Jeevan Neeyamma–Epi 7

171916099_840757923178210_3424615682123961255_n-2a67824f

Jeevan Neeyamma–Epi 7

அத்தியாயம் 7   

 

சுட்டெரிக்கும் சூரியனும் நீ, இதம் தரும் குளிர் நிலவும் நீ என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

தரையில் வரிசையாய் ஜீனியர்கள் எல்லோரும் அமர்ந்திருக்க அவர்கள் முன்னே மெகா போனோடு(லவுட் ஸ்பீக்கர்) நின்றிருந்தனர் சில சீனியர்கள். மற்ற சீனியர்கள் எல்லாம் பக்கவாட்டில் நின்றப்படி புதிதாய் வந்தவர்களை நோட்டமிட்டப்படி இருந்தனர்.

ஜூனியர்களை வரவேற்று பேசி, தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து, இந்தப் பல்கலைகழகத்தில் எந்த இடம் எங்கே இருக்கிறது என விளக்கி, ஸ்போர்ட்ஸ் மற்றும் இதர படிப்பு சாரா அக்டிவிட்டிஸ்களில் கலந்துக் கொள்ள வலியுறுத்தி, இங்கே எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் எனும் கைட்லைனை விநியோகித்து என இரண்டு மணி நேரமாக சீனியர்கள் தங்கள் கடமைகளை கண்ணும் கருத்துமாக செய்தனர்.

மீனாட்சிக்கோ ஓர் ஓரமாய் மேசையில் அடுக்கி வைத்திருந்த உணவின் வாசம் பசியைக் கிளப்பி எப்போதடா இந்த மொக்கை எல்லாம் முடியும் என தோன்ற ஆரம்பித்து விட்டது.

“இப்போ நீங்க எல்லோரும் சாப்பிட போகலாம்! அரை மணி நேரத்துல சாப்பிட்டு வந்து மறுபடியும் இதே இடத்துல ஒன்னு கூடனும்” என மேகாபோனில் ஒரு சீனியர் சொல்லி வாய் மூடுவதற்குள் எழுந்து நின்றாள் மீனாட்சி. தன் ஜண்டா எழ கைக்கொடுத்தவள் அவளையும் இழுத்துக் கொண்டு உணவு வரிசையில் போய் நின்றாள்.

வரிசையில் நின்றாலும், கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது மீனாட்சிக்கு. யாரோ ஆரம்பத்தில் இருந்து தன்னை விடாமல் பார்ப்பது போன்ற உணர்வில் அசௌகரியமாய் நெளிய ஆரம்பித்தாள். யாராக இருக்கும் என சுற்றி முற்றிப் பார்த்தும் கண்டுப்பிடிக்கத் தெரியவில்லை. எல்லோருமே இவளைப் பார்ப்பதைப் போன்ற தோற்ற மயக்கம் வர,

“ஏன்டி ஜண்டா! எல்லாரும் என்னைப் பார்க்கற மாதிரி ஃபீல் ஆகுதே, அழகியாடி நானு?” என கேட்டு வைத்தாள் தோழியை.

நன்றாக திரும்பி நின்று தோழியை மேலிருந்து கீழ் வரை ஸ்கேன் செய்த ஹேமா, மெல்ல உதட்டைப் பிதுக்கினாள்.

