Kandeepanin Kanavu- 21

                    காண்டீபனின் கனவு 21

 

        வீரா எறிந்த அம்பு சரியாக ஒரு இடத்தில் சென்று சொருகியது. ஆனால் இவன் இருந்தது மிகவும் தூரத்தில் என்பதால், அது சரியான இடத்தில் தான் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் போனது.

“இப்போ என்ன டா பண்றது?” சாம் கேட்க,

“என் குறி எப்பவும் தப்பாது. சரியா தான் இருக்கும்.” அந்த மலை உச்சியையே பார்த்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் அந்த நீலக் கல் சென்ற இடத்திலிருந்து சிறு ஒளி தோன்ற ஆரம்பித்தது.

“ஹே சாம் அங்க பாரு!” வீரா கத்த, சக்தி இல்லாமல் கீழே அமர்ந்திருந்த சம்ரக்ஷா நிமிர்ந்து பார்த்தாள்.

அந்த முகம் போன்ற அமைப்பு இப்போது நன்றாகத் தெரிந்தது சாமுக்கு.

“இப்போ தான் வீரா, எனக்கு அந்த முகம் சரியா தெரியுது. சரியா தான் அம்பு விட்டிருக்க.. அப்போ நாம இப்போ மலை மேல ஏறப் போறோமா?” சற்று முகம் தெளிந்தது.

“அடிப்பாவி. அப்போ இவ்வளோ நேரம் என்னை நீ நம்பலையா?” அவளது தலையில் தட்ட,

“அப்டி இல்ல… ஆனா லைட்டா நம்பிக்கை வரலன்னு வச்சுக்கோயேன்.” சிரித்தாள்.

“ஆனா இந்த வருண் என்ன ஆனான். இப்போ நாம மலைக்கு மேல போய்ட்டோம்னா அவன எங்க தேடறது?” அதான் கவலையா இருக்கு.

“ஆமா ல. இங்க நடந்த கலாட்டால அவன மறந்தே போயிட்டேன். இப்போ அவன எங்க தேடறது?” அவளையும் கவலைத் தொற்றிக் கொள்ள,

“அந்த ராட்ஷசன் அவனே வருவான்னு சொன்னானே. அவன் பொய் சொள்ளமாட்டான்னா வருண் அவனே வருவான். கவலைப் படாத.” அவனுமே மனதைத் தேற்றிக் கொண்டான்.

மீண்டும் பூமி அதிர அவர்கள் இருந்த பகுதி மட்டும் பிளந்து கொண்டு மேலே சென்றது. மலை உச்சியை அடைந்தனர்.

வருண் அங்கே நின்று கொண்டிருந்தான்.

“ஹே வருண். நீ எப்போ வந்த? எப்படி வந்த?” அவனைக் கண்டதும் வீரா ஓடிச்சென்று கேட்ட்கலானான்.

“நான் அப்போவே வந்துட்டேன். வேகமா காத்து அடிச்சுது. கண்ணை மூடிட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு கண்ணைத் திறந்து பார்த்தா.. இங்க இருக்கேன்.” அவனுக்கு நடந்ததைக் கூறினான்.

“அது சரி உங்களுக்கு என்ன ஆச்சு. சாம் க்கு ஒன்னும் ஆகலையே!” இருவரையும் பார்த்துக் கேட்க,

“நல்லா கேட்ட போ.. வரதுக்குள்ள ஒரு மாயாஜால படமே ஓடிடுச்சு. தப்பிச்சோம் பொழச்சோம்ன்னு வர வேண்டியதா போச்சு.” மூச்சிரைக்க கீழே அமர்ந்தான் வீரா.

“தண்ணி குடு” நீரை எடுத்து மடமட வெனக் குடித்தான்.

சாம் வருணுக்கு நடந்தவற்றைக் கூறினாள்.

