ithayamnanaikirathey-10

ithayamnanaikirathey-10
இதயம் நனைகிறதே…
அத்தியாயம் – 10
விஷ்வாவின் பதட்டத்தை வைத்து, ‘ஏதோ பிரச்சனை.’ என்று கணித்து அவள் கர்வ பார்வை பார்த்தாலும், ‘யாராக இருக்கும்?’ என்ற கேள்வி அவள் மனதை குடைந்தது.
விஷ்வா இவர்கள் முன் அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. தனியாக அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டு பேசினான்.
‘ஒருவேளை இந்தியாவில் யாருக்கும் எதுவும் பிரச்சனையோ?’ மனம் லேசாக தவித்தது.
அவள் உதடுகள், “அம்மா, அப்பா…” என்று முணுமுணுத்தது.
‘ஏதாவது பிரச்சனைனா, நான் போக கூட முடியாது. நான் மகளாக பிறக்காமல், மகனாக பிறந்திருக்க வேண்டுமோ?’ அவள் மனம் தவியாய் தவித்தது.
‘கடவுளே, எனக்கு எல்லாத்தயும் நல்லா கொடுத்தலும், முழுசா கொடுக்கலை. அம்மா, அப்பா இக்கட்டான நேரத்தில் அருகில் இருக்கும் பாக்யத்தையாவது கொடு.’ இறைவனை திட்டி கொண்டும், வேண்டி கொண்டும் தன் போக்கில் சிந்தித்தாள் இதயா.
“அம்மா” தியாவின் அழைப்பில் நனவுலகத்திற்கு திரும்பினாள்.
“பிரஷ் பண்ணிட்டு வா. பால் தரேன்.” கூறிக்கொண்டே அடுக்களைக்கு சென்றாள் இதயா.
சிறிது நேரத்தில், “அஜய்…” என்று அழைக்க, தாயின் அழைப்பில் அஜய் ஓடி வந்தான்.
“பொங்கல் பிடிக்குமா?” என்று கேட்க, “ரொம்ப பிடிக்கும் அம்மா.” அவன் புன்னகைத்தான்.
அந்த ‘அம்மா’ என்ற அழைப்பு தொண்டைக்குள் தான் இருந்தது. ஆனால், அவன் உதட்டசைப்பை கண்டுகொண்டாள் இதயா. அவள் கண்கள் மின்னின.
“அஜய்…” அவள் அழைக்க, அவன் முகத்தில் வெட்க புன்னகை.
‘அஜய், விளையாட செல்வதற்கு முன்னும் இப்படி கூப்பிட்டானோ? என் உள்ளுணர்வு கூறியதே. நான் தான் ஏதோவொரு பிரமை என்று எண்ணிக்கொண்டேன்.’ தன் மகனின் முகம் பார்த்தாள்.
அவன் தன் முகத்தை குனிந்து கொண்டு தர்ம சங்கடமாக நெளிந்தான்.
‘அஜய் இயல்பாக அழைக்க வேண்டும்.’ மனதுக்குள் தன்னை தானே சரி செய்து கொண்டாள்.
அவனை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல், “நீ போய் விளையாடு அஜய்.” அவள் கூற, அவன் பால்கனிக்கு சென்றுவிட்டான்.
இதயா, “குளிக்க வேண்டாம்” என்று கூறியும் குளித்துவிட்டு தான் வந்து அமர்ந்தாள் தியா.
“ஏண்டி குளிச்ச?” இதயா கேட்க, “வீட்ல கெஸ்ட் இருக்காங்க. என் மேல பேட் ஸ்மெல் வர கூடாதில்லை அம்மா?” தியா அவள் காரணத்தை கூறினாள்.
“கெஸ்ட்டா?” இதயா வாயை பிளக்க, “இவங்க எல்லாம் எப்ப போவாங்க?” என்று தியா பட்டென்று கேட்டாள்.
“அப்படி கேட்க கூடாது தியா. அண்ணா இங்க தான் இருப்பான். நீ உனக்கு கூட விளையாட யாரும் இல்லைன்னு சொல்லுவியே. இனி, அஜய் அண்ணன் உன்கூட விளையாடுவான்.” இதயா தியாவின் தலை கோதி கூறினாள்.
இவர்களின் செய்கையை பால்கனியில் இருந்து பார்த்தபடி, அஜய் தன் தலையை கோதி கொண்டான். அதில் ஒரு மெல்லிய ஏக்கம் இருந்தது.
