ithayamnanaikirathey-12

IN_profile pic

ithayamnanaikirathey-12

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 12

‘இங்கயே இருந்துவிடுவோமா?’ இந்த கேள்வியில் சர்வமும் ஆடி, விஷ்வாவை தன் கண்களை விரித்து பார்த்தாள் இதயா.

அவள் கண்களில் ஆச்சரியமா? கோபமா? கேள்வியா? வருத்தமா? இவை என்னவென்று தெரியவில்லை. தெரிந்து கொள்ள வேண்டியவனும், அவள் அங்கு இருப்பதையே மறந்தவன் போல் தன் குழந்தைகளை பார்த்து கொண்டிருந்தான்.

தியா, எதுவும் பேசாமல் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

‘நான் கேட்ட கேள்வியின் அர்த்தமே, தியாவுக்கு புரியலையா? இல்லை, நானும் அஜையும் இங்க இருந்தாலும், இல்லைன்னாலும் ஒன்னும் பிரச்சனை இல்லைனு நினைக்குறளா?’ யோசனையோடு தன் மகளை ஊடுருவினான் விஷ்வா.

‘அம்மா கூட இருக்கனுமுன்னு ஆசையாத்தான் இருக்கு. ஆனால், இந்த தியா கூட நான் ரூம் ஷேர் பண்ணனுமா? எனக்குன்னு ப்ரைவசியே இல்லையே. எப்பப்பாரு, யாரோ என்னை பாக்குற மாதிரியே இருக்கு. அது நல்லாவும் இருக்கு. அதே நேரத்தில் டிஸ்டர்பன்ஸாவும் இருக்கு’ குழப்பத்தினோடு, பதிலறியாதவன் போல் தன் தந்தையை பார்த்தான் அஜய்.

தன் மகனை பார்த்த விஷ்வா, புன்னகைத்து கொண்டான்.

‘மகன் மறுக்கவில்லை.’ இந்த எண்ணத்தின் ஆசுவாசத்தோடு, “சாப்பிடு” என்று தன் மகனை புன்னகையோடு சமாதானம் போல் பேசி தன் கார்ன் ஃபிளேக்ஸில் மூழ்கினான் விஷ்வா.

மறந்தும், அவன் இதயாவின் பக்கம் திரும்பவில்லை. இதயாவின் முகத்தில் ஏமாற்றம் ஒட்டி கொண்டது.

‘இவனுக்கு ஒருநாளும், நான் முக்கியம் இல்லை. எப்பவும் இவன் பிள்ளை தான் முக்கியம். என் வீட்டில் இருக்க இவன் என்கிட்ட கேட்க வேண்டாமா?’ இதயாவின் மனம் கொதித்தது.

‘அவனுக்கு வேண்டாமுன்னு என்னை போ சொல்லுவான். வேணுமின்னா வந்து ஓட்டிப்பான். நான் சமைத்ததை கூட சாப்பிட மாட்டான். ஆனால், என்கூட இருக்கிறதுக்கு, என்கிட்ட கூட கேட்காமலே முடிவு எடுப்பான். நான் என்ன மனசில்லா இயந்திரமா?’ அவள் வெறுப்போடு சாப்பிடாமல் எழுந்து கொண்டாள்.

“அம்மா, சாப்பிடலை?” தியா கேட்க, “இப்ப பசிக்கலை.” மளமளவென்று அங்கிருந்து சென்றுவிட்டாள் இதயா.

‘விஷ்வா முன் கண்ணீர் உகுத்துவிடுவோமா?’ என்று அவள் இதயம் பதட்டத்தோடு வேகமாக துடித்தது.

விஷ்வா, எதுவும் பேசாமல் அவளை மௌனமாக பார்த்து கொண்டிருந்தான்.

‘நான் சாப்பிடலைனு இவளும் சாப்பிடலை. ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை என்னை சாப்பிட சொன்னா, இவ கவுரவம் விண்ணில் இருந்து மண்ணை தொட்டிருமா?’ அவன் கடுப்பாக எண்ணியபடி சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

அன்று தான் லாக்டவுன் ஆரம்பிதிருந்ததால், குழந்தைகள் பள்ளிகூடம் பற்றி ஓரிரு நாளில் தகவல் வரும் என்று கூறி இருந்தார்கள். விஷ்வா, இதயா இருவரும் அலுவலக வேலை செய்ய ஆயுத்தமாகினர். குழந்தைகள் அவர்கள் போக்கில் விளையாட ஆரம்பித்தனர்.

