iV5

iV5

இதய ♥ வேட்கை 5

 

மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பதைக் கூறியதும், அதற்கேற்றாற்போல எளிமையான, ஆனால் சற்று அடர்ந்த நிற உடையை எடுத்து அணிந்து கிளம்பியிருந்தாள் பெண்.

மருத்துமனைக்கு அடிக்கடி தன் தாயோடு சென்று வந்த அனுபவத்தில் பெண் இதுபோன்ற சில விசயங்களை தாயின் வார்த்தைக்கிணங்க கடைபிடிக்கத் துவங்கியிருந்தாள்.

சிறுவயது முதலே எதிலும் சுத்தம் பார்ப்பவள். செல்லுமிடங்களில் சட்டென்று எங்கும் அமரமாட்டாள்.  மருத்துவமனைக்குச் சென்று திரும்பியதும் உடனே குளிப்பாள்.

வெண்ணிற ஆடைகளை பளிச்சென்று அணிவதில் பெண்ணுக்கு எப்போதும் எல்லையில்லா ஆனந்தம்.

நான்கு நாள்கள் ஒரே ஆடையை அணிந்திருந்தாலும், சிறு அழுக்கு அதில் வராத வகையில் நேர்த்தியாக புழங்குவதில் கைதேர்ந்தவள்.

ஆனால் அதுபோன்று ஒரே ஆடையைத் தொடர்ச்சியாக அணியவும் மாட்டாள்.

தனது பொருள்களை யாருக்கும் கைமாற்றாக பயன்படுத்தத் தரமாட்டாள்.

தனக்கு இல்லையென்றாலும், பிறர் கேட்டால் கொடுத்துவிட்டு சும்மா இருந்தாலும் இருப்பாளேயொழிய, அதை மீண்டும் வாங்கிப் பயன்படுத்த மாட்டாள்.

பிறர் பயன்படுத்தியதைப் பயன்படுத்த மனம் ஒப்பாதவள்.

மகளின் செயல்களைக் கண்டே விரைவில் தனி இடம் வாங்கி வீடு கட்டும் எண்ணத்திற்கு மிதிலாவின் தந்தை வந்திருந்தார்.

பெண் மிகச் சிறு வயதிலேயே இதுபோன்ற செயல்களில் மிகுந்த கவனத்தோடு இருப்பதைக் கண்டு, லைன் வீட்டில் வாடகைக்கு இருந்தபோது உண்டான நடைமுறைச் சிரமங்களை சரி செய்ய வேண்டியே விரைவில் வீடு கட்டும் எண்ணத்திற்கு வித்திட்டார்.

விஷ்வா கிளம்பி வரவும், உடன் கிளம்பினாள் பெண்.

கடந்த ஆண்டில் கணவனின் பிடிவாதத்திற்காக காரோட்டவும் கற்றுக் கொண்டிருந்தாள்.

“டயர்டா இருக்கு. வண்டி நீ எடுக்கிறியா?”, விஷ்வா

அதிகாலையின் சூரியனைப்போல சுறுசுறுப்பாக கிளம்பி அன்றைய தினத்தையே அலங்கரிப்பவன், ‘டயர்டா இருக்கு’ என்று கூறியதைக் கேட்டு, பெண்ணுக்கு ஏனோ மனதில் என்னவென்று உணர இயலாத பயம் ஒன்று வந்தமர்ந்தது.

“ம். ஆனா எனக்கு கிளினிக் போறதுக்கு வழி தெரியாதே!”, என்றவள் மறுபேச்சின்றி, ஓட்டுநர் இருக்கையில் சென்றமர்ந்தாள்.

அதற்குமேல் பெண்ணிடம் எதுவும் பேசாமல் நின்றவன், பின்னந்தலையில்  வலக்கையை வைத்து மேல்நோக்கி யோசித்தான்.

பிறகு ஓட்டுநர் இருக்கைபுறம் வந்தவன், கையை உள்புறம் காட்டி பெண்ணை நகர்ந்து அமரச் சொன்னான்.

