Jeevan Neeyamma–Epi 8

171916099_840757923178210_3424615682123961255_n-9060709f

Jeevan Neeyamma–Epi 8

அத்தியாயம் 8

 

வேர்ல்ட் டூர் போகலாமா என கேட்டால், நீதானே என் உலகம், உனை சுற்றினால் போதுமென்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

“ஏ!!!! மீனாப்பொண்ணு மீனாப்பொண்ணு, மாசியில் போட்டா மாராப்பொன்னு!”

“ச்சை, அறிவு கெட்டவனுங்க! இவனுங்களாம் டீச்சராகி புள்ளைங்களுக்கு என்னத்தப் படிச்சு குடுத்து கிழிக்கப் போறானுங்களோ!” என முனகிக் கொண்டே நடையை எட்டிப் போட்டாள் மீனாட்சி அம்மன்.

அவள் அங்கே படிக்க வந்து அன்றோடு ஒரு வாரம் ஓடிப் போயிருந்தது. இவளை எங்குக் கண்டாலும் கலாய்ப்பதும், ரேகிங் எனும் போர்வையில் ஒளிந்துக் கொண்டு சைட்டடிப்பதுமாக ரகளை செய்தனர் சீனியர்கள். லெக்சர் ஹாலில் மட்டும்தான் நிம்மதி கிடைத்தது மீனாட்சிக்கு. கபேவுக்கு சாப்பிட வந்தாலோ, எதாவது வாங்கவென பல்கலைக்கழகத்தின் உள்ளேயே இருக்கும் கடைக்குப் போனாலோ, மாலையில் உள்ளே இருக்கும் பார்க்கில் ஜாகிங் செய்தாலோ, எங்கிருந்து தான் இவர்கள் முளைப்பார்களோ தெரியாது. இவளுக்கு மூச்சு முட்டிப் போனது.

சில சமயம் அவர்களின் கேலி கிண்டலில், வெளியே சாதாரணமாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளே அருவருத்துப் போனாள். அந்தக் கூட்டத்தில் தைரியமான சில ஆண்கள் நேரிடையாக வந்துப் பேசிப் பழக முயன்றப் போது மிரண்டு போனாள் மீனாட்சி. அவர்கள் பார்வைப் போன இடங்களைப் பார்த்து உள்ளுக்குள் நடுக்கமாக இருந்தது.

போன் செய்யும் போதெல்லாம் ஈஸ்வரி சொல்லும்,

“ஆம்பளப் பசங்க அப்படி இப்படி பேசனாலும், எதிர்த்து பேசிட்டு நிக்காதே பாப்பா! சேலையில முள்ளு விழுந்தாலும், முள்ளுல சேலை விழுந்தாலும் சேலைக்குதான் சேதாரம். மூக்கும் முழியுமா இருக்கற பொட்டைப் புள்ளயே கண் காணாத இடத்துல படிக்க அனுப்பிட்டு நான் இங்க வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்கேன்! சூதனமா இரும்மா என் ராஜாத்தி!” எனும் வார்த்தைகள் அவள் வாய் துடுக்கைக் கட்டி வைத்திருந்தன.

அன்று பார்த்து, லேசாக காய்ச்சலாய் இருந்ததால் ஹேமா லெக்சருக்கு வரவில்லை. அவள் இருந்தாலாவது இருவரும் சேர்ந்து இந்தத் தொல்லைகளை சமாளிப்பார்கள். பகுல்ட்டி பஸ் நிறுத்தத்தில் போய் அமர்ந்த மீனாட்சி, பஸ் வரும் திக்கில் பார்வையை செலுத்தியபடி மடியில் வைத்திருந்த புத்தகத்தை வருடிக் கொண்டிருந்தாள். அவள் பார்வை வட்டத்தை மறைப்பதைப் போல வந்து நின்றது ஓர் உருவம்.

“மீனா!” எனும் குரலில் மெல்ல நிமிர்ந்துப் பார்த்தாள்.

“என்ன முடிவு பண்ணிருக்க?” என கேட்டான் அவன்.

‘ஐயோ, இந்த எருமைகடாவா?’ சோர்ந்துப் போனாள் இவள்.

“அது வந்து சீனியர்…!” இவள் தடுமாற, அவன் பின்னால் நின்ற கூட்டம்,

“கல் தோன்றி மண் தோன்றி

கடல் தோன்றும் முன்னாலே

உண்டான காதல் அதிசயம்” என பாடி

“ஓஓஓஓஓஓஓ!” என நாராசமாய் கத்தினர்.

