IV17

IV17

இதய ♥ வேட்கை 17

 

விஷ்வா, திலாவிடம் அவளின் அருகாமையைத் தவிர வேறு எதையும் ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை.

கணவனுக்காக, மனைவி எந்த விதமான செயல்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளவேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும், அனுசரித்துச் செல்ல வேண்டும் என்கிற இல்வாழ்க்கை பற்றிய இலக்கணமும் அறியாமல்தான் விஷ்வா வளர்ந்திருந்தான்.

திலா விபரம் அறிந்த நாள் முதலாய், தனது தாய், தந்தைக்கு ஆற்றும் பணிவிடைகளைக் கண்ணுற்று வளர்ந்திருந்தமையால், அவளுக்கும் தன் கணவனுக்கும் அதுபோன்ற ஆத்மார்த்தமான பதவிசான பணிவிடைகள் செய்யும் எண்ணம் இயல்பாகவே வந்திருந்தது.

‘நான் எதற்காக இதையெல்லாம் மெனக்கெட்டு உனக்குச் செய்ய வேண்டும்.  உனக்கு கையில்லையா? இதற்காகவா உன் வாழ்க்கைத் துணையாக நான் வந்தேன்? அப்படியென்ன நீ என்னைவிட பெரிய்ய்யய இவன்? உனக்கு நான் என்ன அடிமையா?  மனைவி என்றால் இதையெல்லாம் நான் எதற்கு உனக்குச் செய்ய வேண்டும்? நீ எனக்கு என்ன உதவியெல்லாம் செய்தாய்!’, என்கிற இன்றைய பெரும்பான்மை நவீன பெண்களின் எதிர்பார்ப்பு, இறுமாப்பு திலாவிற்கு அவளின் வளர்ந்த சூழலின் காரணமாக இல்லாமல் இருந்தது.

அதனால் இலகுவான வாழ்க்கைச் சூழல் இருவருக்கிடையே சாத்தியமாகியிருந்தது.

அன்பிருக்கும் இடத்தில் இறுமாப்பிற்கு வேலையில்லை.

தம்பதியரின் தனிக்கொள்கைகள் அவரவர் மனம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை சார்ந்ததாக மாறி வரக்கூடிய சூழல் இன்று.

கடந்த நூற்றாண்டு பெண்கள் யாரும், ஆண்களுக்கு இளைத்தவர்களோ, சளைத்தவர்களோ, சாமான்யர்களோ அல்ல.

ஆனாலும் குடும்பக் கட்டுக்கோப்பு சிதையாமல் இருக்க, தன்னைச் சிதைத்துக் கொண்ட அன்பின் சின்னங்கள் அவர்கள்.

அதேபோன்றதொரு சூழலில்  திலாவும் வளர்ந்திருந்தமையால் அனைத்தும் சாத்தியமாகியிருந்தது.

விஷ்வாவின் அறிக்கையைக் கண்ணுற்றபோதும், கணவனை விட்டு முழுமையாக விலக இயலாமல் இருந்தமைக்கான காரணம் அவளுக்குள் அவளறியாமல் மறைந்திருந்த காதலே!

சந்தித்த முதல் பார்வையிலேயே இதமான உணர்வை திலாவிற்குள் அவளறியாமலேயே ஏற்படுத்தியிருந்தான் விஷ்வா.

ஆனாலும், அந்தஸ்து கருதியே, அதை மனதில் வளர்க்காமல், வளரவிடாமல் வேரறுத்து விட்டிருந்தாள்.

ஆனால் அவனே மணவாளனாக வலிய வந்தபோது மறுக்கும் எண்ணமில்லை. மாறாக மனம் மகிழ்ச்சிக் கடலில் முத்துக்குளித்தது.  ஆனாலும் அதைக் கொண்டாடும் நிலையில், அவளது தாயின் உடல்நிலை அப்போது இல்லை.

திருமணத்திற்குப் பிறகும் தனது நிலையை குறைத்து மதிப்பிட்டு, விஷ்வாவின் வாழ்வில் கரும்புள்ளியாக தான் இருக்க வேண்டாம் என்கிற எண்ணம் மட்டுமே மிகுந்திருந்தது திலாவிற்கு.

எதிர்பாரா விதமாக அனைத்தும் மாறி, வாழ்க்கை அவள் வசப்படத் துவங்கியதும், பெண்ணும் தன் ஆழ்மன ஆசைகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக் கொணர்ந்திருந்தாள். 

கணவனுக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அர்ப்பணிப்போடு செய்யத் துவங்கியிருந்தாள்.

முதன் முதலில் தலை துவட்டிய மனைவியின் செயலைக் கண்டவனுக்கோ, ‘இது என்ன? எதற்காக? எனக்கு ஏதும் இயலாத நிலையில் உள்ளேனா?  இத்தனை நாளு யாரும் வந்தா தோட்டி விட்டாங்க?  நான் என்ன சின்னப் பையனா?’, என்பதாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது.