பெண் நகர்ந்ததும், அவனே ஓட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்தான்.

தன்னை வண்டியை ஓட்டுமாறு கூறிவிட்டு, முடிவை மாற்றிக் கொண்ட விஷ்வாவை நோக்கி, “ஏன் நீங்க வழி சொன்னா நான் வண்டி எடுப்பேன்ல”

“இது செங்கோட்டையா? அதான்”, என காரணம் கூறியவனிடம்

“எங்க இருந்தா என்ன?  நேத்துகூட நான் ட்டூ ஹார்ஸ் பாஸ்கரண்ணனுக்கு ஹைவேஸ்லயே கை மாத்தினேன்”, என்று கணவனிடம் பெருமையாகக் கூற

“என்னாது!”, என்று அதிர்ச்சி, கோபம் இரண்டு கலந்த நிலையில் கேட்டவாறே பெண்ணை நோக்கித் திரும்ப

விஷ்வாவின் நிலையைப் பற்றி கருத்தில் கொள்ளாதவளோ, “ஆமா! தொடர்ச்சியா அவரே எப்டி ஓட்டுவாரு.  அதான் அவருக்கு கொஞ்ச நேரம் ரெஸ்ட் கொடுத்தேன்”, என்று இலகுவாகக் கூறினாள்.

“இதுக்குதான் உன்னை தனியா வர, போக வேணான்னேன்”, என்று முகமிருக பதில் கூறியவாறே வண்டியை இயக்க துவங்கினான்.

“இனி சொல்லிட்டே செய்யறேன்”, என்ற நல்ல பிள்ளைபோல பதில் கூறியவளின் மீது ஆராய்ச்சிப் பார்வையொன்றை வீசிவிட்டு, பார்வையை சாலையை நோக்கித் திருப்பினான் விஷ்வா.

ஒரு மணி நேரம் பயணத்திற்குப்பின் மருத்துவனையை அடைந்தனர்.

செல்லும் வழியெங்கும் பொதுவான, மிகக் குறைந்தளவு அவசியமான பேச்சுகள் மட்டுமே பெண்ணிடம் பேசினான் விஷ்வா.

பெண்ணும் இயல்பாக கணவனோடு உரையாடியவாறு வந்தாள்.

/////////

மருத்துமனையைக் கண்டவுடன் சட்டை செய்யாமல் இயல்பாக இருந்தவளுக்கு, மருத்துவரைக் கண்டதும் நினைவில் தோன்றியதை விஷ்வாவிடம் உடனே கேட்டாள்.

“இவருதான உங்களுக்கு என்னைப் பேசி முடிச்சவரு!”, என்று கணவனிடம் மிகக் குறைந்த குரலில் குனிந்து கேட்க

“ம்” என இளநகையோடு கண்களில் ஒளியோடு ஆமோதித்தவனை மிகவும் சத்தமான குரலில் வரவேற்றார் அந்த மருத்துவர்.

“என்னப்பா இன்னைக்குத்தான் மனசு வச்சு உங்க வீட்டம்மாவை கல்யாணத்துக்கப்புறம் எங்க கண்ணுல காட்டற”

“…”, சிரிப்பை மட்டுமே பதிலாக்கினான் விஷ்வா.

“சிரிச்சே மழுப்பு”, என்று விஷ்வாவைப் பார்த்துக் கூறியவர்

“வாம்மா, வாம்மா! எப்டி இருக்க? பையன் என்ன சொல்றான்!”, என்று திலாவிடம் விஷ்வாவைப் பார்த்து மருத்துவர் வினவ

“அவருக்கு என்ன செய்யுது டாக்டர்.  நான் கேட்டா எதுவுமே சொல்ல மாட்டேங்கறார்”, என சிரத்தையான குரலோடு வந்தவுடன் நேரடியாக மனதில் தோன்றியதைக் கேட்டாள் மிதிலா.