“நீ அப்படி ஒன்னும் பெரிய அழகிலாம் இல்ல அம்மன்! உன்னோட கருத்த சுருள் கூந்தல், பல வருஷமா சீவாத ஜடாமுடி இருக்குமே அந்த மாதிரி இருக்கு. கண்ணு ரெண்டும் நல்லா பெருசா இருந்தாலும், என்னைப் பார்க்கறியா இல்ல மண்ணைப் பார்க்கறியான்னு தெரியாத கணக்கா இருக்கு முழி. இந்த வாயி இருக்கே வாயி, அது லிப்ஸ்டிக்கு போடாம ஈரப்பதமா இருந்தாலும் என்னமோ ஈத்த(வாத்து மலாயில்) வாய் மாதிரி சைடு வாங்குது நீ பேசறப்ப. மூக்கு குட்டியா அழகா இருக்கற மாதிரி இருந்தாலும் அதோட ஓட்டை ரெண்டும் போண்டா மாதிரி பெருசா இருக்கு. நான் ஒத்துக்கறேன் நீ நல்லா வெள்ளையாத்தான் இருக்கேன்னு! ஆனாலும் அந்த கலரு கூட சோவைப் (ரத்தம் பற்றாமல் இருக்கும் போது வெள்ளையாய் தெரிவார்கள்) புடிச்ச ஆவி மாதிரி டெரரா இருக்கு. ஒடம்பு கொடி மாதிரி இருந்தாலும் முன்னுக்கும் பின்னுக்கும் கொஞ்சம் ஓவர் சைஸ் ஆகி எப்போ கொடி புட்டுட்டு விழுந்துடுமோன்னு டர்ராகுது. மொத்ததுல தூரத்துல இருந்துப் பார்த்தா ஏதோ கொஞ்சமே கொஞ்சம் அழகியா தெரிவ நீ!”

கியூவில் முன்னால் நின்றிருந்தவள் கையைப் பிடித்து வலிக்கும் அளவுக்கு அமுக்கி.

“மொதல்ல உன் கண்ணாடி பவர செக் பண்ணனும்! எப்படிலாம் என்னை டேமேஜ் பண்ணற, சோடாப்புட்டி ஜண்டா” என காய்ந்தாள் மீனாட்சி.

“அம்மன் ரம்யா கிருஷ்ணன விட பேரழகி இந்த மீனாட்சி அம்மன்னு தெரியுதுல! அப்புறம் ஏன்டி ‘அழகியாடி நானு’னு என்னைப் பார்த்து அந்தக் கேள்வி கேட்ட!” என கரகாட்டக்காரன் கவுண்டமணி போல பேசிக் காட்டியவளைப் பார்த்து குபீரென சிரித்தாள் மீனாட்சி.

சிரிக்கும் அவளையே தூரத்தில் இருந்து பார்த்திருந்தான் அவன். யாரவன்? நம் ரஹ்மான்தான் அவன்.

அவ்வளவு நேரமும் ஒரு கடுப்புடன்தான் மேசையில் அமர்ந்து ஜீனியர்களின் பெயரை டிக் செய்து பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தான் ரஹ்மான். அந்த வேலையைப் பார்க்க வேண்டிய அவனது ரூம் மேட்டுக்கு காய்ச்சலாய் போய் விட அது இவன் தலையில் விடிந்திருந்தது. காற்பந்தாட்ட ப்ராக்டிசை விட்டுவிட்டு நண்பனுக்காக வந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் பாட்டுக்கு குனிந்து வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு திடுமென சந்தன வாசம் நாசியில் ஏற, ஏற்கனவே தனக்கு நன்கு பரிச்சயமான வாசனை இது என்பது போல தோன்றியது.

‘பைத்தியக்காரத்தனம்’ என தன்னையேத் திட்டிக் கொண்டவன்,

“நமா?” (பெயர்) என கேட்டான்.

அதற்கு வந்த பதிலில் படக்கென இவன் நிமிர்ந்துப் பார்க்க, தோழியிடம் பேசிக் கொண்டிருந்த மீனாட்சியோ இவனைக் கண்டுக் கொள்ளவேயில்லை.

