IthayamNanaikirathey-1

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 1

இரண்டாயிரத்தி இருபது – ஜனவரி மாதம். (January 2020)

மணி காலை எட்டு நாற்பது.

கதிரவன் கதிர் வீச்சுக்களை செலுத்திக் கொண்டிருந்தாலும், சிறிதும் பயனின்றி அவள் அணிந்திருந்த ஜெர்கினை தாண்டியும் அவள் உடல் குளிரில் நடுங்கியது.

 அவள் செவ்விதழ்கள் அந்த பனியில் வெடவெடத்தது. அந்த வெடவெடப்பிலும், அவள் லிப் க்ளோஸ் அவள் இதழ்களை இன்னும் அழகாக எடுத்து காட்டியது.

அவள் விழிகள், அவள் அலைபேசியில் மணியை பார்த்துக்கொண்டும், சாலையை பார்த்துக்கொண்டு ஒரு அவசரத்தை அப்பட்டமாக காட்டியது.

அவள் அவசரத்தை புரிந்து கொண்டது போல், “மாம்… ஆர் யு கெட்டிங் லேட்? நான் பாத்துப்பேன்.” என்றது ஒரு மழலை குரல்.

 “தட்ஸ் ஒகே.” என்று அவள் தன் புருவங்களை சுருக்கி கொஞ்சும் குரலில் கூறுகையில், அந்த மஞ்சள் நிற பேருந்து வந்து நின்றது. 

குழந்தை ஓடி வந்து அவள் கன்னத்தில் இதழ் பதித்து, “லவ் யு மாம்…”என்று கூறிவிட்டு, பள்ளி வாகனத்தில் ஏற, வரிசையில் நின்று கொண்டது.

 அந்த மஞ்சள் நிற வாகனத்தில் குழந்தையை ஏற்றிவிட்டு, கையசைத்து அவள் காரை நோக்கி நடந்தாள்.

உஃப்” என்று அவள் மூச்சை வெளியிட, குளிரில் புகை போல் பனி மூட்டம் உருவாகியது.

எனக்கு தான் குளிருது. குழந்தைங்க டக்குனு செட்டாகிடுறாங்க.என்று எண்ணியபடி, குளிரை தாங்க முடியாமல்  நீல நிற டோயட்டோ கேமரியை நோக்கி ஓடினாள் அவள்.

ஜி.பி.எஸ் அதன்  இயக்கத்தை துவங்க, அலுவலகத்திற்கு போய் சேரும் மணியை பார்த்தாள். 

இங்க இது ஒரு நல்ல விஷயம். பஸ் கரெக்ட்டா வந்திரும். எல்லாரும் சரியா டைம் மெயின்டைன் பண்ணுவாங்க. ஜி.பி.எஸ் சொல்லுற நேரத்திற்கு கொஞ்சம் முன்ன பின்ன ஆகும். அவ்வளவு தான். டைமுக்கு போய்டலாம்.எண்ணிக்கொண்டு காரை சாலையில் செலுத்தினாள்.

பெரிய கட்டிடம், சின்ன கட்டிடம் என்று கூற முடியாதபடி பலவகை கட்டிடங்களை கொண்ட  அமெரிக்க தலைநகர வாஷிங்டன் அருகே இருக்கும் ஹெண்டன் சாலையில் தன் காரை செலுத்திக் கொண்டிருந்தாள் அவள்.

கார் அனைத்தும் நேர்த்தியாக, சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றி சென்று கொண்டிருந்தது. குளிரையும் பனிப்பொழிவையும் உணர்த்துவது போல் மரக்கிளைகளில் நீர் துளிகள்.

இவை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை என்பது போல் அவள் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது .

அவள் எண்ண ஓட்டமும் தான்!

புது டெலிவரி ஓனர் வராதா சொன்னாங்க. பழைய டெலிவரி ஓனர் எந்த பிரச்சனையும் கிடையாது. இவர் எப்படியோ? இன்னைக்கு மேனேஜர்ஸ் மீட்டிங் அட்டென்ட் பண்ணா தெரிஞ்சிரும்.என்று எண்ணிக்கொண்டே, அவள் காரை லாவகமாக திருப்பினாள்.

காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, அவள் உள்ளே செல்ல நேரம் சரியாக இருந்தது.

வேகமாக அவள் மின்தூக்கியை நோக்கி நடக்க, அவன் அவளை கண்டுகொண்டான். அவள் அவனை கவனிக்கவில்லை.

