ithayamnanaikirathey-17

IN_profile pic
Akila Kannan

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 17

விஷ்வாவின் குரலில் துள்ளல் மிதமிஞ்சி இருந்தது. “வேண்டாம் இதயா, நீ தோத்துருவ. உனக்கு என் மேல் காதல் இருக்குனு ஈஸியா நான் நிரூபிச்சிடுவேன்.” அவன் கூற, சுவரின் மீது சாய்ந்து நின்று கைகளை கட்டி கொண்டு அவனை கூர்மையாக பார்த்தாள்.

அவள் பார்வையில், அவன் இதழ்கள் விரிந்தது. அவன் தன் ஆள் காட்டிவிரலை நீட்டி அவள் கழுத்தோரம் கொண்டு செல்ல, அவள் விலக எத்தனித்து முடியாமல் சுவரோடு சாய்ந்து நின்றாள்.

“தள்ளி நில்லு விஷ்வா.” அவள் அழுத்தமாக கூற, “பயப்படாத, உன்னை தொட கூட மாட்டேன். தொடாமலே உன் காதலை நிரூபிப்பான் விஷ்வா.” அவன் கூற அவள் உதடுகளை சுழித்தாள்.

அவன் மீண்டும் உதட்டில் புன்னகையோடு தன் ஆள் காட்டிவிரலை நீட்ட, “தொடமாட்டன்னு சொல்லிருக்க.” என்று அவள் கர்ஜிக்க, “சொன்ன சொல்லை நானும் மீறலை.” அவனும் கடுப்பாகவே கூறினான்.

அவன் கடுப்பில் அவள் அவனை முறைத்து கொண்டு வாயை இறுக மூடி கொண்டாள்.

அவன் அவள் தாலியை தீண்ட, “இதை ஏன் வச்சிருக்கன்னு கேட்க போறியா? வெரி ஓல்ட் ட்ரை. வெரி பேட் ட்ரை.” அவள் அவனை முந்திக் கொள்ள, “ஹா… ஹா…” அவன் பெருங்குரலில் சிரித்தான்.

“பதட்டப்படாத இதயா. நான், அதை கேட்க வரலை. நம்ம காதலுக்கு இந்த தாலியா சாட்சி. இது உன் கழுத்தில் ஏறத்துக்கு முன்னாடியே இருந்தது நம்ம காதல். ஸோ, இது இருந்தா என்ன? இல்லைன்னா என்ன?” அவன் புன்னகைத்தான். 

“அந்த காதலை பத்தி நீ பேசாத. அதை பேசுற யோக்கியதை உனக்கு கிடையாது.” அவள் எகிற, “ஸோ, உனக்கு இருக்கு?” அவன் இப்பொழுது புருவம் உயர்த்தினான். முகத்தில் தீவிரம் ஒட்டி கொண்டது.

“உன்னை விட நிச்சயம் அதிகமான யோக்கியதை எனக்கு இருக்கு.” அவள் குரலை உயர்த்த, “கூல் இதயா. உன் முகத்தில் தோல்வி பயம் தெரியுதே” அவன் அவள் பொறுமையை சோதிக்க, அவள் பற்களை நறநறத்தாள்.

அவன் முகம் புன்னகையை தேக்கி கொண்டிருந்தாலும், அவன் விரல் அவள் தாலியை கழுத்தோடு அழுத்தி அதன் இருப்பை உறுதி செய்தது.

அவன் அழுத்தம் அவளுக்கு மெல்லிய வலியை கொடுத்தாலும் அவள் முகம் அவன் அழுத்தத்தின் வலியை வெளி காட்டாமல் மனவலியை மட்டுமே தேக்கி கொண்டு நின்றது.

“இந்த விஷ்வா இல்லைனா என்ன, ஒரு ஜீவா, சிவா, அதர்வா, சூர்யா இப்படி யாரையாவது கல்யாணம் பண்ணிருக்கலாமே?” என்று நக்கல் தொனித்த குரலில் கேட்டான்.

“விஷ்வா” அவள் கர்ஜிக்க, “இல்லை, உனக்காக என்னை விட்டுட்டு வந்த புதுமை பெண் நீ. உன் கருத்துக்களுக்கு ஒத்துவர மாதிரி ஒருத்தன், நம்ம நாட்டில் செட் ஆகலைனாலும், இங்க ஒரு ராபர்ட், வில்சன், சாம், டாம் இப்படி யாருமே செட் ஆகலையா என்ன?” என்று அவன் கேலியாக கேட்க, அவள் கைகள் அவன் கன்னத்தை பதம் பார்த்தது.

