இதயம் நனைகிறதே…
அத்தியாயம் – 6
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்.
அவர்கள் திருமணத்திற்கு பின் வந்த முதல் வலெண்டைன்ஸ் டே.
குளித்து இளஞ்சிவப்பு நிற சேலை கட்டி இருந்தாள் இதயா.
“ஒய்…” என்று அவளை வழிமறித்து நின்றான் விஷ்வா.
“வழியை விடுங்க. நான் சமைக்கணும். நிறைய வேலை இருக்கு. வீட்டில் யாருமில்லை. அத்தை மாமா எல்லாரும் ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருக்காங்க. நாளைக்கி தான் வருவாங்க” அவள் விலகி செல்ல முயன்றாள்.
“நீ சொல்றதை பார்த்தா, விலகி போறதுக்காக சொல்ற காரணம் மாதிரியே தெரியலியே?” அவன் அவளை நெருங்க, அவள் ஒவ்வொரு அடியாக பின்னே எடுத்து வைக்க, சுவரோடு சாய்ந்து நின்றாள்.
அவன் தன் கைகளை இருப்பக்கமும் வைத்து கொண்டு அவளை பார்த்தான்.
அவன் சுவாசக் காற்று அவனது அடுத்த செய்கையை கூறுவது போல அவளை தீண்ட, அவள் தன் முகத்தை திருப்பி கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
“இதயா என்னை பாரு.” அவன் குரல் மென்மையாக அவளை வருடியது.
“ம்… கூம்…” அவள் தன் முகத்தை இருபக்கமும் அசைத்தாள்.
“இதயா…” அவன் குரல் அவளை கெஞ்ச, கொஞ்ச மிஞ்ச முடியாமல் அவனை பார்த்தாள் இதயா.
“வலெண்டைன்ஸ் டேக்கு என்ன கிஃப்ட்” அவன் கேட்க, “அதெல்லாம் லவ்வர்ஸ்க்கு தான் நமக்கில்லை.” அவள் தன் கைகளை அவன் கழுத்தில் மாலையாக கோர்த்துக் கொண்டு கூறினாள்.
அவன் அவளை இடையோடு அணைத்து கொண்டு, “அப்ப, எனக்கு எதுவுமே கிடையாதா?” அவன் அப்பாவியாக கேட்க, “இல்லை…” அவன் மார்பில் சாய்ந்து கொண்டு செல்லம் கொஞ்சினாள் இதயா.
அவளை சுவரில் சாய்த்து சற்று தூர நிறுத்தி, “லவ் பண்ணி கல்யாணம் பண்ணவங்க வலெண்டைன்ஸ் டே அன்னைக்கு கிஃப்ட் குடுக்கலைனா தெய்வ குத்தமாகிருமாம். என் ஆயுஸுக்கே கேரண்ட்டி, வாரன்டி, சுயரிட்டி இல்லையாம்.” அவன் குறும்போடு கண்களை விரித்து உதட்டை பிதுக்கினான்.
அவன் குறும்பில், அவள் கிண்கிணியாக சிரித்து, “அப்ப கண்டிப்பா குடுத்து தான் ஆகணும்.” அவளும் அவனை போல் கண்களை உருட்டி நக்கை நீட்டினாள்.
தன் மனையாளின் குறும்பை ரசித்து சிரித்து, “என்ன கிஃப்ட்?” என்று அவன் ஆர்வமாக புருவம் உயர்த்தினான்.
“சாப்பிட வாங்க தரேன்.” என்று கூறிக்கொண்டு, அவன் கைப்பிடியிலிருந்து தப்பி சமையல் அறை நோக்கி ஓடினாள் இதயா.
அவனின் மையல் பார்வை அவளை தொடர்ந்தது.
அலுவலகத்திற்கு நேரம் ஆகவே, அவனும் கிளம்பி சாப்பிட சென்றான்.
“என்ன கிஃப்ட்?” அவன் குறியாக நிற்க, “டொட்டொடய்ங்…” என்று விளம்பரம் போல் கைகளை விரித்து, தட்டை நீட்டினாள் இதயா.
இதய வடிவில் தோசை. இதய வடிவில் சட்னியை பரப்பி வைத்திருந்தாள்.
இதய வடிவத்தில் கேரட், இதய வடிவில் தக்காளி, இதய வடிவில் பீட்ரூட் என்று அடுக்கி வைத்திருந்தாள் இதயா.
