gaanam02
gaanam02
கானம் 02
ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் கோதுமையும் ஓட்ஸும் பயிரிடப்பட்டிருந்தது. உடல் முழுவதும் பொன்னைப் பூசிக்கொண்ட மங்கை போல முற்றி விளைந்த கதிர்கள் காற்றில் தள்ளாடிக் கொண்டிருந்தன. அடுத்தாற்போல பெரிய பண்ணை தெரிந்தது. அதில் ஆடு, மாடு, கோழி என பல உயிரினங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அதை அடுத்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆப்பிள் தோட்டம். அதற்கு மேலும் இன்னும் ஏதேதோ தோட்டங்கள், நான்கைந்து ட்ராக்டர்கள்.
இவற்றிற்கெல்லாம் நடுவே அழகே உருவாக இரண்டு மாடிகளைக் கொண்ட ஒரு வீடு. வீட்டின் முன்பாக ‘தாமஸ் ஸ்பென்ஸர்’ என்ற பெயர்ப்பலகை பளபளத்தது. அந்த வீட்டினுள்ளேயும் அதைச் சுற்றிய இடத்திலும் ஒரு வித அமைதி. கண்ணுக்குத் தெரியும் அனைத்திலும் ஓர் ஒழுங்கு. பண்ணையில் மேயும் உயிரினங்கள் கூட தங்கள் எஜமானனுக்கு எல்லாவற்றிலும் ஒழுங்கு முக்கியம் என்பதை உணர்ந்தன போல மேய்ந்து கொண்டிருந்தன.
கணக்கில் அடங்கா இத்தனைச் சொத்துகளுக்கும் சொந்தக்காரர் ஸ்பென்ஸர் பரம்பரையில் வந்த தாமஸ். தனது இரண்டு பெண்கள், மனைவி, அம்மாவோடு அந்த வீட்டில் வசித்து வருகிறார். அவரின் மூத்த மகள்தான் நான்சி.
இங்கிலாந்தின் பழங்குடிகளில் ஒன்றான ஸ்பென்ஸர் வம்சத்தின் பாரம்பரியத்துக்கு தன்னால் எந்தவிதப் பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கும் மனிதர் தாமஸ். இருபது ஆண்டுகளுக்கு முன்பாகத் தனக்குப் பெண் பார்க்கும் போது கூட மிகவும் நல்ல குடியில் பிறந்த மேரியைத்தான் தெரிவு செய்தார். இவர்களின் செல்வ நிலையைப் பார்த்துவிட்டு எத்தனையோ வசதியான வீட்டுப் பெண்கள் வந்த போதும் தாமஸ் அசைந்து கொடுக்கவில்லை.
“பணம் என்னிடம் இருக்கிறது, வருபவள் நல்ல குடியில் பிறந்து வளர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும்.” என்று முடித்துவிட்டார். அவரின் கனவை, எதிர்பார்ப்பை மேரி எந்த வகையிலும் சிதைக்கவில்லை. இன்றுவரை அவர்கள் இல்லறம் சிறக்கிறது. அதற்குச் சாட்சியாக இரண்டு பெண் குழந்தைகள்.
வீட்டினுள்ளே எந்த நவீனங்களுக்கும் இடமில்லாமல் பார்க்கும் இடமெல்லாம் பாரம்பரியம் மின்னியது. விலையுயர்ந்த ஓவியங்கள் முதற்கொண்டு கால்பதிக்குப் கார்ப்பெட் வரை பழமையின் அழகு மிளிர்ந்தது. பார்த்துப் பார்த்துத் தனது வீட்டை அலங்கரித்திருந்தார் தாமஸ். பழமை விரும்பிகளுக்கு அவரது வீடு ஒரு பொக்கிஷம்!
