வியப்பு, சஹானா கவனிக்கும் முன்பே மாறியிருந்தது.

“ம்ம் நாளைலிருந்து லன்ச் உன் டேபிளுக்கு வரும். இப்போ சீக்கிரமா சாப்டுட்டு வா”

“இல்ல சார்..! சாரி ஆதன்… அதெல்லாம் வேண்டாம் நான் பாத்துக்கறேன்”

“வரும்னு சொன்னேன், வேணுமான்னு கேட்ட ஞாபகம் இல்ல” என்றவன் குரலில் இருந்த கடுமைக்கு மாறாக முகத்தில் மென்மையான புன்னகை இருக்க, இவனிடம் என்ன சொன்னாலும் எடுபடாதென்று உணர்ந்தவள்,

நன்றி தெரிவித்துவிட்டு அறையைவிட்டு வெளியேறிட, யோசனையில் ஆழ்ந்த ஆதன் தலையை உலுப்பிக்கொண்டு சாப்பிட துவங்கினான்.

உணவகத்தில் அமர்ந்திருந்தவள் மனம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த சாதத்தை விரலால் இங்கும் அங்கும் நகர்த்திக் கொண்டிருந்தாள்.

‘வேலைக்கு போறது சரி வராதுன்னு வீட்ல சொன்னப்பவே கேட்டிருக்கணும்’ மனம் அவளை பழிக்க,

‘எங்கேயுமே ஒட்டமுடியாம நான் இப்படி அவஸ்தை பட்றதுக்கு காரணமே அவங்க தானே?’ விடாமல் துளிர்த்த கேள்விகளை ஒதுக்கியவள், அறக்கப் பறக்க கொரித்துவிட்டு ஆதனிடம் விரைந்தாள்.

ஆதன் தன் தொண்டையை செருமிவிட்டு,
“குட் ஆஃப்டர்நூன் லேடீஸ் அண்ட் ஜென்டில் மேன்” என்று சொல்லி பார்த்தவன், “ம்ம்ம்ஹ்ம்… வணக்கம்… நோநோ! ஹலோ எவரிபடி!” காற்றில் கையசைத்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வை தற்செயலாக தன் அறைக்கு வெளியே செல்ல, சோகமே உருவாய் வந்து கொண்டிருந்தாள் சஹானா.

‘ஜஸ்ட் மிஸ்!’ சுதாரித்தவன் வேகமாக கையில் கிடைத்த ஃபைலை பார்ப்பது போல் பாவனை செய்தான்.

தன் பேக்பேக்கை கேபினில் வைத்தவள், மெல்ல எட்டிபார்க்க, ஆதன் தீவிரமாக எதையோ புரட்டி கொண்டிருந்தான்.

‘இதான் அவரோட முதல் போர்டு மீட்டிங்ன்னு சொன்னாரே. எப்படித்தான் கொஞ்சம் கூட பதட்டம் இல்லாம கூலா இருக்காரோ? அவர் தைரியத்துல ஒரு பங்காவது எனக்கு வந்திருக்கலாம்’ அவனை மெச்சி தன்னை நொந்தவள், ஒரு மிடறு தண்ணீரை பருகிவிட்டு அவன் அறைக்கு சென்றாள்.

“என் கூடவே தான் நீ இருக்கப்போற, பயப்படாதே அப்புறம் முகத்தை இப்படி உம்முன்னு வச்சுக்காத. கொஞ்சமா சிரி” அவன் சொல்ல, மெல்ல போலியாக அவள் புன்னகைக்க,

“இங்க என்னை பாரு. எப்போ பாத்தாலும் தரைல என்ன தேடுற?” அவன் மிரட்ட,

மிரட்சியுடன் அவன் முகம் பார்த்தவள், “ப்ளீஸ்! நான் வரல. நீங்க போயிட்டு வந்துடுங்க” என்று கெஞ்ச,

“நான் என்ன உன்ன ஷாப்பிங்க்கா கூபிட்றேன்? நீயே போயிட்டு வாடான்னா என்ன அர்த்தம்?”

“நான் ஒன்னும் டான்னு சொல்லலையே!”