‘இங்க தான் இருப்பாங்களா? எதுக்கு?’ தியா யோசனையாக தன் தாயை பார்த்தாள்.
இதயா தியாவுக்கு பால் ஆற்றி கொடுக்க, அப்பொழுது அஜய் உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்தான்.
சோபாவில் இடம் இல்லாமல் போக, விஷ்வா அவர்களுக்கு எதிரே கீழே அமர்ந்தான் தன் மகன் மகள் இருவரையும் பார்த்தபடி.
அவன் கண்களில் குட்டி சந்தோஷம். மூளையோ, ‘இனி தான் பிரச்சனை ஆரம்பம்.’ என்று அவனை எச்சரித்தது.
‘சமாளிக்கலாம்… என் குடும்பம். இந்த கட்டமைப்பு எனக்கு தேவை. எனக்கு தியா, அஜய் இருவரும் வேண்டும்.’ அவன் மனம் சூளுரைத்து கொண்டது.
தியா தன் கால்களை ஆட்டி, அஜயை மேலும் கீழும் பார்த்தாள்.
இதயா, சமையல் அறை பக்கம் செல்ல, “காலையில் இருந்து, ஏன் இப்படி ஓடிக்கிட்டே இருக்க? கொஞ்சம் உட்கார்.” விஷ்வா அதட்டலாக கூறினான்.
‘என்ன அதிகாரம் எல்லம் தூள் பறக்குது? புருஷன் பதவியை எடுத்து கொண்டானோ. தொலச்சி விடுவேன் தொலச்சி’ என்று அவனை முறைத்து பார்த்தாள்.
அவள் பார்வையின் பொருள் புரிந்து, கண்சிமிட்டினான் விஷ்வா.
“குழந்தைகளுக்கு சமைக்கணும். எனக்கு இது பழக்கம் தான்.” கூறிக்கொண்டே சமையலறை நோக்கி சென்றாள் இதயா.
அவள் பின்னோடே சென்றான் விஷ்வா.
“வெறுப்பின் உச்சியில், பலர் துரத்த ஓடிட்டேன். இன்னைக்கு என் ஓட்டம் எனக்கு சுகமாத்தான் இருக்கு.” இதயா முணுமுணுத்து கொண்டே, வேலையை செய்ய ஆரம்பித்தாள்.
ஹாலில் தியா கால்களை ஆட்டியபடி, பக்கத்தில் அமர்ந்திருந்த அஜயை மேலும் கீழும் பார்த்தாள்.
‘எப்பவும் இந்த சோபவில் நான் மட்டும் தான் உட்காருவேன். என் வீட்டில் வந்து, வொய் திஸ் பாய் என் சோபாவில் ஏன் உட்காந்திருக்கான்?’ போன்றதொரு கேள்வியோடு தன் சின்ன வாயை அழுத்தமாக மூடி கருவிழிகளை உருட்டி உருட்டி அஜையை பார்த்தாள்.
‘குட்டி பொம்மை மாதிரி இருக்கா. அவள் கன்னம் நல்ல கொழுகொழுன்னு இருக்கு. கிள்ளி பார்த்தா என்ன பண்ணுவா? ஏற்கனவே கண்ணை உருட்டி உருட்டி முறைச்சி பாக்குறா. நான் என்ன அவ மடியிலா உட்காந்திருக்கேன்? நாம நைசா அவ கன்னதை கிள்ளி தான் பார்ப்போமா?’ என்ற எண்ணத்தோடு அஜயின் கண்கள் துறுதுறுவென்று சுழன்றது.
அண்ணன் தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் இப்படியாகப்பட்ட எண்ணத்தோடு பார்த்து கொண்டிருந்தனர்.
அதே சமயம், சமையலறையில், தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு விஷ்வா சுவரில் சாய்ந்தபடி அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
அவன் கண்களோ அவள் தலை முடியிலிருந்து அவள் நெற்றி, புருவம், கண்கள், கன்னம், இதழ்கள், கழுத்து என முத்தாக முத்தாக வடிந்து ஓடிக் கொண்டிருந்த நீர் துளி மேல் இருந்தது.
நீர் துளிகள் செல்லுமிடமெல்லாம், தன் விரலால், இதழால் கோலமிடும் பேராவல் அவனுள் எழுந்தது.
