ithayamnanaikirathey-21

IN_profile pic-da76721f
akila kannan

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 21

நிலவொளியில் அவள் தேகம் மின்ன, யாருமில்லா தனிமையை அவன் ரசிக்க ஆரம்பித்தான்.

நீர் அலைகள் அவர்களை மென்மையாக தீண்டி சென்றது. இருள் சுழுந்த இரவு அவர்களுக்கு ஏகாந்தத்தை உணர்த்த ஆரம்பித்தது.

விஷ்வாவின் பார்வை எல்லை மீறியது. “டேய்…. நீ பார்க்குற பார்வையே சரி இல்லை. நான் உனக்கு விஷயத்தை சொல்றேன்” அவள் நீர் அலைகளில் பின்னே நகர, “லூசா இதயா நீ. உன் விஷயத்தை கேட்கவா நான் உன்னை இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்திருக்கேன்” கடல் அலையில் அவளை நெருங்கியபடி அவன் கேட்டான்.

“அப்ப அதுக்கு கூட்டிட்டு வரலியா?” அவள் விழி விரிக்க, அவள் முகத்தில் கடல் நீர் முத்துக்களாக வடிந்தது.

“ம்ஹூம்…” அவன் மறுப்பாக தலை அசைக்க, “நான் கேட்ட விஷயத்துக்கு நீ இல்லைன்னு சொன்னியே. அதுக்கு தான்” அவன் கண்சிமிட்டினான்.

“உஸ்…” என்ற காற்று வீச, அவள் உடல் நடுங்க, தன் உடலை சிலிர்த்து கொண்டு, “நான் எதை இல்லைன்னு சொன்னேன்? ப்ரோமோஷனா? இல்லை ஆன்சைட் ட்ரெய்னிங்கா?” அவள் அறியாத சிறுபிள்ளை போல் கன்னத்தில்  கைவைத்து கொண்டு விழிவிரித்தாள்.

“நான் எதை சொல்றேன்னு உனக்கு தெரியலை?” அவன் அவளை துரத்த, அவன் கைகளுக்குள் அகப்படாமல், அவள் ஓட, அவன் இரெண்டே எட்டில் அவளை பிடித்து இழுக்க அவள் அவன் மீது வேகமாக மோதினாள்.

கடல் அலையில் அவன் சரிய, அவன் மீது அவள் சரிந்து அவன் கைகளுக்குள் அவள் வசமாக அகப்பட்டு கொண்டாள்.

“ஹா… ஹா… மாட்டினியா?” அவன் பெருங்குரலில் சிரிக்க, “நான் மைசூர் பாக் தரேன். நீ என்னை விட்டுருவியாம்?” அவள் பேரம் பேச, “மைசூர் பாக் சாப்பிடுற மனநிலையில் நான் இல்லை. நான் உன்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தேன்னு சொல்லு.” அவன் அவளை இடையோடு அணைத்து கொண்டே கேட்டான்.

“நான் விஷயத்தை சொல்றேன்.”அவள் கூற ஆரம்பிக்க, “தேவை இல்லை. நான் கேட்கும் பொழுது நீ சொல்லலை. அதனால், நீ சொல்லும் பொழுது நான் கேட்க மாட்டேன். நான், அஜய்க்கு தம்பியா? இல்லை தங்கையானு கேட்டேன். நீ இல்லைன்னு சொன்ன, அதை ஆமான்னு சொல்ல வைக்க தான் இங்க கூட்டிட்டு வந்தேன்.” அவன் உறுதியாக கூறினான்.

அவள் அவனிடமிருந்து விலகி ஏதோ பேச எத்தனிக்க, அவன் தன் பிடிமானத்தை இறுக்கி அவள் இதழ்களை அவன் மௌனிக்க செய்ய, அவள் முகம் செவ்வானமாக சிவந்தது.

 “இப்ப சொல்லு” அவன் வம்பிழுக்க, அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அண்ணாந்து பார்த்து, “இட் வாஸ் எ சால்டி டச்” என்றாள் கடுப்பாக. அந்த கடுப்பில் பொய்மை மட்டுமே இருந்தது. அவள் உள்ளமோ, கணவனின் அருகாமையை ரசித்து அவள் முகத்தில் அப்பட்டமாக வெளிக்காட்டியது.

மந்தகாச சூழல் அவர்களை சூழ, அவர்கள் பேச நினைத்ததையும் மறந்து வேறு உலகத்திற்கு சஞ்சரித்தனர்.

மறுநாள் காலையில், அவன் கைவளைவில் அவள்!

