Idhayam – 37

Idhayam – 37

அத்தியாயம் – 37

அன்று மேனகாவுடன் பேசியபடி வந்த கணவனிடம் ஒரு தடுமாற்றத்தை உணர்ந்தார் மஞ்சுளா. எந்தநேரமும் ஏதோவொரு யோசனையோடு வலம் வரும் கணவனை நினைத்து சிந்தனையில் ஆழ்ந்தார்.

அபூர்வா – ஆதியின் பிரிவுக்கு பின்னோடு தன் கணவனின் சதி இருக்குமோ என்ற எண்ணம் அவரை நிம்மதியிழக்க செய்தது. சில பெண்களுக்கு கணவனைவிட மகனின் வாழ்க்கை பெரிதாக தெரியும்.

ஜெகன் பணத்திற்காக வேறொரு பெண்ணை மணந்தவுடன் அவர் இறந்து போகத்தான் நினைத்தார். தன் மகன் யாருமில்லாமல் அனாதையாக நிற்பானே என்ற ஒரே எண்ணத்தில் அவனுக்காக உயிர் வாழ தொடங்கினார்.

தன்னைவிட்டு வேறொரு பெண்ணை ஜெகன் மணந்தபோதும் கணவனின் மீது வைத்திருந்த காதலை அவரால் மறுக்க முடியவில்லை. அதே நேரத்தில் கணவன் தன் வீட்டிற்கு வந்து செல்வதை தடுக்கவும் அவருக்கு மனம் வரவில்லை.

சின்ன சின்ன விஷயங்களை யோசித்து தன் மகனை வளர்த்த அவனின் திருமண விஷயத்தில் கணவனின் தலையீடு இருக்கவே கூடாதென்று நினைத்தார்.  மகனின் வாழ்க்கையை கணவனே கெடுத்துவிடுவாரோ என்று மனதளவில் கலக்கம் கொண்டார்.

மனைவியின் மனம் அறியாத ஜெகன் வழக்கம்போலவே டைனிங் டேபிளை நோக்கி வருவதைக் கண்டவர், ‘இவரிடம் பேசி பார்த்தால் என்ன’ என்ற எண்ணம் வந்தது. 

“மஞ்சு சாப்பாடு போடும்மா” சாப்பிட அமர்ந்த கணவனின் அருகே நின்று பரிமாறிய மஞ்சுளா கணவனின் முகத்தை கவனித்தபடியே பேச்சை தொடங்கினார்.

“ஏங்க நம்ம ஆதி விரும்பிய பெண்ணையே அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறேன். நீங்க ஒரு முறை போட்டோ மட்டும் பார்த்து சரின்னு சொல்லிடுங்க” என்று அபூர்வாவின் புகைப்படத்தை அவரின் முன்னாடி வைத்தாள்.

அபூர்வாவின் போட்டோவை பார்த்த மறுநொடியே மனைவியை நிமிர்ந்து பார்த்த ஜெகனின் முகத்தில் இருந்த கலக்கத்தை கண்டு, ‘இவரின் முகத்தை பார்த்தால் இந்த பிரிவுக்கு இவர் காரணமில்லையோ? அப்புறம் எதுக்காக மேனகாவிடம் அப்படி பேசினார்?’ மஞ்சுளா மனதளவில் குழம்பிப் போனார்.

தன் மகனின் விருப்பம் இதுவென்று புரிந்தபோதும் அதை நிறைவேற்றி வைக்க தன்னால் முடியவில்லையே என்ற கவலை அவரின் மனதை அரித்துக் கொண்டிருக்கும் விஷயம் மஞ்சுளாவிற்கு தெரியாது.  அவரைப் பொறுத்தவரை ஆதியின் விருப்பத்திற்கு அவர் குறுக்கே நின்றதில்லை.