விஷ்வாவிடம் திரும்பிய மருத்துவர், “ஏன் விஷ்வா, உங்க வீட்டம்மா சொல்றது உண்மையா?”, என்று கேட்டதோடு

“வீட்டம்மா மனசு வச்சாதான் சீக்கிரமா குணமாக முடியும்.  அவங்கட்ட சொல்லலைன்னா எப்டி சீக்கிரமா க்யூர் ஆகறது விஷ்வா?” ,என்று வினவ

“அதைப் பற்றி நீங்களே சொல்லிருங்க டாக்டர்.  அதான் அவங்களையும் கூட்டிட்டு வந்தேன்”, என்று கூறி சாதூர்யமாக ஒதுங்கிக் கொண்டான் விஷ்வா.

விஷ்வாவின் பதிலைக் கேட்ட மருத்துவரோ, கர்மசிரத்தையோடு பெண்ணை நோக்கி பேச ஆரம்பித்து, அனைத்தையும் பகிர்ந்து கொள்ளத் துவங்கினார்.

“நம்ம பய ரொம்ப நான் ஸ்டாப்பா டிராவல் பண்றது, லிக்கர் எடுக்கறது, ஸ்மோக் பண்றது, வெளியே கிடைக்கற இடத்துல கண்டதையும் பசிக்கு சாப்பிடறதுன்னு அவரு இஷ்டத்துக்கு தெரிஞ்சதுல லிவர் சிவியர் அலர்ஜி ஆகியிருக்கு,

லிவர்தான நம்மை வாழ வைக்கறது.  அதான், நீ தப்பான ரூட்ல போற மகனேன்னு, பீவர், டயர்ட்னஸ்ஸூன்னு சிம்டம்ஸ் மூலமா விஷ்வாவை வார்ன் பண்ணுது. 

பிகினிங் ஸ்டேஜ்லயே சரி பண்ணிக்கிட்டா ஓகேதான்.  இதை அப்டியே விட்டா அடுத்து ஹெப்படைடடீஸ்னு சொல்லுவோம்”, என்று விளக்கம் தந்ததோடு

“ஏம்பா இதை நீயே அவங்ககிட்ட சொல்லியிருக்கலாமே”, என்று விஷ்வாவிடம் கேட்க

“மேடம் ரொம்ப பிஸி. அவங்ககிட்ட அப்பாயிண்ட்மெண்ட் இன்னிக்குதான் கிடைச்சது.  அதான் நேரா உங்களைப் பாக்க இங்கே கூட்டிட்டு வந்தேன்”, என்று கூறி இருவரையும் மாறி மாறிப் பார்த்தவாறே கள்ளச் சிரிப்பு சிரித்தான் விஷ்வா.

விஷ்வாவின் நிலையைப் பற்றி அவரவர் நிலையில் நின்று யூகித்துக் கொள்ள, அந்தச் சிரிப்பை பகடையாக்கி, பக்குவமாக சூழலைக் கையாண்டிருந்தான் அந்தக் கள்ளன்.

திருமணமாகி வந்து, தான் சென்னையில் இருந்த மூன்று மாதங்களும், சென்னை அலுவலகங்களில் பணியில் விஷ்வா எங்கிருந்தாலும் மதிய உணவைக் கொடுத்து விடுவதை வாடிக்கையாக்கியிருந்தாள் மிதிலா.

அதை எந்த நிலையிலும் நிறுத்தாமல் தொடர வேண்டும் என்பதையும் பெண் வலியுறுத்திக் கூறிவிட்டே செங்கோட்டைக்கு கிளம்பியிருந்தாள்.

அவ்வாறு இருக்க, வெளியே சாப்பிட வேண்டிய அவசியம் விஷ்வாவிற்கு எதனால் வந்தது என்கிற யோசனையோடு, அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதனைக் கேட்டுக் கொண்டவள் கிளம்ப எத்தனிக்க

“மிதிலா உன்னை எங்க வீட்டு அம்மா பாக்கணும்னு ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்தா… ஒரு நிமிசம்”, என்றவர்

மனைவிக்கு அழைக்க, மறுமுனையில் இருந்தவர் மிதிலாவை அவரது கேபினுக்கு உடனே அனுப்புமாறு கூறவும்,

“போயி பாத்துட்டு வாம்மா”, என்ற மருத்துவர் கூறியதைக் கேட்டு இருவரும் எழுந்தனர்.

