IRULMAI – SHORT STORIES

photo-1595171694538-beb81da39d3e

இருள்மை – சிறுகதைத் தொகுப்பு [Thriller]


உயிர் வந்து… உயிர் போக!

மழை நேரம்!

அதாவது… வானம் பொத்துக் கொண்டு சோவென்று மழைக் கொட்டித் தீர்க்கும் இரவுப் பொழுது! மழைஇரவு என்பதற்காக இருள் சூழ்ந்து இல்லை. ஒரு சீரான இடைவெளியில் இருந்த விளக்கு கம்பங்களின் ஒளியால் மழையில் நனைந்த சாலைகள் பளிச்சென்று தெரியும் அளவிற்கு வெளிச்சம் இருந்தது!

வாகனப் போக்குவரத்துக்கு ஒலிகள் இல்லை! காற்றோ, இடியோ, மின்னலோ கிடையாது! சாலையில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு பேய்மழை மட்டுமே!!

சடசடவென சத்தம் போட்டு பெய்யும் மழைச் சூழல் இடையே சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் ஒரு மயான அமைதி இருந்தது! இது போன்றிருந்த சாலை ஒன்றில் அமைந்த பேருந்து நிழற்குடையின் கீழே ஒரு பெண் நின்றிருந்தாள்!

இவள் ஷாலினி!!

அகால நேரமென்பதால் பேருந்து சேவை இருக்காதென்று தெரிந்து, ஆட்டோ கிடைக்குமா? என்று காத்திருப்பது போல் சாலையை எட்டி எட்டி பார்த்தபடி இருந்தாள்.

நிழற்குடை கீழ் மட்டுமல்ல, மழைநீர் ஓடும் அந்தத் தார் சாலையிலும் ஆட்கள் நடமாட்டம் இல்லை! யாருமில்லா சூழலில் தனியாக நிற்பதால் உள்ளுக்குள் ஒருவித பயம் இருப்பதை அவள் முகம் காட்டியது!

‘இன்னும் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணனுமோ?’ என்று முணுமுணுத்த சிறிது நேரத்தில், ஒற்றை முகப்பு ஒளி காட்டிடும் வெளிச்சத்தின் உதவியுடன் மழை நேரத்துச் சாலையைக் கணித்து ஆட்டோ ஒன்று வருவது தெரிந்தது.

ஷாலினி நிறுத்தச் சொல்லி கைகாட்டியதும், அவள் அருகில் வந்து நின்றது.

மழை பெய்கின்ற வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சுமாரான வேகத்தில் வேலை செய்யும் வைப்பர்! ஆட்டோ முன்பக்கம் நனைந்து தொங்கும் சிவப்பு நிற குஞ்சலங்கள்! ஆட்டோ ஓரங்களில் எரியும் நீலநிற எல்இடி விளக்குகள்!

இந்த அடையாளங்களைப் பார்க்கவே பயமுறுத்தும் வகையில் இருந்தது!

ஏறவா? வேண்டாமா? என்று முன்ஜாக்கிரதையாக இருப்பது போல் அவளிடம் ஒரு தயக்கம் தெரிந்தது. ஆனால் மழை நேரமென்பதால் ஆட்டோ கிடைப்பது கடினம் என யோசித்தவள் போல… அதில் ஏறிக் கொண்டாள்.

ஆட்டோ கிளம்பி ஓரிரு நிமிடங்கள் கழித்து, “அண்ணா எங்க போகணும்னு கேட்கலையே?” என ஷாலினி கேள்வி கேட்க, “அதான் ஏற்கனவே உன்கூட வர்ற பொண்ணு சொல்லிட்டே” என்றார்.

ஆட்டோக்காரர் சொன்ன பதிலில் அதிர்ச்சியடைந்தாள் ஷாலினி!

‘கூட வர்ற பொண்ணா… என்ன இது?’ என்ற உள்ளுக்குள் உதற, சாலையைக் கவனித்தாள். அவள் குடியிருப்புக்குப் போகும் வழிதான்!

‘அதெப்படி?’ என்ற மிரட்சியில், “நான் மட்டும்தான இருக்கேன். நீங்க யாரைச் சொல்றீங்க?” என்று ஷாலினி கேட்க, “ரெண்டு பேரும் கைகாட்டி ஏறிட்டு, இப்ப இப்படிக் கேட்கிற?! எதும் சண்டையா உன் பிரண்ட் கூட?” என்று கேட்டார்.

மேலும் அவர், “கொஞ்சம் உள்ள தள்ளி உட்காருமா. அந்தப் பொண்ணு மேல சாரல் அடிக்கு பாரு” என்றார் மழை கொட்டும் சாலையில் கவனத்தை வைத்து!

ஆட்டோ சீரான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. ஷாலினிக்கு ஏதோ ஒரு சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டது போல் மூச்சோட்டம் சரிவர இல்லாமல் போனது. மழை நேரத்து குளிர் இரவிலும் முகமெங்கும் வேர்வைத் துளிகள் அரும்பின!

ஆட்டோக்காரர் பேச்சு ஏற்படுத்திய பயத்தில், ‘தன்னருகே அவர் சொல்வது போல் பெண் இருக்கிறாளா?’ என்று மெதுவாக திரும்பிப் பார்த்தாள்.

நீலநிற விளக்கொளி நிரம்பியிருக்கும் ஆட்டோவிற்குள் அவளுடைய கண்ணனுக்கு யாரும் தெரியவில்லை! இவர் பொய் சொல்கிறாரோ? என்று சிறு சந்தேகம் வந்தது! ஆனால் தான் சொல்லாமலே சரியான பாதையில் செல்கிறாரே என்ற பெரிய குழப்பமும் இருந்தது!

உடனே, “நீ… நீங்க சொல்ற பொண்ணு எ… என்ன கலர் டிரஸ் போட்டிருக்கு?” என்று லேசான நடுக்கத்துடன் கேட்டதற்கு, திரும்பி அவளை ஒருமாதிரி பார்த்தார். பின் அவள் பக்கத்தில் பார்த்துவிட்டு, “பச்ச கலர் சுடிதார்” என்று சாலையை பார்த்து ஓட்ட ஆரம்பித்தார்.

முகத்தின் வேர்வைத் துளிகள் கழுத்தில் வழிந்தோட… மீண்டும் அவளருகில் பார்த்தாள். இப்போதும் யாருமில்லை! இருந்தாலும் பயத்தில் உள்ளே தள்ளி அமர்ந்து கொண்டாள்!!

‘இது என்னவா இருக்கும்?’ என யோசிக்கையில், ‘ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…’ என்ற ரிங்டோனில் ஓட்டுநர் அலைபேசி அதிர்ந்தது.

திக்கென்று இருந்தது ஷாலினிக்கு!

இப்போது பார்வையை பக்கவாட்டில் திருப்பவே பயந்தாள். ஆனால் அவர் சாதாரணமாக அழைப்பை ஏற்று, “சவாரி போய்க்கிட்டு இருக்கேன். அப்புறம் பேசறேன்” என்று வைத்திருந்தார்.

ஒருவித பயம் உருவாக… அலைபேசியில் தோழியை அழைத்துப் பார்த்தாள். புலன செய்தி அனுப்பினாள். எதற்கும் பதிலில்லை!

‘பேசாமல் இறங்கிடலாமா?’ என்றுகூட நினைத்தாள். ஆனால் ‘இங்க இறங்கி என்ன செய்ய? எவ்வளவு தூரம் மழையில் நடக்க?!’ அதனால், ‘ப்ச், இந்த ஆட்டோதான் பிரச்சனை’ என்று தனக்குள் சொல்லி, கண்களை இறுக மூடிக் கொண்டாள்!

முக்கிய சாலை வழியே முப்பது நிமிடங்கள் பயணம் முடித்து கிளைச்சாலை ஒன்றில் வந்து ஆட்டோவை நிறுத்தி, “இதுக்கு மேல போக முடியாது. தண்ணீ ரொம்ப இருக்குது. ரெண்டு பேரும் சேர்ந்து நடந்து போய்க்கோங்க” என்றார்.

ஷாலினி ஒன்றும் சொல்லவில்லை!

‘ஆட்டோவில் இருந்தால்தானே பிரச்சனை?! இறங்கிவிட்டால் இதுபோல் இருக்காதல்லவா?’ என்ற எண்ணம் வர வேகமாக இறங்கி பர்சில் கவனத்தை வைத்துக் கொண்டு, “எவ்வளவு ண்ணா?” என்று கேட்டாள்.

“உன் ஃபிரன்ட் கொடுத்திருச்சி” என கையிலிருந்த நூற்றைம்பது ரூபாயைக் காட்டிவிட்டு, விருட்டென்று ஆட்டோவை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

பக்கென்று இருந்தது ஷாலினிக்கு!

‘பணம் கொடுத்தாச்சா? அப்ப ஆட்டோகாரர் சொல்ற மாதிரி பக்கத்தில ஒரு பொண்ணு நிக்கிறாளோ?’ என்று ஓரவிழியால் ஷாலினி பார்க்க முயற்சித்தாள். ஆனால் முழுதாய் பார்க்கும் முன்… பயம் அதிகமாகி உடல் நடுங்கியது!

அதன்பின் பார்க்க முயற்சிக்கவில்லை!!

சாலையின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரையும் யாருமே இல்லை. எந்தச் சத்தமும் இல்லை. கொட்டும் மழையும்… குடையில்லாமல் சொட்ட சொட்ட நனையும் ஷாலினி மட்டும்தான்!

அங்கேயே நிற்கவும் பயம்… நடந்து போகவும் பயம் என்பது போல் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கையில் ஆக்டிவா ஒன்று வந்து அவளருகில் நின்றது!

அதிலிருந்த ரெய்ன் கோட் அணிந்திருந்த பெண், “மழை ரொம்ப பெய்யுது சிஸ்டர். லிஃப்ட் வேணுமா?” என்று கேட்டாள்.

‘ஒத்துக்கவா, மறுக்கவா?’ என்ற குழப்பம் போல் ஷாலினி விழிகள் இருந்தன!

பின் தனியா போக வேண்டாமென தோன்ற, “தேங்க்ஸ்” என்று வண்டியில் ஏறிக் கொண்டு, “நேரா போய் செகன்ட் லெஃப்ட் கட்…” என்று வழி சொல்லும் போதே, “கொஞ்சம் முன்னாடி தள்ளி உட்காருங்க. அவங்களும் ஏறணும்ல?!” என்றாள் அந்த ஆக்டிவா பெண்.

“எவங்க?” என்று கண்கள் சுருக்கி கேட்டாள் ஷாலினி!

“இதோ இங்க நிக்கிறாங்களே, ஹைட்டா இருக்காங்கள அதான் உங்களைத் தள்ளி உட்கார சொன்னேன்” என ஷாலினி நின்ற இடத்தின் பக்கம் கைகாட்டினாள்.

அந்தப் பெண் பேச்சால் திடுக்கிட்டாள் ஷாலினி!

இந்தப்பக்கம் அந்தப்பக்கம் என திரும்பிப் பாராமல் சட்டென்று இறங்கியவள், “நா… நான் ந… நடந்தே போய்க்கிறேன்” என்று படபடத்துப் பேசினாள்!!

“ஏன் சிஸ்டர்?” என்று கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாமல் ஷாலினி நடக்க ஆரம்பிக்க, “உங்க இஷ்டம்” என்று அந்த ஆக்டிவா பெண் சென்றுவிட்டாள்.

குண்டும் குழியுமாக இருக்கும் கிளைச்சாலையில்… நனைந்ததில் நடுங்கியபடி நடந்தாள். கண்ணின் கருமணி மட்டும் வலப்பக்கம் ஒருமுறை… இடப்பக்கம் ஒருமுறை போய் விட்டு வந்தன!

அவ்வளவுதான்! என்னாயிற்றோ… அடுத்த நொடி ஓட்டம் பிடித்தாள்!

சாலை ஓரங்களிலும், குழிகளிலும் தேங்கியிருந்த மழைநீரில் கால்கள் அழுந்தப் பதிந்து சத்தங்கள் கேட்கும்படி கண்முன் தெரியாமல் ஓடினாள்.

அவள் வசிக்கும் குடியிருப்புக்குள்ளே வந்த பின்தான் வேகத்தைப் படிப்படியாக குறைத்து மூச்சு வாங்க நின்றாள்!

விடாது பெய்யும் மழையால் தொப்பலாக நனைந்திருந்தவளைப் பார்த்த கேட் செக்யூரிட்டி முதியவர், “என்னமா இப்படி நனைஞ்சிருக்க. ஒரு ஆட்டோ பிடிச்சி வந்திருக்கலாமே?” என அக்கறையாக கேட்டார்.

“ஆட்டோக்காரர் இந்தப் பக்கம் வரமாட்டேன்னு சொல்லிட்டாரு” என்று ஓடிய ஓட்டத்தினால் மூச்சிரைக்க பதில் சொன்னாள்!

கூடவே அவர் கேள்வியால் அப்பெண் பின்தொடரவில்லை என்ற ஒரு நிம்மதியில் நடக்கப் போனவளிடம், “எப்பவும் யாரையும் கூட்டிட்டு வர மாட்டியே? இன்னைக்கு என்னமா… கூட யாரோ வந்திருக்கு. மழையினாலயா?” என்று கேட்டார்.

நிம்மதி பறிபோனது போல் சட்டென திரும்பினாள் ஷாலினி!

மேலும் அவரே, “அந்தப் பொண்ணு கையிலதான் குடை இருக்கே. அப்புறமும் ஏன் ரெண்டு பேரும் இப்படி நனைஞ்சிட்டு வரணும்?” என கேட்க, ‘இன்னும் அந்தப் பொண்ணு வர்றாளா?’ என்று ஷாலினி வெலவெலத்துப் போனாள்.

பதில் சொல்லாமல் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள்.

பின்னே தொடர்கிறாளா? பக்கத்தில் வருகிறாளா? என்ற பெரிய பீதியோடு திரும்பியும், பக்கவாட்டிலும் பார்த்தபடி ஓடி வந்து லிஃப்டில் ஏறினாள்.

மிதமான வெள்ளை நிற வெளிச்சத்திலிருந்த லிஃப்டில், ஆறாவது தளத்திற்கான பட்டனை அழுத்திவிட்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள்!

ஆனாலும் பெண் உருவம் எதும் தட்டுப்படுமா என பார்க்க மெது மெதுவாக வலக் கையை உயர்த்தினாள். இங்கே அங்கே என கையை அசைத்துப் பார்த்தாள்.

திடுமென ஒரு சத்தம்!

தடாலென்று கண்திறந்து பார்த்தாள்! லிஃப்ட் நின்று கதவு திறந்த சத்தம்தான்!

அவள் இறங்கியதுமே… ஏறுவதற்காக காத்திருந்த பெண்மணியைப் பார்த்தபடி வெளியே வந்தாள். ‘வாவ்! லாங் கேர், வெரி நைஸ்!’ என்று சொல்லி லிஃப்டில் ஏறி அந்தப் பெண்மணி சென்றுவிட்டார்!

நல்ல வெளிச்சத்தில் இருந்த நடைக்கூடத்தில் தனியே நின்றாள் ஷாலினி!

தோளில் புரண்ட தன் கூந்தலைத் தொட்டுப் பார்த்தவள், ‘அப்ப அந்தப் பொண்ணு இன்னும் கூடவே வருகிறாளா?! யாரிவள்?’ என்ற அச்சத்தில் இதயம் ‘தட்,தட்’ என துடித்தது.

உடனே ஓடிச் சென்று… வீட்டைத் திறந்து… உள்ளே போய் பூட்டிக் கொண்டாள்.

இருண்டு கிடந்தன அறைகள். அனைத்து விளக்குகளையும் போட்டாள். இருட்டை கிழித்து வந்த வெளிச்சத்தில் ஏதாவது பெண்ணுருவம் தெரிகிறதா என்று நூற்றியென்பது டிகிரி கோணத்தில் விழிகளை சுழற்றிப் பார்த்தாள்.

மீண்டும் ஒரு சத்தம் கேட்டு உடல் அதிர்ந்தது!

இம்முறை காலிங் பெல் அடிக்கும் சத்தம்!!

‘யாரா இருக்கும்?’ என்று ஒரு பயம்! இருந்தும் லென்ஸில் பார்த்து கதவைத் திறந்தவளிடம், “மேம் யுவர் ஆர்டர்” என பிரபல கடை பெயர் ஒன்று பொறிக்கப்பட்ட பிரியாணி டப்பாவை நீட்டினான் டெலிவரி பாய்!

“நா… நான் ஆர்டர் பண்ணலையே” என்று பதற்றத்துடன் மறுத்தாள்!

“இந்த அட்ரஸ்ல இருந்துதான் ஆர்டர் வந்தது மேம்” என்றவன், “ஒருவேளை அவங்க ஆர்டர் பண்ணிருப்பாங்களோ?” என்று சாப்பாட்டு மேசை நோக்கி பார்த்துக் கேட்டான்.

சிறிதளவும் திரும்பிப் பார்க்கவே பயந்து… திருதிருவென விழித்து நின்றவளின் கைகளில் பிரியாணியை கொடுத்துவிட்டு டெலிவரி பாய் சென்றான்.

இப்போது கதவைத் தாழிடவும் பயம்! திறந்து வைத்திருக்கவும் பயம்!

பிரியாணி டப்பாவை கையில் வைத்துக் கொண்டு உயிர் போகும் பயத்தில், கண்களில் கண்ணீர் துளிர்க்க ஒருநொடி நின்றிருப்பாள். அதற்குள்ளே, “ஹேய்ய்ய்” என்று கத்தி ஒரு கும்பல் அவள் முன்னே வந்து நின்றது!

