ISSAI,IYARKAI & IRUVAR 7.2

ISSAI,IYARKAI & IRUVAR 7.2

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம்  – 7

சிவா வீடு

வாசற்கதவைத் திறந்து வைத்துக் கொண்டு… வரவேற்பரையில் அமர்ந்து செண்பகமும், மதியும் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில்… வேகமாகக் கதவைத் தள்ளிக் கொண்டு, பாவை உள்ளே வந்தாள். வந்த வேகத்திலே அறைக்குள் சென்றுவிட்டாள்.

செண்பகமும் மதியும் ‘இவளுக்கு என்னாயிற்று?’ என்று ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின்னேயே வந்த பாண்டியனிடம், “என்ன சிவா? என்னாச்சு? அதுக்குள்ள திரும்பி வந்திட்டீங்க?” என்று செண்பகம் பதற்றத்துடன் கேட்டார்.

“ஒண்ணுமில்லம்மா! நான் பார்க்கிறேன்” என்று சொல்லி, அவனும் அறைக்குள் நுழைத்தான்.

கோபமாக நின்று கொண்டிருந்தாள், பாவை!

“பாவை என்னாச்சு?” என்று கேட்டான்.

“நான் சும்மாதான இருந்தேன்!! நீங்கதான வெளியே போகலாம்ன்னு சொன்னீங்க??” என்று, இது வரைக்கும் எட்டாத டெசிபல் அளவை… அவள் குரல் எட்டியது!

“மெதுவா பேசு… ஹால்லதான் அம்மா அப்பா இருக்காங்க” என்று எச்சரித்தான்!

“நீங்க பதில் சொல்லுங்க” என்றாள் எச்சரித்ததை எதிர்த்து!

“ஆமா சொன்னேன். ஆனா, நீ கோவிலுக்குப் போகலாம்ன்னு சொன்னதும், ஹெசிட்டேட் பண்ணேன். அதைத்தான் உன்கிட்ட சொல்ல நினைச்சேன்! நீ சொல்லவிடல!”

“நான் எவ்ளோ ஆசைப்பட்டேன் தெரியுமா?” என்றாள் குறைந்து போன குரலில்!

“நான்தான் ரீசன் சொன்னேன்ல! எனக்கு இதுல நம்பிக்கை இல்லை-ன்னு “

“ஏன் எனக்காக வரக்கூடாதா?” என்று மீண்டும் கத்தினாள்!!

“அது என்னோட நம்பிக்கையைத் தாண்டி பண்ற விஷயம்!” என்று, அவனும் கத்த ஆரம்பித்தான்.

“என்னோட ஆசைக்காக ஒரு நாள் வந்தா என்ன?”

“நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்தை எப்படி பண்ண முடியும்? புரிஞ்சிக்கோ” என்றான் அமைதியாக!

“பண்ணலாம்!! அன்பு இருந்தா பண்ணலாம்!” என்றாள் அலட்சியமாக!

“எனக்கு உடன்பாடு இல்லாத ஒரு விஷயத்தை… உனக்காக முடியும்-ன்னு சொல்லிப் பண்ணா, ஒரு டிஸ்கம்ஃபார்டபிள் பீல் வரும்!! அதுக்கு பெட்டர், ‘முடியாதுன்னு சொல்லி… இதுதான் நான்! புரிஞ்சிக்கோ! மாறச் சொல்லதான்னு’ சொல்றது!! ஆனா, முடியாதுன்னு சொல்றதால, உன் மேல அன்பு இல்லைன்னு அர்த்தம் இல்லை” என்று, அவன் அன்பின் அறிவியலை விளக்கினான்.

மேலும் அவன் பேச வரும்பொழுது… ‘ப்ச்’ என்று சலிப்பாகச் சொல்லி, அவள் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

அவளின் அசட்டையான செய்கைகளில்… அவனுக்குக் கோபம் வந்துவிட்டது!