“ஓஹ்! அதுவேற சொல்லுவியா?” அவன் முறைப்பில் தலைகவிழ்ந்தவள், “இல்ல” என்று முணுமுணுக்க,

“லேப்டாப் எடுத்துட்டு கிளம்பு!” ஆதன் கதவை நோக்கி நடக்க,

அவன் கையை பற்றி நிறுத்தியவள், “ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் இந்த ஒரே ஒரு வாட்டி நான் வரலை. அடுத்தவாட்டி கண்டிப்பா வரேன். ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்ச, அதிர்ந்து திரும்பியவன் பார்வையோ தன் கையை பற்றியிருந்த சாஹானாவின் கைமீதே இருந்தது.

அவன் பார்வையை உணர்ந்து கையை வேகமாக இழுத்துக்கொண்டவள், “சாரி” என்று அவனை அண்ணாந்து பார்க்க,

“வா சீக்கிரம்!” என்றவனோ நில்லாது வேகமாக வெளியேறினான்.

லேப்டாப்பால் நெற்றியில் அடித்து கொண்டவள், “ஸ்ஸ்” நெற்றியை தேய்த்துக்கொண்டே ஓட்டமும் நடையுமாக அவன் முதுகுக்கு பின்னால் ஒளிந்தபடியே நடந்தாள்.

ஆதனை கடந்து சென்ற ஊழியர்கள் மரியாதை நிமித்தம் வணக்கம் சொல்ல, ஒவ்வொரு முறையும் எவரேனும் தன்னை பார்த்து புன்னகைப்பதை கண்டவள் இன்னும் இன்னும் ஆதனை ஒட்டி நடந்ததில் திடீரென்று நின்றுவிட்டவன் முதுகில் மோதி தடுமாறி, பின்பு நிலையாக நின்றாள்.

திரும்பியவனிடம், “சாரி…நான்…” துவங்கியவள் சிலர் அங்கு வர அமைதியானாள்.

லிஃப்ட்டில் ஏறியவள் ஆதனை ஒட்டியபடி ஒரு ஓரமாக நின்றிருந்தாள்.

கம்பீரமாக அவன் நின்றிருந்த தோரணையில், அவனை மெச்சுதலாய் பார்த்தவள், “தைரியமா எப்படி ஜம்முன்னு நிக்குறான் பாரேன்!’ மனதுக்குள் அவனை சிலாகிக்க,

அவள் மெச்சிக்கொண்ட நாயகனின் மனமோ தாறுமாறாக துடித்து கொண்டிருந்தது.

‘ஷீட்! என்ன கர்மம்டா இது? இப்படி கையெலாம் இப்படி டைப்பிடிக்குது? இதுக்குதான் இந்த மீட்டிங் மண்ணாங்கட்டினு வேண்டாம்னு இருந்தேன்…

சஹா கவினிச்சுருப்பாளா?

ச்ச்ச்சே நான் தான் கையை பேக்கெட்லயும், நடுங்குற காலை கொஞ்சம் அகட்டியும் வச்சு சமாளிக்கிறேனே… கண்டிப்பா கண்டு பிடிச்சுருக்க மாட்டா!’ அவன் யோசித்திருக்க அவர்களுக்கான தளம் வந்தது.

அந்த கட்டிடத்தில் 21 முதல் 23 தளம் வரை முக்கியமான கலந்தாய்வுகள் நடக்கும் மீட்டிங் அறைகளும், ஆதன் அவன் தந்தை உட்பட வெகு சிலர் மட்டுமே செல்லக்கூடிய தடைசெய்யப்பட்ட சில அறைகளும் இருக்கும் இடமென்பதால் கட்டிடத்தின் மற்ற பகுதிகளைவிட அங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத்தீவிரமாக இருந்தன.

உள்ளே நுழைந்தவர்கள் முன்னே ஆஜானுபாகுவாக சில செக்யுரிட்டிக்கள் நின்றிருக்க,

‘இவனுங்க செக்யூரிட்டி ஆளுங்களா அடியாளுங்களா இப்படி முறைச்சுக்கிட்டு நிக்குறாங்க!’ கலவரமானவள் ஆதனை ஒட்டிக்கொண்டாள்.

