ithayamnanaikirathey-25
ithayamnanaikirathey-25
இதயம் நனைகிறதே…
அத்தியாயம் – 25
விஷ்வா இதயாவை நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள, விலக அவளுக்கும் இன்று மனமில்லை. ‘விலக எண்ணினாலும் அவன் விடமாட்டான்’ என்ற பெருமிதமும் இதயாவிற்குள் வந்திருந்தது.
‘டிபிக்கல் இண்டியன் ஹஸ்பண்ட்’ அவன் கூறிய விளக்கத்தில் அன்று கசந்த வார்த்தை இன்று அவளுக்கு இனித்தது.
மகிழ்வு அவளுள் குறும்பை வரவழைக்க, அவன் மேல் சாய்ந்திருந்தாலும் அண்ணாந்து அவன் முகம் பார்த்து, “நான் டிபிக்கல் இண்டியன் ஒய்ஃப் இல்லை’ என்றாள் கண்களில் குறும்பு மின்ன.
அவள் குறும்பில் அவன் கலகலவென்று சிரித்தான்.
“என்ன சிரிப்பு விஷ்வா? நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்” இதயா எதிரே நின்று கொண்டு முறைக்க, “நான் நிரூபிக்கட்டுமா?” அவள் தலை முடியை ஒதுக்கி, அவள் கண்களை பார்த்து அவன் ஆழமான குரலில் கேட்டான்.
அவன் கண்கள் அன்பை மட்டுமே தேக்கி கொண்டு நிற்க, ‘இந்த அன்பை நான் ஏன் இத்தனை நாட்கள் பார்க்கவில்லை?’ இதயா முகத்தை திருப்பி கொண்டாள்.
‘கோபம் கண்ணை மறைத்துவிடும்.’ எத்தனை உன்னதமான வார்த்தை இதயா வேலைக்குள் தன்னை அமிழ்த்தி கொண்டாள்.
பெருமூச்சோடு விஷ்வா அங்கிருந்து விலகினான். ‘எத்தனை வருடங்கள்?’ என்ற ஏக்கம் அவனுள்.
‘இன்னும் பேசணும். இன்னும் நான் நிறைய இதயாவுக்கு விளக்கம் கொடுக்கணும்.’ என்ற எண்ணத்தோடு அவன் ஹாலை கடக்க, “அப்பா, ஸ்டில் பெயின்னிங்?” என்று தியா கேட்டாள்.
அவள் அருகே அமர்ந்து கொண்டு , “இல்லை தியா. இப்ப பரவால்லை” என்று மகளை திருப்தி செய்யும் எண்ணத்தோடு.
“உங்க முகம் பார்த்தா அப்படி தெரியலை அப்பா” அஜய் அக்கறையோடு பேச, “கொஞ்சம் வலி இருக்கு.” என்றான் மகனிடம்.
“எப்ப சரியாகும்?” தியா அவர்களை இடைமறித்தாள்.
இதயாவும் அங்கு வந்து அவர்களை பார்த்து கொண்டிருந்தாள்.
மூவரும் பதிலறியாமல் விழிக்க, “டூமாரோ மார்னிங்?” என்று கண்களை உருட்டி கொண்டு கேள்வியை தொடுத்தாள் தியா.
“எல்லாம் சீக்கிரம் சரியாகும். இப்ப சாப்பிட வாங்க” இதயா தியாவின் கேள்விக்கு முற்று புள்ளி வைக்க முயன்றாள்.
அஜய், தியா இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.
“விஷ்வா, நான் உனக்கு கொடுக்கறேன்” அவள் கூற, அவன் தலை அசைத்து கொண்டான்.
தியா, அஜய் இருவரும் மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க, இதயா விஷ்வாவுக்கு உணவு கொடுக்க, தியா தன் கைகளால் வாயை மூடி கொண்டு அடக்கமாட்டாமல் சிரித்தாள்.