கன்னத்தை தடவிக் கொண்ட அவன் முகத்தில் வெற்றி புன்னகை.

அவள் அவன் டீஷர்ட்டை கொத்தாக பிடித்திருந்தாள். “கனவை நோக்கி ஓடுற ஒரு பொண்ணை பார்த்தா உனக்கு அவ்வளவு நக்கலா இருக்கா? உன் பொண்டாட்டியை பார்த்து கேட்குற கேள்வியா இது?” அவள் மீண்டும் அவன் கன்னத்தை அறைய முற்பட, அவள் கைகளை பிடித்து  ஒரு சுற்று சுற்றி பின்பக்கமாக இடையோடு அணைத்து, “தப்பு தான். சாரி” என்றான் கிசுகிசுப்பாக. மன்னிப்பு  கேட்கும் பாவனை கிஞ்சித்தும் அவனிடம் இல்லை.

“ஆனால், என் இதயா, அவ புருஷனை மறந்துட்டாளே. அவ காதலை மறந்துட்டாளே. ஞாபகம் படுத்த வேண்டிய கட்டாயம் எனக்கு” என்று அவள் தோளில் நாடியை பதித்து, அவள் தாலியை அவள் கண்களுக்கு நேராக உயர்த்தினான் விஷ்வா.

இதயாவிற்குள் மெல்லிய படபடப்பு . மிகுந்த ஏமாற்றம். ‘நான் ஏன் உணர்ச்சி வசப்பட்டேன்?’ விஷ்வா வெற்றி களிப்பில் தொடர்ந்து பேசினான்.

“நான் ஒரு அயோக்யனா இருந்திருந்தா, உனக்கு என்னை பிடிக்கலைன்னா, உனக்கு என் மேல் காதல் இல்லைனா நீ இன்னொரு கல்யாணம் பன்னிருப்ப இதயா” அவன் அவளை நெருக்கமாக வைத்து கொண்டே கூற, சரேலென்று விலகி அவன் எதிரே நின்றாள் இதயா.

“எதுக்கு இன்னொரு கல்யாணம்? ஒரு பாழுங் கிணறு கிட்ட இருந்து தப்பிச்சு இன்னொரு பாழுங் கிணற்றில் சாகவா?” என்று அவள் கடுப்பாகவே கேட்டாள்.

சிரித்துக் கொண்டான் விஷ்வா. “நீ தோத்துட்ட இதயா. உனக்கு உன்னை வேறு யார் கூடவோ சம்பந்தம் படுத்தி பேசும் பொழுது, ஒரு கோபம் வருதே அதில் நான் எனக்கான காதலை பார்த்தேன். உன் பொண்டாட்டியை பார்த்து இப்படி கேட்பியானு நீ கேட்டப்ப நான் என் மனைவியின் உரிமையை பார்த்தேன். நீ தோத்துட்ட இதயா.” அவன் அழுத்தமாக நிறுத்தினான்.

“தூங்குறவங்களை எழுப்ப முடியும். தூங்குற மாதிரி நடிக்குறவங்களை எழுப்ப முடியாது. உனக்கு என் மேல் காதல் இருக்கு. இம்மி அளவு குறையாமல் அப்படியே இருக்கு. அது உனக்கும் தெரியும். நீ தோத்துட்ட இதயா. நீ தோத்துட்ட இதயா.” அவன் இப்பொழுது சினத்தில் கர்ஜித்தான்.

“ஆமா, தோத்துட்டேன்.” அவன் வார்த்தையின் சீண்டலில் அவள் கொதித்து எழுந்தாள்.

“என் மனசில் உனக்கான காதல் அப்படியே இருக்கு.” சுவரோடு சாய்ந்து அமர்ந்தாள் இதயா.

“உன்னை பார்த்த அன்னைக்கு துளிர்த்த காதல். உன்கிட்ட பழகப்பழக வளர்ந்த காதல். மணமேடையில் உன்னை கணவனா பார்த்தப்ப பூரிச்ச காதல் இன்னமும் என் நெஞ்சில் அப்படியே இருக்கு.” தன் மார்பை படாரென்று தட்டினாள் இதயா. அவள் கண்கள் கண்ணீரை உகுத்தது.