அத்தனை வருடங்கள் ஓடி மறைந்திருந்தாலும், அவளது முக வடிவம் மாறி இருந்தாலும் இவனால் மீனாட்சியை நன்றாக அடையாளம் காண முடிந்தது. நன்றாய் வளர்ந்திருந்தாள், அமரிக்கையாய் இருந்தாள், கீச்கீச்சென கத்தும் குரல் இனிமையாய் மாறி இருந்தது, கலர் கூடி இருந்தது, ஆனால் பல பாவனைகள் காட்டும் அந்தப் பெரிய கண்கள் மட்டும் அப்படியே இருந்தன. சில நிமிடங்களிலே இந்த மீனாட்சிதான் அந்த மீனாட்சி என கண்டுக் கொண்டவனுக்கு ஆனந்தம், அதிர்ச்சி, ஆச்சரியம் என எல்லாம் முட்டி மோதி பேச்சிழக்க வைத்தது. கைத் தானாய் பேக்கையும் வாட்டர் பாட்டிலையும் நீட்ட, அவனை ஏறிட்டுக்குக் கூட பார்க்காமல், வாங்கிக் கொண்டு நகர்ந்து விட்டாள் மீனாட்சி.

“மீனாம்மா!” என முணுமுணுத்தவன் அவள் நடந்து மண்டபத்தின் உள்ளே போகும் வரை வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தான்.

“எக்ஸ்கியூஸ் மீ!” என கியூவில் நின்ற அடுத்த ஆள் கூப்பிடவும் தான் தன்னை உலுக்கிக் கொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தான் ரஹ்மான்.

உணவை வாங்கிக் கொண்டு ஓர் ஓரமாய் அமர்ந்து தனது தோழியுடன் சிரித்துப் பேசியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை பார்த்திருந்தவனுக்கு, அவளைத் திடுமென பார்த்த சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி மறைந்து ஆத்திரம் உடைப்பெடுக்க ஆரம்பித்தது.

‘அண்ணாவும் தங்கச்சியும் ரஹ்மானுன்னு ஒருத்தன் இருக்கறதை அப்படியே ஞாபகத்துல இருந்து அழிச்சிட்டாங்க போல! பாரேன், எவ்ளோ குதூகலமா பேசி சிரிக்கறா! நான்தான் கீலாக்காரன்!(பைத்தியக்காரன்) இவங்க குடும்பத்துல எல்லாம் எப்படி இருக்காங்களோ, ஆறு என்ன படிக்கறானோ, மீனாம்மா எப்படி வளந்து நிக்கறாளோன்னு அடிக்கடி நெனைச்சிக்கறேன்! இவங்க என்னைக் கை கழுவி விட்டுட்டாங்க! பினாங் போனதும் லெட்டர் போடறேன்னு சொன்னதெல்லாம் காத்துல எழுதன எழுத்தாகிடுச்சு’ என கறுவினான்.

கோபத்தில் உடல் நடுங்க, சிரித்தப்படி இருக்கும் மீனாட்சியையே முறைத்தப்படி இருந்தான் ரஹ்மான். ஆறுவின் லெட்டரை தினம், தினம் எதிர்ப்பார்த்து ஏமாந்துப் போன சின்ன வயது ரஹ்மானை, பெரிய வயது ரஹ்மானால் கூட கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. சீனியர் ரஹ்மானில் இருந்து எட்டிக் குதித்து வெளியே வந்த குட்டி ரஹ்மானுக்கு சிரிக்கும் மீனாட்சியைப் பிடித்து,

“என்னை மறந்துட்டு எப்படி உங்களால சந்தோஷமா இருக்க முடியுது? சொல்லு, சொல்லு, சொல்லு!” என உலுக்க வேண்டும் போல இருந்தது.

தன் உயிருக்குயிரான நட்பு தந்த ஏமாற்றத்தில் இருந்து இன்னும் கூட வெளி வந்திருக்கவில்லை ரஹ்மான். பல்கலைக்கழகத்தில் எல்லோரோடும் சிரித்துப் பேசி நட்புப் பாராட்டினாலும், ஆறுமுகத்துக்குக் கொடுத்த இடத்தை யாருக்குமே கொடுத்தது இல்லை இவன். அனைவரிடமும் ஓரடி தள்ளித்தான் நின்றான். எங்கே நெருங்கினால், இவர்களும் பிரிவெனும் சோகத்தைத் தந்து விடுவார்களோ என அஞ்சினான் ரஹ்மான்.

