Idhayam – 39

அத்தியாயம் – 39

அபூர்வா காரில் ஏறியதில் இருந்து குழப்பத்துடன் அமர்ந்திருப்பதை கண்டு சக்தி தனக்குள் சிரித்துக் கொண்டான். அவனின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

கொல்கத்தாவில் இருந்து மகளின் முகத்தில் பழைய தெளிவு இல்லை என்று உணர்ந்த ரோஹித்தும், மதுவும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். அவளின் போக்கில் விட அவர்களுக்கு மனசு வரவில்லை.

தாய் தந்தையும் தனியாக இருப்பதை கவனித்த சக்தி, “அப்பா” என்ற அழைப்புடன் அவர்களின் அறைக்குள் நுழைந்தான்.

“வா சக்தி என்ன விஷயம்” என்று ரோஹித் நேரடியாக மகனிடம் கேட்டார்.

“அக்கா பற்றி பேசணும் அப்பா” என்றான் மகன் தெளிவாக.

அபூர்வா விஷயம் என்ற மறுநொடியே, “என்னன்னு சொல்லு” என்றாள் மதுமிதா.

“அம்மா அக்கா நம்மகிட்ட பொய் சொல்லிட்டு இருக்கிறா. அவ ஆதி மாமாவின் நிறுவனத்தில் தான் வேலை செஞ்சிட்டு இருந்தாள். அவங்க இருவருக்குள் ஏதோ பிரச்சனை வந்திருக்கு அதன் அவ சொல்லாமல் கிளம்பி வந்துட்டா” என்றான் மகன்.

அவனின் பேச்சில் இருந்த தெளிவை கண்டு பெற்றவர்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர். பிறகு சக்தியிடமிருந்து ஆதியின் நம்பரை வாங்கி போன் செய்ய அடுத்தடுத்த விஷயங்கள் வேகமாக நடந்தது. ஆதி தன் வேலைகளை முடித்துக்கொண்டு ஒரு வாரத்தில் மதுரை வந்து சேர்ந்தான்.

அவள் ஷாப்பிங் சென்ற சிலநிமிடத்தில் வீட்டிற்குள் நுழைந்த மற்றொரு காரிலிருந்து இறங்கிய மஞ்சுளாவை பார்த்தும், “வாங்க” என்று புன்னகையோடு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் மதுமிதா.

அவர்களின் பின்னோடு காரைவிட்டு இறங்கிய ஆதி, “ஹாய் அத்தை எப்படி இருக்கீங்க” என்று விசாரித்தபடி தாயை பின் தொடர்ந்தான்.

“நான் நல்லா இருக்கேன் மாப்பிள்ளை” என்ற மதுமிதா இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவர், “சக்தி அப்பா மேலே இருக்காரு வர சொல்லு” என்று சொன்னபடி அவர்களை ஹாலில் அமர வைத்துவிட்டு காபி போட சமையலறை நோக்கி சென்றார்.

ஆதியின் பார்வை தன்னவளை தேடி வீட்டை சுற்றி வருவதை கண்ட சக்தி, “மாமா அக்கா வீட்டில் இல்லை ஷாப்பிங் போயிருக்கிற” என்றவன் வேகமாக மாடியேறி செல்ல ஆதி தலையைக் குனிந்து கொண்டான்.

“இவ்வளவு ஆசையை வெச்சிட்டு எப்படித்தான் அவளை பிரிந்து ஐந்து வருடம் இருந்தீயோ” என்றாள் மஞ்சுளா சிரிப்புடன்.

அடுத்த சில நொடிகளில் கீழிறங்கி வந்த ரோஹித்,“வாங்க சம்மந்திம்மா” என்ற அழைப்புடன் அவர்களின் எதிரே வந்து அமர மதுமிதா நால்வருக்கும் காபி கொண்டு வந்து கொடுக்க அங்கே மௌனம் நிலவியது.

 “மாமா நானே கிளம்பி வரலாம்னு இருந்தேன். ஆனால் இடையில் கொஞ்சம் வேலை” என்று தொடங்கிய ஆதி இருவரின் இடையே நடந்த அனைத்தையும் அவரிடம் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி முடித்தான்.