அப்பொழுது, மீண்டும் விஷ்வாவுக்கு அழைப்பு வந்தது. விஷ்வா, முகத்தை சுழித்து கொண்டு, அலைபேசியை அணைத்துவிட்டான்.

மீண்டும் அலைபேசி ஒலிக்க, இதயா அவனை கூர்மையாக பார்த்தாள். விஷ்வா அலைபேசியின் அழைப்புக்கு பதில் கூறவில்லை.

மீண்டும் மீண்டும் அலைபேசி ஒலிக்க அதை கவனித்துவிட்ட அஜய்,”பாட்டியா?” என்று கேட்டுக்கொண்டே ஆர்வமாக வந்தான்.

“பாட்டி…” என்று அஜய் ஏதேதோ வளவளக்க, தியா அஜயை கூர்மையாக பார்த்தாள்.

 அஜய், “அம்மா…” என்று ஏதோ பேச ஆரம்பிக்க, விஷ்வா மறுப்பாக தலை அசைக்க, அஜய் தன் வாயை இறுக மூடி கொண்டான். மேலும் எதுவும் பேசாமல், அலைபேசியை தந்தையிடம் நீட்டினான்.

அஜயின் பேச்சையும், அவன் ‘அம்மா…’ என்று பேச ஆரம்பித்ததும், விஷ்வா தன் மகனிடம் மௌனமாக செய்கை காட்டியதையும் அமைதியாக கவனித்து கொண்டிருந்தாள் இதயா.

விஷ்வா எதுவும் பேசாமல், அலைபேசி பேச்சை துண்டித்துவிட்டான்.

மீண்டும் மீண்டும் அலைபேசி ஒலிக்க, குழந்தைகள் ஹாலில் இருப்பதால் விஷ்வா அலைபேசியை எடுத்து கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தான்.

விஷ்வா கதவை அடைப்பதற்குள், சரேலென்று அவன் பின்னோடு சென்று அறைக்குள் நுழைந்து கொண்டாள் இதயா.

அவன் சுவரோடு சாய்ந்து நின்று அலைபேசியை எடுத்து பேச எத்தனிக்க, அவன் கைகளில் இருந்து அலைபேசியை பிடுங்கி கொண்டு, “ஹல்லோ” என்றாள் இதயா, அவனிடமிருந்து அரைவட்டமடித்து விலகி அருகே இருந்த கதவில் சாய்ந்த படி.

 அவள் திரும்பிய வேகத்தில், கதவு மூடிக்கொண்டது. அவனும் அரைவட்டமடித்து, அவள் முன் மிக நெருக்கமாக நின்று, அவள் வாயை இறுக மூடி மறுப்பாக தலை அசைத்தான்.

அவளின், ‘ஹலோ’ அவன் கைகளுக்குள் வலுவிழந்து போனது.

அவன் கண்கள் கெஞ்சியது. அவன் முகம் பதட்டத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. அவன் மூச்சு காற்று, அவளை காக்கும் வெப்பம் போல், அவன் நின்ற நெருக்கத்தில் அவளை சூழுந்தது.

அவன் அலைபேசி அவள் செவியோரம், “ஹலோ… ஹலோ…” என்று அலறிக்கொண்டிருந்தது.

‘நான் என்ன மகனா?’ என்ற கேள்வியோடு அவள் தன் விரல்களால், அவன் கைகளை விலக்க முயற்சி, அதை செய்ய முடியாமல் தோற்று கொண்டிருந்தாள்.

அவன் தன் தலையை வலப்பக்கமும், இடப்பக்கமும் அசைக்க… அவள் அவனை முறைக்க… உடல்பலத்தில் தன் மனைவியை வெல்ல முயன்றாலும், அவள் கண்கள் விடுத்த அழுத்தமான கோரிக்கைக்கு முன் தோற்று அவள் விருப்படி கைகளை விலக்கி கொண்டான் விஷ்வா.

“ஹலோ…” அழுத்தமாக, உறுதியாக, நிதானமாக ஒலித்தது இதயாவின் குரல்.

