ISSAI,IYARKAI & IRUVAR 17.2

ISSAI,IYARKAI & IRUVAR 17.2

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 17


“சொல்லு சிவா?” என்றார் அழைப்பை ஏற்று!

“ம்மா! அப்பா-நளினி-பிரவீன்கிட்ட கொஞ்சம் பேசணும். டின்னர் சாப்பிட்டு வெயிட் பண்ணச் சொல்றீங்களா?” என்று கேட்டதும், “எதுக்கு சிவா?” என்று கேட்டார்.

“பாவை வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டா” என்றதும் “கூட்டிட்டு வரவேண்டியதுதானே? இவங்ககிட்ட என்ன பேசப் போற?” என்றார் சந்தோஷத்தில்!

“இத்தனை நாள் அவ தனியா இருந்ததைப் பத்திச் சொல்லணும். நளினியோ அப்பாவோ ஏதாவது கேட்டா, நானே விளக்கம் சொல்லி முடிச்சிடலாம்னு பார்க்கிறேன்”

“ஓ”

“பாவை வந்ததுக்குப்புறம், அவகிட்ட யாரும் ஏதுவும் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது பாருங்க” என்று காரணத்தையும் சொன்னான்.

“அதுவும் சரிதான்” என்றவர், “நானும் மேலோட்டமா விஷயத்தைச் சொல்லி வைக்கிறேன்” என்றார்.

“ம்ம்ம்” என்றதும், “பாவை இருக்காளா?” என்று கேட்டார், பேச வேண்டுமென்ற ஆசையில்!

“கீழே போயிருக்கா-ம்மா” என்றவன், “ஃபங்ஷனுக்கு லேட்டாகுது. நான் அப்புறமா பேசறேன்” என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்தான்.

அதன்பின் இருவரும் கிளம்பினார்கள்.

விழா நடக்கும் இடம்

வன நலனை பாதுகாப்பில் அக்கறை கொண்ட ஒரு அமைப்பு ஏற்பாடு செய்ந்திருந்த நிகழ்ச்சி அது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெரிய கூடம். நேர்த்தியாக போடப்பட்டிருந்த இருக்கைகள்.

ஐந்தாறு இருக்கைகள் போடப்பட்டிருந்த மேடை. அதன் ஒருபுறம் ‘மைக் ஸ்டான்ட்’. பின்புறம் ஒரு எல்ஈடீ திரை.

உள்ளே நுழையும் போதே, இருக்கைகள் நிரம்பியிருந்தன.

ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு, “இது என்ன?” என்றவள் குரலில், புதிதான சூழலைக் கண்ட தயக்கம் தெரிந்தது.

“கொஞ்ச நேரத்தில புரியும்” என்றவன், “நீ இங்கே உட்கார்ந்துகோ” என்று காலியாக இருந்த ஒரு இருக்கையில் பாவையை அமரச் சொன்னான்.

‘என்ன இது?’ என்று ஒன்றும் புரியாமல் பார்த்தவளிடம், “நான் ஸ்டேஜ்-க்கு போறேன். நான் பேசறப்போ உனக்குப் புரியும்” என்றான்.

‘சரி’ என்பது போல் தலையாட்டினாள்.

விழா ஆரம்பித்தது.

மேடையில் நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், “காடுகள் வளர்ப்பில் கலக்கும்…” என்று ஆரம்பித்து… மேடையில் இருந்த நான்கு பேரையும் தனித்தனியாக அறிமுகப்படுத்தினார்.

அதில் சிவபாண்டியனும் ஒருவன்!

அவர் பேசி முடித்த பின்பு, ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்கள் அனுபவங்களைப் பேசுவதாகவும் ஏற்பாடு.

முதலில் வந்தவர் பேச்சைத் தொடங்கி…

“குறுங்காடுகள் திட்டம் மூலமாக பார்ம் ஹவுஸ், கார்பரெட் இண்டஸ்ட்ரி-க்கு குறைவான செலவில சிறிய அளவிலான காடுகள் அமைச்சிக் கொடுக்கிறோம். ஸோ, ஒரு இயற்கையான சூழலை வேலை செய்யிற இடத்தை கிரியேட் செஞ்சித்தர்றோம்…” என்று பேசிக் கொண்டிருந்தார்.