“விஷ்வா…” அவள் முணுமுணுத்தாள்.

      “சொல்லு இதயா” அவன் கண்களை மூடியபடியே கேட்க, “நேத்து, நான் மைசூர் பாக்கோடு சொல்லும் பொழுது கேட்கலை. இப்ப கேளு” அவள் அவன் மேல் வாகாக சாய்ந்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“ம்… கேட்குறேன்” அவனும் அவளை வாகாக அணைத்து கொண்டான். அவன் கரங்கள் அவள் தோள்களை சுற்றி வளைத்து கொண்டது.

     “நான் யூ.எஸ். இல் எம்.எஸ் பண்ணனும்னு நினச்சேன் இல்லை. அதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு” அவள் பேசி முடிக்க, அவன் கரங்கள் சட்டென்று அவள் தோள்களில் இருந்து விலகி அதிர்ச்சியை பிரதிபலித்தது. அந்த விலகளில் அவர்களுக்கு இடையில் மெல்லிய கீறல் விழ ஆயுத்தமானது.

“என்ன சொல்ற?” அவன் பட்டென்று எழுந்து அமர்ந்தான்.

“ஹ்ம்ம்… நான் யூ. எஸ். போறேன் படிக்க. ரெண்டு வருஷம். நீ, அஜய்யை பார்த்துக்கணும்னு சொல்றேன்.” இதயா, அவன் முகம் பார்த்து சிரித்த முகமாக கூறினாள்.

“என்ன உளறுற இதயா?” அவன் புரியாதவன் போல் கேட்டான்.

 “என்ன விஷ்வா புதுசா கேட்குற? நான், ஜி. ஆர். ஈ, டோஃபில் இதெல்லாம் படிக்கறது உனக்கு தெரியும் தானே?” அவள் சிடுசிடுக்க, “அதெல்லாம் தெரியும். அதுக்காக நீ எங்களை விட்டுட்டு போவியா?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.

“தூக்க கலக்கத்தில் நீ ஏதேதோ பேசுற விஷ்வா. முதலில் பிரஷ் பண்ணிட்டு, குளிச்சிட்டு பேசுவோம்” இதயா குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

‘விஷ்வா, ஏன் சந்தோஷப்படலை? விஷ்வாவுக்கு இதில் உடன்பாடு இல்லையா? எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி பேசினது தானே?’ சிந்தனையோடு குளித்து கொண்டிருந்தாள் இதயா.

‘இது என்ன இதயா, இப்படி என்னைக்கோ பேசின விஷயத்தை பிடிச்சிக்கிட்டு இப்ப தொங்குறா? எல்லா பொண்ணுங்களும் கல்யாணத்துக்கு முன்னாடி படிக்கணும்னு ஆசை படுறது இயற்கை தான். அதை, கல்யாணத்துக்கு அப்புறம் செய்ய முடியுமா என்ன?’ அவன் மனம் இவ்வாறாக அசை போட ஆரம்பித்தது.

“அவ, ஜி. ஆர். ஈ, டோஃபில் அப்படின்னு எழுதும் பொழுதே தடுத்திருக்கணுமோ? நான் இதயாவுக்கு கிடைக்கும், அவ இப்படி கிளம்புவான்னு நினக்கலியே” அவன் தன் போக்கில் முணுமுணுத்து கொண்டான்.

“விஷ்வா” அவள் அழைக்க,”குளிச்சிட்டு வரேன் இதயா” அவன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

‘விஷ்வாவுக்கு இதில் விருப்பமில்லை. என்னை தவிர்க்கிறான்’ தன் கணவனின் மனநிலையை நொடி பொழுதில் கிரகித்து கொண்டாள் இதயா.

பிங்க் நிற சேலையில் அவள் கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தாள். தன் தலையை துவட்டிக்கொண்டாள். நேற்று இருந்த மனநிலை, இப்பொழுது இதயாவிடம் இல்லை.

அவள் பொட்டு வைக்க எத்தனிக்க, அவளை பின்னோடு அணைத்து அவன் பொட்டு வைத்தான். அவள் தோளில், தன் நாடியை பதித்து, “எல்லாரும் எதுக்கு படிப்பாங்க இதயா?” அவன் சமாதானம் செய்யும் நோக்கோடு கேட்டான்.

“நீ எதுவோ சொல்ல நினைக்குற விஷ்வா. நீயே சொல்லு.” அவள் விட்டு கொடுத்தாள்.