இன்று தன்னை முன் நிறுத்தி அவர்களை பிரிக்க நினைக்கும் மேனகாவின் மீது கோபப்பட தொடங்கியிருந்தார் ஜெகன். அவனுக்கு அடுத்து இருக்கும் இரண்டு பெண்களின் வாழ்க்கைக்காக இன்று ஆதியின் விருப்பத்தை நிராகரிப்பது சரியல்ல என்பது அவரின் எண்ணம்.

 நான் அவர்களை பிரித்தே தீருவேன் என்று நினைக்கும் மேனகாவை அடக்க அவரால் முடியவில்லை. அதனால் இன்று அதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார்.

மனையாளின் பார்வை தன் மீது நிலைப்பதை உணர்ந்தவர் வேண்டுமென்றே, “அவனுக்கு இந்த பொண்ணு வேண்டாம் மஞ்சுளா” என்றவர் சாப்பிடுவதில் கவனத்தை திருப்பினார்.

“ஏன் மேனகாவிற்கு அவளை பிடிக்கலையோ” என்று ஏற்ற இரக்கத்துடன் கேட்ட மனைவியை சட்டென்று நிமிர்ந்து பார்த்த ஜெகனின் தாடைகள் இறுகியது..

“என்னங்க நான் ஏதாவது தப்பாக சொல்லிவிட்டேனா?” என்று எதுவும் அறியாதவர் போல கேட்டு கணவனை திணற வைத்தார் மஞ்சுளாவின் முகம் கோபத்தில் செந்தணலாக மாறியது.

கணவன் அமைதியாக இருப்பதை கண்டு, “என்னங்க அமைதியாக இருக்கிறீங்க” என்று சாப்பாட்டை பரிமாறியபடி கேட்ட மஞ்சுளா அவரின் அருகே ஒரு சேரை இழுத்துபோட்டு அமர்ந்தார்.

“இல்லம்மா இந்த பொண்ணு” என்றவரை இடைமறித்து, “இவதான் என் வீட்டுக்கு மருமகளாக வரணும்னு நான் முடிவு பண்ணிட்டேங்க. என்னதான் இருந்தாலும் நீங்க ஆதிக்கு அப்பா இல்லையா அதுக்காக தான் உங்க சம்மதத்தை கேட்டேன். நீங்க வேண்டான்னு சொன்னாலும் என் முடிவு இதுதான்” என்றவரின் பார்வை ஜெகனை துளைத்தெடுத்தது.

மஞ்சுளாவின் பேச்சில் அவரின் மனம் நிம்மதியடைந்தது. தன்னை கடைசியாக அபூர்வா சந்தித்து சென்ற நாள் அவரின் மனக்கண்ணில் படமாக விரிந்தது.

ஆதியை போலீஸ் பிடித்துச் சென்ற விஷயம் அடுத்த இரண்டு மணிநேரத்தில் ஜெகனின் காதுகளை எட்டியது. அந்த தகவல் வந்த மறுநொடியே மேனகாவை சந்திக்க அவரின் கேபினுக்கு சென்றார்.

மேனகா போலீசிடம், “இந்த கேஸை கொஞ்சம் கவனிங்க மிஸ்டர் பைரவன்” என்று கூறிவிட்டு போனை வைக்க தகப்பனான ஜெகனின் மனம் கொதித்தது.

பணத்தை வைத்து அவள் எதை சாதிப்பாள் என்ற உண்மையை உணர்ந்தவர், “மனிதன் ஏன்தான் இந்த பணத்தை படைத்தானோ” என்று நெற்றியில் அடித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் சென்று விசாரிக்கலாம் என்று கம்பெனியை விட்டு வெளியே வந்தார்.

பிரவீன் அவருக்காக காத்திருக்க, “என்னப்பா இங்கே நிற்கிற” என்று அவனிடம் கேட்க அபூர்வாவின் தாத்தா கேஸ் கொடுத்த விஷயத்தை அவரிடம் கூறினான்.

“சரிப்பா நீ கிளம்பு நான் பார்த்துகிறேன்” என்றவர் அங்கிருந்து கிளம்பினார்.

