Jeevan Neeyamma–EPI 18

171916099_840757923178210_3424615682123961255_n-55548ae7

Jeevan Neeyamma–EPI 18

அத்தியாயம் 18

சரக்கடித்தால்தான் போதை ஏறும் என்பது சுத்தப் பொய்! நீ சிரித்து வைத்தாலே எனக்கு போதை ஏறும் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

“அடியே குட்டிக் கழுதை! ஒரு வா(வாய்) வாங்கிக்கடி! என் ராசாத்தில்ல!” என மீனாட்சியைத் தொல்லைப் பண்ணிக் கொண்டிருந்தார் ராக்கு.

காதில் வைத்திருந்த வெள்ளை நிற லேண்ட்லைன் போனின் ரிசீவரை கோபத்துடன் அதன் தாங்கியில் வைத்தாள் மீனாட்சி.

“எனக்குத்தான் பசிக்கலன்னு தலைப்பாடா அடிச்சிக்கிறேன்ல, இன்னும் எதுக்குப் பாடா படுத்தி எடுக்கறீங்க? இந்த வீட்டுல மனுஷனுக்கு நிம்மதின்னு ஒன்னு இருக்கா?” என குரலெடுத்துக் கத்தியவளுக்கு கண்கள் சட்டென கலங்க தனது அறைக்குள் மடமடவென நுழைந்துக் கொண்டாள்.

“அடி ஆத்தீ! என்னடி உன் மவ இந்த சிலுப்பு சிலிப்பிட்டுப் போறா? வயித்த வலின்னு காலைல இருந்து பட்டினி கிடக்கறாளேன்னு, இடுப்பு செத்தவ நானே அடுப்புல நின்னு ரசம் சாதம் செஞ்சு ஊட்ட வந்தா மட்டு மருவாதை இல்லாம கத்திட்டுப் போறா! இந்தப் பொட்டைக் கழுதைக்கு இம்புட்டு ஏத்தம் ஆவாதுத்தா!” என கையில் பிடித்திருந்த தட்டை தரையில் நங்கென வைத்தார் அவர்.

காலையில் இருந்து யாருக்கோ பல தடவை போன் பேச முயன்றுக் கொண்டிருந்த மகளை கண்டும் காணாமல் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் ஈஸ்வரி. இப்பொழுதும் கண் கலங்கியதை தங்களிடம் மறைக்க சட்டென ரூமுக்குள் நுழைந்துக் கதவடைத்துக் கொண்டவளை இறுக்கத்துடன் பார்த்திருந்தார்.

“பசிச்சா அவளே போட்டு சாப்பிடுவா! நீங்க வந்து முதல்ல சாப்பிடுங்க!”

“புள்ள பட்டினியா கிடக்கறப்பா எனக்கு எப்படித்தா சாப்பாடு இறங்கும்? மொகமே சோர்ந்து போச்சு என் தங்கத்துக்கு!” என்ற ராக்கு மீனாட்சியின் ரூம் கதவையேப் பார்த்தார்.

அது சிறிய வீடுதானே! வீட்டின் எந்த மூலையில் இருந்து பேசினாலும் கண்டிப்பாக அடுத்தவருக்கு கேட்கும். ரூமில் இருந்த இவளுக்கும் வெளியே தாயும் அப்பத்தாவும் பேசிக் கொண்டிருந்தது கேட்கத்தான் செய்தது. கண்களைத் அழுந்த துடைத்துக் கொண்டவள், கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தாள். அப்பத்தா இன்னும் சாதத் தட்டோடு தரையில் காலை நீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் அருகே போய் அமர்ந்தவள், ஒன்றும் பேசாமல் வாயை மட்டும் ஆவென திறந்தாள். மடமடவென பேத்திக்கு ஊட்டி விட்டார் ராக்கு. எங்கே நிறுத்தினால் போதுமென்று விடுவாளோ என பயந்து அவசரமாய் அள்ளித் திணித்தார். டம்ளரில் நீர் கொண்டு வந்து அவர்கள் அருகே வைத்தார் ஈஸ்வரி.