“நீ என்னை வேண்டாமுன்னு சொன்னியே? உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லையனேனு சொன்னியே? என் நெஞ்சில் எட்டி மிதிச்சு என் பிள்ளையை என் கிட்ட இருந்து பிரிச்சியே? அப்ப கூட எனக்கு உன் மேல் கோபம் தான். வருத்தம் தான். ஆனால், நான் வச்ச அன்பு மாறுமா? காதல் தான் பொய் ஆகுமா?” என்று இதயா படாரென்று தலையில் அடித்து கொள்ள, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான் விஷ்வா.

“விடு இதயா. நான் எதையும் பேசலை. எனக்கு உன்னை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு.” அவன் அவள் கைகளை பிடித்திருந்தான்.

“பேச ஆரம்பிச்சப்புறம் எப்படி பாதியில் நிறுத்தறது விஷ்வா. உனக்கு நம்ம வாழ்க்கையிலிருந்து, காதலிலிருந்து எல்லாத்தையும் பாதியில் நிறுத்தி தானே பழக்கம்?” அவள் எகிற, “தப்பா பேசுற இதயா. நடந்த தப்பில் உனக்கும் பங்கிருக்கு. எத்தனை சதவீதம் எனக்கு பங்கிருக்கோ, அதே சதவீதம் உனக்கும் இருக்கு.” அவனும் எகிறினான்.

“விவாகரத்து பத்திரத்தை அனுப்பியது நீ.” அவள் கூற, அவன் கைமுஷ்டி இறுகியது.

‘தன் வாழ்வு மொத்தமாக திசை மாறிய இடம். ஆனால், நான் சொல்லும் காரணத்தை இவள் ஏற்றுக்கொள்ளுவாளா? அதுவும் இப்பொழுது.’ என்ற எண்ணம் தோன்ற, விஷ்வா தன் வாயை இறுக மூடி கொண்டான். 

“உன்னால இப்ப பேச முடியாது விஷ்வா. உனக்கு என்ன வேணும்? எனக்கு உன் மேல காதல் இருக்குனு சொல்லணும். அவ்வளவு தானே. ஆமா காதல் இருக்கு. இம்மியளவு குறையாமல் இருக்கு.” அவள் அழுத்தமாக கூறினாள்.

“ஒரு பொண்ணு காதலிச்சிட்டா, அதுவும் அவ கல்யாணம் பண்ணிக்கிட்டா, அதுவும் குழந்தை பெத்துக்கிட்டா, அப்புறம் அந்த பொண்ணு அவ வாழ்க்கையை பத்தி யோசிக்கவே கூடாதான்னு நீ நினச்ச பாரு. அப்ப கூட இதயாவுக்கு கோபம். பட் தட் ப்ளடி இதயா லவுட் யூ.” அவன் முன் மண்டியிட்டு இருக்கும் விஷ்வா முன் விரலை உயர்த்தி தன் காதலை கண்ணீரோடு கூறினாள்.

“நான் தோத்துட்டேன். உன் சவாலில் தோத்துட்டேன் அது தானே உன் பிரச்சனை. அதை நான் ஒத்துக்கணும் அவ்வளவு தானே?” என்று அவள் நிறுத்த, அவளை பேச விட்டு வேடிக்கை பார்த்தான் விஷ்வா.

“நான் இன்னைக்கா உன்கிட்ட தோத்து போனேன். நான் வாழ்க்கையிலே உன்கிட்ட  தோத்து போனவ தானே?” அவள் மீண்டும் அவன் சட்டையை பிடித்திருந்தாள்.

“உன்னை காதலிச்ச அப்ப முதல் தோல்வி. உன்னை கல்யாணம் பண்ணப்ப ரெண்டாம் தோல்வி. அப்புறம்…” அவள் நிறுத்த, “ஏன் நிறுத்திட்ட இதயா? பேசு… மேலும் பேசு.” என்று தன் உதட்டை சுழித்து கூறினான் விஷ்வா.

“உன் வாயால் இத்தனை அருமையான வார்த்தைகள் கேட்க கடல் தாண்டி வந்த என்னை ஏமாற்றிவிடாதே இதயா. இதுக்கு நீ காதல் இல்லைன்னு சொல்லி தொலைச்சிருக்கலாம். நானும், அதையே கேட்டுட்டு போயிருக்கலாம்.” அவன் கேலியாக கூற, அவள் அவனை முறைத்து பார்த்தாள்.

“என்னை வேண்டாமுன்னு விட்டுட்டு போனது நீ.” அவன் வார்த்தைகளை கடித்து துப்ப, “போக சொன்னது நீ.” அவள் உறுதியாக கூறினாள்.

