Idhayam – 38

அத்தியாயம் – 38

கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய அபூர்வாவின் மனம் அவனையே சுற்றி வந்தது. சின்ன சின்ன புரிதல் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமென்று தனக்கு புரிய வைத்த காதல் கணவனை இனி வாழ்க்கையில் சந்திக்க முடியாது என்ற நினைவே அவளை வாட்டியது.

அவன் இன்னும் பழசை மறக்கவில்லை என்ற காரணத்தோடு ரேவதியின் காதலும் சேர்ந்துவிட, ‘இனி காலம் முழுக்க இப்படி தான் பயணிக்க போறேன். அவனை மறந்துவிட்டு இருப்பது ரொம்ப கஷ்டம்’ அவளின் விழிகள் கலங்கியது.

அடுத்த ப்ளைட்டில் சென்னை வந்து சேர்ந்த அபூர்வா அங்கிருந்து மதுரைக்கு காரில் கிளம்பினாள். தன் மனதை நிலைபடுத்திக்கொள்ள சிறிதுநேரம் வேண்டும் என்பதால் கார் பயணத்தை தேர்ந்தெடுத்தாள். அவனை பற்றிய சிந்தனையோடு சீட்டில் சாய்ந்து விழிமூடிய மறுநொடியே அவனின் பிம்பம் மனத்திரையில் தோன்றியது.

‘ஆதி உன்னை பிரிந்து ஐந்து வருஷம் இருந்ததே பெரிய விஷயம். இப்போவும் உன் நல்லதுக்காக விலகி போறேன். அப்பா – அம்மாகிட்ட பொய் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கேன். நான் போய் உன்னை சந்திக்கவே இல்லன்னு சொல்ல போறேன்’ என்று அவனிடம் மனதிற்குள் பேசினாள்

ஆதித்யா வாழ்க்கையில் தனக்கு இனி இடமில்லை என்று தெளிவாக உணர்ந்த அபூர்வாவின் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்து. ஒருத்தரை உயிராக நேசிப்பது கூட சுலபம். ஆனால் மறக்க நினைக்கும்போது மனம் ரணமாக வலிக்கும் என்று அவள் அன்றுதான் உணர்ந்தாள்.

தன் உயிரோடு கலந்த அவன் காதலை மறக்கவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் அவள் மனம் இதற்கும் அதற்கும் ஊஞ்சலாடியது. ஆதியின் சந்தோசம் தனக்கு முக்கியம் என்ற முடிவிற்கு வந்த அபூர்வா கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள். அவனை மறக்க நினைக்காமல் அவனின் நினைவுகளோடு உறவாடியபடி வீடு வந்து சேர்ந்தாள்.

அவள் கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழைய, “ஹே அபூர்வா அக்கா வந்தாச்சு” என்று ராகவ் போட்ட சத்தத்தில் சின்னவர்கள் மூவரும் வெளியே வந்தனர். அவர்களை கண்ட மறுநொடியே அவளின் சோகங்கள் பின்னே சென்றுவிடவே வேகமாக அவர்களை நோக்கி நடந்தாள்.

“ஹே ராகவ் எப்படிடா இருக்கிற” என்ற அபூர்வா ராகவ் தோளில் கைபோட அவளின் மறு தோளில் கைபோட்ட சக்தி, “நீங்க எப்படி இருக்கீங்க மேடம்” என்றான் குறும்புடன் கண்சிமிட்டியபடி.

“அக்காவுக்கு என்ன குறைச்சல் சும்மா ஜம்முன்னு இருக்கேன்” என்று குஷியாக கூறிய அபூர்வாவை கண்ட பெண்கள் இருவரும், “அண்ணி” என்ற அழைப்போடு ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்டனர்.

அவர்களின் அணைப்பில் சிக்குண்ட அபூர்வா, “தம்பிங்க இருவரும் சேர்ந்து இவங்களுக்கு இதுக்குதான் டிரைனிங் கொடுத்தீங்களா” என்றதும் ஆண்கள் இருவரும் வெக்கப்பட்டு வேறுபக்கம் திரும்ப, “சுத்தம் பொண்ணுங்க செய்ய வேண்டியதை எல்லாம் இவனுங்க பண்றாங்களே. அப்பா என்னால தாங்க முடியல” என்று தலையில் கைவைத்து வாசலில் அமர்ந்துவிட்டாள் அபூர்வா.