அதற்குள் சாப்பிட்டு முடித்த ஜூனியர்கள் மீண்டும் போய் வரிசையாய் அமர்ந்தார்கள். ஐஸ்ப்ரேக்கர் என அழைக்கப்படும் ஒருத்தரை ஒருத்தர் அறிந்துக் கொள்ள உதவும் குட்டி குட்டி விளையாட்டுக்களை நடத்தினார்கள் சீனியர்கள்.

ஜூனியர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து, அவர்கள் முன்னே ஒரு கட்டு பழைய பேப்பரைத் தூக்கிப் போட்டார்கள் சீனியர்கள். அதை வைத்து குழுவில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அந்நபரை அலங்கரிக்க வேண்டும். எந்தக் குழு கிரியேட்டிபாக அலங்காரத்தை கொடுத்த நேரத்துக்குள் செய்து முடிக்கிறார்களோ அவர்களே வின்னர்.

குழு பிரிக்கும் போது மீனாட்சியும் ஹேமாவும் வேறு வேறு குழுக்களுக்குப் பிரிந்துப் போனார்கள். நேரம் பத்து நிமிடமே கொடுக்கப்பட்டிருந்தது அலங்காரம் முடித்து பூனை நடைக்கு(கேட் வால்க்) ரெடியாக. மீனாட்சியின் குழுவில் அவள் கொஞ்சம் அழகாய் இருக்கவும், இவள் வேண்டாமென மறுத்தும் கெஞ்சி கெஞ்சி மாடலாக அவளையேத் தேர்ந்தெடுத்தனர்.

வேறு வழி இல்லாமல் இவள் பொம்மை மாதிரி நிற்க, ஆண்கள் பேப்பரை வகை வகையாய் மடித்துத் தர பெண்கள் இவளை அலங்காரம் செய்ய ஆரம்பித்தார்கள். தலைக்கு அழகாய் கிரீடம் செய்து, அவளது துப்பட்டாவைக் கழட்டி அதை இடுப்பை சுற்றி கட்டி அதில் பேப்பரை பாவாடை போல தொங்க விட்டு, சல்வாரின் மேலேயே பேப்பர் சட்டை போட்டு, ஆங்கில கல்யாண ட்ரெஸ் போல நீளமாக பேப்பரை பின்னால் தொங்க விட்டார்கள். கையில் ஒரு பேப்பர் மந்திரக் கோல் வேறு.

மீனாட்சிக்கு தன்னைப் பார்க்கவே காமெடியாக இருந்தது. வேறு குழுவில் இருந்த ஹேமா இவளைப் பார்த்து வாய் பொத்தி சிரித்தாள். இவளுக்குமே சிரிப்பு வந்து தொலைத்தது. அதற்குள் பத்து நிமிடம் முடிந்திருக்க, நான்கு குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நால்வரும் வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்டனர். அதன் பிறகு ஒவ்வொருவராக கேட் வால்க் செய்ய, மீனாட்சியின் முறையும் வந்தது.

ஒரு கையை இடுப்பில் வைத்து, இன்னொரு கையில் மந்திரக் கோலப் பிடித்தப்படி, தலையை நன்றாக நிமிர்த்தி, ஒரு ராணியின் கம்பீரத்துடன் நான்கு அடி நடந்திருப்பாள். அதற்குள் பாவாடையாக இருந்த பேப்பரில் தவறுதலாக கால் வைத்து தடுக்கி விழப் போனாள். இவள் விழுவதற்குள், சட்டென ஓர் உருவம் அவளைத் தாங்கி நிற்க வைத்து விட்டு விலகிப் போனது.