அதன் இதம் உணராதவரை, பெண்ணின் அன்பைத் தன்னால் உணர முடியாமல்தான் அவளின் விருப்பச் செய்கையின் காரணம் உணராமல் இருந்தான் விஷ்வா.

இந்திய மனைவி என்பதைவிட, தமிழகத்து பெண்கள் கணவனது சுக துக்கங்களில் பங்கெடுப்பது மரபுதான்.

திலா, விஷ்வா காலை எழுந்து பல் துலக்கி வருவது முதல், இரவு படுக்கைக்குச் செல்வது வரை அவனது பணிகளில் பங்கெடுத்துக் கொண்டது ஒரே நாளில் நிகழ்ந்த மாற்றமல்ல!

விஷ்வாவும் ஒரே நாளில் இலகுவாக எதையும் இலகுவாக ஏற்றுக் கொள்ளும் ரகமும் இல்லை.

ஆரம்பத்தில் அதிர்ந்து பின்வாங்கியவனை, இது விஷ்வாவின் மீது திலா கொண்ட மட்டற்ற அன்பினால் என்று புரியவைத்தபிறகே, அமைதியாக ஏற்றுக் கொள்ளத் தயாராகியிருந்தான் விஷ்வா.

பெண்ணின் ஆத்மார்த்த அன்பை உணரத் துவங்கி, மனம் அதனை ஏற்கத் துவங்கிய பிறகே, பெண்ணது செயல்களை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளத் துவங்கியிருந்தான்.

அடுத்தடுத்து விஷ்வா சிலவற்றை லஜ்ஜையாக உணர்ந்து தடுத்தாலும், விடாமல் பெண் அன்போடு ஒவ்வொன்றையும் செய்யத்துவங்க, நாளடைவில் பெண்ணது செயலில் அடிமையாகிப் போயிருந்தான் விஷ்வா.

திலாவின் மனமாற்றத்திற்கேற்ப, சிறிது சிறிதாக விஷ்வாவின் வாழ்வில் மலரத்துவங்கிய மனதைத் தொட்ட விசயங்கள் அவை.

சில நாள் பழக்கத்திலேயே பெண்ணது ஒத்துழைப்போடு கூடிய பணிவிடைகளை உள்ளம் வெகுவாக ஏற்றுக்கொண்டது. இதம் கொண்டது.

கடந்து போன நாள்களில், திலாவின் அனுசரணை, அன்பான கவனிப்பு, ஒத்தாசையோடு கிளம்பி அலுவலகம் செல்லப் பழகியிருந்தவனுக்கு, திடீரென்று திலாவின் உடல்நிலையில் வந்த பின்னடைவால் தனித்து கிளம்ப வேண்டிய நிலை வந்தபோது, தடுமாறிப்போனான்.

எல்லாம் சுயமாகச் செய்ய இயன்றாலும், திலாவின் அருகாமையும், அர்ப்பணிப்போடு கூடிய பணிவிடையும் இல்லாதது மனதில் குறையாக தோன்றியது. 

தான் உணர்ந்ததை மறைக்க இயலாத நிலையில் விஷ்வாவின் மனம் இயல்பற்றிருந்தது.

பெண்ணும் முயன்று பார்த்தாள்.  ஆனாலும் அவளால் எழுந்து இயல்பாக நடக்க முடியாமல் தடுமாறியதைக் கண்டபிறகு, தானாகவே தனது அன்றைய காலைப் பணிகளைச் செய்திருந்தான் விஷ்வா.

முதல் நாள் காலைப் பொழுதையே, மனைவியின்றி கடக்க முடியாத, தனது நிலையை எண்ணி விஷ்வாவிற்கு ஏனிந்த தடுமாற்றம் என யோசிக்கத் துவங்கியது மனது.

வியாபார மனது கிடைப்பதை ஏற்றுக்கொண்டு ‘சிவனே’ என்று செல்லாது அல்லவா!

யோசித்த மனம், திலாவின் செயல்களையும், ஒத்துழைப்பையும் பட்டியலிட்டு விஷ்வாவின் நிலையைக் குறித் பரிகாசம் செய்தது.

சில நிமிடங்களில் அனைத்தும் மனதில் தெள்ளத் தெளிவாக உணரப்பெற்றவன், அதைச் சரிசெய்துவிடும் நோக்கில் பெண்ணிடம் வந்து நின்றான்.

அலுவலகத்திற்கு கிளம்பி நின்றவனிடம் எழமுடியாமல் படுக்கையில் படுத்தபடியே, “டைனிங்கில பாட்டி வச்சிருக்கிறத எடுத்துப் போட்டு சாப்பிட்டுக்கோ விச்சு”, மனைவியின் கெஞ்சல் மொழி கேட்டு அதைச் சட்டை செய்யவில்லை.