“பாவை!” என்று கத்தியவன், “ஒன்னு… பேசச் சொல்றப்போ, நீ தெளிவா பேசு!! இல்லைன்னா… நான் பேச வர்றப்போ, நின்னு கேளு!! இப்படி ரெண்டும் இல்லாம இருந்தா… என்னால ஒன்னும் பண்ண முடியாது” என்று வீடே அதிரும்படிக் கத்தினான்.

அந்தக் கணம், “சிவா” என்ற அழைப்பு, அறையின் வெளியே இருந்து… செண்பகம்தான்!

இருவருமே சத்தமாகத்தான் பேசினார்கள். ஆதலால், அனைத்தும் வெளியே இருப்பவர்களுக்குக் கேட்டது. அதிலும் சிவாவின் கடைசிப் பேச்சு, செண்பகத்திற்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது. எனவேதான் இந்த அழைப்பு!

தணிந்த குரலில், “ம்மா” என்றான் உள்ளேயிருந்து!

“சாப்பிட வாங்க ரெண்டு பேரும்” என்றார்!

“வந்திடுறோம்-ம்மா” என்றவன்… பாவையைப் பார்த்து, “சாப்பிட வா” என்றான்.

“அப்புறமா வர்றேன்”

“கண்டிப்பா வரணும்! இல்லைன்னா வாய்ஸ்…” என்றவன் முடிக்கும் முன்னே

“என் வாய்ஸ் கேர் பண்ணிக்க எனக்குத் தெரியும்” என்றாள் முகத்தில் அடித்ததுபோல!

அதற்கு மேல் பாண்டியன் எதுவும் சொல்லவில்லை! வெளியே சென்றுவிட்டான்!!

சாப்பாடு மேசையில்…

வெளியே வந்தவனுக்கு… அப்பா, அம்மாவை பார்க்க ஒருமாதிரி இருந்தது. மெதுவாகச் சென்று, குனிந்தபடியே அமர்ந்து கொண்டான்.

அவர்களுக்கும், அவனைப் பார்க்கவே கஷ்டமாயிருந்தது. ‘எப்படி இருந்தவன், இன்று இப்படி இருக்கிறானே!?’ என்ற வலி, அவர்களின் கண்களில்!

சாப்பிட ஆரம்பித்தான்!

“சிவா… மதுரையில ஒரு இடம் வருது! வாங்கலாமா?” என்று மதி சாதாரணமாகக் கேட்டார்.

முதலில் தண்ணீர் எடுத்துக் குடித்துக் கொண்டான். பின், “பார்க்கலாம்-ப்பா” என்றான்.

அதன்பிறகு…. அம்மா அப்பாவுடன் பொதுவாகப் பேசிக்கொண்டே, கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்தான்.

இதே நேரத்தில் உள்ளே…

பாவை, மெத்தையில் அமர்ந்திருந்தாள். அக்கணம் வேணிம்மா அலைபேசியில் அழைத்தார்.

உடனே எடுத்து, “வேணிம்மா” என்றாள்.

“எப்படி-ம்மா இருக்க?” என்று கேட்டார், எப்பொழுதும் போல்!

“ம்ம்ம் இருக்கேன்” என்றவள் குரலில், ஏதோ ஒன்று குறைந்தது!

“என்னாச்சு பாவை? இன்னைக்கு வெள்ளிக் கிழமை! கோயிலுக்குப் போயிட்டு வந்தியா?” என்று கேட்டார்.

“அவங்களுக்கு அதுலெல்லாம் நம்பிக்கை இல்லையாம்!”

“அதனால…” என்றார் கேள்வியாக!

“விடுங்க வேணிம்மா!!” என்றவள்… சட்டென மனதின் சங்கடத்தில், “மனசு கஷ்டமா இருக்கு வேணிம்மா” என்று சொல்லிவிட்டாள்.

“என்ன பாவை சொல்ற?” என்றவர் பரிதவித்துக் கேட்கவும்,

உடனே, ‘ஐயோ, என்ன பண்றோம்?’ என்று சுதாரித்துக் கொண்டாள்.

