Ithayam – 8
Ithayam – 8
அத்தியாயம் – 8
வானில் மெல்லிய வெளிச்சம் பரவிட பறவைகள் எல்லாம் சிறகடித்து பறந்தது. எங்கிருந்தோ கேட்ட குயிலின் ஓசை அவளின் மேனியை சிலிர்க்க, “அபூர்வா” என்ற தாயின் அழைப்பு அவளின் செவிகளைத் தீண்டியது.
“அம்மா இதோ கிளம்பிட்டேன் இன்னும் பத்து நிமிஷம்..” என்று கூறியவள் சிலநோடிகூட தாமதிக்காமல் வேகமாக குளியலறைக்குள் புகுந்தாள்.
காலையில் பரபரப்புடன் சமையலறையில் பம்பரமாக சுழன்ற மதுவோ, “இன்னைக்கு காலேஜ் என்ற நினைப்பு இவளுக்கு கொஞ்சமாவது இருக்குதா? அதெல்லாம் அவங்க அப்பா கொடுக்கும் செல்லம்” என்று கணவனை வசைபாடிக் கொண்டிருந்தாள்.
“என்ன மது என்னோட தலை சமையல்கட்டில் உருளுது போல..” என்றபடியே ஜாக்கிங் முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த ரோஹித் கேள்வி எழுப்ப, கணவனுக்கு பதில் சொல்லாமல் அவர் வேளையில் கவனமாக இருந்தார்.
வழக்கம்போல வேர்வை சொட்ட சொட்ட வந்து சோபாவில் அமர்ந்த சக்தி, “அம்மா ஒரு கப் டீ” என்று குறும்புடன் தாயை வம்பிற்கு இழுத்தான்.
“டேய் சக்தி உனக்கு டீ வேண்டுமென்றால் வந்து போட்டு குடி.. சும்மா என்னை வம்பிற்கு இழுத்த மகனே நீ என்கிட்ட நல்ல உதைபடுவ..” என்று அவனை மிரட்டிக்கொண்டே வேலையைத் தொடர்ந்தாள் மது.
தன் எதிரே அமர்ந்த தந்தை எதுவும் நடவாதது போல அமைதியாக பேப்பர் படிப்பதைப் பார்த்து, “அப்பா அம்மா டீ கொண்டு வருவாங்களா? இல்ல வரமாட்டாங்களா?” என்று கேட்க பேப்பரில் இருந்து கவனத்தை மகனின் பக்கம் திருப்பியவர்,
“அதை நீ உன்னோட அம்மாவிடமே கேளுடா மகனே” என்று பாவமாக சொல்லிவிட்டு எழுந்து சென்றவரைப் பார்த்து இவனுக்கு வந்த கோபத்தில், “அக்கா..” என்று வீடே அதிரும் வண்ணம் கத்தினான்.
அவனின் சத்தம்கேட்டு அரக்கபரக்க ஓடிவந்த அபூர்வா, “டேய் வீடே அதிரும்படி எதுக்குடா இப்படிக் கத்தி தொலையிற” என்று அவனின் வாயடைத்து நின்றவளுக்கோ ஓடிவந்த வேகத்தில் மூச்சிரைத்தது.
அவள் மெல்ல அவனின் வாயிலிருந்து கையெடுக்க, “அம்மா எனக்கு டீ போட்டு தரமாட்டேன்னு சொல்றாங்க நீயே அவங்கிட்ட கேளு” என்று அவளிடம் கூறிவிட்டு, “நீ வா வந்து காபி போட்டுக் கொடுத்துட்டு அப்புறம் நீ மெல்ல காலேஜ் போ..” அபூர்வாவைத் தள்ளிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தான் சக்தி.
அவள் சென்று காபி போட்டு கொடுத்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பிய அபூர்வாவிற்கு அன்று கல்லூரிக்கு செல்ல மனமே இல்லை. அன்று காதலர் தினம் என்பதால்!
அவள் மனம் அவனை தேடி அலைபாய முக்கியமான எக்ஸாம் இருந்ததால் வேறு வலி இல்லாமல் கல்லூரிக்கு சென்றாள். அங்கே தேர்வை சீக்கிரமே முடித்துவிட்டு செங்கொன்றை மரங்களில் கீழே வந்து அமர்ந்தாள்.
மரம் நன்றாக பூக்க தொடங்கிய சமயம் என்பதால் கையில் விழுந்த பூவை ரசித்தபடி அமர்ந்திருந்தாள். அதற்குள் தேர்வை முடித்துவிட்டு வந்த சித்ரா, “ஆமா உனக்கு என்னடி இந்த மரத்தை அவ்வளவு பிடிக்குது” என்று கேட்டுக்கொண்டு அவளின் அருகே வந்து அமர்ந்தாள்.
