EVA7

ELS_Cover3-41ec44ad

EVA7

7

“கல்யாணம் தானே பண்ணிக்கோ! அதுக்கேன் இவ்ளோ பில்டப்?” சற்றுமுன் இருந்த கோவத்திற்கும், தற்போது அவன் குரலிலிருந்த கிண்டலுக்கும் அத்தனை முரண்.

“ஏன் சொல்ல மாட்டீங்க? உங்களுக்கா கல்யாணம் எனக்குத் தானே!” கடுப்புடன் சொன்னவள் நகத்தைக் கடித்தாள்.

“எனக்கெல்லாம் கல்யாணம்னு சொன்னா, நான் உன்னை மாதிரி பந்தா பண்ண மாட்டேன்”

“ஆஹா நீங்க மகா உத்தமர் ஒத்துக்கறேன்!” அவள் பழிப்பு காட்ட,

“பின்ன? இதான் பொண்ணு கட்டுடா தாலியைனா, கண்ணை மூடிக்கிட்டு கட்டிடுவேன் தெரியுமா?” அவன் ஓர கண்ணால் அவளைப் பார்த்தபடி காரைச் செலுத்தினான்.

“நீங்க நல்லவராவே இருங்க நான் கெட்டவளாவே இருந்துட்டு போறேன்! என்னால அவங்க சொல்றவனை கல்யாணம் செஞ்சுக்க முடியாது!”

பேசவே தயங்குபவளின் குரலில் தெரிந்த உறுதியில் பிரமித்தாலும் அவன் விடுவதாக இல்லை. அவளைக் கிண்டல் செய்வதிலேயே மும்முரமாக இருந்தான். இவர்களின் செல்லச் சண்டையில் பாண்டிச்சேரி வேகமாகவே வந்துவிட்டதைப் போல் தோன்றியது.

மீட்டிங் முடித்து இருவரும் மதிய உணவிற்காக ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தனர்.

“அப்புறம் மாப்பிள்ளை என்ன சொல்றார்? நான் கிளம்பின அப்புறம் எப்படியும் ரகசியமா உங்க அண்ணனுக்கு ஃபோன் பண்ணி பேசி இருப்பியே?” ஆதன் கண்சிமிட்ட,

“உங்களுக்கு நக்கலா இருக்குல்ல?” அவனை வெட்டவா குத்தவா என்பதுபோல் முறைத்தவள், பேச்சை வளர்க்க மனமின்றி மௌனமாகவே இருக்க,

சமாதான கொடியைப் பறக்கவிட, “சாப்பிட்டு கொஞ்சநேரம் பீச்சல நடக்கலாமா?” என்றான்.

‘என்ன சம்மந்தமே இல்லாம?’ என்பதுபோல் அவள் பார்க்க,

“சும்மா ஒரு குட்டி விசிட்?”

“இல்ல வேணாம் அப்புறம் சென்னை போக நேரமாகும்”

அவள் மறுப்பை ஏற்க மறுத்தவன், பேசியே அவளைச் சம்மதிக்க வைத்தான்.

***
அலையில் கால் வைத்தபடி மெல்ல நடந்து கொண்டிருந்தனர்.

“அப்புறம்?” வேடிக்கை பார்த்தபடி ஆதன் கேட்க,

அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவள், “ம்ம்?” என்றாள்.

“நான் மீட்டிங் போயிருக்கும்போது பார்கவ்கிட்ட பேசினியா, மாப்பிள்ளை கிட்ட பேசினியா?” என்று அவன் ஆர்வமாக,

அவளோ கடுப்புடன், “மாப்பிள்ளையாவது ம…வது! ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல! நான் எவன்கிட்டயும் பேசல!”

ஒரு நொடி அதிர்ந்தவன், “என்ன சஹா கெட்டவார்த்தையெலாம் வருது!” சிரிக்க,

“கடுப்படிக்காதீங்க ப்ளீஸ். வேற ஏதாவது பேசலாமே” முகம் சுருக்கினாள்.

“வேறன்னா?” நடையை நிறுத்தியவன் அவள் பக்கம் சற்று சாய்ந்தவாறு கேட்க,

“நீங்க எதுக்கு கோவமா ஃபோனை பிடுங்கி காரை ஒதைச்சு…”

“ஓடிப்போறேன் ஒழிஞ்சு போறேன்னுலாம் என்ன வார்த்தை சஹா?” மீண்டும் அவனுக்குக் கோவம்.

