itahyamnanaikirathey-14

IN_profile pic

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 14

விஷ்வா காஃபி கோப்பையை தன் பக்கம் இழுக்க, இதயா அதை  அவள் பக்கம் இழுக்க காஃபி மேலே எழும்பி அவள் கழுத்து பக்கம் சிதறி அவள் மேலே வழிய, காஃபியின் சூடு பொறுக்காமல், “வீல்…” என்று அலறினாள் இதயா.

“இ… இதயா…” அவன் பதறினான். அந்த அழைப்பு அவன் உயிரையே தேக்கி கொண்டு வந்தது.

“அறிவில்லை, இப்படியா ஓடி வருவ?” அஜயை பார்த்து கடுங்கோபத்தில் கர்ஜித்த விஷ்வா அவனை நோக்கி முன்னேற எத்தனித்தான்.

விஷ்வாவின் கர்ஜனையில் தியா தன் தாயை பின்னோடு கட்டி கொள்ள, அஜய்  சுவரோடு சாய்ந்து நின்றான். அவன் கண்களோ தாயையும், தந்தையும் மிரட்சியோடு பார்த்தன.

குழந்தைகளின் நிலையை கண்ட இதயா, “விஷ்வா…”  அழுத்தமாக அழைத்தாள். அதை விட அழுத்தமாக அவன் நெஞ்சின் மேல் கை வைத்து, அவனை கனல் கக்கும் பார்வை பார்த்தாள். அவளின் பார்வை, அவளின் அழைப்பில் சர்வமும் அடங்கி நின்றான் விஷ்வா.

அஜயின் பார்வை அந்த நிலையிலும் தந்தையை யோசனையோடு தழுவியது.

விஷ்வாவிற்கு மிக அருகே இதயா இருக்க, இதுவரை தன்னை தவிர, யாரிடமும் நெருங்காத தாயை விஷ்வாவின் அருகாமையில் ஆச்சரியமாக பார்க்க ஆரம்பித்தாள் தியா.

அதை தொடர்ந்து தியாவின் பார்வையோ, உரிமையோடு விஷ்வா நெஞ்சின் மீதிருக்கும் தாயின் கைகளின் மீது நிலைத்திருந்தது.

“வயசானாலும் உன் கோபம் குறையவே இல்லை” அவனுக்கு மட்டும் கேட்குமாறு எரிச்சலோடு முணுமுணுத்தாள்.

அவன் எதுவும் பேசாமல் இதயாவை சமையலறை பக்கம் அழைத்து செல்ல, குழந்தைகள் இருவரும் அமைதியாக சோபாவில் அமர்ந்தனர்.

“என்னை விடு விஷ்வா.” அவள் திமிற அவன் அவளை தண்ணீரால் துடைத்து தோசைமாவை சட்டென்று தடவ ஆரம்பித்தான்.

அவள் எரிச்சலில், “உஸ்…” என்று சத்தத்தை எழுப்பி பின்னே விலக, “கொஞ்சம் பொறுத்துக்கோ இதயா. சரியாகிரும்.” அவன் அக்கறையோடு கூறி அவளை தன் பக்கம் இழுத்தான்.

“சூடான காஃபி பட்டத்தை விட, நீ இப்ப தொடுறது தான் ரொம்ப எரிச்சலா இருக்கு.” இதயா தன் பற்களை நறநறத்து கொண்டே அவன் தொடுகையில் இருந்து விலக முயற்சித்து கொண்டே கூறினாள்.

“அதுக்கு வேற வழி இல்லை. அதை நீ அனுபவிச்சு தான் ஆகணும்.”  மாவை காஃபி பட்ட இடமெங்கும் தடவியபடி சுள்ளென்று வந்து விழுந்தன அவன் வார்தைகள்.

“காலம் முழுக்க கொடுமையை அனுபவிக்க தான் என் தலையில் எழுதிருக்கே.” அவளின் வார்த்தைகளும் சுள்ளென்று விழுந்தன அவனிடமிருந்து மாவை வாங்கியபடி.