அபூர்வாவின் தாத்தா கேஸை வாபஸ் வாங்கிவிட்டால் எந்த பிரச்சனையும் வராது என்று அவர்களை தேடி வீட்டிற்கு செல்ல அங்கே அவர்கள் இருவரும் இல்லை. வேறு வழி இல்லாமல் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி வண்டியை திருப்பினார்.

பாதி தூரத்தில் அபூர்வா நடந்து வருவதை கண்டு காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவளின் அருகே சென்றவர், “அபூர்வா ஒரு நிமிஷம் நில்லும்மா” என்றதும் அவரின் அழைப்பில் அவள் நின்று திரும்பிப் பார்த்தாள்.

அவளின் முகத்தில் உணர்வுகள் துடைக்கப்பட்டு இருப்பதை கவனித்தவரின் மனமோ, ‘என்னாச்சு இந்த பொண்ணுக்கு’ என்று நினைத்தபடி அவளை நெருங்கினார்.

அவள் அவரை கேள்வியாக நோக்கிட, “ஆதியின் மேல் உங்க தாத்தா கேஸ் கொடுத்து இருக்காரும்மா. அவரை வந்து வாபஸ் வாங்க சொல்லும்மா” என்றார்.

அவரை பார்த்தும் அடையாளம் கண்டுகொண்டவள், “என்ன ஸார் என்னை தேடி வந்து இருக்கீங்க. பெரிய அதிசயமாக இருக்கு” என்று வியந்தபடி வானத்தை பார்த்தவளுக்கு, “மழை வருவது போல சில அறிகுறி தெரியுது” என்றாள் நக்கலாக கூறினாள்.

சின்னப்பெண் ஏதோ புரியாமல் பேசுகிறாள் என்று நினைத்து, “நின்று பேச நேரமில்லம்மா. உங்க தாத்தா எங்கேன்னு சொல்லு நான் அவரிடம் பேசறேன்” என்றார் மகனின் மீதுள்ள பாசத்துடன்.

ஆதியின் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை கண்டு மனம் தெளிந்தபோதும் அதையும் நடிப்பென்று எண்ணி, “ஏன் சார் என்கிட்ட உதவி கேட்டு வந்து இருக்கீங்க? உங்ககிட்ட தான் பணம் நிறைய இருக்கே. அதை வைத்து எதையும் சாதிக்கலாமே.  என்ன இதுவும் அந்த மேனகாவின் திட்டமா?” என்றவளின் பார்வை அவரை துளைத்தெடுத்தது.

அவளின் பேச்சில் வித்தியாசமாக இருப்பதை புரிந்து கொண்டவருக்கு அதற்கான காரணம் என்னவென்று தான் புரியவில்லை. அவளின் பார்வையும், பேச்சும் அனைத்தும் வேறு விதமாகவே மனதிற்கு தோன்ற கல்போல அசையாமல் நின்றார் ஜெகன்.

“நீங்க வந்து ஜாமீன் எடுக்கும் வரை நான் பொறுமையாக இருப்பேன்னு நினைச்சீங்களா? நான் கேஸை வாபஸ் வாங்கி அரைமணி நேரம் ஆச்சு. ஆதி அப்போவே போயிட்டார்” என்ற அபூர்வாவின் கண்கள் கலங்கியது.

“ரொம்ப நன்றிம்மா” என்றவர் திரும்ப எதையோ நினைத்து கசப்புடன் சிரித்தவள் சொடக்குபோட்டு அவரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தாள்.

அவர் அவளை கேள்வியாக நோக்கிட, “துரோகம் என்ற சொல்லுக்கு முழு அர்த்தம் நீங்கதான்” என்றவளை அவர் திகைப்புடன் ஏறிட, “கட்டிய மனைவிக்கு உண்மையாக இல்லாமல், பெத்த பிள்ளைக்கு தகப்பனாக இல்லாமல், இரண்டாம் தாரமாக கட்டியவளுக்கும் கட்டுபடாமல் இருக்கும் நீங்க எல்லாமே மனுசங்கதானா?” அவள் கேட்டதும் கன்னத்தில் அறை வாங்கியது போல அதிர்ச்சியில் சிலையானார் ஜெகன்.