அவரது பார்வை அழுதழுது சிவந்திருந்த மகளின் கண்களையும், சிவந்துக் கிடந்த மூக்கின் நுனியையும் ஆராய்ச்சியாய் அளவிட்டது. அந்த நேரம்தான் வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்தார் அழகு. ஊட்டிக் கொண்டிருந்த தன் அம்மாவையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தன் மகளையும் பார்த்தவருக்கு தானாகவே புன்னகை அரும்பியது.

தகப்பனைப் பார்த்ததும் முகம் சட்டென மலர்ந்தது இவளுக்கு. எழுந்துப் போய் அவர் கையைப் பற்றிக் கொண்டாள் மீனாட்சி.

“நீ யூனிசிட்டிக்குப் போனதுல இருந்து வீடே வெறிச்சோடிக் கிடந்துச்சு கண்ணு! வீட்டுக்குள்ள நான் வந்ததும், இப்படி ஓடி வந்து வரவேற்க ஆளில்லாம எவ்வளவு தவிச்சுப் போனேன் தெரியுமா?” என மகளின் தாடையைப் பற்றி கொஞ்சியபடியே சொன்னார் அழகு.

“ஆமாய்யா! உன் மக குண்டு பல்பு, அவ வந்ததும் வெறிச்சோடிக் கெடந்த வீடு வெளிச்சமாகிருச்சு!” என நொடித்துக் கொண்டார் ராக்கு.

“கெழவிக்கு குசும்ப பாருங்கப்பா, சந்தடி சாக்குல என்னைக் குண்டுன்னு சொல்லுது!” என சிணுங்கிய மகளை,

“நீ குண்டுலாம் இல்ல பாப்பா! எங்க வீட்டு பூச்செண்டு” என சமாதானப்படுத்தினார் அழகு.

அப்பாவையும் மகளையும் ஒரு பார்வைப் பார்த்த ஈஸ்வரி,

“குளிச்சிட்டு வாங்க! டீ போடறேன்” என்றார்.

“அப்பாக்கு நான் டீ போடறேன்மா” என கிச்சனுக்கு நகர்ந்தாள் மீனாட்சி.

ஒற்றைக் கையை வைத்துக் கொண்டே தன் தகப்பனுக்குப் பிடித்த விதமாய் தேநீர் கலந்தாள் மகள். வேலை முடிந்து ஏழு மணிக்கு மேல் வரும் அழகுவுக்கு முதலில் தேநீர் வேண்டும். அதன் பிறகுதான் இரவு உணவு சாப்பிடுவார்.

“ஏய்யா, ரெண்டு கோடாலி(சரக்கு பிராண்ட்) போட்ட பாட்டிலு வாங்கிட்டு வந்தியா? வீட்டுல ஸ்டாக்கு முடிஞ்சுப் போச்சுய்யா!” என மகனை விசாரித்தார் ராக்கு.

“வாங்கிட்டு வந்திருக்கேன் ஆத்தா! ஈசு, இந்தா எடுத்து உள்ள வை பாட்டில” என தன் தாய்க்கு வாங்கி வந்த சரக்கு பாட்டிலை மனைவியிடம் கொடுத்து விட்டு குளிக்கப் போனார் அவர்.

“அது என்னமோ போ, இந்த பாட்டிலு சரக்கெல்லாம் நம்மூரு கள்ளுக்கு ஈடாகாது! இத ரெண்டு கலுப்பு(கல்ப்) அடிச்சாலும் பச்சைத் தண்ணிய ஊத்திக்கிட்ட மாதிரி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியமாட்டுது. இந்த சனியன குடிக்கலைனா தூக்கம் வந்து தொலைவேனானு படுத்துது” என முனகிக் கொண்டே கையை கீழே ஊனி எழுந்தார் ராக்கு.

“அப்பத்தா! மூனு நாளா தூக்கம் வரமாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணுது! ரெண்டு கல்ப்பு எனக்கும் ஊத்திக் குடுக்கறியா?” என மெல்லிய குரலில் தன் அப்பத்தாவை வம்பிழுத்தாள் மீனாட்சி.

“எடு அந்த தொடப்பக்கட்டைய!” என அவர் கையை ஓங்க, கலகலவென சிரித்தாள் இவள்.