ரோஹித் – மதுமிதாவிற்கு அவனின் மனநிலை தெளிவாக புரிய, “எங்க மகளை நீங்க கண்கலங்காமல் பார்த்துக்கணும். அது மட்டும் தான் எங்க ஆசை. மற்றபடி நீங்க ஏழையா பணக்காரனா என்று பார்க்கும் எண்ணம் எல்லாம் எங்களிடம் இல்ல” என்றாள் மது தெளிவாகவே.

“இல்ல அத்தை என்னதான் இருந்தாலும் பெத்தவங்க இதெல்லாம் எதிர்பார்ப்பாங்க”என்று அவன் அவர்களுக்கு புரிய வைக்க முயன்றான்.

“நாங்க அப்படி இல்ல ஆதி. நான் உங்க அத்தையை பத்து வருஷம் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணேன். எங்க அபூர்வா தான் பிரிந்த எங்களை சேர்த்து வைத்தாள். ஆனா அவளே இன்னைக்கு தன் சுயத்தை தொலைத்துவிட்டு ஒரு ஜெடமாக நடமாடுவதை பார்க்க முடியாமல் தான் சக்தி சொன்ன உடனே உங்களுக்கு போன் பண்ணி இங்கே வரவழைத்தேன்” என்றவர் காரணத்தை தெளிவாக கூற ஆதி அமைதியாக இருந்தான்.

அவனை பிரிந்த நாளில் இருந்தே அவள் ஜெடமாக இருப்பதை அவளின் தந்தையின் வாய்மொழியாக கேட்ட ஆதிக்கு உடனே அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றவே ரோஹித் பின்னோடு நின்ற சக்தியிடம்,, “சக்தி நம்ம கொஞ்சம் வெளியே போலாமா” என்றான்.

சக்தி அவனை புரியாத பார்வை பார்க்க, “மாமா எனக்கு இப்போவே அபூர்வாவை பார்க்கணும். பிளீஸ் மறுப்பு சொல்லாதீங்க. நான் போய் அவளை அழைச்சிட்டு வரேன்” என்றவன் தாயிடம் திரும்பி, “மற்ற விஷயங்கள் எல்லாம் நீங்க முறைப்படி பேசுங்க அம்மா” என்றான்

பெரியவர்களுக்கு அவனின் மனம் தெளிவாக புரிய, “சக்தி நீ ஆதி மாமாவோடு போயிட்டு வா” என்று மகனை அனுப்பிய ரோஹித்தை பார்த்தவன், “தேங்க்ஸ்” என்றான் புன்னகையோடு.

அவன் வேகமாக செல்வதை கண்ட ரோஹித், “இந்த வயதில் இவ்வளவு தூரம் சாதித்த பிறகு அது பற்றிய கர்வம் கொஞ்சம் கூட அவரிடம் இல்லையே. நீங்க மகனை ரொம்ப நல்லாவே வளர்த்தி இருக்கீங்க சம்மந்திம்மா” என்றார் ரோஹித் ஆதியின் மீது பார்வை பதித்தபடி.

அவரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் மஞ்சுளாவின் மனதை குளிர்வித்தது. எந்தவொரு தாயும் மகனிடம் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் இது மட்டுமே!

அவர்கள் மற்ற விஷயங்கள் பற்றி பேச ஆரம்பிக்க சக்தியுடன் ஷாப்பிங் மால் வந்த பிறகு நடந்த விஷயத்தை நினைத்தபடி அவன் காரை சீரான வேகத்தில் செலுத்த, “சக்தி கவனத்தை எங்கோ சிதறவிடுற ஒழுங்கா சாலைப் பார்த்து காரை ஓட்டு” என்ற கண்டிப்பில் அவனின் மனம் நடப்பிற்கு திரும்பியது.

அவர்கள் மூவரும் அமைதியாக வர ராகவ் மட்டும் குழப்பத்தோடு, “அண்ணா இவங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு”என்று கேட்டான்.

சக்தியோ சிரித்தபடியே, “எப்போ நடந்தால் நமக்கு என்னடா? நம்ம அக்காவுக்கு அவர்தான் கணவர் அதை மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ” என்றான் கறாராகவே.

“அதெல்லாம் என்னால முடியாது. என் அபூ அக்காவிற்கு நான் எப்படி எல்லாம் மாப்பிள்ளை பார்க்கனும்னு கனவு கண்டேன் தெரியுமா” என்றான் சீரியசான பாவனையோடு.