மீட்டிங் அறைக்கு செல்லும் முன்னே, சஹானாவை சோதனை செய்ய பெண் செக்யூரிட்டி தனியே அழைக்க, அரண்டு விழித்தவளை பார்வையால் சமாதானம் செய்து, “நான் ரூம்ல வெயிட் பண்றேன்” என்ற ஆதனோ, மீட்டிங் அறைக்குள் சென்றுவிட,

‘அடப்பாவி கூடவே இருப்பேன்னு இப்படி கழட்டிவிட்டு போறியே!’ பற்களை கடித்துக் கொண்டாள்.

பெண் செக்யுரிட்டி சஹானாவை மறைவான தடுப்புக்கு பின்னே அழைத்துச்சென்று சோதனை செய்தபின் சஹானாவிற்காக மீட்டிங் அறை கதவை திறந்துவிட்டாள்.

கடுப்புடன் அறைக்குள் நுழைந்தவள், “ஓவராத்தான் பண்றீங்கடா. இதென்ன அலிபாபா குகையா இல்ல பெரிய கஜானாவா?” முணுமுணுத்தபடி பார்வையால் ஆதனை தேடினாள்.

அவனோ சுமார் இருபது நபர்கள் அமரக்கூடிய பெரிய டேபிளின் கடைக்கோடியில் ப்ரொஜெக்டர் திரைக்குமுன்னே அமர்ந்திருந்தான்.

முறைப்புடன் அவனை நோக்கி நடந்தவள்,
“துணைக்கு இருப்பேன்னு சொல்லிட்டு இப்படி விட்டு வந்துடீங்க!” அவனிடம் புகார் வாசிக்க, புன்னகைத்தவன்,

“அது கம்பெனி பாலிசி, அதுல நான் தலையிட மாட்டேன் “ என்றான்.

“வெளியாளுங்க வந்தா பரவால்ல, என்னையும் எதுக்கு இப்படி… நான் என்ன செஞ்சுட போறேன்?” அவள் கோவம் குறைவதாயில்லை.

“இப்போ வர போர்ட் மெம்பர்ஸ் கூட இந்த செக்யூரிட்டி செக் கடந்துதான் வரணும்” என்றான் அசட்டையாக.

“நான் உங்க செக்ரெட்டரி தானே? அப்படி எண்ணத்தை தூக்கிட்டு போயிடுவேனாம்? இந்த டேபிளையும் சேரையுமா?” தரையை வெறித்தவள் முணுமுணுக்க,

“சஹா” என பொறுமையாகவே அழைத்தான் ஆதன்.

நிமிராமல் அவள் நிற்க, அவன் நிதானமான ஆனால் உறுதியான குரலில் பேசத்துவங்கினான்.

“இது ரொம்ப சென்சிட்டிவான டேட்டாவை ஹாண்டில் பண்ற கம்பெனின்றதால நாம பாதுகாப்புல ரொம்ப கவனமா இருக்கணும். நீ என் செக்ரெட்டரியா இருந்தாலும் சில விஷயங்கள்ல என்னால எதுவும் செய்ய முடியாது. உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.

ஸ்பெஷல் பெர்மிஷன் இருக்க கொஞ்சம் பேரு மட்டுமே இந்த மூணு ஃபுளோருக்கும் ஆக்ஸஸ் இருக்கு” கதவு திறக்கும் ஓசைகேட்டு பேச்சை நிறுத்தினான்.

எப்பொழுதும்போல அச்சம் ஆட்கொள்ள ஆதனை ஒட்டி நின்றாள் சஹானா.

அவள் பதட்டத்தை உணர்ந்தவன் தன்னருகில் இருந்த நாற்காலியை காட்டி, “இங்க உட்காந்துக்கோ, மீட்டிங்கில் இம்பார்ட்டண்ட் பாயிண்ட்ஸ் நோட் பண்ணிக்கோ, மீட்டிங் முடிஞ்சதும் எனக்கு இதெல்லாம் ஒரு ரிப்போர்ட்டா வரணும்”

இப்பொழுது கோட்சூட் மனிதர்கள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே வர, அவர்களுடன் மீண்டும் பேக்கெட்டில் கைகளை மறைத்துக்கொண்ட ஆதன் பேச துவங்க, மடியிலிருந்த லேப்டாப்பை இறுக்கமாக பற்றிகொண்டவள், அவனையே வியப்புடன் பார்த்திருந்தாள்.