“சும்மா இருங்கடா!” என சத்தம் போட்ட பார்த்திபன் எனும் அந்த சீனியர் இவளைப் பார்த்து,

“நான் லவ் சொல்லி நாலு நாள் ஆச்சு! இன்னிக்கு பதில் சொல்வ, நாளைக்கு பதில் சொல்வன்னு காத்திருந்தா கண்ணுல படாம தப்பிச்சிட்டே இருக்க நீ! சரி இப்போ சொல்லு நாம ரெண்டு பேரும் காதலிக்கலாமா?” என கேட்டான்.

‘ரெண்டு பேரும் டிபன் சாப்பிடலாமான்னு கேக்கற மாதிரி கேக்கறானே!’ என மனதில் புலம்பியவள் தலையை குனிந்துக் கொண்டாள்.

“அண்ணிக்கு வெக்கம் டோய்!’ என கூட்டத்தில் ஒருவன் குரல் கொடுக்க, கோபத்தை அடக்கப் பெரும் பாடுபட்டாள் மீனாட்சி.

புத்தகத்தை நெஞ்சோடு இறுக்கிக் கட்டிக் கொண்டவளுக்கு, கண்கள் கலங்கும் போல இருந்தன. பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலமை என மனம் பாடாய்ப்பட்டது! எதிர்த்துப் பேசினால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும், எதிர்க்காமல் விலகி போனால் மேலும் மேலும் சீண்டல்களை அனுபவிக்க நேரிடும்.

அவளது நல்ல காலம் கேம்பஸ் பஸ் சீக்கிரமாகவே வந்துவிட்டது. காத்திருந்தவர்களுக்கு பதில் ஏதும் சொல்லாமல், விடுவிடுவென ஏறி உள்ளே அமர்ந்துக் கொண்டாள் மீனாட்சி.

“போடி போ! நாளைக்கு மாட்டாமலா போவ!” என கத்தினான் அவன்.

ஜன்னலோரமாய் அமர்ந்துக் கொண்டவளுக்கு அடக்கி வைத்த கண்ணீர் மெல்ல உடைப்பெடுத்தது. வீட்டில் உள்ளவர்களைப் பிரிந்திருக்கும் துக்கம், பார்த்திபன் போன்றோரின் தொல்லை, கஸ்டமாய் இருந்தப் பாடங்கள் என ஒவ்வொன்றாய் நினைத்து நினைத்து சத்தமில்லாமல் தேம்பினாள்.

அடுத்த ஸ்டாப்பிங்கில் ஆட்கள் ஏறியதோ, அவளுக்குப் பின்னால் வந்து அமர்ந்த உருவம் அவள் அழுவதைப் பார்த்தப்படி இருந்ததையோ உணரவில்லை மீனாட்சி. ஆண்கள் ஹாஸ்டல் பக்கம் பஸ் நிற்க, அவளைத் தாண்டி இறங்கப் போன உருவம், அவளருகே எதையோ வைத்துப் விட்டுப் போனதை கவனித்தாள் இவள். கண்ணீரால் பார்வை மங்களாய் தெரிய, அவசரமாக கண்களை அழுந்த துடைத்து யாரென பார்த்தவளுக்கு பேருந்தில் இருந்து இறங்கும் ஓர் ஆணின் முதுகு மட்டும்தான் தெரிந்தது. எழுந்து நின்று பார்ப்பதற்குள் பஸ் நகர்ந்துவிட்டது.

அவன் என்ன வைத்து விட்டுப் போனான் என பார்த்தாள் மீனாட்சி. பிரிக்கப்படாத டிசூ பேப்பரும், அதன் கீழே ஒரு வெள்ளைப் பேப்பரும் இருந்தது. அதில் ஏதோ எழுதி இருக்க, எடுத்துப் படித்தாள் மீனாட்சி.

“கண்களில் என்ன ஈரமோ

நெஞ்சினில் என்ன பாரமோ

கைகளில் அதை வாங்கவா

ஒரு தாயைப் போல உனைத் தாங்கவா!!!” எனும் அழகான எழுத்தில் ஒளிர்ந்த வரிகளில் மனம் அப்படியே சிறகைப் போல லேசாகிப் போனது. ஹாஸ்டலுக்கு கிப்ட் அனுப்பியவனின் கையெழுத்து!