‘ஒரு நாளும், நான் சொல்றதை கேட்க மாட்டா.’ எண்ணியபடி கதவோடு அவள் அருகே சாய்ந்து நின்று கொண்டான் விஷ்வா. அலைபேசியில் எதிர்ப்பக்கம் பேசுவதும் கேட்பது போன்ற நெருக்கமாக.

“ஹல்லோ…” சற்று தயக்கமாக வெளிவந்தது எதிர்முனையில் குரல்.

“சங்கவி?” கேள்வி போல இதயா நிறுத்த, “ம்…” என்ற மெல்லிய குரல் எதிர்முனையில்.

“எப்படி இருக்க சங்கவி?” இதயா அக்கறையோடு கேட்க, “நல்லாருக்கேன் இதயா. நீ எப்படி இருக்க?” எதிர்முனையும் அக்கறையோடு வெளிவந்தது.

“இப்ப வரைக்கும் நல்லா தான் இருக்கேன்.” ஏளனமாக வெளிவந்தது இதயாவின் குரல் விஷ்வாவை பார்த்தபடி.

 இத்தனை நேரம் விஷ்வா தன் கைகளை மார்பின் குறுகுறுக்கே கட்டி கொண்டு உணர்ச்சிகளை அடக்கி கொண்டு நின்று கொண்டிருந்தான். இப்பொழுதைய இதயாவின் பதிலில் விஷ்வாவின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை கீற்று.

“அத்தை, பேசணுமுன்னு சொன்னாங்க. விஷ்வா எடுக்கலை. அது, தான் நான் இப்பொழுது என் மொபைலில் இருந்து கூப்பிட்டேன்.” சங்கவி பேசிமுடிக்குமுன், “ஹலோ…” கர்ஜனை போல் ஒலித்தது விஷ்வாவின் தாய் செல்வநாயகியின் குரல்.

இதயா இப்பொழுது பேசவில்லை. அவளுள் தடுமாற்றம். பேசத்தான் அலைபேசியை வாங்கினாள். ஆனால், செல்வநாயகியின் குரலில் அவள் நெற்றியில் வியர்வை துளிகள்.

அவன் பக்கம் திரும்பினாள் இதயா. அவன் மறுப்பாக தலை அசைத்து, அலைபேசியை கேட்டு தன் கைகளை நீட்டினான் இறைஞ்சும் பார்வையோடு.

“ஹலோ.” தன்னை சரிபடுத்திக்கொண்டு பேசினாள் இதயா.

“என்னடி திமிரா? கூட சேர்ந்து வாழ வக்கில்லை? இப்ப என்ன சொல்லி மயக்கி  அவனை அங்க வரவச்சிருக்க ?” என்று கோபத்தில் கர்ஜித்தார் செல்வநாயகி.

இதயாவின் பற்கள், கோபத்தில் நறநறப்பு சத்தத்தை வெளிப்படுத்தியது.

விஷ்வா, தன் கண்களை இறுக மூடி தன் வலியை தன் கண்களுக்குள் அழுத்தி, அவள் கைகளிலிருந்து அலைபேசியை பிடுங்க முயற்சிதான்.

அவள் அலைபேசியை தன் செவியோடு அழுத்தி கொண்டாள்.

“உன் புருஷனை வேண்டாமுன்னு, என் மகனை தனிமரமா விட்டுட்டு போனவ தானே நீ? அந்த திமிர் இப்ப எங்க போச்சு? தாலி கட்டினாலும் நீ காப்பாத்தி வைத்த  உன் சுயமரியாதை, உன் தைரியம், உன் தன்னம்பிக்கை எல்லாம் இத்தனை வருஷத்தில் காற்றோட போயிருச்சா? இப்ப மட்டும் உனக்கு என் மகன் கேட்குதோ?” செல்வநாயகியின் குரல் ஒரு தாயின் கோபத்தையும் , தன் மகனின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்ற வருத்தத்தையும் தேக்கி கொண்டு  ஒலித்தது.

“இப்பயும், என் புருஷன் வேண்டாமுன்னு திமிரா தான் சொல்றேன். தாலி கட்டிக்கிட்ட காரணத்துக்காக எந்த சுயமரியாதையும் விட்டுட்டு, என் தைரியத்தை இழந்துட்டு, என் புருஷன் சாரி உங்க பிள்ளை வேணுமுன்னு நான் அவரை தேடி போகலை. என் புருஷன்…” அந்த ‘என் புருஷன்…’ என்ற சொல்லில் சற்று அழுத்தம் கொடுத்து நிறுத்தினாள் இதயா.