“ஆமா அப்படியே நான் சொன்னா கேட்டுட போறாங்க”.

“வலுவான காரணம் சொன்னா எப்படி கேக்காம போவாங்க?”

“தெரியாம பேசாதீங்க” உதட்டைக் கடித்தவளுக்கு தன் மீது வீசிய கடற்காற்றுகூட வெறுப்பை தந்தது.

“என்ன பிரச்சனைனு சொல்லு ஏதாவது பாயிண்ட் கிடைக்கும். அதோ அங்க கொஞ்ச நேரம் உட்காந்துக்கலாமா?” மணல் வெளியில் ஓரிடத்தை ஆதன் சுட்டிக்காட்ட, இருவரும் கடலைப் பார்த்தபடி அமர்ந்தனர்.

“நான் இவ்வளோ கேக்கறேன் எதுவுமே சொல்லாம இருந்தா எப்படி?”

“என்னனு சொல்ல சொல்றீங்க? எண்ணெய் சட்டிக்கு பயந்து நெருப்புல குதிச்ச கதையா இருக்கு என் நிலமை”

“நான் உன்னை பத்தி கேட்டா, எண்ணெய் செட்டி, தோசை கல்லுன்னுகிட்டு”

சிரித்துக்கொண்டவள் நக்கலாக, “கொசுவத்தி சுத்தினா நாம சென்னை திரும்ப நேரமாகும் பரவல்லையா?”

“எனக்கு எந்த பிரச்னையும் இல்ல, நீ தான் ஆறு மணிக்கு மேல கோடிரூபா கொடுத்தாலும் வேலைசெய்ய மாட்டேன்னு டைலாக் விடுற ஆளு” உதட்டைக் குவித்து பழித்தவன், கைக்கடிகாரத்தை பார்த்து, “இப்போ மணி மூணு, நாலு நாலரைக்குள்ள முடிச்சுடுவியா?”

“கிளம்பலாம்! யாரும் மெனக்கிட்டு ஒன்னும் என் கதையை கேக்க வேணா…”

எழுந்தவள் கையை ஆதன் பிடித்து இழுக்க, அவள் தடுமாறி சரிய, அவனோ மின்னல் வேகத்தில் நகர்ந்ததில் மணலில் கிட்டத்தட்ட குப்புற விழுந்தவள், அவனை முறைத்தபடி முகத்திலிருந்த மண்ணை “து து” என்று தட்டிக்கொண்டாள்.

ஆதன் வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்க, “பிடிக்காம மிஸ் ஆகறீங்களோ!” அவன் தோளில் அடித்தவள் கோவமாக அமர்ந்துகொள்ள,

“பாஸை இப்படி அடிக்கிறதெல்லாம் நியாயமா? நான் உனக்கு சம்பளம் தர முதலாளி இல்லையா, இப்படி மனிதாபிமானமே இல்லாம அடிச்சு கொடுமை படுத்துறியே!” போலியாகக் குறைப்பட்டு கொண்டான்.

“சாரி ஏதோ கோவத்துல தெரியாம” அவள் வருந்த,

“தெரியாம அடிச்சதே இவ்வளோ வலிக்கிதே? வேணும்னே அடிச்சா?” உதட்டைப் பிதுக்க, புன்னகைத்தவள் பலமுறை மன்னிப்பு கேட்டும் அவன் அதைக் கண்டுகொள்ளாமல் போலியாகப் புலம்பியபடியே இருந்தான்.

கைகளைக் கூப்பியவள், “தெரியாம அடிச்சுட்டேன் வேணும்னா நாலு அடி அடிச்சுக்கோங்க இப்படி மொக்கை போடாதீங்க” என்று கெஞ்ச,

“மன்னிக்கனும்னா எனக்கு இப்போ ஃப்ளாஷ் பேக் கேக்கணும்” தோளைக் குலுக்கியவன், ஆர்வமாக அவளைப் பார்த்தபடி லேசாகத் திரும்பி அமர்ந்தான்.