அவரின் மனநிலை அவளுக்கு புரிந்தபோதும் அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை. யாரிடமோ அவளுக்கு இருந்த கோபம் முழுவதும் அவரின் பக்கம் திரும்பியது.

“எல்லா தவறையும் தயங்காமல் செய்யும் நீங்களும், உங்க மனைவியும் ரொம்ப நல்லவங்க. ஆதியின் எதிர்காலம் நல்ல இருக்கணும்னு நினைச்சா நான் செய்த செயலால் உங்க மகன் இப்போ கொஞ்சநேரத்திற்கு முன்னாடி என்னை துரோகின்னு சொல்லிட்டு போறார்” என்றவளின் குரல் உடைந்துவிடவே கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது.

சட்டென்று கண்ணை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து, “கெடுதல் செய்யறவங்க எல்லாம் ரொம்பா நல்லா இருக்காங்க. அடுத்தவங்களுக்கு நல்லதை நினைக்கும் சிலரோட வாழ்க்கை கேள்வி குறியாகவே போகுது இல்ல” அவளின் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

அவர் வார்த்தைகள் இன்று தடுமாறவே,  “உங்க மகனை கம்பிக்குள் வைத்து பார்க்க உங்க மனசு தயாராக இருக்கலாம். ஒரு காதலியாக என்னால அதை பார்க்க முடியாது. அதன் மனசை கல்லாக்கிட்டு நான் செய்ய வேண்டிய கடமையை பண்ணி என்  காதலுக்கு நானே கருமாதியும் பண்ணிட்டு வந்துட்டேன்” என்று கூறியவளின் முகத்தில் உணர்வுகள் கவனமாக துடைப்பட்டு இருப்பதை கவனித்தார் ஜெகன்.

“நான் உண்மையாக காதலிச்சதும் போதும். அதனால் நான் அனுபவித்த கஷ்டமும் போதும். எப்ப சாமி நீங்க இருக்கும் திசைக்கும் ஒரு கும்பிடு. உங்க புள்ள இருக்கும் திசைக்கும் ஒரு கும்பிடு ஆளை விடுங்க சாமிகளா. இனிமேல் யாரை தேடி போகவேண்டிய அவசியம் எனக்கில்ல. இப்படியே காலம் முழுக்க இருந்துவிடுகிறேன்” அவரைவிட்டு விலகி நடந்தவளின் மனம் அவருக்கு புரிந்தது.

பேத்தியின் பின்னோடு வந்த சிவரத்தினம் சற்றுமுன் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த அனைத்தையும் அவரிடம் கூறினார். அவர்களின் திருமண விஷயம் தவிர!

“ஆதியையும், அபூர்வாவையும் பிரிச்சது நீங்களா” என்ற கேள்வியில் ஜெகனின் மனம் நடப்பிற்கு திரும்பியது.

“மஞ்சுளா” என்றவர் ஏதோ சொல்ல வரும்முன் கைநீட்டி தடுத்தவர், “எனக்கு பதில் மட்டும் தான் வேண்டும். நீங்க சொல்லும் பொய்யை நம்ப நான் பழைய மஞ்சுளா இல்ல” என்றார்.

அவரின் பேச்சில் இருந்த ஏதோவொன்று ஜெகனின் வாய்பூட்டை திறந்துவிட மேனகா செய்தது அனைத்தையும் மனைவியிடம் மறைக்காமல் கூறினார். அவர் சொல்ல சொல்ல மஞ்சுளாவின் முகம் பாறைபோல இறுகியது.