அவன் பேசுவதை பொறுமையாக கேட்ட ஆதி, “ஏன் ராகவ் நான் உன் கனவை கலைச்சிட்டேனா” என்று கவலையோடு கேட்க, “ஐயோ மாம்ஸ் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எனக்கு பெரியப்பா என்றாலே ரொம்ப பயம் அவரிடம் எப்படி என் கனவை சொல்லி அக்காவுக்கு எப்போ மாப்பிள்ளை பார்ப்பது என்ற குழப்பத்தில் இருந்தேன்” என்றான் அவன் சிரித்துக்கொண்டே.

“இப்போ என்னாச்சு” என்றான் ஆதி.

“எங்க அக்காவை தேடி வந்து காதலை சொல்லும் நீங்க கிடைச்சிட்டீங்க இல்ல. இனிமேல் நான் பெரியப்பாவுக்கு பயப்பட மாட்டேனே” என்றான் சிறுபிள்ளை போல குதுகலத்துடன்.

“அப்புறம் எதுக்கு ஷாப்பிங் மாலில் உங்க அக்கா கையை பிடிச்சதும் சண்டைக்கு வந்தே” என்றான் ஆதி வம்பிழுக்கும் எண்ணத்துடன்.

“எங்க அக்கா கையை யாரோ பிடிக்கிறாங்க என்ற கோபம் தான் மாமா. மற்றபடி நீங்க உண்மையை சொன்னதும் என் மனசு நிம்மதியாகிருச்சு. என்னதான் இருந்தாலும் பொது இடத்தில் ஒரு ஆண் எங்க அக்காகையை பிடிப்பதை பார்த்துட்டு என்னால அமைதியாக இருக்க முடியுமா?”என்றான் பாசத்துடன்.

அவனின் மனம் தெளிவாக புரிய, “இனிமேல் உன்னிடம் பர்மிஷன் வாங்கிட்டு அப்புறம் உங்க அக்கா கையை பிடிக்கிறேன் ராகவ்” என்றவன் குறும்புடன் கண்சிமிட்ட வாய்விட்டு சிரித்த சக்தி, “அக்கா இங்கே பாரு இவங்க இருவரும் பேசுவதை” என்றான்.

அவனின் பேச்சை காதில் வாங்காத அபூர்வா ஏதோ சிந்தனையோடு வருவதை கண்ட ஆதி அவளை தொந்தரவு செய்யாமல் அமைதியாக வந்தான். சக்தி வீட்டின் முன்னாடி காரை நிறுத்த மற்ற மூவரும் காரைவிட்டு இறங்கினார்.

அவளோ மெளனமாக சிந்தனையில் ஆழ்ந்து இருப்பதை கண்ட ஆதி, “அபூர்வா” என்று அதட்டல் போட கோபத்துடன் நிமிர்ந்தவள், “என்ன” என்றாள் அதிகாரமாகவே.

“வீடு வந்துவிட்டது முதலில் இறங்கு” என்ற பிறகு சூழ்நிலை உணர்ந்து சட்டென்று காரைவிட்டு இறங்கினாள். அவளின் கரத்தை அழுத்தமாக பிடித்தபடி வீட்டிற்குள் நுழைந்தான். அவர்கள் ஜோடியாக வருவதைக் கண்டு பெரியவர்களின் மனம் பூரித்துப் போனது.

அபூர்வாவின் கரங்களை பிடித்தபடி நேராக ரோஹித் மதுவின் முன்னாடி வந்து நின்ற ஆதி, “உங்க அனுமதி இல்லாமல் இவளோட கழுத்தில் தாலி கட்டியது என் தவறுதான் மாமா. அந்த நிமிடம் இவளை இழக்கக்கூடாது என்ற எண்ணம் தவிர வேற எந்த எண்ணமும் என் மனசில் வரவில்லை. அதற்கு பிறகு நடந்த அனைத்தும் இவ உங்களிடம் சொல்லிருப்பாள்..” என்றவன் நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.

அவள் மௌனமாக நின்றிருக்க, “எனக்கு என் அபூர்வா வேண்டும். உங்க முறைப்படி நீங்க என்ன செய்ய நினைக்கிறீங்களோ அதை செய்ங்க மாமா” என்றான்.