‘என்ன செய்கிறது’ என்பதை மனைவியிடம் கேட்டு அறிந்து கொண்டவன், பெண்ணது தலையைச் சுத்துது என்கிற வார்த்தையைக் கேட்டதும், “எனக்குத் தெரியாம, நைட்டோட நைட்டா வாங்கி ஊத்துனா இப்டித்தான்டி தலையச் சுத்தும்!”, என்று வழமைபோல விளையாட்டாகவே பேசினான்.

விளையாட்டோடு அதே மனநிலையில், “நேரமாகுதுடீ! மெதுவா எழுந்து வா! வந்து உன் விச்சுவுக்கு சாப்பாடு வைப்பியாம்!”, என்று கொஞ்சலோடு மனைவியைக் கெஞ்ச

விஷ்வா அழைக்கும் முன்பே அனைத்தையும் சரியாகச் செய்து விடுபவள், அவன் அழைத்ததும் அதனை நிராகரிக்க இயலாமல் எழுந்து வர முயன்றாள்.

எழுந்து நடக்க முயன்றபோது தலையை சுத்துவதுபோல உணர்ந்து, படுக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

‘என்னடா?’, எனத் தன்னிடம் கேட்ட கணவனின் ஆதரவான கேள்வியோடு கூடிய உச்சந்தலை வருடலில், உள்ளம் நெகிழ்ந்து போனவள், கண்களில் நீரோடு, “முடியலை விச்சு!”, என்று முணங்கியவளை அணைத்தபடியே படுக்கவிடாமல் தோளில் சாய்த்துக் கொண்டவாறு யோசனையோடு அருகில் அமர்ந்து விட்டான் விஷ்வா.

“இப்போ உனக்கு சரியாகனும்னா என்ன செய்யனும்னாது எங்கிட்ட சொல்லுடீ!”, என்று பாவம்போல முகம் வைத்துக் கொண்டு, கேட்ட கணவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பதே திலாவிற்கும் புரியாத நிலை!

என்ன செய்தால் இந்நிலை சரியாகும் என்று புரியாமல் விழித்தவள், “எனக்குத் தெரிஞ்சா எதுக்கு இவ்ளோ கஷ்டப் படணும்.  நானே க்யூர் பண்ண என்ன செய்யனுமோ அதைச் செய்யமாட்டேனா?”, என்ற அங்கலாய்ப்போடு கூடிய பதிலை அமரமுடியாமல் அமர்ந்தவாறு கணவனிடம் புலம்பினாள் திலா.

சற்று நேரம் அமர்ந்து பெண்ணை தனது எண்ணத்திற்கேற்ப அழைத்துச் செல்ல எண்ணியவனை, சமாளித்து, தனியே காலை ஆகாரத்தை உண்ண அனுப்பி வைத்துவிட்டு, மீண்டும் படுக்கையில் படுத்திருந்தாள் திலா.

படுக்கையில் இருந்த திலாவிற்கோ, ‘திடீரென்று தனக்கு என்ன நேர்ந்தது.  இரவு படுக்கைக்கு வரும்வரை நன்றாகத்தானே இருந்தேன்’, என்கிற எண்ணம் மட்டுமே வலுத்திருந்தது.

கணவனுக்கு எப்பொழுதும் போலச் செய்யும் பணிவிடைகளைச் செய்ய முடியாமல் இருக்கும் தனது உடல்நிலையை எண்ணித் தன்மீதே கோபம் வந்தது.

அடுத்து மதிய உணவிற்கும், கணவன் வருவதற்குள் எழுந்து உணவைத் தயார் செய்ய தன்னால் இயலாதுபோலவே என்று எண்ணியே மாய்ந்து போனாள் திலா.

சமையலுக்கு என்று ஆள் வைத்திருந்தபோதும், திலா தனது கைப்பக்குவத்தில் செய்த உணவைக் கொடுத்து, கணவனது ஆஹா.. ஓஹோ பாராட்டுகள் இல்லாதபோதும், முன்பைக் காட்டிலும் விரும்பி, ஒரு கைப்பிடி கூடுதலாக விஷ்வா உண்ணுவதைக் கண்டு மனம் சிலாகித்திருக்க, மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.

இன்று பணிவிடைகளைச் செய்ய இயலாது, தனது உடல்நிலை குறுக்கிட்டதும் சோர்ந்து போனாள்.

அதற்குள் ஏனோதானோ என்று உண்டுவிட்டு பெண்ணிடம் அவசரமாக வந்தவன், உறங்காது படுக்கையில் படுத்தபடியே தான் அறைக்குள் நுழைவதைப் பார்த்தபடியே படுத்திருந்தவளைப் பார்த்து, “படுத்தே இருக்காத ஸ்ட்ராபெர்ரி! உன்னை இப்டிப் பாக்க எனக்கு கஷ்டமா இருக்கு! எதாவது சாப்பிட எடுத்துட்டு வரவா?”, தனது மனதில் தோன்றியதை மனைவியிடம் கேட்டதோடு, பெண்ணிற்கு காலை ஆகாரத்தை நினைவுபடுத்தினான்.