தொண்டையை செறுமியவள்,

“அப்போ ஒரு அஞ்சு மணி இருக்கும். எழுத்திரு சஹானான்னு பாட்டி வந்து எழுப்பினாங்க, நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சொன்னேன். அதுக்குள்ள பார்கவ் ‘நானே எழுந்துட்டேன் நீ என்னடி தூங்குறே நாயே’ன்னு என் முகத்துல தண்ணிய கொட்டினான். எனக்கு ஒரே கோவம், டேய்ன்னு பாஞ்சு அவனைப் பிடிச்சு…”

“நிறுத்து நிறுத்து! நான் என்ன கேக்கறேன் நீ என்ன சொல்ற?” அவன் முகம் சுருக்க,

“நடுவுல கேட்டா எனக்குக் கோர்வையா சொல்ல வராது!” அவள் முறைத்ததில், “சொல்லு” வாயை மூடிக்கொண்டான்.

“அப்போ ஒரு அஞ்சு மணி இருக்கும். எழுந்திரு சஹான்னு பாட்டி வந்து…ஐயோ! எதுக்கு அடிச்சீங்க?” தோளைப் பிடித்துகொண்டாள்.

“நக்கலா? பிரச்சனையை சொல்லுமான்னா காமெடி பண்றியோ?”

சிரித்தவள், “ஒ தெரிஞ்சுருச்சா? நான் கொஞ்சம் ஓட்டலாம்னு நினைச்சேன்” னு ‘ஈ’ என்று இளித்தாள்.

“கடுப்படிக்காம சொல்லு எதுக்காக கல்யாணம் வேண்டாம்னு சொல்றே? இப்படி தான் அன்னிக்கி உனக்கு எப்போ இந்த ஃபோபியா ஸ்டார்ட் ஆச்சுன்னு கேட்டேன் நீ பேச்சை மாத்திட்ட இப்போ இப்படி. விருப்பம் இல்லைனா விடு” அவன் இப்பொழுது எழ முயற்சிக்க அவன் டிஷர்ட் நுனியை பிடித்து இழுத்தவள்,

“சாரி சாரி, கோச்சுக்காதீங்க” என்று குழந்தைபோல் கெஞ்ச, “பொழச்சு போ!” என்றவன் அமர்ந்துகொண்டான்.

“என்ன தெரியணும் கேளுங்க சொல்றேன், நானா சொல்லனும்னா வரமாட்டேங்குது”

“சரி மொத குழப்பத்துலயே ஆரம்பிப்போம், எப்போதிலிருந்து இந்த பயமயம்?” அவள் கண்களை நேராகப் பார்த்தவன் கேட்க,

“பத்தாவது படிக்கும்போது அதுவரை இவ்வளோ பயம்லாம் இல்ல சாதாரணமாத்தான் இருந்தேன்”

“ம்ம்… ஏன்?”

“ஏன்னா… சென்னைல இங்கதான் தாத்தா பாட்டியோட சின்ன பிளாட்ல தங்கி நானும் பார்கவும் படிச்சோம். அவன் சிஏ, நான் பாத்தவது.

அன்னிக்கி ஸ்கூல் முடிச்சுட்டு எல்லாரும் வீட்டுக்கு போயிட்டாங்க. என்னை பிக்கப் பண்ண பார்கவ் வர லேட் ஆச்சுன்னு நான் ஸ்கூல் பக்கத்துல இருந்த பார்க்ல உட்காந்து மேத்ஸ் ஹோம்ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன்… கேக்கறீங்களா? ஏன் இப்படி பார்க்கறீங்க?”

ஆதனின் கண்கள் இமைக்காமல் அவளைப் பார்த்திருந்ததில் சஹானா சொல்வதை நிறுத்திக் கேட்டாள்.

“நீ சொல்லு. ப்ளீஸ்”

“போர் அடிச்சா சொல்லுங்க, எனக்கு எப்படி சொல்லணும்னு தெரியல. யார்கிட்டயும் சொன்னதில்ல, மனசுல வரத அப்படியே சொல்ல ட்ரை பண்றேன்”

“அதெல்லாம் பரவால்ல, நீ சொல்லு” அவன் அவசரப்படுத்த,

“ம்ம் எங்க விட்டேன்? ஆ கணக்கு போட்டுக்கிட்டு இருந்தேன், எனக்கு பின்னாடிலிருந்து, “ஹேய்!” னு குரல். யார்னு பாத்தா ஒசரமா ஒரு பையன், அவன் பின்னாடி அடிச்ச வெயில்ல அவன் முகம் தெரியல,

“என்ன அண்ணான்னு?” கேட்டு முடிக்கல, விட்டான் பாருங்க ஒரு அறை! காதெல்லாம் கொய்ங்குன்னு, பொறி கலங்கி போச்சு!”