இரவு உணவு தயாராகிக் கொண்டிருக்க அனைத்தையும் மேற்பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தார் மேரி. நாற்பதுகளில் இருந்தார். அவர்களின் குடும்ப வழக்கப்படி சிறுவயதிலேயே திருமணம் முடிப்பதால் இரண்டு வளர்ந்த பெண் குழந்தைகளின் தாய் என்று சொல்ல முடியாத வண்ணம் இளமைப் பொலிவோடு இருந்தார் பெண்மணி. காலை உணவும் மதிய உணவும் அவரவர் வசதிக்கு ஏற்றாற்போல உண்டாலும் இரவு உணவு குறிப்பிட்ட நேரத்தில் அந்த வீட்டில் நடக்கும். அப்போது எல்லோருமாக டைனிங் டேபிளில் ஆஜராகி விடவேண்டும். இது அந்த வீட்டின் எழுதப்படாத சட்டம். பகல் முழுவதும் தோட்டங்களைச் சுற்றிப்பார்க்க தாமஸ் சென்று விடுவதால் இரவில் மாத்திரமே அவரால் வீடுதங்க முடியும்.
இருபது பேர் சேர்ந்து உட்கார்ந்து உண்ணக்கூடிய அந்த டைனிங் டேபிளில் அன்று இரவும் வீட்டு அங்கத்தினர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். அனைவரும் என்றால் தாமஸ், அவர் மனைவி மேரி, அவர்களின் பெண்கள் நான்சி மற்றும் அமீலியா, தாமஸின் அம்மா எல்லா. அவர்களின் வழக்கப்படி உணவளித்த இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்ண ஆரம்பித்திருந்தார்கள். குடும்பத்தின் பொதுவான பேச்சுக்கள் அப்போது இடம்பெறும். தாமஸ் தனக்குப் புதிதாகக் கிடைத்திருக்கும் வைன் ஆர்டர் பற்றி விபரித்துக் கொண்டிருந்தார்.
“நமக்கிட்ட இருக்கிற திராட்சை உற்பத்தி இதுக்குப் போதுமா தாமஸ்?”
“இல்லைன்னுதான் தோணுது மாம்.”
“அப்போ என்னப் பண்ணப் போறே?”
“இப்போதைக்கு திராட்சைத் தோட்டம் ஒன்னைக் குத்தகைக்கு எடுக்கப் போறேன்.”
“புதுசா ஒன்னை வாங்கினா என்ன தாமஸ்?”
“அதையும் தேடிக்கிட்டுத்தான் இருக்கேன், நல்லதா அமைஞ்சுதுன்னா வாங்கிடுவேன்.” பேசிய படியே டேபிளில் இருந்த உணவுப் பதார்த்தங்களைத் தங்களுக்குத் தேவையான அளவு எடுத்துப் போட்டுக்கொண்டு அனைவரும் பசியாறிக் கொண்டிருந்தார்கள்.
“டாட், நான் அக்ரிகல்சர்தான் படிக்கப்போறேன், எனக்கு உங்களை மாதிரி நம்ம தோட்டங்களையெல்லாம் நிர்வாகம் பண்ணணும்னு ஆசை.” இளைய பெண் சொல்ல தாமஸ் முறுவலித்தார்.
“தட்ஸ் குட்.” என்றவர் அதே புன்னகை முகமாக,
“இன்னைக்கு ஜாக்சன் கால் பண்ணி இருந்தான்.” என்றார்.
“ஓ…” என்ற மேரி தனது மாமியாரை கடைக்கண்ணால் பார்த்தார். அப்போது அவரும் தன் மருமகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஏற்கனவே பேசினதுதான், எப்போக் கல்யாணத்தை வெச்சுக்கலாம் ன்னு கேட்டான்.” தாமஸ் சாதாரணமாகச் சொல்ல ஃபோர்க் பிடித்திருந்த நான்சியின் கை லேசாக நடுங்கியது.
“என்ன அவசரம் தாமஸ்?”