“பசிச்சாலும் சாப்பிடப் பிடிக்கலை!  வேணுனா நானே சாப்பிட்டுக்கறேன்”, என்றவள்,

“எனக்கென்ன படுத்துக்கிடக்கணும்னு வேண்டுதலா? எதுனால இப்டி திடீர்னு வந்திருக்குனு தெரியல?“, வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டவள்,

“என்னால முடிஞ்சா எழுந்து நடந்துருவேன் விச்சு.  தலையை சுத்தும்போது கீழே விழுந்திருவேனோனு பயமா இருக்கு!”, பேச்சில் பெண்ணின் பயத்தைக் கண்டு கொண்டான் விஷ்வா.

“ஹாஸ்பிடல் போவமா?”, என்று வினவியவன், “இரு! நம்ம நாகம்மாகிட்ட விசயத்தைச் சொன்னா ஹோம்மேட் நேச்சுரல் கசாயம் எதாவது வச்சித் தருவாங்க! எனக்கு சில நேரம் அதைக் குடிச்சதும் சரியாகியிருக்கு”, என்றவனை கோபமாக நோக்கியவள்,

“நீங்க சரக்கடிச்சு தலையைச் சுத்தி மயங்கினதுக்கும், எனக்கு என்னனே தெரியாம வர தலை சுத்தலுக்கும் முடிச்சு போடறீங்க?”, என்று அந்த வேளையிலும் கணவனிடம் நியாயம் பேசியவளைக் கண்டு சிரித்தவன்,

பெண்ணது தலையை வருடியவாறே, “விசயம் என்னவோ ஒன்னுதானடா.  அதான் குடிக்கச் சொல்றேன். கசாயம் குடிச்சாகூட உடனே சரியாகிரும்”, எனக் கூறியவன், உடனே நாகம்மாளிடம் சென்று விசயத்தைக் கூற

நாகம்மாளோ பதறி வந்து திலாவைப் பார்த்து, பெண்ணது வாடிய முகத்தைக் கண்டு, சிலவற்றைக் கேட்டறிந்து நிம்மதிப் பெருமூச்சை வெளிவிட்டார்.

எதுவும் யாரிடமும் பகிராமல், திலாவின் நிலையை பொறுமையாகக் கேட்டறிந்து கொண்டார்.

புன்முறுவலோடு, திலாவிற்கு நெட்டி முறித்து கண்ணேறு கழித்தவர், “ஆசுபத்திரிக்கு அம்மாவ கூட்டிட்டு போயிட்டு வாங்க சின்னய்யா! எந்தக் கசாயமும் இப்ப வேணாம்!”, எனக் குதூகலமாகக் கூறிச் சென்றதைக் கண்ட இருவரும் புரியாமல் பார்த்தபடியே தோளைக் குலுக்க, இருவரின் செயலைக் கண்டு ஒருவருக்கொருவர் சிரித்திருந்தனர்.

“சீக்கிரமா கிளம்பு! உன்னை ஆண்ட்டிட்ட விட்டுட்டு அப்டியே ஆஃபீஸ் போறேன்!”, அவசரப்படுத்தினான் விஷ்வா.

ஆடையை எடுக்க எழுந்தவளுக்கு, நிற்க சிரமமாக உணர்ந்து, கணவனை எடுத்துத் தரப் பணித்தாள் திலா.  பெண்ணது அறைக்குள் சென்று வார்ட்ரோபைத் திறந்தவனது, காலில் விழுந்த துணிகளில் பெண் கேட்டதை நான்கு எடுத்துச் சென்று காண்பித்து, முடிவாக பெண் கேட்டதைக் கொண்டு வந்து தந்தவன்

“நீதான் மரியாதை தெரியாதவளா இருக்க!”, சிரித்தபடியே பெண்ணிடம் கொடுக்க

“என்ன சொல்றீங்க?”, புரியாமல் கேட்டாள். 

“உன் டிரெஸ்ஸெஸ்கு தெரியறது உனக்கு தெரியலைனு சொன்னேன்”

“சொல்ல வர்றதை தெளிவாச் சொல்லுங்க?”, ஆயாசமாக இருந்தபோதும், கணவனிடம் விடாது கேட்டாள் திலா.

விஷ்வா, திலாவின் ஆடைகள் இருந்த வார்ட்ரோபைத் திறந்தவுடன், அதனுள் இருந்த ஆடைகள் தனது காலில் விழுந்த விசயத்தைக் கூறியதுடன், “அதல்லாம் திறந்தவுடனே என் கால்ல வந்து விழுது.  அதத்தான் உனக்குத் தெரியாத மரியாதையெல்லாம் உன் ட்ரெஸ்குகாது தெரியுதுன்னேன்!”, என்றதும், பெண்ணும் சேர்ந்து சிரித்தாள்.