அந்த சொல்லில் அவள் அறியாமல் அவள் உயிர் சற்று துளிர்த்து மீண்டும் உயிர் பெற்றது. அவள் அறியாமல், அவள் முகத்தில் ஒரு புன்னகை ஒட்டி கொண்டது.

சிறிய இடைவெளிக்கு பின், “என் புருஷன் சாரி உங்க பிள்ளை தான் நான் வேணுமுன்னு இங்க வந்து உட்காந்திருக்கார்.”  இதயா நிதானமாக கூறி முடித்தாள்.

“பேசி முடிச்சாச்சா?” அவன் அவளை வேகமாக தன் முன் இழுத்து, அவள் செவியோரம் கிசுகிசுப்பாக கேட்டான்.

‘இவன் கோபப்படுவான்னு பார்த்தா, அப்படி எதுவும் இல்லையே?’ அவள் புரியாமல், அவனை பார்க்க அவன் கண் அடிக்க, அவள் குழம்பி போனாள்.

அவள் குழப்பத்தில் இருக்க, அவன் அலைபேசியை பறித்து கொண்டு, “அம்மா, நான் அப்புறம் கூப்பிடறேன்.” என்று கூறி அலைபேசி பேச்சை முடித்துவிட்டான்.

இதயா அசையாமல் நிற்க, “பொங்கல் சாப்பிடுவோமா? கார்ன் ஃபிளக்ஸ் பத்தலை. எனக்கு பசிக்கு.” அவன் கேட்க, “உனக்கு கோபம் இல்லையா?” இதயா இப்பொழுது சந்தேகமாக கேட்டாள்.

“இல்லை. ஒரு விதத்தில் சந்தோசம் தான்.” என்று டைனிங் அறையை நோக்கி சென்று கொண்டே கூறினான்.

“ஏன்?” அவள் ஒற்றை வார்த்தையாக நிறுத்தினாள்.

“என்னை வேண்டாம் வேண்டாமுன்னு சொல்ற பொண்டாட்டியை தேடி போறேன்னு சொல்ல ரொம்ப கொஞ்சம் வெட்கமா இருந்தது. வீட்ல, எப்படி சொல்றதுன்னு யோசிச்சிகிட்டே இருந்தேன். நானே சொல்லிருந்தா, இப்படி வெட்ட வெளிச்சமா அழகா சொல்லிருக்க மாட்டேன்.  நீ, எம் புருஷன்… எம் புருஷன்னு ஆயிரம் தடவை சொல்லி, நான் என் பொண்டாட்டியை உரிமையா பார்க்க வந்திருக்கேன்னு அழகா சொல்லிட்ட.” அவன் கண்சிமிட்டினான்.

“நான் ஆயிரம் தடவை எல்லாம் சொல்லலை.” அவள் எகிற, “இல்லை, ஒரு நூறு தடவை தான் சொல்லிருப்ப.” அவன் அவளை சீண்டினான்.

“நான் என்ன பாட்ஷாவா? ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரின்னு சொல்றதுக்கு?” அவள் கடுப்பாக கேட்க, “ஐயயோ, அப்படி எல்லாம் சொல்லாத, அப்படி பார்த்தா ஆயிரம் தடவையை எட்டிரும்.” அவன் தீவிரமாக கூற, இதயா மேஜை முன் மொந்தென்று கோபமாக அமர்ந்தாள்.

“இப்ப, எதுக்கு நான் சமைத்த பொங்கலை நீ சாப்பிடணும்?” அவள் கேட்க, “என்னை உன் புருஷன்னு சொல்ற, நான் சாப்பிடலைனா நீ சாப்பிட மாட்டேங்குற?” அவன் அவள் முன் தட்டை வைக்க, “அப்படி எல்லாம் இல்லை. எனக்கு பசிக்கலை.” அவள் படக்கென்று எழ முயற்சித்தாள்.

அவள் கைகளை பிடித்து, அவளை அமர செய்தான் விஷ்வா.

“ஊட்டி விடணுமா இதயா?” அவன் கிசுகிசுப்பாக கேட்க, அவள் அவனை முறைத்தாள்.