அந்த ஆட்டோகாரர், ஆக்டிவா பெண், செக்யூரிட்டி, லிஃப்ட் பெண்மணி, டெலிவரி பாய் என அனைவரும் நின்றனர்! கூடவே அவள் தோழியும்! கேமரா சகிதமாக சிலரும் நின்றனர்!!

துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவளிடம், “சிஸ்டர் இது, ‘ஹாரர் பிராங்க் வித் பிரஜன்’ ஷோகாக பண்ணது. உங்ககூட ஒரு பொண்ணு இருக்க மாதிரி சொல்றதுக்காக, இவங்க எல்லாம் நாங்க செட் பண்ண ஆளுங்க. உங்க ஃபிரண்ட் ஹெல்ப் போட இதைப் பண்ணோம்” என்று விளக்கினான்.

‘இதுதான் நடந்திருக்கிறது’ என்று தெரிந்ததால் பயம் தெளிந்து ஷாலினிக்கு உயிர் வந்தது போலிருந்தது!

இன்னொருவர், “சிஸ்டர் கேமரா பாருங்க” என்று குல்லாவை மாட்டப் போக, “இப்படித்தான் பண்ணுவீங்களா? சே எது விளையாட்டு? எது சீரியஸ்? எது நிஜம்? எது பொய்?னு தெரியாம போயிடாதா?” என்று கத்தினாள்.

தோழியிடம், “உன்கிட்ட அப்புறமா பேசிக்கிறேன்” என்றாள் கோபமாக!

“சாரி சிஸ்டர் சாரி…” என்றாலும் அவள் சமாதானம் ஆகவில்லை. அதன் பின்னும் நிறைய பேசினார்கள். திட்டினாள். வாங்கிக் கொண்டார்கள்!

கடைசியில், “அடுத்த வாரம் வேற ஒரு பிராங்க் ஐடியாவோட மீட் பண்றேன். அன்டில் தென், திஸ் இஸ் பிரஜன் ஷைனிங் ஆஃப்!” என நிகழ்ச்சி முடிந்தது.

இந்தக் காட்சிகளையெல்லாம் எடிட்டிங் அறையில் எடிட்டருடன் உட்கார்ந்து, நிகழ்ச்சி படைப்புக் குழவைச் சேர்ந்த ரஞ்சனி பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த ‘பிராங்க்’ நிகழ்ச்சியின் எண்ணமும் ஆக்கமும் ரஞ்சனிதான்!

பார்த்து முடித்ததும் ரஞ்சனி, “சூப்பர்! உயிர் போய்… உயிர் வர்ற மொமென்ட்னு டைட்டில் கொடுத்துகோங்க. ப்ரோமோ கட் ரெடி பண்ணிடுங்க” என்றாள்.

“ஓகே மேம்” என்றவன், “சவுன்ட் எஃபக்ட் வேண்டாமா? லைட்டிங் நிறைய இருக்கு. இருட்டா இருந்தாதான கோஸ்ட் பீல் கொடுக்கும்” என்று கேட்டான்.

“இல்லை வேண்டாம். இருட்டோ, சவுன்ட் எஃபக்ட் இல்லமாலே பயம் வரணும், பார்க்கலாம்” என்றவள் நேரத்தைப் பார்த்துவிட்டு, “அக்கா பசங்களை வெளிய கூட்டிட்டுப் போகணும். நான் கிளம்பறேன்” என்று எழுந்தாள்.

“பை மேம்” என்றதும், வெளியே வந்த ரஞ்சனி ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.

மாலை நேரத்து சூரிய கதிர்கள் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன! தனிவீடுதான்! ரஞ்சனியின் அம்மா வீட்டுச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்!!

காம்பௌன்டுக்குள் வந்தவள் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டே, “ம்மா, பசங்க ரெடி ஆகியாச்சா” என்று கேட்டாள்.

“அப்பவே ரெடியாயிட்டு… உட்கார்ந்து டிவி பார்க்கிறாங்க” என்றவர், “இது யாருடி… புது ஃபிரண்டா?” என்றார்.

“எது?” என்றாள் புரியாத உடல்மொழியுடன்!

“உன்கூட ஸ்கூட்டியில வந்து இறங்கி நிக்கிறது”

‘ஆங் என்கூடவா?” என கேட்டவளுக்கு ஒரு சிறு பயம் எழுந்தது. என்னமோ அந்த நேரத்தில் ‘பிராங்க்’ காட்சிகள் கண்முன் வர, “என்ன டிரஸ் போட்டுருக்கா ம்மா?” என்று கேட்டாள்.

“சுடிதார்”

“ம்மா!” என்று அழுத்திச் சொன்னவள், “கலர் சொல்லுங்க” என்றாள்.

பைப்பை நிறுத்திவிட்டு, “பச்சை கலர்டி” என்றார்.

பின்னல் திரும்பவே பயந்து இருந்தவள், “ஹைட்டா இருக்காளா?” என்றாள்.

“உன்கூடதான வந்திருக்கா. என்னமோ தெரியாத மாதிரி கேட்கிற?” என்றார் டியூபை சுருட்டி வைத்தபடி!

“பதில் சொல்லுங்க!!”

“ம்ம்”

“லாங் ஹேரா?”

“ஆமாடி!?” என்றபோது ‘பாட்டி’ என்று உள்ளிருந்து அழைப்பு வந்தது.

“குடை வச்சிருக்காளா?”

“குடையும் வச்சிருக்கா. பிரியாணி டப்பாவும் வச்சிருக்கா ரஞ்சி” என்றவர், மீண்டும்

‘பாட்டி’ என்று குரல் கேட்க, “இதோ வர்றேன்” என்று வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

‘திக் திக்’ என்றிருக்க அங்கேயே நின்றாள் ரஞ்சனி!

‘இது என்னவா இருக்கும்?’ என்ற கேள்வி வருகையில், வீட்டிற்குள் இருந்த டிவியில், ‘ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின்…’ என்ற பாடல் ஓடும் சத்தம் வெளியே வரை கேட்டது.

‘அப்போ இது அதுவா?’ என்ற கேள்வியில் முகமெங்கும் வியர்வைத் துளிகள் துளிர்க்க ரஞ்சனி திரும்பிப் பார்த்தாள்!!

பச்சை நிற சுடிதாரில், நீள கூந்தலுடன், உயரமான தோற்றத்தில், கையில் குடை மற்றும் பிரியாணி டப்பாவை வைத்தபடி ஒரு பெண் நின்றாள்!

வெளிச்சமான மாலை நேரம்! திகில் ஏற்படுத்தும் சத்தம் ஏதுமில்லைதான்! இருந்தும், ‘இனி என்ன நடக்கப் போகிறதோ?’ என்ற பயத்தில் ரஞ்சனிக்கு உயிர் போவது போல் இருந்தது!!

********************** END ************************

நிறுவல் நீக்கம் 

அவசர அவசரமாக அலுவலகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் சுசீலா. சமைப்பது, ஆறு வயது மகளைப் பள்ளிக்கு கிளப்புவது, முடிந்தவரை வீட்டு வேலைகளைச் செய்து முடிப்பதென பம்பரமாய் சுழன்றாள்.

இதற்கு நேரெதிராய் அவள் கணவன் மனோஜ் சுவற்றைப் வெறித்துப் பார்த்து சோர்வாய், சோகமாய் சோஃபாவில் அமர்ந்திருந்தான்!

மறந்தும் சுசீலாவின் பார்வை கணவன் பக்கம் போகவில்லை!!

மகள் அனுசியாவை… குளிப்பாட்டி, சீருடை அணிவித்து, காலணிகள் போட்டுவிட, அந்தக் குட்டிப்பெண் குடுகுடுவென ஓடி, “பா” என்று மனோஜ் மடியில் ஏறி அமர்ந்து, “நா… ரைம்ஸ் சொல்ட்டுமா?” என்று ஆசையாக கேட்டது.

அதைக் கேட்டவனின் பார்வை சுவற்றிலிருந்து மாறி மகளைப் பார்த்தன.

“மய்லே மய்லே ஆடிவா” என்று இடுப்பில் கைவைத்து தலையாட்டி ராகத்தோடு அனு பாட ஆரம்பிக்க, மகள் விழாமல் இருக்க அவளைப் பிடித்துக் கொண்டான்.

அடுத்த வரியைப் பாடிவிட்டு, “கோவ பழங்கள் தாறேன்” என சைகை செய்து காட்டி, “பச்ச கிளி பந்துவா” என்று பறப்பது போல் கைகளை விரித்தவள், “சிட்டுக்குவ்வி சட்ட போட்டு விடறேன்” என்று முழு பாடலையும் தனது மழலை மொழியில் பாடி முடித்தாள்.

மனோஜ் பார்வைதான் மகள் மீதிருந்தது. ஆனால் எண்ணங்கள் வேறெங்கோ இருந்தன!

அப்பா கழுத்தைக் கட்டிக்கொண்டு, “பா, ஸ்கூல டீச்சரு ரெண்டு முட்டாய் கொத்தாங்க” என்று, ஒன்றை சாப்பிட்டு மற்றொன்றை அப்பாவிடம் நீட்ட, அதை வாங்கிக் கொண்டான்.

ஆனால் சாப்பிடவில்லை!

அந்தக்கணம் சுசீலா வந்து, “அனு வாடா” என மகளை அழைக்க, ‘முடியாது’ என்று மறுத்து இன்னும் அப்பா மேல் சாய்ந்து கொண்டு, “ப்பா, பைக் போனும்” என்று குழந்தை கேட்டது.

மனோஜ் அமைதியாக இருக்கவும், “பைக்… பைக் போனும்” என்று திரும்ப திரும்ப சொல்லி அனு அடம்பிடித்தாள்.

பள்ளிக்கு அப்பாவுடன் பைக்கில் போகவே ஆசை! முன்பெல்லாம் அவன்தான் அழைத்துச் செல்வான். இப்போது அப்படியில்லை! அதற்கே இந்த அடம்!!

சுதாரித்த சுசீலா, “அனு நல்ல பொண்ணுதான? அம்மா சொல்றத கேட்கிற செல்லம்தான, ஸ்கூல் வேன் வந்திடும். வாடா வா” என்று கணவன் முகத்தைப் பாராமல் மகளைத் தூக்கி, வரவேற்பறை வந்து புத்தகப் பையை மாட்டிவிட்டு… தெரு முனைக்குச் சென்று அவளை வேனில் ஏற்றிவிட்டு வந்தாள்.

வந்ததுமே வேகமாக தட்டில் இட்லியை எடுத்து வைத்துச் சாப்பிட ஆரம்பித்தாள். ஆனால் அது உள்ளே இறங்குவேனா என்றது.

எப்படி இருந்த வாழ்கை இப்படி ஆகிவிட்டதே என்று ஆதங்கம் மனமெங்கும்!

சுசீலா, மனோஜ் இவர்களது திருமண வாழ்வு அழகாக ஆரம்பித்து, நிம்மதியாக சென்று கொண்டிருந்தது! ஒன்றரை வருடம் முன் மனோஜிற்கு ஒரு கெட்ட பழக்கம் ஏற்பட்டது.

அதன்பின் வாழ்க்கை முன்போல் இல்லை!!

அதனால்தான் கணவனிடம் ஒரு ஒதுக்கம் சுசீலாவிற்கு. காலையில் அத்தனை வேலை பார்த்ததில் உண்டான பசியிலும்… இவள் சரியாக உண்ண முடியாததற்கு காரணமும் அதுவே!

அரையும் குறையுமாய் சாப்பிட்டுவிட்டு மனோஜ் முன் சென்றவள், “சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்… சாப்பிட்ருங்க” என்றாள் இயந்திர தன்மையோடு.

“நீ சாப்பிட்டியா?” என்றான் அவள் முகம் பார்த்து.

பதில் சொல்லவில்லை. கோபம்! அப்படியொரு கோபம் அவன்மீது!

கிளம்பிக்கொண்டே, “கடன் நிறைய இருக்கு. என் சாலரி மட்டும் வச்சி… கடன் அடைக்க, வீட்டு வாடகை, அனு ஸ்கூல் பீஸ்… எல்லாம் சமாளிக்க கஷ்டமாதான் இருக்கு. இல்லைனு சொல்லல” என்றவள், “ஆனா நான் சமாளிக்க பார்க்கிறேன். நீங்க கண்டதயும் நினைக்க வேண்டாம்” என்றாள் குரல் கரகரக்க.

கடன்? ஆம் கடன்தான்… அதுவும் நிறையவே! எல்லாம் அவனால் ஏற்பட்டதே!

ஒன்றரை வருடத்திற்கு முன்வரை வேலை, சம்பாத்தியம், சேமிப்பு, வீடு, மகள், மனைவி என்று அவ்வளவு பொறுப்பாய் இருந்தவன். சுசீலாவை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டவன்.

அவளுக்கான அக்கறை அவன் கண்களில் தெரிந்து கொண்டே இருக்கும்!

பகிர்ந்து வீட்டு வேலைகளைச் செய்வது, இருவரும் பொறுப்பெடுத்து மகளைப் பார்ப்பது, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது என்று யாராவது பார்த்தால் பொறாமை படும் வண்ணம் அவர்களது வாழ்க்கை இருந்தது!

ஆம் இருந்தது… கடந்தகாலம்! இப்பொழுது அப்படியில்லை!!

கொரோனா காலகட்டத்தில் வேலைப்பளு குறைவாக இருந்தபோது பொழுதைப்போக்க ஆன்லைனில் ரம்மி விளையாட ஆரம்பித்தான். பின்பு பொழுதுகள் எப்படி போகின்றது என்பதே தெரியாமல் விளையாடினான்.

முதலில் அலுவல் வேலை முடித்தபின் விளையாடி, பின் வேலைக்கு இடையே கிடைக்கும் நேரங்களில் விளையாடியவன்… கடைசியில் அதுவே அவனது வேலை என்று ஆகிடும்படி விளையாடினான்!

ஆரம்பத்தில் சில வெற்றிகள்… அதற்கான பரிசுத்தொகைகள், சிலபல ஊக்கதொகைகள் என்பதெல்லாம் அவனைக் கைபிடித்து அதற்குள் இழுத்துச் சென்றது.

இந்தச் சிறு வெற்றிகள், பணம், பரிசுத் தொகையினால் தற்காலிக மனமகிழ்ச்சி ஏற்பட்டு, திரும்ப திரும்ப விளையாடினான். ஆனால் விளையாட விளையாட வெற்றி வேண்டுமென பதற்றம் அதிகமாகியது!

அதனால் ‘என்ன நினைக்கிறேன்… முடிவெடுக்கிறேன்’ என்பதை அறியாமலே ஆட்டத்தில் தவறுகள் செய்யத் தொடங்கினான்!!

அதன்பின் அவன் ஆடவில்லை… ஆடவைத்த அது அவனை ஆட்டிவைத்தது!!

கைப்பிடித்து அழைத்துச் சென்ற ஆன்லைன் ரம்மி செயலி, மனோஜ் விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டான்… திரும்பிச் செல்ல மாட்டான் என்று தெரியவும், அவன் கையை விட்டுவிட்டது… கைவிட்டுவிட்டது!

அது… அவனுக்குத் தந்த தொகையெல்லாம் திரும்ப வாங்க ஆரம்பித்தது!

கையிலிருந்த சேமிப்பு பணத்தைப் போட்டு விளையாடினான். அது தீர்ந்ததும் வெளியே கடன் வாங்கி விளையாடினான்.

முதலில், ‘இது நல்லதில்ல… வேண்டாம். விட்ருங்க’ என்று அறிவுரை கூறினாள். ‘இதுக்காக இவ்ளோ கடன் வாங்காதீங்க. நம்ளால சமாளிக்க முடியாது’ என்று கெஞ்சினாள். ‘எப்போ பார்த்தாலும் என்ன கேம்?! எங்களோட பேசுங்க?’ என்று சண்டை போட்டாள். ‘மஷினோட போட்டிப் போட்டு ஜெயிப்பேன்னு சொல்றதெல்லாம் முட்டாள்தனம்’ என்று எரிச்சல்பட்டு பேசாமலும் இருந்து பார்த்தாள்.

கடைசியில், ‘நீங்க இப்படியிருந்தா அனு, என்னோட எதிர்காலம் என்னாகும் மனோ?’ என கண்ணீரும் வடித்திருக்கிறாள்.

இருவீட்டாரும்கூட அவனுக்கு எடுத்துச் சொல்லிப் பார்த்தனர்!

ஆனால் சுய கட்டுப்பாடின்றி இருந்த மனோ, பல சமயங்களில் இந்த அறிவுரைகளுக்குச் செவி சாய்க்க மாட்டான். சில சமயங்களின் சுசீலா பேச்சுகள் கேட்டு… இனி விளையாட மாட்டேன் என்று உறுதியாக இருப்பான்!

ஆனால் ஒருநாள்தான் அப்படி! அடுத்தநாளே அந்த உறுதி எங்கே போனதென தெரியாது. மறுபடியும் விளையாடும் எண்ணம் வந்திருக்கும்! பணமிருக்காது, எனவே மேலும் மேலும் கடன் வாங்கி… விளையாடித் தோற்றான். 

இதனால்… இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால்… கடந்த ஐந்து மாதத்தில் அவனுக்கு ஏற்பட்டிருக்கும் கடன் ஏழு லட்சம்!

நாட்கள் போகப் போக மனைவி பேச்சிலிருந்த உண்மை புரிந்தாலும், ‘இதுல விட்ட என் பணத்த எப்படியாது இதுலருந்தே திரும்ப எடுத்திடனும் சுசீ’ என்று சொல்லிச் சொல்லியே வாழ்க்கையைத் தொலைத்து விட்டிருந்தான்.