“உங்களை மாதிரி இடக்கா எனக்கு யோசிக்க வராது!”, என்றவாறு ஆடையை மாற்ற எழுந்தவள், நின்ற நிலையில் தடுமாற்றம் தோன்றவே சற்றுநேரம் நிதானிக்க

பெண்ணது தடுமாற்றத்தைக் கண்டு, “டிரெஸ் நீயா மாத்திருவியா?  இல்லை நான் வந்து மாட்டி விடட்டா?”, மிகவும் நல்லவனாக அந்நேரத்தில் வந்து கேட்க

“நீ வெளிய வயிட் பண்ணு.  நான் மாத்திட்டு வரேன்”, அடிக்காத குறையாக கணவனை விரட்டியிருந்தாள் திலா.

“நல்லதுக்கே காலமில்லைடா விஷ்வா”, என்றபடியே வெளிய செல்ல எத்தனித்தான் விஷ்வா.

சிரித்தபடியே வெளியே சென்று, கிடைத்த சிறிதுநேரத்தில் மாலினிக்கு அழைத்து விசயத்தைப் பகிர்ந்தான்.

‘என்னவென்றே தெரியவில்லை.  இன்று காலைமுதல் பெண்ணது நிலை இப்படி இருக்கிறது’ என்று பதறிப் பேசியவனது பேச்சைக் கேட்டவர், ‘எனக்கு காலையில ஒரு அப்பாயிண்ட்மென்ட் இருக்கு விஷ்வா. நீ திலாவைக் கிளினிக் கூட்டிட்டு வந்துரு.  நான் சுந்தரத்திட்ட சொல்லி கைனகாலஸிஸ்ட்கிட்ட ஒரு அப்பாயிண்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ண சொல்றேன்”, என்று வைத்திருந்தார் மாலினி.

விஷ்வாவின் அதிகமான விளக்கத்தில், விசயத்தை கேட்டதும், திலா கர்ப்பமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை உணர்ந்து அவ்வாறு கூறியிருந்தார் மாலினி.

கைனகாலஸிஸ்ட் என்ற வார்த்தையைக் கேட்டவன், உடனே கூகுளை நாட, விசயம் அனைத்தும் கண்முன் விரிந்து கிடக்க, எதை எடுக்க, எதைப் படிக்க என்று புரியாமல் எடுத்து படிக்க, படிக்க, ஏதோ புரிபடத் துவங்கியதும், முன்பைக் காட்டிலும் மனம் இலகுவாக உணர்ந்தான் விஷ்வா.

இதுவரை இருந்த இறுக்கம் சற்றே மறைந்திருக்க, மனதை ஆசுவாசப்படுத்தி கிளம்பி வருபவளை நோக்கிக் காத்திருந்தான்.

ஒருவழியாக கிளம்பி வாடிய மலரைப்போல வந்து நின்றவளை, அணைத்து நெற்றியில் இதழ் பதித்தவன், முன்பைக் காட்டிலும் அதிக அக்கறையோடு, கையணைப்பில் பிடித்தபடியே திலாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

சாதாரணமாக வெளியில் எங்கும் செல்லும்போது, கணவனாக இருந்தபோதும் தொட்டுப்பேசுவதைக்கூட அனுமதிக்காதவள், இன்று அமைதியாக வருவதைக் கண்டே பெண்ணது நிலை எத்தகையதானது என்பதை உணர்ந்து கொண்டான் விஷ்வா.

செல்லும் வழியெங்கும் பொதுவான பேச்சுகள் பேசியபடியே விஷ்வா வர, அரைகுறையாக ம்.. ம்.. கொட்டியபடியே திலாவும் வந்தாள்.

கணவனது பேச்சில் அத்தனை கவனம் இல்லாமல் வந்தவள், தனது உடல்நிலையில் ஏனிந்த திடீர் மாற்றம். தனக்கு எதுவும் வியாதி வந்து விட்டதோ? எனப் பலவாறாக எண்ணியவாறு வந்தாள்.

திடீரென்று விஷ்வாவை அழைத்து, “விச்சு, என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப்போறியே! எனக்கு என்னனென்னவோ செய்யிறது! பயமாருக்கு!  எனக்கு எதுவும் ஆகப்போகுதோ!”, என்று அழாதகுறையாக கண்களில் பயத்துடன் கணவனிடம் கேட்க

“ச்சேச்சே…! அப்டியெல்லாம் எதுவுமிருக்காது. படம் பாத்து கெட்டுப் போயிருக்கடீ நீ!”, இயல்பாகச் சொல்லிவிட்டான்.

கணவனது பேச்சில் சிலிர்த்து, “படமெல்லாம் நான் பாக்கமாட்டேனே விச்சு. அதிலெல்லாம் எப்பவுமே எனக்கு இன்டெரெஸ்ட் இல்ல”, திலா குறைவான கடின குரலில் விளக்கம் தந்திருந்தாள்.

பெண் வளர்ந்த சூழலில் பொறுப்புகளோடு, தாயின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வளர்ந்திருந்தமையால் தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை பெரும்பாலும் திலா நாடியதில்லை.

நாடிய பொழுதுகளிலும், காமெடி காட்சிகளைப் பார்ப்பது, பாடல் கேட்பது என்றளவில் மட்டுமே இருக்கும்.