விழுந்து விடுவோம் என பயந்துப் போனவளுக்கு சற்று நேரம் பிடித்தது தன்னிலை அடைய. தன்னைப் பிடித்து நிறுத்திய உயரமான உருவம் யாரென பார்ப்பதற்குள் மண்டபத்தை விட்டு வேகமான நடையுடன் வெளியேறியவனின் முதுகு மட்டுமே தெரிந்தது இவளுக்கு. நெஞ்சம் படபடவென அடிக்க, மூச்சு வாங்கியவளை ஹேமா இழுத்து வந்து தன்னருகில் அமர்த்திக் கொண்டாள்.

“நல்ல வேளை சீனியர் ஒருத்தன் ஓடி வந்து உன்னைப் புடிச்சான். இல்லைனா உன் குட்டி மூக்குல தக்காளி சட்டினி வடிஞ்சிருக்கும் இன்னைக்கு”

“நான் ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலடி ஜண்டா! மூஞ்ச பார்க்கறதுக்குள்ள போய்ட்டான்”

“நான் நல்லா பார்த்தேன் அவன! செம்ம ஹேண்ட்சமா இருந்தான். நம்ம பகுல்ட்டிதானே(faculty), எங்கயாச்சும் பார்க்காமலா போய்டுவோம்! அப்போ நான் அடையாளம் காட்டறேன்! நீ நன்றி சொல்லிடு” என தோழியை சமாதானப்படுத்தினாள் ஹேமா.       

கீழே விழப் பார்த்ததால் பரிதாப ஓட்டில் நம் மீனாட்சியே அந்த கேமில் வெற்றியாளராய் தேர்ந்தெடுக்கப்பட்டாள். இன்னும் சில பல கேம் முடிந்தவுடன் அன்றைய கெட் டுகேதர் ஒரு நிறைவுக்கு வந்தது. ஆனால் அதற்கு பிறகுதான் ரேகிங் ஸ்டார்ட் ஆனது.

சீனியர்களிடம் அகப்படாமல் கிளம்பி விடலாம் என வேகமாய் கதவை நோக்கி நடந்த மீனாட்சியை பல தமிழ் குரல்கள் கோரசாய் அழைத்தன.

“ஹோய் மஞ்ச மாரியாத்தா!” என அவளின் சுடிதார் வண்ணத்தை வைத்துக் கூப்பிட்டனர் சீனியர்கள்.

“அம்மன், அம்மன்! உன்னைத்தான் கூப்டறாங்க! கட்டம் கட்டிட்டானுங்க நம்ம பயலுக” என முணுமுணுத்தாள் ஹேமா.

இருவரும் மெல்லத் திரும்பிப் பார்த்தார்கள். ஐந்தாறு தமிழ் சீனியர்கள் இவர்கள் முன்னே நின்றிருந்தனர்.

“எங்க ஓடப் பார்க்கறீங்க ரெண்டு பேரும்? இப்படி எல்லாரும் ஓடிட்டா, ஜீனியர் டைம்ல நாங்க அனுபவிச்ச கஸ்டத்த யாரு கிட்ட இறக்கி வைக்கறது?” என கேட்டான் ஒருவன்.

‘இறக்கி வைக்க இது என்ன மூட்டையாடா? சேட்டைப் புடிச்சவனுங்களா!’ என மனதிலேயே கவுண்ட்டர் கொடுத்தாள் ஹேமா.

“சீனியர், ரொம்ப இருட்டிப் போச்சு! சீக்கிரம் என்ன செய்யனும்னு சொன்னீங்கனா நாங்க பாட்டுக்கு செஞ்சிட்டு பஸ்ஸ புடிக்கப் போவோம்!” என நயமாகப் பேசினாள் மீனாட்சி.

“நீங்க பாட்டுக்கு ஒன்னும் செய்ய வேணா, ஒரு பாட்டுப் படிச்சாப் போதும்” என மொக்கை ஜோக் சொல்லி கெக்கெபெக்கெவென ஒருத்தன் சிரிக்க, அவனோடு சேர்ந்து மற்றவர்களும் சிரித்தார்கள்.

