Idhayam – 40
Idhayam – 40
அத்தியாயம் – 40
அபூர்வா காலை கண்விழித்து பார்க்க ஆதி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனின் உறக்கம் கலையாதவண்ணம் விலகி எழுந்து குளித்துவிட்டு பால்கனியில் வந்து அமர்ந்த அபூர்வாவின் மனதில் பழைய குழப்பங்கள் தலை தூக்கியது.
தன்னை தேடி வந்த ஆதியை அவளின் மனம் உடனே ஏற்றுகொள்ள ஒரு காரணம் இருந்தது. அவளுக்கான அங்கீகாரம் இதுவென்று அவன் ஒப்புக்கொண்ட நொடியே அவளின் மனம் அவனை சரணடைந்திருந்தது. முறைப்படி திருமணம் நடந்ததில் அவளின் காதலை உயிர்பித்தான் அவளின் உயிர் காதல் கணவன்.
கொல்கத்தாவில் இருந்து கிளம்பி வரும் முன்னே நிகழ்ந்த நிகழ்வுகள் அவளின் மனதை சலனப்படுத்தியது. ரேவதியின் பிரச்சனை அப்படியே இருந்தது. அதே நேரத்தில் மேனகாவிற்கு தங்களின் திருமணம் பற்றிய விஷயம் அறிந்தால் ஆதியை தன்னிடமிருந்து பிரித்துவிடுவாளோ எண்ணம் மேலோங்க சட்டென்று நிமிர்ந்து ஆதியை பார்த்த அபூர்வாவின் கண்கள் கலங்கியது.
தன் உறக்கம் கலைந்து கண்விழித்தவன் முதலில் பார்த்தது அவளின் பளிங்கு முகத்தை தான். அவள் கலக்கத்துடன் அமர்ந்து கண்கலங்க அமர்ந்திருப்பதை கண்டு, “என்னடா ஏன் அழுதுட்டு இருக்கிற” என்ற கேள்வியுடன் அவளை நெருங்கினான்.
எதையோ நினைத்து அவனின் மார்பில் முகம் புதைத்தவளின் கண்ணீர் பெருகியது. அவளை இறுகி அணைத்தவன், “பொம்மு என்னடா”என்றான் அவளின் தலையை வருடியபடி.
“ஆதி என்னைவிட்டு பிரிஞ்சி போக மாட்டே இல்ல” என்றாள் அழுகையூட்டே.
“இல்லடா உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன்” என்ற அவன் அவளை தன்னிடமிருந்து பிரித்து அவளின் முகத்தை பார்த்தான். அவளின் கண்களில் வழிந்த கண்ணீரை பெருவிரலால் துடைத்துவிட்டவன்,“எதுக்கு இப்போ பயப்படற” என்றான் நேரடியாக.
அவள் மௌனம் சாதிக்க அவளை அழைத்துச்சென்று படுக்கையில் அமர வைத்த ஆதி, “ரேவதி விஷயம் உனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கும் அபூர்வா” என்று தொடங்கிய ஆதியை அவள் தடுத்தாள்.
“நீங்க என்னை தேடி வந்தபோதே ரேவதி பற்றிய குழப்பம் போயிருச்சு ஆதி” என்றாள் தெளிவான குரலில்.
“பரவல்ல அவளை பற்றி தெரிஞ்சிக்கோ. என்னை ரேவதிதான் சுற்று வந்தாள். அவளே தான் நாங்க இருவரும் காதலிக்கிறோம் என்று சொல்லி ஊர் முழுக்க சொன்னாள். கடைசியாக என்னிடம் சண்டை போட்டுட்டு போனபிறகு சிவா அவளிடம் நம்ம காதலை பற்றி சொன்னதும் புரிஞ்சிகிட்டு இப்போ கார்த்திக்கை கல்யாணம் பண்ண ஓகே சொல்லி இருக்கிறா” அவன் நடந்த விஷயத்தை சொல்ல அவளின் முகம் கொஞ்சம் தெளிந்தது.
“இன்னும் என்னம்மா குழப்பம்” என்று கேட்க, “என்னவோ தெரியல மனசு கலக்கமாக இருக்கு” என்ற அபூர்வா வாயை திறந்து காரணத்தை சொல்லவில்லை.