“எல்லாம் சரி தான். இப்போ நாளைக்கு சிவன் மலைக்குப் போகணும். அங்க போறப்ப நாம இங்க கொண்டு வந்தது போல பூ கல் எதுவுமே இல்லையே! என்ன செய்யறது.?” வருண் யோசிக்க,

“அப்படீனா ஒன்னும் எடுத்துப் போறது வேணாமா இருக்கும்.” சாம் பதில் கூறினாள்.

“இப்போ நடந்ததே ஏதோ பரிட்ஷை மாதிரி தான் இருக்கு. பாப்போம். டைம் என்ன!” கேட்டுக்கொண்டே தன் கையைப் பார்க்க,

“வாட்…!” ஆச்சரியப் பட்டுப் போனான்.

“உன் வாட்ச் ல என்ன டைம்!” வருனைக் கேட்க,

அவனும் நேரம் பார்த்து அதிர்ந்தான்.

“நாம மேல ஏறி வந்த டைம்லயே இருக்கோம். அப்படினா நேரமே போகலையா? ஆச்சரியமா இருக்கு.” திகைத்துப் போய் எழுந்தான்.

“இங்க என்னென்னவோ நடக்குது. நம்பர மாதிரியும் இல்ல. நம்பாம இருக்கவும் முடியல. நாம இதப் போய் வெளிய சொன்னா யாரும் நம்பவும் போறதில்ல.” சாம் சொல்ல,

“கரெக்ட் தான்.” ஆமோதித்தான் வருண்.

மூவரும் கீழே இறங்க ஆரம்பித்தனர்.

அவர்கள் சீக்கிரம் சென்று விடவே கில்பர்ட் அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தார்.

“என்ன இவ்வளோ சீக்கிரம் வந்துட்டீங்க?” என்க,

“மேல வேற ஒன்னும் இல்ல கில். இட்ஸ் சோ ஈசி. சோ வந்துட்டோம்.” வீரா பதில் சொன்னான்.

“உங்க கால் இப்போ எப்படி இருக்கு.?” சாம் விசாரித்தாள்.

“அப்படியே தான் இருக்கு சாம். ஊருக்கு போய் தான் டாக்டர் கிட்ட காட்டனும்.”

“சரி எதாவது சாப்பிட ரேடா இருக்கா?” பாத்திரத்தை துழாவிக் கொண்டிருந்தாள்.

சாலட் இருக்க, அதை பேய்ப் போல இரண்டே நிமிடத்தில் தீர்த்தாள்.

“ஏன் டி இப்படி ராட்ஷசி மாதிரி திங்கற? பழக்க தோஷமா!” சிரித்தான் வீரா.

அவன் சிரிப்பு அன்று அவளுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் கட்டிப் போட்டது.

அவன் தன் உதட்டால் தனக்கு முத்தமிட்டு மூச்சைக் கொடுத்தது இப்போது நினைவிற்கு வந்து தொலைத்தது. அந்த உதட்டுச் சிரிப்பில் சற்று மெய் மறந்து தான் போய்க் கொண்டிருந்தாள்.

‘இவன இத்தன பொண்ணுங்க சைட் அடிச்சது தப்பே இல்ல!’ மனம் உண்மையை ஒத்துக் கொண்டது.

அன்று முழுதும் அவனை அவ்வப்போது ரசிக்கத் தொடங்கினாள்.அவன் நீரில் குதித்து நீந்திய போது அவனது வலிய கைகளும் விரிந்த மார்பும் அவளுக்குக் கூச்சத்தை இன்று ஏனோ ஏற்படுத்த, அவனைக் காண முடியாமல் டெண்ட்டுக்கு சென்றாள்.