“அட பக்கிங்களா! ஜோக்கு சொல்லி பேக்குன்னு ப்ரூவ் பண்றானுங்களே! நாராயணா இந்தக் கொசுங்க தொல்லைத் தாங்க முடியலைடா!” என ஹேமா முணுமுணுக்க மீனாட்சிக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வரப் பார்த்தது. கஸ்டப்பட்டு அடக்கியவளை,

“நீதான் பசங்கலாம் ஜொள்ளு விட்ட ஜூனியர் ஜில்லா? ஜூனியர் தமிழ் பொண்ணுங்க வந்து இறங்கனதுமே யாரு ஜில், யாரு ஜங், யாரு ஜக்னு நாங்கலாம் வலைப் போட்டு அலசி ஆராஞ்சிடுவோம்! இந்த பேட்ச்ல ஒரு ஜில் இருக்குன்னு தெரிஞ்சதுமே உன் பேரு, உன் ஹாஸ்டல் ரூம் நம்பர், இந்த செமெஸ்டர்ல நீ எடுக்கற சப்ஜக்ட்னு ஆல் டீட்டேல் கலேக்ட் பண்ணிட்டோம்” என்றான் அவர்களில் ஒருவன்.

“சீனியர், அப்போ இந்த ஜில்ல மட்டும் ரேகிங் பண்ணுங்க! நான் ஒரு ஓரமாப் போய் நின்னுக்கறேன்!” என்றாள் ஹேமா.

“பார்க்கற கண்ணப் பொருத்துதான் பொண்ணுங்க அம்சமா தெரியறதும், அசிங்கமா தெரியறதும்! என் கண்ணுக்கு நீயும் ஜில்லுதான்” என இன்னொருத்தன் ஹேமாவைப் பார்த்து ஜொள்ளு ஊற்றினான்.

‘இவன் ஊத்துற ஜொள்ளுல நான் சறுக்கிக்கிட்டே ஹாஸ்டல் போய்டுவேன் போலிருக்கே!’ என மனதிலேயே முனகினாள் ஹேமா.

“டைம் ஆயிட்டதுனால சின்னதா ரேகிங் பண்ணி விட்டுடறோம்! ஆனா அடுத்த ரெண்டு வாரத்துக்கு எங்கப் பார்த்தாலும் வச்சி செஞ்சிடுவோம்” என்றான் இன்னொருவன்.

அவர்களுக்குள்ளாக பேசி முடித்தவுடன், ஒருத்தன் மீனாட்சியைப் பார்த்து,

“கண்ணு! நீ ஆசையா வளத்த தவக்களை திடீர்னு செத்துப் போச்சாம்!” என்றான்.

“தவக்களையா?”

“ஆமா! அதுக்கு சினிமா பாட்டை மாத்திப் போட்டு ஒரு ஒப்பாரி சாங் பாடனும்! ஹ்ம்ம் ஆரம்பி”

சற்று நேரம் யோசித்த மீனாட்சி, தொண்டையைக் கணைத்து,

“ஆராரிரோ பாடியதாரோ

செத்துப் போனதாரோ

யாரோ யாரோ

செத்த தவக்களை யாரோ

என் தெய்வமே இது பொய்த் தூக்கமா

இனி நான் தூங்கவே நாளாகுமா!” என உருக்கமாகப் பாடி முடித்தாள்.

“உன் அழகான வாயால ஒப்பாரி வச்சா நான் கூட செத்துப் போக ரெடி” என வழிந்தான் ஒருத்தன்.

“வழியுது மச்சான்! துடைச்சுக்க!” என அவனையும் ஓட்டி எடுத்தார்கள் மற்றவர்கள்.

ஹேமாவிடம்,

“அதே செத்துப் போன தவக்களைக்கு ஒரு இரங்கல் கவிதை சொல்லு” என கேட்டார்கள்.