இரண்டு மணிநேரம் பொறுமையாக அமர்ந்து படம் பார்க்கும் வகையிலான குடும்ப சூழல் அவளுக்கு திருமணத்திற்கு முன்புவரை இருக்கவில்லை.

திருமணத்திற்குப் பிறகும், கணவன் சார்ந்த நினைவுகள், எதிர்காலம் பற்றிய யோசனை, அலுவலகப் பணிகள் என்றவளவில் இருந்தமையால் எதுவும் புதிதாக பழகிக் கொள்ளவில்லை.

“நீ பயப்படற மாதிரி எதுவும் இருக்காது.  அப்டியிருந்தா யாராவது திருஷ்டி எடுப்பாங்களா? போயி பாத்தவுடனே ட்ரீட்மென்ட்லயே எல்லாம் சரி பண்ணிருவாங்க.. நீ வேணா பாரேன்”, என நாகம்மாளின் செயலைக் காரணம் காண்பித்ததோடு, நம்பிக்கை வார்த்தை கூறி அழைத்து வந்திருந்தான் விஷ்வா.

அப்போதும் மாலினி கூறியது, தான் கூகுளை நாடி அறிந்து கொண்டதைப் பற்றி, மனைவியிடம் விஷ்வா வாயைத் திறக்கவில்லை.

சுந்தரம் திலாவின் தோற்றத்தைக் கண்டே தாமதிக்காமல், “கைனகாலஸிஸ்ட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியாச்சு!  நீயும் கூடப்போயிட்டு வா விஷ்வா”, என உரிய இடத்திற்கு அனுப்பி வைத்தார்.

முதலில் திலாவை மாலினியின் பொறுப்பில் விட்டுவிட்டு அலுவலகம் செல்ல எண்ணியிருந்தவன், பெண்ணது தடுமாற்றம் மற்றும் கூகுளின் தகவலை அறிந்தபின் அமைதியாக அங்கேயே இருக்க எண்ணி தனது அன்றைய திட்டமிடலை மாற்றி அமைத்திருந்தான் விஷ்வா.

உண்மையில் தான் கூகுளில் கண்டதுபோல தங்களது வாழ்வில் ஒரு நல்ல செய்தியைக் கேட்க எதிர்பார்ப்புடன் காத்திருந்தான் விஷ்வா.

திலாவிற்குமே தனது உடல்நிலையில் வந்த பின்னேற்றத்திற்கான காரணம் உண்மையில் விளங்கவில்லை.

பெண் கர்ப்பமாக இருக்கும் செய்தியை மருத்துவர் கூறியபின்பே, திலாவிற்கு அவளின் நிலை புரிந்தது.

அதற்குமுன்பே கைனகாலஸிஸ்ட் பற்றிய தெளிவிற்கு கூகுளை நாடியதால், ஒருவாராக தெளிந்து இருந்தவன், மருத்துவரின் செய்தி கேட்டபிறகு நூறு சதவீதம் தெம்பாக உணர்ந்தான் விஷ்வா.

தாய் தன்னை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதும், பெற்றோர் இருவரும் வாழாத வாழ்க்கையை மகள் வாழ வாழ்த்தியதும் நினைவில் வந்து போனது திலாவிற்கு.

என்னவோ, ஏதோவென்று அதுவரை பயந்திருந்தவளுக்கு, மனம் இலேசானதுடன், சந்தோசமாகவும் உணர்ந்தாள்.

சந்தோசமாக இருந்தவளுக்கு தற்போதைய புதிய சங்கடமும் நினைவில் வர, அதைச் சரிசெய்துவிட எண்ணி மருத்துவரிடம் தனது சந்தேகங்களை கேட்கத் துவங்கினாள்.

பிளட் டெஸ்ட் மற்றும் இதர அனைத்து பொதுவான அறிக்கைகளும் பெண் கர்ப்பினி என்பதைத் தெளிவுபடுத்த, விசயத்தைக் கேட்ட திலாவோ, “அதுக்கு எனக்கு எதுக்கு தலையைச் சுத்துது டாக்டர்?”, என வினவ

“ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு மாதிரி சிம்டம்ஸ் இருக்கும்.  சிலர் நார்மலா எப்பொழுதும்போல இருப்பாங்க.  சிலருக்கு தண்ணி குடிச்சாகூட வாமிட் பண்ணிட்டே இருப்பாங்க. சிலருக்கு மார்னிங் சிக்னெஸ் வந்திட்டு, அப்புறம் எந்த இஸ்யூஸும் இல்லாம நார்மலா இருப்பாங்க, இதுல நிறைய ரகம் இருக்கு”, மருத்துவர்

“இன்னும் எவ்ளோ நாள் இப்டியே இருக்கும் டாக்டர்”, திலா

“இப்பதான உங்களுக்கு ஃபார்ட்டி டேஸ் ஆகுது.  இனி போகப்போகதான் என்னென்ன நியூ சிம்டம்ஸ் இருக்குனு தெரிய வரும். ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். சிலருக்கு மூனு மாசத்துல சரியாகும். சிலருக்கு நாளாகும்.  அதுக்காக நீங்க பயப்படக்கூடாது”, தெளிவுபடுத்த