“நல்ல வேலை கிடைக்க இதயா. நல்ல வேலை எதுக்கு தெரியுமா? கல்யாணம் பண்ணிக்க. கல்யாணம் எதுக்கு தெரியுமா? அழகான குழந்தைகளுக்காக. உனக்கும், எனக்கும் நல்ல வேலை இருக்கு. கல்யாணம் ஆகிருச்சு. குழந்தையும் இருக்கு. தெய்வ பிராப்தம் இருந்தா, நமக்கு இன்னொரு குழந்தையும் பிறக்கும்.” அவளை மேல் சாய்ந்து கொண்டே பொறுமையாக பேசினான் விஷ்வா.

“…” இதயா எதுவும் பேசவில்லை.

அவளை தன் பக்கம் திருப்பினான். “பேசு இதயா” அவன் கூற, “அது தான் நீ பேசுறியே” அவள் தன்மையாகவே பதிலளித்தாள்.

“ஏதோ, ரெண்டு மாசம் மூணு மாசம்ன்னா கூட பரவால்லை. ரெண்டு வருஷம் நீ என்னை பிரிஞ்சி இருக்கணுமா இதயா. அப்படி இந்த படிப்பு என்ன உனக்கு அவசியம்?” அவன் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“அப்ப எதுக்கு நான் ஜி. ஆர். ஈ, டோஃபில் எல்லாம் எழுதும் பொழுது நீ எதுமே சொல்லலை விஷ்வா?” அவள் கேட்க, அவனிடம் மௌனம் மட்டுமே.

“சொல்லு விஷ்வா. எனக்கு கிடைக்காதுன்னு நீ நினைச்சிருக்க?” அவள் அவனை கண்டு கொண்டவன் போல் கேள்வியாக நிறுத்த, “அப்படி இல்லை இதயா. நீ இதுல இவ்வளவு மும்முரமா இருப்பன்னு நான் நினைக்கலை.” அவன் சமாளித்தான்.

 

“தெரிஞ்சிருந்தா?” அவள் பிடிவாதமாக நிற்க, “அப்பவே வேண்டாமுன்னு சொல்லிருப்பேன்” அவன் பட்டென்று கூறினான். மனம் சில சமயங்களில் முந்திக் கொள்ளும்.

“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நாம என்ன பேசினோம் விஷ்வா? இது என் கனவு. நான் இதை உன்கிட்ட சொன்னேன் தானே?” அவள் பரிதாபமாக கேட்டாள்.

“எல்லாருக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி ஆயிரம் கனவு இருக்கும். எல்லாருக்கும் எல்லாம் நடக்கறதில்லை இதயா” அவன் விலகி நின்று எங்கோ பார்த்தபடி கூறினான்.

“நான் படிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு சொன்னேன். நீ தானே, உங்க வீட்டில் உனக்கு பொண்ணு பாக்குறாங்க, நாம முதலில் கல்யாணம் பண்ணிக்கலாம். அப்புறம் படின்னு சொன்ன” அவன் விலகி நின்றாலும், அவள் முன்னே வந்து அவன் மார்பில் சாய்ந்து விம்மினாள் இதயா.

அவள் தலை கோதி, “எல்லாம் சரி தான் இதயா. இப்ப, அஜய் நீ இல்லாமல் எப்படி இருப்பான்? இந்த ஒரு நாளுக்கே ஊரை கூட்டிருவான்” அவன் கூற, அவள் விலகி நின்று கொண்டு அவனை முறைத்து பார்த்தாள்.

“அப்புறம் தான் குழந்தைன்னு நான் சொன்னதுக்கு, குழந்தை எல்லாம் படிப்புக்கு தடங்களான்னு கேட்டது நீ. பிள்ளை வயத்தில் இருந்தா கூட படிக்கலாமுன்னு சொன்னது நீ.” அவள் எகிறினாள்.

“அதே நான் தான் இப்ப முடியாதுன்னு சொல்றேன். எனக்கு நீ வேணும். நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது. அஜய்க்கு அம்மா வேணும். என் பிள்ளை அம்மா இல்லாமல் கஷ்டப்பட கூடாது.” அழுத்தமாக கூறினான் விஷ்வா.

 

“என் ஆசை? என் கனவு?” அவன் முன் அவள் பரிதாபமாக கேட்டாள்.

‘குப்பையில் போடு’ என்று நேரடியாக சொல்ல அவன் நல்ல மனம் ஒப்புக் கொள்ளவில்லை.

‘சரி போய் படி’ என்று சொல்லவும் அவனிடம் அத்தனை பரந்த நல்ல மனமும் இல்லை.

“….” மௌனத்தை கையில் எடுத்து கொண்டான் விஷ்வா.