அடுத்து வந்தது சிவபாண்டியன்…

பாண்டியன் பேச்சைத் தொடங்கும் முன்னரே… மற்றவர்கள் பேசியது மற்றும் அவனுக்குக் கொடுக்கப்பட்ட அறிமுகத்திலிருந்து பாவைக்குப் புரிந்துவிட்டது, அவன் காடுகள் வளர்ப்பில் ஈடுபட்டிருக்கிறான் என்று!

“அப்பா பிசினஸ் பார்த்துக்கவா? இல்லை, என்னோட கனவை நோக்கி போறதான்னு? முடிவெடுக்க வேண்டிய சிச்சுவேஷன் வந்தது

ஏன் எல்லா முடிவுகளும் பொருளாதாரத்தை நோக்கியே இருக்கணும்? கொஞ்சம் பொறுப்பை நோக்கியும் இருக்கலாமே?? -ன்னு யோசிச்சேன்” என்று இடைவெளிவிட்டான்.

அவன் ஏன் மாமாவின் தொழிலைப் பார்க்கவில்லை என்று புரியவந்தது, பாவைக்கு!

“அப்படி யோசிச்சு எடுத்த முடிவுதான் இது. 33% காடுகள் இருக்கனும் ஆனா, இப்போ இருக்கிறது 21%தான். இதை அதிகரிக்கணும்! ரிசர்வ்டு பாரஸ்ட்ட நம்மளால எக்ஸ்டென்ட் பண்ண முடியாது.

அப்போ வேற வழி?

நாம காடுகள் வளர்ப்பது. அதைத்தான் நான் செஞ்சிகிட்டு இருக்கேன்! …” இப்படியே பேச்சு தொடர்ந்தது.

இப்படி ஒரு பணி செய்கின்றவன் முன்பு, ‘ரூம்-குள்ள நாலைஞ்சி மரத்தை வளர்த்திக்கிட்டு காடு பிடிக்கும்னு சொல்றீங்களே’ என்று சொல்லிச் சிரித்தது நியாபகத்திற்கு வந்தது, பாவைக்கு!

அதன்பிறகு,

சற்றுநேரத்திற்கு… கலந்துரையாடல்! காடு வளர்ப்பு பற்றிக் கேள்வி-பதில்கள்! பாராட்டுக்கள்! விழா நிறைவு! இவை மட்டுமே!!

அதன் பின்…  பாண்டியனும் பாவையும் காரை நோக்கி நடந்துகொண்டிருந்தனர். இருவருக்குமிடையே பெரிய அமைதி நிரம்பியிருந்தது.

“ரொம்ப போர் அடிச்சதா? ஒண்ணுமே பேச மாட்டிக்க?!” என்று பேச்சை ஆரம்பித்தான்.

“நீங்க ஏன் என்கிட்ட எதுவும் சொல்லலை?”

“அன்னைக்கு ‘இதைப் பத்தி தெரியாது-ன்னு’ நீ சொன்னப்பவே… நான் செய்யற விஷயத்தெல்லாம் உனக்கும் சொல்லணும்னு ஆசையா இருந்தது. பட், பேச்சு வேற மாதிரி போயிடுச்சி” என்றான்.

“நீங்க ஆசைப்பட்டு சொல்லப் போனீங்க. நான்தான் ஏதோ ஏதோ பேசி…” என்று சொல்லும் போதே, “விடு பாவை!” என்றான்.

இந்தநொடியில், மஹிந்திரா தாரின் அருகில் வந்திருந்தார்கள். இருவரும் காரில் ஏறி அமர்ந்ததும், பாண்டியன் காரை கிளப்பினான்.

சற்று தூரம் போனதும், “இயற்கை-ல அனர்த்தம் இருக்கும்னு, நான் சொன்னதில உங்களுக்கு கோபம்! கரெக்டா?” என்று கேட்டாள்.

ஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தான். அதன்பின் பாவையும் எதுவும் பேசவில்லை.

சாலையில் கவனம் வைத்துக் கொண்டே… வெகுநேரம் அமைதியாக வருபவளைப் பார்த்தவன், “பாவை” என்று அழைத்தான்.

“ம்ம்” என்று, அவனை நோக்கித் திரும்பினாள்.

“எல்லாத்திலயும் அர்த்தம்-அனர்த்தம் ரெண்டும் இருக்கும். நீ சொன்னியே ம்யூசிக்-க்கு ரூல்ஸ் உண்டுன்னு! ரூல்ஸ் மாத்திப் பாடினா, அதுக்கு அர்த்தம் கிடையாது. கரெக்ட்டா?” என்று கேட்டான்.

முதலில் அமைதியாக இருந்தாள். பின், “அன்னைக்கே ’இதுக்கு ஒரு நாள் பதில் சொல்றேன்னு’ சொன்னீங்கள? இதுக்காகத்தான் என்னை இங்கே கூட்டிட்டு வந்தீங்களா?” என்றவள் குரல், சண்டை இழுக்கும் தொனியில் இருந்தது.

“ஹே! பாவை ஃபார்ம்-க்கு வந்திட்ட!” என்று கேலி செய்யும் குரலில் அவளைக் கொண்டாடினான்.

சிரித்தாள். பின், “கங்கிராட்ஸ் பாண்டியன்” என்றாள், அதே சிரிப்பு மாறாமல்!

“கங்கிராட்ஸ் இப்படியா சொல்லணும் ஹனி?” என்று கேட்டதும், அதற்கும் சிரித்தாள்.

பின், “சான்ஸ் கிடைச்சிருச்சி! சேர்ந்து வாழப்போறோம்! ரொம்ப சந்தோஷமா இருக்கு பாண்டியன்” என்றாள் உள்ளத்திலிருந்து!

இப்படியே அவனுடன் பேசிக் கொண்டே, அலைபேசியில் புலனச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தீடீரென்று அவனிடம் பேசுவதை நிறுத்திவிட்டு, அமைதியாவிட்டாள் பாவை.

“ஏன் பேசாம வர்ற?” என்று கேட்டுக் கொண்டே திரும்பியவன், அவள் முகத்தைப் பார்த்ததும், “என்ன பேஸ் ஒருமாதிரி மாறிடுச்சு?” என்று கேட்டான்.

“நான் இன்னும் ஒரு கச்சேரி-கூட பண்ணலை. ஆனா, கௌசி? ரெண்டாவது கச்சேரி முடிச்சிட்டா!” என்று குறைபட்டுக் கொண்டாள்.

பாண்டியன் எதுவும் சொல்லாமல் இருந்தான்.

“எனக்கு எப்போதான் செகன்ட் சான்ஸ் வருமோ?” என்று, அடுத்த வாய்ப்பை எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.

“இது என்ன பழக்கம் பாவை?” என்று அழுத்தமான குரலில் ஆரம்பித்தான்.

“எது?”

“இந்த மாதிரி ஒருத்தரோட உன்னை கம்பேர் பண்ணறது?” என்றான் அடுத்த கேள்வியாக!

‘ஓப்பிடு!?’ என்ற வார்த்தை, அவள் வேண்டாமென விட்டுவிட்ட சுயஅலசலைத் தட்டி எழுப்பியது.

“அன்னைக்கும் அப்படிதான், டிவி ப்ரோக்ராம்-ல சான்ஸ் கிடைச்சுதுன்னு ஹேப்பியா இருந்த! பட், அந்தப் பொண்ணு பர்ஸ்ட் கச்சேரி பண்ணினது தெரிஞ்சதும் கவலைப்பட ஆரம்பிச்சிட்ட?!”

தன் எதிர்பார்ப்பில் என்ன பிழை என்று புரிந்தது! தன் எதிர்பார்ப்பெல்லாம்… கௌசியை ஓப்பிட்டுப் பார்த்து, தனக்குள் வந்த ஏக்கம் என்று தெரிந்தது!!

