Ithayam – 7
Ithayam – 7
அத்தியாயம் – 7
அன்று இரவு வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஆதி. அவன் களைப்புடன் வந்திருப்பது கண்டு மஞ்சுளா அவனுக்கு டீ எடுத்துகொண்டு ஹாலிற்கு வந்தார்.
“என்னப்பா இன்னைக்கு அதிகம் வேலைபோல” என்றவர் கேட்டபடி அவனின் அருகே வந்து அமர்ந்தார்.
“ம்ம் ஆமாம்மா சைட்ல சின்ன பிரச்சனை அதை முடித்துவிட்டு வருவதற்குள் தலைவலியே வந்துவிட்டது” என்றவன் சோபாவில் சாய்ந்து விழி மூடினான்.
“நீ இப்படி சொல்வேன்னு தெரிஞ்சுதான் இஞ்சி தட்டிப்போட்டு டீ எடுத்துட்டு வந்துருக்கேன்” என்று கொடுக்க அவனுக்கும் அது தேவையானதாக இருக்கவே மறுப்பு சொல்லாமல் வாங்கிக் குடித்தான். சிறிதுநேரத்தில் அங்கே அமைதி நிலவிட அதை முதலில் கலைத்தான் ஆதி.
“அம்மா கொல்கத்தாவில் இதவிட நல்ல வேலை ஒன்று கிடைக்கிற மாதிரி இருக்கு. நம்ம அங்கே போலாமா” என்றான் மைந்தன். இந்த ஒரு வருடத்தில் அவனிடம் பல மாற்றங்கள். முதல்போல் இல்லாமல் இப்போதெல்லாம் வேலை என்று ஓடியவனை கண்டு மனம் வலித்தாலும் அவர் அவனை தடுக்கவில்லை.
“ம்ம் வேலை எப்போ கிடைக்கும்னு சொல்லுப்பா நம்ம போலாம்” என்றவர் அவனிடமிருந்து கப்பை வாங்கிகொண்டு சமையலறைக்குள் சென்று மறைந்தார் மஞ்சுளா.
அவன் சோபாவில் சாய்ந்து விழிமூட மூடிய விழிகளுக்குள் வந்து நின்று புன்னகை பூத்தாள். அவளை மறக்க நினைத்து முடியாமல் அவன் தவிக்கும் தவிப்பு அவனுக்கு மட்டுமே தெரியும். ஒவ்வொரு முறையும் அவளையே தேடி ஓடும் மனதிற்கு கடிவாளமிட முடியாமல் தோற்று போனான். ஆனாலும் அவளை காண இன்றுவரை அவன் மதுரைக்கு செல்லவில்லை. மாறாக அவளோடு அன்று கடையில் எடுத்து பார்த்தான்.
மறுநாள் வழக்கம்போல சைட்டிற்கு கிளம்பி செல்லும் வழியில் நடு ரோட்டில் கார் ரிப்பேர் ஆகி சாலையின் ஓரத்தில் நின்ற ரகுபதியை கண்டு பைக்கை நிறுத்தி இறங்கினான் ஆதி.
அவனைக் கண்டவுடன், “வாப்பா ஆதி” என்றார்.
“என்ன ஸார் இங்கே நிற்கிறீங்க. நான் வேண்டும் என்றால் ஏதாவது ஹெல்ப் பண்ணவா” என்ற கேள்வியுடன் அவரை நெருங்கினான்.
“என்னன்னு தெரியல. திடீரென்று வண்டி ரோட்டில் நின்றுவிட்டது. இன்னைக்கு வேற ரேவதிக்கு செகேண்டு செமஸ்டர் லாஸ்ட் எக்ஸாம். இதை எழுதாமல் இருந்தால் அரியர் ஆகிரும்..” என்றவர் சொல்லும் போது தான் ரேவதி அவரின் அருகே நிற்பதைக் கண்டான்.
“சார் நான் கொண்டுபோய் ரேவதியை காலேஜில் விடுகிறேன்” என்றதும் அவருக்கும் அதுவே சரியென்றே தோன்றியது. அவர் மகளிடம் ஒப்புதலாக தலையசைக்க புன்னகையுடன், “பாய் அப்பா” என்றாள் மகள்.
ஆதி பைக்கை ஸ்டார்ட் செய்ய அவனின் பின்னோடு ஏறியமர்ந்த ரேவதி அவனின் திரண்ட தோள்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
தந்தைக்கு டாட்டா காட்டிட, “நல்லா எழுதும்மா” என்றார் அக்கறையுடன். இருவரும் வண்டியில் அங்கிருந்து கிளம்பிட கார் ரெடியானது தன் நிறுவனம் நோக்கி சென்றார் ரகுபதி.