அதற்குள் இவர்களின் சத்தம்கேட்டு ரோஹித் – மதுமிதா இருவரும் வாசலுக்கு வரவே, “அப்பா – அம்மா” என்று அவர்களை கட்டியணைத்துக் கொண்டாள் சின்னவள்.

மகளின் தலையை பரிவுடன் வருடிய ரோஹித், “என்னடா சொல்லாமல் வந்து நிற்கிற” என்று கேட்க, “ஏன் அப்பா நான் சொல்லாமல் வந்தால் அம்மாகிட்ட ஏதாவது அடி விழுகுமா” என்று குறும்புடன் கண்சிமிட்ட மகளின் காதை திருகிய மது, “உனக்கு எப்போது என்னை வம்புக்கு இழுக்காட்டி பொழுது போகாதே” என்றார் சிரிப்புடன்.

“அம்மா அம்மா சும்மா சொன்னேன். காது வலிக்குது விடுங்கம்மா” என்று சிணுங்கிய சின்னவளை அணைத்து கொண்ட மதுமிதா, “நீ இல்லாமல் வீடே களையிழந்து போயிருச்சு செல்லம்” என்றார் கண்கள் கலங்கிட ரோஹித் இருவரையும் பார்த்து சந்தோசப்பட்டார்.

சக்தி, ரக்சிதா, ராகவ், சஞ்சனா நால்வரும் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக்கொண்டு சிரித்தபடி நின்றிருந்தனர். அதன்பிறகு அவளை உள்ளே அழைத்து செல்ல, “அம்மா நான் குளிச்சிட்டு வந்துவிடுகிறேன்” என்று வேகமாக மாடியேறினாள் மகள்.

அபூர்வா வந்த விஷயமறிந்து ஜீவா – கயல்விழி, ரஞ்சித் – கீர்த்தி வந்துவிடவே வீடே கலைகட்டியது. அபூர்வாவும் அவர்களோடு இணைந்து சரிக்கு சரி வம்பிற்கு இழுக்க தொடங்கினாள். எல்லோரும் சாப்பிட அமரும் வரையில் இதே நிலை தொடர்ந்தது.

அவர்கள் சாப்பிட அமர்ந்ததும் பெண்கள் மூவரும் பரிமாறவே, “அபூர்வா ஆதியை நேரில் பார்த்தியா?” என்றதும் அவளின் சிரிப்பு உதட்டோடு உறைய தன்னை சமாளித்துக்கொண்டு சட்டென்று நிமிர்ந்தவள், “நான் அவரை இன்னும் நேரில் பார்க்கல அப்பா” என்றாள் அவள் வருத்தத்துடன்.

ஒருத்தி மட்டும் காதலித்து அவளைவிட்டு பத்துவருடம் பிரிந்து தவித்தவருக்கா தெரியாது மகளின் மனம் என்னவென்று. சின்னவர்கள் எதுவரை செல்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று அவர் விலகியிருக்க அவர்கள் எல்லோரும் சேர்ந்து ரோஹித் காதில் பூ சுத்த நினைத்தனர். அதில் முக்கியமான பங்கு அபூர்வாவுடையது.

மகளை ஆழ்ந்து நோக்கிய ரோஹித், “சரிம்மா” என்பதோடு பேச்சிற்கு முற்றுபுள்ளி வைக்க அவளின் முகத்தில் நிம்மதி பரவியது. அவளின் முகத்தை பார்த்தே மகளின் மனநிலையை கணித்துவிட்டார். தன்னை கேள்வியாக நோக்கி மனைவியிடம் பிறகு சொல்கிறேன் என்றார் கண்ணசைவில்.