அவள் தன்னைக் கண்டு தான் செல்கிறாள் என வீரா உணர்ந்தான். ஆனால் அப்போது முத்தம் கொடுத்ததை நினைத்து தன் மேல் கோபம் உள்ளது, அதனால் செல்கிறாள் என தவறாக யோசித்தான். அவளை சரி செய்ய எண்ணி அனைவரும் உறங்கச் சென்ற பிறகு அவனும் தங்களின் டெண்ட்டுக்குள் நுழைய,

அவன் வருவது தெரிந்து, ‘ ஓவரா சைட் அடிச்சுட்டோமே இன்னிக்கு’ என தன்னையே கடிந்து கொண்டு திரும்பிப் படுத்தாள்.

“சாம்.” அவளை அழைத்தான்.

“ம்ம்.” திரும்பாமல் குரல் கொடுக்க,

“கோவமா இருக்கியா டா. நான் வேணும்னு பண்ணல. உன்ன எப்படியாவது எழுந்துக்க வைக்கணும்னு தான் அப்படி செஞ்சேன். சாரி.” எடுத்ததுமே சாரி கேட்டுவிட,

அவளுக்குத் தான் ஒரு மாதிரி ஆகிப் போனது.

‘ஒரு வேளை தனக்கு இப்போது ஏற்பட்டது போல சிறு உணர்வாவது அவனும் இருக்கும் அதனால் தான் முத்தமிட்டான் என அவள் மனது இத்தனை நேரத்தில் ஒரு முடிவிற்கு வந்திருந்தது. இப்போது அவனே அதெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல, மன்னிப்புக் கேட்டுவிட,

தான் மட்டும் அவனை சைட் அடித்துவிட்டோமே என சங்கடமாக உணர்ந்தாள்.

“இல்ல பரவால்ல வீர். என்னை எழுப்ப தான அப்படி பண்ண, நோ ப்ராப்ளெம்.” எங்கோ பார்த்துக் கொண்டு அவள் கூற, இப்போது அன்னியமாக உணர்வது வீராவின் முறையாகிப் போனது.

‘இதுக்கே இப்படி ஃபீல் பண்றா. நான் அவளோட லிப்ஸ்ல மயங்கி தான் ஓவரா கிஸ் பண்ணிட்டேன்னு சொன்னா என்னை கேவலாமா நினச்சிருப்பா. நல்ல வேளை!’ ஒரு புறம் நிம்மதியாக இருந்தாலும், தன் மனதை உணரவில்லையோ அவள் என்ற வருத்தம் மேலோங்கியது.

“அப்பறம் ஏன் நான் குளிச்சுட்டு இருந்தப்ப வந்துட்ட.?” சகஜமாக்க நினைத்துக் கேட்டான்.

‘அங்கேயே இருந்திருந்தேன்னா நானும் உன் கூட சேந்து குளிச்சிருப்பேன். மரமண்ட’ மனதில் எண்ணியவள்,

“ஒண்ணுமில்ல கால் வலி. சொன்னா நீ நாளைக்குக் கூட்டிட்டு போக மாட்டியேன்னு தான் வந்து கொஞ்சம் ஸ்ப்ரே பண்ணிக்கிட்டேன்.” ஏதோ ஒன்று சொல்லவேண்டுமென சொல்லிவிட்டாள்.

“கால் வலியா? அதுக்குத் தான் சொன்னேன். உனக்கு இது சரிப்படாதுன்னு.” வேகமாக அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

உடனே அவன் நாளைக்கு வர வேண்டாமென்று விடுவானோ எனது பயந்தவள், “இல்ல இல்ல இப்போ சரியாயிடுச்சு.” காலை இழுத்துக் கொண்டாள்.

“பொய் சொல்லாத.” அவளது காலை எடுத்துத் தன் மீது வைத்துக் கொண்டு இதமாக பிடித்துவிட ஆரம்பித்தான்.

“என்ன வீர் இது.. வேணாம் விடு. இப்போ வலி இல்ல.” காலைக் குறுக்கிக் கொண்டாள்.