ஆதன் தாடை இறுக மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டான். அவளோ பார்வையை கடலுக்குத் திருப்பியிருந்தாள்.

“நீ எல்லாம் படிச்சு கிழிச்சு என்னத்த புடுங்க போறேன்னு ஆரம்பிச்சான்… எனக்கா கண்ணுல தாரைத் தாரையா தண்ணி கொட்டுது உடம்பெல்லாம் வெலவெலத்து அவன் அடிச்ச அடில கன்னத்துல சரியான வலி எரிச்சல்.

அவனா நிறுத்தாம திட்றான்! கைல இருந்த ஜாமென்ட்ரி பாக்ஸை பிடிங்கி தூக்கி அடிச்சுட்டு விறுவிறுன்னு போயிட்டான்!

எதுக்கு வந்தான், அடிச்சான், திட்டினான்? ஒரு மண்ணும் விளங்கல, உடம்பெல்லாம் சில்லுன்னு ஆகி அப்படியே உக்காந்துட்டேன். பார்கவ் வந்து உலுக்குறவரை என்ன பண்ணேன்னு கூடத் தெரியல”

வெறுமையாகச் சிரித்தபடி அவள் திரும்ப, ஆதனோ கண்களை மூடி நெற்றியை பிடித்துக்கொண்டிருந்தான்.

“என்னாச்சு பாஸ்? ஹய்யோ மொக்கையா இருக்கா? இதுக்கு தான் சொன்னேன் வேண்டாம்னு”

மெல்ல திறந்த அவன் கண்களில் நீர் வெய்யிலில் மின்னியது!

“ஐயோ! என்ன நீங்க இவ்வளோ இளகின மனசா இருக்கீங்க?” அவள் பதற, அவனோ மெளனமாக மெல்லிய தலையசைப்புடன் திரும்பிக்கொண்டான்.

“சாரி” என்றவள் மௌனமாக.

ஆதனோ திக்கி திக்கி “அ… அவன ஞாபகம் இருக்கா?”

மறுப்பாகத் தலையசைத்தவள், “அவன் தான் க்ஷண நேரத்துல அறைஞ்சுட்டானே, கண்ல தண்ணி வேற, நிமிர்ந்து பாக்கவும் என்னமோ பயம், பாத்தப்போவும் முகம் மங்கலா தான் தெரிஞ்சுது, அவன் விடாம திட்டிகிட்டே இருந்ததுல மேல மேல வந்த அழுகை வேற. தோராயமா கூட அவன் முகம் ஞாபகம் இல்ல”

மனதில் அன்றைய நிகழ்வுகள் காட்சியாய் ஓட, லட்சமாவது முறை அவன் முகத்தை நினைவு கூர முயன்று தோற்றாள்.

“அப்போதிலிருந்து தான் பயமா?” ஆதனின் குரல் நடுங்க கேட்டான்.

“ம்ம் கிட்டத்தட்ட அப்படிதான். யாரோ எவனோ? என்னத்துக்கு வந்தானோ? அறைஞ்சானோ? ஒன்னும் தெரியல. ஆனா என் வாழ்க்கையை அப்படியே புரட்டி போட்டுட்டான்…! உங்க கிட்ட இதெல்லாம் ஏன் சொல்லறேன் கூடத் தெரியல. விடுங்க” பலவருட விரக்தியின் தாக்கம் அவளிடம்.

கண்களுக்கிடையில் நாசியின் நுனியை பற்றிக்கொண்டு தன்னை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தவன், “சாரி சஹா…” என்றான்.

“நீங்க எதுக்கு சாரி சொல்றீங்க அய்ய” அவள் அவனைப் பார்க்க, அவன் கண்ணில் சிந்திவிட தயாராய் கண்ணீர் முத்துக்கள்.

“என்ன நீங்க… சாரி” அவள் அவன் கண்ணைத் துடைக்கப் போக, அவள் கையைப் பற்றிகொண்டவன்,

“சத்தியமா நான் வேணும்னே செய்யல சஹா, புத்தி தடுமாறி… மூளை இல்ல எனக்கு… மன்னிச்சுடு” அவள் புறங்கையை அவன் கண்ணீர் தீண்டியது

“ஆதன்!” பதறிவிட்டாள்.

பேசமுடியாமல் அவள் கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டான்.