“சூடான காஃபி, உன் கழுத்தில் விழுந்துக்கு பதிலா, உன் நாக்கிலும், தொண்டையிலும் விழுந்திருக்கணும். நான் நிம்மதியா இருந்திருப்பேன்”  அவன் அவள் கன்னத்தை பிடித்தபடி, அவள் கழுத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

“அப்படி நினைச்சி தான் காஃபியை என் மேல் ஊத்தினியா?” அவள் சிலுப்பி கொண்டு கேட்க, கழுத்தை  ஆராய்வதை நிறுத்திவிட்டு, அவள் கன்னத்தை அழுந்த பிடித்து அவளை கோபமாக முறைக்க, தன் வாயை கப்சிப்பென்று மூடி கொண்டாள் இதயா.

 இதயா வாயை மூடி கொள்ளவும், விஷ்வா அவளை மீண்டும் ஆராய தொடங்கினான்.

‘டாப்ஸ் இருந்தாலும், உள்ளேயும் சூடு பட்டிருக்குமோ?’ கேட்க தான் அவன் மனம் துடித்தது.

‘கேட்டா சாமியாட்டம் ஆடிருவா. வலிச்சா அவளே சொல்லுவா. இல்லனா மெதுவா கேட்போம்.’ அவன் யோசனையோடு இதயாவை கவனிக்க, தியா மெதுவாக எழுந்து வந்து கன்னத்தை சுவரோடு அழுத்தி கொண்டு சமையலறை வாசலில் நின்று தன் கண்களை உருட்டியபடி தன் தாயை விடுத்து, தன் தாயை அக்கறையாக பார்த்து கொண்டிருக்கும் தந்தையை கூர்மையாக பார்த்தாள்.

தியாவை கண்டு கொண்ட விஷ்வா விலகி நின்று கொண்டான். ‘நான் யாருக்கெல்லாம் பயப்பட வேண்டியது இருக்கு?’ நொந்து கொண்டான்.

“இதயா, டிரஸ் மாத்திட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.” அவன் கூற, “நம்ம கார்பெட் கீழே விரிச்சிருக்கேன். இருந்தாலும் அபார்ட்மெண்ட் கார்பெட்டை டக்குனு கிளீன் பண்ணனும். கரையாக்கிருச்சுனா ஃபைன் வெளுத்திருவாங்க.” அவள் கூறிக்கொண்டே செல்ல, அவன் அவள் கைகளை பிடித்து நிறுத்தினான் விஷ்வா.

“தியா…” சுவரோரமாக நின்று கொண்டிருந்தவளை அழைத்தான்.

“உங்க அம்மாவை படுக்க சொல்லு.” அவன் கூற, “இல்லை, விஷ்வா நான் பிரேக் பாஸ்ட் பண்ணனும்.” அவள் கூறினாள்.

“தியா, அப்பா குடுத்தா கார்ன் பிளெக்ஸ் சாப்பிட்டுப்ப தானே?” விஷ்வா , தன் மகளை பார்த்தபடி கேட்டான்.

தியா தலை அசைக்க, இதயா உடையை மாற்றிக் கொண்டு சற்று நேரம் படுத்தாள்.

அஜய் எதுவும் பேசவில்லை. தியாவும் மௌனமாக விஷ்வாவை பார்த்து கொண்டிருந்தாள். விஷ்வா காஃபி சிதறிய இடத்தை துடைத்துவிட்டு, அதன் பிறகு குழந்தைகளுக்கு கார்ன் ஃபிளக்ஸ் கொடுக்க, இருவரும் சமத்தாக சாப்பிட்டு கொண்டனர்.

அவன் இதயா அருகே சென்றான். அவள் தூங்கவில்லை. கண்களை மூடிக்கொண்டு படுத்திருக்க, கன்றி சிவந்திருந்த அவள் கழுத்தை பார்த்தான்.

அவள் மருந்து வைத்திருந்த இடத்தை தேடி தேவையான மருந்தை எடுத்து கொண்டான். அவள் அருகே சென்று மாவை துடைத்துவிட்டு மருந்திட்டான். அவள் தன் கண்களை இறுக மூடிக் கொண்டு படுத்திருந்தாள்.