“ஹே! இந்த மலை மேல ஏறினா எவ்வளவு கால் வலி வரும்னு எனக்கும் தெரியும். நீ படு நான் கொஞ்ச நேரம் பிடிச்சு விடறேன்.” வலுக்கட்டாயமாக அவளது காலைப் பிடித்து இழுத்து தன் மேல் வைத்துக் கொண்டு விரல் களில் சொடுக்கெடுக்க ஆரம்பித்தான்.

முதலில் மறுத்தவள் பின் அவனது கைகள் தந்த  இதத்தில் வலியும் சுகமாக மாற அதை ஏற்றுப் படுத்துக் கொண்டாள்.

பாதத்தைப் பிடித்து விட்டான்.

“யப்பா… னே பிடிச்சு விடறப்ப தான் சுகமா இருக்கு வீர். வலியே இல்ல.” தன்னையும் மறந்து கூற,

“அப்படியே தூங்கு. காலைல எழுப்பறேன்.” சிரித்துக் கொண்டே சொன்னான்.

“டேய்…நீ என்ன ஏமாத்துவ. நானே அலாரம் வச்சிருக்கேன். எழுந்துப்பேன்.நாளைக்கு தான் க்ளைமாக்ஸ். அத நான் மிஸ் பண்ணவே மாட்டேன்.” கண்ணை மூடிக்கொண்டே சொன்னாள்.

“சரி சரி. உனக்கு பரவால்லன்னா எனக்கும் ஓகே” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவளுக்கு உறக்கம் வந்தது.

“அஆஆ…ம்மா… என்னக்கு .. ஓஒகேஇ….” தூக்கத்தில் வாய் குழறியது.

“தூங்கிடுச்சு..” சிரித்துக் கொண்டான்.

இருந்தாலும் ஒரு ஐந்து நிமிடம் அவளுக்குக் காலைப் பிடித்துவிட்ட பிறகே அவன் உறங்கச் சென்றான்.

அவளின் உதட்டை ஒரு முறைப் பார்த்தவன், மீண்டும் அருகில் சென்றான்.

மிகவும் மெல்லிதாக ரோஜா வண்ணத்தில் இருக்கும் அந்த உதடு அவனை ஈர்த்தது.

‘ஐயோ.. அழகா இருக்கே. டேஸ்ட் வேற பண்ணித் தொலைச்சுட்டேன். எப்படி நான் கண்ட்ரோல் பண்ணுவேன். இதுக்கே மூஞ்சிய தூக்கிகற நீ! நான் இதுக்கப்பறம் எப்படி அப்ரோச் பண்ணுவேன்.’ பெருமூச்சு விட்டு தன் இடத்தில் சென்று படுத்தான்.

கண்களை மூடிய மாத்திரத்தில் அவனும் தூக்கத்தில் ஆழ்ந்து கனவிற்குள் புகுந்தான்.

காதைப் பிளக்கும் உடுக்கை சப்தம் அவனது மனதைப் பிசைந்தது. பனி மலைகளைப் போன்று குவிந்து கிடந்த லிங்கங்களும் , அவற்றுக்கு நடு நடு வே தூண்கள் போன்ற அமைப்பும் அவனது பாதைகளில் எதிர்கொண்டான்.

அங்கிருந்து ஒரு பெரிய குகை போன்ற அமைப்புத் தெரிய அதில் காலை வைத்தவன், அந்தப் பனி சறுக்கில் விழுந்து அதள பாதாளத்திற்குச் சென்று விட்டான்.

அந்தப் பனிசறுக்கு அவனை இட்டுச் சென்ற இடத்தில் அவனுக்கு மூச்சு முட்டியது.  அவனது கழுத்தை யாரோ இறுக்கிப் பிடிப்பது போன்ற உணர்வு. மூச்சுவிடவும் முடியாமல் தவிக்க, மயக்கம் வந்தது அவனுக்கு.

மயக்கத்தில் அவன் தன்னை நெரிப்பது யார்ரென்று பார்க்க, அந்த ராட்ஷசன் நின்று கொண்டிருந்தான்.