அவன் கைகளை நீட்ட, மின்தூக்கியின் கதவு திறந்தே இருக்க, உள்ளே நுழைந்து கொண்டாள் அவள்.

மின்தூக்கி மூடி கொள்ள, குளிரிலிருந்து விடுபட்ட உணர்வோடும்நேரத்தோட வந்து சேர்ந்த நிம்மதியோடும்  எதிரே நிற்பவனை பார்த்து நன்றி நவிழ புன்னகையோடு அவள் தலை நிமிர்ந்தாள்.

   அவள் புன்னகை, நிம்மதி, மூச்சு, உலகம் என அனைத்தும் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றது.

 ‘விஷ்வா….அவள் மனம் ஓலமிட்டது. அவன் அவளை ஆழமாக பார்த்தான்.

 அவன் கண்கள் அவளை அளவிட ஆரம்பித்தது. கருப்பு நிற ஃபார்மல் பண்ட்ஸ், சந்தன நிற ஃபுல் ஸ்லீவ் ஷர்ட், ஃப்புல் ஃபார்மல்ஸில் இருந்தாள் அவள்.

ஜெர்கினை கைகளில் வைத்திருந்தாள். அந்த உடை எந்தவித ஆபாசமுமின்றி அவள் அங்க வடிவை அழகாக எடுத்து காட்டியது. 

சிறிதும்அதிக சதை இல்லாத அவள் மேனியை அவன் கண்கள் தழுவியது.

தினமும் உடற்பயிற்சி செய்வாள் போலும். சிறிதும் அவள் மாறவில்லை.அவன் எண்ணிக் கொண்டான்.

அவன் கண்கள் அவள் கழுத்தை தீண்டியது. தாலியை தேடியது. அவள் அணிந்திருந்த உடை அவள் கழுத்தை வாகாக மறைத்துக்கொண்டிருக்க, அவன் தலை மெட்டியை தேடி அவள் பாதங்களை நோக்கி குனிந்தது.

    ‘ஓ… ஷூ, சாக்ஸ்…அவன் நொந்து கொண்டான்.

அவன் விழிகள், அளவிடும் வேலையை முடித்து கொண்டு, தன் வேலை முடிந்தது என்பது போல், அவள் முகத்தில் வந்து நின்றது.

அவன் தான் சிந்தனையில் இருந்தான் என்றால், அவள் சிந்திக்க மறந்து நின்றாள்.

நொடிக்கும் குறைந்த அளவிட முடியாத மணித்துளிகளில், அவன் சொடக்கிட அவள் விழிகள் சுழன்றது.

அவள் கண்களில் ஆர்வம்! ஏக்கம்! ஆசை!

அவள் கண்கள் தான் அவனிடமிருந்தது. அவள் எண்ணங்கள் தறி கெட்டு ஓடியது.

 அவள் இதழ்கள் துடிதுடித்தது. அவனிடம் கேட்கவும், விசாரிக்கவும் அவளிடம் ஒரு கேள்வி வேள்வி உள்ளதே.

அவள் உயிர் அவனிடம் உள்ளதே.

உயிர்…இந்த எண்ணத்தில் அவள் மீண்டும் திக் பிரமை பிடித்தார் போல் நின்றாள்.

என் உயிர் அவனிடம் என்றால், அவன் உயிர் தன்னிடம். அதை கேட்க தான் வந்திருக்கிறானோ?’ அவள் விழிகள் சுதாரித்து கொண்டது.

கேட்கக்கூடாது… கேட்கவே கூடாது. இருப்பதையும் இழந்துவிட கூடாது.தனக்கு தானே உருபோட்டுக் கொண்டாள்.

இவனால் எல்லாம் முடியும். என்னிடமிருந்து பிரிக்க… என்னிடமிருந்து பறிக்க…’ அவள் உள் மனம் அவளை எச்சரித்தது.

இப்பொழுது எதற்காக வந்திருக்கிறான்?  இவன் தான் புது டெலிவரி ஓனரா? இவன் என்னை தேடி தான் வந்திருக்கிறான். யூ.எஸ் வந்தது எனக்கு தெரியும். திட்டமிட்டு வந்திருக்கிறான்.‘  அவள் மனம் கணக்கிட ஆரம்பித்தது.

மின்தூக்கி அடுத்த தளத்திற்கு வந்தது. நொடிப்பொழுதிற்கு குறைவான நேரத்தில் அவள் வாழ்க்கை மீண்டும் அதல பாதளத்தில் விழும் என்று காலையில் யார் கூறி இருந்தாலும் அவள் நம்பியிருக்க மாட்டாள்.