அவள் உண்மையை தன்னிடம் சொல்ல மாட்டாள் என்று உணர்ந்து, “நீ மனசை போட்டு குழப்பிக்காமல் ஊருக்கு கிளம்ப வேண்டிய ஏற்பாடுகளை கவனி”என்றவனை ஏறிட்ட அபூர்வாவின் மனம் கொஞ்சம் நிம்மதியடைய சரியென்று தலையசைத்தாள்.
அவள் தேவையான உடைகளை எடுத்துவைக்க குளித்துவிட்டு வந்த ஆதியின் மனம் மீண்டும் அவளையே நாடியது. அடுத்தநொடியே மனைவியை இழுத்து அணைத்து அவளின் இதழில் முத்திரை பதித்தான்.
அவன் அவளைவிட்டு விலகியதும், “என்ன ஆதி” என்று சிணுங்கிய மனைவியின் கன்னம் வருடியவன், “என்னாச்சு அபூர்வா” என்றான் குறும்பு மின்னும் கண்களோடு.
அவனின் மனம் புரிய, “நான் இங்கே இருந்தால் இன்னைக்கு நம்ம ஊருக்கு போக மாட்டோம்” அவனிடமிருந்து விலகி வேகமாக கீழே செல்வதை கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான் ஆதி.
மஞ்சுளா சமையலறையில் பார்த்தும், “அத்தை காபி குடிச்சீங்களா” என்றபடி வேகமாக அவரின் அருகே வந்தாள்.
மருமகளின் குரல்கேட்டு திரும்பியவர், “நான் குடிச்சிட்டேன் அபூர்வா. நீயும் குடிச்சிட்டு சீக்கிரம் கிளம்புமா” என்றவரை அவள் கேள்வியாக நோக்கினாள்.
“கோவிலுக்கு போயிட்டு அப்படியே உங்க அப்பா வீட்டுக்கு போய் இன்னைக்கு மறுவீடு முடிச்சிட்டு குற்றாலம் கிளம்புங்க” என்றவர் மற்ற வேலைகளை கவனிக்க குழப்பத்துடன் நின்றவளின் கையில் காபியை கொடுத்து, “ஆதியை போய் முதலில் எழுப்பு” என்று அனுப்பினார்.
“அத்தை நம்ம கொல்கத்தா தானே போகணும்? நீங்க குற்றாலம்னு சொல்றீங்க” சந்தேகமாக அவள் தொடங்க, “ஆதி உன்னிடம் எதுவும் சொல்லவே இல்லையா?” என்றார் அவர் புரியாத பாவனையோடு.
“இல்ல அத்தை” என்றவளின் முகம் மீண்டும் குழப்பத்தை தத்தெடுத்தது.
“நீ அவனிடமே கேளு சொல்வான். இப்போ போய் சீக்கிரம் கிளம்புங்க” அடுத்தடுத்த வேலைகளில் மும்பரமாக இறங்க சிந்தனையோடு படியேறிச் சென்றாள்.
அவள் வருவதற்குள் குளித்துவிட்டு வந்து கண்ணாடி முன்னாடி தயாராகி கொண்டிருந்த கணவனை கண்டவள், “என்னங்க அதுக்குள் கிளம்பிட்டீங்க” என்று காபியோடு அவனை நெருங்கினாள்.
தன்னருகே வந்தவளை இழுத்து இறுக்கியணைத்து, “என்ன செல்லம் ஊருக்கு கிளம்பும் எண்ணம் இல்லையா?” என்றான் அவளின் காது மடல்களை கடித்தபடி.
“அத்தை குற்றாலம் போகணும்னு சொல்றாங்க” என்றாள்.
அவளின் கூந்தலில் வாசம் பிடித்தபடியே, “ஆமா நம்ம குற்றாலம் தான் போறோம். இதில் உனக்கு என்ன சந்தேகம்” அவனின் குரல் மயக்கத்தில் ஒலித்தது.
“உங்களுக்கு எப்போதுமே விளையாட்டுதானா?” என்று சிடுசிடுத்துவிட்டு அவனிடமிருந்து விலகி மற்ற வேலைகளை கவனிக்க அவளின் கோபம் உணர்ந்து அமைதியாக இருந்தான் ஆதி. அடுத்த அரைமணி நேரத்தில் அபூர்வாவின் வீட்டிற்கு சென்றனர்.