டிசூ பேப்பர் பையைப் பிரித்து கண்களைத் துடைத்துக் கொண்டாள் மீனாட்சி. மெல்லிய புன்னகை முகத்தை ஆக்ரமிக்க,

“என்னைக் கடந்துப் போகறப்போ, அதே அத்தர் வாசம்! அன்னைக்கு என்னை விழாம புடிச்சவனும், கிப்ட் அனுப்பனவனும், இவனும் ஒரே ஆளா? யார்டா நீ? மோட்சம் குடுன்னு கேட்டுட்டு முகத்தைக் காட்ட மாட்டற!” என தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள்.

சோகமாய் இருந்தவளின் மூட் கொஞ்சம் சந்தோசமாய் மாறி இருக்க, தங்கள் ஹாஸ்டலில் அருகில் இருந்த காண்டீனில் பீசாங் கோரேங்(வாழைக்காய் பஜ்ஜி என வைத்துக் கொள்ளலாம்) வாங்கிக் கொண்டு ரூம்முக்குப் போனாள். அங்கே ஹேமா போர்த்திக் கொண்டு படுத்திருந்தாள். உணவை மேசை மேல் வைத்தவள், தூங்கிக் கொண்டிருக்கும் தோழியின் போர்வையை விளக்கி நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். சூடு லேசாக இருக்கத்தான் செய்தது. இவள் கை வைத்தது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தாள் ஹேமா.

இருவரது காபி மக்கையும் எடுத்துக் கொண்டு அவர்களின் ப்ளோரில் இருக்கும் பேண்ட்ரிக்குப் போய் சுடுதண்ணீர் வைத்து, காபி கலக்கிக் கொண்டு வந்தாள் மீனாட்சி.

“ஜண்டா! ஹோய் ஜண்டா! எழுந்துக்க, காபி குடிக்கலாம்”

மீனாட்சியின் குரலுக்கு மெல்ல கண்களைத் திறந்தாள் ஹேமா.

“பகல்ல கூட ஒன்னும் சாப்பிடலையா? பன் வாங்கி வச்சிட்டுத்தானே போனேன்! போய் மூஞ்சு கழுவிட்டு வா! சாப்பிட்டு மருந்து போடலாம்!” என படுத்திருந்தவளை எழுப்பி அமர வைத்தாள் மீனாட்சி.

“அம்மன்! நீ பேர்ல மட்டும் அம்மன் இல்ல, நெஜத்துல கூட அம்மன்தான். என்ன கருணை, என்ன காரூண்யம்! அப்படியே கொஞ்ச நேரம் உத்துப் பார்த்தா பின்னால ஒளிவட்டம் தெரியுது! எனக்கே கை எடுத்துக் கும்பிட்டு, கன்னத்துல போட்டுக்கலாம்னு தோணுதுன்னா பாரேன்!”

“காய்ச்சல் அடிக்குதுன்னு கூட பார்க்க மாட்டேன் ஜண்டா! அப்பிப்புடுவேன் அப்பி! போ போய் மூஞ்ச கழுவிட்டு வா!” என கடுப்பாய் சொன்னாள் மீனாட்சி.

அமைதியாய் போய் முகம் கழுவி வந்தவள், கட்டிலில் அமர்ந்திருந்த மீனாட்சியின் அருகே வந்து அமர்ந்தாள்.

“என்னாச்சு அம்மன்? ஏன் அப்செட்?”

“அதப்பத்தி அப்புறம் பேசலாம், இப்போ சாப்பிடு! கடையில பெனடோல்(பராசிட்டமோல்) வாங்கிட்டு வந்தேன்! சாப்பிட்டு போட்டுக்க!”

காலையில் லெக்சருக்கு கிளம்பும் முன், தனக்காக காபி கலந்து வைத்து விட்டு, கடைக்கு ஓடிப் போய் பன் வாங்கி வைத்து விட்டு சென்றதும் இல்லாமல், இப்பொழுதும் சாப்பிட உணவு வாங்கி வந்தவளை வாஞ்சையுடன் பார்த்தாள் ஹேமா! மீனாட்சியின் அக்கறை இவளுக்கு ரொம்பவே இதமாக இருந்தது.

“எனக்கு மட்டும் காய்ச்சல் இல்லாம இருந்திருந்தா, உன்னை அப்படியே கட்டிப் புடிச்சுக்குவேன் தெரியுமா! நீ ரொம்ப ஸ்வீட் டீ அம்மன்! நான் வேணும்னா உனக்கு அண்ணியா வந்து உன்னைக் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்கவா?” என பிட்டைப் போட்டுப் பார்த்தாள் ஹேமா.