“என் மேல உள்ள கோபத்தில் முந்திரியை உடைச்சியா இதயா. இப்படி சுக்குநூறா உடைஞ்சிருக்கு. நல்லவேளை, நான் உன் கையில் சிக்கலை.” அவன் முந்திரியை பார்த்தபடி கூற, “எதுக்கு என்னை சமாதானம் செய்யுற விஷ்வா? உங்க அம்மா என்னை பேசினத்துக்கா?” அவள் அவனை பார்த்தபடி கேட்டாள்.

“நான் ஏன் உன்னை சமாதானப்படுத்தனும்? அது தான் நீ பேச வேண்டியதை அம்மா கிட்ட பேசிட்டியே?” அவன் கூற, “கையை விடு விஷ்வா.” அவள் கூற, “இனி அது ரொம்ப கஷ்டமுன்னு நினைக்குறேன்.” அவன் புன்னகையோடு அவள் கைகளை விடுவித்து அவளுக்கும் தனக்கும் பொங்கல் வடையை பாரிமாறிக்கொண்டே முணுமுணுத்தான்.

அவன் முணுமுணுப்பை ஒதுக்கிவிட்டு, “எதுவும் மாறலை விஷ்வா.” அவள் ஆழமான குரலில் கோபத்தோடு கூற, “ஆமா இதயா. எதுவும் மாறலை. பழைய ருசி உன் சமையலில் அப்படியே இருக்கு. சட்னி, சாம்பார், வடை செம்ம. இந்த முந்திரி தான் ரொம்ப உடைச்சிட்ட. அது தான், வேற யாரும் சாப்பிடமாட்டாங்கன்னு, வேற வழி இல்லாம நான் சாப்பிடுறேன்.” அவன் பொங்கலை ருசித்தபடி  கூற, அவள் அவனை முறைத்து பார்த்தாள்.

“ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல சாப்பாடு இதயா. இப்படி முறைக்காத” அவன் கூற, அவள் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.

‘சண்டையிட்டால், சண்டை போடலாம். இத்தனை வருடம் கழித்து வந்து இப்படி பேசுபவனை என்ன செய்வது?’ வழி தெரியாமல் தீவிர சிந்தனையோடு சாப்பிட்ட ஆரம்பித்தாள் இதயா.

அவள் சாப்பிடுவதற்கு ஏதுவாக, அவன் அவளுக்கு பரிமாறிக் கொண்டே இருந்தான்.

அவள் அதை உணர்ந்தாலும், உணராதவள் போல் காட்டி கொண்டாள்.

இருவரும் உணவை முடித்து கொண்டு, அலுவலக வேலையில் மூழ்கினர். 

அன்று மாலை, சற்று நேரம் தொலைக்காட்சி பார்த்தனர்.

இரவு நெருங்க நெருங்க தியாவின் காய்ச்சல் மீண்டும் மெல்ல எட்டி பார்த்தது.

அஜய் தூங்கிவிட்டான். தியா, இதயாவின் மடியில் தாயை கட்டிக்கொண்டு படுத்திருந்தாள்.

விஷ்வா, இதயா அருகே அமர்ந்தான். தியாவின் நெற்றியை தொட்டு பார்த்தான். “காலைல நல்லா தானே இருந்தா? ஏன் இப்ப காய்ச்சல் வருது?” விஷ்வா, கவலையோடு கேட்டான்.

“ஒரே நாளில் சரியாகுது. சில ஃப்ளூக்கு ராத்திரி காய்ச்சல் வரும். சரியான விளையாடுவா. இல்லனா இப்படி தான் என்னை கட்டிப்பிடிச்சு மடியில் படுத்துப்பா.” இதயா மகளின் தலையை கோதியபடி அவனுக்கு ஆறுதல் கூறினாள்.

“சாமான் எல்லாம் வாங்கி வைக்கணும் விஷ்வா. இந்த கொரோனாவால் ஃபிலைட்ஸ் எல்லாம் ஸ்டாப் பண்ணிருவாங்கனு சொல்றாங்க. அப்ப, கொஞ்சம் நாளைக்கி இந்தியன் கூட்ஸ் எதுவுமே வராது. அரிசி இல்லைனா நாம திணறி போயிடுவோம். பேஸிக் ஐட்டம்ஸ் எல்லாம் வாங்கணும். குழந்தைகளுக்கு தேவை படுறதெல்லாம்…” அவள் கவலையோடு பேச, “பார்த்துக்கலாம் இதயா. அவ்வளவு பெரிய பிரச்சனை எல்லாம் வராது” அவன் அவளுக்கு தைரியம் கூறினான்.