தம்பி மகனின் சிபாரிசில் வரும் பையன் எப்படி இருப்பானோ என்ற எண்ணத்தை எல்லாம் ஒரு நொடியில் விரட்டிவிட்டான் ஆதித்யா. அவனிடம் இருக்கும் துடிப்பையும், வேகத்தையும் கண்ட ரகுபதிக்கு தன்னை இளமை காலத்தில் பார்த்தது போல ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது.
அவன் இந்த நிறுவனத்தில் சேர்ந்த நாளில் இருந்து அவரின் தொழில் வளர்ச்சிக்கு சென்றது. புதிய புதிய ஐடியாவை கொண்டு அவனே புதிதாக உருவாக்கும் கட்டிடங்களுக்கு மக்களின் இடையே நல்ல வரவேற்பு இருந்தது.
அதே மாதிரி அவனின் குணம் அவருக்கு பிடித்துப் போனது. அதனால் தான் அவனோடு தன் மகளை நம்பிக்கையுடன் அனுப்பி வைத்தார் ரகுபதி.
“ரேவதி இன்னைக்கு என்ன எக்ஸாம்” என்றவன் விசாரிக்க, “இன்னைக்கு தியரி பேப்பர் எகனாமிக்ஸ்” என்றாள் புன்னகையுடன்.
“என்ன மேடம் எல்லாம் நல்ல படிச்சாச்சா?” அவன் வண்டியை சீரான வேகத்தில் வண்டியை செலுத்தியபடி கேட்டான்.
“நான் எங்கே படிச்சேன். நைட் கீதா கோவிந்தம் படத்தை பார்த்துட்டு உட்கார்ந்திருக்கேன்” என்றாள் பரிச்சை பற்றிய கவலை இல்லாமல்.
“அப்போ இன்னைக்கு எக்ஸாம் கோவிந்தாதானா” என்று நக்கல் குரலில் கேட்டவனின் பின்னந்தலையில் தட்டிய ரேவதி, “உனக்கு எப்போது கிண்டல்தான்டா” என்றாள் சிணுங்கலுடன்.
“பின்ன நேற்று முழுக்க படிக்காமல் இன்னைக்கு பரீட்சைக்கு போனால் பெயில் ஆகாமல் வேற என்ன பண்ண முடியும்” அவளை கிண்டலடித்தபடி அவளின் கல்லூரி முன்னாடி வண்டியை நிறுத்தினான் ஆதி.
“நீ படிக்காத விஷயம் உன் வீட்டு வண்டி வரை தெரிஞ்சிருக்கு ரேவதி” என்று குறும்புடன் கண்சிமிட்டி சிரித்தவனை புரியாத பார்வை பார்த்து வைத்தாள்.
“என்ன புரியலையா” என்றதும் அவள் மறுப்பாக தலையசைக்க, “அதுதான் உனக்கு ஹெல்ப் பண்ண வண்டியே லிப்பேர் ஆகிருச்சு.”என்றவன் மீண்டும் சிரிக்க, “நீ வேற ஏன் என்னை பயமுறுத்தர” என்று அவனின் கையைப்பிடித்து நறுக்கென்று கிள்ளி வைத்துவிட்டு சென்றாள் ரேவதி.
அவன் தன்னை வேண்டுமென்றே கேலி செய்கிறான் என்ற எண்ணத்தில் மெல்ல அவளின் மனம் அவனிடம் படர தொடங்கியது. அவள் அதை காதல் என்று தெளிவான முடிவுக்கு வந்தாள். அவளை நினைத்து தனக்குள் சிரித்தபடி சைட் நோக்கி வண்டியை செலுத்தினான். அதற்கு பிறகு ரேவதியை அவன் சந்திக்க வாய்ப்பு அமையவில்லை.
அவனுக்கு இன்டர்வியூ லெட்டர் கொல்கத்தாவில் இருந்து வரவே அதை போய் அட்டன் செய்துவிட்டு வந்தான். அவனின் முயற்சி வீண் போகவில்லை. அவனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது.
அன்று அலுவலகத்தின் உள்ளே நுழைந்த ஆதியை கண்டதும், “என்னப்பா ஆதி இன்னைக்கு சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கிற” என்றார் ஆச்சரியத்துடன்.
