ithayamnanaikirathey-23

IN_profile pic-2a39906a

ithayamnanaikirathey-23

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 23

‘வாழ்வில் அவள் வென்றாளா?’ அவன் கேள்வியில் அவளிடம் மௌனம் மட்டுமே.

அவள் பேசவில்லை. “சொல்லு இதயா. நீ சொல்லு, நான் வாழ்க்கையில் ஜெயிச்சிட்டேன்னு சொல்லு. நான் வந்த வழியே பார்த்துட்டு போயிடுறேன். இல்லைனா, உன் வீட்டை காலி பண்ணிட்டு என் வீட்டுக்கு வா. எனக்கு எல்லாம் பழசு போல மாறனும்” அவன் குரலில் பிடிவாதம் மிதமிஞ்சி இருந்தது.

‘ஒரு மைசூர் பாக்கை நான் கொடுத்து தொலைச்சிருக்கலாம். இவனுக்கு இதெல்லாம் பேச ஒரு சாக்கு வேணும். இதை பிடிச்சிக்கிட்டு தொங்குறான்’ இதயா தடுமாறிக் கொண்டிருக்கையில், “பதில் சொல்லு இதயா” அவன் தன் கவனத்தை முழுதாக தன் மனைவியிடம் மட்டுமே வைத்திருக்க, இதயா தன்னுள்ளே மூழ்கி நின்றாள்.

“அம்மா, என்ன பண்றாங்க? நான் இறங்க போறேன் அண்ணா” தியா கூற, “அது தான் தெரியுதில்லை பேசிட்டு இருக்காங்க. இறங்காத தியா” அஜயின் குரலில் கட்டளை தெரிந்தது.

“முடியாது. நான் இறங்குவேன்” தியா, பிடிவாதமாக கதவை திறக்க எத்தனித்தாள்.

 அதில் சைல்டு லாக் போட்டிருக்க, அவளால் இறங்க முடியவில்லை.

பின்பக்கமிருந்து முன் பக்கம் எகிறி குதித்து தியா கதவை திறக்க அது திறந்து கொண்டது.

கதவு திறந்து கொண்ட சந்தோஷத்தில் அவள் வேகமாக வெளியே ஓடினாள்.  அப்பொழுது அங்கு வேறு ஒரு காரை அவளும் எதிர்பார்க்கவில்லை. தியாவின் இந்த செயலை இதயாவும், விஷ்வாவும் எதிர்பார்க்கவில்லை.

விஷ்வா அதிவேகமாக ஓடி சென்று தியாவை இடது கையால் அலேக்காக  தூக்கி கொண்டான். ஆனால், முற்றிலுமாக சரிந்து கீழே விழுந்துவிட்டான். தியாவை தன் மேல் போட்டுக்கொண்டு.

அவனது வலது கை, அவனுக்கு கீழே மாட்டிக்கொண்டது.

“தியா…” என்று ஆரம்பித்த இதயாவின் அலறல் சத்தம் “விஷ்வா…” என்று முடிந்தது.

தியாவின் கண்களில் மிரட்சி. அவள் கன்னம் இன்னும் சிவந்தது. அவள் கண்கள் வேகமாக படபடத்தது. அவள் கருவிழிகள் தந்தையையே பார்த்தது.

விஷ்வாவை கை தூக்கி எழுப்பிவிட்டாள் இதயா. “அறிவில்லை” இதயா தியாவை கையோங்க முற்பட, “இதயா” தன் மனைவியின் கைகளை பற்றி, மறுப்பாக தலை அசைத்தான் விஷ்வா.

அவன் வலது கைகளை வைத்து தான் தடுக்க எத்தனித்தான். ஆனால், முடியவில்லை, இடது கையை வைத்தே தடுத்து நிறுத்தினான்.