ஒருகட்டத்தில் சுசீலாவிற்கு அவனுக்கு அறிவுரை கூறுவது அலுத்துப் போனது. அவனிடம் கோபப்படுவதை விட்டுவிட்டாள். அவனுடன் பேசுவதையும்கூட குறைத்துக் கொண்டாள். ஏதும் தேவை என்றால் மட்டுமே பேச்சு!

அவனிடம் மட்டுமல்ல. அனைவரிடமும் அப்படியே!!

சமீபகாலமாக மனோவிற்கு இதில் எப்படி மாட்டியிருக்கிறோம் என்று புரிந்ததால், ரம்மி விளையாடுவதை விட்டுவிடவே நினைக்கின்றான். ஆனால் முடியவில்லை! இதிலிருந்து வெளியே வர இயலவில்லை!!

இது ஒருபக்கம் என்றால்… வேலை போனதால் வாங்கின கடனை எப்படி அடைக்க என்றும் அவனுக்குத் தெரியவில்லை. அவையெல்லாம் சுசீலா தலைமேல் விழுந்த சுமை என்பது அவனை இன்னும் வாட்டி எடுக்கிறது!!

இந்த மனநிலையில் இருப்பவன் கடந்த ஒருவாரமாக, ‘செத்துப் போயிடலாம்னு இருக்குது சுசீ’ என்று அடிக்கடி சொல்லி வருவதுதான் அவளைச் சாப்பிட விடாமல் செய்கிறது!

அவனுள் தற்கொலை எண்ணம் இருப்பதை நினைத்து… நினைத்து சுசீக்கு மனஉழைச்சல் வந்துவிட்டது! தனியாக அவனை விடவே பயம்!!

வீட்டுப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்ட சுசியைப் பார்த்து, “எனக்கு டேலன்ட் இருக்கு. விளையாடி ஜெயிச்சி பணம் நிறைய சம்பாதிக்காலம்னு நினைச்சேன். இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை. இப்ப என்ன செய்யன்னு தெரியல சுசீ. ப்ச், பேசாம செத்துப் போயிடலாம்னு தோணுது” என்றான் இன்றும்.

அவன் பேச்சில் கோபம் கட்டுக்கடங்காதளவு எழுந்தது! ஆனால் கோபத்தைக் காட்ட கூட பிடிக்காமல் கிளம்பப் போனாள்!!

சட்டென்று இவன் ஏதாவது செய்து கொள்வானோ என்ற ஓர் பயத்தில், “தப்பான எண்ணம் எதும் வேண்டாம்” என்றவள், “நா..” என ஏதோ தொடங்கி, “நீங்க இல்லாம அனு இருந்துக்க மாட்டா… புரிஞ்சிக்கோங்க” என்று ஓய்ந்து போன குரலில் சொல்லி கிளம்பிவிட்டாள்.

தற்கொலை எண்ணங்கள் சுழற்றி அடிக்க, மனோ மீண்டும் வீட்டுச் சுவற்றை வெறித்துப் பார்க்கலானான்!!

*************

இரண்டு நாள் கழித்து

மனைவியும் மகளும் கிளம்பியிருக்க, மனோஜ் தனியாக வீட்டில் இருந்தான்.

விளையாட கூடாதென மூளை நினைத்தாலும்… மனம் அதன் கட்டுப்பாட்டில் இல்லாமல் விளையாடியே ஆக வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தது. ஆனால் கையில் சுத்தமாக பணமில்லை. என்ன செய்யவென தெரியவில்லை.

கூடவே இதிலிருந்து இனி மீளவே முடியாதா என்ற வேதனைகள் வேறு!

வாழப் பிடிக்காமல் வெறுத்து போய் அமர்ந்திருந்தான்! வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் வந்து கொண்டே இருந்தது!!

அந்தக்கணம் அவன் விளையாடும் ரம்மி செயலி பெயரிட்டு, ‘டுடேஸ் ஆஃபர்! ஒவ்வொரு நண்பர் பரிந்துரைக்கும் ஐந்நூறு ஊக்கத்தொகை மற்றும் முப்பது சதவீதம் தள்ளுபடி பெறுவீர்கள்! மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்’ என்று ஒரு குறுஞ்செய்தி அலைபேசிக்கு வந்திருந்தது.

உடனே அந்த இணைப்பைச் சொடுக்கி விவரங்களை வாசித்துவிட்டு, ‘ப்ச், ஏன் இவ்ளோ கன்டிஷனஸ்… எப்படி முடியும்?’ என்று அலுத்து, அலைபேசியை வைத்தான்.

அதே வெறுமையுடன் அப்படியே அமர்ந்திருந்தான்!!

ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் புலனச் செய்தி வந்திருப்பதிற்கான சமிக்கை கேட்டது. மெல்ல எடுத்துப் பார்த்தான். ஒரு ஆடியோ செய்தி வந்திருந்தது.

அதைத் திறந்தான், ‘வெல்கம் மிஸ்டர் மனோஜ்… ஒரு கேம் விளையாடலாமா?” என்று ஓர் ஆண் குரல் கேட்டது! உடனே, ‘யார் அனுப்பியிருக்கிறார்கள்?’ என்று பார்த்தான்.

எண்களே தெரியவில்லை!!

‘யார் இவன்? என்ற கேள்வி வர, அதைத் தட்டச்சு செய்து அனுப்பினான். ‘யாரா வேணா இருக்கலாம். கேம் விளையாடுவோமா?’ என்று பதில் வந்தது.

‘ப்ச்’ என அலைபேசியைத் தூக்கிப் போட்டு எழுந்த நேரம் மீண்டும் புலனச் செய்தி வந்த ஒலி. எடுத்துப் பார்த்தான். ‘நீ விளையாடலைனா… மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியதா இருக்கும்! உனக்கு எப்படி வசதி?’ என்று அனுப்பட்டிருந்தது.

‘விளையாட முடியாது. இந்த நம்பரை பிளாக் பண்றேன்’ என்று பதில் அனுப்பினான்.

‘பிளாக் பண்ணா, உன் வீட்டுக்குள்ள பாம் வெடிக்கும்’

‘என்ன மிரட்டிறியா?’

‘ஒழுங்கா உட்கார்ந்து விளையாடு. இல்லனா நிச்சயம் வெடிக்கும்’

‘முடியாது போடா’ என மனோஜ் பதில் அனுப்பிய சில நொடிகளில் வீட்டின் இன்னொரு அறையிலிருந்து, ‘டமால்!’ என்ற வெடிச்சத்தம் கேட்டது.

‘வீட்டுக்குள்ள எப்படி?’ என்ற சந்தேகத்தில் மனோ சற்றுநேரம் நின்றான். பின் தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு அந்த அறைக்குச் சென்று பார்த்தான். லேசாக புகை வந்து கொண்டிருந்தது. சிறுசிறு தாள்கள் அங்கங்கே கிடந்தன. கூடவே சிவப்பும் நீலமுமாக வயர்கள் கிடந்தன.

அதுவரை இருந்த சந்தேகம்… அந்தக்கணம் பயமாக மாறியது!

அந்த நேரம் புலனசெய்தி வந்த சமிக்கை கேட்டது. உடனே அவனது அறைக்கு ஓடி வந்து அலைபேசியைப் பார்த்தான். ‘இது சாம்பிள்தான். நீ விளையாடலைனா விளைவு இன்னும் மோசமா இருக்கும்’ என்று வந்திருந்தது!!

அதற்குமேல் அவன் அங்கே நிற்கவில்லை!

ஓடிச் சென்று கதவைத் திறந்து தப்பிச் செல்ல பார்த்தான். ஆனால் கதவு திறக்கவில்லை. வெளிப்புறம் தாழிட்டிருக்கா?! யார் இப்படிச் செய்வது? என்ற கேள்விகள்! அந்தக்கணம் அவன் பயம் ஒருபடி அதிகமானது. திரும்ப ஓடி சன்னல் வழியே யாரையாவது அழைக்க பார்த்தான்.

அவன் நேரம்… யாரும் தெரியவில்லை!!

உடனே அறைக்குள் ஓடி வந்து சுசீலாவிற்கு அலைபேசியில் அழைத்தான். அந்தநொடி, ‘இன்னொன்னு, யார்கிட்டயும் உதவி கேட்க நினைக்காத. கேட்டா அவங்களும் உன்கூட சேர்ந்து மாட்டுவாங்க’ என்று செய்தி வந்தது.

மனோஜ் அதை படித்த நேரம் சுசீ அழைப்பை ஏற்று, “மனோ ஏன் கால் பண்ணீங்க?” என பரிதவிப்புடன் கேட்டாள்.

கணவன் தற்கொலை செய்து விடுவானோ என்ற பயத்திலே இருக்கிறாளென்று அந்தப் பரிதவிப்பு காட்டியது! கணவனுக்கும் அது புரிந்தது!!

‘போதும்! இந்த நிலையில் அவளைக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதே போதும். இன்னும் கஷ்டப்படுத்த வேண்டாம்’ என்று அழைப்பைத் துண்டித்தான்.

மறுபடி மறுபடி சுசீயிடமிருந்து அழைப்பு வந்தது. பேசாமல் அழைப்பைத் துண்டித்ததும் அவளுக்குப் பதற்றத்தைக் கொடுத்திருக்கும் என்று புரிந்தது.

அந்தநேரம் மீண்டும் ஒரு புலன செய்தி, ‘நீ… உன் வீடு, ஃபோன் இப்ப என் கட்டுப்பாட்டுல. வீணா எதையாது ட்ரை பண்ணி டைம் வேஸ்ட் பண்ணாத. ஒழுங்கா விளையாடு. உனக்கு வேற ஆப்ஷனே இல்ல’ என்று இருந்தது.

அதை படித்ததும், ‘யார் இது?’ என மனோ யோசிக்கையில் மீண்டும் ஓர் செய்தி, “உனக்கு அதிக டைம் இல்ல. சீக்கிரம் முடிவெடுக்கலைனா… இன்னொரு அதிர்ச்சி ஸ்டோர் ரூம்ல காத்திருக்கு’ என மிரட்டி செய்தி வர, அலைபேசியை வைத்துக் கொண்டே சேமிப்பு அறை சென்றான்.

அங்கே சிறு உருளை வடிவ பெட்டி ஒன்று இருந்தது! அதிலிருந்து குபுகுபுவென புகை வந்து கொண்டிருந்தது!!

சரியாக அந்தநேரம், ‘நீ விளையாடலைனு சொன்னா இது வெடிக்கும். அன்ட் அப்ப மாதிரி சாம்பிள்லாம் கிடையாது. வெடிச்சா… நீ அவ்ளோதாங்ற மாதிரி இருக்கும். எப்படி உனக்கு வசதி?’ என்று கேட்டு செய்தி வந்திருந்தது.

வாசித்து முடித்த நொடியில் மனோவின் பயம் ஒருபடி அதிகமாகி, அவனது நெற்றி பக்கம் எல்லாம் வியர்த்து வழிந்தது!

திரும்பவும் முன்கதவு நோக்கி ஓடினான். திறந்து பார்த்தான். இப்பொழுது கதவு திறந்தது. உடனே வெளியே ஓடப் பார்க்க… அவனைத் தடுத்து தள்ளிக் கொண்டு முகமூடி அணிந்து ஒருவன் உள்ளே வந்து கதவைத் தாழிட்டான்.

“யார்டா நீ? வீட்டுக்குள்ள வந்துக்கிட்டு” என மனோ கோபத்தில் கத்தினான். இருந்தாலும் அதில் பயம் எக்கச்சமாக கலந்திருந்தது!

உள்ளே வந்தவன், ‘எதுனாலும் ஃபோன்ல போய் பேசிக்கோ’ என்றான் சைகையில்!

வந்த கோபத்திற்கு மனோ, “பேச முடியாது!! நான் வெளில…” என்று ஆரம்பித்த வேகத்தில் அப்படியே நிறுத்திவிட்டான், அந்த ஆள் மனோவிற்கு முன் சென்று கதவருகே நின்றதால்!

மீண்டும் அவன், ‘மரியாதையா உள்ள போ’ என்று சைகை செய்தான்… சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்.

‘இவன அடிச்சிப் போட்டுத் தப்பிச்சிடலாமா? என்று மனோவிற்குத் தோன்றியது. ஆனால் அந்த ஆளுடன்… இல்லை! அவன் ஆளில்லை! அவன் தடியன்! அந்தத் தடியனுடன் சண்டை போட முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.

வந்தவனை, சேமிப்பு அறையிலிருந்து வரும் புகையைப் பார்த்தபடி மனோஜ் ஒரு நிமிடம் நின்றான்!

பயம் அதிகமாகி வியர்த்துக் கொட்டியதால் மனோவின் டீ-ஷர்ட் ஈரமாகியது!!

வேறுவழி தெரியாமல் அமைதியாக அவன் அறைக்கு வந்தமர்ந்து, ‘யார் நீ? வீட்டுக்குள்ள வந்திருக்கிறது யாரு?’ என்று கேட்டு செய்தி அனுப்பினான்.

‘அது உனக்குத் தேவையில்லை. விளையாடலாமா?’

என்ன செய்ய என்று தெரியாமல், ‘விளையாடறேன். முதல அந்தப் புகையை நிறுத்தி அத வெடிச்சிடாம பண்ணு… ப்ளீஸ்’ என்று செய்தி அனுப்பினான்.

‘அத என் ஆள் பார்த்துப்பான். விளையாடலாமா?’

‘என்ன கேம்?’ என்று அனுப்பினான்.

‘ரம்மி கேம்! டெய்லி நீ விளையாடற விளையாட்டுதான். இன்னைக்கு என்கூட விளையாடு. ரூல்ஸ் மட்டும் கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்’

‘என்கிட்ட வச்சி விளையாட பணமேயில்லை?’ என்று முதலில் அனுப்பினான். பின், ‘நான் ரம்மி விளையாடுவேன்னு உனக்கு எப்படித் தெரியும்?’ என்றும் அனுப்பினான்.

‘இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீ கிளிக் பண்ண லிங் வச்சி ஸ்பைவேர் இன்ஸ்டால் செஞ்சி உன் ஃபோன வாட்ச் பண்ணேன். ஃபோன் பேக்ரவுன்டுல கேமரா ரன் ஆக வச்சி… உன்னை ரிமோட் மானிட்டரிங் பண்றேன்’

“ச்சே” என்று மனோ நொந்து கொண்டான்.

‘ஓகே ரூல்ஸ் அனுப்புறேன் பாரு! அஸ்யூஸ்வல் யார் முதல வேலிட் சீகுவென்ஸ் அன்ட் செட் சேக்கிறாங்களோ அவங்கதான் வின்னர். பட் இதுல ஒரு சின்ன சேஞ்! நான் ஜெயிச்சிட்டா உன்னைக் கொன்னுடுவேன். அன்ட் நான் சேர்க்கிற ஒவ்வொரு செட்டுக்கும், உன் மரணம் உன்னை நெருங்கிக்கிட்டே வரும்’

இது விளையாட்டல்ல! ஏதோ விபரீதம் என்றதில் மனோவின் பயம் ஒருபடி அதிகமானது! மனோ, ‘எப்படி என் நம்பர் கிடைச்சது?’ என வேகமாக தட்டச்சு செய்து அனுப்பினான்.

‘சிம்பிள்… ஸ்பேமர் டேட்டாபேஸ்லருந்து [Spammer Database] எடுத்தேன்! டெய்லி யாராவது என்கிட்ட சிக்குவாங்க. இன்னைக்கு நீ!!’

‘இது எதும் சைக்கோ வேலையா இருக்குமோ?’ என்ற கேள்வி வந்தபோது… ஒரு இணைப்பு வந்து விழுந்தது. அடுத்து, ‘இத இன்ஸ்டால் பண்ணு. நானும் நீயும் மட்டும்தான் விளையாட போறோம்’ என்ற வாக்கியம் வந்தது.

மனோவிற்கு தொடுதிரையில் தெரிந்த இணைப்பு மேல் கவனம் போவதும் வருவதுமாக இருந்தது. அவன் கவனத்தை கலைக்கும்படி, ‘என்ன கேம் ஆடாமலே சாகலாம்னு முடிவு பண்ணிட்டியா?’ என்று கேட்டு செய்தி வந்தது.

ஒருவிதமான வெறுப்புடன் இணைப்பைச் சொடுக்கி, மனோஜ் செயலிக்குள் நுழைந்தான். அவனுக்கு எதிரேயிருந்த மேசையில் ஒரே ஒரு நபர் இருப்பதாக காட்டப்பட்டது.

ஒருசில வினாடிகளில் இருவர் பக்கமும் பதிமூன்று சீட்டுகள் இருந்தன. மாறி மாறி சீட்டு அடுக்கிலிருந்து சீட்டை உருவதும்… கழிப்பதுமாக… பல நொடிகள் போயின!

மனோஜ் கவனமாக விளையாடவில்லை. அவனது சிந்தையெல்லாம் இந்த சிக்கலிலிருந்து எப்படி விடுபட என்றேயிருந்தது! இதற்கிடையே அவனுடன் பேச முயற்சித்து சுசீலா வேறு அழைத்துக் கொண்டும்… ‘கால் அட்டன் பண்ணு’ என்று செய்திகள் அனுப்பிய வண்ணமும் இருந்தாள்.

மனோ இப்படி ஒரு நிலையிலிருந்த சமயத்தில், ‘5 ♥ 6 ♥ 7 ♥ 8 ♥’ என்ற தூய வரிசை எதிரே விளையாடிய நபரால் சேர்க்கப்பட்டிருந்தது. கூடவே புலனச் செய்தி வந்திருந்தது. மனோ திறந்து பார்த்தான். ‘என் ஃபர்ஸ்ட் ப்யூர் சீக்குவன்ஸ் [pure sequence]’ என்று இருந்தது.