“ஹாப்பி வாலெண்டைன்ஸ் டே.” அவள் அவன் முன் குனிந்து தட்டை வைத்துவிட்டு கூற, அவளை கடுப்பாக பார்த்தான் விஷ்வா.
“குழந்தைக்கு ஸ்கூல் ஸ்நக்ஸ் மாதிரி வச்கிருக்க? இது தான் உன் வலெண்டைன்ஸ் கிஃப்டா?” அவன் கேட்க, “ஹொவ் ரொமன்டிக்?” என்று கெத்தாக கேட்டாள் அவள்.
“உன் கண்ணை மூடு ஹொவ் ரொமன்டிக்குன்னு சொல்றேன்.” என்று அவன் அதிகாரமாக கூறினான்.
“முடியாது” அவள் மறுப்பாக தலை அசைக்க, அவன் அவளை நெருங்கினான்.
“கண்ணை மூடுறேன்.” அவள் படக்கென்று கண்களை மூடி கொண்டாள்.
அவன் அவளை அலேக்காக தூக்கினான்.
“டேய் விஷ்வா.” அவள் கண்களை திறக்க, “கண்ணை மூடுன்னு சொன்னேன்.” அவன் அழுத்தமாக கூற, அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள் இதயா.
அவன் அவளை தூக்கி கொண்டு படி ஏறினான்.
அவன் அருகாமை அவளுக்கு சொர்க்கத்தை காட்டியது. உலகத்தில் யாரும் இத்தனை இனிமையை அனுபவித்து இருக்க மாட்டார்கள் என்று அவள் அறிவும், மனமும் ஒரு சேர நம்பியது.
அவனும் அவளின் அருகாமையை ரசித்து கொண்டே படி ஏறினான்.
அவர்கள் பிரிவார்கள் என்று அவர்களை படைத்த இறைவனே வந்து நேரில் சொல்லி இருந்தால் கூட அவர்கள் நம்பி இருக்க மாட்டார்கள்.
மாடியில், அவர்கள் அறையில் அவளை இறக்கிவிட்டு, அவள் காதோரமாக “கண்ணை நான் சொல்ற வரை திறக்க கூடாது.” அவன் குரல் கிசுகிசுப்பாக அவளுக்கு ஆணை இட்டது.
அவள் ஒற்றை கண்ணை திறக்க, அவர்கள் இதழ்களுக்கான இடைவெளியை குறைத்து கொண்டு, “இது தான் தண்டனை. வேணுமின்னா திற.” குறுஞ்சிரிப்போடு கூறினான் விஷ்வா.
“டேய்…” கண்களை மூடி கொண்டே அவன் நெஞ்சில் குத்தினாள் அவள்.
“அங்க குத்தாத அங்க இதயா இருக்கா.” அவன் குரல் கட்டளையாக வந்தது.
சிறிது நேரத்தில், அவளை இடையோடு பின்னே இருந்து அணைத்துக் கொண்டான் விஷ்வா. அவள் உயரத்திற்க்கு குனிந்து அவள் தோளில் தன் நாடியை வைத்து, அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை உரசி கொண்டு, “இப்ப கண்ணை திற.” அவன் கூற, அவள் கண் முன்னே இருந்த பொருளை பார்த்து இதயாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
“க்ளிக்…” என்ற சத்தமும் வந்தது.
“என்னது டா இது?” அவள் அதை கைகளில் எடுத்துக் கொண்டு வினவ, அந்த சிவப்பு நிற இதய வடிவம் மூடி இருந்தது.
“உனக்கு இந்த உலகத்துலயே பிடிச்ச விஷயத்தை சொல்லு.” அவளிடம் சிவப்பு ரோஜா ஒன்றை நீட்டிக்கொண்டு அவன் ஆர்வமாக கேட்க, “விஷ்வா…” அவள் அவன் கொடுத்த ரோஜாவை வாங்கி கொண்டு பட்டென்று கூறினாள்.
அந்த இதயம் திறந்து கொண்டது. அதிலிருந்து மெல்லிய ராகமும்.
அதில் இப்பொழுது எடுக்கப்பட்ட அவர்கள் இருவரின் புகைப்படமும்!
“வாவ்!” என்றாள் அவள்.
“என் இதயாவின் இதயத்தை திறக்கும் சாவி இந்த விஷ்வா தானே?” அவன் தன் காலரை தூக்கி விட்டபடி சொல்ல, “டேய், இது தான் விஷயமுன்னு தெரிஞ்சிந்திருந்தா, நான் விஷ்வான்னு சொல்லாம வேற ஏதாவது சொல்லிருப்பேனே.” அவள் போலியாக வருந்த, அவன் அவளை பார்த்து புன்னகைத்தான்.