எல்லோரும் ஓய்வாக இருக்கும் சமயத்தில் தந்தையின் அருகே வந்து அமர்ந்த அபூர்வா, “அப்பா நான் குற்றாலம் போகலாம்னு இருக்கேன்” என்று தன் முடிவை கூற அவரோ மகளை கேள்வியாக நோக்கினார்.

“என்னம்மா திடீரென்று குற்றாலம் போறேன்னு சொல்ற” என்றார்.

தந்தையின் எண்ணவோட்டம் அறியாத அபூர்வா, “அங்கே நான் புது கம்பெனி தொடக்கி இருக்கேன் அப்பா. நம்ம சக்தி படிப்பை முடிக்க போறான் இல்ல. அவன் முடிச்சதும் இருவரும் சேர்ந்து கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியை ரன் பண்ணலாம்னு இருக்கோம். இருவரும் ஒர்கிங் பார்ட்னர்.” என்றாள் மகள் தெளிவாகவே.

அவர் சிந்தனையோடு மகனைப் பார்க்க, “ஆமா அப்பா அக்கா சொல்வது உண்மைதான்” என்று அவன் உடனே ஒப்புகொள்ள சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது. 

அபூர்வா தந்தையின் பதிலுக்காக காத்திருக்க சக்தி சிந்தனையோடு தமக்கையை நோக்கினான். ஆதியை அவள் சந்தித்த விஷயம் அவனுக்கு தெரியும். அப்படியிருக்க ஏன் அவள் உண்மையை மறைக்கிறாள் என்று புரியாமல் குழம்பினான்.

“சரிம்மா நீ போய் வேலையை கவனி” என்ற ரோஹித் அவள் செல்ல அனுமதியளிக்க அவளின் முகம் பூவாக மலர்ந்தது.

“தேங்க்ஸ் அப்பா” என்றாள் மகள் புன்னகையுடன்.

“ஆனால் கொஞ்சநாள் இங்கே எங்களோட இருந்துட்டு அப்புறம் குற்றாலம் போம்மா” என்றார் ஏதோ சிந்தனையோடு.

“சரிப்பா” என்றாள் மகள்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் எல்லாம் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது. அபூர்வா எந்தநேரமும் ஏதோவொரு வேலையை இழுத்துபோட்டு செய்து கொண்டிருப்பதைக் கண்டு சிறியவர்களின் மனதளவில் கலக்கம் கொண்டனர்.

“சக்தி அபூர்வா ஏன் இப்படி இருக்காங்க. அவங்க முகமே சரியில்ல உனக்கு ஏதாவது அவங்கள பற்றி தெரியுமா” என்று சந்தேகத்துடன் அவனிடம் விசாரித்தாள்.

“அக்கா லவ் பண்ற ரக்சி” என்று தொடங்கிய சக்தி நடந்த அனைத்தையும் அவளிடம் ஒப்பித்தான்.

“இத்தனை நடந்தபிறகு ஏன் ஆதி இவங்களை பார்க்க வரல” என்று கேட்டாள்.

“எனக்கும் அதுதான் புரியல ரக்சி” என்றான் சக்தி குழப்பத்துடன்.

அதன்பிறகு அவளின் பேச்சை வீட்டில் யாரும் பேசவில்லை. சிறியவர்கள் படிப்பில் கவனமாக இருந்தபோதும் அவளை தனிமையில் விடாமல் எந்த நேரமும் ஏதோவொன்று பேசி சிரித்தபடி இருந்தாலும் அவள் உதட்டளவில் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிடுவாள்.

நாட்கள் மின்னல் வேகத்தில் சென்றாலும் மகளின் முகத்தில் படிந்திருந்த சோகத்தை கண்டு பெரியவர்கள் மனதளவில் மகளின் வருங்காலத்தை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

அன்றுடன் அவள் கொல்கத்தாவில் இருந்து வந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. தன்னை தேடி ஆதி வரவில்லையே என்ற மன வருத்தம் இருந்தபோதும் அதை வெளியே காட்டிகொள்ளாமல் நடமாடிக்கொண்டிருந்தாள்.

காலைபொழுது விடிந்ததில் இருந்தே அவளின் மனம் நிலையில்லாமல் தவித்தது. என்ன காரணம் என்று அவளால் சரியாக கணிக்க முடியவில்லை. அவளின் மனம் படபடவென்று அடித்துகொண்டது காரணமே இல்லாமல்!