ஆனால், அவன் இருப்பு அவளுக்கு அதை உணர்த்திக் கொண்டிருந்தது.

மின்தூக்கி, அந்த தளத்தில் கதவை திறக்க எத்தனிக்க அது திறந்து விடாமல் இருக்க அவன் மின்தூக்கியின் கிளோஸ் பட்டனை அழுத்திக் கொண்டிருந்தான்.

அவர்கள் இருவர் மட்டுமே மின்தூக்கியில் இருந்தனர்.

அவள் கால்கள் தள்ளாட, பின்னே சாய்ந்தாள்.

இவன் மாறவில்லை…அவள் எண்ணம் பின்நோக்கி சென்றது. அவன் எண்ணங்களும்!

சென்னை ஐ. டி. அலுவலகத்தில், காலையில் வேலையை வேகமாக முடித்துவிடலாம் என்ற எண்ணத்தோடு, இருவரும் காலை நேரம் சற்று சீக்கிரம் வருவதுண்டு.

   மின்தூக்கி, அதன் கதவை திறக்க, அவள் வேகமாக ஓடி வர, அவளை பின்னோடு தூக்கி கொண்டு அலேக்காக மின்தூக்கியில் வைத்தான் அவன்.

விஷ்வா, இதெல்லாம் ஓவர் டா. இங்க இருக்கிற லிஃப்டுக்கு இந்த பில்ட்டப் தேவையா?’ அவன் கைவளைவுக்குள் நின்று கொண்டு அவள் கேட்டாள்.

நான் என்ன சினிமா ஹீரோவா? உன்னை ஓடுற ட்ரைனில் தூக்க, என்னால் நிக்குற லிஃப்டுக்கு தான் லிப்ட் குடுக்க முடியும்.அவன் கலகலக்க, ‘அப்ப, ஓடுற ட்ரைனில் இப்படி லிப்ட் குடுக்க மாட்ட?’ அவள் அவன் மார்பில் குத்தினாள்.

அப்பொழுது லிப்ட் அடுத்த தளத்தில் நிற்க, மின்தூக்கி அதன் கதவை திறக்க எத்தனிக்க, அவள் இடது கைகளால் அவளை இடையோடு அணைத்தபடி, வலது கைகளால் அவன் க்ளோஸ் பட்டனை அழுத்தினான்.

என்னடா பண்ற விஷ்வா?’ அவள் பதற லவ் பண்றோமுன்னு தான் பேரு. நீ வெளியவும் வரமாட்டேங்குற. நமக்கு கிடைக்குற தனிமையே இந்த லிப்ட்ல கொஞ்சம் நேரம், அப்படி இப்படி தான். வரவன் பக்கத்துக்கு லிப்ட்ல வருவான்.அவன் அவளை அணைத்துக் கொண்டான்.

அவள் அவன் மார்பில் மீண்டும் குத்தி, ‘விடுறா, நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.அவள் விலக எத்தனிக்க, ‘கஷ்டப்பட்டு பேசி கல்யாணம் நிச்சயமாயிடுச்சு. ஸோ, ஃபுல் ரைட்ஸ் க்ராண்ட்டட்.அவன் நெருங்க, அவள் மீண்டும் கைகளை ஓங்கினாள்.

அவள் கைகளை பின்னே பிடித்து, ‘அப்படி நெஞ்சில் குத்தாதஅது என் இதயா இருக்குமிடம். அவளுக்கு வலிக்கும்.அவன் ஆழமான குரலில் கூறினான்.

அவன் நெருக்கம், அவன் சுவாச காற்று அவளை ஏதோ செய்ய, ‘குத்தினா?’ அவள் வம்படியாக கேட்டாள்.

அவன் இதழ்கள், அவளை மௌனிக்க செய்து, நொடிபொழுதில் தன்னை மீட்டுக் கொண்டு சிரித்தது.

     அவன் செய்கையில் அவள் முகம் சிவந்தது. மனம் நெகிழ்ந்து, ‘இதயாவை அவ்வளவு பிடிக்குமா?’ அவளும் ஆழமான குரலில் கேட்டாள்.

என் இதய துடிப்பே இதயா தானே? என் இதயம் காதலில் நனையும். என் இதயாவும் காதில் நனைவா.அவன் நெகிழ, ‘லவ் யூ விஷ்வா…அவள் அவன் அணைப்பில் நெகிழ்ந்த படி முணுமுணுக்க மின்தூக்கியின் கதவு திறந்து கொண்டது.

