jeevanathiyaaga nee-24

JN_pic-c3965c02

jeevanathiyaaga nee-24

ஜீவநதியாக நீ…  

அத்தியாயம் – 24

ஜீவாவின் நண்பர்கள் கோச்சிங் சென்டருக்கு வந்திருந்தார்கள். தன் கோச்சிங் சென்டெர்க்கான பூஜை வேலைகளை சுறுசுறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா. தாரிணியின் முகம் சற்று வாடி இருந்தது. அவள் விழிகள் விழிநீரோடு வாசலை பார்த்து கொண்டிருக்க, “தாரிணி… தாரிணி…” அவளை சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழைத்து  தன்னோடு நிறுத்தி கொண்டான் ஜீவா. அவள் மனத்துயரை போக்க விழைபவனாக!

தாரிணியின் முகம் வாடி இருக்க, பலர் முன் அவளை சமாதானம் செய்யவும் முடியாமல் அவளை தவிக்க விட மனமும் இல்லாமல்,  அவளை தோளோடு சேர்த்து, வேலைகளுக்கு இடையே பேசிச் சென்றான்.’எல்லா நேரத்திலும் உனக்காக நான் இருப்பேன்.’ என்று சொல்லாமல் சொல்லியது அவன் செய்கை.

‘நான் தான் யாரும் வேண்டாமுன்னு வந்துட்டேனே. அப்புறம் ஏன் இப்படி இருக்கேன்? நான் வருத்தப்பட கூடாது. நான் வருத்தப்படுறதால, என் ஜீவாவும் வருத்தப்படுறான்.’ அவள்  மடமடவென்று தண்ணீரை குடித்தபடி, தன்னை தானே சுதாரித்துக் கொண்டு புன்னகைத்து கொண்டாள். ஜீவா வேலை செய்தபடியே அவளைப் பார்த்தான். அவள் புன்னகைத்த விதத்தில் அவன் மனம் வலியில் துடிக்க மறந்து கண்களை இறுக மூடியது. அவன் கண்மூடி நின்ற நொடியில் அவள் அவனை பார்க்க, கண்களை மூடிய தன் கணவனின் முகத்தில் தெரிந்த சோகத்தில் அவள் மடமடவென்று அவன் அருகே சென்று நின்றாள்.

தன் மனைவியின் அருகாமையில் சட்டென்று அவன் கண்களை திறந்து, புருவம் உயர்த்த, அவள் இதழ்கள் விரிந்தன, ‘உன் அருகாமையை என் வாழ்க்கை’ என்பது போல்.

***

அதே நேரம் ஜீவாவின் வீட்டில், ஜீவாவின் தாய் மரகதம் கண்ணீர் மல்க அங்கிருந்த கடவுளின் சிலையையும் படங்களையும் பார்த்தபடி பூஜையறையில் அமர்ந்திருந்தார். அங்கு வந்த நீலகண்டன், “என்ன வேண்டுதல் எல்லாம் பலமா இருக்கும் போல?” கண்களை சுருக்கி கேட்க, “ஜீவா இன்னைக்கு கோச்சிங் சென்டர் ஆரம்பிக்கிறதா, அன்னைக்கு வந்து சொன்னானே. அவனை உள்ள கூட விடாம வாசலில் இருந்து அனுப்பிடீங்களே?” மரகதம் அவர் முகம் பார்க்காமல் பதில் கூறினார். “என்ன உன் பையனுக்காக அந்த கடவுள் கிட்ட வேண்டுதலா? உன் பையனை எல்லாம் அந்த கடவுள் கூட நல்வழிப்படுத்த முடியாது.” அவர் தோளில் துண்டை உதறிப்போட, மரகதம் தன் கணவனை கையெடுத்து கும்பிட்டார்.

 

“உங்களுக்கு புண்ணியமா போகும். நாலு நல்ல வார்த்தை சொல்லலைனாலும் பரவால்லை. என் பையனை சபிக்காம இருங்க. ஊரு உலகத்தில் யாரும் பண்ணாததையா என் பையன் பண்ணிட்டான்?” மரகதம் கோபமாக கேட்க, “கொலை கொள்ளை  கூட தான் ஊரு உலகத்தில் நடக்குது. உன் பையனை அதையும் பண்ண சொல்லு” அவர் கர்ஜித்தார்.

“என் பையன் நல்லவன் அது உங்களுக்கு தெரியும்” மரகதம் தன் கண்ணீரை புடவை முந்தானையால் துடைக்க, “உன் பையனை பத்தி பேச்சு மட்டுமில்லை, அவனைப் பற்றிய சிந்தனை கூட இந்த வீட்டில் வர கூடாது. வந்தால், நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்.” அவர் அழுத்தமாக கூற, தன் கணவனை கையாலாகாத்தனத்தோடு பார்த்தார்.

***

ரவியின் வீட்டில்.

