Jeevan Neeyamma–EPI 16

171916099_840757923178210_3424615682123961255_n-1cf33b9b

Jeevan Neeyamma–EPI 16

அத்தியாயம் 16

 

பல் வலியைக் கூட தாங்கிக் கொள்வேன், நீ உதிர்க்கும் பாய்(bye) எனும் சொல் தரும் வலியை மட்டும் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

1910ல் பிரிட்டிஷாரால் நிர்மாணிக்கப்பட்ட கோலாலம்பூர் ரயில் நிலையம் அந்தக் காலை வேளையிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் அங்கும் இங்கும் நடைப் பயின்றுக் கொண்டிருக்க, நடை மேடைக்கு சற்று தொலைவில் இருந்த பெஞ்சில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் மீனாட்சி அம்மன். அவள் காலருகே லக்கேஜ் பேக் ஒன்று வீற்றிருந்தது.

கண் மூடி அமர்ந்திருக்கும் மீனாட்சியையேப் பார்த்தப்படி அவள் அருகே நின்றிருந்தான் ரஹ்மான். அவளது வலது கை, சிமேண்ட் கட்டு போடப்பட்டு கழுத்தில் இருந்துக் கட்டப்பட்டிருந்த துணியில் தூளியாடிக் கொண்டிருந்தது. மீனாட்சியின் கரத்தைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சம் கொதித்தது இவனுக்கு.

நேற்றைய முன் தினம், ஹேமாவின் போன் அழைப்பில் பதறி போனான் ரஹ்மான்.

“மீனாம்மாவுக்கு என்ன?”

“கீழ விழுந்துட்டா சீனியர்! கைய தூக்க முடியல அவளுக்கு. ஒரே ரத்தமா இருக்கு” என சொல்லியபடி அழுத ஹேமாவை சமாதானப்படுத்தி, அவர்கள் இருக்கும் இடம் கேட்டு, கிட்டத்தட்ட ஓடினான் ரஹ்மான். அவன் பின்னாலேயே லோகாவும் ஓடி வந்தான்.

கவிதை நிகழ்ச்சி முடிந்து ஒன்றாக திரும்பிக் கொண்டிருந்த சில பெண்களும் அவர்களை சுற்றி நின்றிருந்தனர். மீனாட்சி கீழே அமர்ந்திருக்க, அவளருகே கண்ணீர் கண்களுடன் அமர்ந்திருந்தாள் ஹேமா. ஓடி வந்து மீனாட்சியின் முன் மண்டியிட்டான் ரஹ்மான். அவனைப் பார்த்ததும் அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்துக் கிளம்ப,

“ரஹ்மானு!” என எம்பி வந்து இடது கையால் அவனை அணைத்துக் கொண்டாள் இவள்.

தன்னிச்சையாக எழும்பி இவனின் இரு கரங்களும் அவளை வளைத்துக் கொண்டன.

“வலிக்குது ரஹ்மானு! ரொம்ப வலிக்குது” என அவள் தேம்ப, சட்டென தனது பதட்டத்தை உதறி அவளைத் தள்ளி நிறுத்தி ஆராய்ந்தான் இவன்.

வலது கையில் இருந்து ரத்தம் வர, அதை மெல்லத் தூக்கினான் ரஹ்மான். இவன் கைப் பிடித்ததுமே வலியில் துள்ளினாள் மீனாட்சி. விழுந்ததில் எலும்பு எங்கோ பிசகி இருக்கிறது என சட்டென புரிந்துப் போனது இவனுக்கு.

“லோகா, நம்ம ஹாஸ்டல்ல மூனாவது மாடியில இருக்கானே லை மேங், அவன் கிட்ட அவசரம்னு சொல்லி கார் எடுத்திட்டு வா! நாம இவள அழைச்சிட்டு ஹாஸ்பிட்டல் போயிடலாம்!” என உத்தரவிட்டவன், மீனாட்சியை தன் இரு கைகளால் அள்ளிக் கொண்டான்.