அதை வாசித்துவிட்டு, சுசீயின் அழைப்பைப் பார்த்துக் கொண்டிருந்தான்!

‘இப்ப ரூல்ஸ் படி, உன் மரணம் உன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கு. அத நீ பார்க்க வேண்டாமா? போ, போய் ஹால்ல பாரு’ என்ற செய்தி குதித்தது.

மனோ அதைப் படித்ததும், ‘என்ன காத்திருக்கோ’ என்ற நடுக்கத்துடனும் தயக்கத்துடனும் வரவேற்பறைச் சென்றான். அங்கு முதலில் வந்த தடியன் கதவை திறந்துவிட, இன்னொரு தடியன் உள்ளே வந்தான்!

கையில் உருட்டுக்கட்டை வைத்திருந்த அவனும் முகமூடி அணிந்திருந்தான்!!

திகிலுடன் அவர்களைப் பார்த்த மனோ, “இவன் யாரு, ப்ச் எத்தனை பேர்தான்? எதுக்காக ஏன்… இப்படி பண்றீங்க?” என்று கேட்டான்.

அந்தத் தடியன்கள் மனோவிடம், ‘ஷ் பேசாத. போ விளையாடு’ என சைகை செய்துவிட்டு, சோஃபாவில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

மனோவிற்கு என்ன செய்யவென தெரியவில்லை. ஒருவன் இருந்த போதே எதிர்த்திருக்க வேண்டுமென மட்டும் தெரிந்தது. ‘ச்சே இப்போது முடியாதே?’ என வருந்தினான். மீண்டும் மீண்டும் சுசீலா அழைத்து கொண்டிருக்க, ‘அவளும் வந்து மாட்டிக் கொள்வாளோ?’ என்று பயம் வர… இவர்களை எதிர்த்துப் பார்க்கலாம் என்றும் தோன்றியது.

அறைக்குச் செல்லாமல் மனோ கதவு நோக்கிப் போனான். உடனே அவனைக் கவனித்துக் கொண்டிருந்தவர்கள் எழுந்தனர். பின், ‘யார் முதலில் கதவை அடைகிறார்கள்?’ என்று ஓர் வேக ஓட்டம்! அதன்பின் பொருட்கள் எல்லாம் கீழே விழும் வண்ணம் போராட்டம்!

கடைசியில் அந்த இரு தடியன்கள் கைதான் ஓங்கி இருந்தது!!

அவர்கள் வலுவிற்கு ஈடு கொடுக்க முடியாமல் திரும்ப அறைக்கு வந்தமர்ந்தவன் மனம் அமைதியில்லாமல் அலைக்கழிந்து வரவும், ‘இந்த கேம் வேண்டாமே… ப்ளீஸ் என்னை விட்ரு’ என்று அனுப்பினான்!

‘தப்பிக்க ட்ரை பண்ணாத. ஒழுங்கா ஆப்குள்ள போ’ என செய்தி வர, மனோ செயலிக்குள் சென்றான்.

மீண்டும் மாறி மாறி சீட்டு அடுக்கிலிருந்து சீட்டை உருவதும்… கழிப்பதுமாக சிலபல நொடிகள் போயின!

மனோஜ் எண்ணம் முழுதும், தப்பிக்க வழி இருக்கா என்று இருந்தது. யாரிடம் எப்படி உதவி கேட்க என்று இருந்தது! இதையெல்லாம் விட, சுசீ வந்து மாட்டிக் கொள்வாளோ என்ற பயம் அதிகமாக இருந்தது!

துளியும் கவனம் விளையாட்டில் இல்லை!!

இந்த நிலையில், ‘6♦ 7♦ 8♣’ என்ற வரிசையும், ‘A♣ A♦ 🃏’ என்ற ஒரு தொகுதியும் எதிரே விளையாடிய நபரால் சேர்க்கப்பட்டிருந்தது!!

உடனே ஒரு புலனச் செய்தி, ‘ஒன் சீக்குவென்ஸ் வைல்ட் [Wild] ஜோக்கர் வச்சி அன்ட் ஒன் செட் பிரின்டட் [Printed] ஜோக்கர் வச்சி!’ என்று வந்திருந்தது. திறந்து பார்த்தபின் மனோ திக்பிரம்மை பிடித்தது போல் இருந்தான்.  

அடுத்தநொடி, ‘மரணம் உன்னை நோக்கி நகர்ந்து வர்றதைப் பார்க்க வேண்டாமா? ஜஸ்ட் திரும்பிப் பாரு’ என்று செய்தி வந்திருக்க, மனோ மெல்ல தலையைத் திருப்பினான்.

அங்கே, அந்த அறை வாசலில் மூன்று தடியன்கள் நின்றார்கள். ஏற்கனவே இருந்த இருவர்! இப்பொழுது புதிதாக இன்னொருவன் வந்து சேர்ந்திருந்தான்.

கையில் கூரான ஆயுதத்துடன் இருந்த அந்தத் தடியனும் முகமூடி அணிந்திருந்தான்!!

இவர்களிடமிருந்து தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் சோர்வாய், சோகமாய் மனோ இருந்தான்! ‘சுசீலா வந்துவிடக் கூடாது’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருந்தான்!

அலைபேசியை எடுத்து, ‘ப்ளீஸ் வேண்டாம். என்னை விட்ரு… ப்ளீஸ் ப்ளீஸ்’ என கருணை கோரி தட்டச்சு செய்து அனுப்பினான்.

‘கேம் ஸ்டார்ட் ஆகிடுச்சி’ என்று கருணையே இல்லாமல் செய்தி வந்தது.

விளையாடாமல், அடுத்து என்ன செய்யவென தெரியாமல் மனோ விதிர்விதிர்த்துப் போய் உறைந்திருந்த சமயம், ‘ஆபிஸ்லருந்து கிளம்பிட்டேன். சீக்கிரம் வந்திடுவேன். தப்பா எந்த முடிவும் வேண்டாம்’ என்று சுசீயிடமிருந்து புலனச் செய்தி வந்தது.

வாசித்தவன் உடனே உயிர் வந்தது போல் அதிர்ச்சிகொண்டு, ‘வர வேண்டாம் சுசீ’ என்று செய்தி அனுப்ப நினைக்கையில், மூவரில் ஒரு தடியன் வந்து அலைபேசியைப் பிடுங்கி, ‘ஒழுங்கா விளையாடு’ என்று சைகையில் கட்டளையிட்டான்!

கஷ்டமாக இருந்தது மனோவிற்கு! கண்ணீர்கூட வந்தது!!

வேறு வழியில்லை… மீண்டும் விளையாடினான். ஒருசில நொடிகளில், ‘2♦ 3♦ 4♦’ என்ற வரிசையை எதிரே இருப்பவன் சேர்த்திருந்தான்.

உடனே ஒரு செய்தி, ‘நான் டிக்ளர் பண்றேன். கேம் ஓவர். நான் வின் பண்ணிட்டேன். நீ தோத்திட்ட. ஸோ ரூல்ஸ் படி உன்னைக் கொலை பண்ணனும். அதை அங்க இருக்க என் ஆளுங்க பார்த்துப்பாங்க. குட் பை’ என்று வந்தது.

அதை அந்தத் தடியன் மனோவிடம் காட்டினான்.

படித்ததும், “ப்ளீஸ் என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க. ப்ளீஸ்” என்று திரும்பத் திரும்ப மனோ அவர்களிடம் உயிர்பிச்சை கேட்க ஆரம்பித்தான்.

ஆனால் அவர்கள் அதைக் காதில் வாங்கவில்லை. அவர்களுக்கு இடப்பட்ட கட்டளையைச் செயற்படுத்த, அந்தத் தடியன்கள் மூவரும் மனோவைச் சுற்றி நின்று கொண்டனர்!

“ப்ளீஸ், விட்ருங்களேன்” என்று மனோ கெஞ்சினான்.

அதைக் கண்டுகொள்ளாமல் இருவர் மனோ கைகளைப் பிடித்துக் கொள்ள, அவர்களைப் பிடித்துத் தள்ளிவிட மனோ போராடிய நேரத்தில், மூன்றாவது தடியன் அவனைப் போராட முடியாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

அதன்பின் மனோவால் அவர்களைத் தடுக்க இயலவில்லை!

சற்று நேரத்தில் துடித்துக் கொண்டிருந்த மனோஜ் கால்கள் முதலில் தளர்ந்து போய்… பின் துவண்டு போய்… கடைசியில் அசைவற்று போனது!!

வந்த வேலை முடிந்தது என்று மூவரும் அறையிலிருந்து வெளியேறினர்.

இரண்டு மணி நேரம் கழித்து…

சுசீலா அலுவலகத்திலிருந்து வந்த நேரம்… பள்ளி முடிந்து மகளும் வேனில் வந்து இறங்க, அவளைத் தூக்கினாள். வழக்கமாக அனுவை வீட்டில் கொண்டு வந்து விடும் பெண்மணி ஏதோ சொல்ல வர, “அப்புறமா பேசலாம்” என்று ஸ்கூட்டியில் ஏறி சுசீலா வீட்டை நோக்கி ஓட்டினாள்.

வீடு திறந்து கிடப்பதைக் கண்டு, ‘ஏன்?’ என்ற சந்தேகத்துடன் வந்தாள். வரவேற்பறையில் பொருட்கள் கீழே கிடப்பது பார்த்து… யோசனையுடன் மகளை இறக்கிவிட்டு, இன்னொரு அறையிலிருந்து பறந்து வந்த தாள்களைக் கேள்வியோடு பார்த்து நின்றாள்.

சேமிப்பு அறையில் புகைப்படலம் இருப்பதையும் பார்த்தாள்!

‘என்ன இது, என்ன நடந்திருக்கும்?’ என மனம் படபடக்க படுக்கையறைக்குள் சென்றவள் அவள் கணவன் இருந்த நிலை கண்டு, “மனோ” என்று பதட்டத்துடன் அழைத்துச் சென்று அமர… அம்மாவின் பின்னேயே வந்த அனுவும், “பா” என்று வந்து நின்றாள்.

தலைமுடி களைந்து, சட்டை சுருங்கி, முகம் வியர்த்து, சோர்வுடன் இருந்த கணவனைப் பார்த்த சுசீ, “என்னாச்சு ஏன் இப்படி இருக்கீங்க மனோ?” என்று பதறினாள்!

அவன் எதுவும் பேசாமல் இருக்க, “மனோ வாயைத் திறந்து பேசுங்க… சூசைடுக்கு ட்ரை பண்ணீங்களா?” என்று கோபத்துடனும் சந்தேகத்துடனும் கேட்டாள்.

கண்கலங்க அவளைப் பார்த்த மனோஜ், ‘இல்லை’ என்று தலையாட்டினான். வாய் திறக்க மாட்டிக்கின்றானே என்ற எரிச்சலில், “அப்புறம் எதுக்கு மனோ இப்படி உட்கார்ந்திருக்க? ஏன் இப்படி என் உயிர வாங்கிற?” என்று கத்தினாள்.

அதில் பயந்துவிட்ட அனு அப்பா அருகே செல்ல, மனோ மகளை அணைத்துக் கொண்டு, “தண்ணீ வேணும் சுசீ” என்றான்.

‘என்னதான் நடந்தது?’ என தெரியாத குழப்பத்துடன் சமயலறை விரைந்தாள். டம்பளரில் தண்ணீர் எடுத்து வந்து அவனிடம் தந்தாள்.

அதன்பின் சமன்பட்டிருந்த குரலில், “என்னாச்சு சொல்லுங்களேன்?” என்றதும், நீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அப்படியே நடந்ததைச் சொன்னான்.

சுசீலா பயந்துவிட்டாள். கண்கள் கலங்கியது. சமாளித்துக் கொண்டு, “வாங்க ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்” என்று எழப் போக, அவள் கைப்பிடித்து, ‘வேண்டாம்’ என்று தலையசைத்து அமர வைத்தான்.

“என்ன வேண்டாம்… எதுக்கு வேண்டாம்?”

“தப்பு என் மேலதான் சுசீ. அந்த லிங்க் கிளிக் பண்ணிருக்க கூடாது”

“அதுக்காக… போலீஸ்ல சொல்ல வேண்டாமா?”

“வேண்டாம்”

“ஏன்?”

“என்ன சொல்ல? நான் ரம்மி விளையாடுவேன், அதுல இன்னைக்கு இப்படி ஆயிடுச்சின்னு சொன்னா… எனக்குத்தான் அசிங்கம்”

“ஓஹோ, இத்தனை நாள் விளையாடறப்ப தெரியலயா?” என்றாள் கோபத்துடன்!

வெகுநாட்களுக்குப் பின் அவள் வெளிப்படுத்தும் கோபத்தை, மனோ பார்த்து இருந்தான்.

தொய்வடைந்து அமர்ந்தவள், “கொல்ற அளவுக்கு வந்திருக்காங்க. இத எப்படி இப்படியே விட முடியும்?” என்றும் கேட்டாள்.

“ஆனா கொல்லலைல…”

தலையைப் பிடித்தபடி, “என்ன பேச்சு இது…?” என்றாள் எரிச்சலுடன்!

அவள் செய்கைகளைப் பார்த்தவன், “சுசீ… இனி… இந்த ரம்மி கேம் விளையாட மாட்டேன். நான் எந்த ஒரு தப்பான முடிவும் எடுக்க மாட்டேன் சுசீ” என்று நிறுத்தி நிதானமாக ஒப்புக் கொடுத்தான்.

அவள் அறிவுரை சொன்ன காலத்தில் மனோஜ் இப்படிச் சொல்லியிருக்கிறான்! ஆனால் சமீபகாலமாக இப்படிச் சொன்னதேயில்லை!!

அவள் அவனையே பார்க்க, “இன்னைக்கு யாருன்னே தெரியாத ஒருத்தனோட விளையாட சரின்னு சொன்னப்ப… அது முட்டாள்தனமா தெரிஞ்சது. ஆனா இத்தன நாளா அது மாதிரி முட்டாள்தனத்தான பண்ணிருக்கேன்னு… ஒரு கில்ட்டி பீல் வந்திருக்கு சுசீ.

உயிர எடுக்கிறதெலாம் என்ன விளையாட்டானு, அப்ப எனக்குள்ள ஒரு கேள்வி வந்திச்சி. ஆனா ஒரு விளையாட்டுக்காக உயிர விடணும்னு நினைச்சது ரொம்ப பெரிய தப்புன்னு, இப்போ அந்தக் கேள்வி புரிய வச்சிடுச்சி” என்றான்.

அவன் பேச்சைக் கேட்டபடியே இருந்தாள்.

“நீ வர்றேன்னு மெசேஜ் பண்ணதும் அப்படி பயந்தேன் சுசீ. அந்தச் சூழ்நிலையில, அந்த ஆளுங்க இருக்கிற இடத்தில… நீயும் வந்து கஷ்டப்படக் கூடாதுனு பயம் வந்தது. அதுக்கு நடுவுல உன்ன நிக்க வைக்க கூடாதுன்னு தோணிச்சி.

ஆனா நான் சூசைடு பண்ணிருந்தா, வாங்கின கடன்லாம் உன் தலையில விழுந்திருக்கும். அது உனக்கு எவ்ளோ சங்கடம்!? அந்தக் கஷ்டத்தை உனக்கு கொடுக்க பார்த்த நான்லாம் என்ன ஹஸ்பன்ட் சொல்லு?” என்றான்.

“சும்மா சூசைடுனு பேசாத மனோ” என்றாள் எரிச்சலாக.

ஆனாலும் அவன், “அவங்க என்னை கொல்ல பார்த்தப்ப… நீ அன்னைக்கு அனு என்னை விட்டு இருந்துக்க மாட்டானு சொன்னது ஞாபகத்தில வந்தது” என்று மகள் முன்னெற்றி முடிகளை வருடியவன், “நா… அப்படினு ஆரம்பிச்சியே சுசீ, நானும் அனுவும் சொல்ல வந்தியா?” என்று கேட்டான்.

அவள் பதில் சொல்லாமல் இருக்க, “என்னமோ உங்க ரெண்டு பேர்கூட முன்ன மாதிரி வாழணும்னு… கவனிச்சிக்கணும்னு ஆசை வந்திருக்கு” என்றான்.

அவன் கண்ணில் தெரிந்த அக்கறையைப் பார்த்தபின்னும் அவள் இளகாமல் இருந்தாள்!

“என்மேல உனக்கு ரொம்பவே கோபம், தெரியுது. அதெல்லாம் வெளிக்காட்டாம இருக்கற. இல்ல காட்டற. முன்ன மாதிரி பேசுறதில்லையே… ப்ச், நான் முன்ன மாதிரி இருந்தா, நீயும் இருந்திருப்ப. சாரி சுசீ. சாரி எல்லாத்துக்கும்” என்றான் உணர்ந்து!!

அப்படியே அவள் இறுக்கமாக இருக்க, “சுசீ, உனக்கு என்னைத் திட்டணும்னு தோணினா… திட்டிக்கோ! இல்ல அடிக்கணும்னு தோணினா… அடிச்சிக்கோ!” என்றான்.

சுசீ மகளைப் பார்க்க, “பரவால்ல தப்பு பண்ணிருக்கேன்ல. வாங்கிக்கிறேன்” என்றான் இலகுவான முகத்துடன்.

அவள் முகம் எந்த மாற்றத்தியும் காண்பிக்காமல் இருந்தது!

தன்மீது அவளுக்கு இருக்கின்ற கோபம் ஒரே நாளில் போகாது என்று தெரிந்தது. ஒரே உரையாடலில்… ஒரு சில வார்த்தைகளில் நம்பிக்கை வந்திடாது என்றும் புரிந்தது.

