ithayamnanaikirathey-16
ithayamnanaikirathey-16
இதயம் நனைகிறதே…
அத்தியாயம் – 16
“பி… பிக்… ப… பல்க…” தியாவின் உதடுகள் தந்தியடிக்க, இதயா தன் கண்களை சுருக்கி தியாவை யோசனையாக பார்த்தாள்.
“தியா பயபடக் கூடாது. அம்மா இருக்காங்க. அப்பா இருக்கேன். என்ன பயம்?” அவன் குரல் சற்று அழுத்தமாக ஒலித்தது.
தந்தையின் அழுத்தத்தில் அவனை முறைத்து பார்த்தாள் தியா. “என்ன ஆச்சு?” அவன் அக்கறையோடு கேட்க, “பி… பிக்… ப… பல்க்…” மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து தடுமாறி அனைவரின் பொறுமையையும் சோதித்தாள் தியா.
விஷ்வா, இதயா இருவரும் தியாவை பொறுமையாக பார்க்க, “பிக் பல்க்…” என்று பொறுமையிழந்து கடுப்பாக கேட்டான் அஜய்.
அவனை போலவே, “பிக் டெயில்… பல்க் பாடி….” என்று கடுப்பாகவே கூறிக் கொண்டு தன் தந்தையின் கழுத்தை இறுக கட்டிக்கொண்டாள் தியா.
தன் தோளில் ஆதரவாக சாய்ந்திருக்கும் மகளை இறுக அணைத்துக் கொண்டான். அவள் மழலையின் சுவாசத்தை பல வருடங்களுக்கு பின் அனுபவித்தான் விஷ்வா.
“லப்டப்… லப்டப்…” என்று தியாவின் இதயம் வேகமாக துடிக்க, அவன் இதய துடிப்பும் மகளின் இதய துடிப்போடு சேர்ந்து துடித்து, ‘நான் இத்தனை வருடங்கள் என்னவெல்லாம் இழந்து விட்டேன்?’ என்று அவனை வருந்த செய்தது.
“தியா, என்ன பார்த்தேன்னு சொல்லு?” இப்பொழுது இதயா பொறுமையை இழந்து கோபமாக கேட்க, தன் மகளின் தலையை தன் தோளோடு அழுத்தி, மறுப்பாக தலை அசைத்தான் விஷ்வா.
இதயா அவனை கோபமாக முறைக்க, ‘பாவம் பயந்திருக்கா.’ தன் மகளின் உடல்மொழி, இதய துடிப்பு கூறும் செய்தியை உள்வாங்கியபடி தன் மனைவியிடம் கண்களால் யாசித்தான் விஷ்வா.
தன் தாய் கோபித்து கொண்டதில், தியாவும் கோபங்கொண்டு “பிக் பல்க் ராட்” என்றாள் கடுங்கோபத்தோடு.
“அட… ச்ச… எலிக்கு தான் இவ்வளவு பில்டப்பா?” என்று தன் கைகளை உதறிக்கொண்டு தன் பாடங்களை கவனிக்க மடிக்கணினியின் முன் அமர்ந்தான் அஜய்.
“திரும்பவும் வீட்டுகுள்ள எலியா?” என்று இதயா வாயை பிளக்க, “உனக்கும் பயமா இருக்கா? உன்னையும் தூக்கணுமா?” என்று தியா இல்லாத மற்றோரு கையை நீட்டினான் விஷ்வா.
விஷ்வாவின் செயலில் இதயாவின் நெஞ்சோரம் புன்னகை எட்டி பார்த்தாலும், அதை மறைத்து கொண்டு, “என்ன கொழுப்பா?” என்று இதயா பற்களை நறநறத்தாள்.
“ஆமா, இத்தனை வருஷம் நீ தான் கூட இருந்து பொங்கி போட்ட பாரு, என் கொழுப்பை ஏத்த?” அவன் தன் தோளில் இருக்கும் தியாவுக்கு கேட்காதவாறு, குனிந்து தன் மனைவியின் செவியோரம் கிசுகிசுத்தான்.
“அது தானே, உனக்கெல்லாம் பொண்டாட்டி பொங்கி போடத்தானே?” கிடைத்த சாக்கில் அவள் ஊசியை ஏற்ற, அவன் கோபம் விர்ரென்று ஏறியது.
“நாம்ம எலியை பத்தி பேசிட்டு இருந்தோம்.” அவன் குரலை உயர்த்த, ‘எலி…’ என்ற சொல்லில், “ரெட்…” என்று அலறி கொண்டு மீண்டும் தந்தையை கட்டி கொண்டாள் தியா.