இருவரும் வீட்டை நோக்கி கிளம்பினார். அவர் முகம் பொழிவை இழந்து இருந்தது.

‘திருமணத்திற்கு பின் ஒரு பெண்ணுக்கு தனக்கென்று ஒரு கனவு இருப்பது அத்தனை குற்றமா?’ அவள் மனதில் பாரம் ஏறி அமர்ந்து கொண்டது.

இதயா எதுவும் பேசாமல் அவன் அருகே காரில் அமர்ந்திருந்தாள். விஷ்வா இருமுறை அவளை திரும்பி பார்த்தான்.

‘இப்ப பேச வேண்டாம்’ அவன் அறிவு அவனை எச்சரித்தது.

‘ஆனால், பேசி சரி செய்து கொள்ளலாம். இதயா நான் சொன்னால் கேட்பாள்’ காதல் கொண்ட அவன் மனம், அவனுக்கு நம்பிக்கை கொடுத்தது.

இதயா, சுய அசலில் இறங்கினாள். ‘நான் விஷ்வாவை காதலித்தேன் தான். ஆனால், காதலுக்காக என் கனவை, என் படிப்பை அழித்து கொள்ளும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. விஷ்வா ஒரு நாளும் என் அழிவுக்கு காரணமாக இருக்க மாட்டான். ரெண்டு வருஷம் தானே? விஷ்வா, நான் சொன்னால் கேட்பான்’ அவள் மனம் உறுதியாக நம்பியது.

வீடு  வரை கனத்த அமைதியோடு வந்து சேர்த்தனர். அவள் இறங்க எத்தனிக்க, “இதயா…” விஷ்வா அழைத்தான். “ம்….”, எம்பி அவள் நெற்றில் இதழ் பதித்தான்.

“ரொம்ப யோசிக்காத. பேசிக்கலாம்” அவன் கூற, அவள் தலை அசைத்து இறங்கினாள். இருவரும் ஒரு சேர பேசிக்கலாம் என்றே எண்ணினர்.

அவர்கள் அறியாமல், அவர்களுக்கு இடையே விழ  எத்தனிக்க ஆரம்பித்த கீறல், மெலிதாக விழ ஆரம்பித்திருந்தது.

    ‘அதன் பின் என்னத்த பேசினோம். பொறுமையாக பேசிருக்கலாமோ?’ கீறல், விரிசலாக மாறி, விரிசல் உடைந்தே போகும் அளவுக்கு பல பிரளயங்களை கொண்ட கடந்த காலத்தை மேலும் சிந்திக்க வலுவில்லாமல் நிகழ் காலத்திற்கு திரும்பினாள் இதயா.

“நாம, நிதானமா இருந்திருக்கலாம் இதயா” அவன் வருத்தமான குரல் அவளை முழுதாக நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது.

“பழசு எதுக்கு விஷ்வா?” அவள் சலிப்பான குரலில் கேட்க, “நீ யோசிக்குறியே இதயா” அவன் வருந்தினான்.

அவள் எதுவும் பேசாமல் தூங்குவது போல் பாசாங்கு செய்தாள். விஷ்வாவும் பேச்சை வளர்க்கவில்லை.

மறுநாள் காலையில், அஜய்க்கு பிடிக்கும் என்று அடை செய்திருந்தாள்.

“நாம லாங் டிரைவ் போவோம்” விஷ்வா கூற, “இந்த கொரொனா சூழ்நிலையில் வெளிய போகணுமா விஷ்வா?” இதயா யோசனையோடு கேட்டாள்.

“ம்…. போலாம் இதயா காருகுள்ள தானே இருக்க போறோம். வந்து குளிச்சிபோம். பயம் இல்லை” அவன் கூற, “போலாம் அம்மா” அஜய் உரியோடு கெஞ்சினான்.

இதயா, தலை அசைக்க, “எங்க அம்மாவுக்கு கார் ஓட்ட தெரியும். உங்களுக்கு தெரியுமா?” என்று தியா விஷ்வாவை பார்த்து கேட்க, இதயா “க்ளுக்…” என்று சிரித்தாள்.

    அஜய், அம்மா என்று அழைத்து உரிமை கொண்டாடியதில், அவள் முகத்திலும், செயலிலும் அவள் வெளிக்காட்ட வில்லை என்றாலும் சந்தோசம் அப்பட்டமாக தெரிந்தது.

விஷ்வா தன் மனைவியின் முக பாவனையை மனதில் குறித்து கொண்டான்.