“வேணிம்மா! சாமி பார்க்கலைன்னு… மனசு கஷ்டம்! வேற ஒண்ணுமில்லை” என்று சமாளித்தவள், “செண்பாம்மா சாப்பிடக் கூப்பிட்டாங்க. நான் அப்புறமா பேசுறேன்” என்று சொல்லி, அலைபேசி அழைப்பைத் துண்டித்தாள்.

அலைபேசியை வைத்ததும், ‘பாவை ஏன் இப்படிப் பண்ண?’ என்று, லேசாகத் தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

அதை நினைத்தபடியே சற்று நேரம் அமர்ந்திருந்தவள், எழுந்து சாப்பிடச் சென்றாள்.

சாப்பாட்டு மேசையில்…

செண்பகமும் மதியும் சாப்பிட்டு முடித்திருந்தனர்.

அறையிலுருந்து வந்தவளிடம், “வா! வந்து சாப்பிடு” என்று செண்பகம் சொன்னதும், ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.

சாப்பிட ஆரம்பித்தாள்.

அக்கணம், “பாவை!” என்று மதி அழைத்தார்.

‘எதற்கு?’ என்பது போல் மூவரும் அவரைப் பார்த்தனர்.

“அவனைக் கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்கோம்மா…” என்று மதி பேச்சை ஆரம்பிக்கும் போதே, “அவ புரிஞ்சிப்பா -ங்க! நீங்க வாங்க” என்று செண்பகம் சொல்லி, மதியை எழுப்பினர்.

மேலும், “சாப்பிட்டு முடிச்சிருக்கணும்” என்று இருவரிடமும் சொல்லி, கணவனை அறைக்குள் அழைத்துச் சென்றார்.

அவர்கள் சென்றதும்,

பாவை சாப்பாட்டைக் கிளறிக் கொண்டே இருந்தாள். உண்ணவேயில்லை.

அதைக் கண்டவன், கொஞ்சம் உணவை எடுத்து… ஊட்டிவிடுவதற்காக அவளது முகத்தின் அருகே கையைக் கொண்டு சென்று, “சாரி! கொஞ்சம் கத்திட்டேன்” என்றான் வருத்தத்துடன்!

மெல்ல பின்னே சாய்ந்து, “வேண்டாம்! நானே சாப்பிட்டுக்குவேன்” என்றாள்.

அதற்கு மேல் வேறெதுவும் பேசாமல், சாப்பிட்டு முடித்தார்கள்.

சற்று நேரத்திற்குப் பின்…

இருவரும் அறைக்குள் வந்தனர்.

“கொஞ்ச நேரம் பால்கனியில பேசிக்கிட்டு இருக்கலாமா??” என்று கேட்டுப் பார்த்தான்.

“தூக்கம் வருது” என்று சொல்லி, படுத்துக் கொண்டாள்.

பாண்டியனுக்கு உறக்கம் வரவில்லை!

பால்கனிக்குச் சென்று, தனியே அமர்ந்து கொண்டான். இருவருக்கும் நெருக்கம் இருப்பது போல் இருந்தாலும், ஏதோ ஒரு நெருடல் இருப்பதை உணர முடிந்தது!

தான் பேசுவதைப் புரிந்து கொள்ளவும் மறுக்கிறாள்! அவளைப் புரிந்துகொள்வதற்கு, தன்னிடம் பேசவும் மறுக்கிறாள்!! ‘என்ன செய்ய?’ என்று யோசித்தவன், ‘அவள் பாட்டியிடம் பேசிப் பார்த்தாலென்ன’ என்று எண்ணம் வந்தது!

பின், அதுவே சரியென்று தோன்றியது! இந்தக் கச்சேரி முடிந்ததும், பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.

இதே நேரத்தில் உள்ளே…

மெத்தையில் படுத்தவளுக்கும் உறக்கம் வரவில்லை.

நடந்ததை யோசித்துப் பார்த்தவள், ‘இவனும் தன்னை ஒதுக்குகிறானோ? தன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்க மாட்டேன் என்கின்றானோ?’ என்று நினைத்தாள்.