“இதுக்கு மெடிசின் தந்து சரி பண்ணிருவீங்களா டாக்டர்”, திலா

“இல்லம்மா.  இப்போ எங்க பிரிஸ்கிரிப்சன் இல்லாம எந்த டேபிளட்டும் எடுக்காதீங்க. சப்போஸ்  வாமிட் வந்தா அதுக்கு பயந்துட்டு சாப்பிடாம பட்டினியும் இருக்கக்கூடாது.  எதாவது சாப்பிட்டு வாமிட் பண்ணுங்க”, என மருத்துவர் சிரித்தபடியே அறிவுறுத்த

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டவள், மாலினியிடம் வந்து அனைத்தையும் விடாது ஒப்புவிக்க, அமைதியாகக் கேட்டுக் கொண்டவர், அவரது பங்கிற்கு இன்னும் சில விசயங்களையும்  பெண்ணிடம் கூறினார்.

திலாவின் வாடிய தோற்றம் கண்டு, ‘இங்கே அவளை விட்டுட்டுபோ விஷ்வா’, என்க

தம்பதியர் இருவருமே ஒருவரையொருவர் பார்த்துவிட்டு, ‘இன்னொரு நாள் வரேன்’ என திலாவும், ‘இன்னொரு நாள் கொண்டு வந்து விடறேன் ஆண்ட்டி’ என விஷ்வாவும் ஒரே நேரத்தில் கூற

“ஜிங்க் சாங்க்னு ஒரே பதிலைச் சொல்றீங்க…”, என சிரித்தவர், “நல்ல முன்னேற்றந்தான்”, என்று சிலாகித்து கூற, மாலினியிடம் விடைபெற்று தம்பதியர் இருவரும், அதே மகிழ்வோடு வீடு திரும்பியிருந்தனர்.

////////////

அலுவலகம் தவிர, வீட்டிலும் உண்டான மாறுபட்ட சூழலால், சற்றே இலகுவற்ற நிலையில் விஷ்வாவின் தடுமாற்றங்களை கண்ட கண்ணன், “என்ன சார் எதுவும் பிரச்சனையா?”, என்று வினவ

சற்று நேரம் தனது நிலையை யோசித்து, ‘எதனால இப்டிக் கேக்கறான்.  வெளியே தெரியற அளவுக்கா விஷ்வா மாறிட்டான்’, எனத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டவன்,

கண்ணனிடம் “நத்திங் கண்ணா.  செங்கோட்டை போயிட்டு வரணும். இங்கயும் விட்டுட்டுப் போகமுடியாத நிலை”, என தடுமாற்றத்திற்கான காரணத்தை மறைத்துக் கூற

“அஸ்யூஸ்வல் மேடத்தை இங்க பாத்துக்க சொல்லிட்டு, நீங்க செங்கோட்டை போயிட்டு வரவேண்டியதுதான சார்”, என திலாவின் நிலையை அறிந்து கொள்ளும் எண்ணத்தில் கேட்டான் கண்ணன்.

உறவு சீர்படுமுன் நேரம் கிடைக்கும் போதெல்லாம், பெண்ணது அலைபேசிக்கு வந்து, பதிந்து நினைவகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் அழைப்பை எடுத்துக் கேட்கும் வாய்ப்பு விஷ்வாவிற்கு இருந்தது.

தற்போது உறவு சீர்பட்டபிறகு அதைத் தவிர்த்திருந்தான் விஷ்வா.

அப்போதே கண்ணனை, சில அழைப்புகளின் பேச்சுகளில் கணித்திருந்தான் விஷ்வா.

தனது முன்பு, மேடம் என்று மனைவியை அழைத்துப் பேசுவதும், அலைபேசியிலோ ஒருமையில் பேசுவதையும் அறிந்திருந்தான்.

சிறுவயது முதலே பழக்கம் என்றறிந்திருந்தமையால் ஆரம்பத்தில் அதைப் பெரியதாக எண்ணவில்லை.

நாள்கள் செல்லச்செல்லவே, திலா அண்ணா என்று அழைப்தையும், ஆனால் கண்ணனது உடல்மொழி அவளைத் தங்கையாக ஏற்கவில்லை என்பதையும் அடுத்தடுத்த நேரடிச் சந்திப்பில் கண்டு கொண்டிருந்தான் விஷ்வா.

அத்தோடு, திலாவும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று கண்ணனிடம் முக்கிய பேச்சுக்களைத் தவிர, கண்ணனது பேச்சை இடைவெட்டிப் பேசித் தவிர்ப்பதையும் அறிந்திருந்தமையால், பெண் கண்ணனை ஓரளவிற்குமேல் தனது செயல்களில் தலையிடுவதை அனுமதிக்காததைக் கண்டுகொண்டிருந்தான்.