சிரிக்கும் மகளையே லேசாய் கண் கலங்க பார்த்திருந்தார் ஈஸ்வரி.

“கடந்து வந்திடுவா!” என மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டார் அவர்.

அழகு குளித்து விட்டு ஹாலின் ஒரு புறம் சின்னதாய் அமைத்து வைத்திருக்கும் பூஜை மேடை அருகே நின்று மந்திரங்கள் படித்து விட்டு திருநீறு இட்டுக் கொண்டார். எப்பொழுதும் போல வீட்டில் இருந்த அனைவருக்கும் திருநீறு வைத்து விட்டு நாற்காலியில் அமர்ந்தார். அவருக்கு தேநீர் கொடுத்த மீனாட்சி அவரது காலடியில் அமர்ந்துக் கொண்டாள். அப்பாவின் காலைத் தூக்கித் தன் மடியில் வைத்து ஒற்றைக் கையால் அழுத்திக் கொடுத்தவள், அன்றைய தினம் எப்படி போனது என விசாரித்தாள். பேசிக் கொண்டிருந்த அவர்கள் இருவரின் அருகே வந்து அமர்ந்தார் ஈஸ்வரி.

“அப்பா, உங்க ஆத்தா போட்ட டீ, உங்க ஈசு போடற டீ, நான் போட்டுக் குடுக்கற டீ, இதுல எது நல்லா இருக்கு?” என கேட்டாள் மீனாட்சி.

“என் மீனுக்குட்டி போடற டீ தான் நல்லா இருக்கு! என் மக எது செஞ்சு குடுத்தாலும் நல்லாத்தான் இருக்கும்” என புன்னகையுடன் சொன்னார் அவர்.

“அதானே பார்த்தேன்! கட்டன பொண்டாட்டிய விட, பெத்த அம்மாவ விட, பெத்துக்கிட்ட மகத்தான் பெருசு இந்த ஆம்பளைங்களுக்கு! பாத்துக்கடி நான் பெத்த மகளே, உங்கப்பா உன் மேல எவ்ளோ பாசத்த வச்சிருக்காருன்னு! நீ பொறந்ததுல இருந்து கண்ணு, ராசாத்தி, பொண்ணுன்னு உருகி உருகி வளக்கறாரு! நாள பின்ன உங்கப்பா பார்த்து வைக்கற பையனைக் கட்டிக்கிட்டு குடும்பம் குழந்தைன்னு ஆனாலும், இந்த மனுஷன மறந்துப்புடாதே!” என மகள் முகத்தைப் பார்த்தப்படியே சொன்னார் ஈசு.

உங்கப்பா பார்த்து வைக்கும் பையன் எனும் பதத்தில் சட்டென நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தாள் இவள். அவர் முகம் சாதாரணமாகத்தான் இருந்தது.

“ஏய்யா சாப்பிடலாம் வாய்யா! இன்னிக்கு ஆறு லேட்டாத்தான் வருவானாம்! ஓட்டி(ஓவர்டைம்) இருக்குன்னு காலையிலே சொல்லிட்டுத்தான் போனான்” என்றவாறு எழுந்தார் ஈஸ்வரி.

மற்ற மூவரும் சாப்பிட அமரும்போது, பின் வாசலில் இருந்து உள்ளே நுழைந்தான் முருகன்.

“அம்மா! என்னம்மா சமையல்?”

“ஏன்டா உன் வூட்டு மவராணி இன்னிக்கும் உலை வைக்கலியா?” என நக்கலாகக் கேட்டார் ராக்கு.

“நேத்து வச்ச சாம்பார சூடு பண்ணி குடுக்கறா அப்பத்தா! உழைச்சுக் களைச்சு வீட்டுக்கு வரவனுக்கு இப்படி குடுத்தா கடுப்பாகுமா ஆகாதா?” என கடுகடுத்தவன் அவனாகவே தட்டெடுத்துக் கொண்டு அவர்கள் அருகே அமர்ந்தான்.

அண்ணனுக்கும் சாதத்தைப் பரிமாறினாள் மீனாட்சி.