அங்கே எல்லோரும் இவர்களை வரவேற்று உபசரிக்க, “மாமா அக்காவுக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும் சீக்கிரம் சமைக்க பழகிக்கோங்க” என்றான் சக்தி குறும்புடன் கண்சிமிட்டி.
அவனின் அருகே சாப்பிட அமர்ந்த ரக்சிதா, “நீங்க சொல்லாட்டி அண்ணாவுக்கு தெரியாதா?” என்றாள் அவள் கோபமாக.
“ஏன் நான் உங்க மாமாவுக்கு சமைச்சு போடமாட்டேன் முடிவு பண்ணிட்டிய சக்தி” அபூர்வா அவள் பங்கிற்கு வம்பிழுக்க, “மாமா அக்காவை நம்பினீங்க நீங்க அவ்வளவுதான். அவளுக்கு சுடுதண்ணீர் தான் வைக்க தெரியும்” என்று உண்மையை போட்டு உடைத்த ராகவ் பார்வை அங்கிருந்த பதார்த்தங்களை சுற்றி வந்தது.
“அடப்பாவி அக்கா நல்லா காபி போடுவா” என்று சக்தி அவளுக்கு ஒத்து ஊதவே, “இப்போ அதுவா முக்கியம் சக்தி அண்ணா” என்றவன், “மாமா நீங்க வந்ததால் தான் வீட்டில் விருந்து எல்லாம் பலமாக நடக்குது. இல்லன்னா நாங்க எல்லாம் பாட்டி வீட்டுக்கு போய்தான் இப்படி எல்லாம் சாப்பிடுவோம்” என்ற ராகவ் சாப்பிடுவதில் மும்பரமாகிவிட்டான்.
“சரியான தீனி பண்டாரம்” என்று தலையில் அடித்துக்கொண்டாள் சஞ்சனா.
அவர்கள் ஒருவரையொருவர் வம்பிழுத்துக்கொண்டு சாப்பிடுவதும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சிரித்தபடியே அவர்களை கவனிப்பதை கண்டு அவனின் மனம் நிறைந்தது.
“என்ன மாப்பிள்ளை அவர்களை வேடிக்கை பார்த்துட்டு நீங்க சாப்பிடாமல் இருக்கீங்க” என்று கீர்த்தி அவனுக்கு பரிமாறிட அபூர்வாவின் கவனம் கணவனின் பக்கம் திரும்பியது.
அவன் பேருக்கு சாப்பிடுவதை கண்டு, “ஹலோ சாரே எங்க அம்மா சமையல் சூப்பராக இருக்கும் பயப்படாமல் சாப்பிடுங்க” என்ற அவளின் யாரும் கவனிக்காத நேரத்தில் அவனுக்கு ஊட்டிவிட்டு திரும்பினாள்.
“அக்கா நான் பார்க்கவே இல்ல” என்று ராகவ் குறும்புடன் கூற, “அதுதான் பார்த்துட்டா இல்ல அமைதியா இருடா” என்றாள் கன்னங்கள் சிவக்க.
ஆதிக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. விவரம் தெரிந்த நாளில் இருந்தே அம்மாவை தவிர வேறு யாரோடும் அதிகம் பழகாதவன் கல்லூரி காலத்தில் மட்டும் ப்ரெண்ட்ஸ் பட்டாளத்துடன் பொழுதை கழித்து இருக்கிறான். அவர்களோடும் அதிகம் நெருக்கமில்லை.
இவர்களின் இடையே நிலவிய கேலியும், கிண்டலையும் தன்னை மறந்து சிரித்த ஆதிக்கு அவர்களின் பாசம் கூட புதுமையாக தெரிந்தது. அபூர்வாவின் மூலமாக அவர்களின் குடும்ப பின்னணி பற்றி ஓரளவு தெரியும் என்றபோதும் தங்களால் இவர்கள் போல ஒற்றுமையாக இருக்க முடியுமா என்ற எண்ணம் அவனின் மனதில் தோன்றி மறைந்தது.
ரோஹித் – மதுமிதா, ரஞ்சித் – கீர்த்தி, ஜீவா – கயல்விழி மூன்று ஜோடிகளும் இத்தனை வருடங்கள் கடந்தபிறகும் அதே காதலோடு இருப்பதை கண்டு, ‘நானும் அபூர்வாவும் இவங்களை மாதிரியே இருக்கணும்’ என்று தனக்குள் உறுதி எடுத்தான்.