அந்த படபடப்பை மறக்க நினைத்த அபூர்வா, “அம்மா நான் தம்பியுடன் ஷாப்பிங் போயிட்டு வரேன்” ராகவை உடன் அழைத்துக்கொண்டு கிளம்பிய மகளை புன்னகையோடு வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குள் செல்ல திரும்ப அப்போது ஒரு கார் வீட்டிற்குள் நுழைவதை கண்டு அவரின் முகம் மலர்ந்தது.

அதே நேரத்தில் காரில் செல்லும்போது அமைதியாக வந்த தமக்கையை விநோதமாக பார்த்த ராகவ் பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முன்னே காரை நிறுத்துவிட்டு சிறிதுநேரம் மெளனமாக இருந்தான்.

கார் நின்றதை கூட உணராமல் வெகுநேரம் அமர்ந்திருந்த அபூர்வாவின் சிந்தனையை கலைத்தது ராகவின் குரல்.

“அக்கா” என்றதும் அவள் கேள்வியாக நோக்கிட..

“இடம் வந்துவிட்டது இறங்கு” என்றான்.

அதன்பிறகு சுற்றுபுறம் மனதில் உரைக்க, “ஸாரி ராகவ் ஏதோ சிந்தனை” என்று கதவை திறந்துகொண்டு இறங்கிவள் தனக்கு தேவையான பொருட்களை தேடி தேடி வாங்கியபோதும் மனம் ஏனோ அவனையே சுற்றி வந்தது

‘ஏன் ஆதி என்னை இப்படி தவிக்க விடுற. இன்னும் எத்தனை நாள் தான் இந்த வலியை அனுபவிக்கணுமோ” என்று நினைத்த மறுகணமே ஆதியின் பிம்பம் மனதில் தெரிந்தது. அவனோடு மாலையும் கழுத்துமாக ரேவதி நிறுப்பதை கண்டு சில நிமிடம் விழி மூடி தன் மனதை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

அவளின் தவிப்பை கவனித்த ராகவ், ‘அக்காவுக்கு என்னாச்சு? ஏன் இப்படி எதையோ தொலைத்த மாதிரி இருக்கிற’ என்று தனக்கு தானே கேள்வி எழுப்பியபடி அவளோடு சேர்ந்து நடந்தான்.

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளே நுழைந்ததில் இருந்து அவளின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளை படித்தவனின் உள்ளத்தில் மகிழ்ச்சி உற்றேடுக்க, ‘என்னை அங்கே தனியாக தவிக்கவிட்டு வந்துட்டு எவ்வளவு கூலாக ஷாப்பிங் பண்ற பாரு’ என்று நினைத்தவன் அவளின் பின்னோடு சென்றான்.

எல்லோரும் அவர்களை கடந்து செல்ல எதிர்பார்க்காத நேரத்தில் அவளின் அருகே வந்த ஆதி, “அபூர்வா” என்று அவளின் கரங்களைப் பிடித்து நிறுத்தினான்.

கிட்டதட்ட ஒரு மாதமாக இனிமேல் பார்க்கவே முடியாது என்று ஏங்கியவன் அவளின் முன்னே வந்து நின்றதும் அவனை இமைக்க மறந்து பார்த்தாள் அபூர்வா.

‘ஒரு மாசம் என்னை தவிக்க விட்டுட்டு இப்போ ஏன் வந்தே’ என்று அவனின் கரங்களில் இருந்து தன் கரத்தை உருவிக்கொண்டு அவனைவிட்டு இரண்டடி எடுத்து வைக்க மீண்டும் அவளின் கரத்தை எட்டிப் பிடித்தான் ஆதி.

“என்ன கோபமா” என்றதும் அவள் பதில் சொல்லாமல் அவனை முறைக்க, “ஸாரி” என்றான்.

அவள் அவனை எரித்துவிடுவது போல பார்ப்பதை கவனித்த ராகவ் சட்டென்று தமக்கையின் அருகே வந்தவன், “ஏய் அக்கா கையை விடு” என்றான் கோபமாகவே.