“கவிதை தானே? சொல்லிட்டா போச்சு” என்றவள்,

“தவளையாரே தவளையாரே

தாவிக் குதிக்கும் தவளையாரே

போய்ட்டீரே போய்ட்டீரே

மண்ணுக்குள்ள மண்ணா போய்ட்டீரே

கண்ணீரே கண்ணீரே

குடம் குடமாய் ஊத்துது கண்ணீரே

பன்னீரே பன்னீரே

உன் கல்லரையிலே தெளிப்பேன் பன்னீரே

வெந்நீரே வெந்நீரே….”

“போதும் போதும் நிறுத்து” என சீனியர்களே இவள் கவிதைக்கு கதறி அவர்கள் இருவரையும் வழி அனுப்பி வைத்தார்கள்.

சிரித்தப்படியே பஸ் ஏறி ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தார்கள் தோழிகள் இருவரும்.

இரவில் உறங்க முயன்றவளுக்கு, எங்கிருந்தோ மெல்லிய அத்தர் வாசனை மூக்கைத் துளைப்பது போன்ற பிரமை உண்டானது.

“இது என்னை விழாம பிடிச்சவன் மேல வந்த வாசனை மாதிரி இருக்கே! குளிச்சிட்டுக் கூட வந்துட்டேன்! அப்புறம் எங்கிருந்து அந்த வாசம் வரும்? லூசே, ஒழுங்கா தூங்கு!” என தன்னையேத் திட்டிக் கொண்டவள் ஹேமாவின் குட்டி ரேடியோவில் ஒலித்தப் பாடலை சேர்ந்து முணுமுணுத்தப்படியே உறங்கிப் போனாள்.

“இருதயம் முறைப்படி துடிக்கவில்லை

இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை!!!!”

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் ரூமின் முன் மாட்டப்பட்டிருக்கும் பாக்ஸில் மீனாட்சிக்கென ஒரு நோட் இருந்தது. அதில் அவளுக்கு ஒரு பார்சல் வந்திருப்பதாக ஹாஸ்டல் மேனேஜ்மெண்ட் அறிவித்திருந்தது. எப்பொழுதுமே கடிதங்கள் அல்லது பார்சல் வந்தால் அப்படித்தான் நோட் போட்டு விட்டுப் போவார்கள்.

“எனக்கு யாரு ஜண்டா பார்சல் அனுப்பிருப்பா?”

“அதான் பல பேரு உன் பின்னால சுத்திட்டு இருக்கானுங்களே, அவனுங்கல்ல ஒருத்தனா இருக்கும். வா, வா இப்பவே போய் எடுத்துட்டு வரலாம்” என குதித்தாள் ஹேமா.

இருவரும் ஹாஸ்டல் மேனேஜ்மெண்ட் ரூமுக்குப் போய் பார்சலை வாங்கி வந்தார்கள். ரூமுக்கு வந்ததும்,

“பிரி பிரி! சீக்கிரம் பிரி அம்மன்! கண்டிப்பா செம்மையான கிப்ட்டா இருக்கும்! ரேப்பரே அவ்ளோ அழகா இருக்கு” என பறந்தாள் நம் ஜண்டா.

மீனாட்சி பார்சலைப் பிரிக்க, அதற்குள்ளிருந்த பொருட்களைப் பார்த்த ஹேமா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள். மீனாட்சிக்கும் சிரிப்பு வந்தது. சிரிப்புடன் அதில் இருந்த கார்டைப் படித்தாள்.

“மறதி கடவுள் கொடுத்த வரம்! ஆனால் மறக்கப்படுவது பெரும் சாபம்! என் சாபம் நீக்கி மோட்சம் கொடுப்பாயா?” என பெயர் போடாமல் அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.  

குழப்பமாய் அந்தக் கார்டையேப் பார்த்திருந்தாள் மீனாட்சி அம்மன்.

 

(ஜீவன் துடிக்கும்….)

 

(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி..ஸ்டே சேப்! லவ் யூ ஆல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!