விஷ்வாவும் உடன் செல்வதைக் கண்டவரோ, “விஷ்வா நீ இரு. உங்க ஆண்டிய மிதிலா மட்டும் போயி பாத்திட்டு வரட்டும், நாம இங்க பேசிட்டுருப்போம்”, என்று தன்னோடு விஷ்வாவை இருத்திக் கொண்டார்.

செவிலியரை அழைத்து, மிதிலாவை உரிய கேபினுக்கு அழைத்துச் செல்லப் பணித்துவிட்டு, விஷ்வாவிடம் தனிமையில் பொதுவான விசயங்களைப் பற்றி உரையாடினார் சுந்தரம்.

பெண் சென்றதும், “ஏதோ மிதிலாகிட்ட பேசணும்னு சொல்லிட்டே இருந்தா உங்க ஆண்ட்டி.  மிதிலா பேசிட்டு வரட்டும்”, என்று விஷ்வாவிடம் முந்தைக்கு, உடல்நிலை சார்ந்த முன்னேற்றத்தைப் பற்றி விவாதித்தவர், குறைபாட்டிலிருந்து மீள கட்டாயம் கையாளவேண்டிய வழிமுறைகளையும் விஷ்வாவிற்கு கூறினார்.

இதுவரை இருவரின் பிரிதல், மிதிலாவின் எதிர்பார்ப்பு எதைப் பற்றியும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதவன், இன்றும் பொதுவான விசயங்களைப் பற்றிப் பேசினானே தவிர, தங்களது குடும்ப வாழ்வு பற்றிய எதையும் கூறவில்லை.

///////////

மனநல மருத்துவரான திருமதி. மாலினி சுந்தரம் என பெயரிட்டிருந்த அறைக்கு வெளியில் நின்றவாறே,

“மேடம் கேபின் இதுதான்”, என்று அவளோடு பணி முடிந்தது என்பதை கூறாது கூறிவிட்டு சென்றிருந்தாள் செவிலிப் பெண்.

பெண்ணும், அனுமதி கேட்டு கேபினுக்குள் செல்ல,

“அடடே வாம்மா. கல்யாணத்தப்ப பாத்தது.  வா வா வந்து உக்காரு!”, என்று மிதிலாவிற்கான இருக்கையை காண்பித்ததோடு, “சின்ன மாற்றங்கூட இல்லாம கல்யாணத்தப்ப பாத்தமாதிரி அப்டியே இருக்க”, என்று இன்முகத்தோடு வரவேற்றவரை நோக்கி

“தாங்க்ஸ் டாக்டர்”, என்று கூறியவாறு அமரவே

“விஷ்வா என்னை ஆண்டினு சொன்னா, நீ என்னை அம்மானு சொல்லனும்.  உனக்கு நான் டாக்டரில்லை.  என்ன சரியா?”, என்றவர்

பெண்ணின் தலையசைப்பை ஆமோதிப்பாக எடுத்துக் கொண்டார்.

“என்ன சாப்பிடறே?”, என்று வினவ

“ஒன்னு வேணா டா.. அம்மா”, என்றவள்

“வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களாம்மா?”, என்று பொது விசாரிப்பைத் துவங்கினாள்.

“எல்லாரும் சுகம்.  கல்யாணத்துக்குப் பின்ன ஒரு வருசத்துல எப்டியும் நூறு தடவையாவது நேருலயும், போனுலயும் கூட்டிட்டு வரச் சொல்லிட்டேன், இன்னிக்குதான் கூட்டிட்டு வந்திருக்காரு உங்க ஆளு”, என்று மாலினி கூறியவாறே சிரிக்கவே

எதையும் அறியாதவள், அதற்கு பதில் எதுவும் கூற இயலாது சிரிப்பை மட்டுமே பதிலாக்கினாள்.