அவர்கள் நின்றிருந்த இடத்தில் வெளிச்சம் குறைவாக இருக்க, சற்று தள்ளி இருந்த பஸ் நிறுத்தத்துக்கு அவளைத் தூக்கிப் போய் பெஞ்சில் அமர்த்தினான். மற்ற பெண்களை கிளம்பி ஹாஸ்டலுக்கு பத்திரமாகப் போக சொன்னவன், ஹேமாவை மட்டும் தங்களோடு இருத்திக் கொண்டான். பஸ் நிறுத்ததில் இருந்த விளக்கின் வெளிச்சத்தில் மீனாட்சியை மீண்டும் நன்றாக ஆராய்ந்தான். கையையும் காலையும் ரோட்டில் இருந்த கற்கள் நன்றாக பதம் பார்த்திருந்தன. கால் முட்டியில் துணி கிழிந்து அங்கேயும் ரத்தம் வழிந்தது. சின்னக் குழுந்தைத் தாயைப் பார்த்து அழுவதைப் போல தன் காயங்களை ஆராயும் அவனைப் பார்த்து,

“ரொம்ப வலிக்குது ரஹ்மானு!” என சலுகையாய் அழுதாள் இவள்.

அவளது துப்பட்டாவை சட்டென கலட்டியவன், அதை லேசாக கிழித்து முதலில் ரத்தம் வந்த பகுதிகளை துடைத்து கட்டுப் போட்டான். பின் அவளது கை ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டி துப்பட்டாவால் தூளி போல் செய்து கழுத்தில் மாட்டி விட்டான். அவனது ஒவ்வொரு செயலுக்கும்,

“வலிக்குது ரஹ்மானு!” என கதறிக் கொண்டே இருந்தாள் மீனாட்சி.

ஒரு வழியாய் அவள் அழுக அழுக முதலுதவி செய்து முடித்தான் ரஹ்மான். தேம்பிக் கொண்டே இருந்தவளை, சற்று முன்பு போல அணைத்து ஆறுதலளிக்க வேண்டும் என உடலும் மனமும் பரபரத்தாலும், அறிவு எனும் வஸ்து முனுமுனுவென அவனை தள்ளி நிற்க சொல்லி எச்சரித்துக் கொண்டே இருந்தது. அறிவுக்கும் மனதுக்கும் போராட்டம் நடந்துக் கொண்டிருக்க, அவளது கண்ணீர் துளி ஒன்று இவனது கையில் தெறித்து விழுந்தது. மற்றதெல்லாம் தோற்றுப் போய் அவளது கண்ணீர் எப்பொழுதும் போல வெற்றிப் பெற, அமர்ந்திருந்த மீனாட்சியை சட்டென  தன் வயிற்றோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான் ரஹ்மான்.

“சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போயிடலாம் மீனாம்மா! கொஞ்சம் பொறுத்துக்கடா! ப்ளீஸ்! மீனாம்மா நல்ல புள்ளல” என மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே அவள் தலையை வருடிக் கொடுத்தான். அவளது இடது கரம் அவன் இடுப்பை வளைத்துக் கொண்டது.  

அவர்கள் அருகே தேம்பியப்படியே கையும் ஓடாமல் காலும் ஓடாமல் அமர்ந்திருந்த ஹேமா கட்டிக் கொண்டிருந்த இருவரையும் அதிர்ச்சியாய் பார்த்திருந்தாள்.  

‘டேய் இசை! உன் துடிப்பையும் அவ அணைப்பையும் பார்த்தா வெறும் நட்பா தெரியலையேடா!’ என நினைத்தவள் தொண்டையைக் கணைத்தாள்.

ஹேமாவின் சத்தத்தில் சுயம் பெற்ற ரஹ்மான், தன் இடுப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் மீனாட்சியின் கரத்தை எடுத்து விட்டான். அவள் அருகே இடம் விட்டு அமர்ந்தவன் ஹேமாவைப் பார்த்து,

“எப்படி விழுந்தா?” என கேட்டான்.

“அந்த படுபாவி பார்த்திபன் வந்து எங்க வழிய மறிச்சிக்கிட்டான்! அவனோட நாலு ப்ரெண்டுங்க என்னை சுத்திக்க, இவள அந்த எருமைமாடு ரவுண்ட் கட்டிருச்சு”

முகம் இறுகிப் போனது ரஹ்மானுக்கு. ஆத்திரம் கொப்புளித்துக் கொண்டு வந்தது. அதை இவர்களிடம் காட்டப் பிரியப்படாமல் தொண்டையை செறுமியவன்,

“என்ன பண்ணான் அவன்?” என மீனாட்சியைப் பார்த்துக் கேட்டான்.