‘விஷ்வா, எதாவது எடக்கு மடக்கா செய்து வைக்காத. கிச்சனில் வேற இருக்க. அவளுக்கு இருக்கிற கொலை வெறியில் காலையில் சொன்ன மாதிரி, சப்பாத்தி கட்டையில் அடிச்சி, சூடு தண்ணியை ஊத்தினாலும் ஊத்திருவா.’ அவன் தன்னை தானே கட்டுப்படுத்த தான் எண்ணினான்.
‘நீர் துளிகள் விடுவேனா?’ என்பது போல் அவள் முகத்தை அசைக்க, அவன் மீதே பட்டு தெறித்தது.
நீர் துளி வந்து விழுந்த வேகத்தில் அவன் விழி உயர்த்த, இத்தனை நேரமும் அவனை இம்சித்து கொண்டிருந்த நீர் துளி அவள் நெற்றியை கடக்க, அங்கு அவள் இட்டிருந்த குங்குமம் நீ இதயாவின் கணவன் என்று சொல்லாமல் சொன்னது.
‘நான் எத்தனை முறை, இவளுக்கு உரிமையாக குங்குமம் வைத்து விட்டிருப்பேன். அந்த இடத்தில் எனக்கு இல்லாத உரிமையா?’ அவன் மனம் அவள் நெற்றியை பார்த்து உரிமை கொண்டாடியது.
‘நான் பொட்டு வைத்துவிட, இவள் எத்தனை நாட்கள் என் முன் முகம் சிவந்து நின்றிருக்கிறாள்? என் மேல் காதல் கொண்டு, மயங்கி நின்றிருக்கிறாள். இன்னைக்கு இவளுக்கு என் மேல் காதல் இல்லையா? நான் இவளுக்கு வேண்டாத பொருளா? இன்னைக்கு கேட்டே ஆகணும்.’ அவள் அருகாமை, அவனை உந்தியது.
‘விஷ்வா இவ்வளவு அமைதியா இருக்கிற ஆள் கிடையாதே. என்ன பண்றான்?’ என்று அவள் அவனை பார்த்தாள்.
விஷ்வாவின் பார்வையில் அவன் எண்ணத்தை கண்டு கொண்டாள் இதயா.
‘கேடி, சைட் அடிக்கறியா?’ இதயாவின் கனல் கக்கும் பார்வையில், தன்னை சுதாரித்து கொண்டான் விஷ்வா.
‘கையில் கரண்டி, எதையோ வறுத்துகிட்டு இருக்கா. நிச்சயம் சூடா இருக்கும் அவளை மாதிரியே’ விஷ்வாவின் மனம் கணக்கிட ஆரம்பித்தது.
‘பக்கத்தில் கத்தி. ச்… ச்ச… அவ்வளவு மோசமா போக மாட்டா. ஆனால், மிரட்டுவா.’ எண்ணிக்கொண்டே, “என்ன பண்ற இதயா?” அவள் அருகே இருந்த இடத்தில் வாகாக ஏறி அமர்ந்து கொண்டான்.
“ம்ம்.. பார்த்தா தெரியலை. பாசிப்பருப்பை நெயில் வறுத்துகிட்டு இருக்கேன். அரிசியை தண்ணீரில் களையுறேன்.” அவள் நொடிக்க, “பொங்கலா?” என்று கண்சிமிட்டினான்.
அரிசியையும், பருப்பையும் அடுப்பில் வைத்துவிட்டு, நெயில் வறுத்த மிளகு, சீரகம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பில்லை, கொஞ்சம் மிளகு தூள் அனைத்தும் போட்டு, அவனுக்கும், அவளுக்கும் பிடிக்கும் பக்குவத்தில் வைத்தாள்.
‘எனக்கும் பொங்கல் பிடிக்கும், விஷ்வாவுக்கும் பொங்கல் பிடிக்கும். அஜய்க்கு மட்டும் எப்படி பிடிக்காமல் போகும்.’ இதயாவின் மனம் அவள் போக்கில் சிந்திக்க, அவள் சிந்தனையை கலைப்பது போல் பேச ஆரம்பித்தான் விஷ்வா.
“நான் உன் வீட்டில் இருக்கேன்னு உன் சாப்பாடை சாப்பிடணும்னு அவசியமில்லை. நான் உன் சமையலை சாப்பிட வரலை. தியாவுக்காக தான் வந்தேன் எனக்கு உன் பொங்கல் எல்லாம் வேண்டாம் இதயா .” அவன் கெத்தாக கூறினான்.