இருவரும் நிகழ் காலத்திற்கு திரும்பினர்.

 அன்றைய நினைப்பில் இப்பொழுது அவள் தன் இதழ்களை துடைத்துக் கொண்டாள். அவன் அருகாமையில் இன்று போல், அந்த செயல் அவளை இம்சித்தது.

அவள் முகம் அவள் எண்ண ஓட்டத்தை படம் பிடித்து காட்டியது.

அவன் ரசனையோடு புன்னகைத்து கொண்டான்.

மின்தூக்கியில் இருந்து வெளியேறி அவள் வேகமாக நடந்தாள். இல்லை ஓடினாள்.

எதற்காக ஓடுகிறேன்? யாருக்கு பயந்து ஓடுகிறேன்? எதை மறக்க ஓடுகிறேன்?’ பல கேள்விகள் அவளை துரத்தியது.

எதுவும் மாறவில்லை. எதையும் நான் மறக்கவில்லை. அதை தான் அவன் ஒரு நொடியில் என் முன் நின்று உணர்த்தி விட்டானே?’ அவள் மனம் வேதனையில்  துடித்தது.

  அவளுடைய வேகமான ஓட்டத்திற்கு ஈடு கட்டுவது போல் தன் எட்டுக்களை எடுத்து வைத்தான் விஷ்வா.

 “பயந்து ஓடுறியா இதயா?” அவன் குரல் கேலியாக ஒலித்தது.

என் பதட்டம் அவனுக்கு தெரிய கூடாது.அவள் பதட்டத்தை மறைக்க நிதானமாக நடக்க ஆரம்பித்தாள்.

நான் எதுக்கு பயப்படணும்?” அவள் சீற, “உன் மனசாட்சிக்கு.” அவன் அழுத்தமாக கூறினான்.

 “வேடிக்கை தான்.” அவள் நையாண்டி பேச, “இதுல என்ன வேடிக்கை இருக்கு?” அவன் புரியாமல் புருவம் உயர்த்தினான்.

நின்று அவனை மேலிருந்து கீழ் வரை அவனை பார்த்தாள்.

கம்பீரம் மாறாத அதே தோற்றம். இந்த சில வருடங்களில், முறுக்கேறிய உடல். ஒழுங்காக உடற்பயிற்சி செய்கிறான் என்பதை கூறும் விதமாக சிறு  தொப்பை கூட இல்லாத உடல் வாகு.

அளவான மீசை. அதற்கு கீழ் குறுஞ்சிரிப்பிடு அழுத்தமான உதடுகள். அவனை அளவிட ஆரம்பித்து, தன்னை மறந்து கொண்டிருந்தாள் இதயா.

  “ஆள், எப்படி இருக்கேன்? நீ அன்னைக்கு பார்த்த மாதிரியே இருக்கேனா?” அவள் மையலை கண்டுகொண்டு அவன் கேட்க, “எல்லாம் சரி தான். ஆனால், அன்னைக்கி போல இன்னைக்கும் மனசு மட்டுமில்லை.” கடினமாக வார்த்தைகளை உதிர்த்துவிட்டு, நடக்க ஆரம்பித்தாள்.

ஓ… மனசு இல்லாத நான் மனசாட்சி பத்தி பேசினது வேடிக்கை தான். நல்ல காமெடி. ஹா… ஹா…” என்று அவன் சிரிக்க, “எனக்கு வேலை இருக்கு. நான் மீட்டிங்க்கு போய்கிட்டு இருக்கேன்.” என்று அவள் வேகமாக நடந்தாள்.

நான் வராம மீட்டிங் ஸ்டார்ட் ஆகாது.” என்று அவன் கூற, “ம்… தெரிஞ்சிகிட்டேன்.” அவள் வேகமாக நடந்தாள்.

எதுக்கு இந்த ஓட்டம்?” அவன் பல அர்த்தம் பொதிந்து கேட்டான்.

அவள் சட்டை செய்யாமல் நடந்தாள். “நில்…” அவன் கூற, அவள் நிற்கவில்லை.

நில்லுன்னு சொல்றேன்னில்லை.” அவன் கர்ஜிக்க, அவள் நடை தொடர்ந்தது.

இதயா…” அவனுடைய ஆழமான அழைப்பில் அவள் கட்டுண்டு நின்றாள்.