“என்ன சிரிப்பு?” அவள் கேட்க, “உன்னால முடியாது. விஷ்வா உன் இதயத்தில் பொறிக்கப்பட்ட சொல்.” அவன் கூற, அவன் கன்னத்தில் எம்பி இதழ் பதித்து அவன் கொடுத்த பரிசு பொருளை பார்த்தாள்.
“ரகசிய கேமரா. நாம போட்டோ எடுத்து, நாம மட்டும் தான் பாக்குறோம்.” அவள் காதில் கிசுகிசுத்தான்.
அவள் புன்னகைக்க, “ஹொவ் ரொமன்டிக்?” என்று அவன் இப்பொழுது கேட்க, அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.
“இது ரொமன்டிக். இதை விட்டுட்டு வேகாத கேரட், பீட்ரூட், தக்காளி தோசை சட்னி கொடுத்துட்டு ஹொவ் ரொமண்டிக்ன்னு கேள்வி வேற?” அவன் கடுப்பாக கூற, இதயா கோபமாக விடுவிடுவென்று கீழே இறங்கினாள்.
“ஒய்…” என்று அழைத்துக் கொண்டு அவனும் பின்னே சென்று அவள் கைகளை பிடித்து இழுக்க, அவள் அவன் மீது மோதி நின்றாள்.
“என் கேரட், பீட்ரூட், தோசை, சட்னி எல்லாம் சாப்பிடலைனா என் லிட்டில் ஹார்ட் பிரேக் ஆகிரும்.” அவள் முகத்தை சுழிக்க, “சரி சாப்பிடுறேன்.” அவன் கூறிக்கொண்டு சாப்பிட அமர்ந்தான்.
அவள் பரிமாறுகையில், கால் இடறி அவன் மீது சரிய, அவள் வைத்த தோசையை ருசித்தபடி தன் மடியில் இருந்த மனைவியை ரசித்துக்கொண்டு, “பிட் ரொமான்டிக்.” என்று அவன் சிரிக்க, “டேய்… நீ தானே என் காலை தட்டிவிட்ட?” அவள் சீறு கொண்டு எழுந்தாள்.
“என் மடியில் உட்காரனுமுன்னா நீயே உட்காரலாம் இதயா. எதுக்கு பொய் சொல்ற?” அவன் கண்கள் குறும்பு பேசியது.
“பொய் சொல்ற.” அவள் எகிற, “ஆமா. என்ன செய்யலாம்?” அவன் சாவல் விட, அவள் அவனை முறைத்தாள்.
கதவு தட்டும் ஓசையில் நிகழ் காலத்திற்கு திரும்பினான் விஷ்வா.
அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர். அந்த கண்ணீர் சிவப்பு நிற ரோஜா இதழை தொட்டு நீர் துளி போல் நின்றது.
அப்பொழுது இதயா உள்ளே நுழைய, அங்கிருந்த பூங்கொத்தும், வலெண்டைன்ஸ் டே வாழ்த்தட்டையும் அவள் கண்களில் பட அங்கு ஓர் அசாதரண சூழ்நிலை உருவாகியது.
விஷ்வா தன் கைகளில் இருந்த சிவப்பு ரோஜாவை அவள் பக்கம் நகர்த்தி, “ஹாப்பி வலெண்டைன்ஸ் டே…” என்றான்.
அவள் திடுக்கிட்டு விழிக்க, “ஜஸ்ட் அஸ் எ ஃபிரென்ட்” அவன் அவள் பேசுமுன் முந்திக் கொண்டான்.
‘இங்கு இது வழக்கம் தான்.’ என்று அவளும் மௌனித்துக் கொண்டாள்.
மறுக்க அவள் மனம் ஒத்துழைக்கவில்லை. அவள் அந்த ரோஜாவை கையில் எடுக்க, அந்த கண்ணீர் துளி அவன் வாசம் கூற, அவள் கண்களும் கலங்கி அவள் விழிநீர் தெறித்து இதழில் இருந்த அவன் விழி நீரை அதனோடு இணைத்து கொண்டது.
அவள் கடந்த காலத்தை நினைக்க கூடாது என்று விரும்பினாலும், அவன் கூறிய வார்த்தைகள் அவள் காதில் எதிரொலித்தது.