“பேச்சை மாத்தினது நீ” அவள் கடுகடுக்க, “சரி தப்பு என் மேல தான். இப்ப எதை பத்தி பேசுவோம்? எலியை பத்தியா? இல்லை நான் உன்னை தூக்கறதை பத்தியா?” சிறிதும் வெட்கம் இல்லாமல் அவன் நேரடியாக தாழ்ந்த குரலில் கேட்டான்.
இதயா விருட்டென்று திரும்பி, “முன்ன எலி வரும். அதுக்காக ட்ராப் வாங்கி வச்சிருக்கேன்.” அவள் கூறிக்கொண்டு மடமடவென்று எலி பொறியை அனைத்து மூலைகளிலும், மறைவிடங்களிலும் எதையோ தடவி வைத்தாள்.
“என்ன தடவுற?” விஷ்வா கேட்க, “பீனட் பட்டர்” என்று இதயா கூற, “இந்த ஊர் எலி தேங்காய் சாப்பிடாதா? பீனட் பட்டர் தான் சாப்பிடுமா?” என்று அஜய் தன் சந்தேகத்தை தாயின் செயலை பார்த்தபடி கேட்டான்.
இதயா புன்னகையோடு தலை அசைக்க, “இட் லவ்ஸ் சீஸ் டூ” என்று தியா, தன் தந்தையின் மேல் அமர்ந்திருப்பதை மறந்து அவன் மேல் வாகாக சாய்ந்து கொண்டு அஜயின் கேள்விக்கு பதிலளித்தாள்.
அஜயின் உள்ளத்தில் மெல்லிய பொறாமை உணர்வு எட்டி பார்க்க, “உனக்கு தான் எங்க அப்பாவை பிடிக்காதே. நீ என் எங்க அப்பா மேல ஏறி இருக்க?” அவன் பட்டென்று கேட்டுவிட்டான்.
தியா சரெலென்று குதித்து இறங்க, ‘அடேய், கெடுத்தியே கேடு’ மகனை எதுவும் சொல்லமுடியாமல், மகளை ஏக்கமாக பார்த்தான் விஷ்வா.
“எப்படியும் இரண்டு நாளில் எலி சிக்கிரும்.” கூறிக்கொண்டு அவர்கள் வேலையில் மூழ்கினர்.
தியாவின் கண்கள் மட்டும் முழுதாக விரிந்து, கோலிகுண்டு போல் பளபளவென்று மின்னி சுழலன்றது எலியை தேடி.
தன் தாயின் முன் நின்று, “எலி இப்ப என்கிட்டே வராதில்லை?” என்று இடுப்பில் கை வைத்து தோரணையாக கேட்க, “யாரு எப்பப்பாரு எலி எலின்னு பேசுறாங்களோ அவங்க கிட்ட தான் வரும்” அஜய் கேலி பேச, தியா அவனை கோபமாக முறைத்து கொண்டு தன் விளையாட்டு சாமான் இருக்கும் அறைக்கு சென்று விட்டாள்.
கடந்த மூன்று நாட்களாக உடல் நிலை கருதி தியா சீக்கிரமாகவே தூங்கிவிட்டாள்.
இன்று அவள் உடல் நிலையும் சரியாகிவிட்டது. எலியின் வரவினால், அவள் மூளையும் அதிவேகமாக சிந்தித்து கொண்டிருந்ததால் தூக்கம் வராமல் சுற்றி கொண்டிருக்க, அஜய் அவளுக்கு முன்னே படுக்க சென்றான்.
“அஜய், ஏன் என் ரூமில் தூங்கப்போறான்?” அவன் முன் வழி மறித்து நின்றாள் தியா.
“அண்ணா எங்க தூங்குவான்? வழி விடு” இதயா அழுத்தமாக கூற, வழியை விட்டு விலகி நின்று கொண்டாள் தியா.
“அங்க என் டாய்ஸ் இருக்கு” தியா தன் பார்பி பொம்மைகளை பார்த்தபடி கூற, “உன் பொம்மை எல்லாம் நான் எடுக்க மாட்டேன்” அஜய் தன் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு கோபமாக கூறினான்.
“என் டாய்ஸ் ரொம்ப பியூட்டிஃபுல்லா இருக்கும்” தியா சந்தேகத்தோடு கூற, “என் கிட்ட இதை விட பெரிய கார், ரிமோட் பைக், ஓஸோபோட்ஸ் எல்லாம் இருக்கு. அப்பா, நாளைக்கு என் டாய்ஸ் எல்லாம் எடுத்துட்டு வாங்க” தன் தந்தையின் முன் நின்றான் அஜய்.
“சரி டா. இப்ப படு.” தன் மகனை சமாதானம் செய்தான் விஷ்வா.