“இதே பதிலைத்தான் ஜாக்சன் கேட்கிறப்போ எல்லாம் நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன்.” தாமஸின் குரலில் இப்போது லேசான சலிப்பு இருந்தது. தாமஸும் ஜாக்சனும் நல்ல நெருங்கிய நண்பர்கள். ஜாக்சனின் குடும்பம் தாமஸின் குடும்பத்திற்கு எந்த வகையிலும் குறையாத பின்னணியும் செல்வச் செழுமையும் கொண்டது. குழந்தைகள் பிறந்து வளர்ந்தது முதலே ஜாக்சனுக்கு தன் மகனுக்கு நான்சியை மணமுடித்து வைக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதை தாமஸும் பெரிதும் விரும்பினார், ஆதரித்தார்.
“நான்சிக்கு பதினெட்டு வயசு ஆச்சில்லை? இன்னமும் என்ன அவசரம், என்ன அவசரம் ன்னு கேட்டா என்ன அர்த்தம் மாம்?” தெட்டத் தெளிவாக தாமஸின் குரலில் கோபம் தொனித்தது.
“நான்சிக்கு பதினெட்டாக இன்னும் ஒரு மாசம் இருக்கு தாமஸ்.”
“அது எனக்கும் தெரியும், இந்த ஒரு மாசத்துல செய்ய எவ்வளவோ வேலை இருக்கு, சர்ச் ல முதல்ல சொல்லி வெக்கணும்…” அதற்கு மேலும் மகன் தன் மகளின் திருமணத்திற்குச் செய்ய வேண்டியிருக்கும் வேலைகளைப் பட்டியல் போட ஆரம்பிக்க தாய் இடைமறித்தார்.
“அதுசரி தாமஸ், ஜாக்சனோட பையன் படிப்பை முடிச்சுட்டானா என்ன?”
“அவன் படிப்பை முடிச்சு ஜாக்சனோட சேர்ந்து அவங்கத் தொழிலையும் பார்க்க ஆரம்பிச்சுட்டான், ஜாக்சன் எங்கிட்ட இதுபத்தி ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே பேச ஆரம்பிச்சுட்டான், நான்தான் நான்சிக்கு இன்னும் பதினெட்டு முடியலை, முடியட்டுமேன்னு நினைச்சேன், ஆனா அது தப்போன்னு இப்போ தோணுது.” தாமஸ் பேசி முடிக்க அங்கிருந்த நான்கு பெண்களும் அமைதியாகத் தலை குனிந்த படி அமர்ந்திருந்தார்கள். நால்வரின் சிந்தனைகளும் நான்கு திசைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன.
“எக்ஸ்கியூஸ் மீ.” அதோடு தனது இராவுணவு முடிந்தது என்பது போல தாமஸ் நாப்கினால் வாயைத் துடைத்துக் கொண்டு எழுந்து போய்விட்டார். அம்மாவும் பாட்டியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள். நான்சிக்கு பெரியவர்களை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இருக்கவில்லை. ஆனாலும், இளையவள் தன் அக்காவை கவலை தோய்ந்த விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
***
அன்றிரவு படுக்கைக்குப் போகுமுன் தனது இரவு நேர ஜெபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் தாமஸ். படுக்கையைச் சரிபண்ணிக் கொண்டிருந்த மேரியின் கண்கள் ரூமின் கதவையே பார்த்த வண்ணம் இருந்தன. அவருக்கு நிச்சயமாகத் தெரியும், தன் மாமியார் அத்தனைச் சுலபத்தில் இந்த விஷயத்தை விட்டுவிட மாட்டார். அவரின் எண்ணத்தைப் பொய்யாக்காமல் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. ஓடிப்போய் கதவைத் திறந்தார் மேரி.
‘கவலைப் படாதே.’ என்பது போல அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறையினுள் வந்தார் முதியவர். வெகு அபூர்வமாகத் தங்கள் அறையைத் தேடி வரும் அன்னையை அன்று தாமஸும் எதிர்பார்த்தார் போலும். சட்டென்று தன் ஜெபத்தை முடித்துக் கொண்டவர் கட்டிலில் அமர்ந்தார். அங்கிருந்த நாற்காலியில் பாட்டியும் அமர்ந்து கொண்டார்.
“சொல்லுங்க மாம்.” தாமஸும் எந்தச் சுற்றிவளைப்பும் இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.