“இப்பவும் அபூர்வாவை ஆதிக்கு கல்யாணம் பண்ணி வைக்கக்கூடாது என்ற முடிவில் தான் இருக்கிறாள். அது மட்டும் இல்லாமல் ஆதியின் நிறுவனத்தில் இருந்து அபூர்வாவிற்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் அனுப்ப சொன்னதும் அவள்தான். அந்த டைபிஸ்ட்கிட்ட சொல்லி நான்தான் அனுப்ப ஏற்பாடு பண்ணேன்” தலையை குனிந்தவண்ணம் உண்மையை முழுவதும் சொல்லிவிட்டார்.

அவர் சொன்ன அனைத்தையும் பொறுமையாக கேட்ட மஞ்சுளா, “நீங்க எனக்குதான் கணவனாக இல்ல. உங்க புள்ளைக்கு நல்ல தகப்பனாக இருக்கணும் என்ற எண்ணம் கூட உங்களுக்கு இல்லையா?” என்றவரின் கோபம் அடங்க மறுத்தது.

“உன் மகள்கள் இருவரும் பாசம் இல்லாமல் எங்கோ ஹாஸ்ட்டலில் தங்கி படிப்பதும், வேலை செய்வதும் தெரிந்த ஆதி என்னிடம் சொல்லிவிட்டு அவங்க பாதுக்காப்புக்கு தேவையான அனைத்தையும் செய்தான். அவனோட குணம் கூட அவனை பெற்ற உனக்கு இல்லைல்ல. நீயெல்லாம்..” என்றவர் கோபத்தில் பேசும் முன்னர்,“மஞ்சுளா நீயும் என்னை அப்படி கேட்டுவிடாதே” என்று மனைவியை கையெடுத்து கும்பிட்டார் ஜெகன்.

அன்று நடந்ததை மறைக்காமல் மனைவியிடம் கூறியவர் இறுதியாக முடிக்கும் முன்னே, “அந்த பெண் என்னை அப்படியொரு கேள்வி கேட்பாள் என்று நான் நினைக்கவே இல்ல மஞ்சு. ஆதியின் மனநிலை அப்போது தான் எனக்கே புரிந்தது. அவ ஆதியை தேடி போக மாட்டாளோ என்ற பயம் எனக்குள் இருந்துட்டே இருந்துச்சு..” என்று சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

“ஆதிக்கு நீ பொண்ணு பார்க்க சொன்னப்போ எல்லாம் நான் வேண்டுமென்றே அவனை தூண்டுவது போல பேசினேன். அவன் வாயிலிருந்து உண்மை வெளிவர போராடினேன். அவனும் மனதை மறைக்காமல் சொன்னான்” என்ற கணவனின் பேச்சில் இருந்த உண்மை கண்டு திகைத்தார் மஞ்சுளா.

“ஆதிக்கு அபூர்வா மட்டும் தான் மனைவியாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் டைபிஸ்ட் கிட்ட அவளோட பயோடேட்டா கொடுத்து அனுப்ப சொன்னேன். நீண்டநாள் சந்திக்காமல் இருந்த காதலர் ஒரு முறை நேரில் சந்தித்தால் இருவரையும் இணைக்க வேறு வழி கிடைக்கும்னு நான் நினைச்சேன்” என்ற கணவனை ஏறிட்ட மஞ்சுளாவின் விழிகள் லேசாக கலங்கிட மனைவியின் கரத்தைப் பற்றி அழுத்தம் கொடுத்தார்.

“மஞ்சு நான் பணத்திற்கு பின்னாடி போனவன் தான் இல்லன்னு சொல்ல மாட்டேன். அதே நேரத்தில் ஆதிக்கு நான் அப்பா. அவனே என்னை ஏத்துகல என்றபோதும் அவனின் விருப்பத்தை கெடுக்க நினைப்பேனா?” என்ற கணவனை கேள்வியோடு ஏறிட்டார் மஞ்சுளா.

அவள் கேட்க வருவது புரிய, “மேனகாவிடம் அப்படி சொல்லியே பழகிட்டேன். அவளுக்கு மறுத்து பேசி புரிய வைக்க முடியாது. அவள் நினைத்தை மட்டும் சாதிக்கும் ரகம். அதனால் தான் அவளுக்கு தகுந்தமாதிரி பேச வேண்டியதாக போய்விட்டது” என்றார்.