“என்னப்பா நீங்க? கடவுளே நான் சொல்லி இருக்கவே மாட்டேன், நானே சாதாரணமா தான இருக்கேன் நீங்க ஏன் அழறீங்க, அச்சோ நீங்க அழுதா சகிக்கலை! சிங்கம் அழலாமோ?”

அவள் சொல்ல மெல்ல சிரித்தவன், “சஹா உனக்கு புரியலையா?” ஏக்கமாகக் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தாள்.

“அந்த…அது…நான் தான்!” என்றவன் குரல் உடைந்தது.

ஸ்தம்பித்துவிட்டவளின், “நீங்களா?” கடல்காற்றில் அவளுக்கே கேட்டிருக்காது.

ஆமென்று மெல்ல தலையசைத்தவன், வார்த்தைகள் கிடைக்காமல் மௌனமானான்.

வேகமாகத் தள்ளிச் செல்லும் காற்றும், கால்வரை வர விடாமல் முயற்சிக்கும் அலைகளும், ஆங்காங்கே இருந்த மக்கள் எழுப்பிய சப்தங்களும் இருவரின் கருத்தையும் புலன்களையும் தீண்டவே இல்லை.

ஆறுவருட கேள்விக்கும் துடிப்புக்கும் உறங்கா இரவுகளுக்கும் பதில் வெகு அருகே தொட்டுவிடும் தூரத்தில் இருந்தும், எதற்கென்று காரணம் கேட்கவோ, திட்டவோ ஏன் அழவோ கூடச் சக்தியின்றி சஹானாவின் மூளை யோசிக்க மறுத்து நிசப்தமாய் இருக்க,

அதே ஆறுவருடங்களாக அவளைத் தேடி காரணத்தையும் மன்னிப்பையும் கொட்டித்தீர்க்க துடித்துக் கொண்டிருந்தவனோ ஏனோ தைரியமின்றி குறுகி நின்றான்.

ஆதனின் மொபைல் விடாமல் ஒலிக்க, “போன் அடிக்குது எடுங்க” என்றவள், “நேரமாச்சு” என்று எழுந்தாள்.

வெறுமையாக மொபைலை காதில் வைத்தவன் அழைப்பை ஏற்கவும் மறந்திருக்க அது விடாமல் அடித்தது. அவன் தோளைப் பிடித்து உலுக்கியவள்,

“அட்டென்ட் பண்ணுங்க” என்றதில் அவன் அழைப்பை ஏற்று, “அப்புறம் ஃபோன் பண்ணறேன்” என்று உடனே அழைப்பைத் துண்டித்தான்.

சின்ன சின்ன சீண்டல்களுடன் சிரித்தபடி வந்தவர்கள் இப்பொழுது கடலின் பாரத்தை தாங்கிய மனதோடு மெளனமாகக் காரை நோக்கி நடந்தனர்.

“எங்களை போட்டோ எடுக்க முடியுமா ப்ளீஸ்” என்று கொஞ்சி கேட்டபடி வழிமறித்த வெள்ளைக்கார பெண்ணை வெறுமையாகப் பார்த்தவன்,

புன்னகையுடன் போஸ் கொடுத்த அந்த ஐரோப்பிய குடும்பத்தைச் சில கிளிக்கிற்கு பின், அவள் நன்றியையும் மௌனமாகக் கடந்தான்.

சிறிது தூரம்வரைக்கும் அமைதியுடன் பயணம் கழிய, தானே பேசத் துவங்கினான் ஆதன்.

“அன்னிக்கி அப்பாவோட பைக் எடுத்துக்கிட்டு பிரெண்ட்ஸ் கூட கிரிக்கெட் விளையாட பார்க் வந்தேன். திரும்பும்போது பைக் சீட் எல்லாம் கிழிச்சு, பெட்ரோல் டேங்க் எல்லாம் கீறிவச்சு இருந்துது. தாங்கவே முடியல அவ்வளோ கோவம்.

யார் பண்ணி இருப்பான்னு சுத்தி சுத்தி பாத்தேன் பார்க்கிங்ல யாருமில்ல, பார்க்கு உள்ள வந்தப்போ, காம்பஸை பாக்ஸுக்குள்ள வச்சுக்கிட்டு இருந்த நீ! சந்தேகமா கிட்ட கேட்கலாம்னு வந்தப்போ உன் கைல ப்ளேடு வேற, நீதான் என் பைக்கை சேதம் பண்ணதுன்னு நினைச்சு…

புது பைக், யோசிக்காம கொடுத்த அப்பாவோட நம்பிக்கையை பொய்யாக்கிட்டேன்னு வேற ஒருபக்கம், அந்த வயசுல யோசிக்கிற பக்குவமுமில்ல, விசாரிக்க பொறுமையுமில்ல! எல்லாம் சேர்ந்து நானே உணரும் முன்னாடியே அடிச்சுட்டேன்!”