அவனை விலக்க அறிவு விரும்பினாலும், மனம் விரும்பவில்லை. ‘விலக்க முயற்சித்தாலும் பலன் இருக்காது’ என்று அறிவும் சோர்வுற்று மனதோடு இணைந்து கொண்டது.

அவன் ஆள் காட்டி விரல் அவள் கழுத்தில் இருந்த தாலியை பல உணர்ச்சிகளோடு தடவியது.

கன்றி சிவந்த அவள் கழுத்தை அந்த தாலி அறுக்க, அவன் அதை அவள் தலை வரை தூக்கி கட்டினான்.

அவன் தீண்டலில், பல நியாபகங்கள் அலைமோத, ‘எங்கு கண்ணீர் வெளி வந்து விடுமோ?’ என்ற அச்சத்தில், அவள் தன் கண்களை இறுக மூடி கொண்டாள்.

அவன் விழிகள் அவள் உணர்வுகளை உள் வாங்கி கொண்டே உரிமையோடு மருந்திட, உரிமை அதன் அழுத்தத்தை உணர்த்த, “விஷ்வா என்ன பண்ற?” அவள் பதறிக் கொண்டு எழுந்தாள்.

“நான் உன்னை புதுசா என்ன பண்ணிட போறேன்?” அவன் வார்த்தையில் இப்பொழுது கேலி வழிந்து ஓடியது.

“கேவலமா இல்லை இப்படி பேச உனக்கு?” அவள் எகிற, “நான் என்ன யார் கிட்டயோவா இப்படி பேசுறேன்? என் பொண்டாட்டி கிட்ட தானே?” அவன் அசராமல் கூறினான்.

“நீ என்னை கவனிச்சிக்கிட்ட லட்சணம் போதும். மருந்தை கொடு. நான் போட்டுக்குறேன்.” அவள் கூறிக் கொண்டு அவனை வெளியே அனுப்பினாள்.

“நான் அக்கறையோடு, மருந்து தான் போட்டேன். உனக்கு தான் சந்தேகம்” அவன் மருந்தை கொடுக்காமல் பேச, “உன் அக்கறையின் அளவு எனக்கு தெரியும்” அவள் கடுப்போடு மருந்தை பிடுங்கி கொண்டாள்.

‘எப்ப பாரு என்னை விட்டு விலகி போகணும் இவளுக்கு.’ விஷ்வா மேலே எதுவும் பேசவில்லை. அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.

அதன்பின் இருவரும் அன்றைய அலுவலக வேலையில் மூழ்கிவிட்டனர்.

இதயா அன்று மதிய உணவாக வேர்கடலை மணக்க தேங்காய் சாதம் செய்திருந்தாள். அதற்கு ஏதுவாக உருளை கிழங்கு பொரியல் மஞ்சள் நிறம் மாறாக பச்சை மிளகாய் கீறி போட்டு வைத்திருந்தாள்.

அஜய்க்கும்  தன்னை போல் தேங்காய் சாதம் பிடிக்காது என எண்ணியபடி கொத்தமல்லி மணக்க சாம்பார் சாதம் நெய்விட்டு செய்திருந்தாள்.  குழைவாக தயிர் சாதமும் அதற்கு ஏதுவாக கொத்தமல்லி துவையலும் அரைத்திருந்தாள்.

“எதுக்கு இவ்வளவு பண்ற இதயா?” என்று முகத்தை சுழித்தான் விஷ்வா.

“அஜய்க்கு தேங்காய் சாதம் பிடிக்காது. தியாவுக்கு தேங்காய் சாதம் பிடிக்கும். தியாவுக்கு சாம்பார் சாதம் அவ்வளவு பிடிக்காது.” வசதியாக அவனது விருப்பதை ஒதுக்கிவிட்டு கூறினாள்.  

“சாப்பாடு முன்னபின்ன இருந்தா நாங்க அட்ஜஸ்ட் பண்ணிப்போம்.” விஷ்வா சற்று வெடுக்கென்றே கூறினான்.