வலது கைகளில் ரத்தம் கசிய ஆரம்பித்தது.  “அப்பா…” அலறிக்கொண்டு அஜய்  முன் பக்கம் குதித்து, கதவை திறந்து கொண்டு வந்தான்.

“தங்கச்சியை பார்த்துக்க மாட்டியா அஜய்” விஷ்வா மகனை கண்டிக்க, அஜய் தன் தலையை குனிந்து கொண்டான். அவன் தன் தங்கையை காட்டி கொடுக்கவில்லை.

“அண்ணா போக கூடாதுன்னு தான் சொன்னான். நான் தான் கேட்கமா வந்தேன்” தியா தன் தவறை ஒத்து கொண்டாள்.

விஷ்வா தான் குழந்தைகளிடம் பேசிக்கொண்டே நடந்து வந்தான். இதயாவின் கவனம் முழுவதும் விஷ்வாவிடம் மட்டும் தான் இருந்தது.

‘காலில் அடி இல்லை’ அவள் அவனை கூர்மையாக பார்த்தாள்.

‘வலது கையில் அடி போல. இடது கையால் தானே என்னை பிடித்தான்.’ அவள் அவன் வலது கையை தொட, அவன் அவளை முகம் சுருக்கி தட்டிவிட்டான்.

விஷ்வா கோபப்படுவான் தான். ஆனால், இந்த நிராகரிப்பு அவள் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

தன் மனைவியின் வாடிய முகத்தில், “வலிக்குது இதயா” அந்த பொழுதிலும் அவளை சமாதானம் செய்தான்.

அவனை அமர வைத்து, காரில் அவள் வைத்திருக்கும் ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸிலிருந்து அவன் ரத்த காயத்திற்கு மருந்திட்டாள்.

“அப்பா…” என்று அஜய் தன் தந்தையின் தோள் அருகே பயத்தோடு நிற்க, “அப்பாவுக்கு ஒண்ணுமில்லை அஜய்” மகனை சமாதானம் செய்தான்.

“ஹாஸ்பிடல் போகணும் விஷ்வா” இதயா கூற, அவன் மறுப்பாக தலை அசைத்தான்.

“லைட்டா சிராய்ப்பு தான். ரைட் ஹாண்ட் அசைக்க முடியல. ஆனால், நாளைக்கி பார்த்திட்டு போவோம். ஒருவேளை, ஐஸ் பேக் வச்சி சரியாகுதான்னு பார்ப்போம். இந்த சூழ்நிலையில் ஹாஸ்பிடல் வேண்டாம்” விஷ்வா கூற, “வலி…” அவள் பரிதவிப்போடு கேட்டாள்.

“நான் இதை விட நிறைய பார்த்துட்டேன்” அவன் சற்று காட்டமாகவே கூறினான்.

இதயா, எதுவும் பேசவில்லை. காரை நேராக வீட்டை நோக்கி செலுத்தினாள்.

குழந்தைகளை முதலில் குளிக்க சொன்னாள். விஷ்வா சோர்வாக சோபாவில் அமர்ந்துவிட்டான்.

நேரம் செல்ல செல்ல அவனால் வலது கையை அசைக்க முடியவில்லை.

“விஷ்வா…” அவள் அழைக்க, “ம்…” அவன் எதுவும் பேசவில்லை.

கோபம், வலி என அனைத்தும் அவனிடம். எத்தனை நாட்கள் தான் விதவிதமா சண்டை போடுவது என்ற சலிப்பு. அவள் தண்ணீரை நீட்டினாள்.

“தண்ணீ குடி விஷ்வா” அவள் கூற, அவனிடம் பிடிவாதம் அமர்ந்து கொண்டது. மறுப்பாக தலை அசைத்தான்.

அவள் தண்ணீரை கீழே வைத்துவிட்டு, அவன் கைகளை ஆராய முற்பட, அவன் முகம் சுருங்கியது. விஷ்வா, சட்டையை கழட்டு. அவனால் முடியவில்லை. வலது கைகளை உயர்த்த முற்படுகையில் அவன் முகம் சுருங்கியது.