குடும்ப விசயங்களைப்பற்றி, அதன்பின் வந்த வேளைகளில் கண்ணனிடம் விளக்கத் துணியவில்லை விஷ்வா.  அதற்குமுன்பும் உள்ளதை பெரும்பாலும் உள்ளபடியே பகிர்ந்து கொண்டதில்லை.

“அவங்களுக்கு கொஞ்சம் அதிகப்படியான வர்க் டென்சன்.  அதனால இனி இங்க எதிர்பாக்க முடியாது”, என மனைவியின் நிலையை மறைமுகமாகவே தெரிவித்தான் விஷ்வா.

‘அவளை நினைச்சு நாந்தான் டென்சனாகுறேன், அவளுக்கு என்ன குறை வந்தது. வேலைக்குப் போயி வர்க் டென்சனாக?’, என்பதான எண்ணம் கண்ணனுக்கு.

அலுவலகப் பணிசார்ந்த பேச்சினை அடுத்து, கண்ணனை வேறு பணியில் திசை திருப்பி அங்கிருந்து அகற்றியிருந்தான் விஷ்வா.

‘பொண்டாட்டி மட்டுமில்லை.  புருசனும் ரொம்பத் தெளிவு’, என எண்ணியவாறே அங்கிருந்து சென்றிருந்தான் கண்ணன்.

//////////////

அன்றே பலமுறை திலாவிற்கு அழைத்தும் பெண், கண்ணனது அழைப்பை ஏற்கவில்லை.

திருடனுக்கு தேள் கொட்டிய நிலை.

விஷ்வாவிடமும் விசயத்தைக் கேட்க முடியாமல், தந்தையிடம், ‘திலாவிற்கு வர்க் டென்சன் வர அளவுக்கு அப்டி என்ன வேலை பாக்குது.  இவ்ளோ சொத்துபத்து இருக்கும்போது அது என்னத்துக்கு வெளிய எங்கயோ வேலைக்குப் போகணும்.  என்ன பிரச்சனை அவங்களுக்குள்ளனு திலா வேலைக்கு போகுது’, எனக் கேட்டு விசாரிக்குமாறு பெற்றோரை நச்சரித்தான் கண்ணன்.

‘இத்தனை நாளு இல்லாம திடீர் கரிசனை எதுக்குனு யோசிக்கப்போகுது திலா.  எதுவானாலும் மாப்பிள்ளையே நல்லத்தான் பாத்துக்குவாறு’, என அமைதியாகியிருந்தார் திருநாவு.

பெண்ணைப் பற்றி எந்தத் தகவலும், யாரிடமிருந்தும் பெற முடியாத நிலை கண்ணனுக்கு.

பெற்றோரிடமும் கேட்டு இருவரும் சத்தம் போட்டிருந்தனர்.

‘காலா காலத்துல ஒரு புள்ளைய கல்யாணம் பண்ணிக்கனு பொண்ணு பாத்து எல்லாம் பேசி முடிச்சா, பாக்கற புள்ளைங்களை எல்லாம் குறை சொல்லிகிட்டே, அடுத்தவன் பொண்டாட்டி என்ன செய்யறானு நோட்டம் விடறது நல்லதுக்கில்லை’, என அதுவரை மறைமுகமாகக் கூறிய தாயும், நேரடியாகவே கண்ணனை எச்சரித்திருந்தார்.

என்ன பேசியும் புத்திக்கு ஏற்றாமல், புத்தி பேதலித்தவன்போல திலாவைப் பற்றி புலம்புவதையே வாடிக்கையாக்கியிருந்தான் கண்ணன்.

டிரைவர்களிடம் மேலோட்டமாக விசாரித்தபோதும், விசயம் எதையும் நுணுக்கமாக அறிந்து கொள்ள கண்ணனால் இயலவில்லை.

////////////

திலாவின் உடல்நிலையைக் கண்ட விஷ்வாவிற்கு பெண்ணை தனியே விட்டுவிட்டு செங்கோட்டைக்குச் செல்லவும் மனம் வரவில்லை.

திலாவோ தேதி, கிழமை, நாள் என்ன எதுவென்று அறியாமலேயே தனி உலகில் உடல்நிலை காரணமாக சஞ்சலத்தோடு கூடிய சந்தோசத்தில் சஞ்சரித்திருந்தாள்.

மனதில் தற்போதைய நிலையை எண்ணி மகிழ்வாக இருந்தபோதும், இயல்பாக தனது பணிகளை, கணவனது தேவைகளைக் கவனிக்க முடியாத வேட்கையும் பெண்ணிற்கு இருந்தது.

விஷ்வாவிற்கோ பெண்ணை இந்நிலையில் தனித்து விட்டுச் செல்லவும் மனமில்லாமல், உடன் அழைத்துச் செல்லவும் திலாவின் உடல்நிலை இடங்கொடாமையால் தவிப்பில் இருந்தான்.

 

என்ன முடிவெடுத்தான்?

அடுத்த பதிவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!