இதயா, ஆமோதிப்பாக தலை அசைத்து கொண்டாள்.

அவன் அவள் எதிரே சோபாவில் அமர, “நீ ரூமில் தூங்கு விஷ்வா, எனக்கு இது பழக்கம் தான். நான் தியாவோடு இங்க படுத்துக்குறேன். ” அவள் அவனை விரட்டவே முயற்சித்தாள்.

“இதயா, அம்மா பேசினது…” அவன் தயங்க, “நீ தூங்க போ விஷ்வா.” அவள் மின்விளக்கை அணைத்துவிட்டு படுத்து கொண்டாள்.

அவன் வேறு அறைக்கு செல்லவில்லை. அவர்கள் இருந்த அதே அறையில் சோபாவில் படுத்து கொண்டான்.

லாக்டவுனில், அவர்கள் முதல் நாள் இனிதே முடிந்தது. இருவரும், விட்டதை பார்த்தபடி படுத்திருந்தார்கள்.

விஷ்வா மீண்டும் பேச ஆரம்பிக்க, இதயா அவனை தடுத்து பேச ஆரம்பித்தாள்.

“காதல், கல்யாணம், இந்த தாலி எல்லாம் ஒரு பெண்ணின் சுயமரியாதையை விலை பேச தானா? அத்தனை நாள், அவள் தனக்குள்ள இருக்கிற தன்னம்பிக்கையை திமிர் என்று சொல்லி அடக்க தான் இந்த கல்யாணமா? அவள் ஆசையை மண்ணோடு மண்ணாக புதைக்க தான் இந்த தாய்மையா? ” இதயா, இருட்டில் எழுந்து அமர்ந்து, கண்ணீரோடு கேட்டாள்.

“அப்படி தான் நம் திருமண வாழ்க்கை இருந்ததா இதயா?” அவன் அவளை பார்த்து வலி நிறைந்த  குரலில் ஏமாற்றமாக கேட்டான்.

“எனக்குன்னு ஒரு ஆசை வரும் பொழுது, எனக்குன்னு கனவுகள் வரும் பொழுது அப்படி தான் இருந்தது நம் திருமண வாழ்க்கை.” அவள் அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தினாள்.

“கல்யாணத்துக்கு முன்னாடி உன் ஆசை, என் ஆசைன்னு பிரிச்சி பார்க்கலாம். கல்யாணத்துக்கு அப்புறம், அது நம்ம ஆசை இல்லையா இதயா?” அவன் பரிதவிப்போடு கேட்டான்.

“அந்த நம்மில் உன் ஆசை அடங்கி இருக்கு. குழந்தையின் எதிர்காலம் அடங்கி இருக்கு. ஆனால் நான், என் ஆசை என் கனவு எல்லாம் உன் இல்லம், உன் இல்லறம் என்ற சொல்லோடு இல்லாமல் போனது தான் நிஜம்.” அவள் அவனை விட பரிதாபமாக கூறினாள்.

“உன் கனவு எங்க இல்லாமல் போச்சு? என் இல்லறம் தான் இல்லமால் போச்சு?” அவன் சலிப்போடு கூறினான்.

“நீ இப்படி தான் யோசிப்ப… என் கனவு சுக்குநூறாக உடையலை?” அவளும் சலித்து கொண்டாள்.

‘இவள் இல்லாமல் போனால், என் இல்லம், இல்லறம் எங்க? இது ஏன் இவளுக்கு புரிய மாட்டெங்குது. இதை நான் இவளுக்கு எப்படி புரிய வைப்பேன்?’ அவனுள் கவலை மண்டியது.  

‘நான் இழந்தது எத்தனை, அவனுக்கு மட்டும் தான் இழப்பா?’ அவளுள் கோபம் கனலாக எரிந்தது.

இருவரும் இருளில் பதிலறியா கேள்விகளோடு, இப்படி தான் இருக்க வேண்டும் என்று கட்டபட்ட சமுதாயத்திற்குள் சிக்கி கொண்டு வெளிச்சத்தை தேடினர்.

இதயம் நனையும்…

Leave a Reply

error: Content is protected !!