அவனை பற்றி ஏற்கனவே சக்தி சொல்லி இருந்ததால், “என்ன அபூர்வா உன் கையைவிட சொல்றான்” குறும்புடன் கண்சிமிட்டி அவளை வம்பிற்கு இழுத்தான்.

ஆதி அவளின் கையை இறுக்கமாகப்பிடிக்க அபூர்வா வலியால் முகம் சுழிப்பதை கண்ட மறுநிமிடமே ஆதியின் சட்டையை கொத்தாக பிடித்த ராகவ், “அக்காவோட கையை விடுடா” என்றான் மரியாதை இன்றி.

ஆதி அமைதியாக அவளின் முகம் பார்க்க அவளே அவனின் பார்வையை தவிர்த்து வேறு எங்கோ பார்த்த அபூர்வாவின் கண்கள் எதையோ நினைத்து கலங்கியது. அவள் நினைத்தால் ஆதி என் புருஷன் கையை எடு ராகவ் என்று தம்பியை கண்டித்து இருப்பாள்.

எந்த நிலையிலும் உண்மையை தன் வாயால் சொல்லமாட்டேன் என்று அவள் கூறிய வார்த்தைகள் இன்று அவளையே விலகி நிறுத்த வேறு வழியில்லாமல் மௌனம் சாதித்தாள்.

அவள் வாய்திறக்க போவதில்லை என்ற உண்மையை உணர்ந்த ஆதி ராகவிடம், “என் மனைவி கையை நான் உரிமையுடன் பிடிப்பேன், அதை தடுக்க உனக்கு மட்டும் இல்ல வேற யாருக்கும் உரிமை இல்ல” என்றவன் அழுத்தம் திருத்தமாக சொல்ல ராகவ் திகைத்து நின்றுவிட்டான்.

ஆதியின் வாயிலிருந்து இந்த வார்த்தை வருமென்று அவள் கனவிலும் நினைக்காத ஆபூர்வா சட்டென்று திரும்பி அவனை பார்த்தாள். அவனின் பார்வையில் காதல் வழிவதை கண்டு இவளின் உள்ளம் உருகியது.

அவன் தன்னை தேடி வந்ததே அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதைவிட பெரிய அதிர்ச்சியை அவளுக்கு கொடுத்த ஆதியின் உருவத்தை மனபெட்டகத்தில் சேகரித்தாள்.

தனக்கு தெரியாமல் அவளுக்கு எப்போது திருமணம் நடந்தது என்று புரியாமல், “அக்கா” என்றவன் ஆதியின் சட்டையிலிருந்து கையை எடுத்துவிட்டு இரண்டடி பின்னே நகர்ந்தான்.

அடுத்த நிமிடமே இருக்கும் இடம் நிற்கும் சூழ்நிலை மறந்து, “ஆதி” என்று அவனை கட்டிக்கொண்டு கண்ணீர்விட்ட அபூர்வாவை மார்புடன் சேர்த்து அணைத்துகொண்டான்.

“அபூர்வா சொன்னால் கேளும்மா. இங்கே பாரு நம்ம இருக்கும் இடம் தெரிந்து நீ இப்படி அழுகக்கூடாது” என்ற மறுநிமிடமே அவனைவிட்டு சட்டென்று விலகியவளை காதலோடு பார்த்த ஆதியின் பின்னோடு வந்து நின்றான் சக்தி.

ராகவ் அதிர்ச்சியுடன் நிற்பதை கண்டு, “என்ன மாமா வந்ததும் சின்ன பையனை பயப்பட வெச்சிட்டீங்க” என்று அவனை நெருங்கினான்.

“அண்ணா இவரு என்னவோ” என்றவன் தொடங்கவும், “ராகவ் இது நம்ம அபூர்வா அக்காவின் கணவர் ஆதித்யா. மற்ற விஷயம் எல்லாம் வீட்டில் போய் பேசலாம் இப்போ கிளம்பு” என்றான். நால்வரும் அங்கிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தனர்.