‘இப்ப இவனுக்கு என்ன கோபம்? எதையாவது நினச்சிகிட்டு எங்கயாவது எறிந்து விழ வேண்டியது.’ இதயா எதுவும் பேசவில்லை. அவள் அமைதியாக உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.

“அப்பா, சாரி. நானா வேணுமின்னே ஓடி வரலை. எனக்கு என் விளையாட்டு சாமான் இல்லை. அது தான் தியாவோடதை எடுத்துட்டு வந்தேன்.” அஜய் கூற, “நீ பார்த்து வரணும் அஜய்.” அவன் கண்டிப்போடு கூறினான்.

அஜயின் முகம் வாடியது. “வலிக்குதா? சாரி, நான் வேணுமுன்னு வரலை. தெரியாம தான்…” அவன் இதயாவை பார்த்துக்கூற, “அஜய், அம்மாவுக்கு ஒண்ணுமில்லை. நீ எதுக்கு சாரி எல்லாம் சொல்ற. இதோ பாரு, நான் நல்லா தானே இருக்கேன்.” இதயா புன்னகைக்க, அந்த புன்னகை அஜயையும் தொற்றி கொண்டது.

குழந்தைகள் சாப்பிடும் வரை விஷ்வா, இதயா இருவரும் சாப்பிடவுமில்லை. எதுவும் பேசவும் இல்லை. தியாவும் எதுவும் பேசவில்லை. விஷ்வாவை மட்டும் கூர்மையாக பார்த்து கொண்டிருந்தாள்.

தியா, அஜய் இருவரும் சாப்பிட்டுவிட்டு செல்ல, “நான் இன்னைக்கு  அஜய் விளையாட்டு பொருளை எடுத்திட்டு வரேன்.” அவன் சாப்பிட்டு கொண்டே கூற, “இன்னைக்கு வேண்டாம். லீவு நாளில் போய்ட்டு வா. அதுவும் வேற எங்கயும் போகாத” இதயா அவன் பக்கம் உருளைகிழங்கை நகர்த்தி கொண்டே கூற, அவன் அவளை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தான்.

“இதயா…” அவன் குரலில் இப்பொழுது தயக்கம்.

“ம்… ” அவள் புருவங்களை உயர்த்த, “வேற எங்கயும் சூடு பட்டிருக்கான்னு பார்த்தியா? வலிக்க போகுது.” அவன் அவளை கரிசனத்தோடு பார்த்தபடி கேட்க, “அக்கறையா?” அவள் நக்கலாக கேட்டாள்.

“ஏன் நீ மட்டும் தான் என் மேல அக்கறை காட்டலாம். நான் காட்ட கூடாதா? என் மேல, காஃபி சிந்திடுமுன்னு தானே உன் மேல திருப்பிகிட்ட?” அவன் மீண்டும் சுள்ளென்று எகிறினான்.

“ஆமா விஷ்வா எரியுது. தகதகன்னு என் நெஞ்சு எரியுது. இன்னைக்கு காஃபி சிந்தியாதல் இல்லை. பல வருஷத்துக்கு முன்னாடி எனக்கு அஜய் வேணும்ன்னு கேட்டு உன் காலில் விழுந்து கதறினனே, அன்னைக்கு உன் காலால் என் நெஞ்சில் எட்டி மிதிச்சியே அது இப்ப வரைக்கும் எரியுது. உன் முகத்தை பார்க்கும் பொழுதெல்லாம் எரியுது. வெறி கொண்ட கோபம் வருது. மருந்து இருக்கா உன் கிட்ட.” அவள் அவனை பார்த்து குரூரமாக கேட்டாள்.

“அன்னைக்கு நடந்தது எதேச்சலா நடந்தது.” அவன் தயங்கினான்.

“ஆஹான்…” அவள் குரலில் நக்கல் வழிந்தோடியது.

“என்ன நக்கல் பண்ற? கொழுப்பா? அது என்னையும் மீறி நடந்த விஷயம். அது உனக்கும் தெரியும்.” அவன் குரல் இறுகி ஒலித்தது.