அஜய், தியா இருவரும் குளித்துவிட்டு தன் தந்தையை பார்த்தபடி அருகே நின்றனர்.

இதயா, அவனுக்கு சட்டையை கழட்ட உதவினாள். முதுகு பக்கம் தோள் பட்டையில் சிராய்ப்பு.

“கைகளில் ரத்தம். கை கால் கழுவிட்டு வா விஷ்வா. நான் ஐஸ் பேக் வைக்குறேன்” அவள் கூற அவனும் சென்றான். வெளியே சென்றதால், இதயா குளிக்க சென்றாள்.

விஷ்வா, கை கால்களை கழுவிவிட்டு மெத்தையில் அமர்ந்திருக்க, தியா சோபாவில் கண்களை கசக்கி கொண்டு அமர்ந்திருந்தாள்.

“தியா ஏன் அழற?” அஜய் தங்கையின் கைகளை பிடித்து கொண்டு கேட்டான்.

“நான் தான் ரீசன். அம்மா, என்னை திட்டவே மாட்டாங்க. இன்னக்கி மாம் என்னை திட்டிட்டாங்க.” அவள் விசும்ப, “மாம் ஹேட்டட் மீ.” என்று தியா தன் அண்ணனிடம் கூறிவிட்டு உதட்டை பிதுக்கினாள்.

“திட்டினா ஹேட்ன்னு அர்த்த்மா? அப்படி எல்லாம் இல்லை. தப்பு பண்ண திட்டீனாங்க. நான் உன்னை இறங்க கூடாதுன்னு சொன்னெனில்லை?” அஜய் தங்கையை கண்டித்தான்.

“ம்…” தியா பரிதாபமக தலை அசைக்க, அஜய் தன் தங்கையின் கன்னம் தொட்டு, “ஃபீல் பண்ணாத. அப்பாவுக்கு சரியாகிரும்” பெரிய மனிதன் போல் கூறினான்.

“அப்பாவும் திட்டுவாங்களா?” தியா தன் கண்களை சிமிட்டி சிமிட்டி கேட்க, “ச்..ச்ச… அப்பாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.” என்று அஜய் கூறினான்.

“உண்மையாவா?” தியா கேட்க, “உண்மையா, நீ தான் பேசவே மாட்டேங்குற. இன்னைக்கி பேசி பாரேன்” அஜய் தன் தங்கையை தந்தையிடம் பேச சொல்லி உந்தினான்.

“அப்பா, ஸோ ஸ்வீட் தெரியுமா? அம்மா மாதிரியே” என்று அஜய் கூற, தியா விறுவிறுவென்று நடந்து தந்தையிடம் சென்றாள்.

அருகே சென்றுவிட்டாளேயொழிய, என்ன பேசுவதென்று அவளுக்கு தெரியவில்லை. 

விஷ்வா, வலியால் கண்களை மூடி கொண்டு அமர்ந்திருந்தான்.

அவன் கைகளில் இருக்கும் ரத்த காயத்தை அச்சத்தோடு பார்த்தாள் தியா. மிக அருகே செல்ல செல்ல அவள் உடல் நடுங்கியது. அஜய், அவள் அருகே நின்று கொண்டு, ‘பேசு… அப்பா கிட்ட பேசு…’ கைகளால் செய்கை காட்டினான்.

தியா, மறுப்பாக தலை அசைக்க, ‘ ஒண்ணும் சொல்லமாட்டாங்க. திட்ட மாட்டாங்க…’ அவன் செய்கை காட்டினான்.

 தியா, கழுத்தை திருப்பி தன் தந்தையை கொஞ்சம் பயத்தோடு பார்த்தாள். சற்று பாசத்தோடு நெருங்கினாள்.