“என்ன தியா சிரிப்பு?” இதயா தியாவிடம் வினவிக்கொண்டே, விஷ்வாவுக்கு கொடுக்க, “அப்பா ஸ்மால் பாய் ஆகிட்டாங்க. நீங்க ஃபீட் பண்றீங்க” கூறிக்கொண்டு மீண்டும் சிரித்தாள்.
“அப்பாக்கு அடிபட்டிருக்கில்லை, அது தான் அம்மா ஊட்டிவிடுறாங்க” அஜய் விளக்கம் கொடுக்க, “அண்ணா சொல்றான் பாரு. அது தான் ரீசன்” இதயா புன்னகைத்தாள்.
விஷ்வாவிடம் பதில் ஏதும் இல்லாமல் போக, இதயா விஷ்வாவை பார்த்தாள்.
அவன் இதயாவை ஆழமாக பார்த்து கொண்டிருந்தான்.
“விஷ்வா” அவன் சாப்பிட்டு கொண்டிருந்தாலும், அவனிடம் பதில் இல்லை.
“விஷ்வா…” அவள் அவன் தோள் தொட, அவன் கண்களில் இரண்டு சொட்டு கண்ணீர்.
“விஷ்வா…” அவள் குரலில் உருகலான அழைப்பு. “என்ன டா ஆச்சு? ரொம்ப வலிக்குதா?” அவள் குரலில் அத்தனை உரிமை, குழைவு, அன்பு.
“நீ தான் எப்ப லேட்டானாலும் எனக்கு மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் இப்படி கொடுப்ப.” அவள் ஊட்டி விடுவதை காட்டி சொன்னான்.
இதயா தலையை குனிந்து கொண்டாள்.
“நான் நீ போன பிறகு மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் எல்லாம் ஒழுங்காகவே சாப்பிட மாட்டேன் தெரியுமா?” என்னவோ அவன் வாழ்வில் அதை மட்டும் தான் இழந்தான் என்பது போல் பேசினான்.
“இப்ப பேசாம, சாப்பிடு விஷ்வா” அவள் கொடுக்க, “நீயும் அப்படியே சாப்பிடு இதயா” அவள் கைகளை அவள் பக்கம் திருப்பினான் விஷ்வா.
“நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன். நீ முதலில் சாப்பிடு. உனக்கு சேமியா உப்புமா, சூடா இருந்தா தான் பிடிக்கும். உனக்கு பிடிச்ச மாதிரி வெள்ளைவெள்ளைனு தேங்காய் சட்னி” அவள் முழுதாக பேச்சை மாற்றவே முயற்சித்தாள்.
சட்டென்று, “நீ ஏன் இதயா என்னை விட்டுட்டு போன?” அவன் குரல் உடைந்திருந்தது.
‘எத்தனை அவமானங்கள், எத்தனை வருத்தங்கள், இன்னும் எத்தனை காரணங்கள்?’ அறிவு மளமளவென்று அடுக்கினாலும், விஷ்வா கேட்ட தொனியில் வார்த்தை அவள் தொண்டையோடு சிக்கி கொண்டது.
“நான் தப்பு பண்ணினா, நீ என்னை விட்டுட்டு போயிருவியா?” அவனின் அடுத்த கேள்வி.
‘அவன் மட்டுமா தப்பு பண்ணினான்? நானும் தானே தப்பு பண்ணினேன்!’ அவள் அறிவு அவளை இடித்துரைக்க, மீண்டும் எச்சிலை விழுங்கி கொண்டாள்.
“நான் உன்கிட்ட பல நாளா பேச முயற்சி பண்றேன் இதயா. நீ இன்னைக்கு தான் என் பேச்சை காது கொடுத்து கேட்குற. இன்னைக்கு உன்னால என்னை விட்டுட்டு அங்க இங்க போகமுடியாது” அவன் அவளை கூர்மையாக பார்த்து தன்மையாக கேட்டான்.
“ஏன் இதயா இப்படி யு.எஸ் வந்து உட்கார்ந்திகிட்ட? நான் நினைச்சாலும் உடனே வர முடியாத இடத்திற்கு? உன் கிட்ட வரவே மூணு வருஷம் ஆகிருச்சு. எத்தனை தடவை மூணு வருஷமா உனக்கு கால் பண்ணேன் தெரியுமா?” அவன் ஆழமான குரலில் மீண்டும் தொடர்ந்தான்.