“நீ என் வீட்டில் இருக்கன்னு, உனக்கு பொங்கி போடணுமுன்னு எனக்கு அவசியம் இல்லை. உனக்கு சேர்த்து நான் வைக்கலை. நான், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் மட்டும் தான் வச்சிருக்கேன் விஷ்வா.” அசட்டையாக கூறினாள்.
‘திமிர் பிடித்தவள்.’ அவன் அவளை முறைத்து பார்த்தான்.
“என் தலைஎழுத்து, நான் எல்லரையும் விட்டுட்டு இங்கயே இருக்கேன். உனக்கு என்ன தலைஎழுத்தா? நீ ஏன் இங்க இருக்க? அத்தை மாமா பாவம் இல்லையா? இந்த மாதிரி சூழ்நிலையில் எப்படி சமாளிப்பாங்க?” இதயா சமையல் வேலை பார்த்துக் கொண்டே, குரலில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் கேட்டாள் இதயா.
அவள் கேள்வியில் அவன் இதயத்தில் சாட்டையடி.
‘இவள் என் இதயா. இவள் தான் என் இதயா. எல்லருக்கும் நல்லதை மட்டுமே நினைக்கும் என் இதயா.’ அவன் கண்கள் கலங்கியது.
“உனக்கு மட்டும், இப்படி தனியா இருந்து கஷ்டபடனுமுன்னு என்ன தலைஎழுத்து?” அவன் குரல் கரகரத்தது.
இந்த கேள்வியில் அவள் மூளை அவன் சட்டையை பிடிக்கத்தான் சொன்னது. ஆனால், விஷ்வாவின் குரலில் கட்டுண்டு அவள் நிமிர, அவன் கண்கள் கண்ணீரை தேக்கி கொண்டு நிற்க, அவள் அவனை அடிப்பட்ட பறவை போல் பரிதாபமாக பார்த்தாள்.
“அப்படி பார்க்காத இதயா. எனக்கு பிடிக்கலை.” அவன் குரல் உடைந்தது.
பல நியாபக அலைகள், இருவரையும் சுனாமி போல் உள்ளிழுக்க அங்கு நிசபத்தம் நிலையது.
‘நான் செய்தது தப்பு தான். இவள் செய்தது?’ அவன் தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு தன்னை மீட்டு கொள்ள ஆரம்பித்தான்.
“ஃபோனில் யாரு?” அவள் தன்னை சரி செய்து கொண்டு காரியத்தில் கண்ணாக கேட்டாள்.
அவள் கேள்வியில், அவன் முழுதாக மீண்டுவிட்டான். முகத்தில் புன்னகை எட்டி பார்த்தது.
“அவசியம் சொல்லனுமா?” அவன் புருவம் உயர்த்தினான்.
“இஷ்டம் இருந்தா சொல்லு. இஷ்டமில்லைனா சொல்லாத.” அவள் முறுக்கி கொண்டாள்.
“இப்படி கேட்டா இஷ்டமில்லை.” அவன் உதட்டை மடித்து சிரித்தான்.
“நீ கேட்குற விதமா கேளு. நான் சொல்றேன்.” அவன் கூற, ’அது தானே பார்த்தேன். இது தான் விஷ்வா.’ என்று எண்ணியபடி, “எனக்கு தேவை இல்லை . நீ யார் கிட்ட பேசினா எனக்கு என்ன? யாரை…” அவள் நிறுத்தினாள்.
“யாரை? முடி உன் வாக்கியத்தை” அவன் ஆள் காட்டி விரலை உயர்த்தி கர்ஜிக்கையில் “அம்மா…” என்று அழைத்துக் கொண்டு அங்கு வந்து நின்றாள் தியா.
அந்த சமையலறையின் அமைப்பு இரு பக்க வாயிலை கொண்டு இருந்தது.
ஒரு பக்கத்தை வாசல் என்று சொல்லலாம். மாற்றொரு பக்கமோ, டைனிங் ஹாலோடு இருந்தது. தியா, செல்லவும், அஜய் அவர்கள் பேசுவதை கவனிப்பதற்கு ஏதுவாக டைன்னிங் ஹாலுக்கு சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
“அம்மா, எனக்கு ஒரு டவுட்.” தியா கேட்டது என்னவோ தன் தாயிடம் தான், ஆனால், அவள் கண்களோ விஷ்வாவை சற்று வெறுப்பாகவே பார்த்தது.
‘அம்மாக்காரி பார்வையே பரவால்லை போல.’ மனதிற்குள் எண்ணி கொண்டான் விஷ்வா.