“ஸார் நான் என் வேலையை ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன்” என்றான் சாதாரணமாக.
அவன் சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியை தத்தெடுத்தது ரகுபதியின் முகம். திடீரென்று ஆதி வந்து இப்படி சொல்வான் என்று அவர் நினைக்கவே இல்லை. ஆனாலும் நல்ல திறமை உள்ள பையனை கைநழுவ விட அவருக்கு மனமில்லை.
“ஏன் ஆதி உனக்கு இங்கே என்ன பிரச்சனை? சம்பளம் இன்னும் அதிகமாக வேண்டும் என்றாலும் கேளு நான் தருகிறேன்” என்றார் புன்னகையுடன்.
அவரிடம் இப்படியொரு பேச்சு வருமென்று தெரிந்தே வந்திருந்த ஆதிக்கு அவரை சாமதானம் செய்வது அவ்வளவு பெரிய விசயமில்லை.
“ஸார் நீங்க எனக்கு நல்ல சம்பளம் தான் தரீங்க” என்றான்.
“அப்புறம் ஏன்ப்பா கம்பெனியை விட்டு போறேன்னு சொல்ற” என்றார் அவர் புரியாத பாவனையுடன்.
“எனக்கு ஒரு டிரீம் இருக்கு சார். அதுக்கு நான் இன்னும் அதிகமாக கத்துக்கணும்னு நினைக்கிறேன். இப்போ கொல்கத்தா போலாம்னு இருக்கேன்.” என்றவன் தொடர்ந்து,
“எனக்கு கன்ஸ்ட்ரக்ஷன் ஸ்டார்ட் பண்ணனும் என்ற ஆசை இருக்கு சார். சின்ன வயதில் இருந்தே அது என்னோட கனவு. இங்கே வந்து நிறைய விஷயங்களை கையாள கத்துகிட்டேன். இதே மாதிரி அங்கே சென்று வேலையைக் கற்றுகொண்டு சீக்கிரமே பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ண இருக்கேன் சார்” அவன் மனதை மறைக்காமல் அவரிடம் கூறினான்.
அதுவரை அவனை சாதாரணமாக பையன் என்ற எண்ணத்தில் இருந்த ரகுபதி. அவனின் இந்த தெளிவான பேச்சில் அசந்துதான் போனார் என்றே சொல்லலாம்.
“ஹே மேன் உனக்கு இருக்கும் திறமைக்கு நீ இன்னும் நல்ல நிலைக்கு வருவ. உன்னை அடுத்த முறை பார்க்கும்போது ஒரு நிறுவனத்தின் முதலாளியாக மட்டும் தான் நான் உன்னைப் பார்க்கணும்” என்று அவனின் தோளைத்தட்டி அனுப்பி வைத்தார்.
அவருக்கு அவனை அனுப்பியதில் சிறிய வருத்தம் இருந்தபோது, ‘ஒரு தொழிலாளி முதலாளியாக மாறுவதில் தவறில்லை என்ற எண்ணத்துடன் அவனை அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.
தன் தேர்வுகள் முடிந்து வீட்டில் இருந்த ரேவதிக்கு சென்னை கல்லூரி பிடிக்கவில்லை. கொல்கத்தாவில் ஒரு கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படிக்க போவதாக அவளின் தோழி ஒருத்தி சொல்ல இங்கிருந்து அங்கே போலாமா என்ற எண்ணத்திற்கு வந்திருந்தாள்.
ரேவதிக்கு மனம் அடிக்கடி அலைபாய்ந்ததில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தத்தளித்த மகளின் மனநிலையை உணராமல், “இந்த ஆதியை அனுப்பிட்டு மனசே இல்ல விமலா” என்றவர் சாப்பிட அமர்ந்தார்.
கணவனுக்கு பரிமாறிய விமலா, “நம்ம சிவாவோட ஃப்ரெண்டு தானே?” என்று சந்தேகமாக இழுக்க, “ம்ம் அவன்தான். இன்னைக்கு திடீரென்று வந்து வேலையை ரிசைன் பண்றேன்னு சொன்னான். நானும் சரின்னு சொல்லி அனுப்பிட்டேன்” என்றவர் சாதாரணமாக சொல்லிவிட்டு சாப்பிடுவதில் கவனமானார்.
அதுவரை படிப்பை பற்றிய சிந்தனையுடன் இருந்த ரேவதிக்கு தூக்கிவாரிப்போட்டது. அவன் வேலையைவிட்டு செல்வது பற்றி தன்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் போய்விட்டான் என்றது சுள்ளேன்று கோபம் வந்துவிட்டது.