அதற்கு முன் வருட கணக்கு அவள் மனதில் தோன்றினாலும், அதை ஆராய அவளுக்கும் விருப்பமில்லை.
“விஷ்வா, அடி கையில் மட்டும் தானா? இல்லை தலையிலுமா? பழசு எதுவும் மறந்திருச்சா?” அவள் கேலி போல் கேட்டு சூழ்நிலையை இலகுவாக்க முயற்சித்தாள்.
“எப்படி அடிச்சா பழசு எல்லாம் உனக்கு மறக்குமுன்னு சொல்லு. உன் தலையில் அடிக்கிறேன். உனக்கு பழசு எல்லாம் மறந்திரும். நாம லைஃபை ஃபிரஷ்ஷா ஸ்டார்ட் பண்ணுவோம்” அவன் தன்னை சரிப்படுத்தி கொண்டு கண்சிமிட்டினான்.
“வயாசன பிறகு பேச்சை பாரு” அவள் முணுமுணுக்க, “யாரை பார்த்து வயசாகிருச்சுன்னு சொல்ற? இதுக்கு முன்னாடியும் ஒரு தடவை இப்படி தான் சொன்ன, பிச்சிபுடுவேன் பிச்சி” அவன் இடது கைகளால் இதயாவின் காதை திருகினான்.
சில விஷயங்களை பேச விரும்பினாலும், பேசவும் அச்சம் கொண்டு இருவரும் இலகுவாக பேசிக்கொண்டனர்.
பேசி தீர்த்து கொள்ளும் ஆசை இருவருக்கும் முளை விட்டிருந்தது. ஆனால், பேசினால் பிரச்சனை வளர்ந்துவிடுமோ என்ற மலையளவு அச்சமும் அவர்களுக்குள் இருக்கத்தான் செய்தது.
அன்றிரவு, அவர்கள் உணவை முடித்து கொண்டு படுத்துவிட்டனர். விஷ்வா வலியால் தூங்கிவிட்டான். இதயா தான் ஐஸ் பேக் வைப்பதும், அவனை பார்ப்பதுமாக தூக்கம் வராமல் தவித்து கொண்டிருந்தாள்.
மறுநாள் காலையில் இருவரும் மருத்துவமனைக்கு கிளம்பினர்.
“அம்மா, நானும் உங்க கூட வருவேன்” தியா கூற, “தியா, ப்ளீஸ் நோ. வெளிய கொரோனா அலெர்ட் இருக்கு. உங்களை ஃபிரென்ட் வீட்டில் விட்டுட்டு போறேன். ஆனால், அதுவே எனக்கு தயக்கமா தான் இருக்கு” என்று இதயா தியாவிடம் பொறுமையாக பேசினாள்.
“அம்மா, அதெல்லாம் வேண்டாம். நாங்க இங்கயே தனியா இருந்துபோம். தங்கச்சியை நான் பார்த்துப்பேன்” அஜய் பொறுப்பாக கூற , “அண்ணா, நீ என்னை நல்லா பார்த்துப்பியா?” என்று தியா இடுப்பில் கைவைத்து அவனை பார்த்து கேட்டாள்.
“நீ, அண்ணா சொல்றதை கேட்கணும்” இதயா தியாவை மிரட்ட, “அதெல்லாம் கேட்பா. அஜய் நீ தங்கையை பார்த்துக்கோ” என்று கூறிக்கொண்டே அங்கு வந்தான் விஷ்வா.
“அம்மா, நான் தியாவை பார்த்துப்பேன். ஒரு மொபைல் எங்க கிட்ட இருக்கட்டும். நான் வேற யாருக்கும் கதவை திறக்க மாட்டேன். அந்த ஹோல் வழியா பார்த்திட்டு தான் உங்களுக்கே கதவை திறப்பேன்” அஜய் கூற, இதயா தன் மகனின் தலையை ஆதரவாக தடவினாள்.