அவளின் குரலை காதில் வாங்காமல் மழை வருகிறதா என்று வானத்தையே பார்த்தவளிடம், “அடியேய் நான் ஒருத்தி இங்கே கத்திட்டு இருக்கேன் உன் காதில் அது விழுகுதா இல்லையா?” என்று கேட்டாள்.
“சித்து இன்னைக்கு மழை வருமா?” என்று ஏக்கத்துடன் கேட்டவளின் குரல் அவளின் மனதை பாதிக்க மெல்ல அவளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள்.
முகம் முழுவதும் சோகத்துடன் இருக்க கண்டு, ‘இவளுக்கு அப்படி என்னதான் பிரச்சனை? இவளுக்கு சிரிக்க மட்டும்தானே தெரியும்’ என்ற எண்ணத்துடன் அவளின் அருகே அமர்ந்து அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
யாரிடம் சொல்லாமல் மனதோடு சேர்த்து வைத்த சோகத்தை மெளனமாக கரைக்க எண்ணி அவளின் தோள் சாய்ந்து அமர்ந்தவள் வானத்தை பார்த்தபடியே அமைதியாக இருந்தாள். அபூர்வா எப்போதும் அப்படி இருக்கும் பெண்ணல்ல என்ற விஷயம் அறிந்த சித்ரா கூட இன்று அமைதியாக இருந்தாள்.
திடீரென்று காற்று வேகமாக அடிக்க, “அபூர்வா எழுந்திருடி. மழை வர மாதிரி இருக்கு” என்றவள் வேகமாக எழுந்து கட்டிடம் இருக்கும் இடத்திற்கு செல்ல சடசடவென்று மழை பொழிய தொடங்கியது.
அந்த கட்டிடத்தில் நனையாமல் நின்ற அபூர்வாவின் பார்வை முழுவதும் அந்த மரத்தின் மீதே நிலைத்தது. கொட்டும் மழையில் அந்த மரத்தில் இருந்த பூக்கள் அவளின் கண்களுக்கு தீ பற்றி எறிவது போல காட்சி தரவே, ‘எத்தனை மழை வந்தாலும் என் நெஞ்சிற்குள் எரியும் உன் மீதான காதல் தீ அணையாது பெண்ணே. என் காதலை அப்படியே பிரதிபலிக்கும் இந்த செங்கொன்றை மலர்கள்’ அவன் என்றோ ஒருநாள் காதலோடு தன்னிடம் சொன்னது அவளின் நினைவில் வந்து சென்றது.
“ஐ லவ் யூ ஆதி” என்று மெல்ல முணுமுணுத்த சத்தம்கேட்டு சட்டென்று திரும்பிய சித்ராவிற்கு இந்த விஷயம் அதிர்ச்சியாக இருந்தது. அவள் பிரணவ் காதலை புறக்கணிக்கும் போதெல்லாம் சித்ரா காரணமே இல்லாமல் மைதிலியுடன் இணைந்து தோழியை திட்டி இருக்கிறாள்.
ஆனால் இன்று அவள் தன்னை மறந்து ஆதியின் பேரைக் கூறியதில், “அபூர்வா ஆதி யாரு” என்றாள் வேகமாக தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்.
சித்ராவை திரும்பிப் பார்த்த அபூர்வா, “என்னோட காதலன்” என்றாள் புன்னகையுடன்.
“இந்த காலேஜ்தானா?” என்று சந்தேகத்துடன் கேட்க மறுப்பாக தலையசைத்தாள்.
“அப்புறம்” என்றாள் சித்ரா கேள்வியாக அவளைப் பார்த்தபடி.
“இந்த உலகத்தின் ஏதோவொரு மூலையில் தன் திறமையை நிருப்பிக்க எண்ணி போராடிட்டு இருப்பான்.” என்றாள் விரக்தி புன்னகையுடன்.
சித்ராவிற்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. ஆனால் அபூர்வா தன் காதலனை மறக்க போவதில்லை என்ற உண்மை மட்டும் தெளிவாக விளங்கிட, “உன்னை தேடி வருவாரா” என்று கேட்டாள் மெல்லிய குரலில்.
“ம்ஹும்” என்று மறுப்பாக தலையசைத்த அபூர்வா, “நான் தான் அவரைத் தேடி போகணும்.” என்ற போது மழை வலுக்க தொடங்கியது.