ஆதியின் மீது நம்பிக்கை இருந்ததால், “அப்பா என்ன சொல்றீங்க” என்று கேட்டபடி சோபாவில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.
“ஆமா பாப்பா. ஆதி வேலையைவிட்டு போயிட்டான்” என்று சொல்ல ரேவதியின் முகம் மாறுவதைக் கண்டு விமலாவிற்கு சந்தேகம் வந்தது. தன் கணவனின் முன்னாடி மகளிடம் இதுபற்றி கேட்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார்.
ஆனால் சிவாவிடம் கேட்டு ஆதி இருக்கும் இடத்தை தெரிந்துகொண்ட ரேவதி அதுக்குமேல் செய்ய வேண்டிய வேலைகளை மனதிற்குள் பட்டியலிட்டாள்.
தன் குடும்பத்துடன் சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு சென்றான். புதிய இடம், புது மனிதர்கள் என்று அவனுக்கு கொல்கத்தா வாழ்க்கை பிடித்துப்போனது. அங்கே அவனுக்கு நல்லவர்களின் அறிமுகம் சில கிடைத்து அவனின் வாழ்க்கையில் புதியதிருப்பு முனையைக் கொண்டு வந்தது.
தன் சொந்த முயற்சியால் முன்னேறிய ஆதி முதல் முதலாக தனக்கென்று தனியாக அவனின் பேரில் கன்ஸ்ட்ரக்ஷன் தொடங்கினான். தொழில் துறையில் அவ்வளவு சீக்கிரம் வேறு யாரையும் முன்னேற விடமாட்டார்கள் என்ற உண்மை புரிதாலும் அவன் பின் வாங்காமல் தொழிலில் தனித்து நிற்க கற்றுக் கொண்டான்.
ஆதியிடம் ஒரு பிடிவாதம் இருந்தது. அவன் ஒன்றை செய்ய நினைத்தால் அதற்கு ஆயிரம் தடைகள் வந்தாலும் பயப்படாமல் முன்னேறுவான். அவன் நினைத்தை சாதிக்கும் ராகம் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம்.
தன் தொழிலை அவன் அதிகமாக நேசித்தான். அதை முன்னேற்ற பாதையில் கொண்டு சொல்ல தன்னால் முடிந்தளவுக்கு நேர்வழியில் பகைவர்களை பந்தாடிவிட்டு முன்னாடி வந்துவிட்டான்.
தன் நண்பன் தனியாக நிறுவனம் தொடங்க விஷயம் அறிந்து சிவாதான் சந்தோசபட்டான். சிலருக்கு மற்றவர்கள் முன்னேறுவதைக் கண்டு பொறமை எழும். ஆனால் சிவா தன்னால் ஒருத்தன் முன்னுக்கு வந்து இருக்கான் என்று சந்தோசப்பட்டான். தோல்வியிலும் சரி வெற்றியிலும் சரி சரியான நேரத்தில் தோள் கொடுப்பவன் தோழன் மட்டுமே.
அவனை நேரில் பார்க்க நினைத்த சிவா உடனே கொல்கத்தா கிளம்பிச் சென்றான். அவன் ஏர்ப்போர்டில் கால்வைத்த மறுகணம், “சிவா” என்று ஓடிவது நண்பனை ஆரத்தழுவி கொண்டான்.
தன்னை அழைத்துசெல்ல வந்த ஆதியை கண்டதும், “டேய் ஆதி நீ இவ்வளவு தூரம் தொழிலில் முன்னேறிய பிறகும் இன்னும் பழசை மறக்காமல் இருக்கிற” என்று சந்தேகமாக புருவம் உயர்த்திய நண்பனின் முதுகில் ஒரு அடிபோட்டான் செல்லமாக.
“நான் எப்போதும் பழசை மறக்க மாட்டேன்னு உனக்கு தெரியாதா?” என்று இரு பொருள்பட கூறியவன் அவனை அழைத்துக்கொண்டு காரில் ஏறினான்.
ஆதி சாலையில் கவனத்தை பதித்தபடி காரை லாவகமாக ஓடிட,“டேய் ஆதி நீ கன்ஸ்ட்ரக்ஷன் ஸ்டார்ட் பண்ணுவ என்று நான் நினைக்கவே இல்லடா” என்றான் சிவா புன்னகையுடன்.