பேசினது போதும் என்பது போல் அவள் எழுந்து கொண்டாள்.

மகளைத் தூக்கிக்கொண்டு அவனும் எழுந்து, “பாப்பாவ கூட்டிட்டு பைக்ல ஒரு ரவுண்ட் போய்ட்டு வரேன்” என்று அவள் வண்டிச் சாவியை எடுத்தான்.

“டயர்டா இல்லையா?” என்று மட்டும் கேட்டாள்.

“இருக்கு… ஆனா…” என்று எதுவும் சொல்லாமல், “என்ன சொல்லனு தெரியலை சுசீ. ம்ம் என் மொபைல். ரம்மி ஆப் நீ டெலிட் பண்ணிடு” என்று தந்துவிட்டு, “பைக்ல போலாமா?” என்று மகளிடம் பேசியபடி கிளம்பினான்.

போகையில், “எதும் அதிசியம் நடந்தாதான் இதுலருந்து மீள முடியும்னு நினைச்சேன் சுசீ. அந்த அதிசியம் இதுவா இருந்திட்டுப் போகட்டுமே?” என்றவன், “போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணணும்னு நீ சொன்னா… அதுவும் செய்யலாம்” என்று போய்விட்டான்.

அப்பாவும் மகளும் போனதும் சோஃபாவில் அமர்ந்தவள், யார் இப்படிச் செய்திருப்பார்கள் என்று யோசித்தாள். கண்மூடி இருந்தவளுக்கு ஏதோ தோன்ற அலைபேசியை எடுத்து ஓர் அழைப்பு விடுத்தாள்.

அழைப்பு ஏற்கப்படுமோ, படாதோ என்ற யோசனையில் இருக்கையில், “ஹலோ” என்ற குரல் கேட்டதும், “ம் ம் ஹலோ… நான் சுசீலா பேசறேன்” என்று சொன்னாள்.

“இப்பதான் அண்ணன் ஞாபகம் வந்ததா?” என்று குத்தலாக கேள்வி வந்தது.

“அது… அது…” என்றிருந்தாள் தயக்கமாக.

“சரி சொல்லு”

“ஒரு பிரச்சனை… ஸ்டேஷன் வரைக்கும் போகணும் ண்ணா… நீ வர்றியா?”

“என்ன பிரச்சனை?”

“இன்னிக்கு வீட்ல…” என்று ஆரம்பித்து… பதற்றத்தில் அமைதியாகிவிட, அவள் அண்ணன் நடந்ததை அப்படியே சொல்லி முடித்தான்.

“ண்ணா… உனக்கெப்படி தெரியும்?” என்றாள் ஆச்சரியமாக. பின், “இது உன் வேலையா?” என்றாள் சந்தேகமாக.

“ம்ம்”

“என்ன ம்ம்ம்… ஏன் இப்படிப் பண்ண?” என்றாள் கோபத்துடன்.

“கோபப்படாதடா… நீயா வந்து எதுவுமே ஷேர் பண்ணறதில்ல. நானா வந்து கேட்டாலும் ஒன்னும் சொல்றதில்ல. போன வாரம் அம்மா வந்தப்ப மனோ, ‘செத்துப் போயிடலாம்னு சொல்லிட்டே இருக்காரு’ன்னு… சொல்லி அழுதிருக்க. அம்மா என்கிட்ட சொன்னாங்க. அதுக்கப்புறமும் எப்படி ஒன்னும் செய்யாம இருப்பேன் சொல்லு?”

சுசீ அண்ணன் பேச்சைக் கேட்டு அமைதியாக இருந்தாள்.

“மனோ சரியானாதான் நீ சந்தோஷமா இருப்ப. அதான் இப்படி”

“அதுக்காக இப்படியா? ‘பாம்’லாம், ப்ச் போண்ணா. மனோக்கு மட்டும் எதும் ஆயிருந்தா?” என்றாள் பயத்துடன்.

“அதெப்படிடா ஆக விடுவேன்… சொல்லு. பாதுகாப்பு இல்லாத ஒரு பொருளை எப்படி உன் வீட்டுக்குள்ள நான் கொண்டு வருவேன்? அது பாம் இல்ல. ஜஸ்ட் எலக்ட்ரிக் டெட்டநேட்டர் [Electric Detonator]”

“ஸ்டோர் ரூம்ல ஸ்மோக் ஸ்மெல்…?”

“மேட்ச் பாக்ஸ் வச்சி பண்ண சிம்பிள் ஸ்மோக் கிர்னாடா [smoke grenada]”

“இதெல்லாம் எப்படி வீட்டுக்குள்ள வந்தது?”

“சைஸ் சின்னது. ஜன்னல் வழியா உள்ள போட்டாங்க”

“போட்டாங்கனா… யாருண்ணா…? மூணு பேரு வந்தானுங்களே அது யாரு?”

“ம்ம்ம் நான் செட் பண்ணவங்கதான்”

“ண்ணா ஏன் இப்படி!” என அதிர்ந்தவள், “அவனுங்க கைல… கட்ட… மனோ கைய இறுக்கி பிடிச்சி… தண்ணீ மாதிரி முகத்தில எதையோ… அப்புறம் என்ன நடந்தது… தெரியலைனு சொன்னாரு” என்று கோர்வையாக சொல்லாமல் விட்டு விட்டு சொன்னாள்.

“குளோரோஃபார்ம் ஸ்ப்ரே பண்ணாங்க… அதனால மனோ மயங்கிட்டான். ஹாஃம்லெஸ் அது. அவனுக்கு கான்ஷியஸ் வர்ற வரைக்கும் அவங்க ஹால்லதான் இருந்தாங்க. எதுவும் தப்பா போயிட கூடாதுனு நான் வீட்லருந்து கொஞ்சம் தள்ளி நின்னேன்” என்றான், தங்கை எப்படி இதை எடுத்துக் கொள்வாளோ என்ற யோசனையுடன்.

“இருக்கலாம் ண்ணா. ஆனா நான் வந்து பார்த்தப்போ, அவர் எவ்ளோ டயர்டா இருந்தாரு தெரியுமா?” என்று கணவனுக்காக பார்த்துப் பேசினாள்.

“ஏற்கனவே இருந்த குழப்பம்… இப்போ நடந்ததுல உண்டான பயம்… அவனை அப்படிக் காட்டிருக்கும். நீ டென்ஷன் ஆகாதடா” என்றான் சமாதானமாக.

“அண்ணா… மனோ கம்பளைன்ட் கொடுக்க நினைச்சா, உன் லைஃப், கேரியர், ஃப்யூச்சர் என்னாகும்னு யோசிச்சியா? ப்ச் பெரிய ரிஸ்க் எடுத்திருக்க” என்று அண்ணனுக்காகவும் பார்த்துப் பேசினாள்.

“எஸ் ரிஸ்க்தான்… உனக்காக… ம்ம் ஏன் மனோக்காகவும்தான்”

சுசீலாவிற்கு நடந்ததை நினைத்து கலக்கம் இருந்தது… அண்ணன் இதைக் கவனத்துடனே கையாண்டிருக்கிறான் என்ற எண்ணமும் இருந்தது. இதனால் அண்ணனுக்கு பிரச்சனை ஏதும் வருமோ என்ற பயம் இருந்தது. கூடவே கணவன் இனிமேல் இந்த விளையாட்டிற்கு அடிமையில்லை என்று நிம்மதியும் இருந்தது.

கலவையான உணர்வுகளுடன் சுசீ இருந்தாள்!!

சிறு யோசனைக்குப் பின், “உன் வாய்ஸ கண்டுபிடிக்கலை… ஏன்? வாட்ஸப்ல உன் நம்பர் தெரியலைனு சொன்னாரு. அது…” என்றாள் கேள்வியாக.

“ஃபர்ஸ்ட் அனுப்பினது ரெக்கார்ட்டு வாய்ஸ். என்னிது இல்ல. அன்ட் அது என் நம்பர் இல்ல. விர்ச்சுவல் நம்பர்! இதுக்கு ஆப் இருக்குது. கன்ட்ரி கோடு [country code] கொடுத்தா… நம்பர் ஜெனெரேட் ஆகும். ஆப் ஓப்பனா இருக்கப்ப நம்பர் ஆக்ட்டிவா இருக்கும்” என்றவன், “ஏன் மனோ டவுட் பண்றானா?” என்றான்.

“இல்லணா, எதும் அதிசியம் நடந்தாதான் இதுலருந்து வெளிய வருவேன்னு நினைச்சேன். அந்த அதிசியம் இதுவா இருக்கட்டும்னு சொன்னாரு”

“விடுடா, அப்படியே நினைக்கட்டும். அவன்கிட்ட இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காத”

“அதெப்படிண்ணா…” என்று இழுத்தாள்.

“சொல்லவே வேண்டாம்னு சொல்லல. அப்புறம் சொல்லிக்கலாம். நான் வந்து சொல்றேன். ஆனா இப்ப வேண்டாம். கொஞ்ச நாள் அவன் ஜாப் போய் நார்மலா ஆகட்டும். சரியா?”

“ம்” என்றவள், “மனோ ஃபோன்ல ஏதோ ஸ்பைவேர் இன்ஸ்டால் ஆகியிருக்ல. அத ரிமூவ் பண்ணிடு ண்ணா” என்றாள்.

“நீ வேற? அவன் ரம்மி ஆடறது எனக்கு எப்படித் தெரியும்னு கேட்டான். அதான் அப்படிச் சொன்னேன். ஸ்பைவேர்லாம் இல்ல” என்றவன், “மனோ இருக்கானா?” என்று கேட்டான்.

“அப்பாவும் பொண்ணும் வெளிய போயிருக்காங்க”

“நீயும் போயிருக்க வேண்டியதுதான… இன்னும் கோபம் குறையலையா?”

“குறையலை. நல்லா திட்ட, அடிக்க தோணிக்கிட்டே இருக்கு. திட்டிக்கோ, அடிச்சிக்கோனு மனோ சொல்லிட்டுப் போனாரு ணா” என்றாலும், அவள் குரலில் கணவன் மீதான கோபம் சற்று குறைந்துதான் தெரிந்தது.

“நல்ல சான்ஸ்டா. எனக்குமே அவன்மேல கோபம் இருக்கு. என் சார்பில நாலு அடி சேர்த்து அடிச்சிடு. சரியா?” என விளையாட்டாக சொன்னாலும், இத்தனை நாட்களாக மனோவால் தங்கைக்கு எவ்வளவு மனஉழைச்சல் என்ற கோபம் அண்ணனது குரலில் இருந்தது.

“ஃபோன என்கிட்ட கொடுத்து ஆப் அன்இன்ஸ்டால் பண்ண சொல்லிட்டாரு ணா” என்றாள் சற்று முகம் மலர்ந்து!

“இதெல்லாம் படிப்படியா குறைக்க வேண்டிய கெட்ட பழக்கமே இல்லை. ஒரே நாள்ல தலையைச் சுத்தி தூக்கி எறிஞ்சிடனும். மனோ சொன்ன மாதிரி ஆப் அன்இன்ஸ்டால் பண்ணிடுடா” என்று அண்ணன் சொன்னதும், சுசீலா அந்த ரம்மி செயலியை நிறுவல் நீக்கம் [Uninstall] செய்தாள்!!

********************** END ************************

இரவு நிலவு

ஒரு நாள் இரவு நேரம்!

நிலா ஒளிர, இரவு ஒன்பது மணிக்கு மேல் ஊரடங்கும் பொழுதில்… இல்லை அடங்கிவிட்ட பின்! மனசெல்லாம் படபடக்க, சட்டென மூளை வேலை நிறுத்தம் செய்ய, ஆள் அரவமற்ற ஒரு சாலையில் எப்படித் தப்பிக்கவென தெரியாமல் உயிருக்குப் பயந்து தாறுமாறாக ஒரு பெண் ஓடி ஓடிக் களைத்துக் கொண்டிருந்தாள்.

இந்த உயிர் பயம் எதற்கு? யாரால் இந்த பயம் வந்தது?

காரணம்… அவளைக் கொடூரமாக கொன்று போட வேண்டுமென்று கொலை வெறியுடன் ஒருவன் துரத்திக் கொண்டு வருவதால்!

நேரம் இரவு 10:00

பெரிய பெரிய இடைவெளியில் நின்ற சாலையோர விளக்கு கம்பத்தின் ஒளி பட்டு, அவன் கையிலிருந்த கூர்மையான பெரிய கத்தி பளபளத்தது. ஓடுபவளுக்கும் துரத்துபவனுக்கும் இடையே தூரம் குறையும்போது, அவன் கையிலிருந்த கத்தியால் அவள் முதுகின் மீதி சில கீறல்களைப் பதித்தான்.

கீறல்களால் உண்டான காயத்திலிருந்து ‘சிவப்பு வியர்வை’ கசியத் தொடங்கி, ஏற்கனவே வியர்வையால் நனைந்த அவள் ஆடையை மேலும் நனைத்தது! இருந்தும் அவன் கையில் மாட்டிவிட கூடாதென்ற பயத்தில் அவள் வேகம் இருமடங்கானது!!

மருண்ட அவளது கண்ணில், ‘யாராவது… இவனிடமிருந்து காப்பாற்றி விடமாட்டார்களா?’ என்ற நப்பாசை வெகுவாக தெரிந்தது. சிலசமயம் பயத்தில் இமைகளை மூடியபடி பாதை தெரியாமல் தலைதெறிக்க ஓடினாள்.

கொடூரத்துடன் இருந்த அவனுடைய கண்களோ, அவள் மரணத்தைக் காண வேண்டி தன் இமைகளைத் திறந்தே வைத்திருந்தன! அப்படியே துரத்திக் கொண்டு போனான்!!

நேரம் இரவு 10:30

கன்னாபின்னாவென ஓடி வந்தவள் ஒரு கிளைச் சாலையில் திரும்பினாள். அங்கொன்றும் இங்கொன்றுமாக தள்ளுவண்டி கடைகள். அவை எல்லாமே பிளாஸ்டிக் தாள்கள் போட்டு மூடப்பட்டிருந்தது. ‘யாரும் உதவி செய்ய இருக்கிறார்களா?’ என்று அவள் கண்கள் தேடிக் கொண்டும், கால்கள் ஓடிக் கொண்டும் இருந்தன.

யாருமில்லை! அதற்குமேல் ஓட அவளுக்குத் திராணியும் இல்லை. சோர்வுடன் இருக்கவும் ஒளிந்து கொள்ள இடமிருக்காவென சுற்றிலும் பார்த்தாள். பராமரிப்பற்ற நிலையில் ஒரு பூங்கா இருந்தது.

உடனே அதன் இரும்புக் கம்பிகளைத் தாண்டி உள்ளே குதித்தாள். எங்கே ஒளிய என்று பார்த்தவளுக்கு, ஒரு இடமும் ஏற்றதாகவே தெரியவில்லை. வேறு வழியில்லாமல் ஓடிச் சென்று ஒரு மரத்தின் பின்னே மறைந்து நின்று… கொஞ்சம் இளைப்பாறினாள்.

சற்று நேரத்திற்குப் பின்… அந்த ஒருவனும்… அதே கிளைச்சாலையில்… வந்து நின்றான்.

குரூரமான அவன் கருவிழிகள் நாலாபக்கமும் அவளைத் தேடின.

‘கண்டுபிடிச்சிடுவானோ, கண்டுபிடிச்சிடுவானோ’ என பயத்தில் அவள் உதடு அசைத்து எச்சிலை முழுங்கி, இரு கைகளால் வாயை மூடினாள்.

அவன் கண்ணில் அவள் தென்படவில்லை. அந்நேரம், ‘அவளைத் தவற விட்டேனா?’ என்ற கடுங்கோபம் அவன்மீதே அவனுக்கு வந்தது. உடனே அதை வெளிக்காட்டும் வண்ணம் காலால் சாலையில் ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.

இல்லை அவளைத் தவறவேவிடமாட்டேன். அவள் ரத்தத்தில் குளிக்காமல் தன் கத்தி ஓயப் போவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டான். ஒவ்வொரு தள்ளுவண்டி கடையிலும் தேடினான். அவள் இல்லையென்று தெரியவும்… அவன் பார்வை பூங்காவிற்குத் தாவியது.

‘இங்கதான் இருப்பா’ என்று சரியாக கணித்து உள்ளே குதித்தான்!

அவள்… மரத்தின் பின்னே மறைந்து நின்றவள்… உடலை குறுக்கிக் கொண்டு, கண்களை மட்டும் சாய்த்து… அவனது செயல்களைப் பார்த்தாள். கிளைச் சாலை விளக்கொளியால் ஓரளவு வெளிச்சத்துடன் இருந்த பூங்காவின் சீசா பலகை… ஊஞ்சல்… சறுக்கு மரம் என்று ஒவ்வொரு இடத்திலும் தேடினான்.

இன்னும் பத்து மீட்டர் தூரம்தான்… அவன் நிற்கும் இடத்திற்கும், இவள் மறைந்து நிற்கும் இடத்திற்கும்! அவன் முகத்தில் தெரியும் கோபத்தைப் பார்த்தவளின் மனம், ‘ஓடிக் கிட்டே இருந்திருக்கணும். இப்ப மாட்டிக்கிவேன்’ என்று புலம்பி அழுதது.

நேரம் இரவு 11:10

அவள் கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். ஏனெனில் அவன் இப்போது இந்தக் கிளைச்சாலையில் இல்லை. இதற்கு இணையாக இருந்த சாலையில் ஏதோ சத்தம் கேட்டதால் பூங்காவின் இன்னொரு வழி மூலம் அங்கே சென்று விட்டான். அதனால்தான் அவளுக்கு இந்த ஆசுவாசம்!