‘லவ் பண்ணி கல்யாணம் பண்ணவங்க வாலெண்டைன்ஸ் டே அன்னைக்கு கிஃப்ட் குடுக்கலைனா தெய்வ குத்தமாகிருமாம். என் ஆயுஸுக்கே கேரண்ட்டி, வாரன்டி, சுயரிட்டி இல்லையாம்’ அந்த வார்த்தைகள் அலை மோத, அவள் ஒரு நொடி சிந்தித்தாள்.
அவள் அருகே அவள் பை இருந்தது. அதில் தியாவுக்காக செய்த, இதய வடிவ குக்கீஸ்.
சட்டென்று எடுத்து அவனிடம் நீட்டி, “ஹாப்பி வாலெண்டைன்ஸ் டே.” என்றாள்.
அவன் கண்கள் குறும்போடு இவளை பார்க்க, “ஜஸ்ட் அஸ் எ ஃபிரெண்ட்” அவன் கேலியை தவிர்க்க முந்திக் கொண்டாள்.
“பிட் ரொமான்டிக்.” அவன் அந்த குகிஸ்ஸை ருசித்தபடி, இதயாவை ரசனையோடு பார்த்தப்படி கூறினான்.
‘அஜய்க்கு இதயா வேண்டும். அஜய்யை விரைவில் இவளிடம் சேர்க்க வேண்டும். ஆனால், எப்படி?’ அவன் மனம் வேகமாக சிந்திக்க, ‘அஜய்யை பற்றி எப்படி கேட்பது?’ அவளும் சிந்தித்து கொண்டிருந்தாள்.
‘எனக்கு என் மகள் வேண்டும்…’ என்ற ஆசையும் அவனுள் கனலாக எறிய, அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தாள் அவன் மகள்.
நாட்கள் அதன் போக்கில் நகர, மார்ச் இரண்டாம் வாரம். அமெரிக்காவில் கொரோனா அதன் உச்சத்தை அடைய ஆரம்பித்திருந்தது.
அன்று பள்ளியில் இருந்து இதயாவுக்கு அழைப்பு வர, அவள் பதட்டமாக கிளம்பி எத்தனிக்க, விஷ்வாவும் அவளோடு கிளம்பினான்.
“தியா இஸ் சிக்.” என்று கூற, இதயாவின் இதயம் வேகமாக துடித்தது.
வழக்கமாக என்றால், இத்தனை பதட்டப்பட மாட்டாள். ஆனால், சூழ்நிலை அவளை பதற செய்தது.
மருத்துவமனைக்கு சென்று தியாவை காட்ட, அவர்கள் நார்மல் ஃப்ளூ என்று கூற இதயா நிம்மதியாக கிளம்பினாள்.
அத்தனை நேரம், அவளோடு பேசாமல் வந்த விஷ்வாவிடம், “இத்தனை வருஷம் என் பிள்ளையை நான் தான் பார்த்தேன். இனியும் நானே பார்த்துப்பேன்.” அவள் கூறிக்கொண்டு செல்ல அவளை அவன் யோசனையாக பார்த்தான்.
அப்பொழுது இருவரின் அலைபேசிக்கும் ஒரு குறுஞ்செய்தி வந்தது.
‘சூழ்நிலை கருதி பள்ளிக்கு முழு அடைப்பு. விரைவில் ஆன்லைன் வகுப்புகள் பற்றிய செய்தி வரும்.’ என்ற குறுஞ்செய்தி வந்ததை தொடர்ந்து அலுவலகத்தில் இருந்தும், ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்.’ என்ற செய்தியும் வந்திருந்தது.
அன்றிரவு.
‘முழு லாக் டவுன். இந்த வாழ்க்கை எப்படி இருக்கும்? எல்லா சாமானையும் எப்படி வாங்குவது? எல்லாம் கிடைக்குமா? எல்லாம் வாங்கி சேமித்து வைக்க வேண்டுமோ?’ போன்ற கேள்விகளோடு, காய்ச்சலோடு உறங்கி கொண்டிருந்த மகளை அவள் பார்க்க, கதவு தட்டும் ஓசை கேட்டது.
கதவை திறந்த அவள் கண்களில் அதிர்ச்சி.
“நீ ஏன் இங்க வந்த விஷ்வா?” அவள் எகிற, “என் மகளை இந்த நேரத்தில் எப்படி தனியா விட முடியும்? சிட்டுவேஷன் வெளிய சரி இல்லை. அவளுக்காக நான் வேணும். யாரும் உன்னை தேடியோ, உன் மேல் இருக்கிற அக்கறையிலோ வரலை.” அவன் அசட்டையாக கூறினான்.