“நான் அஜய் கூட இங்க படுக்க போறேன்” தியா தன் பொம்மையை பார்த்து கொண்டு அந்த கட்டிலில் கீழ் பகுதியில் படுத்தாள். அஜய் மேலே ஏறி படுத்து கொண்டான். அஜய் தன் பொம்மைகளை எடுத்துவிடுவானோ என்ற பயத்தில், பொம்மைகளுக்கு பாதுக்காப்பாக அங்கயே படுக்க முடிவு எடுத்து கொண்டாள் தியா.
“அம்மா கூட படுக்கலையா தியா? நீ தனியா தூங்க மாட்ட” இதயா அவள் முன்னே நிற்க, அஜய் மேலே படுத்துக்க கொண்டு இவர்கள் பேச்சு வார்த்தையை கேட்டுக் கொண்டு இருக்க, விஷ்வாவோ நமட்டு சிரிப்போடு கதவில் சாய்ந்து கொண்டு தன் மனைவியையும், மக்களையும் பார்த்து கொண்டிருந்தான்.
“நீங்க பெட் ரூமில் படுங்க. தனியா படுக்க உங்களுக்கு பயமா இருந்தா, அஜய் அப்பா உங்க கூட இருப்பாங்க” தியா பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடித்தவள் போல கூற, “தியா சொன்னா சரி தான்” அவன் வழமை போல் தன் மகளிடம் நட்பு கரம் நீட்டவே முயன்றான்.
எலிக்காக, தன் தந்தையிடம் நீட்டிய நட்பு கரத்தை அவள் எப்பொழுதோ துண்டித்துவிட்டு அவனை இப்பொழுது முறைத்தே பார்க்க, விஷ்வாவுக்கு அதுவும் பெருமையாகவே தோன்றியது.
“தியா…” என்று அவள் எதுவோ பேச ஆரம்பிக்க, “இதயா…” என்று அவள் கண்டிப்பான குரலில் அழைத்தான் விஷ்வா.
விஷ்வா கண்களால் அழைப்பு விடுக்க, இதயா கடுப்பாக அறையை விட்டு வெளியே சென்றாள்.
இதயா ஹாலில் சோபாவில் சாய்ந்தமர்ந்து, ‘என்ன?’ என்பது போல் அவள் பார்க்க, “பெட் ரூம் வா. அங்க போய் பேசுவோம்.” அவன் குழந்தைகள் படுத்திருக்கும் அறையின் கதவை மூடிவிட்டே கூறினான்.
“என்னால முடியாது. உன்கூட ஒரே ரூமில். நோ வே” அவள் முறைக்க, “நம்ம பிரச்சனை குழந்தைகளுக்கு தெரிய வேண்டாம்” அவன் கெஞ்ச, “தெரியாம?” அவள் நக்கலாக கேட்டாள்.
“நாம பேசி ஒரு முடிவுக்கு வருவோம் இதயா” அவன் கூற, “எல்லாம் முடிவுக்கு வந்த விஷயம் விஷ்வா.” அவள் குரலில் நக்கல் வழிந்தது.
அஜய் இப்பொழுது கதவை திறந்து கொண்டு வந்தான். “நீங்க ரெண்டு பேரும் இன்னும் படுக்க போகலையா? எனி ப்ரோப்லேம்?” அவன் கண்களில் பெற்றோர்களின் வாழ்வை பற்றிய சந்தேக குறீயிடு.
“இதோ போறோம் அஜய். நீ போய் படு. நாளைக்கு உனக்கு கிளாஸ் இருக்கு.” அவன் குரலில் கண்டிப்பு மிதமிஞ்சி இருந்தது.
அஜய் தந்தையின் சொல்லை தட்ட முடியாமல் படுக்க சென்றுவிட்டான்.
“வா இதயா” குரலில் தன் மகனிடம் காட்டிய அதே கண்டிப்பை மனைவியிடமும் காட்ட முயற்சித்தான்.
“என்ன மிரட்டுற? என்னால் வர முடியாது” அவள் முரண்டு பிடித்தாள்.
அவன் அவளை அலேக்காக தூக்கினான். அவன் அருகாமையில், அவள் தன்னை இழந்து கொண்டிருந்தாள். வேறு வழியின்றி, பிடிமானத்திற்கு அவன் தோள்களையே பற்றினாள்.
அவன் அவள் முகம் பார்க்க, அதில் வழிந்த காதலில் அவள் துணுக்குற்றாள்.
“நான் மாறிட்டேன். இப்படி எல்லாம் நீ என்னை சமாதானம் செய்ய முடியாது.” அவள் அவன் தோள்களை குத்தினாள்.
“நான் மாறலை இதயா” அவன் குரல் சமரசத்தில் பலரசம் கலந்தே ஒலித்தது.