ஸ்டேரிங் வீலை ஓங்கி அடித்தவன் காரைச் சாலையோரம் நிறுத்திக் கண்களை மூடிக்கொண்டான்.

ஆழ்ந்த மூச்சுடன், “திரும்ப பைக்க எடுக்க வரப்போ தூரத்துல ரெண்டு பொறுக்கி பசங்க வேறொரு பைக்கை சிரிச்சுகிட்டே நாசம் பண்ணிகிட்டு இருந்தாங்க, கோவமா அவங்களை துரத்த போனதுல உன்ன மறந்துட்டேன்!” என்றவன் மேலும் தொடர சில நொடிகள் தேவைப்பட்டன.

மௌனமாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவள் இடைமறிக்க வில்லை. கேள்விகளையும் வசவுகளையும் அவன்மீது வீசவுமில்லை. அவனே தொடர்ந்தான்.

“நான் திரும்பி வந்தப்போ உன் ஞாபகம் வந்து தேடினேன், நீ அங்க இல்ல.

ராத்திரியெல்லாம் தூக்கம் இல்ல, உன் யூனிபார்ம் ஒண்ணுதான் அடையாளம். அந்த ஏரியா ஸ்கூல் எல்லாம் அலைஞ்சு உன் ஸ்கூலை கண்டுபிடிச்சேன்.

எப்படியாவது நடந்ததை சொல்லி மன்னிப்பு கேட்கணும்னு ஒருவாரத்துக்கும் மேல கார்த்தாலே சாயங்காலம்னு உன் ஸ்கூல் வாசல்ல பழியா கிடந்தேன். ஆனா, உன்ன பாக்கவே முடியல.

கொஞ்ச நாள் கழிச்சு உன்னை எதேச்சையா பஸ் ஸ்டாப்ல பார்த்து பேச வந்தேன். ஆனா நீயோ என்னை அடையாளம் தெரியாத மாதிரி நடந்துகிட்ட, நான் பேச முயற்சிக்கும்போது கார்ல ஏறி போயிட்ட.

மறுபடியும் உன் ஸ்கூல்ல காத்திருந்தும் உன்னை பார்க்கவே முடியல. நானும் லீவ் முடிச்சு யுஎஸ் திரும்ப வேண்டி வந்தது. மூணு வருஷத்துக்கு அப்புறம் சென்னை வந்து உன்னை தேடினேன். விடாம தேடினேன்… பாத்தேன்… உன் காலேஜ்ல இன்டெர்வியு அன்னிக்கு.

குற்ற உணர்ச்சில தைரியம் காணாம போச்சு உண்மைய சொல்லி மன்னிப்பு கேக்க முடியல, எப்படினா கூடவே வச்சுக்க சாக்குபோக்கு சொல்லி செக்ரெட்டரியா அப்பாயிண்ட் பண்ணி…

உன் ஃபோபியா என்னாலதான்னு தோன ஆரம்பிச்ச அன்னிலிருந்தே என் நிம்மதியே போச்சு! தாங்க முடியாத ஸ்ட்ரெஸ் குற்ற உணர்ச்சில கோழையா ஜுரத்துல படுத்துட்டேன்” பார்வையால் மன்னிப்பை வேண்டினான்.

அவன் வேதனை பார்வை சஹானாவின் மனதை பிசைய அவசரமாக, “ப…பரவால்ல, இட்ஸ் ஓகே! தெரியாம தானே…” என்றவள் அவன் வாய்திறக்கும் முன்பே,

“இனிமே ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க. எதுவும் உங்களால இல்ல!” என்றதோடு சரி. அவனின் ‘ஏன்? எப்படிக்கு? விடை தர மறுத்துவிட்டு, மௌன முகமூடி அணிந்துகொண்டாள்.

பல கேள்விகள் மூளையை அழுத்திய பொழுதும் அதைத் தாண்டிய ஏதோ ஒரு தவிப்பில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முதல் முறை விடியலுக்காகக் காத்திருந்தனர்.

***

Leave a Reply

error: Content is protected !!