“உனக்கும் அவனை மாதிரியே சிரிக்க கத்துக் குடுத்துட்டான் போலயே! பதில் சொல்லாமலே அவந்தான் மழுப்பலா இப்டி சிரிப்பான்.  அதேமாதிரியே ஒரு வருசம் உனக்கு நல்லா ட்ரைன் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கான் போலயே”, என்றார் மாலினி.

“…”, அதற்கும் மறுக்காமல் ஆமோதிப்பதுபோல சிரித்தாள் மிதிலா.

“ஆமா வருசம் ஒன்னாச்சி.  என்ன, இன்னும் எதாவது பிளான்ல இருக்கீங்களா? விஷ்வாகிட்ட கேட்டா வாயைத் திறக்காம சிரிச்சே மளுப்பறான்”, என்று வினவ

என்ன கூற, கேட்க வருகிறார் என்று புரியாமல் சற்று நேரம் விழித்தாள் திலா.

சற்று நிதானித்து யோசித்தவளுக்கு விசயம் என்ன என்று தெளிவாக இல்லாதபோதும், அனுமானமாகப் புரிபட.. என்ன பேச என்று புரியாமல் தயங்கினாள்.

கிராமம் மற்றும் நகர வாழ் பெண், சாமான்ய பெண், மருத்துவர் என எந்த பாகுபாடும் இன்றி, அனைவரும் திருமணமான பெண்ணை நோக்கி இயல்பாக கேட்கும் தேசிய கேள்வியை மாலினியும் தன்னை நோக்கிக் கேட்டதாகவே பெண்ணுக்கு தோன்றியது.

“என்னம்மா யோசிக்கறே.  நாங்க, உங்க கல்யாணத்தை முன்னாடி எடுத்துச் செய்தோம்கிறப்போ அடுத்து குடும்பமா, சந்தோசமா நீங்க இருக்கறதைப் பாக்கணும்னு எங்களுக்கும் ஆசையிருக்கும்ல.  நாங்க சத்யா அண்ணனுக்காக விஷ்வாவுக்கு பொண்ணு பாத்து பேசி எல்லாம் முன்னாடி நின்னு செய்தாலும், கடமை முடிஞ்சிருச்சுனு அப்டியே விட முடியாதில்லையா?”, என்ற வினவ

தலையை அசைத்து ஆமோதித்தவளுக்கு கண்ணாவின் தந்தை திருநாவுவின் நினைவு வர,

‘அவருந்தான் எனக்கு நல்லா மாப்பிள்ளை பாத்தாரு. கடமை முடிஞ்சதுன்னு அதுக்கப்புறம் நான் இருக்கற பக்கம்கூட வர யோசிக்கறாரு.  ஆனா இவங்கபோல மனுசங்களும் இந்த பூமியிலதான் இருக்காங்கபோல’ என மனம் மாலினையை மெச்சியவாறே

“அவரு உங்களைப் பத்தி எதுவும் எங்கிட்ட சொல்லலை.  அதான் எனக்கு ஒன்னும் தெரியலை.  இனி கேட்டுத் தெரிஞ்சுக்கறேன்மா”, என அப்போதைக்கு அவரது கேள்வியில் இருந்து தப்பிக்க ஒப்புக்கு பதில் கூறினாள் மிதிலா.

இத்தனை நாள் மனதில் தேக்கி வைத்திருந்ததைக் கேட்கலாமா வேண்டாமா என்று எழுந்த குழப்பத்தில், ‘சே. குடும்ப விசயத்தைப் பத்தி இங்க எப்டி பேசறது.  பாப்போம். விவாகரத்து அது, இதுன்னு ஆரம்பிச்சது இவங்களுக்கு தெரிஞ்சா கூப்பிட்டு வச்சி மண்டையக் கழுவுவாங்களோ! அதான் அவரு பிடிகொடுக்காம வேற சொல்லுனு சரண்டர் மோடுலயே தெரியுறாரோ’, என்று விஷ்வாவின் நிலைபற்றி எண்ணியவளாக அமர்ந்திருந்தாள் மிதிலா.