தந்தை என்ற பாசம் அவன் அருகாமையில் துளிர்விட்டு கொண்டு தான் இருந்தது. இன்றைய செய்கையில், அது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர தயாராக, அவள் கண்களில் இருந்து குட்டி கண்ணீர் துளி அவன் கையை தொட்டது.

அவன் பதட்டத்தோடு கண்களை திறக்க, “சாரி… சாரி அப்பா… சாரி அப்பா…” அவள் பதறினாள்.

‘அப்பா…’ என்ற தியாவின் அழைப்பில் அவனுக்கு அவன் வலிகள் மறந்து தான் போயின.

தன் இடது கையால் அவளை தூக்கி தன் மடிமீது அமர வைத்தான்.

“என்ன சொன்ன?” அவன் தன் மகளை மடிமீது வைத்து கொண்டான்.

“நான் தான் ரீசன். சாரி…” தியா உதட்டை பிதுக்கி, கண்களை சிமிட்டினாள்.

“ச்… ச்ச்… அதெல்லாம் இல்லை தியா. அப்பாவே தான் விழுந்துட்டேன். நீயா தள்ளிவிட்ட?” என்று அவன் தன் மகளை சமாதானம் செய்தாலும், தியா அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

“ரொம்ப வலிக்குதா?” அவன் கைகளை தடவி கேட்டாள்.

“இப்ப இல்லை.” அவள் பிஞ்சு கரத்தை அவன் உதட்டோடு பொருத்தி கூறினான்.

“அப்பா…” அவள் திரும்ப அழைக்க, “அஜய், உங்க அம்மாவை ஐஸ் பேக்கோடு, மைசூர் பாக் டப்பாவை எடுத்து வர சொல்லுடா” அவன் கம்பீரமாக கூறினான்.

‘இவன் இந்த மைசூர்பாக்கை விடவே மாட்டானா?’ அவள் கடுப்பின் உச்சத்திற்கே சென்றாள்.

இதயா, ஐஸ் பேக் மற்றும் இனிப்போடு வர, “இப்ப எதுக்கு மைசூர் பாக்? கீழே விழுந்து புதையல் எடுத்ததுக்கா?” என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தவள் கண்ட காட்சியில் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றாள்.

ஆனால், அவளிடம் பழைய அச்சம் இல்லை. ‘இவன் தியாவை பெற்றுக்கொண்டு செல்வானோ?’ என்ற சந்தேகம் கிஞ்சித்தும் அவளிடம் இல்லை.

‘என் விஷ்வா, என்னை விட்டு போக மாட்டான்.’ அவள் ஆழ் மனம் உண்மையை அடித்து உரைக்க, அந்த எண்ணம் அவள் உடலில் இன்ப அதிர்ச்சியை கொடுக்க, அவன் கேட்ட கேள்விக்கு பதில் கிடைப்பது போன்ற உணர்வு அவளுள் பாய்ந்தது.

‘நான் வாழ்க்கையில் ஜெயித்தேனா?’ நடுங்கும் கைகளோடு, அவன் அருகே சென்றாள்.

“நீ கொடுக்க வேண்டாம். நானே சாப்பிட்டுக்குறேன்” அவன் மைசூர் பாக்கை எடுக்க தன் வலது கையை உயர்த்த அவனுக்கு வலி அதிகரிக்க, அவன் முகம் சுருங்கியது.

இதயா அப்பொழுது மறுத்ததை இப்பொழுது செய்ய அவன் பாதியை கடித்துவிட்டு, தன் வழக்கம் மாறாமல்  அவளிடம் கொடுக்க அவளும் பெற்றுக்கொண்டாள். அவள் முகபாவத்தை அறிய அவன் முற்படுகையில், அவள் தன் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

நடப்பது புரியாமல் அஜய் தந்தையின் அருகே அமர்ந்து கொண்டும், தியா தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டும் வேடிக்கை பார்த்தனர்.