தலையைக் குனிந்துக் கொண்டவள்,

“அவன்,’உனக்கு அந்த நாட்டுக்காரனத்தான்(மலாய்காரர்களை நாட்டுக்காரன் என நம்மவர்கள் அழைப்பார்கள்) புடிச்சிருக்கா? ஏன், எனக்கு என்ன குறைச்சல்? அவன விட நான் இன்னும் வெள்ளையா அழகா இருக்கேன்டி! என் கிட்ட என்ன இல்லைன்னு அவன் பின்னாடி சுத்திட்டு இருக்க நீ? அவன் கூட திங்க போறதும், யூனியயே சுத்தி வரதும் பார்க்கவே சகிக்கலடி! பெரிய இவன் மாதிரி, ‘மீனாட்சிய டிஸ்டர்ப் பண்ணாதீங்க’ன்னு என்னையே மெரட்டறான். எனக்கு கடைசி செமெஸ்டர், அதோட அந்த நாய் ப்ரோபெசருக்கெல்லாம் பெட் வெற! இவன் எதாச்சும் போட்டுக் குடுத்து என் படிப்புல பிரச்சனை வந்திரும்னுதான் ஒதுங்கிப் போனேன். ஆனா புலி பதுங்கறது பயந்து போய் இல்ல, பாயறதுக்குன்னு தெரியாம போச்சு உனக்கும் அந்த பரதேசிக்கும். இங்கிருந்து போறதுக்கு முன்ன என்னை அலட்சியப்படுத்தன உன்னை சும்மா விட்டுட்டுப் போவேன்னு நெனைச்சியா கன்னு? இப்ப நான் உன்னை வச்சி செய்யப் போறதையும் அந்த ரஹ்மானுகிட்ட போய் கம்ப்ளேன் பண்ணு செல்லாக்குட்டி’னு சொல்லி என்னை… என்னை நெஞ்சுல தொட வந்தான் ரஹ்மானு!” என சொன்னவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

ரத்தத்தைப் பாலாக மாற்றி தன் பிள்ளைகளுக்கு அன்னபூரணியாய் இருக்க பெண்ணெனும் தெய்வத்துக்கு கடவுள் அளித்த அட்சயப்பாத்திரம்தான் அவளது மார்புகள். அதை தொட்டு விடுவதால் அவள் கலங்கப் பட்டுப் போவாள், அவமானப்பட்டுப் போவாள் என அற்பமாக நினைக்கும் கேவலமான எண்ணம் கொண்ட பார்த்திபன் போன்ற சில மனித மிருகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவனைத் தடுத்து பட்டென அறைந்திருந்த மீனாட்சியைக் கோபத்தில் கீழே தள்ளி விட்டிருந்தான் அவன். சமயோசிதமாக சட்டென குரலெடுத்து தோலோங்(உதவி) என கத்திய ஹேமாவின் சத்ததில் கொஞ்சம் முன்பாக நடந்து சென்றுக் கொண்டிருந்த பெண்கள் கூட்டமாக இவர்களிடத்துக்கு விரைந்து வர, பார்த்திபனும் அவனது நண்பர்களும் பறந்து விட்டிருந்தார்கள்.

இதை கேட்டதும் பொறுமையான ரஹ்மானுக்குக் கூட ரத்தக்காயம் பார்க்க வேண்டும் எனும் வெறியே வந்தது. தன் மீனாம்மாவை தப்பாய் தொட வந்தான் எனும் விஷயத்தை இவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவனுடைய தேவதையவள்! அந்த தேவதையின் மீது சேற்றை வாரியிறைக்க அந்த பார்த்திபனுக்கு எவ்வளவு திண்ணக்கம் இருக்க வேண்டுமென நெஞ்சம் கொதித்து.

“அழுதுட்டு நிக்காம எதிர்த்து நின்னு அறைஞ்ச பாத்தியா, அங்க கெத்தா நின்னுட்டா எங்க ரௌடி மீனாம்மா! ஐ எம் சோ ப்ரவுட் ஆப் யூ!” என சொல்லி கண்ணீர் வடித்தவளை முதலில் சமாதானம் செய்தான் ரஹ்மான்.