“தாமஸ், நான்சி விஷயத்துல நீ அவசரப்படுறியோன்னு எனக்குத் தோணுது.”
“இல்லை மாம், நானும் நம்ம பொண்ணுக்கு இன்னும் வயசிருக்கு, ஆறுதலா இதையெல்லாம் பண்ணலாம் ன்னுதான் நினைச்சிருந்தேன்.”
“ஏன்? இப்போ அந்த நினைப்புக்கு என்ன களங்கம் வந்திடுச்சு?” அவசரமாகப் பாட்டி கேட்க தாமஸ் சிரித்தார்.
“வீட்டுல இருக்கிற லேடீஸ் உங்களுக்குப் பொண்ணுங்க எங்கப் போறாங்க, என்னப் பண்ணுறாங்கன்னு எதுவுமே தெரியாது, ஆனா நான் அப்பிடி இருக்க முடியாதில்லையா?” சட்டென்று மேரி இப்போது தனது மாமியாரை குழப்பமான பார்வைப் பார்த்தார்.
“என்னாச்சு தாமஸ்?”
“அந்தப் பையன் இங்க வந்திருக்கான்.”
“இங்கன்னா?” அவசரமாகக் கேட்டார் மேரி.
“நம்ம ஊருக்கு.”
“அவங்களும் இதே ஊர்ல வாழ்ந்தவங்கதானே தாமஸ்? அதுல என்னத் தப்பிருக்கு.”
“அதுல எந்தத் தப்புமில்லை மாம், ஆனா வந்தவனைப் போய் எம் பொண்ணு பார்த்தது தப்பில்லையா?”
“ஓ!” அதற்கு மேல் பெண்கள் எதுவும் பேசவில்லை. நான்சி அந்த அளவுக்குத் துணிவாள் என்று அவர்களும் எதிர்பார்த்திருக்கவில்லைப் போலும். சற்று நேரம் அங்கே கனத்த அமைதி நிலவியது. யாரும் எதுவும் பேசாமல் தங்களுக்குள் சிந்தித்தபடி அமர்ந்திருந்தார்கள்.
“போய் பார்க்கிற அளவுக்கு நான்சி துணிவாள் ன்னு நானும் நினைக்கலை தாமஸ்.”
“அதைத்தான் நானும் சொல்றேன் மாம், நம்மப் பொண்ணு இன்னும் சின்னக் குழந்தையில்லை, அவளுக்கு வயசு வந்திடுச்சு.”
“கல்யாணத்துக்கு வயசு வந்திடுச்சுன்னா… அவளுக்கேத்த துணையைத் தேர்ந்தெடுக்கிறதுக்கும் அவளுக்கு வயசு வந்திடுச்சுன்னுதானே அர்த்தம் தாமஸ்?” தனது தாயின் கேள்வியில் தாமஸ் சற்று நிதானித்தார். பின்பு அவரது வார்த்தைகள் ஆணித்தரமாக வந்து வீழ்ந்தன.
“மாம்… இந்தக் குடும்பத்துக்குன்னு ஒருசில கட்டுப்பாடுகள் இருக்கு, அது காலாகாலமா எந்த அப்பழுக்குமில்லாம பேணப்பட்டிருக்கு, அது என்னோட தலைமுறையில மீறப்படுறதை என்னால அனுமதிக்க முடியாது, எனக்கப்புறமா என்ன நடந்தாலும் அதைப்பத்தி நான் கவலைப்படலை, ஆனா… எங் கண்ணு முன்னாடி எந்த அசம்பாவிதமும் நடக்க வேணாம்.”
“அசம்பாவிதமா?”
“யெஸ் மாம், அந்தப் பையன் கிரவுண்ட் ல இறங்கி விளையாடும்போது நீங்க பாத்திருக்கீங்களா?”
“இல்லை தாமஸ்.”
“ஒரு நாளைக்குப் பாருங்க, எத்தனை ஆயிரம் ரசிகர்கள் தெரியுமா? சின்ன வயசு, அளவுக்கு மீறின பணம், புகழ், இன்னும் என்னெல்லாமோ… இதெல்லாத்தையும் பார்த்து நான் பயப்பிடுறேன் மாம், இதெல்லாம் நாளைக்கு நம்ம பொண்ணு வாழ்க்கையைச் சிதைச்சிடும்.”