“அவளும் வேலைக்குப் போய் களைச்சித்தான்டா வரா, பெரியவனே! அவசரத்துக்கு எதாச்சும் ஆக்கி வச்சா வாய மூடிட்டு சாப்பிடனும்! சின்னப்பையன் மாதிரி ஆத்தா வீட்டுக்கு வந்து தட்டத் தூக்கக் கூடாது” என்ற ஈஸ்வரி,

“அண்ணாவுக்கு மோர் மொளகாவையும் பொரிச்சக் கருவாட்டையும் வை மீனாட்சி” என சொன்னார்.  

‘அட்வைஸ்சும் பண்ணுவாங்க சோறும் போட்டுக் குடுப்பாங்க! இந்த அம்மாங்களே இப்படித்தான்!’ என மனதில் பேசிக் கொண்டாள் மீனாட்சி.

“சாப்பிட்டு ராதிகாவுக்கும் கொஞ்சம் குழம்பு எடுத்துப் போடா!” என மருமகளைத் தாங்கிப் பிடிக்கவும் தவறவில்லை ஈஸ்வரி.

காலையில் மகனை இங்கே கொண்டு வந்து விட்டு விட்டு கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போவார்கள். மாலையில் வேலை முடிந்து வந்து பையனைத் தூக்கிச் செல்வாள் ராதிகா. ஈஸ்வரி இங்கேயே சாப்பிட சொன்னாலும், ராக்குவின் நக்கல் பேச்சுக்கு பயந்து வேண்டாமென சொல்லிவிடுவாள் ராதிகா. ஆனால் முருகன் அடிக்கடி தாய் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுப் போவான்.

“மீனாட்சி, வீட்டுக்குப் போயிட்டு ரஹ்மானு போன் அடிச்சானா? ஆறு கிட்ட கேக்கலாம்னா அவன் வேலையிடமே கதின்னு கிடக்கறான்” என கேட்டான் முருகன்.

“இல்லண்ணா, போன் பண்ணல. நான் பண்ணதுக்கும் எடுக்கல!” என்றாள் மீனாட்சி.

“லீவுன்னா காபி கம்பேனிக்கு போய் அவங்க அப்பா வேலைலாம் பார்ப்பேன்னு சொன்னான், அதனால பிசியா இருப்பான். நம்மள வீட்டுக்கு வர சொல்லி அழைச்சிருந்தான்! அவனுக்கு கல்யாணம் காட்சின்னா ஒரு எட்டுப் போகனும்! அப்படியே நம்ம வாழ்ந்த இடத்தல்லாம் பார்த்துட்டு வரனும்” என சொல்லிக் கொண்டே தட்டை வழித்தான் முருகன்.

“அவங்க அம்மாவுக்கு வேற உடம்பு சுகமில்லாம இருக்கே, சீக்கிரம் கல்யாணம் வச்சாலும் வைப்பாங்க! அப்துல்லா ஒரு தடவைப் போன் பேசறப்ப, ரஹ்மானுக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கறதா சொன்னாரு. இன்னும் ஒன்னும் சரியா அமையலயாம்” என்றார் அழகு.

“பணம் இருக்கு, நல்ல குணமும் இருக்கு அந்தப் பையனுக்கு. அவங்க இனத்துல நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டுல்ல பொண்ணு தர முன் வருவாங்க! அவரு பொண்டாட்டி அமீனா மாதிரியே சமயம், சம்பிரதாயத்த எல்லாம் கட்டிக் காக்கற மலாய் பொண்ணா வலை வீசித் தேடறாரு போல! என்ன இருந்தாலும் உசுரா வளத்த ஒத்தைப் பையன், அவன் வாழ்க்கை எப்படிலாம் இருக்கனும்னு எவ்ளோ கனவு கண்டு வச்சிருப்பாரு!” என சொல்லியபடியே மகளை ஓரக்கண்ணால் பார்த்தார் ஈஸ்வரி.

அவ்வளவு நேரம் அமர்ந்துப் பரிமாறிக் கொண்டிருந்தவள், படக்கென எழுந்துக் கொண்டாள்.

“என்னம்மா?”

“கை வலிக்குதுப்பா! நான் கொஞ்சம் நேரம் ரூம்ல இருக்கேன்” என மடமடவென நடந்துவிட்டாள்.