மேசையில் மீனாட்சி வைத்திருக்கும் குடும்பப் படத்தைப் பார்த்ததில் இருந்து இந்த அண்ணி புராணம்தான்.

“பெரியண்ணா கல்யாணம் பண்ணிட்டான். ஆறு அண்ணா எனக்கு கல்யாணம் முடிஞ்சு, என் மகனுக்கு மொட்டைப் போட்டு அவன் மடியில ஒக்காத்தி வச்சு காது குத்துன பிறகுதான் கல்யாணம்னு சொல்லிருக்கான்! சோ ஒரு பத்து வருஷம் வெயிட் பண்ணா, நீ எனக்கு அண்ணியா வரதப் பத்தி யோசிக்கறேன்!”

“அப்போ கூட யோசிக்க மட்டும்தான் செய்வியா? ஏன்டி ஜண்டா, உனக்கு இவ அண்ணன் அந்த பெட்ரோமேக்ஸ் லைட்டேத்தான் வேணுமா?” என தனக்குத்தானே கேள்விக் கேட்டுக் கொண்டவளை சிரிப்புடன் பார்த்தாள் மீனாட்சி.

‘அப்பாடா சிரிச்சிட்டா!’ என நிம்மதியானவள், அவளது காபி மக்கை மீனாட்சியிடம் நீட்டினாள்.

இருவரும் பேசி சிரித்தப்படியே காபி குடித்து, பஜ்ஜியையும் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும், மேசை மேல் இருந்த கிப்ட் பாக்சில் இருந்து ஒரு கொக்கோ ஜெலியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள் மீனாட்சி. அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் ஹேமா.

“எவன் செய்வினை செஞ்சு குடுத்தானோ தெரியல, இதைலாம் நான் சாப்பிட்டா அவனுக்கு மயங்கிப் போயிடுவேன்னு சொன்ன! இன்னிக்கு அசால்ட்டா அந்த சாக்லேட்ட எடுத்து வாயில போடற!” என கேட்டாள் ஹேமா.

அன்று வந்த கிப்ட் பாக்சில் இவர்கள் வளர்ந்த காலக்கட்டத்தில் பேமசாக இருந்த நொறுக்குத் தீனி வகைகளை வைத்து அனுப்பி இருந்தான் ரஹ்மான். அவை எல்லாம் சிறு வயதில் மீனாட்சி விரும்பி சாப்பிட்ட ஐட்டங்கள். கோக்கோ ஜெலி(சாக்லேட்), கோபிக்கோ மிட்டாய், சூப்பர் ரிங் சிப்ஸ், இப்படி வகை வகையாய் இருந்தன அந்த கிப்ட் பாக்சில். குழந்தைகள் சாப்பிடும் வகையறாக்களை இவளுக்கு அனுப்பி இருந்ததைப் பார்த்துதான் சிரித்து விட்டனர் இருவரும்.  

‘சாப்பிட்டா மயங்கிடுவேன்னு நினைச்சேன். ஆனா இப்போ எதுவும் சாப்பிடாமலே மயங்கிடுவேன் போல!’ என மனதில் ஒரு எண்ணம் ஓட, திக்கென ஆனது மீனாட்சிக்கு. வாயில் கரைந்த இனிப்பு, தொண்டைக் குழிக்குள் இறங்கும் போது கசந்து வழிவது போல தோன்றியது அவளுக்கு.

படிக்க வந்த இடத்தில் இப்படி மனதை அலைபாய விடுவது சரியில்லையே. யாரிவன், முகத்தைக் காட்டாமலே என்னைத் தடம் மாற்றிப் போடுபவன்! இவ்வளவு நாட்களாக தன்னைத் தாங்கிப் பிடித்தவனை எங்காவது ஹேமா சுட்டிக் காட்டினால், போய் நன்றி சொல்லி விட்டு வரலாம் என நினைத்திருந்தவள், அந்த நினைப்பையே உதறி எறிந்தாள்.

‘வேண்டாம், வேண்டவே வேண்டாம்! அவன் முகத்தைப் பார்க்காமலே கல் எறிந்த தடாகமாய் மனம் சலனப்பட்டுக் கிடக்கிறது! அவனைப் பார்க்கவும் வேண்டாம், தடுமாறவும் வேண்டாம், தடம் மாறவும் வேண்டாம் என உறுதியாக முடிவெடுத்தாள் மீனாட்சி.