அதற்குள் பொங்கல் வாசனை தியாவை தீண்ட, மூக்கை இழுத்து வாசனை செய்து கொண்டாள்.
“பொங்கலா?” என்று தியா கேட்க, ‘ஆம்…’ என்பது போல் தலை அசைத்தாள் இதயா.
‘முளைத்து மூணு இலை விடலை, அதுக்குள்ளே வாசனை வைத்து சாப்பாட்டை சொல்றது பாரு.’ என்று தன் மகளை ஆர்வமாக பார்த்தான் விஷ்வா.
“ஐ வாண்ட் கார்ன் ஃபிளக்ஸ் ஆர் பேன் கேக்ஸ்.” என்றாள் தியா பிடிவாதமாக.
“அதெல்லாம் முடியாது. மிளகு போட்ட பொங்கல் தான். இல்லைனா, கொரோனா வந்திரும். மிளகு, இஞ்சி, பூண்டு இதெல்லாம் தான் கொரோனாவுக்கு மருந்து.” என்று இதயா மிரட்ட, விஷ்வாவிற்கு சிரிப்பு வந்தது.
மகளுக்கு தெரியாமல் அடக்கி கொண்டான். தியாவோ, தன் தாயை சந்தேகமாக பார்க்க, “நீ எப்படி பார்த்தாலும், நான் தரது தான் பிரேக் ஃபாஸ்ட். நீ கேட்க வந்த சந்தேகத்தை கேளு.” இதயா உறுதியாக கூறினாள்.
தான் கேட்டு எதுவும் நடக்க போவதில்லை என்று அறிந்து கொண்ட தியா, தான் கேட்க வந்த சந்தேகத்தை தலை அசைத்து கேட்க ஆரம்பித்தாள்.
“என் ஃபிரென்ட் ஸ்ருதிக்கு காட் பிரதர் குடுத்தாரில்லை?” என்று தியா கேட்க, “ஆமா குடுத்தார்.” என்று இதயா அவளுக்கு பொறுமையாக பதில் கூறினாள்.
மனம் என்னவோ, ‘இவள் என்ன வில்லங்கத்தை கேட்டு வைப்பாளோ?’ என்று தான் தவித்தது.
“ஏன் ஸ்ருதிக்கு மட்டும் அழகா குட்டி பிரதர் குடுத்த காட், எனக்கு மட்டும் ஸ்ட்ரெயிட்டா இவ்வளவு பெரிய பிரதர் குடுத்துட்டாரு?” என்று தன் இடுப்பில், கை வைத்து கோபமாக கேட்டாள்.
‘அட்ரா சக்கை. இது கேள்வி.’ என்று எண்ணியவாறு விஷ்வா சிரிக்க, அவன் சிரிப்பு அவளை துளைக்க, இதயா விஷ்வாவை முறைத்து பார்த்தாள்.
இதற்கு என்ன சொல்வதென்று இதயா விழிக்க, “அது ஏன்னா, நீ அக்கா, நான் தம்பி கிடையாது. நான் குட்டியா இருக்க. நான் அண்ணன், நீ தங்கை. அது தான் நீ குட்டியா இருக்க. நான் ஒன்னும் பெருசால்லாம் இல்லை. ஐ அம் நைன். ஸோ அதுக்கு நான் சரியா இருக்கேன்.” என்று அஜய் அவள் முன்னே வந்து தன் கைகளை கட்டிக்கொண்டு கூறினான்.
‘நான் குட்டியா இருக்கேனா? கண்ணாடியில் பார்க்கனும்’ முடிவெடுத்து கொண்டாள் தியா தீவிரமாக.
“அண்ணன்…” தியா யோசனையாக கேட்க, அஜய் ஆமோதிப்பாக தலை அசைத்தான்.
“அப்படினா?” தியா கேள்வியாக நிறுத்தினாள்.
“ம்…” என்று அஜய் யோசிக்கையில், இதயா தன் மகனுக்கு உதவியாக ஏதோ பேச போக, அவள் கைகளை பிடித்து நிறுத்தி மறுப்பாக தலை அசைத்தான் விஷ்வா.
‘அவர்களே பேசி கொள்ளட்டும்’ என்று அவனின் கண்கள் பிறப்பித்த உத்தரவு புரிய, சம்மதமாக தலை அசைத்தாள் இதயா.