சிறிதுநேரத்தில் அனைவரும் வந்துவிட, ஆதனின் தந்தையும் அந்த நிறுவனத்தின் உரிமையாளருமான ரகுநாத் ஆதனிற்கு அருகில் சஹானாவிற்கு எதிரில் அமர்ந்தார். அவரின் ஆஜானுபாகுவான தோற்றத்திற்கு மாறாக முகமெங்கும் மென்மை படர்ந்திருந்தது.

ஆதன் எதிர்காலத்தில் கம்பெனியில் தான் செய்யவிருக்கும் மாற்றங்களை பற்றியும் சமீபத்திய ப்ராஜெட்டின் சாதனைகளை பற்றியும் கம்பீரமான குரலில் அனைவருக்கும் சொல்லிக்கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் அவன் பார்வை தன்னையே மெய்மறந்து பார்த்திருக்கும் சஹானாவின் மீது பதிந்தது,

‘அவன் அவன் இங்க சொதப்பாம பேசணும்னு பதறிக்கிட்டு கெடக்கான் இவ என்னடான்னா லுக் விடறா!

நம்பி வந்திருக்க அப்பாவை சந்தோஷ படுத்தவே நாக்கு தள்ளுது இதுல இவளும் லிஸ்ட்ல வந்து நிக்குறாளே!’

உணர்ச்சியை வெளிப்படுத்தாமலே பேச்சை தொடர்ந்தவன் மீண்டும் சஹானாவை பார்க்க,

அவளோ வியர்வையை துடைத்தபடி, தண்ணீரை குடித்துவிட்டு எதையோ சத்தம் வராமல் முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்.

முக்கியமான திட்டமொன்றை விளங்கியவன் மீண்டும் அவளை பார்க்க, இப்பொழுது குனிந்து லேப்டாப்பில் டைப் செய்து கொண்டிருந்தாள்.

அனைவரின் கவனமும் தன்மீதிருப்பதை கவனித்தவன்,

‘இதுக்குதான் யார் முகத்தையும் பார்க்கவே கூடாது! வேற எங்கயான பாரு பாரு’ மனிதர்களை விட்டு திரைக்கு பார்வையை திருப்பினான்.

“இந்த வசதி எல்லாம் இருக்க இதே மாதிரியான செக்யூரிட்டி சாஃட்வேர் நாம வெளியிலிருந்து வாங்க வருஷத்துக்கு ஒரு யூசருக்கு தோராயமா….” பேசியபடி மீண்டும் அவன் பார்வை சஹானாவின் மீது படிய அவளோ, டைப் செய்தபடி கண்கள் சொருக சொக்கி சொக்கி விழுந்து கொண்டிருந்தாள்.

மெல்ல அறையை சுற்றியபடியே பேசியவன் அவள் எதிரில் செல்லும்போது முடிந்தமட்டும் அவளை முறைத்து வைத்தான்.

தீவிரமாக தன்முன்னே இருந்த கோப்பை பார்த்தபடி குனிந்திருந்த ரகுநாத்தோ, ஆதனின் குரலில் மட்டுமே முழு கவனத்தையும் வைத்திருந்தார்.

முதல் முறையாக மகன் போர்டு மெம்பர்கள் முன்பு பேசுவதால், அனைத்தும் நல்லபடியாக நடக்கவேண்டுமென்ற கவலை அவருக்கு. மகனின் ஆளுமையில் நம்பிக்கை இருந்தாலும் அவனின் புதிய பரிமாணத்தை நேராக பார்த்துக்கொண்டிருந்த ரகுநாத் தீவிரமாக கேட்டுக்கொண்டிருந்தார்.

கோட்சூட்க்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அசராமல் பதில்தந்தவன் தவறியும் பேக்கெட்டிலிருந்த கைகளை வெளியே எடுக்கவில்லை.

ஒருவழியாக ஒருமணிநேரத்திற்கும் மேலாக நிகழ்ந்த மீட்டிங் நிறைவுபெற, சிலருடன் பேசியபடி ரகுநாத் வெளியே சென்றுவிட,

“வா!” சஹானாவை முறைத்த ஆதன் வேகமாக அவளுடன் தன் அறைக்கு திரும்பினான்.

***