அவனது வார்த்தைகளில் மெல்ல புன்னகை மலர்ந்தது அவள் இதழ்களில். சட்டென ஆட்களை உதவிக்கு அழைத்த ஹேமாவையும் பாராட்டினான் இவன். அவனது பாராட்டில் இரு பெண்களுக்கும் எதையோ சாதித்த உணர்வு. அதற்குள் காரை ஓட்டிக் கொண்டு வந்திருந்தான் லோகா. மீனாட்சியை மெல்ல நடத்திக் கொண்டு போய் பின் சீட்டில் அமர்த்தினான் ரஹ்மான். அவளோடு ஹேமாவும் அமர்ந்துக் கொண்டாள். நால்வரும் அந்த இரவு வேளையில் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்குப் பயணித்தனர்.

அவசரப் பிரிவுக்கு கொண்டு போய் இவர்களை இறக்கிய லோகா காரைப் பார்க் செய்ய எடுத்துப் போனான். மீனாட்சியின் கைப்பையில் இருந்து அவளது அடையாள அட்டையை வாங்கி கவுண்ட்டரில் ரஹ்மான் ரெஜிஸ்டர் செய்ய, கூட வந்த நர்ஸ்சோடு பெண்கள் இருவரும் உள்ளே சென்றனர். டூட்டி டாக்டர் மீனாட்சியை செக் செய்து, எக்ஸ்ரே எடுத்து கையில் எலும்பு லேசாக கோடு(க்ரேக்) விட்டிருப்பதாக சொல்லி, தானாகவே கூடி விட சிமெண்டு கட்டுப் போட்டு விட்டார். மற்ற காயங்களையும் கழுவி மருந்திட்டுக் கட்டி விட்டார். இரண்டு வாரங்களில் கட்டை கலட்டி விடலாம் என சொல்லியவர் அடுத்த நோயாளியைப் பார்க்கப் போனார். நர்ஸ் மருந்து சீட்டு எழுதி தர, ரஹ்மான் அங்கிருக்கும் ஃபார்மசிக்குப் போய் அதை வாங்கி வந்தான்.

எமர்ஜென்சி பிரிவின் வெளி வராண்டா நாற்காலியில் ஹேமாவின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் மீனாட்சி. ஹேமாவின் அருகே அமர்ந்திருந்தான் லோகா. ரஹ்மான் வரவும் கிளம்பினார்கள் நால்வரும்.

“லோகா, எங்கயாச்சும் மாமாக்(இந்து முஸ்லில் ரெஸ்டாரண்ட்-இங்கெ 24 மணி நேரமும் திறந்திருக்கும்) கடையில நிறுத்து. மீனாம்மாவ சாப்பிட வச்சு, வலி மருந்துக் குடுக்கலாம்” என்றான் ரஹ்மான்.

கடையின் முன் பார்க்கிங் போட்ட லோகா,

“வாங்க” என அழைத்தான்.

ரொம்பவே சோர்ந்துப் போன மீனாட்சி, வரவில்லை என தலையசைத்தாள்.

“நீ போய் பேக் பண்ணிட்டு அப்படியே வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வா லோகா” என ரஹ்மான் சொல்ல,

“நானும் போறேன் இசை” என்றாள் ஹேமா.

இவன் தலையசைக்க, கீழே இறங்கிக் கொண்டாள் ஹேமா. அவர்கள் இருவர் போனதும், பின்னால் வந்து இடைவெளி விட்டு அமர்ந்துக் கொண்டான் ரஹ்மான். மீனாட்சியோ நகர்ந்துப் போய் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். வலியில் இருப்பவளை தள்ளி அமர்த்த மனம் வராமல், தன் தோள் கொடுத்தான் தோழன்.

லோகாவோ,

“என்ன என் வாலப் புடிச்சிட்டே வர! அவ்ளோ பாசமா என் மேல?” என கேட்டான் ஹேமாவை.

“நீ கொரிலா கொரங்கு, உன் வாலப் புடிச்சிட்டு நாங்க பின்னாடியே வரோம்! போடா போடா!” எனறவள் ரெஸ்டாரண்டில் டாய்லட் சைன் போட்டிருந்த இடத்தை நோக்கி விரைந்தாள்.

“ச்சே, செம்ம பல்பு! அவசரத்துக்கு வந்தவள ஆசைக்கு வந்ததா நெனைச்சிட்டோமே! ஷேம் ஷேம் பப்பி ஷேம்! இந்த சோடாப்புட்டி நம்மள என்னமோ பண்ணறா! வேணாண்டா லோகா, வாழ்நாள் கோமாலாம் உனக்கு சரிப்பட்டு வராது” என முனகிக் கொண்டே உணவு ஆர்டர் செய்யப் போனான் இவன்.