ரூமின் உள்ளே தன் கட்டிலில் படுத்துக் கொண்டவளுக்கு அழுகை வெடித்து வரப் பார்த்தது. தன் போர்வையை எடுத்து வாயில் வைத்து அழுத்திக் கொண்டாள். எல்லோரும் இருக்கும் அந்த சின்ன வீட்டில் வாய் விட்டு அழக் கூட முடியவில்லை அவளால். கண்ணீல் அது பாட்டுக்கு நீர் நிற்காமல் வழிந்தது. வழிய வழிய துடைத்துக் கொண்டாள். எந்நேரமும் யார் வேண்டுமானாலும் ரூமுக்குள் வருவார்கள். அவர்கள் ஏன் அழுகிறாய் என கேட்டால் என்னவென பதில் சொல்வாள்! நெஞ்சம் வெடித்து விடும் போல் வலித்தது இவளுக்கு. ரஹ்மானின் அமைதி இவளைக் கொல்லாமல் கொன்றது.

“ரஹ்மானு! எனக்கு நீ வேணும் ரஹ்மானு” என மெல்லிய குரலில் சொல்லியப்படியே கேவினாள் மீனாட்சி.

மெத்தையில் இருந்த டோரேமோன் பொம்மையைக் கை நீட்டி எடுத்தவள், இறுக்கி அணைத்துக் கொண்டாள் அதை.

ரயில் நிலையத்தில் தனது காதலை சொல்லிவிட்டு எதிர்ப்பார்ப்புடன் ரஹ்மானின் முகத்தையே பார்த்திருந்தாள் மீனாட்சி. முதலில் அதிர்ந்து, மெல்ல மலர்ந்து, பின் கசங்கிப் போனது அவன் வதனம். தலை முடியை அழுந்தக் கோதியவன், கண்ணை இறுக மூடித் திறந்தான்.

செக்கச் செவேலென சிவந்திருந்த அவன் கண்களைப் பார்த்தவளுக்கு நெஞ்சம் துணுக்குற்றது.

“ரஹ்மானு!”

வலது கையைத் தூக்கி பேசாதே என்பது போல சைகை காட்டினான் ரஹ்மான்.

“இல்ல..ரஹ்மானு..”

“பேசாதேன்னு சொன்னேன்ல!” அவன் குரலில் அப்படி ஒரு ரௌத்திரம்.

இந்தப் புதிய ரஹ்மானைப் பார்த்து பயந்து இரண்டடி பின்னால் நகர்ந்தாள் மீனாட்சி.

‘இவன் உன் ரஹ்மானு! இவன் கிட்ட உனக்கு என்ன பயம்’ என மனம் தைரியம் கொடுக்க மூன்றடி முன்னால் வைத்து அவனை நெருங்கி நின்றாள்.

அவள் பயந்துப் பின்னால் போனதும், பின் திமிராய், கெத்தாய் தன்னை நெருங்கி வந்ததையும் பார்த்தவனுக்கு கோபம் அப்படியே வடிந்துப் போனது. பெருமூச்சுடன் மெல்லிய குரலில்

“இது நடக்காது மீனாம்மா! நட்புக்குள்ள காதல் கத்தரிக்கைலாம் போட்டு குழப்பாதே! என்னைக்குமே நீ எனக்கு தோழி மட்டும்தான்” என குழந்தைக்கு சொல்வதைப் போல சொன்னான்.

“தோழி தோழின்னு சொல்லாதே ரஹ்மானு! எனக்கு கோவமாய் வருது! நமக்குள்ள இருந்த நட்புன்ற கோட்டத் தாண்டி காதல்ன்ற வட்டத்துக்குள்ள நான் வந்து பல நாளாச்சு. இனிமே உன்னை வெறும் தோழனா என்னால பார்க்க முடியாது ரஹ்மானு. உன் கையைப் புடிச்சுக்கனும், தோளுல சாஞ்சுக்கனும், இறுக்கிக் கட்டிக்கனும், விடிய விடிய பேசிட்டே இருக்கனும், உன் கழுத்தடியில வாசம் புடிக்கனும், இன்னும் என்னென்னவோ தோணுது எனக்கு! இந்தக் கர்மம் புடிச்சக் காதல் என்னைப் பாடாப்படுத்துது ரஹ்மானு. புரிஞ்சுக்கோ ப்ளிஸ்! எனக்கு வேணும், நீ வேணும்! ஐ லவ் யூ”