அவளின் பதில்களின் பின்னாடி ஆயிரம் புதிர்கள் மறைந்திருக்க கண்டு, “உன்னிடம் உண்மையை வாங்க முடியாது. நான் என் வேலையைப் பார்க்கிறேன்” என்று சித்ரா அசைன்மெண்ட் எழுத அமர்ந்துவிட இவளோ வேடிக்கை பார்த்தபடி நினைவுகளை பிடியில் சிக்கி தவித்தாள்.
அந்த நினைவுகளை மறக்க முடியாமல் கையில் இருந்த பாடலை ஒலிக்கவிட்டாள். சொர்ணலதா பாடல்கள் என்றாலே மனதிற்கு இதமாக இருக்கும் என்று நினைப்பாள்.
“செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காத்துக்கும் எம் பாட்டுன்னா சந்தோசம்தான்..
செவ்வான அழகிற்கு பொன்மாலைப் பொழுதுக்கு எம் பாட்டுன்னா சந்தோசம்தான்..
அம்மாடி உன் பாட்டு சத்தம் ஆதாரமா நெஞ்சில் நிற்கும்.. அழகே உன் பேரை சொன்னா கவிதை கொட்டும்..
திருவள்ளி கொலுசாட எசப்பாட்டு நான் பாட கைத்தட்டும் பூந்தோட்டம் அதை கேட்டுதான்..
மழை வெயில் உறவாட மனசெல்லாம் அலையோட இலைகூட தலையாட்டும் நான் பாடினா..
தென்மதுர கோவிலுக்கு என் பாட்டுத்தான் பூவிளக்கு..
வழியெல்லாம் பூ போல பூத்திருப்பேன்.. உன் வருகைக்கு என்னாலும் காத்திருப்பேன்..
மேகத்தின் தேடல்கள் வானத்தில் முடிந்தாலும் நேசத்தின் தேடல்கள் முடியாதது..
மாதங்கள் மாறட்டும் வருஷங்கள் சேரட்டும் விதி போட்ட கோலங்கள் அழியாதது..
தென் பொதிகை சாரலுக்கு தெரியுமுங்க என் நெனப்பு..
என் பாட்டு சொல்லாததை தென்றல் சொல்லும்.. என் உசுரோட உன் பாட்டு ஒளியா மின்னும்” என்ற பாடலின் வரிகளை ரசித்த அபூர்வா தன்னையும் அறியாமல் வேதனையில் கண்கலங்கினாள்.
மழையில் நனையாமல் நிற்க நினைத்து வரண்டாவிற்கு ஓடிவந்த பிரணவ் மூன்று வருடங்களில் முதல் முறையாக அபூர்வா அழுவதைக் கண்டான். அத்தனை தடவை முயற்சித்தும் அவர்களால் வரவழைக்க முடியாத கண்ணீரை ஒரு பாடல் தந்துவிடுமா என்ற கேள்வி அவனின் மனதில் தோன்றி மறைந்தது.
அவன் மீண்டும் அவள் கேட்ட பாடலை போட்டு கேட்கும் போது தான் அதிலிருந்த சிலவரிகள் காதல் மனதோடு ஒத்துபோவதை உணர்ந்தவனுக்கு என்னென்றே தெரியாமல் அவளின் மீது பரிதாபம் எழுந்தது.
அன்றிலிருந்து அபூர்வாவிடம் அவன் கண்டுகொள்ளாமல் விலகி நிற்க கண்டு அவளும் நிம்மதியுடன் வலம் வர தொடங்கினாள்.
அன்று காலைபொழுது அழகாக விடிந்திட கல்லூரிக்கு தயாராகி நின்ற மகளின் அழகை கண்டு வாயடைத்துப் போய் நின்றார் மதுமிதா.
நேராக வகிடு எடுத்து பின்னபட்ட கூந்தல் இடையை தழுவி கொண்டிருந்தது. நேரான நெற்றி, வில் போன்ற அழகிய புருவங்கள், மீன் போன்ற விழிகள், நேரான நாசி, சிவந்த இதழ்கள், ஐந்தரை அடிக்கும் சற்று அதிகமான உயரம் என்றபோதும், சந்தன நிறமுடைய பெண்ணிற்கு எடுப்பாக இருந்தது அவள் அணிந்திருந்த லாவண்டர் நிற சுடிதார். கல்லூரிக்கு தயாராகி நின்றவளைப் பார்த்து மதுவின் முகம் மலர்ந்தது.