“டீ ஜண்டா!”

“என்னடி?”

“அன்னைக்கு என்னை காப்பாத்தன சீனியர பார்த்தா, என் கிட்ட காட்டறேன்னு சொன்னல்ல!”

“ஆமாம்”

“காட்ட வேணாம்”

“ஏன்டி?”

“வேணாம்னா விடேன்! நொய் நொய்னு!” என சத்தம் போட்டவள், தனது பக்கேட் மற்றும் குளிப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு, அந்த ப்ளோரின் கடைசியில் இருந்த பாத்ரூமுக்கு சென்றாள்.

இன்னும் மணி ஐந்தாகி இருக்கவில்லை. அதனால் குளிக்கக் காத்திருக்கும் கியூ குறைவாக இருந்தது. இவள் டர்ன் வந்ததும் உள்ளே நுழைந்தவள், ஷவரை திறந்தாள். தலையில் பூஞ்சிதறலாய் விழுந்த நீர்த்துளிகள் உடம்பின் சூட்டைக் குறைத்ததோடு, உள்ளத்தின் வெம்மையையும் குறைத்தது.  

மறுநாள் ஹேமாவும் லெக்சருக்கு வர, மீனாட்சிக்கு கொஞ்சம் தெம்பாய் இருந்தது. அன்றைய தினத்தோடு பார்த்திபன் இவள் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. இவளை கண்டு விட்டாலும் தெரியாதது போல போய்விட, இவளுக்கு அப்பாடா, விட்டதடா சட்டர்டே என குதூகலமாக இருந்தது. மிகவும் உற்சாகமாய் லெக்சர்களுக்குப் போய் வர ஆரம்பித்தாள் மீனாட்சி.

அந்த முகமறியா மனிதனின் மேல் வந்திருந்த சலனத்திற்கு இவள் முற்றுப் புள்ளி வைத்த இரண்டாவது நாள், அதை கமாவாக மாற்ற லெட்டர் ஒன்று வந்திருந்தது மீனாட்சிக்கு. படி, படி என ஹேமா குதிக்க, அதை நான்காக கிழித்து குப்பைக் கூடையில் போட்டாள் மீனாட்சி.

“ஏன்டி அம்மன்? இருந்த ஒரு எண்டெர்டெயிண்ட்மனையும் டர்ருன்னு கிழிச்சிட்ட?”

“டர்ருன்னு உன் வாயைக் கிழிக்கறதுக்குள்ள போய் படிக்கற வழியைப் பாரு” என்றவள் இவளும் படிக்க அமர்ந்தாள்.

இருவரும் கொஞ்ச நேரம் படித்து விட்டு, கீழே இறங்கி பெண்கள் ஹாஸ்டலின் கண்டீனுக்கு இரவு உணவு உண்ணப் போனார்கள். எப்பொழுதும் போல தட்டு நிறைய ஐட்டங்களை அடுக்கினாள் ஹேமா. மீனாட்சியோ கொஞ்சமாக உணவு எடுத்துக் கொண்டாள். பல்கலைக்கழகத்தில் தங்கும் இடம் மட்டும்தான் ஃபீஸ் வாங்கிக் கொண்டு தருவார்கள். உணவை நாமேத்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மீனாட்சி கவர்மேண்ட் கொடுக்கும் கல்வி கடன் பெற்றுப் படிக்க வந்திருந்தாள். செமெஸ்டர் ஃபீஸ் அதில் இருந்து வெட்டிக் கொண்டு கைச்செலவுக்கு இவ்வளவு என இவளுக்குக் கொடுப்பார்கள். அதை வைத்துத்தான் செலவுகளை சமாளிக்க வேண்டும். அண்ணன்களோ, அப்பாவோ பேங்கில் பணம் போட்டு விட்டாலும், புத்தகம் வாங்கவே அந்தப் பணம் போய் விடும். வீட்டின் பொருளாதார நிலை தெரியுமாதலால் சொந்த செலவுகளைப் பார்த்தே செய்வாள் மீனாட்சி.

“அம்மன், இந்த முட்டையை என்னால சாப்பிட முடியலடி! வீணா தூக்கிப் போடறதுக்கு பதில் நீ உன் வயித்துக்குள்ள போட்டுக்கோ!” என தன் தட்டில் இருந்து முட்டையை எடுத்து மீனாட்சியின் தட்டில் வைத்தாள் ஹேமா.