அவன் மெத்தை அருகே அவளை இறக்கிவிட, “நான் இங்கிருந்து போக மாட்டேன் இதயா. நான் தியா கிட்ட இங்க இருக்கிறதா சொல்லிருக்கேன்.” அவன் கூற, “இதை மாதிரி தான் பல வருஷம் முன்னாடி அஜய் கிட்ட நான் சொன்னேன். நீ என்னை அவன் கூட இருக்க விட்டியா?” கிடுக்கு பிடியாக நின்றாள் இதயா.
“ஏன், பழைய விஷயத்தை பிடிச்சிக்கிட்டு தொங்குற இதயா?” அவன் கடுப்பாக கேட்க, “நீ எந்த புது விஷயத்தை பிடிச்சி தொங்கிட்டு இருக்க விஷ்வா?” என்று அவள் கேட்க, அவன் அவளை புரியாமல் பார்த்தான்.
“நம்ம பிரச்சனை, நம்ம சண்டை, நம்ம கோபம் எல்லாம் பழைய விஷயம்னா நம்ம காதல் நம்ம கல்யாணம், அஜய் , தியா எல்லாமே பழைய விஷயம் தான் விஷ்வா. நீ இதுல எந்த புது விஷயத்தை கண்டுபிடிச்சி என்னை தேடி வந்திருக்க?” அவள் சட்டமாக கேட்டாள்.
“எனக்கு எந்த வைரஸ் வந்தா உனக்கு என்ன? ஏன், என்னை உன் வீட்டுக்குள் நடை ஏத்தின?” அவன் பேச்சை மாற்ற, “நான் உனக்காக உன்னை உள்ள விடலை. அஜய்க்காக தான் உன்னை உள்ளே விட்டேன்.” அவள் கூற , “நான் ஒன்னும், உனக்காக உன் கிட்ட பேசலை தியாக்காகத்தான் பேசுறேன்.” அவனும் அவளை போலவே முறுக்கி கொண்டான்.
“ஏன் தேஞ்சு போன ரிக்கார்டு மாதிரி அதையே சொல்ற. இன்னிக்கு காலையில் தான் உனக்கு பிடிக்கலைன்னா போய்டுவேன்னு நல்லவன்னு மாதிரி சொன்ன. இப்ப என்ன தியா வேணும்முனு வம்பு பண்ற? அவள் சலித்து கொண்டாள்.
“அது நீ என்னை போக சொல்லமாட்டேன்னு நினைச்சி சொன்னேன்.” அவன் தோள்களை குலுக்க , “நீயா எப்படி அப்படி நினைப்ப ?” அவள் அவனை முறைத்து பார்த்தாள்.
“நானா நினைக்கலை. நீ தான் சொன்ன. எனக்கு எந்த கொரோனா வந்தா உனக்கு என்ன? நீ ஏன் என் மேல் அக்கறை காட்டின?” அவன் புருவங்களை உயர்த்த, “உன்னை பிரியணுமுன்னு தான் நினச்சேன். நீ சாகணும்னு நான் நினைக்கலை.” அவள் பற்களை கடித்தாள்.
அவன் கண்களை சுருக்கி அவளை பார்க்க, “ஜஸ்ட் மனிதாபிமானம்” அவள் அழுத்தமாக கூறினாள்.
“சரி அதை விடு, உன் கண்கள் சொல்லுச்சு.” அவன் அவளை நெருங்கினான்.
அவள் இதயம் வேகமாக துடிக்க, “என் கண்கள் என்ன சொல்லுச்சு?” அவள் சுவாசம் வேகமாக வெளிவந்து கெண்டே வினவ, “உன் கண்ணு மட்டுமில்லை. உன் சுவாசம், உன் இதயம் எல்லாம் நீ என் மேல் வச்சிருக்கிற காதலை சொல்லுச்சு. அன்னைக்கு வச்சிருந்த அதே காதல் இம்மி அளவு குறையாம அப்படியே இருக்குனு சொல்லுச்சு.” என்று அவன் உடல் மொழி காதல் பேசியது.
“காதலும் இல்லை ஒரு மண்ணும் இல்லை” அவள் சத்தம் செய்ய, அவள் இதழ்களை அவன் கரம் கொண்டு மூடி, “ஏன் கத்துற? குழந்தைங்க முழிச்சிக்க போறாங்க.” அவன் மெல்லமாக பேசினான்.
“காதல் இல்லை இல்லை இல்லை” அவள் அழுத்தமாக கூற, “இருக்குனு நான் நிரூபிக்கட்டுமா?” அவன் கேட்க, “இல்லைன்னு நான் நிரூபிக்கட்டுமா?” அவள் அவன் முன் சண்டை கோழியாய் வெடவெடத்து நின்றாள்.
அவனின் அடுத்த செய்கையிலும், சொல்லிலும் அவள் கைகள் அவன் கன்னத்தை பளார் என்ற சத்தத்தோடு பதம் பார்த்தது.
இதயம் நனையும்…