அவனோடு விடாமல் போராடிக் கொண்டிருந்தான். கால்களிலும் கைகளிலும் ரத்தம் வழிய ஆரம்பித்தது.

இதயம் வெளியே குதித்துவிடும் அளவிற்கு படபடத்தது. திடுக்கென விழித்தவன் இன்னும் விடியாதது கண்டு பயந்தான்.

மீண்டும் அவனை உறக்கம் வலுக்கட்டாயமாக அழைத்தது. தலையைச் சிலுப்பி உறங்காமல் இருக்க நினைத்தான். இதற்கு மேல் அந்த கனவிற்குள் செல்ல அவனுக்கு பயமாக இருந்தது. நாளை நிஜமாகவே மூச்சு முட்டி தான் இறக்கப் போவது போன்ற பயம் அவனிடம் வந்தது.

தண்ணீரைக் குடித்து அந்த பயத்தை விழுங்க நினைத்தவன் முடியாமல் தவித்தான்.

ஆனாலும் அவனை கண்களை மூட வைத்தது ஒரு சக்தி. அவனையும் அறியாமல் உறங்கினான்.

தண்ணீருக்குள் மூழ்கடிக்கப் பட்டிருப்பது புரிந்தது. அது தான் மூச்சு முட்டக் காரணம் என்பதை இப்போது உணர்ந்தான்.

எப்படியோ நீந்தி நீந்தி செல்ல அந்த நீரின் அடியில் கண்ணைப் பறிக்கும் ஒளி தோன்றியது.

அதை நோக்கி வீரா செல்ல,

“அது எனக்குச் சொந்தம். அதை என்னிடம் கொடு” வருண் அவன் பின்னாலேயே வந்து நின்றான்.

வருணை அங்கு எதிர்ப்பாரதவன், “என்ன உனக்குச் சொந்தம் வருண்?”

“அதோ அங்கே இருக்கே, அதை எடுத்து என் கைல குடு.” அந்த ஒளியைத் தான் காட்டினான்.

வீராவிற்கு ஒன்றும் புரியவில்லை.

நாளை தான் ஒரு வழி ஆகப் போவதை உணர்ந்தான். எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என அவன் மனம் அவனுக்கு உரைத்தது.

சாம் வைத்த அலாரம் இருவரையுமே எழுப்பியது.

அவளைக் கண்டதும் ஒரு விரக்திப் புன்னகை தோன்ற, “இனி நான் உன்னை பார்ப்பேனா சாம். இல்ல இது தான் கடைசியா?” அவளிடமே கேட்டான்.

அவன் கேட்டது அவளை காலையிலேயே வருத்தியது.

“என்ன வீர். கனவுல எதாவது வந்துச்சா? ஏன் இப்படி பேசற? என்ன நடந்துச்சு?” அவனது தோளைப் பற்றிக் கொண்டு கேட்க,

“ரொம்ப மோசமான கனவு சாம். நான் இன்னிக்கு என்ன ஆவேன்னு எனக்கே தெரியல.”

“உனக்கு எதுவும் ஆக விட்டுடுவேனா? பயப்படாத. நீ தான சொல்லுவ. உன்னை எதுவோ இழுக்குதுன்னு. அது கண்டிப்பா உனக்கு ஆபத்தான ஒன்னா இருக்காது. நிச்சயம், நீ அதுலேந்து மீண்டு வருவ. நான் உன் பக்கத்துல இருக்கேன்.” அவளுமே பயந்திருந்தாலும் அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.

வருணைப் பற்றி அவனால் எதுவும் கூற முடியவில்லை. அவன் என்ன கேட்கிறான். அது என்ன என்பது தெரிந்தால் தான் அவனைப் பற்றியே புரிந்து கொள்ள முடியும் எனத் தோன்றியது.

இன்று அவனை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் அந்த மலை யின் மீது மூவரும் ஏறத் துவங்கினர்.