“எனக்கு தெரிஞ்சதெல்லாம் நீ என்னை நெஞ்சில் எட்டி மிதிச்சிட்டு என் பிள்ளையை எங்கிட்ட இருந்து பிடுங்கிகிட்ட.” அவள் உறுதியாக கூறினாள்.

அவள் குற்றச்சாட்டில், “நான் அப்படி நடத்துகிற ஆளா? விஷ்வா, அவன் இதயா கிட்ட அப்படி நடந்துப்பானா?” அவன் கண்களில் நீர் தேங்க, கரகரப்பான குரலில் கேட்டான்.

“என் விஷ்வா. இதயாவின் காதலன் விஷ்வா அப்படி நடந்துக்கவே மாட்டான்.” இதயா கூற, அவன் கண்களில் கண்ணீரோடு மெல்லிய புன்னகையும் எட்டி பார்த்தது.

“ஆனால், செல்வநாயகி, வரதராஜனின் மகன் விஷ்வா, இதயாவின் புருஷன் விஷ்வா எதையும் செய்வான்.” அவள் டைனிங் அறையிலிருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி அழுத்தமாக கூறினாள்.

“இதயா” அவன் கர்ஜனையில் குழந்தைகள் விளையாட்டை விட்டுவிட்டு, வெளியே எட்டி பார்த்தன.

தியாவையும், அஜயையும் மனதில் கொண்டு தன்னை நிதானப்படுத்தி கொண்டு, வைத்த சாப்பாடை மட்டும் முடித்து விட்டு அவன் எழுந்தான்.

“சாப்பிட்டுட்டு போ விஷ்வா.” இதயா கூற, “நீ வார்த்தையில் வச்சிருக்கிற விஷத்தை சாப்பாட்டுல்ல வை. நிச்சயம் சாப்பிடுறேன்.” அவன் வார்த்தைகளை கடித்து துப்ப, “அதுக்கு மனசு வந்திருந்தா, அதை நான் என்னைக்கோ வச்சிருப்பேன்.” அவள் அசராமல் கூறினாள்.

“ம்… ச்…” சலிப்பான குரலில், அலுவலக வேலையை கவனிக்க சென்றுவிட்டான் விஷ்வா.

இதயாவிற்கு சற்று சோர்வாக இருந்தது. ‘இந்த வாக்குவாதத்தில் எதை சாதித்துவிட்டோம்?’ என்ற வெற்றிடம் அவளிடம்.

ஹாலில் சோபாவில் மடிக்கணினியோடு அமர்ந்தாள்.

தன் நெஞ்சை நீவி கொண்டாள். சூடான காஃபி வழிந்து ஓடிய இடம் எரிந்தது. அத்தோடு, அவன் கால்கள் பட்ட இடமும். ‘விஷ்வா அப்படிபட்டவன் இல்லை தான்.’ அவன் மேல் காதல் கொண்ட மனம் அவனுக்காக பரிந்து பேசியது.

‘ஆனால், அன்று என்னை மிதித்தது அவன் தானே?’ அவள் அறிவு அவளுக்கு நிதர்சனத்தை கோடிட்டு காட்டியது.

அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

‘அவனை காயப்படுத்த தான், நான் அவனை காதலித்தேனா? இப்படி சண்டையிட்டு பிரியத்தான் விதி எங்களை சேர்த்து வைத்ததா?’ அவள் கண்ணீரை துடைத்து கொண்டு, மனதை ஒருநிலை படுத்தி வேலையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டாள்.

அஜய் அதே நேரம், தன் தந்தையிடம் சென்று அருகே அமர்ந்தான். அவன் பின்னே சென்ற தியாவும் தன் தந்தையின் முன் இடுப்பில் கைவைத்து நின்றாள்.

“அப்பா, உங்களுக்கு என்னை விட அம்மாவை அதிகமா பிடிக்குமா?” அஜய் கேட்க, “அப்படி இல்லைடா அஜய். அம்மா பாவம் இல்லையா? அம்மா மேல சூடு காஃபி பட்டிருச்சில்லை? அது தான் அப்பா கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.” விஷ்வா தன் மகனை சமாதானம் செய்தான்.