எனவேதான் பூங்காவிலிருந்து வெளியே குதித்து கிளைச்சாலையில் நிற்கிறாள்.

அக்கணம் சைரன் ஒலியுடன் காவலர் வாகனம் வரும் சத்தம் கேட்டது. அவள் முகத்தில் அப்படியொரு நிம்மதி… தப்பிக்க வழி கிடைத்திருக்கே என்பதால்!

அந்த ஒலி எந்தப் பக்கமிருந்து வருகிறதென காதை தீட்டி வைத்துக் கொண்டு கேட்டாள். எங்கிருந்து வருகிறதென தெரிந்து கொண்டவள், சத்தம் பக்கத்தில் கேட்டதும் சட்டென்று மறைவிலிருந்து வெளியே வந்தாள்.

விரைவாக காவலர்களின் உதவியை நாடி விட வேண்டுமென்று அரக்க பரக்க ஓடினாள். இடையிடையே அவன் வருகிறானா? என்று பார்த்துக் கொண்டாள்.

அவன் வரவில்லை!

நேரம் இரவு 11:30

கிளைச் சாலையின் முனையில் வந்து எட்டிப் பார்த்தாள். இரவுநேர காவலர் வாகனம் நின்றது. தப்பியாயிற்று… அவனிடமிருந்து தப்பியாயிற்று! அவளது முகத்தில் ஒருசிறு மகிழ்ச்சி… பெரிய நிம்மதி தெரிந்தது. உயிர் பயம் குறைந்தது.

இரண்டரை மணி போராட்டம் முடிவிற்கு வந்தது!

காவலர்கள் எங்கே என்று பார்க்க ஒரு அடி முன்னே எடுத்து வைத்த போது, அவளுடைய தலைமுடியை பிடித்து தரதரவென்று பின்னோக்கி இழுத்து… அவளது முன்னங்கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு… அவன் நின்றான்.

அவள் மாட்டிக் கொண்டாள்!

தன் கத்தி ரத்தம் பார்க்க போகிறது என்ற கொடூர திருப்தி அவன் முகத்தில்!

அவள் முகத்தில் மீண்டும் மரண பயம்!!

.

.

.

.

நேரம் இரவு 10:00

சட்டென இருள் பரவி… ஒரு நிசப்தம் நிலவியது. அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் ஒரு தடுமாற்றம்!

நிகழ்கணத்தில் ஒரு குரல்!

“க்கும் இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு. திடிர் திடிர்னு கரென்ட எடுத்துறானுங்க. ஒரு படத்தை பார்க்க விட்றானுங்களா!?” என்று இருட்டில் ஓர் பாட்டி துழாவித் துழாவி தன் கைபேசியை எடுத்து ஒளிர செய்தார்.

காற்று வேண்டி கதவைத் திறந்து வெளியே வந்தார். இரவு வானில் அழகு நிலா ஒளிர்ந்து கொண்டிருந்தது. மணி பத்தரையைக் கடந்திருக்கும். ஊரடங்கிவிட்டது.

அவரது மூளைக்குள், ‘அந்தப் பொண்ணுக்கு என்னாயிருக்கும்? அவ கழுத்தில கத்தியால குத்தியிருப்பானோ? போலீஸ் அவளை காப்பாத்திருப்பாங்களோ?’ இல்லைனா அவளே தப்பிச்சி போயிருப்பாளோ?’ என இத்தனை விடை தெரியாத கேள்விகள் வந்தன.

எழுந்த கேள்விகளுக்கான விடையை யோசிக்காமல் அவரது மூளை வேலை செய்வது நிறுத்திவிட்டது.

கடைசியில், “ஆங்ங்… அந்த டிவி காரன்தான… நூறுநாள் டிவியிலயே படத்தை ஓட்டுவான். இன்னொருநாள் பார்த்துக்கலாம்” என்று ஒருவிதமாக தன்னைச் சமாதனப்படுத்திக் கொண்டு, அலைபேசியில் பாட்டு போட்டுவிட்டார்.

பபப பப்பாப பப்பாப பாபப

பபப பப்பாப பப்பாப பா….

பபப பப்பாப பப்பாப பாபப

பபப பப்பாப பப்பாப பா….

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…

ஜொலிக்கும்…

சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது…

கால்களில் தாளம் போட்டபடி இரவு நிலவு பாடலை ரசித்தார் அந்தப் பாட்டி!

********************** END ************************

அடுக்களை அமானுஷ்யம்

அழகான விடியல் ஆரம்பமானது!!

காற்றோட்டத்திற்காக சற்றே திறந்திருந்த சன்னல் வழியே வந்த சூரிய ஒளியினால் கண் கூசியபடியே பவித்ரா விழித்தாள். மெல்ல எழுந்தமர்ந்தவள் அருகில் உறங்கும் கணவன் செல்வத்தைப் பார்த்தாள். அவள் முகத்தில் சிறு புன்னகை அரும்பியது.

செல்வம், பவித்ரா இருவரது திருமணம் நடந்து இருபது நாட்கள் ஆகின்றது. இவர்களது கல்யாணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதுதான். திருமணக் கொண்டாட்டங்கள் முடிந்து மூன்று நாட்களுக்கு முன், இங்கே தனிக்குடித்தனம் வந்திருக்கிறார்கள்.

மொத்தமாக மூன்று தளங்கள் கொண்ட வீடு இது. முதல் தளத்தில் வீட்டின் உரிமையாளர் இருந்து கொண்டு, மற்ற இரண்டு தளங்களையும் வாடகைக்கு விட்டிருக்கிறார். இவர்கள் இருப்பது இரண்டாவது தளத்தில்.

மிகச்சிறிய ஒற்றை படுக்கையறை! பால்கனி வசதி அமைக்கப்படாத பழைய அறைகள்! அனைத்து அறையின் சுவர்களுமே அழுக்கேறிப் போய்தான் இருந்தன! சமையலறையில் ஒட்டப்பட்டிருந்த சுவர் வண்ணத்தாள்கள்கூட எண்ணெய் பிசுக்குடனே இருந்தது!

இருந்தாலும் இந்தப் பகுதியில் வீடு எடுத்தால்… பவியும் அவனும் வேலைக்குச் சென்று வர வசதி, பயண செலவும் குறைவு என்பதால் இங்கு வீடு பார்த்திருந்தான். முக்கியமாக இந்த வீட்டை வாடகைக்கு எடுக்க காரணம், வீட்டின் வாடகை அவனது நிதிநிலைக்கு ஏற்றதாக இருந்தது.

இங்கே வந்ததிலிருந்து மூன்று நாளாக வீட்டை ஒழுங்குபடுத்தி புது பாத்திரங்கள் மற்றும் தவணை முறையில் வாங்கிய சில பொருட்களை எடுத்து வைத்திருந்தனர். முக்கால்வாசி வேலை செல்வம்தான் செய்திருந்தான்.

அந்த அலுப்பில் உறங்குபவனைப் பார்த்தபடி பவித்ரா எழுந்தாள்.

எழுந்து, பல்துலக்கியபடி சன்னலருகே வந்து நின்றாள். அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் சில அடுக்குமாடிக் குடியிருப்புகள், எதிரே ஒரு விளையாட்டு மைதானம் தெரியும். வீட்டை ஒட்டிச் சென்ற சாலையில் ஆட்டோக்கள், பைக்குகள் போவதும் வருவதுமாய் இருந்தன.

சற்றுநேரம் அந்த இரைச்சலைப் பார்த்தபடியே பல் விலக்கி முடித்து சமையலறை சென்று குடத்திலிருந்து சொம்பில் தண்ணீர் மொண்டு குடிக்கையில்… அவள் மேலே பொத்தென்று ஏதோ ஒன்று வந்து விழுந்து… குதித்து குதித்து நின்றது!

சொம்பை கீழே போட்டு, ‘ஐயோ’ என்று அலறி கண் மூடினாள்!!

“ஏய் பவி நாதான்” என்று சிரித்தபடி அவளருகில் வந்து நின்றான் செல்வம்.

மெல்ல கண்திறந்து, “என்ன வெளாட்டு இது? என்னவோனு நினச்சி பயந்துக்கினே” என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொள்ள, “இதுல என்ன நீ பயந்துக்க இருக்கு?” என்றான் அவளை நெருங்கி நின்று.

அவள் இன்னும் முறைத்து நிற்கவும், “சரி… இனிமேட்டு இப்டி பண்ணல” என்று அவளைப் பின்னிருந்து கட்டிக்கொண்டு, “வர்றியா கிரவுண்டாண்ட கொஞ்ச நேரம் வாக் போயிட்டு வர்லாம்?” என்றான் ஆசையாக.

“போ… நா ஒன்னும் வர்ல” என்று முறுக்கிக் கொண்டாள்.

“இப்டி மூஞ்ச தூக்கி வெச்சிக்காத பவி” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “நா வேணா போய்ட்டு வர்வா?” என அவளை அணைப்பிலிருந்து விடுவித்து கேட்டான்.

அவன் முத்தம் தந்த முறுவலுடன், “ம் சரி, சீக்ரம் வந்திடு மாமா. இன்னிக்கு வேலைக்குப் போணும்” என்று ஞாபகப்படுத்தினாள்.

“ரெண்டே ரவுண்டுதான்… வந்துருவேன்” என்று கதவைத் திறந்து மாடி படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றான். கதவைப் பூட்டி வந்த பவித்ரா, சமையலறை சென்று கீழே விழுந்த சொம்பை எடுத்து வைத்தாள்.

பின், ‘மாமா எத தூக்கி எறிஞ்சது?’ என கீழே தேட, அது பச்சை நிறத்திலிருந்த ரப்பர் பல்லி என்று தெரியவும், அதை எடுத்து சமையல்கட்டு அலமாரியில் வைத்துவிட்டு, குளிர்சாதன பெட்டியைத் திறந்து வாங்கி வைத்திருந்த பொருட்களைப் பார்த்தாள்.

சற்று நேரத்திற்குப்பின் அழைப்புமணி அடிக்கப்பட, மெட்டல் சோஃபாவில் அமர்த்திருந்த பவித்ரா வேகமாக சென்று கதவைத் திறந்தாள். 

செல்வம்தான்!

அவளைப் பார்த்தபடி உள்ளே வந்தவன், “ஏ, நாதான ஓடிட்டு வர்றேன். உனக்கு ஏன் இப்டி வேர்த்திருக்கு?” என்று சிரிக்க, பதிலளிக்காமல் மீண்டும் மெட்டல் சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டாள்.

பதற்றமாகவும், பயத்துடனும் இருந்த மனைவியை, ‘ஏன் இப்படி?’ என புரியாமல் பார்த்து, “என்னத்துக்கு இப்டி இருக்க?” என்று அவளருகில் வந்தமர்ந்தவன், அவள் வியர்வையைத் துடைத்து விட்டான்.

“நா இன்னுமே சமைக்கல மாமா” என்றாள் பயத்துடன்.

“ஐயே அவ்ளோதான?” என்று எழுந்து போக பார்த்தான்.

“என்னது அவ்ளோதான? ஏன் பண்ணலனு கேக்க மாட்டியா?”

“ஏய் வேலைக்கு போ வேணாமா? உட்காந்து கத பேசிக்கினு இருக்க சொல்றீயா?” என்று குரல் உயர்த்தியதுமே, அவளது முகம் மாறி இன்னும் வியர்க்க, “சரி, கேக்றேன் சொல்லு” என்று அமர்ந்தான்.

“நீ வெள்ள போனதுமே கதவ லாக் போட்டுட்டு… சமைக்க போனேன். ஆனா மாமா இந்த கிட்சனாண்ட எல்லாம் ஒரு மாறி இருக்து” என்றபோது பயத்தில் அவள் உதடுகள் வறண்டு போனது.

“ஒரு மாறினா என்னது? எதுனாலும் டீடயிலா சொல்லு பவி” என்று கேட்டதும், சற்று நேரம் முன் சமையலறையில் நடந்ததைக் கணவனுக்குக் கூற ஆரம்பித்தாள்.

கடிகாரத்தின் முட்கள் பின்னோக்கிச் சுழன்றன

பொருட்களைப் பார்த்து முடித்தவள், ‘முதலில் காஃபி குடிக்கலாம்’ என்று நினைத்து, பால் பாக்கெட்டை எடுத்தாள். அதை வெட்டி பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றினாள்.

பாக்கெட்டில் இருந்த பால்… மலை மேலிருந்து பலத்த இரைச்சலுடன் நுரை பொங்கி வரும் அருவி கீழே விழும் சத்தத்துடன் பாத்திரத்தில் விழுந்தது. ‘என்ன இது?’ என்று பயந்தவளின் செவிப்பறை சவ்வுகளைக் கிழித்துவிடுவது போல் சத்தம் அதிகரித்து கொண்டே போனது!

‘எங்கிருந்து இந்தச் சத்தம் வருகிறது?’ என்று பவித்ரா பார்க்க நினைக்க… அதற்குள் அதிக இரைச்சலால் அவள் காதில் சுளீர் என்று ஓர் வலி!

அவ்வளவுதான்!!

பயத்திலும், வலியிலும் பால் பாக்கெட்டை சமையல் மேடையில் போட்டுவிட்டாள். அடுத்த நொடி மொத்தச் சத்தமும் அடங்கியிருந்தது. காதுகளைத் தேய்த்துவிட்டபடி, ‘என்ன இது? ஏன் இப்படி நடக்கிறது?’ என்று தெரியாமல் பதற்றத்துடன் நின்றாள்.

நடந்ததை நினைக்கையில் கைகள் நடுங்கியது. மூச்சளவுகள் சமநிலையில் இல்லாமல், ஏற்ற இறக்கமாக மாறியது. குப்பென்று நெற்றியெங்கும் வியர்வை அரும்பியது.

சற்று நேரத்திற்கு சிலைபோல் சமைந்து நின்றவள், மெது மெதுவாக ஆசுவாசப்படுத்திக் கொண்டே வந்து, ‘எங்கிருந்து இந்தச் சத்தம் வந்திருக்கும்?’ என்று சமையலறையைச் சுற்றிப் பார்த்தாள்.

சின்ன சமையலறை! அதில் சிலபல பாத்திரங்கள், கிரைன்டர், குளிர்சாதனப்பெட்டி, சிறு சன்னல்… அவ்வளவே!

‘சன்னல் வழி இந்தச் சத்தம் வந்திருக்குமோ?’ என்ற சந்தேகத்தில் மெல்ல எக்கிக்கொண்டு பார்த்தாள். மக்கள் சாதாரணமாக அவர்களின் வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.

‘அப்ப எனக்கு மட்டும்தான் இந்தச் சத்தம் கேட்டிருக்கா’ என பவி குழம்பி நின்ற நேரத்தில், எதையும் அவள் எதிர்பார்க்காத நிலையில்… சட்டென முகத்திற்கு முன் ஆவி பறக்க காஃபி கோப்பை ஒன்று நீட்டப்பட்டது.

உடனடியாக இருகைகளாலும் வாயைமூடி பின்னே நகர்ந்து போக, அந்தப் பக்கம் இருந்த சமையல் மேடையில் இடித்துக் கொண்டு நின்றாள்!

அச்சத்தில் இருந்தவளுக்கு, வாயைத் திறந்து ‘உதவி’ என்று சத்தமிடக்கூட முடியவில்லை!! சமையலறையிலிருந்து தப்பித்து வெளியே செல்லவும் யோசனை வரவில்லை!!

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க… விழிகளை விரித்து வைத்து, எந்தப் பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் காஃபி கோப்பையைப் பார்த்தபடி நின்றாள்.

‘எங்கிருந்து வந்திருக்கும்?’ என்ற கேள்வி வரவும் சமையலறையில் ஒட்டப்பட்டிருந்த சுவர் வண்ணத்தாள்களைப் பார்த்தாள். எண்ணெய் பிசுக்கேறி போயிருந்த தாளில் கத்திகள், முள்கரண்டிகள், காஃபி கோப்பைகள் அச்சிடப்பட்டிருந்தன!

அச்சிட்டிருந்த கோப்பையிலிருந்த காஃபியில் ஆவி பறந்து கொண்டிருந்தது!

அந்த காஃபி கோப்பை வடிவத்தையும் அந்தரத்தில் தொங்கும் கோப்பை வடிவத்தையும் பார்த்தாள். இரண்டும் ஒன்றுதான் என்று தெரிந்த அந்த நொடியில் காஃபி கோப்பை அவளை நோக்கி வேகமாக வந்தது.

கூடவே பச்சை நிறத்தில் பெரிய பல்லி ஒன்று சமையல் மேடையில் ஊர்ந்து செல்வதைப் பார்த்தாள்! சட்டென சமையல்கட்டு அலமாரியில் வைத்த ரப்பர் பல்லியைத் தேடினாள்!

அது அங்கில்லை!!

அவ்வளவுதான்!!!

அதன்பின் அங்கே நிற்கவில்லை. கால்கள் இரண்டும் நடுங்க வெளியே ஓடி வந்து மெட்டல் சோஃபாவில் அமர்ந்துவிட்டாள்!

கடிகாரத்தில் இந்த நிமிடம்… 

நடந்ததை பவித்ரா பதற்றத்துடன் சொல்லி முடிக்கவும், “என்ன சொல்ற?” என்று அதிர்ந்து கேட்டு சமையலறையைப் பார்த்தான். அங்கே அமைதியாக இருந்தது. அவள் சொன்னது போல களேபரங்கள் நடந்த சுவடுகள் சற்றும் இல்லை. பால் பாக்கெட் மட்டும் சமையல் மேடையில் கிடந்தது.

அது அவனுக்கு ஒரு பயத்தைத் தந்தது!