தியா தன் அண்ணனின் பேச்சில், “ஆ…” என்று வாயை பிளக்க, இதயா தியாவுக்கு பல அறிவுரைகளை கூறிவிட்டு விஷ்வாவின் அலைபேசியை குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு விஷ்வாவை அழைத்துக் கொண்டு கிளம்ப எத்தனித்தாள்.
குழந்தைகள், “மாஸ்க்…” என்று ஒரு சேர நினைவுபடுத்த, “அட… தேங்க்ஸ்…” என்று பெரியவர்கள் இருவரும் ஒருசேர கூறினர்.
இதயா, தனக்கும் மாஸ்க் அணிந்து கொண்டு, விஷ்வாவுக்கும் அணிவித்து கொண்டு, அவனை அழைத்து கொண்டு கிளம்பினாள்
இதயா காரை செலுத்த, அவள் முகத்தில் மெல்லிய பதட்டம். இருவரும் மருத்துவமனைக்குள் செல்ல, கோவிட் காரணத்தினால், அவர்கள் உடலின் நிலையை பரிசோதித்து விட்டே மருத்துவமனைக்குள் அனுப்பினர்.
அதன்பின், இதயா படபடவென்று வேலைகளை செய்தாள்.
“அடிக்கடி இப்படி ஹாஸ்பிடல் வருவியா இதயா?” என்று கேட்க, “ம்… தியாவை தனியா தானே கூட்டிட்டு வருவேன். அவளுக்கு உடம்பு சரி இல்லை . வசினேஷன் இப்படின்னு நிறைய தடவை வந்திருக்கேன்.” அவள் அவர்கள் கொடுத்த காகிதத்தை நிரப்பியபடி அவனுக்கு பதில் கூறினாள்.
“எப்பவும் இப்படி பதட்டம்மா தான் இருப்பியா?”அவன் கேள்வியாக நிறுத்த, அவள் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.
தன் தலையை இடது பக்கமும் வலது பக்கமும் அசைத்து, “நீ என்னை ரொம்ப படுத்துற விஷ்வா” உண்மையையும் குற்றம் போலவே ஒத்துக்கொள்ள, அவன் சிரித்து கொண்டான்.
இருவருக்குள்ளும் பழைய உற்சாகம் மீண்டு இருந்தது.
அப்பொழுது அங்கிருந்த செவிலியர், விஷ்வாவின் உடல்நிலை பற்றி பல கேள்விகளை ஆங்கிலத்தில் தொடுத்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது செவிலியர், “டூ யு ட்ரின்க் ஆல்கஹால்?” என்று கேள்வியாக நிறுத்த, விஷ்வாவின் கண்கள் இதயாவை கேலியோடு தழுவியது.
“டோன்’ட் வொரி அபௌட் யுவர் வொய்ஃப்” என்று செவிலி பெண் கேலி பேச, இதயா விஷ்வாவை பார்த்து முறைத்தாள்.
விஷ்வா சிரித்து கொண்டு, “நோ… நோ… ஐ டோன்’ட்” என்றான்.
சிலபல கேள்விகளை கேட்டுக் கொண்டு, செவிலியர் பெண் சென்றுவிட, “டேய், நான் போனதுக்கு அப்பறம் இந்த பழக்கம் வேற உனக்கு உண்டா?” என்று கிடுக்கு பிடியாக நின்றாள் இதயா.
“அவ்வளவு அக்கறை இருந்தா போயிருக்க கூடாது” என்றான் அவன் கெத்தாக.
“டேய், அப்ப நான் இல்லாதப்ப நீ குடிச்சியா?” மருத்துவமனை என்றும் மறந்து சண்டைக்கு தயாரானாள் இதயா.
“நீ போன சோகத்தை நான் எப்படி சமாளிக்க?” என்று அவன் நியாயம் கேட்க, “அப்ப, நானும் அதையே செஞ்சிருந்தா?” அவளும் மல்லுக்கு நின்றாள்.