மேலும், ‘இதுதான் நான்!’ என்று சொல்பவனிடம், வளர்ந்த விதத்தைப் பற்றிச் சொன்னால்… இவனிடமிருந்து கிடைக்கப் போவது அனுதாபமா? இல்லை அன்பா? என்ற சந்தேகம் வர ஆரம்பித்தது!

இதே நேரத்தில்… செண்பகத்தின் அறையில்…

“ஏன் இப்படிப் பேசினீங்க?” என்று கணவரைக் கடிந்து கொண்டிருந்தார், செண்பகம்.

“எனக்குத் தோணுச்சு செண்பா, அதான் சொன்னேன்”

“அதுக்கு?? அப்படிச் சொல்லணுமா?”

“இன்னைக்கு அந்தப் பொண்ணு கத்தினது, எனக்குப் பிடிக்கலை. அதான் சொன்னேன்”

செண்பகம் அமைதியாகிவிட்டார். பின், “நீங்க யாரும் எதுவும் பேச வேண்டாம்! அவன் சமாளிச்சிப்பான்” என்றார்.

“அவன் சங்கடப்படுறான் செண்பா! உனக்குத் தெரியலையா? எப்படி வந்து உட்கார்ந்தான் பார்த்தியா? எனக்கு கஷ்டமா இருக்கு” என்றார் வருத்தமாக!

செண்பகத்திற்கும் வருத்தம்தான்! அமைதியாக இருந்தார்!!

“நளினி சொன்னா… சிவாவுக்கு ஏத்த மாதிரி, அவ இல்லைன்னு” என்றார், மதி!

‘இவள் ஏன் இப்படிச் செய்கிறாள்?’ என்று மகள் மேல் எரிச்சல் வந்ததால், “அப்படியெல்லாம் இல்லை” என்றார்.

” ‘சிவாவுக்கு அக்கறை இல்லைன்னு’ சொன்னா-ன்னு… நீதானா சொன்ன?? இன்னைக்கு அந்தப் பொண்ணு பேசினதை நீயும் கேட்டி-ல??”

“நீங்க சொல்றது எல்லாம் எனக்கும் தோணுது! இப்போதான கல்யாணம் ஆகியிருக்கு! போகக் போக சரியாயிடும்! ஆனா, இனிமே இந்தமாதிரி சொல்லாதீங்க! அப்படியே சொல்லணும்னு தோணிச்சுன்னா… ரெண்டு பேருக்கும் சேர்த்துச் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு, படுத்துக் கொண்டார்.

ஆனால், உறக்கம் வரவில்லை!

மருமகளின் சில பேச்சுக்கள் பிடிக்கவில்லை! அதேபோல் மகன் கத்தியதும் பிடிக்கவில்லை.  

இன்றைய நிகழ்வினால், ‘இவர்களின் திருமண வாழ்வு எப்படி இருக்குமோ?’ என்ற கவலை வந்தது! இருந்தும், ‘தன் மகன் சாமாளித்துவிடுவான்’ என்று நம்பிக்கை கொண்டார்!

இவரின் நம்பிக்கை பொய்க்கப் போகிறது!!

இதே நேரத்தில்… வேணிம்மா வீடு

கட்டிலில் படுத்திருந்தார். பாவையின் பேச்சைக் கேட்டவருக்கு, உறக்கம் வரவில்லை.

அவளின் பேச்சிற்கு ‘என்ன காரணம்?’ என்று புரியவில்லை. ஒருவேளை, புகுந்த வீட்டின் சூழல் காரணமோ?? என்ற கேள்வி வந்தது! அது, ‘இவளின் திருமண வாழ்வு எப்படி இருக்குமோ?’ என்ற கவலையைத் தந்தது!

இருந்தும், ‘இங்கேயே சமாளித்து வாழ்ந்தவள், அங்கேயும் சமாளித்து விடுவாள்’ என்று நம்பிக்கை கொண்டார்!

இவரின் நம்பிக்கையும் பொய்க்கப் போகிறது!!

Leave a Reply

error: Content is protected !!