“எப்ப, விவாகரத்து பத்திரத்தை அனுப்புவான் கையெழுத்து போடலாமுன்னு போட்டு கொடுத்தது நீ.” அவன் கூற, “விவாகரத்து கேட்டது நீ.” அவள் அசராமல் கூறினாள்.

“என்னோடான வாழக்கை உனக்கு தோல்வியா இதயா?” அவன் கண்கள் இப்பொழுது கலங்கியது.

அவளிடம் இப்பொழுது அமைதி.

“என்னை காதலிச்சு நீ தோத்து போய்ட்டியா இதயா? என்னை கல்யாணம் பண்ணி நீ தோத்து போய்டியா இதயா?” அவன் அவள் கன்னம் பிடித்து கேட்டான்.

“நம்ம வாழ்க்கையில் ஏதோ தப்பு நடந்தது உண்மை. ஆனால்…” அவன் இப்பொழுது தடுமாற, “எல்லாத்தயும் மறந்துட்டு சேர்ந்து வாழணுமா விஷ்வா?” இப்பொழுது அவள் நக்கலை அவள் குரலில் எடுத்து கொண்டாள்.

விஷ்வா மௌனம் காக்க, “எதுக்காக சேர்ந்து வாழனும் விஷ்வா?” அவள் ஆணி அடித்தார் போல் கேட்டாள்.

‘குழந்தைகளுக்காக’ சொல்ல அவன் தடுமாறினான்.

“குழந்தைகளுக்காகவா?” அவள் கேலியாக கேட்டாள்.

அவனிடம் மௌனம். “திரும்ப பழைய பிரச்சனை வராதுன்னு என்ன நிச்சயம் விஷ்வா?” அவள் கேட்க, அவன் பற்களை நறநறத்தான்.

“நான் மாறவே இல்லை விஷ்வா. அப்படியே இருக்கேன்.” அவள் தன் முகத்தை துடைத்து கொண்டு, அவன் முன் கம்பீரமாக நின்றாள்.

“நீ மாறிருக்கியா விஷ்வா?” அவள் குரலில் ஏளனம். “நான் ஏன் டீ மாறனும்? மொத்த தப்பும் உன் மேல. தப்பு பண்ணின நீ தான் மாறனும்.” அவன் தன் ஆள் காட்டி விரலை உயர்த்தி அவளை எச்சரித்தான்.

“அவ்வளவு தான்… கொரோனா லாக்டவுன் முடிந்ததும் இங்க இருந்து கிளம்பிரு.” கூறிவிட்டு படுக்க சென்றுவிட்டாள் இதயா. அஜயை பற்றிய எண்ணம் அவளை குடையத்தான் செய்தது.

‘இவளை சமாதானம் செய்யணும். அதுக்காக நான் இவளை கெஞ்ச எல்லாம் முடியாது. என்ன செய்யலாம்?’ படுக்கைறையில் குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தான் விஷ்வா.

அதே நேரம், “க்ரீச்… கீர்ச்…” என்ற சத்தம் கேட்க, தியா படக்கென்று அவர்கள் அறையில் எழுந்து அமர்ந்தாள்.

அவள் எழுந்து அமர்ந்த வேகத்தில் கட்டில் அசைந்தது. தன் கண்களை கோலிக்குண்டு போல் சுழட்டி எட்டி எட்டி பார்த்தாள்.

“தியா, நீ இன்னும் தூங்கலியா?” தன் ஒற்றை கையை தலைக்கு அண்டை கொடுத்து கீழே எட்டி பார்த்தான் அஜய்.

“இல்லை, நீ என் பொம்மை எடுக்க மாட்ட தானே?” தன் எலி பயத்தை மறைத்து கொண்டு சமாளித்தாள்.

“என் வீட்டுக்கு வா. என்கிட்டே இருக்கிற பொம்மை உனக்கு தரேன். உன் பொம்மை எல்லாம் எனக்கு வேண்டாம்” அவன் அசட்டையாக கூற, “உன்கிட்ட அவ்வளவு நிறைய பொம்மை இருக்கா?”  மேலே தலை உயர்த்தி, கண்கள் பளபளக்க கேட்டாள் தியா.

“நிறைய இருக்கு. நான் உனக்கு தரேன்.” அஜய் கூற, தியா தலை அசைத்து கொண்டாள்.