“உன்னை யார் குடிக்க வேண்டாமுன்னு சொன்னா?” அவன் தோள்களை குலுக்க, அவள் முகம் வாடி சற்று தள்ளி அமர முற்பட, அவன் இடது கைகளால் அவளை அருகே அமர வைத்தான்.
அவன் சட்டை பையிலிருந்து ஒரு பொருளை நீட்டினான். அவள் கண்கள் மலர்ந்தது. அதை ஆசையாக வாங்கி கொண்டாள் இதயா. அவள் முகம் ஒரே நேரத்தில் சந்தோசம், வெட்கம் என இரண்டையும் பிரதிபலித்தது.
“இது தான் இதயா என் துணை. நான் எங்க போனாலும், என்கூட தான் இருக்கும். என் வலி, துக்கம், நம்பிக்கை, சந்தோசம் எல்லாம் எனக்கு இது தான். நான் ஒரு நாளும் தப்பான முடிவுக்கும், தப்பான வழிக்கும் போகாததுக்கு காரணமும் இது தான். என்னைக்காவது என் இதயா கூட நான் சேருவேன் அப்படிங்கற நம்பிக்கையும் வெளிச்சமும் இது தான்.” அவன் உணர்ச்சி பொங்க கூற, அவள் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
அதே நேரம் வீட்டில் அலைபேசி ஒலித்தது.
அலைபேசி சத்தத்தில், அஜய் அலைபேசியை எடுக்க, தியா அவன் அருகே வந்தாள்.
“பாட்டி…” என்று அஜய் பேச ஆரம்பித்து விஷ்வா கீழே விழுந்து அடிபட்ட விஷயத்தை கூறி முடித்தான்.
வீடியோ காலில், விஷ்வாவின் தாய் , தந்தை இருவரும் வந்தனர்.
தியாவை அவர்கள் பார்க்க, “என் பேத்தியா டா? எப்படி அழகா வளர்ந்துட்டா. இப்படி எங்க கண்ணில் காட்டவே இல்லையே?” விஷ்வாவின் தாயார் கண்ணீர் உகுத்தார்.
“ஹூ இஸ் திஸ் ஓல்ட் பீபில்?” என்று தியா அமெரிக்க ஆங்கிலத் தொனியில் கிசுகிசுப்பாக வினவ,”பாட்டி, தாத்தா…” என்று அஜய் புன்னகையோடு கூறினான் .
“ஓ… கூல்…” என்று தியா தலை அசைத்து கொண்டான்.
அஜய், அவன் பாட்டியோடு வளவளத்துக் கொண்டே இருக்க, “டேய் அஜய், தியா பேசுவாளா? அவளுக்கு தமிழ் தெரியுமா? இல்லை இங்கிலிஷ் மட்டும் தான் தெரியுமா?” என்று விஷ்வாவின் தந்தை பேத்தியிடம் பேசும் ஆர்வத்தில் வினவினார்.
‘தியா பேசுவாளா?’ இந்த கேள்வியில் அஜய் குலுங்கி குலுங்கி சிரித்தான்.
“ஐயோ தாத்தா, தியா நல்லா தமிழ் பேசுவா. உங்களுக்கு தான் அவ பேசுற இங்கிலிஷ் புரியாது. தியா நீ தாத்தா கிட்ட பேசு.” என்று தாத்தாவிடம் ஆரம்பித்து, தியாவிடம் பேச்சை முடித்தான் அஜய்.
தியா கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாள். புதிய மனிதர்களிடம், அளவோடு பேசினாள்.
சில மணித்துளிகளில் அவர்கள் பேச்சை முடித்து கொண்டனர்.
அப்பொழுது மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க சொல்ல, இருவரும் அங்கு சென்றனர்.
சில மணி துளிகளுக்கு பின், “மாஸ்க் போடுறது ரொம்ப கஷ்டமா இருக்கில்ல?” என்று விஷ்வா கேட்க, “ம்… வேற வழி கிடையாது. இனி இப்படி தான்” என்று சலிப்பாக கூறினாள் இதயா.
எக்ஸ்ரே எடுத்து கொண்டு அவர்கள் தனி அறையில் காத்திருந்தனர்.