“என் மகள் ரொம்ப பெரிய பெண்ணாக தெரிகிறாளே” என்று கூறி அவளின் நெற்றியில் முத்தமிட்ட மதுவைப் பார்த்து சிரித்தாள் சிறியவள்.
அதற்குள் ரோஹித் கிளம்பிவர, “அப்பா காலேஜ் கிளம்பறேன்” என்றாள் புன்னகையுடன். அவளைமகளை வாசல் வரை சென்று கணவனும், மனைவியும் வழியனுப்பினர்.
அபூர்வா மூன்று வருடம் கல்லூரி படிப்பை முடித்து நான்காம் வருடத்தில் காலடி எடுத்து வைத்தாள். சக்தி சிவில் இஞ்சினியரிங் இரண்டாம் வருடத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தான்.
ராகவ், ரக்சிதா இருவரும் ஆர்ட்ஸ் காலேஜில் வெவ்வேறு குரூப் எடுத்தனர். ராகவிற்கு வக்கீல் படிப்பு பிடித்தால் பி.ஏ. வரலாறும், ரக்சிதா ஆடிட்டருக்கு படிக்க நினைத்து பி.காம் படிப்பை தேர்வு செய்தனர்
பிளஸ் ஒன் படிப்பில் அடியெடுத்து வைத்தனர். சஞ்சனா பன்னிரண்டாம் வகுப்பில் தன் கவனத்தை திருப்பிவிட்டாள்.
அவள் வீட்டைவிட்டு வெளியே வர, “அபூர்வா அக்கா” என்று ஓடி வந்தான் ராகவ்.
அவன் என்றும் இல்லாத திருநாளாக சீக்கிரமே கல்லூரிக்கு தயாராகி தன் முன்னே நிற்பதைக் கண்டு, “ஒரு வேலை என் வாட்ச் வேலை செய்யலையோ” என்ற சந்தேகத்துடன் வலது கையில் இருந்த கடிகாரத்தை திருப்பிப் பார்த்தாள்.
அவள் எப்போதும் கிளம்பும் நேரம் தான் என்றது கடிகாரம். ஆனால் தன் தம்பி வேகமாக கிளம்பியதைக் கண்டு, “என்னடா இவ்வளவு சீக்கிரம் காலேஜ் கிளம்பிட்ட” என்று ஆச்சரியத்தில் விழி விரிய கேட்டாள்.
“இன்னைக்கு ஏதோ முக்கியமான அசைன்மெண்ட் சப்மிட் பண்ணனும்னு ரக்சிதா தான் சீக்கிரம் கிளம்ப சொன்னா” என்றவன் பாவமாக சொல்ல, “இதுக்கு தான் இவ்வளவு சீக்கிரம் கிளம்பினாயா? நான் கூட சைட் அடிக்க கிளம்பிட்டியோ என்று நினைச்சேன்” என்றாள் குறும்புடன் கண்சிமிட்டியபடி.
“அதுக்கும் தான் சீக்கிரம் கிளம்பினேன். என்ன ஒரு பிரச்சனை? ரக்சிதா கூட இருக்கிற வரை சைட் அடிக்கவே முடியாது” என்றவன் கவலையோடு கூறவே, “என்ன என்னோட பெயர் அடிபடுது” என்ற கேள்வியுடன் அங்கே வந்தாள் ரக்சிதா.
ராகவ் குரல் கேட்டபடியே வாசலுக்கு வந்த சக்தி, “என்ன ராகவ் இன்னும் கிளம்பாமல் இங்கே நின்று என்ன பண்ற” என்றான் கேள்வியாக.
“இதோ இந்த பிசாசுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அதுக்குள் அக்கா வந்தாங்களா அவங்களோட கொஞ்சநேரம் பேசலாம்னு வந்துட்டேன்” என்றவன் ரக்சிதாவை வசமாக சக்தியிடம் மாட்டிவிட, “என்னை எதுக்கு தேவை இல்லாமல் அவரிடம் மாட்டிவிடற” என்றவளின் பார்வை அவனின் மீது படிந்து மீண்டது.
புளூ ஸீன்ஸ், ஒயிட் கலர் ஷர்ட் அணிந்து தன்முன்னே கம்பிரமாக நின்றவனை பார்வையால் வருடிய ரக்சிதா, ‘சக்தி மாமா நீ ரொம்ப அழகா இருக்கிற’ விழியாலே அவனுக்கு ஜாடை செய்ய அவனோ வெறுப்புடன் முகம் திருப்பினான்.