“…..”
“கல்யாணம் எங்கிறது வாழ்க்கையில சந்தோஷமா, கோலாகலமா ஒரு தடவை நடக்கிறது மாம், தெரிஞ்சுக்கிட்டே படுகுழியில விழுந்துட்டு அதுக்கப்புறமா அழுறதுல என்ன லாபம் சொல்லுங்க?”
“எல்லாரையும் அப்பிடிச் சொல்லிட முடியுமா தாமஸ்? ஒருவேளை அந்தப் பையன் நல்லவனா இருந்துட்டா?”
“அவன் நல்லவனா இருந்தாலும் அவன் இருக்கிற சமூகம் அவனை நல்லவனா இருக்கவிடாது மாம், இது எம் பொண்ணோட வாழ்க்கை, இதுல நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை.”
“…..”
“அது மட்டுமில்லை மாம், அந்தப் பையனோட அம்மா எங்க?”
“அது அவங்களோட தனிப்பட்ட பிரச்சினை தாமஸ், அதுல நாம கருத்துச் சொல்றது நாகரிகம் இல்லை.”
“ஒரு மூனாவது மனுஷனா நான் இருக்கும் போது நீங்க சொல்ற மாதிரித்தான் நினைப்பேன், அதுவே எம் பொண்ணோட அவன் சம்பந்தப்படும் போது நாலையும் நான் விசாரிப்பேன்.”
“நான்சி பாவமில்லையா தாமஸ்?”
“அவ வாங்கிக் கேட்கிறது பொம்மை இல்லை மாம், வாழ்க்கை… சின்னப் பொண்ணு, ஆசைப்பட்டுட்டா எங்கிறதுக்காக அவ கேட்டதையெல்லாம் என்னால வாங்கிக் குடுக்க முடியாது.”
அதற்கு மேல் பேச எதுவுமே இல்லை என்பதால் ‘எல்லா’ தனது மகனின் அறையை விட்டு வெளியே வந்தார். மனது மிகவும் குழம்பிப் போய் கிடந்தது. தாமஸ் சொல்வதில் எந்தத் தவறும் இருப்பது போல அவருக்குத் தோன்றவில்லை. சொல்லப்போனால் ஒரு தந்தையாக தனது மகன் சொல்வது அனைத்தும் உண்மையே. அதுவும் இன்றைய தொலைக்காட்சி சேனல்களிலும் பத்திரிகைகளிலும் வரும் செய்திகள் அத்தனை உவப்பானதாக இல்லையே!
எங்கு பார்த்தாலும் இஷ்டப்படி சின்னச்சின்ன விஷயங்களுக்காக விவாகரத்து வழக்குகள் சதா அரங்கேறிக் கொண்டிருந்தன. இன்றைய நவநாகரீக உலகில் இதுவெல்லாம் சாதாரணமாகப் போய்விட்டதைப் பார்த்துப் பெரியவர் பெரிதும் வருந்துவதுண்டு. அதிலும் இதுபோன்ற பிரபலங்கள்?! அவர்களின் வாழ்க்கைத்தரமும் முறையும் முற்றிலும் வேறாக இருந்தது. நாளைக்குத் தனது மகளின் வாழ்க்கை இப்படியெல்லாம் சின்னாபின்னமாகி விடக்கூடாது என்று தாமஸ் நினைப்பது தவறில்லைத்தானே?
ஆனால் நான்சி! அவளை என்ன செய்வது? சிறிய வயது முதல் பார்த்துப் பழகிய பையன் மேல் அவளுக்கு வந்திருக்கும் தூய்மையான காதல் அது. அதைக் கிள்ளி வீசுவது பாவமில்லையா? என்ன செய்வது? யாருக்காகப் பேசுவது என்று எதுவும் புரியாமல் பாட்டி தனது அறைக்குப் போய் கட்டிலில் தலை சாய்த்தார். அதேவேளை, தனது கட்டிலில் சாய்ந்தபடி நான்சியும் அன்றைய நிகழ்வுகளைத்தான் அசைபோட்ட படி இருந்தாள்.