மறுவீட்டு விருந்து முடிந்தபிறகு அபூர்வாவுடன் குற்றாலம் கிளம்பிய ஆதி, “மாமா இங்கே அதிகநாள் இருக்கலன்னு நினைக்காதீங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதெல்லாம் முடிச்சிட்டு வந்து கண்டிப்பாக இங்கே வருகிறேன்” என்ற ஆதியின் மனம் உணர்ந்த ரோஹித்,
“அதனால் என்ன மாப்பிள்ளை. உங்களுக்கு எப்போ தொதுபடுமோ அப்போ வந்து இங்கே இருங்க. நாங்களும் நேரம் கிடைக்கும் போது குற்றாலம் வரோம்” என்று அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
கார் பயணத்தில் இருவரின் இடையே பலத்த அமைதி நிலவியது. ஆதியின் கவனம் முழுவதும் சாலையில் இருக்க அபூர்வாவின் மனமோ வேறு எங்கோ சென்றது. குற்றாலம் சென்றபிறகு அங்கே நடக்கபோவதை நினைத்து மனம் பாரமானது.
மேனகாவிடம் தான் விட்ட சவாலில் அவள் ஜெய்த்தபிறகும் ஆதியை தன்னிடமிருந்து நிரந்தரமாக பிரித்துவிடுவாளோ என்ற பயம் அவளின் மனதில் எழுந்தது. ஆதி மௌனமாக வந்தபோதும் அவளின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளை படிக்க மறக்கவில்லை.
கொஞ்சநேரம் வெளியே பார்வையை திருப்பியவள் மெல்ல வேடிக்கை பார்த்தபடியே வந்தாள். நேரம் காற்றுபோல கரைந்து செல்ல ‘குற்றாலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற பெயர் பலகை படித்தும் மனம் கொஞ்சம் சலனமடைய தொடங்கியது.
அப்போது அங்கிருந்த பெரிய ஜவுளிக்கடையின் முன்னே சாருலதா வருவதைப் பார்த்தும், “ஆதி காரை நிறுத்துங்க” என்றதும் அவன் சடன்பிரேக் போட்டு காரை நிறுத்தினான்.
அதற்குள் காரைவிட்டு வேகமாக இறங்கிய அபூர்வா, “ஹே சாரு எப்படி இருக்கிற” என்ற கேள்வியுடன் அவளை நெருங்கினாள். தான் வாங்கி வந்த பொருட்களை நிதானமாக காரில் வைத்துவிட்டு நிமிர்ந்தவள், “இப்போ உனக்கு என்ன வேணும்?” என்றாள் எரிச்சலோடு முகம் திருப்பினாள்.
அவளின் செயல் மனதை உலுக்க சிலையென நின்றவளை பார்த்த சாருவின் பார்வை அவளின் பின்னோடு வந்தவனின் மீது படிந்து மீண்டது.
“ஏய் என்னடி இவ்வளவு கோபமாக இருக்கிற” என்று அவள் தன்னை சமாதானம் கொண்டு கேள்வி கேட்க, “ஆமா எங்கம்மாவை எதித்து சவால்விட்டு அதில் ஜெய்த்துவிட்ட உன்மேல் எனக்கு கோபம் தான்” என்றாள் பல்லைக்கடித்துக்கொண்டு.
அவள் கொல்கத்தாவில் பார்த்த சாருவுக்கும், இங்கே இப்போது கண்முன்னே நின்றிருக்கும் சாருவுக்கும் இடையே மலைக்கும், மடுவுக்கும் உள்ளளவு வித்தியாசம் இருப்பதை உணர்ந்தவள், “சாரு நீ என்ன சொல்ற” என்றாள் நிதானமாக.
“இன்னையோட நம்ம ஃப்ரெண்ட்ஸ்ஷிப் முடிஞ்சிபோச்சு. இனிமேல் நீ எனக்கு எதிரி ரைட். நான் உன்னோடு நேருக்கு நேர் மோதி ஜெய்க்கிறேன். எங்க அம்மாவைத் தோற்கடிச்ச உன்னை நான் தோற்கடிச்சு காட்டுறேன். வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பதை நீ அப்போ புரிஞ்சிக்குவ” அவள் காரில் ஏறிச் செல்வதை கண்டு சிலையென உறைந்தாள் அபூர்வா.