அப்பொழுது அலைபேசி ஒலிக்க, விஷ்வாவின் தந்தை வீடியோ அழைப்பு .
“என்ன டா ஆச்சு அடிபட்டிருச்சா?” என்று அவர்கள் பதட்டத்தோடு வினவ, “ஒண்ணுமில்லை சின்ன அடிதான்ப்பா. ஜஸ்ட் செக் அப்” என்று அவர்களை சமாதானம் செய்தான்.
“அடிபட்டிருந்தாலும், விஷ்வா இப்ப தான் டா உன் முகத்தில் ரொம்ப நாளைக்கி அப்புறம் சந்தோஷத்தை பார்க்குறேன்” விஷ்வாவின் தந்தை கூற, விஷ்வாவிடம் ஒரு புன்னகை.
“பொண்டாட்டி கிட்ட என்னடா கெளரவம்? என்னை மாதிரி இருந்திர வேண்டியது தானே?” என்று கேலியாகவே அறிவுரை வழங்கினார் விஷ்வாவின் தந்தை விஷ்வாவின் தாயிடம் முறைப்பை பெற்றுக்கொண்டு.
“அவளை கூப்பிடு” என்று விஷ்வாவின் தாய் அழைக்க, இதயாவும் அவன் அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.
“நல்லாருக்கியா மா?” விஷ்வாவின் தந்தையின் கேள்வியில், “நல்லாருக்கேன் மாமா” அவள் தலை அசைத்தாள்.
“அவன் தப்பே பண்ணிருந்தாலும், அவனை மன்னிக்க கூடாதா?” அவர் கேட்க, “மாமா, எங்களுக்குள்ள எல்லாம் சரியாகிருச்சு மாமா. நாங்க சந்தோஷமா தான் இருக்கோம்!” சட்டென்று பொய்களை அள்ளி வீசினாள் இதயா.
‘அன்று நான் இவர்கள் விஷயத்தில் தலையிட்டிருக்க வேண்டும். வளர்ந்த பிள்ளைகள் என்று ஒதுங்கி இருந்தது எத்தனை தவறு?’ அவர் மனதிலும் குற்ற உணர்ச்சி.
இதயாவின் பொய்யை அவர் அறிந்து கொண்டாலும், மேலும் தோண்டி துருவவில்லை.
அவர்கள் உறவில், ஏதோவொரு முன்னேற்றம் இருப்பதை, அவர் ஊகித்து கொண்டார்.
“அவன் சந்தோசம் உன்கிட்ட தான் இருக்கு. உன் சந்தோஷமும் அவன்கிட்ட தான் இருக்கு. நான் அதை உங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே சொல்லுவேன். என்னத்த லவ் பண்ணீங்களோ? உங்க ரெண்டு பேருக்கும் அது தெரியலை. எடுத்தோம், கவுத்தோம் எல்லா விஷயத்தையும் முடிச்சிட்டு ஆளுக்கு ஒருபக்கமா போய்ட்டிங்க” விஷ்வாவின் தாய் பேச, இருவரிடமும் மௌனம்.
இன்றைய விஷ்வாவின் தாயின் பேச்சில் அன்றைய கோபம் இல்லை. மனக்குமுறலும், ஏக்கமும், வருத்தமும் மட்டுமே இருந்தது.
“இனியாவது ஈகோ பார்க்காமல் பேசி உங்க வாழ்க்கையை சரிபண்ணுங்க.” விஷ்வாவின் தாயின் குரலில் கட்டளை வெளிப்பட்டது.
அதன் பின் அவர்கள் பேசிய பேச்சுக்கள் அவர்கள் இருவரின் கருத்திலும் பதியவில்லை
‘ஈகோ…’ இந்த சொல் அந்த சொல் மட்டுமே அவர்கள் இருவரின் இதயத்தையும் சாட்டை கொண்டு தாக்கியது.
‘அன்று ஈகோ பார்க்காமல் இருந்திருந்தால்…’ இருவரின் எண்ணமும் ஒரு சேர பின்னோக்கி பயணித்தது.
இதயம் நனையும்…