அவன் முறைப்பதைக் கண்டு, “நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க அண்ணி” என்றவள் அபூர்வாவை பேச்சுக்குள் இழுத்தவளின் பார்வையோ சக்தியின் மீதே நிலைத்து நிற்பதைக் கண்ட ராகவ், ‘நீ நடத்து’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
“நீங்க மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கீங்க” என்றவளை அவன் மீண்டும் முறைக்க, “நான் மட்டும் கடவுள்கிட்ட ஸ்பெஷல் வரம் வாங்கிட்டு வந்து பிறந்துட்டேன். அதன் இவ்வளவு அழகாக இருக்கேன். இல்ல சக்தி” என்றாள் அவளும் பொறாமையை தூண்டிவிடும் விதமாகவே.
“ஆமா நீ சொல்றதும் உண்மைதான். இன்னைக்கு எந்த மகராஜன் வந்து உங்கிட்ட சிக்கிட்டு முழிக்க போறானோ” என்று ராகவ் சக்தியின் காதைக் கடிக்க இருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
இப்போதைக்கு இவர்கள் பட்டிமன்றம் கலையாது என்ற உண்மையை உணர்ந்த மது, “இவ இன்னைக்கு காலேஜ் போன மாதிரிதான்” என்று தனக்குள் புலம்பியபடி,
“நீங்க வந்து சாப்பிடுங்க” என்று அவள் கணவனை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்ல மூவரும் வாசலில் நின்றபடி பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தனர்.
“என்ன நான் இல்லாமல் பெரிய பட்டிமன்றம் நடக்குது போல” என்று குறும்புடன் கேட்டபடி அங்கே வந்தாள் சஞ்சனா. இரண்டு தம்பிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அங்கிருந்து செல்ல நினைத்தவளுக்கு வந்தது சத்திய சோதனை.
சக்தியைத் தவிர மற்ற மூவரும் புல் பார்மில் இருப்பதைக் கவனித்து, “இன்னைக்கு நீங்க நாலுபேரும் என்னை காலேஜ் அனுப்ப மாட்டிங்கன்னு நல்லா புரிஞ்சிபோச்சு” என்று அபூர்வா கடிகாரத்தைப் பார்த்தபடியே காலை உதைத்துக்கொண்டு நின்றாள்.
“நான் வந்தும் கிளம்பனும் என்று சொல்வது நியாயமே இல்ல” என்று சிணுங்கிய சஞ்சனாவின் பார்வை ராகவ் மீது நிலைத்தது. ராகவிற்கு சஞ்சனா என்றாலே அவ்வளவு பிடிக்கும். அவளுக்காக எதையும் செய்வான்.
அதே நேரத்தில் ரக்சிதாவின் பார்வை தன் மீது படிவத்தை உணர்ந்த சக்தி, “அக்கா நான் இன்னும் நான் சாப்பிடல. நான் உள்ளே போறேன்” என்றவன் வீட்டிற்குள் செல்வதை கண்டு ரக்சிதாவின் முகம் மாறியது.
கொஞ்ச நாட்களாகவே ரக்சிதாவின் பார்வை மாறிப்போனதில் அவளோடு இயல்பாக பேசுவதை தவிர்த்து வருகிறான் சக்தி. ஆனால் அவளோ அவனையே சுற்றி சுற்றி வந்தாள்.
இருவரும் கண்ணால் காதல் பேசுவதைக் கண்டு, “காதல் வெண்புறா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே” என்று அபூர்வா ரசனையும் படுவதைப் பாடுவதைக் கண்டு திகைப்பில் இருந்து வெளியே வந்த ரக்சிதா மற்றும் சஞ்சனா இருவரும் ஒரே நேரத்தில் பல்லைக் கடித்து கொண்டனர்.
அதற்குள் ரோஹித் சாப்பிட்டுவிட்டு வந்தவர், “அபூர்வா நீ ஸ்கூட்டியில் கிளம்பிறாயா? இல்ல நான் கொண்டு வந்து காலேஜில் விடவா” என்று கேட்க அவளுக்கு அப்போது தான் கல்லூரி நினைவே வந்தது.
“இல்லப்பா நான் ஸ்கூட்டியில் கிளம்பறேன்” என்றவள் அங்கிருந்து நகர ராகவுடன் ரக்சிதா கிளம்பிட, சஞ்சனா சைக்கிளில் ஸ்கூலுக்கு கிளம்பினாள். அவர்கள் கிளம்புவதை பார்த்தபடி வெளியே வந்த சக்தி தன் பைக்கில் காலேஜ் கிளம்பினான்.