இதயா பக்கத்துக்கு அறையில் இருந்தாள். அவள் செவிகளில், அவர்கள் பேசுவது தெளிவாக விழுந்தது.

“நீங்க எப்பயாவது தானே கோபப்படுவீங்க. ஸோ என் மேல தான் மிஸ்டக்கேன்னு எனக்கு தெரியும் அப்பா.” அஜய் கூற, விஷ்வா தன் மகனை அருகே அமர்த்தி கொண்டு தலை கோதினான்.

தியாவையும் அருகே அழைக்கும் ஆவல் அவனுள் எழுந்தது. ‘நேத்து வரைக்கும் பக்கத்தில் கூட வரலை. இன்னைக்கு ஏதோ என் முன்ன வந்திருக்கா, அதை கெடுதிற கூடாது.’ எண்ணியபடி, தன் மகளை பார்த்து கொண்டிருந்தான்.

“பாட்டி, தாத்தா  நீங்க கோபமா இருந்தா பக்கத்துல கூட வரமாட்டாங்க. நீங்களும் கோபமா பேசுவீங்க. ஆனால், அம்மா கிட்ட திரும்ப கோபப்படவே இல்லையே. அம்மா சொன்னதும் கேட்டுக்கிட்டிங்க. அம்மா, உங்களுக்கு ரொம்ப கிளோஸ் ஃபிரெண்டா? அம்மாவை ரொம்ப ரொம்ப பிடிக்குமா?” அஜய் மீண்டும் கேட்க, தன் மகனின் கேள்வியில் இதயா குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

‘என் விஷ்வா… அவன் என் விஷ்வா அல்லவா?’ அவள் மனம் அரற்றியது.

“ஆமாடா, எனக்கு உங்க அம்மா எனக்கு ரொம்ப கிளோஸ் ஃபிரெண்ட் தான். ரொம்ப கிளோஸ் தான். ரொம்ப… ரொம்ப… அவ மேல நான் கோபப்படவே மாட்டேன். அவள் என்ன சொன்னாலும் நான் கேட்பேன்.” தன் மகனிடமும், அவனை பார்த்து கொண்டிருந்த மகளிடமும் பகிர்ந்து கொண்டான்.

‘அவன் சொல்வது உண்மை தானே’ இதயாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவன் செய்த தவறுகளை அவள் மனம் நெஞ்சோடு மறைத்து கொண்டது.

விஷ்வாவின் குரல் அன்பை மட்டுமே  தாங்கி நின்றது. ‘தான் இதயா கூறி கேட்காததையும், தான் அவள் மேல் கோபம் கொண்டு தவறு செய்ததையும்’ எண்ணி மனதோடு வருந்தினான்.

‘அவளும் தவறு செய்திருக்கிறாள்’ அவன் நினைவலைகள் கூற, ‘நான் விட்டுக் கொடுதிருக்கலாமே? என் இதயா தானே!’ என்றுஅவன் மனம் காலம் தாழ்ந்து வாதிட்டது.

விஷ்வா அருகே அமர்ந்திருந்த அஜயை சற்று பொறாமையோடு பார்த்தாள் தியா.

சில நிமிட அமைதிக்கு பின் தியா, விஷ்வாவை பார்த்து கேட்ட கேள்வியில் அவன் தன் முகத்தை தன் கைகளால் அழுந்த மூடினான். ‘என் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்து கொள்வேன்’ என்பது போல் இருந்தது அவன் செய்கை.

அவன் உள்ளங்கைகளை அவன் கண்ணீர் நனைக்க, ‘ஐயோ, என் விஷ்வாவை நானே குற்றவாளி கூண்டில் நிறுத்திவிட்டேன்னே.’ என்று தன் தலையில் படார் படாரென்று அடித்துக் கொண்டு வேறு அறையில் குலுங்கி அழுதாள் இதயா.

இதயம் நனையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!