அவளுக்குத் தெரியும், அப்பா இந்தக் கல்யாணத்துக்கு நிச்சயமாகச் சம்மதிக்கப் போவதில்லை. அது தெரிந்தும் எந்தத் தைரியத்தில் இந்தக் காதலைப் பிடித்துக்கொண்டு தான் நடைபோடுகிறேன் என்றும் அவளுக்கு விளங்கவில்லை. ஏதாவது மந்திரம், மாயம் நடந்து தாமஸின் மனம் மாறினாலன்றி இந்தக் கல்யாணம் நடக்க வாய்ப்பில்லை.
உண்மையைச் சொல்லப்போனால் தாமஸின் இந்தத் திருமணத்தின் மீதான முழு எதிர்ப்பிற்கு முதற்காரணம் ஜேசனின் தந்தை ஒரு கறுப்பினத்தவ மனிதர் என்பதே. வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் இந்த அந்தஸ்து பேதம் வெள்ளையர்களின் இரத்தத்தில் ஊறியது. இளைய சமுதாயம் அதிலிருந்து சற்றே விடுபட்டிருந்தாலும் மூத்த சமுதாயம் மனதளவில் அப்படியேதான் இன்னும் இருக்கிறது.
ஆனால் இதையெல்லாம் தாண்டி ஜேசனின் கடும் உழைப்பு, முன்னேற்றம், அதீத வளர்ச்சி இவையெல்லாம் தனது தந்தையின் மனதைப் பெரிதும் கவரும் என்று நான்சி முதலில் உறுதியாக நம்பினாள். ஆனால் காலப்போக்கில் அந்த நம்பிக்கை உதிர்ந்து போனது. தாமஸ் எதற்கும் மசிந்து கொடுக்கவில்லை. இன்றைக்குத் திருமணப் பேச்சு வரை வந்துவிட்டார். ஆனால் காதல் கொண்ட இளையவளின் மனது அதை ஏற்றுக்கொள்ளாதே!
நல்ல பெரிய, விசாலமான வீடு என்பதால் எப்போதுமே எல்லோருக்கும் தனித்தனி அறைதான். விளக்கை அணைத்துவிட்டுத் தூரத்தே தெரிந்த இருளை வெறித்திருந்தாள் நான்சி. மனம் முழுவதும் அவன் நினைவுகள் நிறைந்து கிடந்தன. யாரிடமும் சொல்ல முடியாத உணர்வு. யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ரகசியம். அவனிடம் கூட அவள் மனதில் நினைக்கும் எல்லாவற்றையும் அவளால் பகிர்ந்து கொள்ள இயலுவதில்லை.
ஜேசன் என்பவன் அவள் காதலன் என்பதையும் தாண்டி அவன் அவளது பால்ய காலத்து ஸ்னேகிதன், நல்ல மனிதன், அழகான ஆத்மா. அதைச் சங்கடப்படுத்த என்றைக்கும் அவள் துணிந்ததில்லை. அவள் வீட்டின் நிலை அவனுக்கு ஓரளவு தெரியும். முழுதாக அவள் வீட்டின் ரூபம் அவனுக்குத் தெரிந்தால் அவன் வருத்தப்படுவான். அதனாலேயே நான்சி அவனிடம் அதிகம் பேசமாட்டாள்.
அவனோடான அவள் பொழுதுகள் மிகவும் சொற்பம். அத்தனை உயரத்தில் இருப்பவனை அவளால் கூட நெருங்க இயலாது. அவனாக அவளுக்குக் கொடுக்கும் நிமிடங்களைக் கூட வீண்விரயம் செய்ய நான்சி ஆசைப்படுவதில்லை. இன்றைக்கு வீட்டில் நடந்த எதையும் அவனிடம் சொல்ல அவளால் இயலாது. தன்னை மீறி அப்படி என்ன நடந்துவிடும்?