“இன்னைக்கு… கச்சேரி சான்ஸ் கிடைச்சதுன்னு சந்தோஷப் படறதை விட்டுட்டு, அவங்க செகண்ட் கச்சேரி பண்ணினதைப் பத்தி யோசிக்கிற?!!”

அவன் அன்பின் வெளிப்பாடுகளில், தன்னால் ஏன் திருப்தி அடைய இயலவில்லை? எனப் புரிந்தது!

அடைக்கும் தாழில்லாமல் அன்பு வேண்டுமென நினைத்தது சரிதான்! ஆனால், அதற்கொரு வடிவம் கொடுத்து வைத்திருந்தது தவறெனப் புரிந்தது!!

“இப்படியே கம்பேர் பண்ணிகிட்டே இருந்தா, எப்போ உனக்கு கிடைக்கிறதை என்ஜாய் பண்ணப்போற?”

கௌசியால் தனக்குள் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் பாதகம் புரிந்தது.

“சப்போஸ் நாளைக்கு உனக்கு செகன்ட் சான்ஸ் கிடைச்சாலும் சாட்டிஸ்பை ஆக மாட்ட… அவங்களுக்கு தேர்ட் சான்ஸ் கிடைச்சிருச்சின்னு தெரிய வந்தா…”

சொல்லவேண்டும்! தான் நடந்து கொண்டதற்கான காரணம் அனைத்தையும் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாள்!!

அடுத்த நொடியே, “வீட்டுக்குப் போகலாம்” என்றாள்.

“போய்க்கிட்டுதான் இருக்கேன்” என்றான்.

“உங்க வீட்டுக்குப் போகலாம்”

“அது ‘நம்ம வீடு’ பாவை!”

“சரி!” என்று சத்தமாகச் சொன்னவள், “அப்போ அங்கேயே போங்க” என்றாள்.

“நான் அப்பா நளினிக்கிட்ட பேசிக்கிறேன். அப்புறம்…” என்று சொல்லும் போதே, “நானே பேசிக்கிறேன்! எனக்குப் பேசணும்” என்றாள்.

“உனக்கு என்ன பேசணும்?”

“பேசணும்! நான் என்ன பண்ணிருக்கேன்-ன்னு இப்போதான் புரியுது”

“என்கிட்ட சொல்லு பாவை! போதும்!! எல்லார்கிட்டயும் எதுக்கு?”

“எல்லோருக்கும் எல்லாம் தெரியும்-ல? அப்புறமென்ன?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே, “பாவை இது தேவையில்லை” என்று சொல்லிப் பார்த்தான்.

“ப்ளீஸ் கூட்டிட்டுப் போங்க” என்று அவள் கெஞ்சிக் கேட்டதும்,  மஹிந்திரா தாரை தன் வீடு நோக்கிச் செலுத்தினான்.

சிவபாண்டியன் வீடு

சிவா பேசப் போவதாக சொன்னதால்… நளினி, பிரவீன், செண்பகம் மற்றும் மதி அனைவரும் வரவேற்பறையில் இருந்தனர்.

செண்பகம் அனைத்தையும் சொல்லியிருந்தார்.

ஏற்கனவே பாவை மீது கோபம் உண்டு. இப்பொழுது ‘தனியாக இருக்கிறாள்’ என்று செண்பகம் சொன்னதும், நளினிக்கும் மதிக்கும் கோபம் மேலும் அதிகரித்தது.

‘ஏன் பாவை இப்படி?’ என்று தன் அதிருப்தியை, அன்னையிடம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில்… பாவையைக் கூட்டிக் கொண்டு, சிவா உள்ளே நுழைந்தான்.

‘ஏன் அப்படி நடந்து கொண்டேன்?’ என்ற கேள்விக்கானப் பதிலைச் சொல்லத் தயாராயிருந்தாள், பாவை.

நளினி… மதி… இருவருமே, சில பல கேள்விகளுடன் பாவையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


 

Leave a Reply

error: Content is protected !!