“விஷ்வா, உண்மையிலே நான் பயங்கர குழப்பத்தில் இருக்கேன். தயவு செஞ்சி திரும்பி போ.” அவள் அவனை உள்ளே விடாமல் வழிமறித்து நிற்க, கடகடவென்று அவன் படி இறங்கி வெளியே சென்றான்.
அவள் கதவை அடைத்துவிட்டு, கதவோடு சாய்ந்து நின்றாள். அவள் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
‘என் மகளையும் என்னிடம் இருந்து பிரித்து விடுவானோ?’ என்ற அச்சம் அவளை சூழ, கதவு மீண்டும் தட்டப்பட்டது.
‘இவன் கிளம்பவில்லையா? என்ன முடிவோடு வந்திருக்கிறான்?’ என்று இதயா கடுப்பாக கதவை திறக்க, கதவிற்கு வெளியே, தன் மகனோடு நின்று கொண்டிருந்தான் விஷ்வா.
அஜய்யை பார்த்த இதயாவின் முகத்தில் அத்தனை மலர்ச்சி. கதவை திறந்து முழுதாக வழிவிட்டாள்.
“அஜய்…” அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவள் அழைத்த சத்தம் அவளுக்கே கேட்கவில்லை.
அவள் அவன் அருகே நெருங்க, அவன் தந்தையை ஒட்டிக்கொண்டு நின்றான்.
நிதர்சனம் புரிய, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் இதயா. தன் விழிநீரை துடைத்துக்கொண்டு அவனை அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டே நின்றாள் இதயா.
“அப்பா நாம்ம லாக் டவுன் ஃபுல்லா இங்க தானா?” அஜய் வீட்டை பார்த்தபடி கேட்க, விஷ்வா தலை அசைத்துக் கொண்டான்.
“போய், குளிச்சிட்டு டிரஸ் சேஞ் பண்ணு.” விஷ்வா கூற, இதயா கை காட்டிய இடம் நோக்கி சென்று அஜய் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
இதயா மௌனமாக நிற்க, “லாக் டவுன் இந்த வருஷம் முழுக்க போகும் போல. அப்படி தான் பேசிக்கிறாங்க” என்று யோசனையாக கூறினான் விஷ்வா.
இதயா அவனை வேறு யோசனையோடு பார்த்து கொண்டிருந்தாள்.
‘என்ன திட்டம் இவனுக்கு?’ என்ற கேள்வி அவள் மூளையை குடைந்தது.
‘இங்க வச்சிக்கிட்டே என் பிள்ளையை இத்தனை நாள் என் கண்ணில் காட்டலை.’ அவள் உள்ளம் கொதித்தது.
‘இப்ப எப்படி கூட்டிட்டு வர மனசு வந்தது? தியாவையும் கூட்டிட்டு போகும் எண்ணமோ?’ அவள் எண்ணம் வேகவேகமாக எண்ணி அஞ்ச ஆரம்பித்தது.
அதெல்லாம் கண்டு கொள்பவன் போல் விஷ்வாவை பார்த்தால் தெரியவில்லை.
“நல்லாருக்கிற புருஷன் பொண்டாட்டியையே இப்படி ஒரே வீட்டில் வச்சி பூட்டினா டைவோர்ஸ் தான் வரும். நாம டைவோர்ஸ் வரைக்கும் போன புருஷன் பொண்டாட்டி நமக்கு என்ன நடக்கும்?” என்று விஷ்வா அவர்கள் ஹாலில் இருந்த சோபாவில் நடுநாயமாக அமர்ந்து நக்கலாக கேட்க, இதயாவின் செய்கையில் அவன் கலகலவென்று சிரித்தான்.
“ஹலோ… ஹலோ என்னங்க நடக்குது வீட்டுல?
ஐயோ… ஐயோ… என் மேல பயமே இல்லை இவங்க மனசுல?”
கொரோனா சோக பாடல் பாட,
“காதல் வைரஸ் இங்கு தாக்கியதே…
கணவன் மனைவி என்று இவர்களை ஆக்கியதே…
கொரோனாவில் பிழைத்தவன் உண்டு…
காதலில் பிழைத்தவன் இல்லை…
சிக்கி தவிப்பது தானே காதல்…” என்று காதல் வைரஸ் அசாதாரண சூழ்நிலையை எதிர்த்து குத்தாட்டம் போட ஆரம்பித்தது.
வைரஸின் ஆட்டம் விஸ்வரூபம் எடுக்கும்.
இதயம் நனையும்…