      “கீதா, ஒரு பாட்டு பாடேன். நான் பூஜை பண்ணறேன்” புஷ்பவல்லி கூற, “என்ன அத்தை வேண்டுதல் எல்லாம் பலமா இருக்கு?” என்றாள் புன்னகையோடு. “அப்படி எல்லாம் இல்லை கீதா.” அவர் சமாளிக்க, “அத்தை, பூஜை தாரிணிக்கு தானே?” அவள் தன் மாமியாரின் தோள்களை தொட்டு ஆர்வமாக கேட்க, அவர் ஆமோதிப்பாக தலை அசைத்தார்.

“அத்தை மனசில் இவ்வளவு பாசத்தை வச்சிக்கிட்டு, எதுக்கு தாரிணி கிட்ட இப்படி கோபத்தை காட்டறீங்க?” கீதா கேட்க, “இரண்டும் உண்மை கீதா. அதனால் தான்” அவர் கூற, “எங்க அண்ணனை ஏத்துக்க வேண்டாம். ஆனால், தாரிணியை ஏத்துக்கலாம் இல்லை? தாரிணி கோபமா பேசினாலும், அவங்க கண்ணில் அன்னைக்கு அவ்வளவு வருத்தம்” கீதா புஷ்பவல்லியை சமாதானம் செய்ய முயற்சித்தாள்.

“கீதா, தேவை இல்லாமல் நீ எந்த முயற்சியும் செய்யாத. எனக்கு தாரிணி மேல பாசம் உண்டு. இப்படி பண்ணிட்டாளே, அதனால் அவ நாசமா போகணும்னு நான் நினைக்கலை. என் பொண்ணு இல்லை… இல்ல்லை…” அவர் ஆழ மூச்செடுத்துக் கொண்டார். “ஜீவாவின் மனைவி தாரிணி நல்லாருக்கணும். அது தான் என் வேண்டுதல். ஆனால், இந்த குடும்பத்திற்கு அவ வேண்டாம். இதை நான் சொல்லலை கீதா. அவ தான் நாங்க வேண்டாமுன்னு போயிருக்கா” புஷ்பவல்லி பேச,  “அன்னைக்கு அவங்க சூழ்நிலை…” கீதா இடைமறிக்க, “அந்த சூழ்நிலைக்காக, பெத்தவங்களை தியாகம் பண்ணாம காதலை தியாகம் பண்ணிருக்கலாமே?” புஷ்பவல்லி கேட்க, கீதாவிடம் மௌனம்.

“அவளுக்கு எங்களை விட ஜீவா தானே முக்கியம். அந்த ஜீவா தாரிணிக்கு போதும்.” அவர் கூற, ‘அண்ணனுக்கு எங்களை விட தாரிணி முக்கியமா? என்ற  எண்ணம் எனக்கும் வரத்தான் செய்தது. தாரிணி மேல் கோபம் வந்தது. ஆனால், அண்ணனுக்கு முன்னாடி எல்லாம் காணாமல் போச்சே.’  கீதாவிற்குள் கேள்வி எழ, அவள் எதுவும் பேசவில்லை.

“தாரிணி எங்க இருந்தாலும் நல்லாருக்கட்டும். இது ஒரு தாயின் வேண்டுதல் இல்லை. மனிதாபிமானமுள்ள பெண்ணா என் எண்ணம். எனக்கு என் கணவன் மேல, என் மகன் மேல கோபம் தான். அவங்க இந்த விஷயத்தை இதை விட அழகா கையாண்டிருக்கலாம். உங்க வீட்டிலிருந்து உன்னை மருமகளாக்கினா மாதிரி உன் அண்ணனை மருமகன் ஆகியிருக்கலாம். எல்லாருக்கும் வீம்பு. எல்லார் செஞ்சதும் தப்பு. ஆனால், தாரிணி செய்தது துரோகம். அதுக்கு எங்க ஆயுசுக்கும் மன்னிப்பு கிடையாது.” அவர் கூற, ‘காலம் அனைத்தையும் மாற்றுமா?’ என்ற ஐயம் கீதாவுக்கு வந்தது.

“உன்னை ஒரு பாட்டு பாட சொன்னேன். நீ கதைப்பேசுற கீதா.” அவர் இயல்புக்கு திரும்ப, “இதோ பாடுறேன் அத்தை” அவள் சம்மணமிட்டு இறைவன் முன் அமர்ந்தாள்.

“விளையாட இது நேரமா முருகா-என்

வினையாலே படும் பாடு தனை சொல்ல வரும்போது

விளையாட இது நேரமா முருகா”

          அவள் பாட, அவள் குரலில் பூஜையறை நோக்கி வேகமாக வந்தான் ரவி.