அவள் திரும்பி அவனை பார்த்தாள். அவனை பார்க்கும் ஒவ்வொரு நொடியும், அவள் மனம், அவனிடம் எதையோ கேட்க விழைந்தது.

அவள் ஏக்கம் கலந்த பார்வையோடு அவனை பார்த்தாள். அவளின் ஏக்கம் கலந்த பார்வையில் அவன் அடிபட்டு போனான். 

நான் சொல்ல வேண்டுமோ?’ அவன் மனம் உருக எத்தனித்து தயங்க, ‘என்னிடம் கேட்டால், ஒரு வார்த்தை கேட்டால் இவள் குறைந்து விடுவாளா?’ அவன் முகம் முறுக்கி கொண்டது.

இதயா நீ எதையும் மறக்கலை.” அவன் மின்தூக்கி நிகழ்வுகளை   நினைவு கூர்ந்து கேலி போல கூறினான்.

வெட்கங் கெட்ட தன் மனதை நொந்து கொண்டாள் இதயா.  சுதாரித்துக் கொண்டு, “நான் மறக்குற மாதிரி நீ எனக்கு எதையுமே பண்ணலை விஷ்வா.” அவள் கசப்பான குரலில் கூறினாள்.

அவள் குற்றசாட்டை கண்டுகொள்ளாமல், “என்கிட்டே கேட்க எதுமே இல்லையா இதயா?” அவன் குரலில் குற்றசாட்டு மிதமிஞ்சி இருந்தது.

அவள் விழிகள் அவன் பாதத்தை தொட்டு மீள, அவன் உடல் நடுங்கியது. அவள் உடல் வெறுப்பில் இறுகியது.

‘கேட்க மட்டுமில்லை. பறித்து கொள்ளவும் இருக்கிறது.’ என்று கத்த வேண்டும் என்று அவள் உடலின் ஒவ்வொரு அணுவும் கூறியது.

தன்னை கட்டுபடுத்தி கொண்டாள். அவள் இதழ்கள் ஏளனமாக மடிந்தது.

 ‘இல்லை…மறுப்பாக அழுத்தமாக கனல் கக்கும் பார்வையோடு தலை அசைத்துவிட்டு, அவள் நடக்க, அவளை சொடக்கிட்டு அழைத்தான் அவன்.

நான் தான் இங்க டெலிவரி ஓனர். நீ ஜஸ்ட் எ மேனேஜர். ஐ அம யுவர் பாஸ். எல்லாம் என் விருபப்படி தான் நடக்கும.” அவன் மிரட்டிவிட்டு முன்னே நடந்தான்.

இப்பொழுது, அவள் முன்னே நடந்து கொண்டிருந்த அவனை சொடக்கிட்டு அழைத்தாள்.

அவன் தன் தலையை திருப்பி இவளை பார்க்க, “இதயா, பழைய மாதிரியே தான் இருக்கா. முன்ன இருந்த அதே தைரியம், அதே நம்பிக்கை, அதே படிப்பு, முன்னை விட நிறைய அனுபவம், பல தோல்வி, பல அவமானங்கள், பல நிராகரிப்பு எல்லாத்தையும் சந்திச்சிட்டு முன்ன விட கம்பீரமா இருக்கா.” ஒரு நொடி நிறுத்தினாள்.

   அவன் நெஞ்சை  ஆள் காட்டி விரலால் அழுத்தமாக தொட்டு சுட்டி காட்டி, “உங்க நெஞ்சில் இருக்கும் இதயா இல்லை இது.” அவள் உதட்டை சுழித்து ஏளனம் பேசிவிட்டு ஒயிலாக நடந்தாள்.

   இடை வரை  வெட்டப்பட்டு தூக்கி இடப்பட்டிருந்த அவள் கேசம் அவளை போலவே சிலுப்பிக்கொண்டு அவள் நடையோடு அசைந்தது.

அவள் பேசிய பேச்சில் அவன் உதடுகள் புன்னகையில் வளைந்தது.

அவள் தொட்ட இடத்தை ஆசையோடு நீவிக் கொண்டான் விஷ்வா.

பல வருடங்கள், கழித்து அவளின் அந்த ஒற்றை விரல் தீண்டலை எத்தனை கோபம் இருந்தாலும் அவன் மனம் ரசிக்கவே செய்தது.

‘இதயா… இதயா… இதயா…’ அவன் மனதில் உல்லாசம் பொங்க, அவன் உதடுகள் அலுவலகம் என்பதையும் மறந்து சீட்டியடிக்க ஆரம்பித்தது.

இதயம் நனையும்…