“பைத்தியம் மாதிரி உளறாதடி! காதலாம், கர்மமாம், கத்திரிக்காயாம்! உனக்கு என் மேல வந்தது காதல் இல்ல மீனாம்மா! நீ கேட்டத தட்டாம வாங்கித் தரேன்ல, இன்னொருத்தி என் வாழ்க்கையில வந்துட்டா அதெல்லாம் கிடைக்காதுன்ற பயம் உனக்கு. நீ சொன்னத அச்சுப் பிசகாம நடத்தித் தரேன்ல, வேறொருத்தி என் வாழ்க்கையில நுழைஞ்சிட்டா அதெல்லாம் நடக்காதுன்ற அச்சம் உனக்கு. உனக்கு நேர்ந்து விட்ட அடிமை மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்டறேன்ல, எனக்குன்னு ஒருத்தி வந்துட்டா இதெல்லாம் கிடைக்காதுன்ற பயம் உனக்கு. இதுக்குப் பேர் காதல் இல்ல மீனாம்மா, பொசெசிவ்நெஸ்! நட்புன்ற கோட்டுல நின்னுட்டே உனக்கு எல்லாத்தையும் நான் செய்வேன்! அதை தாண்டி காதல்ன்ற வட்டத்துக்குள்ள வந்துட்டேன் ரஹ்மானுனு சொல்லி காதலையும் என்னையும் அசிங்கப்படுத்தாதே!”

சடசடவென கண்ணில் மழை இறங்கியது இவளுக்கு.

“முதல்ல அழறத நிறுத்து!”

“நான் அழுவேன்! என் கண்ணு என் கண்ணீர் நான் அழுவேன்!” என உதடு துடிக்க சொன்னவளை அமைதியாகப் பார்த்தவன், அவசரமாக கைகள் இரண்டையும் பாண்ட் பாக்கேட்டில் நுழைத்துக் கொண்டான்.

“நானே வந்து சொல்லவும் என் காதல் உனக்கு கேவலமாப் போச்சுல்ல! என் நெஞ்சுக்குள்ள அழகா பூத்துக் குலுங்கன காதலுக்கு பொசெசிவ்நெஸ்னு பேரு வேற வச்சிட்டல்ல! போடா போ! இந்த மீனாட்சிக்கு நீயும் வேணா உன் காதலும் வேணா” என திரும்பிப் பார்க்காமல் இரெண்டெட்டு நடந்தவள், திரும்பி ஓடி வந்து தன் ஒற்றைக் கையால் அவனது கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

“நான் ஒத்துக்கறேன், உன் மேல பொசெசிவ்நெஸ் ரொம்ப இருக்குன்னு ஒத்துக்கறேன்! ஆனா அது காதல்னால வந்த உரிமை உணர்வு ரஹ்மானு! இது ஏன் உனக்குப் புரியல? இனிமே உன் கிட்ட இது வேணும் அது வேணும்னு கேட்க மாட்டேன்! நீ எனக்கு எதுவும் செய்ய வேணா! ஆனா காதலிக்கறேன்னு மட்டும் சொல்லு ரஹ்மானு! எனக்கு நீ வேணும்” என்றவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

மென்மையாய் அவள் கையைத் தன் கையில் இருந்துப் பிரித்தெடுத்தவன்,

“எப்போ என்னோட பரிசுத்தமான நட்ப காதல்னு குழப்பியடிச்சியோ, இனிமே நமக்கு நடுவுல அந்த நட்பு கூட வேணாம் மீனாட்சி அம்மன்” என மெல்லிய குரலில் உறுதியாக, இறுதியாக சொன்னான்.

தேம்பி தேம்பி அவள் அழுதது கூட அவனைப் பாதிக்கவில்லை. மீனாம்மாவின் கண்ணீரெனும் ஆயுதம் வலுவிழந்துப் போயிருந்தது.