“தியா, அப்பாவுக்கு ஐஸ்பெக் வைக்கணும். நீ இறங்கு.” இதயா சிடுசிடுத்தாள்.

“அவ இருக்கட்டும்.” விஷ்வா, தன் மகளை தோளோடு அணைத்து கொண்டான்.

“நோ அப்பா. மாம் ஐஸ் ரைட். கெட் வெல் சூன்” என்று கூறிக்கொண்டு மடியிலிருந்து இறங்கினாள் தியா.

“நான் உன்கிட்ட இருந்து ஸ்வீட் வாங்கி இருக்க மாட்டேன். என் பொண்ணு அப்பான்னு கூப்பிட்டதால் வாங்கினேன்.” அவன் வலியில் சண்டைக்கு இப்பொழுது தயாராக, இதயா அந்த மனநிலையில் இல்லை.

அவள் எதுவும் பேசாமல் அவனுக்கு ஐஸ் பேக் வைக்க ஆரம்பித்தாள். அவன் முதுகுக்கு அவள் மருந்திட, “எரியுது இதயா” அவன் முனங்கினான்.

“கொஞ்சம் பொறுத்துக்கோ விஷ்வா.” அவள் மென்மையாக தடவினாள்.

“சிராய்ப்பு சீக்கிரம் ஆறிடும் விஷ்வா. ஆனால், இந்த கை தான் எனக்கு தெரியலை” அவள் குரலில் கவலை மண்டி கிடந்தது.

“அதெல்லாம் பெருசா இருக்காது. எல்லாம் சரியாகிரும்” அவன் பட்டும்படாமலும் சமாதானம் செய்தான்.

“நானே வினை கணக்கா கூட்டிட்டு போய், இப்படி உன்னை விழ வச்சிட்டேன். என் கனவுன்னு பேசினாலே நமக்கு சரிப்படாது. அப்படி இருந்தும், நான் பேசி தொலைச்சி… இப்படி…” அவள் தடுமாற, அவன் இடது கைகளால் அவளை தன் பக்கம் சாய்த்து, “லூசா நீ இதயா…” அவள் செவியோரம் அவளை கண்டித்தான்.

அவன் மார்பில் அவள் சாய்ந்து விம்ம அவன் கண்களும் கலங்கியது. ‘நான் திட்டினா தாங்க மாட்டா. எனக்கு ஒன்னுனா தாங்க மாட்டா.’ அவன் மனம் உருகியது.

அவன் அவள் தலை கோதினான். “இதயா…” அவன் கரைந்து உருகினான்.

“அழாத இதயா…” அவன் குரல் கரகரத்தது.

“உனக்கு தான் என்னை பிடிக்காதில்லை. காலையில் இருந்து நீ என்னை திட்டிகிட்டு தானே இருந்த?” அவள் அவன் தோளோடு இன்னும் நெருங்கி கொண்டு விம்மினாள்.

“இதயா…” அவன் தலை கோதினான்.

“என்னால, வலின்னு சொன்ன. இப்ப உண்மையில் என்னால தானே வலி?” அவள் குலுங்கி அழ, “ஒய்… எனக்கு ஒண்ணுமில்லை. சீக்கிரம் சரியாகிரும்” அவள் தலை கோதி அவன் ஆறுதல் கூறி அவளை அணைக்க வலது கையை உயர்த்த, “ஆ…” என்று அலறினான் விஷ்வா.

அவன் அலறல் சத்ததில், தியா அஜய் இருவரும் அச்சதோடு ஒடி வந்தனர். தியாவின் கருவிழிகள் பயத்தில் வேக வேகமாக தன் தந்தையை சுற்றி சுழல, அஜய் யோசனையாக தன் தந்தையை பார்த்தான்.

இதயாவின் இதயமோ அவனை விட அதீத வலியில் துடித்தது.

 இதயம் நனையும்…

Leave a Reply

error: Content is protected !!