பெண்ணின் குழப்பமான முக வடிவைக் கண்டு, “எதுனாலும் எங்கிட்ட மனசு விட்டுப் பேசு மிதிலா.  நல்ல கைனகாலஜிஸ்ட்டை நம்ம கன்சல்ட் பண்ணலாம்”, என்று அடுத்த கட்ட பேச்சைத் துவங்கினார் மாலினி.

‘வாழவே வழியக் காணோம்.  அதுக்குள்ள கைனகாலஜிஸ்ட்டுகிட்ட போயி என்னைய நானே காட்டிக் குடுக்கச் சொல்லுறாங்களே! கடவுளே. நீதான் எப்டியாவது காப்பாத்தி என்னை கரை சேக்கணும்’, என்று மனதில் வேண்டியவாறே மாலினியிடம் பேசிவிட்டு விடைபெற்றிருந்தாள் மிதிலா.

விடைபெறும்போது மிதிலாவின் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டவர், “வீக்கெண்ட் ரெண்டு பேரும் வீட்டுக்கு வாங்க.  இல்லைனா நாங்க உங்க வீட்டுக்கு வரோம்”, என்று கூறி வழியனுப்பினார் மாலினி.

“கண்டிப்பா வாங்கம்மா”, என்று விடைபெற்றாள் பெண்.

செல்லும்போது இருந்த மனநிலை தற்போது முற்றிலும் மாறியிருக்க, முகம் முழுமையிலும் யோசனையோடு வந்தவளை தொந்திரவு செய்யாமல் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் விஷ்வா.

அதே மனநிலையோடு அவளது அறைக்குள் சென்றவளின் பின்னே வந்தவன், “உனக்கு இன்னிக்கே செங்கோட்டை போகணும்னா… ஈவினிங் ஓகே வா”, என்று கேட்டவனை புரியாமல் பார்த்தாள் பெண்.

“என்ன?”, என்று புரியாமல் கேட்டவளை

“நேத்தே கிளம்பறேன்னு நின்னியே. அதான் கேட்டேன்”, என்று விளக்கம் வேறு தந்தான் விஷ்வா.

‘உடும்பனுக்கு உடம்பெல்லாம் திமிரு’, என்று கணவனின் கேள்வியில் மனம் பொங்க

“உங்ககிட்ட நேத்து கிளம்பறேன்னு சொல்லிட்டு கடைசியில என்ன சொன்னேன்.  நம்ம விசயம் எல்லாம் பேசி முடிச்சு அப்புறம் கிளம்பறேன்னுதான சொன்னேன்.  அதுக்குள்ள என்னை கிளப்பறதுலயே இருக்கீங்க.  என்ன விசயம்?”, என்று சண்டை மோடிற்கு மாறி இடுப்பில் இரு புறமும் கையை வைத்தபடியே கேட்டவளை

“நேத்து நீ தானம்மா சொன்ன”, என்று பாவம்போல நினைவுபடுத்தினான்.

“ஆமா, இப்பவும் நாந்தான் சொல்றேன்.  முதல்ல உங்களுக்கு சரியாகட்டும்.  அப்புறம் கொஞ்சம் வேலையிருக்கு.  அத்தோட நம்ம விசயத்தைப் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வந்துட்டு, அடுத்து என்ன செய்யலாம்னு பாக்கலாம்”, என்றவள்

“எனக்கு இப்ப குளிக்கனும்”, என்று கணவனிடம் இடத்தைக் காலி பண்ணு என்று நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூறினாள்.

“சரி, ஆகட்டும்”, என்றவன் அவனது அறையை நோக்கிச் சென்றிருந்தான் விஷ்வா.

பித்தம் அதிகமில்லாத, காரம் குறைந்த உணவு வகைகளை பக்குவமாகச் செய்ய மிதிலாவிற்கு நாகம்மாள் உதவிட, இரண்டொரு நாளில் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தான் விஷ்வா.