அவனின் பேச்சில் இருந்த உண்மை அங்கிருந்த பெரியவர்களின் மனதை கவரவே, “சரிங்க மாப்பிள்ளை” என்றவர்கள் குலதெய்வம் கோவிலில் திருமணம் மதுரையில் ரிசப்ஷன் என்று முடிவு செய்தனர்.

“ரிசப்ஷன் மட்டும் ஒரு மாசம் கழிச்சு வெச்சுக்கலாம் மாமா” என்றவன் அவளை அங்கே விட்டுவிட்டு கிளம்பினான். குலதெய்வம் கோவிலில் அவன் கட்டிய தாலியை அவிழ்த்து உண்டியலில் போட்டுவிட்டு திரும்பியவளின் கண்கள் கலங்கியது.

எல்லோரும் இருப்பதை மறந்து அவளை அருகே வந்த ஆதி, “அபூர்வா ஷ் அழுகாமல் இருக்கணும்” என்று கரம்பிடித்து அழுத்தம் கொடுத்தான்.

அவள் சட்டென்று நிமிர்ந்து அவனை பார்க்க பட்டுவேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றவனை கண்டு புன்னகைத்தபடி அவனின் கரங்களை விலக்கிக்கொண்டு நடந்தாள். மணமகள் அலங்காரத்தில் இருந்த அபூர்வாவின் பின்னோடு அவனின் மனம் சென்றது.

பெரியவர்களின் முன்னிலையில் அவளின் கழுத்தில் மாங்கல்யத்தை காட்டி அவளை தன்னவளாக ஆக்கிக் கொண்டான். பெரியவர்கள் மனம் நிம்மதியடைய சின்னவர்கள் நால்வரும் அவர்களை கேலி செய்து ஒரு வழி செய்தனர்.

சக்தி, ரக்சிதா, ராகவ், சஞ்சனா நால்வரும் செய்யும் கிண்டலில் தன்னை மறந்து முகம் சிவந்தாள். இரவு அவளை அழகாக அலங்கரித்து ஆதியின் அறைக்கு அழைத்துச் சென்று அவனின் அறையில் விட்டுவிட்டு சிரித்தபடி அங்கிருந்து ஓடிவிட இதயம் தடதடக்க அறையின் கதவுகளை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள் அபூர்வா.

அவள் உள்ளே நுழைந்த மறுநிமிடம் அறையின் கதவுகளை தள்ளி தாழிட்டுவிட்டு, “பொம்மு” என்ற அழைப்புடன் அவளை நெருக்கிட அபூர்வா அங்கிருந்த டேபிளில் பாலை வைத்துவிட்டு வேகமாக அவனின் புறம் திரும்பினாள்.

“ஆதி கிட்ட வராதே நானே செம கோபத்தில் இருக்கேன்” என்று அவனை மிரட்டியபடி பின்னாடி நகர்ந்தாள்.

“ஓஹோ மேடம் கோபமா இருந்தா நாங்க கிட்ட வர கூடாதோ” என்றபடி அழுத்தத்துடன் அவளை நோக்கி முன்னேறினான்.

அவன் ஒரு அடி முன்னாடி எடுத்து வைத்தவள், “வேண்டாம் ஆதி நீ பண்ணின விஷயத்தை இன்னும் நான் மறக்கல. என்னை ஒரு மாதம் தவிக்கவிட்ட உன்னை இன்னைக்கு ஒரு நாள் தவிக்க விடணும்னு நினைக்கிறேன் கிட்ட வராதே” என்று அவள் பிளானை தெளிவாக உளறிவிட வாய்விட்டு சிரித்தவன்,

“அதுக்கு முன்னாடி ஐந்து வருசமும் ஆறு மாசமும் கணக்கு இருக்கும்மா. எந்தவூரில் பொண்டாட்டியை அப்பன் வீட்டில் விட்டுட்டு விரதம் இருக்காங்க சொல்லு” என்று அவன் அவளின் அருகே சென்றான்.

அவள் சுவற்றில் முட்டியதும், ‘இனி இவனிடம் எப்படி தப்பிகிறது’ என்று அவள் யோசிக்கும்போது அவளின் இரண்டு பக்கமும் கரத்தை வைத்து நகரவிடாமல் அரண் அமைத்தவன், “என் பொம்மு எனக்கு கேட்காமல் கொடுப்பா” என்றவனின் விரல்கள் அவளின் கன்னத்தை வருட வெக்கத்தில் சிவந்தாள் பெண்ணவள்.