“இப்ப தூங்கு. கட்டிலை இப்படி அசைக்காத. நான் தூங்கணும்.”அவன் சற்று கோபமாக கூற, மீண்டும் “கீச்… கீச்…” என்ற சத்தம் வர, தியா தன் கண்களை சூழலவிட்டு அதே வேகத்தில் கட்டிலில் அங்குமிங்கும் உருண்டாள்.

“தூங்குன்னு சொல்றேன்ல.” அஜய் இப்பொழுது எரிந்து விழ, “மை ஹவுஸ், மை ரூம், மை காட், மை விஷ்” என்று தியா கட்டிலில் இருந்து இறங்கி இடுப்பில் கை வைத்து  அஜய்யை முறைத்து பார்த்து கடுப்பாக கூறினாள்.

“ஐயோ… எலி…” அவன் அலற, “அம்மா…” அலறிக்கொண்டு அவள் கட்டில் மீது ஏறினாள்.

அஜய் கலகலவென்று சிரிக்க, தியாவின் கண்கள் கலங்கியது.

தன் தங்கையின் கண்களில் பளபளப்பை பார்த்ததும் மேலிருந்து கீழே இறங்கி அவள் முன் அமர்ந்தான். தன் தங்கையின் கண்ணீரை துடைக்கும் பேராவல் அவனுள் எழுந்தது.

‘துடைச்சா, மை ஐஸ், மை டியர்ஸ், மை சீக்ஸ்ன்னு சொல்லுவாளோ?’ என்ற கேள்வி எழ, தியாவை தொடாமல் பேச்சை வளர்த்தான்.

“எ வீட்ல, வீட்குள்ளேயே மாடி இருக்கும். மாடி ஃபுல்லா எனக்கு தான். இதை விட பெரிய காட், பெரிய ரூம் இருக்கு. நீ எங்க வீட்டுக்கு வரியா? நான் உனக்கு எல்லாமே ஷேர் பண்றேன்? மை ரூம், மை டாய்ஸ், மை காட்ன்னு சொல்ல மாட்டேன். வரியா?” அவன் கேட்க, தியா அவனை யோசனையாக பார்த்தாள்.

மீண்டும், “கிரீச்… கிரீச்…” என்ற சத்தம்.

தியா, அஜய்க்கு மிக அருகே நெருங்கி அமர்ந்து கொண்டாள். அந்த பட்டு ஸ்பரிசம் அஜய்க்கு மிக பிடித்திருக்க அவன் அவள் ரோஜாப்பூ கன்னத்தை தொட்டு கொஞ்சினான்.

பக்கத்து அறையில், பெற்றோர்கள் முறுக்கி கொண்டிருக்க, இந்த அறையில் குழந்தைகள் நெருக்கி கொண்டு அமர்ந்தனர்.

மீண்டும், “கிரீச்… கிரீச்…” என்ற சத்தம் கேட்க, “உனக்கு ரட்ன்னா பயம் இல்லையா?” தியா கேட்க, “எலி எல்லாம் எனக்கு மேட்டர இல்லை. அதை வால் பிடிச்சி அப்படியே தூக்கி போட்டிருவேன்” அஜய் ஹீரோ போல் கெத்தாக கூற, அந்த அறையின் ஓரத்தில் தன் கண்களை உருட்டிக்கொண்டு இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு வாலை ஆட்டிக்கொண்டு எலி குறுக்கும் நெடுக்கும் ஓடி கொண்டிருந்தது.

அப்பொழுது ஒரு பொம்மை சரிந்து விழ, தன் சகோதரனின் கைகளை இறுக பற்றிக்கொண்டு, “நான், எப்பவும் என் அம்மா கூட தான் படுப்பேன். இன்னைக்கு நீ என் கூட படுப்பியா?” என்று தியா கேட்க, அஜயின் கண்களில் குறும்பு எட்டி பார்த்தது.

“நீ என்னை அண்ணான்னு கூப்பிடு. நான் உன் கூட படுக்கறேன். கூப்பிடு.” அவன் தியாவை மென்மையாக உரிமையாக ஆசையாக மிரட்டினான்.

‘இவன் என்னை பிளாக்மெயில் பண்ணறானோ?’ என்று சந்தேகமாக தியா தன் தமையனை பார்க்க, ‘இவள் என்னை அண்ணன்னு கூப்பிடுவாளா?’ என்ற எதிர்பார்ப்போடு தன் தங்கையை பார்த்தான் அஜய்.

இதயம் நனையும்…