சட்டென்று அவள் அலைபேசியின் திரை மிளிர திரும்பிப் பார்த்தாள் பெண். இரவு வேளை என்பதால் அமைதியாக அவளை அது அழைத்தது. இந்த நேரத்தில் அழைப்பது என்றால் ஒருவேளை ரோஸியாக இருக்குமோ என்று திரையைப் பார்த்த பெண் திகைத்தது. இது என்ன ஆச்சரியம்?! அழைத்துக்கொண்டிருந்தது அவன்!
“ஜே…” அத்தனைக் குழைவு அந்தக் குரலில்.
“நான்சி, என்னாச்சு?” கேள்வியை அவன் சட்டென்று கேட்க நான்சிக்கு திக்கென்றது.
“என்னாச்சு ஜே? ஒன்னுமில்லையே.”
“ஓ… உன்னோட வாய்ஸ் கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்துச்சா… அதான்.”
“அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லையே.” பெண் அழகாகப் பொய் சொன்னது. அது அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடும் பொய் என்று அவளுக்கு அப்போது தெரியவில்லை.
“உனக்கு ஏதாவது உங்க வீட்டுல பிரச்சினை வந்திடுமோங்கிற பயம் என்னை எப்பவும், எல்லாத்தையும் சந்தேகமாகவே பார்க்க வெக்குது நான்சி.”
“எப்பிடி இருக்கீங்க ஜே? சாப்பிட்டீங்களா?” அவன் பேச்சின் போக்குப் பிடிக்காமல் அவள் வேறு பேசினாள்.
“ம்… ஆச்சு, நீ?”
“ம்… என்ன ஆச்சர்யமா இந்நேரத்துக்குக் கூப்பிட்டிருக்கீங்க?”
“வீட்டுக்கு வந்திருக்கேன்.”
“ஓ… இப்போதைக்கு எந்த மேட்ச்சும் இல்லையா?”
“இருக்கு, அப்பாக்கு உடம்புக்கு முடியலை.”
“ஐயையோ! என்னாச்சு?” நான்சி பதறினாள்.
“மைல்ட் அட்டாக் நான்சி.” அவன் குரலில் அதீத கசப்பு.
“ஜே! அப்பாக்கு எப்பிடி இப்பிடி?! எவ்வளவு ஹெல்த்தியான மனுஷன்!” அவளின் பதட்டம் இன்னும் அதிகரித்திருந்தது.
“அதுதான் புரியலை, அம்மாவை என்னால சமாதானம் பண்ண முடியலை, அவங்க ரெண்டு பேரும் என்னைப் பத்தி ரொம்பவே யோசிக்கிறாங்கன்னு எனக்குத் தோணுது.” இப்போது நான்சி எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டாள்.
“ஏன் மௌனமாகிட்ட நான்சி? நமக்குள்ள ஏனிந்த இடைவெளி நான்சி? எங்கிட்ட வந்திடு, எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன், உன்னோட அப்பா எங்கிற ஒரு உறவு எல்லாருக்கும் ரொம்பவே கஷ்டத்தைக் குடுக்குது நான்சி.”
“ஜே…” நான்சியின் குரல் கண்ணீரில் இப்போது தழுதழுத்தது. அவளுக்குத் தெரியும், தன் தந்தையின் பிடிவாதம்தான் இத்தனைச் சிக்கலுக்கும் காரணம். ஆனாலும்… பிரச்சனையின் மூலப்புள்ளி அவள் தந்தை! அந்த உறவை அவளால் விட்டுக்கொடுக்க இயலாது. இவன் சொல்வது போல அத்தனையையும் தூக்கித் தூரப்போட்டுவிட்டு அவன் ஏறிப்போகும் ஹெலிகாப்டரில் அவளால் ஏறிவிட முடியும். அப்படிச் செய்தால் அவள் ‘நான்சி’ இல்லையே!
அவள் மௌனம் பார்த்து அவன் தொடர்பு துண்டித்துப் போனது!