இருவரும் திரும்பி வர, ரஹ்மானின் தோள் வளைவில் துயில் கொண்டிருந்தாள் மீனாட்சி. உணவு பொட்டலத்தை ரஹ்மானிடம் கொடுத்த ஹேமா, லோகாவுடன் முன்னே அமர்ந்துக் கொண்டாள். மெல்ல மீனாட்சியை உசுப்பி எழுப்பிய ரஹ்மான் வலியில் சிணுங்கியவளை கெஞ்சி சமாதானப்படுத்தி கொஞ்சமாய் ப்ரைட் ரைசை கரண்டியால் ஊட்டி விட்டான். அதன் பிறகு வலி மாத்திரையைப் பிரித்துக் கொடுத்து, தண்ணீரையும் புகட்டி விட்டான். முன்னால் அமர்ந்திருந்த இருவரும் அமைதியாய் பின்னால் நடப்பதைக் கவனித்தப்படி வந்தனர். அவர்கள் இருவர்தான் இவர்கள் இருவரின் நேசத்துக்கு மௌன சாட்சி.

ஞாயிறு வீட்டுக்கு செல்வதால், இப்பொழுதே இதை சொல்லி வீட்டில் உள்ளவர்களை பீதியடைய வைக்க வேண்டாம் என சொல்லி விட்டாள் மீனாட்சி. மறுநாள் முழுக்க, மருந்தின் உதவியால் தூங்கிக் கொண்டே இருந்தாள் அவள். அன்று வீட்டுக்கு செல்ல வேண்டிய ஹேமா, மறுநாள் வருவதாக பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு தன் அம்மனைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டாள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஹேமாவுக்குப் போன் செய்து மீனாட்சியைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தான் ரஹ்மான். இசையின் இம்சையில் நொந்துப் போனாள் அம்மனின் ஜண்டா.

பக்கத்து ரூம் பெண்கள், ஆண்கள் ஹாஸ்டலில் ஒருத்தனை விடிகாலை வேளையில் ரூம் புகுந்து யாரோ இரண்டு கையையும் உடைத்திருக்கிறார்கள் என பேசிக் கொண்டதை, எழுந்து அமர்ந்து மாலை தேநீர் அருந்திக் கொண்டிருந்த மீனாட்சியிடம் பகிர்ந்துக் கொண்டாள் ஹேமா.

“அந்த யாரோ, யாருன்னு அனுமானிக்க முடியுதா உனக்கு?” என கேட்டாள் இவள்.

தோழியின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அமைதியாய் படுத்துக் கொண்டாள் மீனாட்சி. காலையில் இருந்தே ஏதோ யோசனையில் அமைதியாகவே இருக்கும் தோழியை விசித்திரமாகப் பார்த்தாள் ஹேமா.

“என்ன அம்மன்? ரொம்ப அமைதியா இருக்க? கை வலிக்குதா?”

இல்லையென மெல்லத் தலையாட்டிய மீனாட்சி விழிகளை மூடிக் கொண்டாள். பெருமூச்சொன்றை விட்ட ஹேமா, அதற்கு மேல் அமைதியாகி விட்டாள்.

மறுநாள் ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்த ரஹ்மானிடமும் அதிகம் பேசவில்லை மீனாட்சி. அவன் வலிக்கிறதா என விசாரிக்க, இல்லையென தலையை மட்டும் ஆட்டினாள்.

பினாங்குக்கு செல்லும் ரயில் வந்து விட்டதாக அறிவிப்பு வர, மீனாட்சியை உசுப்பினான் இவன். கண் விழித்தவள், மெல்ல எழுந்து நின்றாள். அவளது பயணப் பொதியை எடுத்துக் கொண்டவன், அவளது கைப்பற்றி ரயில் பெட்டிக்கு அழைத்து சென்றான். அவளை அமர வைத்து விட்டு, பேக்கை அவள் கால் கீழே வைத்தவன் அவள் அருகிலேயே அமர்ந்துக் கொண்டான். இருக்கையில் சாய்ந்து அமர்ந்துக் கொண்ட மீனாட்சி, கண்களை மூடிக் கொண்டாள். ரயில் புறப்படப் போகும் அறிவிப்பு வந்தும் இவன் எழுந்து செல்லாததால், கண்களைத் திறந்தவள் கேள்வியாய் அவனை நோக்கினாள்.