அவர்களை நெருங்கிய ஆறு,

“என்ன பாப்பா இப்படி அழற?” என கேட்டான் தங்கையை.

“கை ரொம்ப வலிக்குதாம்! சீக்கிரம் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ ஆறு”

“பேசாம வீட்டுலயே இருந்திருக்க வேண்டியதுதானே! எல்லாத்துக்கும் பிடிவாதம்! எல்லா நேரமும் பிடிவாதம் ஜெயிக்காது பாப்பா” என இவன் சொல்ல, இன்னும் அழுகை கூடியது அவளுக்கு.

“கூட்டிட்டுப் போடா!” என நண்பனைப் பார்த்துக் கத்தியவன், ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.

“இப்ப இவன் எதுக்கு டென்ஷன் ஆகறான்!” என முணுமுணுத்துக் கொண்டே தங்கையை அழைத்துக் கொண்டு கிளம்பினான் ஆறு.

அவள் திரும்பிப் பார்த்துக் கொண்டே போக, இவன் அவள் பக்கமே திரும்பவில்லை.

வீட்டிற்கு திரும்பி வந்தவளுக்கு அழக் கூட தனிமைக் கிட்டவில்லை. குளிக்கும் நேரம் பாத்ரூமில் ஒரு மூச்சு அழுதாள். மனம் கேட்காமல் ரஹ்மானின் கைத்தொலைபேசிக்கு முயன்றப்படியே இருந்தாள். அவன் போனை எடுக்கவேயில்லை. முயன்று முயன்று அலுத்துப் போனாள் பேதை. சோகத்தில் உணவு கூட இறங்கவில்லை. வயிற்று வலி என சொல்லியவள் பட்டினியாகக் கிடந்தாள்.

டோரேமோன் பொம்மையைக் கட்டியபடியே படுத்திருந்தவள், எல்லோரும் தூங்கும் வரை பொறுத்திருந்தாள். அவள் அருகே ராக்கு படுத்திருக்க, அவரைத் தாண்டி மெல்ல ரூமை விட்டு வெளியே வந்தாள் மீனாட்சி. ஹாலில் ஆறு குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனது சிமேன்ஸ் பிராண்ட் கைத்தொலைபேசி மேசை மேல் கிடந்தது. சத்தமில்லாமல் அதை எடுத்துக் கொண்டவள், மெல்ல பாத்ரூமுக்குப் போனாள். தண்ணீரை திறந்து விட்டவள், ரஹ்மான் என ஆறு சேமித்து வைத்திருந்த நம்பருக்குப் போன் செய்தாள்.

மூன்று ரிங்கில் போனை எடுத்தான் ரஹ்மான்.

“சொல்லுடா நண்பா! என்ன இந்த நேரத்துல?” என அவனது குரல் கேட்டது.

இவள் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள். அவளது மூச்சு விடும் சத்தத்தில், பெயருக்கே வலிக்குமோ என்பது போல,

“மீனாம்மா?” என அழைத்தான் ரஹ்மான்.

இவள் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள். அவனும் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. ஒருத்தர் விடும் மூச்சு சத்தத்தை மற்றவர் கேட்டப்படியே அமைதியாய் இருந்தார்கள். இந்தப் பக்கம் சத்தமில்லாமல் இவள் அழ, அந்தப் பக்கம் கண்ணைத் தாண்டி நிலத்தில் விழவா என பயமுறுத்திய கண்ணீர் துளிகளை அணைக்கட்டி அடக்கி வைத்து அமைதியாக அமர்ந்திருந்தான் அவன்.

அந்த ஏகாந்த இரவில், ரஹ்மான் ரேடியோவில் கேட்டுக் கொண்டிருந்த பாடல் இவள் செவியையும் மெல்லத் தீண்டியது.

“நான் நிழலில்லாதவன் தெரியாதா

என் நிழலும் நீயென புரியாதா

உடல் நிழலைச் சேரவே முடியாதா

அன்பே..அன்பே…”

 

 

(ஜீவன் துடிக்கும்….)  

 

(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. லவ் யூ ஆல் 🙂 )

Leave a Reply

error: Content is protected !!