அப்படியே மெல்ல திரும்பி அவளைப் பார்க்க, “பயமாருக்குது மாமா” என்றவள் உடல் கிடுகிடுவென நடுங்கியது. அவளை அரவணைத்துக் கொண்டான்.

அவன் தோளில் சாய்ந்தபடி, “ஏன் இப்டி நடந்திச்சு?” என்று பயத்தில் திரும்பத் திரும்பப் புலம்பிக் கொண்டு சற்று நேரம் இருந்தவள், திடீரென்று, “நீ எம்மேல தூக்கி போட்டியே ரப்பர் பல்லி… அது எப்டி மாமா வந்திச்சி?” என்று கேட்டாள்.

“தெர்ல, அங்க கெடந்திச்சி” என சன்னல் பக்கமிருந்த மூலையைக் காட்ட, ‘அது எப்படி அங்கே வந்திருக்கும்?’ என்ற ஓர் கேள்வி அப்போது செல்வத்திற்கு வந்திருந்தது.

இருவரும் சமையலறையை யோசனையுடனும், திகிலுடனும் பார்த்திருந்தனர்!

சட்டென உடல் தூக்கிப்போடும்படி நடுங்க, “மாமா… கி… கிட்சன் சொவத்தல ஒட்டிர்க்க பேப்பெர்லாம் யா… யார்ரு ஒட்னது?” என்று பதற்றமாக கேட்டாள்.

“இதுக்கு மின்ன ரென்ட்டுக்கு இருந்த ஆளுங்க ஒட்னதுனு ஓனர் சொன்னாரு” என்று யோசித்தபடியே சொன்னான்.

சில நொடிகள் அமைதியாக இருந்தவள், “அவங்கள காலி பண்ண சொல்லிக்கினுதான நமக்கு ரென்ட்டுக்கு குடுத்தாருனு நீ சொன்ன… அவங்கள என்னத்துக்கு காலி பண்ண சொன்னாராம்?” என்றாள் சந்தேகமாக.

“ஏய்… சும்மா இப்டி கண்டதயும் கனெக்ட் பண்ணி என்னய டென்சன் பண்ணாத” என்றான் எரிச்சலுடன்! ஆனால் அந்தக் கேள்வி அவனுள்ளும் இருந்ததால் அதன்பின் பேசவில்லை!!

அமைதியாக இருந்தவனிடம், “சாரி மாமா… நா உன்னய டென்சன் பண்ண கேட்கல. பயத்லதான்…” என்று சொல்ல, அவன் யோசனையில் இருந்தான்.

“என்னா யோசிக்ற?” என்று கேட்கவும், அவன் நேரத்தைப் பார்த்துவிட்டு, “வேலைக்கு போணும். மொதல கெளம்பலாம் பவி. வேல முட்ஞ்சி வந்துக்கின்னு இத என்னென்னு பாக்கலாம்” என்று பொறுமையாக சொன்னான்.

அவள் அப்படியே இருந்தாள்!

“கல்யாணம், வீடு கிளீனிங்னு இத்தன நாளா லீவ் சொல்லிக்கினு இருந்தாச்சு. இனியும் சொல்ல முடியுமா? சம்பளம் கட்டாவும். எந்திரி” என்றாலும், ’இப்படி ஏன் நடந்திருக்கு?’ என்ற யோசனையோடு இருந்தான்.

“ம்ம்… ஆனா மாமா டிப்பன்?!” என்றாள்.

“போசொல்ல பாத்துக்கலாம். கெளம்பு”

யோசனையுடன் இருந்தவள், “கிச்சனாண்ட நீயும் வந்து நிக்றியா மாமா? ஒரு வாட்டி ட்ரை பண்ணிப் பாப்போம்” என்று ஒருவித பயத்துடனே கேட்டாள்.

“நீ சொல்றது கணக்கா பண்ணலாம் பவி. இப்ப வேணாம். சாய்ங்காலம் பாக்கலாம்” என தற்சமயமாக பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து எழுந்து கொண்டான்.

அவளும், “ம்ம்ம்” என்று எழுந்து கிளம்ப போனாள்.

********************

அடுத்தநாள்!

அமைதியாக இருந்த அதிகாலை பொழுதில் அலைபேசியின் விழிப்பு மணியோசை கேட்டு செல்வம் விழித்தான். நேற்று வேலை முடிந்து தாமதமாக வந்து… நடந்ததைப் பற்றியே நிறைய நேரம் பயந்து பயந்து பேசிக் கொண்டிருந்ததால் பவித்ரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

அவள் உறக்கத்தைக் கலைக்காமல் எழுந்தவன், சன்னலருகே சென்று நின்றான்.

முந்தைய நாள் பவித்ரா பார்த்த அதே காட்சிகள்தான்! வாகனங்கள் போகும் சாலை, இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யும் மைதானம்… தூரத்தில் குடியிருப்புகள்! அந்தப் பெரிய பரப்புகளில் பரவியிருந்த இரைச்சல்… வீட்டிற்குள் வியாபித்திருந்த அமைதி, இரண்டையும் கேட்டான்.

வீட்டுச் சமையலறையின் வினோதத்தை நினைத்துப் பார்த்தவுடனே செல்வத்திற்கு முதுகெலும்பு சில்லிட்டது!

தெளிவில்லாத எண்ணங்களுடனே இருந்தவனுக்கு மனம் குழம்பி… தலை வலித்தது. சூடாக காஃபி குடிக்க நினைத்தான். மனதினில் ஒருவித பயத்துடன்… பதற்றத்துடன் சமையலறை சென்று பால் பாக்கெட் இருக்கிறதா என்று பார்த்தான்.

இன்று இல்லை!

பவி எழுந்து கொள்ளும் முன் வாங்கி வந்துவிடலாம் என்று நினைத்து கதவைத் திறந்து கிளம்பியவன், வெளிப்புறம் தாழிட்டு மாடிப் படிகளில் இறங்கினான்.

அவன் திரும்பி வந்து கதவைத் திறந்தபோது சோஃபாவில் உட்கார்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் பவி. அவசரமாக வந்தவன், “ஏய்… என்னத்துக்கு இப்ப அழுவுற?” என்று கேட்டு, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

அழுகையின் ஊடே, “நீ எங்க போயிருந்த?” என்றாள் கோபமாக.

“நேத்து பால் பாக்கெட் வாங்கி வெக்கல. அதான் போய் வாங்கின்னு வர்றேன்”

“அதுக்கு இவ்ளோ நேரமா உனக்கு?” என்று சத்தமிட்டாள்.

“ஓனர்ட்ட பேசிக்கினு இருந்தேன்” என்றவன், “இதுக்கு மின்ன இங்க ரென்ட்டுக்கு இருந்த ஆளுங்களால ஏதோ பெர்ச்சனயாம்… அதான் காலி பண்ண சொன்னாராம்” என்றும் சொன்னான்.

“என்னா பெர்ச்சன?”

“அதெதுக்கு நமக்கு? நீ என்னத்துக்கு அழுவுறனு சொல்லு” என்றவன், “பவி… எதுனாச்சும் இன்னிக்கும் நடந்ததா என்ன?” என்று அதிர்ந்து கேட்க, “ம்ம்” என அழுதபடி தலையாட்டி, சமையலறையில் தனக்கு நேர்ந்ததைக் கூற ஆரம்பித்தாள்.

கடிகாரத்தின் முட்கள் பின்னோக்கிச் சுழன்றன

செல்வம் போனதுமே பவித்ரா வைத்திருந்த விழிப்புமணி அடிக்க விழித்துவிட்டாள். மெதுவாக கட்டிலிலிருந்து எழுந்தவள் செல்வத்தைத் தேட, வீட்டில் நிலவிய அமைதி அவன் இங்கே இல்லை என்று சொல்லியது.

எளிதில் கணிக்க முடிந்த வெளியில் கேட்ட சத்தம், இரைச்சலைவிட எப்போது என்ன நடக்குமென்று கணிக்க முடியாத வீட்டிற்குள்ளே இருந்த அமைதி அவளுக்கு ஒருவித பயத்தைக் கொடுத்தது!

‘சமைக்க ஆரம்பிக்கவா? இல்லை செல்வம் வரும்வரை காத்திருக்கவா? என்று மனம் படபடப்புடன் பட்டிமன்றமே நடத்தியது.

‘இன்று என்னென்ன நடக்குமோ?’ என்ற பயம் இருந்தும் சமையலுக்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்து வைப்போமே என்று சமயலறைக்குள் சென்றாள்.

குளிர்சாதனப் பெட்டியிலிருந்து சமையலுக்கான காய்கறிகளை எடுத்து திரும்பினதுமே, வாணலிகள் அனைத்தும் சமையல் மேடைமீது ஒன்றன் பின் ஒன்றாக வந்து அமர்ந்தன.

மூச்சே நின்றுவிடும் போல பக்கென்று இருந்தது!

ஆனாலும் பயத்தை, பதற்றத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ‘அதுவா? நானா?’ என்று பார்த்துவிடும் ஆவேசத்துடன்… ஒரு வாணலியை எடுத்து அடுப்பின்மீது வைத்தாள்.

‘அடுத்து, எண்ணெய் என்னவாக போகிறதோ?’ என்ற பயத்துடன் பாதிகண்கள் மூடியபடி, கைகள் நடுங்க எண்ணெய் பாட்டிலை எடுத்து வாணலியில் ஊற்றினாள்.

நல்லவேளை எண்ணெய் எதுவாகவும் மாறவில்லை!                     

எண்ணெய் சூடாகும் நேரத்தில் முட்டைகோசை சிறுசிறு துண்டுகளாக வெட்டினாள். அது சூடானதும் அஞ்சறைப் பெட்டியிலிருந்து தாழிப்பிற்கு கடுகை எடுக்க போகையில், கடுகு சிறு கருமணிகளாக மாறித் தரையில் உருண்டோடின.

உடனே பயப்பந்து ஒன்று அவளது தொண்டைக் குழியில் உருண்டது! இதயம் தடதடத்தது! கண்கள் இரண்டும் தத்தளித்துக் கொண்டு வந்தது!

உள்ளுக்குள்தான் இப்படி! அவள் உடல் உறைந்து நின்றது!!

தாறுமாறாய் துடிக்கும் அவள் இதயத்தைத் தட்டிக் கொடுத்த போது, அஞ்சறை பெட்டியில் இருந்த பொருட்களும், எடுத்து வைத்த பொருட்களும் உருமாறிட தொடங்கின. பீதியில் இருவிழியிலிருந்தும் நீர் வடிய அதைப் பார்த்தபடி நின்றாள்.

நரம்பு போல் தேங்காய் நாரைத் திரித்துவிட்டு, அதில் பெரிய கருமணியாக மாறியிருந்த மிளகுகள், குமிழ்மணிகளாக மாறிய மல்லிவிதைகள், அரை பாசி மணியாக மாறிய வெந்தயங்களைக் கோர்த்து… மணிமாலையாக மாற்றி… அவள் முன் நீட்டப்பட்டது!

உள்ளுக்குள் உருவான பேரச்சம்… அவளைப் பிடித்து உலுக்கியது!!

‘யார் கோர்த்தார்கள்? யார் கொடுக்கிறார்கள்? ஏன் இப்படி நடக்கிறது?’ என்று எதுவுமே தெரியாமல் பவி ஏங்கி ஏங்கி அழுதாள்!

நீட்டப்பட்ட மணிமாலையை… அவள் கழுத்தில் யாரோ அதை மாட்டிவிட முயற்சிக்க… அதை முறியடிக்க அவளும் போராட… கடைசியில் அதைப் பிய்த்து எறிந்தாள்!!

அந்த நேரத்தில்… சமையல் மேடையில் ஒருபக்கம் தாயக்கட்டம் வரையப்பட்டு எடுத்து வைத்திருந்த வெள்ளைப்பூண்டுகள் எல்லாம் வெண்சோவிகளாக மாறி, உருட்டி உருட்டி போடப்பட்டுக் கொண்டிருந்தது!

‘யார் வரைந்தார்கள்? யார் விளையாடுகிறார்கள்?’ என புரியாத புதிரில் நின்றவளுக்கு, அந்தச் சமையலறையில் இருக்கின்ற ஏதோ ஒன்று அவளை இப்படிச் சங்கடப்படுத்தி, சந்தோஷம் அடைவது போலிருந்தது!!

சோவிகளைப் பார்த்திருந்தவள் கண்முன்… இஞ்சி மனித இதயமாக மாறி துடித்த நொடி, ‘யார் இதயம் இது? இன்னும் என்ன அபாயம் காத்திருக்கோ?!’ என்ற அச்சத்தில் அலறி அடித்து வெளியே வந்து மெட்டல் சோஃபாவில் அமர்ந்து ஓவென அழ ஆரம்பித்தாள்.

கடிகாரத்தில் இந்த நிமிடம்… 

செல்வத்திடம் சொன்ன போதும்… சொல்லி முடித்த பின்னும் பவித்ரா அழுது கொண்டே இருந்தாள். “அழுவாத பவி” என்றவன் எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து அவளைக் குடிக்க வைத்தான்.

‘ஏன் இப்படி நடக்கிறது? இந்த வீட்டு சமையலறையில் என்ன இருக்கிறது?’ என செல்வம் சமையலறையைப் பார்க்க, பவி எடுத்து வைத்திருந்த காய்கறிகள் சமையல் மேடையில் இருந்தன.

வேறு எதுவும் நடந்ததற்கு அறிகுறியே இல்லை!

ஆனாலும் அவனுக்குள் ஒரு பயம், பீதி வந்திருந்தது!!

அழுது அழுது முகம் வீங்கியிருந்த பவித்ராவைப் பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.

சற்று நேரத்திற்குப் பின், “ம்ம் இரு பவி” என்று அவளை விட்டுவிட்டு உள்ளே சென்று ஒரு பத்து நிமிடங்கள் கழித்து வந்தான்.

வந்தவனிடம், “யார்ட்ட பேசிக்கினு இருந்த மாமா?” என்று குரல் நடுங்க பவி கேட்க, “இங்க நடக்கிறத எங்கம்மாட்ட சொல்லிட்டேன்” என்றான்.

“என்னத்துக்கு இத்த போய் சொன்ன… பயந்துப்பாங்கள?” என்றாள் கோபமாக.

“பெரியவங்களுக்கு தெர்ய வேணாமா?”

“அத்த என்ன சொன்னாங்க?”

“பயந்தாங்க. பக்கத்து வீட்டாண்ட இந்த வீடு பத்தி கேக்க சொன்னாங்க”

“பேசாம அத்த கூட போய் இருந்துக்கலாமா?”

“என்ன பேசற… ரெண்டு பேரும் வேலைக்கு போக இதான ஈஸி”

“அப்டினா… அத்தய இங்க கூட்டி வர்லாமா?”

“அங்கனா அம்மாவ கவனிச்சிக்க அண்ணி இர்க்காங்க. பக்கத்தில அத்தினி சொந்தமும் இர்க்குது. அதலாம் வுட்டு எங்கம்மா வரமாட்டாங்க. அதோட அம்மாக்கு படிக்கட்லாம் ஏறிக்க முடியாது”

“போ… போ நீ இப்டியே பேசிக்கினு இரு” என்று கோபப்பட்டு, “இந்த கிச்சனாண்ட ஏதோ இருக்து. அதுக்குள்ளாற போவே பயமாருக்குது” என தேம்பி தேம்பி அழுதாள்.

அவள் பேச்சில் செல்வத்திற்கு அப்படி ஒரு பயம் வந்திருந்தது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை! உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டான். சொன்னால் அவள் இன்னுமே பயந்து விடுவாளென்று!!

அவளது கண்ணீரைத் துடைத்து, “நா சால்வ் பண்ண பாக்றேன். நீ வுட்டுரு இத” என்றவன், “வேலைக்குப் போ வேணாமா? கெளம்பு” என்ற பின்னுமே அப்படியே அமர்ந்திருந்தவளை அதட்டியும்… அன்பாய் சொல்லியும் கிளம்பச் செய்தான்.

ஆனால் தன்னிடம் அமைதியாய் இருக்கும் அடுக்களை, அவளிடம் மட்டும் ஆக்ரோஷம் காட்டுகிறது… ஏன்? என்ற கேள்வியில் மனைவிக்கு எதுவும் ஆகிடுமோ என்ற பயம், பீதி அவனுக்குள் வந்திருந்தது!!

************************

ஒரு வாரம் கழித்து!

நேற்று சாயங்காலம்தான் திரும்ப இந்த வீட்டிற்கு பவித்ரா வந்திருந்தாள். அதுவரை அவள் அம்மா வீட்டில் அவளை இருக்க சொல்லியிருந்தான் செல்வம்.

‘சமையலறையில் ஏதோ இருக்கு’ என்று சொல்லி பவி பயந்ததாலும், செல்வம் நடந்ததைச் சொன்னதாலும், அவனது அம்மா கொடுத்த யோசனையின் பேரில், பேய் ஓட்டுபவர் வந்து ஏதேதோ செய்துவிட்டுப் போனார்.

அவர், ‘இனி பயமில்லை. சரியாகிடும்’ என சொல்லிவிட்டுப் போயிருக்க, செல்வம் சென்று பவியை நேற்று மாலையே இங்கே அழைத்து வந்திருந்தான்.

காலை நேரம் ஆறு மணி!

செல்வம் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில், ‘காப்பாத்துங்க’ என்று ஒரு அலறல் சத்தம்!

பதறி எழுந்து, ‘பவி இருக்கிறாளா?’ என்று அருகில் பார்க்க, அவள் இல்லை. அரக்க பறக்க வரவேற்பறை வர, மூச்சுவாங்க பவித்ரா நின்று கொண்டிருந்தாள்.