அவன் என்னதான் மனம் திறந்து பாராட்டினாலும், திக்கு தெரியாமல் நின்றவனுக்கு வழிகாட்டியாக வந்து அவனின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் காட்டிய நண்பனை விட்டு கொடுக்க முடியவில்லை ஆதியால்.
அவனின் புறம் திரும்பி,“எல்லாம் உன்னாலதான் சிவா. நீ சென்னை வர சொல்லலன்னா நான் இப்போ எங்கே என்ன பண்ணிட்டு இருந்திருப்பேனோ” அவனின் மனதில் மீண்டும் அந்த நினைவுகள் வலியுடன் எழுந்தது.
அவனை திகைப்புடன் ஏறிட்ட சிவா,“நான் என்னடா பண்ணேன். ஜெஸ்ட் உனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தேன். அதுக்கு பிறகு நீ உன்னோட சொந்த முயற்சியில் வளர்ந்து நிற்கிற. இதில் பங்குகொள்ள எனக்கு எந்த உரிமையும் இல்ல” என்றான் பெருந்தன்மையுடன்.
“சிலர் பேசிய பேச்சுகளும் அதற்கு நான் அடைந்த அவமானமும் தான் சிவா என்னை இவ்வளவு வேகமாக முன்னேற வெச்சிருக்கு. ஒரு வருடம் கடுமையாக உழைச்சு இந்த இடத்திற்கு வந்திருக்கேன். எப்படியும் இந்த இடத்தைவிட்டு கீழே போக கூடாதுன்னு உறுதியாக இருக்கேன்” என்றவனின் குரலில் மாற்றத்தைக் கண்டு நண்பனை திரும்பிப் பார்த்தான்.
அவனின் கண்கள் கோபத்தில் சிவந்திருக்க தாடைகள் இறுகிப்போய் அமர்ந்திருந்தவனிடம் வித்தியாசத்தை உணர்ந்தான். அவனின் மனதில் இருக்கும் ரணம் தெரியாத போதும், “உன்னை யாருமே தோற்கடிக்க முடியாது” என்று நண்பனுக்கு பக்க பலமாக நின்றான்.
ஆதி காரை தன்னுடைய புதிய வீட்டின் முன்னே நிறுத்திட வாசல் வரை வந்து சிவாவை வரவேற்றார் மஞ்சுளா. இருவரும் வீட்டிற்கு வந்து சேரவே மஞ்சுளா அவனை கவனித்து கொள்ள இரண்டு நாட்கள் அங்கே தங்கிய சிவா அங்கிருந்து கிளம்பும்போது, “மச்சி எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்” என்றான்.
“என்ன விஷயம் சொல்லுடா. எதுக்கு என்னிடம் நீ தயங்குற” என்று நண்பனின் தோளில் கை போட்டான் ஆதி.
“இல்ல ரேவதி இங்கேதான் படிக்கிறா. நீ அவளை அடிக்கடி போய் பார்த்துட்டு வாடா” என்று சொல்லி அவள் தங்கியிருக்கும் ஹாஸ்டல் முகவரியைக் கொடுத்தான்.
“அவ சென்னையில் தானே படிச்சா இங்கே எப்படி வந்தாள்” என்று கேட்க, “என் தங்கச்சிக்கு இரட்டை புத்திடா. இதுவா அதுவா என்று மனசை போட்டு குழப்பிட்டே இருப்பா. அப்படித்தான் ஒரு வருஷ படிப்பை வேஸ்ட் பண்ணிட்டு இங்கே வந்து உட்கார்ந்து இருக்கிறா” என்றான்.
“அவ இங்கே வந்து ஒரு வருடம் முடிஞ்சே போச்சு. எப்போதும் வேலை வேலை என்று ஓடும் உன்னிடம் இவளைப்பற்றி எப்படி சொல்றது என்று அமைதியாக இருந்திட்டேன்” என்றான் சிவா சிரிப்பும் வருத்தமுமாகவே.
“உனக்காகவே அவளை ரொம்ப நல்லா பார்த்துக்கிறேன். நீ கவலைப்படாமல் போயிட்டு வாடா” என்று நண்பனை வழியனுப்பி வைத்தான். ரேவதி பற்றி அவனுக்கு அதிகம் அக்கறை இல்லாத காரணத்தினால் அதை ஒதுக்கிவிட்டு தன் வேலையை கவனிக்க சென்றான்.
தன் நண்பனுக்காக ஒருமுறை அவளை சென்று பார்த்து வரலாம் என்ற முடிவுடன் வண்டியை நிறுவனம் நோக்கி செலுத்தினான் ஆதி.