அவன் கண்கள் அவளையே வட்டம் அடிக்க, “கேட்குறேன்ல்ல, எங்க அம்மாவுக்கு கார் ஓட்ட தெரியும். உங்களுக்கு தெரியுமா?” என்று தியா மீண்டும் அழுத்தமாக கேட்டாள்.

‘ஒய் சுண்டக்காய். உன்னை ஒரு நாள் ஓட ஓட விரட்டி, என் மடியில் உட்கார வைக்குறேன்.’ மனதில் சூளுரைத்து கொண்டே, “உங்க அம்மா அளவுக்கு தெரியலைனாலும், ஒகேவா  தெரியும்” அவன் பணிவோடு கூற, இப்பொழுது அஜய் சிரித்தான்.

பாவம், தியாவுக்கு அவன் கேலி புரியவில்லை . “ஓகே, ஓட்டுங்க. வேணுமின்னா எங்க அம்மா ஹெல்ப் பண்ணுவாங்க” பெருமிதமாக கூறினாள்.

‘நாம பண்ற கேலி இந்த சுண்டைக்காய்க்கு புரியாது. நம்மளை ஈஸியா கேலி பண்ணுது ‘ எண்ணியப்படி, அவன் “ங…” என்று விழிக்க, அங்கு மீண்டும் சிரிப்பலை பரவியது.

விடியற்காலையில், இதயா அஜய்க்காக மைசூர் பாக் செய்திருந்தாள். அப்படி தான் அவள் மனம் நம்பியது.

இதயா, மைசூர்பாக்கை நீட்ட, “வாவ்… ஐ லவ் இட்” அஜய் ஆர்வமாக எடுத்து கொண்டு தியாவின் அருகே சென்றான்.

தியா கைகளை நீட்ட,  “நான் குடுக்கறேன்…” அவன் கூறிக்கொண்டே, அஜய் தியாவுக்கு ஊட்டிவிட்டான்.

விஷ்வா, இதயா இருவரும் அவர்கள் அறியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“யம்மி…” தியா, அஜய் இருவரும் இதயாவின் முன்னே வாயை திறக்க, ஆளுக்கொரு வில்லைகளை ஊட்டினாள் இதயா.

விஷ்வாவும் குழந்தைகள் போல் அவள் முன்னே நின்று வாயை திறந்தான்.

‘மைசூர் பாக்  செய்தால் நான் இருக்கும் வரை, இவன் ஒரு நாளும் அவனே சாப்பிட மாட்டான். நான் போன பிறகு என்ன செய்தானாம்?’  இதயாவின் மனம் இப்பொழுது முரண்டு பிடித்தது.

அவள் மனவோட்டத்தை புரிந்தவன் போல், “நீ என்னைவிட்டு போன பிறகு நான் இத்தனை வருஷத்தில் மைசூர் பாக் சாப்பிடவே இல்லை இதயா. நீ செஞ்சா தான்  நான் சாப்பிடுவேன். நீ குடுத்தா தான் நான் சாப்பிடுவேன்” அவன் குரல் பாகை விட குழைந்தது.

அவன் வார்த்தைகள் அவள் மறுக்க நினைத்தாலும் பாகை விட அவளுக்கு இனித்தது.

இத்தோடு மற்றோரு பழக்கமும் உண்டு. அவள் நினைத்து பார்க்கவும் விரும்பாத விஷயமும்! அதுவும் இப்பொழுது அவள் நினைவலைகளை மீட்ட, தன் உதடுகளை பற்களால் கடித்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டிருந்தாள்.

அவன் அவள் எண்ண ஓட்டங்களை படிப்பவன் போல் அவளை ஆழமாக பார்த்து கொண்டிருக்க, “அம்மா, நெக்ஸ்ட் பீஸ்” அவர்கள் முன்னே குழந்தைகள் வந்து நின்றனர்.

 

அவள் அடுத்த வில்லைகளை குழந்தைகளுக்கு கொடுக்க, விஷ்வா வாயை திறந்து கொண்டு குழந்தைகளோடு நின்று கொண்டான்.  குழந்தைகளுக்கு இந்த விளையாட்டு சுவாரசியம் பிடிக்க, அவர்கள் கவனமும் தந்தையின் பக்கம் திரும்பியது.

இதயாவின் கைகளோ வெறுப்புக்கும், கோபதுக்கும், காதலுக்கும், ஆசைக்கும் இடையில் நடுங்கியது. அடுத்த மைசூர் பாக் வில்லையோ, ‘நாம் யாருக்கு?’ என்று கண்களை உருட்டி நால்வரையும் பார்த்தது.

இதயம் நனையும்…