பதறியடித்து அவளருகே வந்து, “பவி என்னத்துக்கு இப்டி நிக்ற?” என்றான்.

“யாரோ என்னய கொல்ல பாக்கிறாங்க?”

உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், “உளறாத பவி!” என்றவன், “நீ உட்காரு மொதல” என்று அவளை அமரவைத்து தண்ணீர் எடுத்து வந்தான். அவள் குடித்ததும், “என்ன நட்ந்துச்சுனு சொல்லு?” என்று கேட்க, பேசமுடியாமல் அழுதாள்.

சற்றுநேரம் இருந்துவிட்டு, “என்னான்னு சொல்லு?” என்றான் மீண்டும்.

“அங்க ஒட்டிருக்க பேப்பெர்ல இருக்க கத்தி, கரண்டிலாம் பறந்து வர்து மாமா… வந்து என் கண்ணு பக்கத்ல… நெத்தி முன்ன நின்னுகின்னு குத்த பாக்குது. இதுல அந்த பல்லி வேற மேல மேல வந்து வுழுது… எப்டி பயந்து ஓடிக்கின்னு கத்திக்கின்னு இருந்தேன் தெர்யுமா? உனக்கு சவுண்ட் கேக்கலயா?

கடசில பெரிய கத்தி… இங்க” என தொண்டைக்குழியைக் காட்டி, “இங்க வந்து நின்னதும், வெள்ள ஓடி வந்துக்கினேன்” என்று கண்ணீரில் கரைந்தாள்.

அவன் அமைதியாக இருந்தான்!

“இந்த பெர்ச்சன முடியவே செய்யாதா” என அவன் மேல் சாய்ந்து அழுதவள், “என்ன பேச மாட்டிக்ற மாமா… எதுனா பேசு. எனக்கு பயமாருக்கிது” என்று படபடத்தாள்.

அப்போதும் அமைதியாகவே இருந்து கொண்டான்!!

********************

அன்று மாலை ஒரு நடைகூடத்தில் போடப்பட்டிருந்த நாற்காலி வரிசையில் பவியும், செல்வமும் அமர்ந்திருந்தனர்.

“இங்க என்னத்துக்கு வந்துருக்கோம்?” என்று பவி கேட்டாள்.

“கம்முன்னு இரு” என்றான்.

“அப்பருந்து இத்தே சொல்லிக்கினு இருக்றயே. இங்க எதுக்கு கூட்டி வந்தன்னு ஒழுங்கா சொல்லு” என்றபோது, ‘பவித்ரா’ என்று ஒருவர் வந்து அழைத்துவிட்டுப் போனார்.

“வா” என்று அவளை அழைத்து ஒரு அறைக்குள் போக, அங்கே மனநல மருத்துவர் என்ற பெயர் பலகை முன் இருந்தவர், “உட்காருங்க” என்றதும், அமர்ந்தனர்.

அவர், “என்ன பிரச்சனை?” என்று கேட்டதும், கடகடவென நடந்ததைச் சொன்னான். பவி குறுக்கிடாமல் அமைதியாக இருந்தாள்.

எல்லாம் கேட்டுவிட்டு, “நீங்க வெளிய இருங்க” என்றார் மருத்துவர் செல்வத்திடம்! அவன் போனதும், “சொல்லுங்க” என்றார் பவியைப் பார்த்து.

வெகு நேரத்திற்குப் பின் வெளியே வந்த பவித்ரா, “உன்ன கூப்பிடறாரு. போ மாமா” என்று கரகரத்த குரலில் சொல்லி அமர்ந்து கொள்ள, அவன் உள்ளே சென்றான்.

“டாக்டர் அவளுக்கு என்ன பெர்ச்சன?”

“இதுக்கு முன்னாடி இப்படி ப்ராப்ளம் வந்திருக்கா?”

“கல்யாணம் முட்ஞ்சி கொஞ்ச நாளுதான் ஆவுது. எங்கண்ண வீட்லருந்தப்ப இப்டி இல்ல. தனியா வந்தப்புறம் இப்டிதான் இருக்கா”

“நீங்க பார்க்கிறப்போ இப்படி நடந்திருக்கா?”

“நா பாக்கசொல்ல இல்ல. இப்டி நடக்குதுனு சொல்வா. அவ்ளோதான்!”

மருத்துவரிடம் ஓர் அமைதி!

“எதுனா பெர்ச்சனயா டாக்டர்? எதுனாலும் சொல்லுங்க”

“உங்க வொய்ஃப்க்கு இருக்கிறது மெஜைரோகோ போஃபியா [Mageirocophobia]”

“ம்ங்… அப்டினா?” என்றான் புரியாமல்.

“ம் அதாவது ஃபியர் ஆஃப் குக்கிங். இந்த போபியா இருக்கிறவங்க சமைக்கிறதுக்கே பயப்படுவாங்க” என்றார் சுருக்கமாக.

“ஏன் அப்டி டாக்டர்?”

“கத்தி மாதிரி கூர்மையான பொருள் கையை வெட்டிடுமோன்னு… ஸ்டவ், ஓவென் வெடிச்சிடுமோன்னு… சமைக்கிற சில செய்முறை மறந்திடும்னோ, இல்ல அவங்க பாலோவ் பண்ண கஷ்டமா இருந்திடுமோன்னு… சமைச்ச உணவோட ருசி ரொம்ப பெர்பஃக்டா எந்தவொரு தப்பும் இல்லாம வரணும்னு எதிர்பார்கிறதாலயோ… இந்த போபியா வரும்” என்றார் விளக்கமாக.

சிறு பயத்துடன், “இதுல எதுனால பவித்ராக்கு… இப்டி?” என்று கேட்டான்.

“உங்க வொஃய்ப்வோட பெரியம்மா பொண்ணு ஒருத்தங்க ஸ்டவ் வெடிச்சி இறந்து போயிருக்காங்க. அதோட தாக்கம்தான் இது. கல்யாணத்துக்கு முன்னாடி சமையல் எல்லாம் இவங்களோட அம்மா பார்த்துப்பாங்களாம்.

அப்படியே செய்ய வேண்டிய சிச்சுவேஷன் வந்தாலும்… இவங்க ஒதுங்கிகிட்டு இவங்க தங்கச்சிய பண்ண சொல்லிடுவாங்கலாம். அதனால அவங்க வீட்ல யாருக்குமே இது தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.

கல்யாணம் முடிஞ்சி உங்க வீட்டுக்கு வந்தப்புறமா… சமைக்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்கு. ஆனா உங்க அம்மாவோ, அண்ணியோ அவங்க கூட இருந்திருக்காங்க. அதனால சமாளிக்க முடிஞ்சிருக்கு. ஆனா உள்ளுக்குள்ள பயம் அதிகரிச்சிக்கிட்டே வந்திருக்கு.

நீங்க தனியா வந்தப்புறம் வீடு கிளீன் பண்ற வேல இருக்குன்னு மூணு நாள் வெளிய சாப்பிட்டதால அவங்களுக்கு ப்ராப்ளம் முதல இல்ல. அதுக்கப்புறம் அவங்க மட்டும் தனியா நின்னு சமைக்கணும் அப்படிங்கிறப்ப… அவங்களால சமாளிக்க முடியலை. அதோட வெளிப்பாடுதான் இதெல்லாம்”

“அப்ப நடந்ததா அவ சொன்னதெலாம்…?”

“கிச்சன்குள்ள காலடி எடுத்து வைக்கவே ரொம்ப பயப்படுவாங்க… அப்போ அதை அவாய்ட் பண்றதுக்கு என்னெல்லாம் செய்யணுமோ அதைச் செய்வாங்க. அவங்க சமைக்காம இருக்கிறதுக்கு கண்டுபிடிச்ச வழிதான்… இப்படி நடந்ததா சொல்றது. ஒருவிதமா சமைக்கிறதலருந்து எஸ்கேப் ஆகிறது”

“இதலாம் அவ இப்ப உங்களாண்ட சொன்னாளா டாக்டர்?”

“ம்ம்ம்”

“என்னாண்ட ஏன் சொல்லல?”

“இப்பத்தான் மேரேஜ் முடிஞ்சதுனு சொன்னீங்க. எப்படிச் சொல்வாங்க? நீங்க என்ன நினைப்பீங்களோனு இன்னொரு பயமும் இருந்திருக்கு. உங்ககிட்ட உண்மையைச் சொல்லாம இருக்கிறதும் பயம்… பொய் சொல்லிக்கிட்டு இருக்கோமேனும் பயம்.

அப்புறம் இதுமாதிரி பயந்தா, அவங்களுக்கு ரொம்பவே வியர்க்கும், உதடு வறண்டு போகும், கோபம் வரும்” என்று இதன் அறிகுறிகளைச் சொன்னார்.

அவன் அமைதியாக இருக்க, “பயப்படாதீங்க. தெரபிஸ் கொடுத்து சரி பண்ணலாம். கொஞ்சம் கொஞ்சமா சமையலுக்கு பழக்கணும். அவங்க கிச்சன்ல இருக்கிறப்போ யாராவது கூட நிக்கணும்” என்றவர், பவியை அழைத்தார்.

சில அறிவுரைகள், வழிமுறைகளை விளக்கமாக சொல்லி, அவர்களை அனுப்பினார்.

**********************

வீடு வரும்வரை செல்வம் எதுவுமே அவளிடம் பேசவில்லை!

அவளோ, ‘எப்போ பேசுவான்’ என்று அவன் முகத்தைப் பார்த்தே வந்திருந்தாள்!!

வீட்டுக்கு வந்ததிலிருந்தே பவித்ரா ஒரே அழுகைதான். வார்த்தைக்கு வார்த்தைக்கு ‘சாரி மாமா, சாரி மாமா’ என மருத்துவரிடம் சொன்னதை அப்படியே செல்வத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அப்போதும் அவன் எதுவும் பேசவில்லை!

அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு, “என்னா நீ சைலன்ட்டா இருக்ற? என்னய எங்க வீட்டுக்கு அனுப்பிடுவியா மாமா? இனிமேட்டு இங்க இருக்க வுடமாட்டியா ஆங்?” என்று அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.

அதற்கும் அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை!

அவனது நெஞ்சில் முகத்தை அழுத்தி, “தெர்ஞ்சிருச்சி… நீ என்னய வேணானு சொல்லப் போற. உன்னய எனக்கு ரொம்ப பிடிக்கும். உன்னால வேணா நா இல்லாம இருந்துக்க முடியும். நீ இல்லாம என்னால முடியாது” என்றாள்.

உடனே அவளை விலக்கிவிட்டு, “உனக்கே இது அநியாயமா தெர்ல?” என்றான்.

“என்னது?” என்றாள் கண்ணீரைத் துடைத்தபடி.

“நாலு நாள்கூட உன்ன வுட்டு இருந்துக்க முடியாம நேத்து உங்க வீட்லருந்து உன்னய கூப்ட வந்தா, இன்னும் நாலு நா இருந்துக்கின்னு வரவான்னு கேட்டவ… பேசறத பாரு! நான் இவள வுட்டு இருந்துக்குவேனாம். இவ என்னய வுட்டு இருந்துக்க முடியாதாம்”

முப்பது நாள்தான் சேர்ந்து வாழ இருந்திருக்கிறார்கள். ஆனாலும் அவன் பேச்சில் இருந்த மூச்சிருக்கும் வரை சேர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் புரிந்ததில்… அவளுக்கு ஒரு ஆசுவாசம் பிறக்க, “அப்பனா என்னய நீ அனுப்ப மாட்டியா?” என்று கேட்டாள்.

“இப்டி ஒரு பயம் இருக்துன்னு என்னாண்ட நேர சொன்னா… நானே சமச்சிருக்க போறேன். அதவுட்டு என்ன கதலாம் சொல்லிருக்க?” என்றவன், “மொதல நீ சொன்னதெலாம் நம்பி நா எவ்ளோ பயந்துக்கினே தெர்யுமா?” என்றான் இறுக்கமாக.

மீண்டும் கண்ணீர் வந்துவிட, “சாரி மாமா… உன்னய ஏமாத்த அப்டி நடந்துக்கல. எனக்குப் பயம்… சமையல்கட்டு, அடுப்பு, தீ பாத்தாலே ரொம்ப பயம். மன்னிச்சிடு. இப்டி எதுனா நா சொல்லிக்கினே இருந்தா, யார்னா பெரியவங்கள இங்க வர சொல்லுவனு நெனச்சேன்.

நானும் எப்படியாது சமச்சிடணும்னு ட்ரை பண்ணேன். ஆனா மாமா உள்ளாற போனாலே கை, கால், உடம்பெலாம் நடுங்கி… வேர்த்திட்டு வந்துரும். வுடனே பயந்துகினு வெள்ள ஓடி வந்துருவேன்.

பொய் சொன்னது… உன்னய கொழப்னது பெரிய தப்புதான். ஆனா அதுக்காக என்னய வுட்றாத மாமா. வீட்டுக்கு வந்தா… உனக்கு என்னால கஷ்டம் மாமா. அதான் எங்க வீட்ல இருந்துக்காவன்னு கேட்டேன்” என்று கேவலுடன் மறுபடி மறுபடி மன்னிப்பு கேட்டபடி இருந்தாள்.

அவளைப் பார்க்க பாவமாக இருக்க, “என்னத்துக்கு சாரி கேட்டுக்கினே இருக்க. போதும். இத வுடு. எனக்கு உம்மேல இப்ப கோவலாம் இல்ல பவி” என்றான் இதமாக.

அவனையே அவள் பார்க்க… அவன் அவள் கண்ணீரைத் துடைக்க… சிலபல வினாடிகள் அப்படியே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

புரிந்து கொள்கிறான் என்ற நிம்மதியுடன், “சமைக்க நீயும் கூட வந்து நிக்கிறயானு, நானு கேட்டேன். நீதான் கவனிக்கல மாமா” என்றுவிட்டு, “இன்னிக்கு எப்டி ஆஸ்பத்திரி கூட்டிப் போனும்னு தோணிச்சி?” என்று விலகிக்கொண்டு கேட்டாள்.

“ம்ம்… காலைல நீ சொன்னது பொய்னு தெர்ஞ்சது” என்று எழுந்துகொண்டான்.

“எப்டி கண்டுபுட்ச்ச?”

“கிச்சனாண்ட ஒட்டிருக்க பேப்பர்லாம் கிழிச்சி போட்ருந்தேன். அந்த பல்லி… மேல் வீட்டு குட்டிஸோடது. தெருவாண்டா நின்னு தூக்கிப் போட்டு வெளாடசொல்ல சன்னல் வழில இங்க வுழுந்திருச்சினு சொல்லி… வந்து வாங்கினு போயிருச்சுங்க.

அப்றமும் அத்தயே நீ சொன்னா எப்டி நம்புவேன்?” என்று அவள் கையில் டம்பளரைக் கொடுத்து, “காபி குடி” என்றான் இலகுவாக.

அவள் அவ்வளவு அழுந்திருந்தாள் அல்லவா? மிகச் சோர்வாகவும் இருந்தாள்! அதன் பொருட்டே… இந்த காஃபி! அவளுடன் பேசிக்கொண்டே காஃபி போட்டிருந்தான்!!

சற்று சரியானவள் காஃபி குடித்தபடி, “நா நெனச்சேன்… பேய் ஓட்டுறவரு வந்துக்கின்னு போனதால எப்டி அப்டிலாம் நடக்கும்னு டவுட் பண்ணியோனு” என்றாள்.

“ப்ச் அதுல்லாம் எனக்கு நம்பிக்க கெடயாது”

“அப்றம் என்னத்துக்கு அதலாம் பண்ண?”

“நீ ஏதோ இருக்குதுன்னு சொன்ன… எங்கம்மா அது பேய்தான்னு நினச்சி பேயோட்ட ஆள் அனுப்பினாங்க. சரி அப்டியாது உன் பயம் போகுமானு பாத்தேன்” என்றவன், “துட்டுதான் வேஸ்ட்டு” என்று அலுத்துக் கொண்டான்.

“அமௌன்ட் சொல்லு… நானே குடுத்துறேன்” என்று சிலுத்துக் கொண்டவள், “மாமா, நம்ம ஒரு டீல் போட்டுக்கலாமா?” என்றாள் கெஞ்சலாக.

“என்னத்துக்கு இப்ப டீல்?”

“இந்த பேயோட்ட ஆன செலவ நா குடுத்திடுவேனாம். அதுக்குப் பதிலா நீ… நம்ம வீட்டு கிட்சன் சரியாயிடுச்சினு உங்க வீட்ல சொல்வியாம்”

“என்னய பொய் சொல்ல சொல்றியா…?” என்றான் விளையாட்டாய்.

“நீ இத ஈஸியா எடுத்துக்கின மாமா… ஆனா பாரு உங்க பேமிலி வாட்ஸ்அப் குரூப்ப, அத்த இங்க இப்டினு மெசேஜ் தட்டிவிட்டதலருந்து இத்தயே பேசிக்கின்னு இருக்காங்க. சமயல் ரூம்ல பெர்ச்சனனாலே இவ்ளோ பேசறவங்க… எனக்குத்தான் பெர்ச்சனனா எவ்ளோ பேசுவாங்க… அதுவும் பயமாருக்குது மாமா”

அவள் சொன்ன விதத்தில் அவன் சிரிக்க, “நா பாவம்ல?” என்று அவள் செல்லமாக பார்க்க, “யார்ரு நீயா!?” என்று செல்வம் கேலி செய்ய, “மாமா…” என்று பவி அன்பாக அழைத்தாள், அடுக்களை அமானுஷ்யம் என்றதை அடுக்களை ரகசியமென மாற்றும் முயற்சியாய்!

********************** END ************************