தன்னிடம் இதுவரை பேசிவிட்டு சென்றவள் தன்னுடைய தோழி சாருமதி இல்லை. தி கிரேட் பிஸ்னஸ் வுமன் மேனகாவின் மகள் என்ற உண்மை அவளுக்கு புரிய சிறிதுநேரம் ஆனது.
அவளின் உதட்டில் கசந்த புன்னகை படர, ‘பணம் தான் எல்லோரின் வாழ்க்கையும் தீர்மானிக்குது. தாயின் பகைக்காக பழகிய தோழியை தூக்கி எறிந்துவிட்டு போகிறாளே’ என்று அங்கேயே நின்றிருந்தாள்.
மனைவியின் அருகே வந்த ஆதி, “இவளை நினைச்சு நீ ஃபீல் பண்ணாதே. சாரு பற்றிய உன் கணிப்பு கூட தவறாக போக வாய்ப்பு இருக்கு” என்று இருபொருள்பட கூறிய கணவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது.
இருவரும் காரில் ஏற, “சாரு பற்றி என் கணிப்பு தவறாக போகுன்னு இவ்வளவு சரியாக சொல்றீங்களே? நீங்க ஏதோ பிளான் பண்ணி என்னை குற்றாலம் கூட்டிட்டு வந்தமாதிரி இருக்கு” நிதானமாக கேட்டபடி அவனின் முகத்தை ஏறிட்டாள். அவன் காரை ஸ்டார்ட் செய்து சீரான வேகத்தில் செலுத்தினான்.
அவள் இமைக்காமல் பார்க்க, “நான் அவ்வளவு அழகாகவா இருக்கேன்” அவன் புன்முறுவலோடு கேட்க, “பேச்சை மாத்தாதே ஆதி” என்றாள் அவள் எரிச்சலோடு.
“நான் என்ன உன்னை சொன்னேன். நீதான் நம்ம புருஷன் இவ்வளவு அழகான்னு ஆன்னு வாயைப் பிளந்துட்டு பார்த்துட்டு வர” வேண்டுமென்றே அவளை வம்பிற்கு இழுத்தான்.
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்ல” என்றாள் அவள் கோபத்துடன்.
“ஆமா நீ என்ன கேட்ட அபூர்வா.. எனக்கு ஞாபகம் வரலையே.. நீ பக்கத்தில் இருந்தாலே எல்லாமே மறந்து போகுது..” அவன் புருவம் உயர்த்தி யோசிக்க அவளின் முகம் கோபத்தில் சிவந்தது.
“நீ என்னைத்தேடி வந்ததும் முரண்டு பிடிக்காமல் கழுத்தை நீட்டினேன் இல்ல. அதனால் உனக்கு எல்லாமே மறக்கும்” என்று பட்டு பட்டென்று தோளில் அடித்தாள்.
ஒரு கையால் காரை ஒட்டியபடி மறுகரத்தினால் அவளை தடுத்து, “உன் கழுத்தில் தாலி கட்டிய இந்த பாவபட்ட ஜீவனை அடிக்கிற.. பெண்களுக்கு பாதுகாப்பு சட்டம் இருக்கிற மாதிரி பொண்டாட்டி கையால் அடிவாங்கும் கணவனை பாதுகாக்க ஏதாவது புதுசட்டம் கொண்டு வாங்கன்னு சொன்னால் கேட்க மாட்டேன்றாங்களே..” என்று அவன் சிரித்துக்கொண்டே புலம்புவதை பார்த்து வாய்விட்டு சிரித்தாள்.
தற்காலிகமாக சாருமதியின் விஷயத்தை ஒதுக்கிவிட்டு, “சரி இப்போ எதுக்கு குற்றாலம் கூட்டிட்டு போறீங்க”என்று அவள் பேச்சை மாற்றிவிட காரை நிறுத்தியவன், “வீட்டுக்குள் போய் பேசலாமா செல்லம்” காரிலிருந்து இறங்க அவனின் பின்னோடு இறங்கிய அபூர்வா அந்த இடத்தை பார்த்ததும் உச்சகட்ட அதிர்ச்சியில் சிலையென உறைந்தாள்.