எதையும் மறைக்கும் எண்ணமின்றி, “இப்பதான்யா முகம் பழையபடி பளிச்சின்னு வந்திருக்கு.  ஒரு வாரமா எப்டி சோந்து போயி இருந்தது”, என்று விஷ்வாவின் உடல்நிலையில் வந்த முன்னேற்றத்தைக் கண்டு தூரத்தில் நின்றவாறே கண்ணூறு கழித்து ஆனந்தமடைந்தார் நாகம்மாள்.

அனைத்தையும் பார்த்திருந்தவள், அமைதியாக இருந்தாளே தவிர எதைப் பற்றியும் பேசினாளில்லை.

விஷ்வாவும் அலுவலகம் செல்லத் துவங்கியிருந்தான்.

///////////

மாலினி விடைபெறும்போது கூறியதை விஷ்வாவிடம் பகிர்ந்து கொண்டாள் மிதிலா.

“அப்டித்தான் ஆண்ட்டி சொல்வாங்க.  வரமாட்டாங்க”, என்றதோடு “உனக்கு ஓகேன்னா சொல்லு, வீக்கெண்ட் அவங்க வீட்டுக்கு போயிட்டு வரலாம்”, என்றிருந்தான் விஷ்வா.

மாலையில் சென்று வரலாம் என்று முடிவு செய்து, அதன்படி வாரயிறுதி நாளில் அவர்களது வீட்டிற்கு சென்றனர்.

“லன்சுக்கு வரச் சொன்னா ஈவினிங் கூட்டிட்டு வர விஷ்வா”, என்று விஷ்வாவிடம் மல்லுக்கு நின்றார் மாலினி.

“நான் ஒன்னுஞ் சொல்லலை.  இன்னும் ஒன் மன்த் வெளிய எங்கயும் சாப்பிடக் கூடாதுன்னு மேடந்தான் ஆர்டர் போட்ருக்காங்க.  வேணுனா அவட்டையே கேளுங்க”, என்று தனது கோர்ட்டுக்கு வந்த பந்தை, மிதிலாவிற்கு மாற்றி விட்டான் விஷ்வா.

பெண்ணோ, “அம்மா. நான் அவரைத்தான் வெளியில போயி சாப்பிடக்கூடாதுன்னு சொன்னேன்.  இங்க வர வேணானு சொல்லலை”, என்று மிதிலா பின்வாங்க

பேச்சும், கிண்டலும், கேலியுமாக நேரம் சென்றதே நால்வருக்கும் தெரியவில்லை.

இரவு உணவை மாலினி தயார் செய்ய, உடன் உதவினாள் மிதிலா.

இரவு உணவிற்குப் பிறகு வீடு திரும்பியபோது, இருவருக்கும் மனம் ஆனந்த மனநிலையில் இருந்தது.

அதே மனநிலையோடு வீடு வந்தவள், விஷ்வாவின் அறைக்குள் நுழைந்தவனை, “ஏங்க”, என்று அழைத்து நிறுத்த

பெண்ணின் அழைப்பில் உடலெங்கும் பரவசமாக உணர்ந்தவன் அதை வெளிக்காட்டாமல், “என்ன ஸ்ட்ராபெர்ரி”, என்று இதமான குரலில் பெண்ணை நோக்கிக் கேட்டவாறு நின்றிருந்தான்.

கணவனின் அழைப்பில் கேட்க வந்ததை மறந்தவள், நின்றவாறே, என்ன கேட்க வந்தோம் என்பதை நினைவடுக்கில் தேடத் துவங்கி தொலைந்து போயிருந்தாள்.

நிகழ்வில் தொலைந்து போன மனதோடு, நின்றிருந்தவளின் அருகே வந்து, கண்முன் சொடக்கிட்டு நிகழ்விற்கு மனைவியை அழைத்து வந்தான் விஷ்வா.