ஹேமா கொஞ்சம் அப்பர் மிடிள் கிளாஸ் பேமிலி. அப்பாவின் பணத்தில் படிக்க வந்தவள். கைச்செலவுக்கு அவள் அம்மா தாராளமாகவே கொடுப்பார். தோழியின் நிலையை அறிந்து வைத்திருப்பவள், சில சமயங்களில் தன் தட்டில் இருந்து இப்படித்தான் அவள் தட்டுக்கு உணவை மாற்றி விடுவாள். அடிக்கடி செய்தால் மீனாட்சி கண்டுக் கொள்வாள் என சில சமயங்களில் மட்டும் இந்த ட்ரிக்சைப் பயன்படுத்துவாள் அம்மனின் ஜண்டா.

சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தவர்கள், மீண்டும் சிறிது நேரம் படித்து விட்டுப் படுத்தார்கள். படுத்தவுடன் ஹேமா தூங்கி இருக்க, மீனாட்சி புரண்டுக் கொண்டே இருந்தாள். மணி விடிகாலை ஒன்றாகியும் தூங்க முடியவில்லை இவளால்! பட்டென எழுந்து உட்கார்ந்தவள், குப்பைக் கூடையில் இருந்து கிழித்துப் போட்டிருந்த லெட்டரை மெல்ல எடுத்து கட்டிலில் போட்டாள். அதை நீவி சரியாக அடுக்கியவள், ரூமின் வெளியே இருந்து கசிந்த காரிடாரின் லைட் வெளிச்சத்தில் அதைப் படிக்க ஆரம்பித்தாள்.  

“இனிமேல் அவன் உன் பக்கம் தலை வச்சுப் படுக்க மாட்டான்.

நீ அழுதா என்னால என்னைக்குமே தாங்க முடிஞ்சது இல்ல! உன் அழுகைக்கு என்ன காரணம்னு கண்டுப்புடிச்சு பிரச்சனைய முடிச்சு விட்டுட்டேன். நிம்மதியா இரு, சரியா!

ஆம்பளைங்க பேச வந்தா பயப்படாதே இனி! நேராய் கண்ணைப் பார்த்து, நேர்மையா பேசு! தலை குனிஞ்சு, திக்கித் தடுமாறி, நெர்வஸ் ஆனா அவனுங்களுக்குக் கொண்டாட்டமா போயிடும்! சிக்கிட்டாடா நமக்கு ஒருத்தின்னு இன்னும் மேல மேல போவானுங்க! அலட்சியமா போனாலும், என் கிட்டயே திமிர காட்டறியான்னு அடக்கிப் பார்க்கனும்னு துடிப்பானுங்க! சோ நீ இது ரெண்டுக்கும் நடுவுல நின்னுக்க!

நெருக்கு நேரா கண்ணப் பார்த்து பேசனாலே பாதி பயலுக பின் வாங்கிடுவானுங்க. சொல்லுங்க சீனியர், சொல்லுங்க அண்ணான்னு முகத்தை நார்மலா வச்சிட்டுப் பேசு! இவ கிட்ட நமக்கு நட்பு மட்டும்தான் கிடைக்கும்ங்கற மாதிரி நடந்துக்க! யாருக்கும் பயப்படாம சந்தோஷமா இரு! உனக்குப் பின்னால தூணா நான் எப்பவும் இருப்பேன்!

தயவு செஞ்சு இனி அழாதே!

அன்புடன்,

உன் நண்பன்”

லெட்டரைப் படித்து முடித்ததும் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியது மீனாட்சிக்கு. உன் நண்பன் எனும் எழுத்து கண் முன்னால் எழுந்து நடனமாடியது. நெஞ்சம் நிம்மதியில் விம்மித் தணிந்தது. தான் சமாதி கட்டிய சலனத்துக்கு அவன் நண்பன் என சொல்லி மலர் வளையம் சாற்றி இருக்க, அப்படி ஒரு ஆசுவாசம் அவளுள்ளே!

“உன் நண்பன்!” என மெலிதாய் முணுமுணுத்தவள், நிம்மதியாய் தூங்கிப் போனாள்.

 

(ஜீவன் துடிக்கும்…)

 

(போன எபிக்கு லைக், கமெண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. லவ் யூ ஆல்! முடிஞ்ச அளவு வீட்டுல இருங்க! ஸ்டே சேப்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!