அவள் தலை அசைப்பில், ‘இதெல்லாம் இவளுக்கு புரியும். என் கண்கள் சொல்ற மத்த விஷயம் இவளுக்கு புரியலையா?’ என்ற ஏக்கம் விஷ்வாவிற்கு வந்தது.
“அண்ணன் அப்படினா என்னனு கேட்டேன்?” என்று தியா, அஜயை சற்று மிரட்டலாகவே கேட்டாள்.
“அண்ணன் அப்படின்னா, நான் என்ன சொன்னாலும் நீ கேட்கணும்.” பளிச்சென்று கூறினான் அஜய்.
“டேய், நீ சொன்னா நான் கேட்கணுமா? டோன்’ட் பீ பாஸி” என்று தியா, அவனிடம் சண்டைக்கு தயராகிவிட்டாள்.
“யாராவது ஏதாவது சொல்லிட்டா உடனே பாஸின்னு சொல்லிற வேண்டியது. இந்த ஊர் பழக்கம்.” என்று இதயா முணுமுணுக்க, “ஷ்…” என்று தன் மனைவியை அடக்கினான் விஷ்வா.
“நீ குட்டியா தான் இருக்க.” தியாவின் பக்கத்தில் சென்று நின்று கொண்டான் அஜய்.
“நீ, நான் சொல்றதை கேட்கணும். அவ்வளவு தான். லிஸன் டு மீ” அஜய் உறுதியாக கூறிவிட்டு ஹாலுக்கு ஓடினான்.
தியாவின் கோபம் உச்சிக்கு சென்று விட, “ஹல்லோ, அஜய். திஸ் இஸ் மை ஹவுஸ். லிஸன் டு மீ” என்று அவன் பின்னே சென்று கொண்டே, அஜயை மிரட்டினாள் தியா.
தியா கூறிய வார்த்தையில், வெகுண்ட இதயா, “தி….” என்று அலற ஆரம்பிக்க, அவள் வாயை தன் கைகளை கொண்டு இறுக மூடினான் விஷ்வா.
விஷ்வாவின் அழுத்தத்தில் இதயா சற்று தடுமாறி, அங்கிருந்த ஃபிரிஜ்ஜில் சாய்ந்து நிற்க, “லிஸன் டு மீ” அவன் அவள் தோள் வளைவில் கைபோட்டு மென்மையாக கூறினான்.
“முடியாது” அவள் சிலுப்பிக் கொண்டு தன் தலையை திருப்பி கொண்டாள்.
அஜய்யும், தியாவும் “லிஸன் டு மீ” என்று சண்டையிட்டு கொள்வது அவர்களுக்கு தெளிவாக கேட்க, இருவர் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை எட்டி பார்த்தது.
“இதயா…” அவளை தீண்டியபடி, அவள் அருகாமையை ரசித்தபடி ஏதோ பேச ஆரம்பிக்க, “என்னை தொடாதீங்க. எனக்கு பிடிக்கலை.” அவள் கடினமாக கூற, அவன் முகம் வாடியது.
அவனை நெருங்க முடியாமல், அவன் நெருக்கத்தை அனுமதிக்க முடியாமல் அவள் மனம் அறிவு அவளை நெருக்க, அவள் உடலில் ஒவ்வொரு அணுவும் அவன் அருகாமையை ரசிக்க அவள் நெருப்பின் வெப்பத்தையும், பனிக்கட்டியின் குளிரையும் ஒரே நேரத்தில் அனுபவிப்பவள் போல் தடுமாறினாள்.
வாடிய முகத்தோடு அவன் விலக, அவன் வாடிய முகமும் பிடிக்காமல் அவனை சமாதானம் செய்ய அவன் செவியோடு மெதுவாக அவள் கூறிய வார்த்தையில் அவன் புன்னகையோடு விலகினான்.
விலகி சென்றவன், இதயா எதிர்பாராத நேரத்தில் சட்டென்று திரும்பி வந்து, அவளை இழுத்து பின்னோடு அணைத்து அவள் செவிகளில், அவள் கூறிய மூன்று வார்த்தைகளோடு, தன்னுடைய மூன்று வார்த்தைகளையும் சேர்த்து கூறி, அவன் அவளை விதிர்விதிர்க்க செய்து குழந்தைகளை நோக்கி சென்றான்.
‘அப்படி என்ன சொல்லி இருப்பான்?’ என்ற யோசனையோடு அடுப்பில் பொங்கல் தரதரவென்று கொதிக்க ஆரம்பித்தது.
இதயம் நனையும்…