மிதிலா, தன் செயலில் நாணம் கொண்டவாறு, “ஒன்னுமில்லை. மாலினி அம்மாக்கு குழந்தையில்லையா?”, என்று வினவ

‘நாங்கூட என்னவோ ஏதோன்னு கொஞ்ச நேரம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்’, என்று மனம் அவனை ஆறுதல் செய்தாலும்,

மறுமனம் ‘இவளாவது மாறுறதாவது’, என்று கெக்கொலி காட்டிச் சிரிக்க

“ம். ஆமா”, என்று பெண்ணிடம் பதில் கூறியவன்

‘அவ்வளவுதானா?  இதுக்காகத்தான் ஏங்கனு ஏக்கமா கூப்பிட்டாளா’, என்று பெண்ணிடமிருந்து மேலும் வார்த்தைகள் வராதா என்ற எதிர்பார்ப்போடு நிற்க

“அதக் கேக்கத்தாங்க கூப்பிட்டேன்”, என்றவாறே அதற்குமேல் பேச ஒன்றுமில்லை கூறாது, செயலில் அறைக்குள் நுழைந்தவளைப் பார்த்து பெருமூச்சு விட்டவாறே அறைக்குள் நுழைந்தான் விஷ்வா.

//////////

குழந்தைப்பேறு இல்லாத நிலையில், அதைக்கூட ஒரு குறையாக எண்ணாமல், இருவரும் ஒருவருக்கொருவர் அந்நியோன்ய தம்பதிகளாக இன்றுவரை இருப்பதை நேரில் கண்டது, மிதிலாவின் மனதில் இனம் புரியாத நல்உணர்வைத் தந்திருந்தது.

மாலினி, சுந்தரம் இருவரின் நேர்த்தியான குடும்ப வாழ்க்கையை நேரில் கண்டவளுக்கு தனக்கும் இதுபோன்றதொரு வாழ்க்கை அமையாதா என்கிற ஏக்கம் வந்திருந்தது.

கிடைத்த வாழ்வை பொன்னாக, நினைத்து வாழ நினைத்து வந்தவளை, சூழல் செய்த சூழ்ச்சி வஞ்சித்துவிட்டதாகவே பெண் நம்புகிறாள்.

கிட்டாமல் எட்டாக்கனியாகப் போன குடும்ப வாழ்க்கையை எண்ணிக் குமைகிறது மனம்.

ஆனாலும் அனைத்தையும் சரிசெய்து மீண்டும் புதியதொரு வாழ்வை துவங்கலாம் என மனம் கூறினாலும், ஏதோ தயக்கம், அருவெறுப்பு பெண்ணை பின்வாங்கச் செய்தது.

மாலினி, சுந்தரம் இருவரைப் பற்றிய சிந்தனையோடு இருந்தவளின் சிந்தையை கலைத்தது வந்த அழைப்பு.

சென்னை வந்த ஒரு வாரத்தில் பெண்ணின் நடவடிக்கைகளை கண்டும் காணாததுபோலக் கண்ணுற்றிருந்தவன், ‘வேலைக்காரியா கூட இருப்பாபோல, வீட்டுக்காரியா மாற மனசே இல்லாம இருக்கா’, என்று எண்ணியவாறே, தன் மனமெங்கும் நிறைந்திருந்தவளுக்கு தனதறைக்குள் இருந்தவாறே அலைபேசியில் அழைத்தான் விஷ்வா.

அழைப்பு விஷ்வாவிடமிருந்து என்பதைப் பார்த்தவளுக்கு, ‘என்னாச்சு. இவ்வளவு நேரம் ஒன்னாத்தானே வெளியே போயிட்டு வந்தோம்.  அப்புறம் எதுக்கு இப்ப கால் பண்றார்? உடும்பு இந்நேரத்தில எதுக்குக் கூப்பிட்டு அலும்பு பண்ணுது!’, என்ற நினைவோடு அழைப்பை ஏற்றாள் மிதிலா.

அலைபேசியில் அழைத்தவன் மிதிலாவிடம் என்ன பேசினான்?

அடுத்த பதிவில்…

Leave a Reply

error: Content is protected !!