ஆதியின் நினைவு வரவே அவனை அழைத்து வீட்டிற்கு வர சொல்லிவிட்டு, “அவன் வந்தபிறகு மீதியை பேசலாம்” என்றவர் அவர் கைகழுவிய தட்டை எடுத்துகொண்டு சமையலறைக்கு சென்றார்.

அடுத்த அரைமணி நேரத்தில் போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு இருவரும் சேர்ந்து வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டில் நிலவிய அமைதி அவனின் மனதிற்கு நெருடலாக அமைந்தது.

ஆதியின் விழிகள் தாயை தேடிட பக்கத்தில் இருந்த விருந்தினர் அறையிலிருந்து வெளியே வந்தார் மஞ்சுளா. அவரைக் கண்டவுடன், “அம்மா எதுக்கு என்னை அவசரமாக கிளம்பி வர சொன்னீங்க” என்று ஆதி தயக்கத்துடன் கேட்டான்.

“எல்லாம் காரணமாகத்தான் ஆதி” என்றவர் அவனோடு வந்திருந்த சிவாவை வரவேற்கும் விதமாக, “வாப்பா சிவா எப்படி இருக்கிற?” என்று கேட்டுவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்.

“நான் நல்லா இருக்கேன் அம்மா” என்று சிவா புன்னகைக்க, “சந்தோசம்” என்று முடித்துவிட்டு மகனின் புறம் திரும்பியவரின் பார்வையில் ஆதியின் மனம் தடுமாறியது.

“அபூர்வா உன்னைவிட்டு விலகி போவதற்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்குன்னு நினைக்கிறீயா ஆதி” என்றார் அவனின் மீது பார்வையை பதித்தபடி.

அவனுக்கும் அந்த சந்தேகம் இருந்ததால், “எனக்கு சந்தேகம் இருக்கும்மா” என்றவனின் பார்வை ஜெகனை தேடியது. அவனின் கோபம் அவருக்கு புரிந்தபோதும் கண்ணசைவால் மகனை அருகே அமரும்படி கூற அவனும் கேள்வி கேட்காமல் அமர்ந்தான்.

“நம்மள பொய்யாக நேசிக்கிற இந்த உலகத்தில் சில மனிதர்கள் மட்டும் தான் உண்மையான அன்பை வெளிபடுத்தறாங்க. சில நேரத்தில் உண்மைக்கும், பொய்க்கும் வித்தியாசம் தெரியாமல் நல்லவங்க மனசை நோகடிப்பது தான் மனிதர்கள் செய்யும் பெரிய தவறு..” என்ற மஞ்சுளாவின் பேச்சில் அவனுக்கு என்னவோ புரிவது போல இருந்தது.

அவன் சிந்தனையோடு தாயை கேள்வியாக நோக்கிட, “ஆதி நீ அபூர்வாவை கல்யாணம் பண்ணக்கூடான்னு உன் சித்தி செய்த வேலையால் தான் இத்தனை துன்பமும் நடக்க நேரிட்டது” என்றவர் கணவன் தன்னிடம் கூறிய அனைத்தையும் அவனிடம் கூறினார்.

அவர் முடிக்கும் வரை பொறுமையாக கேட்ட ஆதிக்கு அபூர்வாவின் மனம் புரிந்து போக, ‘என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் இருந்திட்டியே பாவி. ஒருமுறை சொல்லியிருந்தால் இந்தபிரிவு நமக்கிடையே வந்திருக்காதே’ என்று மனம் வருந்தினான்.

ஜெகன் தன் அறையிலிருந்து வெளியே வரவே அவரை முறைத்தவன் வேறு எதுவும் பேசவில்லை. கடைசியாக அபூர்வா அவரிடம் என்னவொரு மனநிலையில் பேசி இருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்துவிட அடுத்து என்ன செய்வதென்று தெளிவாக திட்டமிட்டான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!