“ஆதி என் கோபம் என்னன்னு உனக்கு தெரியும் இல்ல” என்றவள் அவனின் விழிகளை நேருக்கு நேர் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டினாள்.

அவன் காதலித்த நாட்களில் கூட அவளை சேலையில் ஒரு நாளும் அவன் பார்த்ததில்லை. இன்று காலையிலிருந்து அவள் சேலையில் வலம் வருவதை கண்டு அவனின் மனம் தடுமாறியது.

அவளின் மூச்சுகாற்று படும் தூரத்தில் நின்றவனின் உடல் சட்டென்று சூடேற கைகள் அவளின் இடையில் அழுத்தத்துடன் பதிய, “ஆதி கையை எடு” என்றாள் அவள் குரலில் மயக்கத்துடன்.

ஒரு விரல் கொண்டு உச்சி வகிட்டில் இருந்து கொடு போட்டபடி கண்கள், மூக்கு, உதடுகள் என்று அவன் கீழிறங்கிய ஆதியின் பார்வையை எதிர்கொண்ட அபூர்வா, “திருடா கையை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டா” என்று திட்டியவளின் கழுத்தடியில் இதழ் பதித்தவன்,

“நான் திருடன்னு நீயே சொல்லிட்ட இல்ல அப்போ இதெல்லாம் கண்டுக்காதே” என்றவன் அவளின் இதழ் நோக்கி மயக்கத்துடன் குனிந்தான். அவனின் விழிகளில் இருந்த வேட்கை அவளை வாயடைக்க வைத்துவிடவே அவனின் இதழ் முத்தத்திற்கு வழிவிட்டு மயங்கி நின்றாள்.

அவளின் மீது அவன் வைத்திருந்த காதலை முதலில் உதடு என்ற ஏட்டில் எழுத துவங்கிய ஆதியின் கரங்கள் வேகத்துடன் செயல்பட அவனிடமிருந்து இதழை வலுகட்டயமாக பிரித்துகொண்டவள், “ஆதி” என்றாள் குரலில் காதல் வழிய.

அவளின் மனம் புரிந்த மறுநொடியே அவளை இரு கரங்களில் ஏந்திக்கொண்டு கட்டிலை நோக்கி நகர்ந்தான். அவள் வெக்கத்துடன் அவனின் மார்பில் முகம் புதைக்க கட்டிலில் அவளை படுக்க வைத்துவிட்டு அவளின் மீது வேகமாக படர்ந்தான்.

அவன் தன் ஆசைகளை அவளிடம் மண்டியிட்டு கேட்க அவனின் ஆசைகளுக்கு விழியசைவில் சம்மதம் சொன்னாள். இத்தனை வருடமாக சேர்வோமா என்ற கேள்விக்கு விடையாமல் கண்ணீரோடு கடந்த இதயங்கள் இன்று இரண்டுற கலந்தது.

தன் தேடல் முடிந்தபிறகு, “தேங்க்ஸ்டி பொம்மு” என்று அவளின் இதழில் முத்திரை பதித்த ஆதி அவளை அள்ளி தன் மீது போட்டு இறுக்கியணைத்து கொண்டவன், “ரொம்ப சோர்வாக இருக்கா செல்லம்” என்றான் காதலோடு அவளின் தலையை கோதியபடி.

அவள் மார்பில் முகம் புதைத்த அபூர்வா அப்போது தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.

“பூ வாசனை வித்தியாசமாக இருக்கு ஆதி” என்றாள் வெக்கத்துடன் அவனின் முகம் பார்க்க, “செங்கொன்றை பூவில் தான் அனைத்து ஏற்பாடும் பண்ண சொன்னேன்” என்று குறும்புடன் கண்சிமிட்டினான்.

“நீ ரொம்ப மோசம்” என்ற அபூர்வா களைப்புடன் விழிமூடினாள். தன் காதல் கை சேர்ந்துவிட்ட நிம்மதியோடு அவளை இறுக்கியணைத்து கொண்டு விழிமூடினான் ஆதி.  

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.