“உன்னை இந்த நிலமைல எப்படி தனியா ட்ராவல் செய்ய விடுவேன்? பினாங்குல விட்டுட்டு திரும்ப வந்துடறேன்” என்றான் ரஹ்மான்.

முகம் பளிச்சென மலர்ந்துப் போக,

“டிக்கேட்?” என கேட்டாள் இவள்.

“நேத்தே வாங்கிட்டேன்!”

அவனது பேக்பேக்கை எடுத்து கீழே வைத்து விட்டு வசதியாக சாய்ந்து அமர்ந்தான் இவன். தனது இடது கையை அவன் வலது கைக்குள் விட்டுப் பிடித்துக் கொண்டவள், சுகமாய் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். அவளது கையை எடுத்து விட்டவன்,

“இப்படிலாம் சாஞ்சிக்கறது, ஒட்டிக்கறதுலாம் தப்பு மீனாம்மா! நேத்து உனக்கு உடம்பு முடியல! அதனால நீ சாஞ்சுக்க தோள் கொடுத்தேன். அதுக்குன்னு இப்படி அடிக்கடி சாய்ச்சிக்க முடியாது! நீ இன்னும் சின்னப்புள்ள இல்ல! புரியுதா?” என மென்மையாய் அறிவுறுத்தினான்.

அவனை நிமிர்ந்துப் பார்த்தவளின் பெரிய கண்கள் கலங்கி இருந்தன.

“வலிக்குது ரஹ்மானு!”

அவள் அழுதால் தாங்குமா இவனுக்கு? சட்டென சரிந்து அமர்ந்தவன், மென்மையாய் அவளைத் தன் தோள் சாய்த்துக் கொண்டான்.

“தூங்கு மீனாம்மா! வலி மாத்திரை போட்டிருக்கல்ல, சீக்கிரம் வலி குறைஞ்சுடும்!” என ஆறுதலாய் சொன்னான்.

அந்தப் பயணம் முழுக்க வலிக்கிறது என சொல்லி சொல்லியே அவனை உணவு ஊட்ட வைத்து, டீ வாங்கிக் கொடுக்க வைத்து, அவன் தோளை மெத்தையாக்கி துயின்று, அவனைப் பாட வைத்து என ரஹ்மானை ஒரு வழியாக்கினாள் மீனாட்சி.

வெளியே குளங்களும், குட்டைகளும், ஆறுகளும், பச்சை பசேலென மரங்களும் ரயிலின் ஓட்டத்தில் கடந்துப் போக, அதையெல்லாம் ரசித்தப்படி, அவன் அருகாமையில் வரும் அத்தர் வாசத்தை முகர்ந்தப்படி, அவன் மெல்லிய குரலில் பாடிய,

“ஆகாச வாணி நீயே என் ராணி

சோஜா சோஜா சோஜா”வை மெய் மறந்துக் கேட்டப்படி மனநிறைவோடு ஐந்து மணி நேர பயணத்தை சுகமாய் கழித்தாள் மீனாட்சி.   

பினாங் பட்டர்வெர்த் ரயில் நிலையத்தில் ரயில் நிற்க, மீனாட்சியின் பேக்கை எடுத்துக் கொண்டவன், மெல்ல அவள் கைப்பற்றி நடத்தி சென்று ரயிலில் இருந்து இறங்க உதவினான். அங்கே தங்கையின் வருகைக்காக காத்திருந்த ஆறுமுகத்துக்கு, அவள் யாரோ ஒரு ஆண் கையைப் பிடித்து இறங்குவதைப் பார்த்து அவ்வளவு கோபம் வந்தது. அவர்கள் அருகே விரைந்து வந்தவன், ரஹ்மானை பார்த்தவுடனேயே அடையாளம் கண்டுக் கொண்டான். ரஹ்மான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அழகு இவனைப் பற்றி மகனிடம் சொல்லியிருக்கவில்லை.

உயிர் தோழனைப் பார்த்தவனுக்கு தங்கை கையில் கட்டுடன் நிற்பது தெரிந்தாலும் கருத்தில் பதியவில்லை. பால்ய சிநேகிதர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி அப்படியே நின்றனர்.

‘பளார்!!!!!!!!’

 

(ஜீவன் துடிக்கும்…)

 

(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்டவர்களுக்கு நன்றி.. அடுத்த எபியில் சந்திக்கும் வரை லவ் யூ ஆல்)

Leave a Reply

error: Content is protected !!