“களைத்தேன் ஜன்மம் எடுத்து இளைத்தேன் பொறுத்திருந்து

உளமார உனை நாடி உனை பாடி வரும்போது

விளையாட இது நேரமா முருகா”

                 இறைவனின் விளையாட்டை நிறுத்தி, தன் அண்ணனுக்கு உதவுமாறு தன் அண்ணனுக்காக மனதார வேண்டி அவள் உருகி பாட, தன் மனைவியை பார்த்து அவன் உருகி நின்றான்.

 

“புரியாத புதிரோ நீ அறியாத கலையோ

பரிகாசமோ என்மேல் பரிதாபமில்லையோ

விரித்தோகை மயில் வருவாய் என்றெதிர் பார்த்து

விழி மேலே விழி வைத்து வழி பார்த்து வரும்போது”

                      தன் அண்ணனின் வெற்றியை வழி மேல் விழி வைத்து காத்திருந்து  வேண்டுதலோடு அவள் பாட, அந்த இறைவன் அவள் ஆசையை புரிந்துக் கொண்டானோ என்னவோ ரவி அவள் மனதை புரிந்து கொண்டு  அவள் வருகைக்காக காத்து நின்றான். பாடலை  முடித்துக் கொண்டு இறைவனிடம் வேண்டுதலை முடித்து அவள் கண்திறக்க, புஷ்பவல்லி அவளுக்கு குங்குமத்தை நீட்டினார்.

அவள் கைகள் குங்குமத்தை தொட்டு நெற்றியிலிட அவள் கண்கள் எதிரே நின்ற தன்னவனை அன்போடு தழுவி மீண்டது. அவன் கண்கள் காட்டிய சமிங்கையில் அவள் பூஜையை முடித்துக் கொண்டு அவர்கள் அறைக்கு செல்ல, “கீது…” அவன் அவளை உரிமையோடு இழுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான். அவள் கொடுத்த இதழ் பரிசில் அவன் தயங்கங்கள் அன்றே கரைந்து போயின.

அவன் கண்கள் அவளை ஆராய்ந்து.  சந்தன நிற புடவை அணிந்திருந்தாள். சிவப்பு நிற ரோஜாக்கள். ‘நான் பார்த்த முதல் நாளும், இதே நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். இப்படி தான் பாடினாள். நான் என் கீது மேல் காதல் கொண்ட கணமும் அது தான்.’ அவன் அதை தன்னோடு வைத்துக்கொண்டான். இதை எல்லாம் சொல்ல தேவை இல்லாமல், கீதா அவன் மீது மனைவியாக அன்பு செலுத்த, அவன் அதை அனுபவிக்க ஆரம்பித்தான். அவன் கைகள் எல்லை மீற, “ப்ளீஸ்…” அவள் குரல் கொஞ்சலோடு கெஞ்சியது.

“ப்ளீஸ் வேண்டாம். எனக்கு காபி வித் பிஸ்கேட் வேணும்” அவன் அவள் இதழை தீண்டியபடி கூற, அவள் அவன் சட்டையை திருகினாள். அவள் முகத்தில் நாணம் இருந்தாலும், அவள் செய்கை அதையும் தாண்டி எதையோ கூற, “என்ன வேணும் கீது?” அவன் தன் ஆள் காட்டி விரலால் அவள் முகம் உயர்த்த, “எனக்கு அண்ணன் கோச்சிங் சென்டெர்க்கு போகணும். போக வேண்டாமுன்னா கோபப்படாதீங்க. எனக்கு..” அவன் இதழ்களை ஒற்றை விரலால் மூடி, “கிளம்பு… இப்ப யார் கிட்டயும் சொல்ல வேண்டாம். வந்து பார்த்துக்கலாம்.” அவன் கூற, அவன் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்துக்கொண்டு, “தேங்க்ஸ்….” என்றாள் பெரிதாக புன்னகைத்து.

இருவரும் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் ஜீவாவின் கோச்சிங் சென்டெர்க்கு வந்திருந்தனர்.

ஜீவாவும் தாரிணியும் இருவரையும் இன்முகமாக வரவேற்க, கீதா இருவரிடமும் தலையசைத்தாள். ரவி தன் தங்கையிடம் மட்டும் புன்னகையோடு பேசினான். ஜீவாவின் முகத்தை கிஞ்சித்தும் பார்க்கவில்லை. பூஜை சிறப்பாக நடந்தது. ரவி பெரிதாக கலந்து கொள்ளவில்லை என்றாலும் அமைதியாக அங்கு நடப்பவற்றை  பார்த்துக் கொண்டிருந்தான். அனைவரும் உள்ளே இருக்க, ஜீவா மும்முரமாக வெளியே வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது வேலைக்காக வைத்திருந்த கம்பு அவன் மீது விழ எத்தனிக்க, ரவி சரேலென்று சென்று ஜீவாவை தன் பக்கம் இழுக்க, கம்பு சரிந்து விழவும் சரியாக இருந்தது.

“தேங்க்ஸ்…” என்றான் ஜீவா ரவியின் முகம் பார்த்து. “நீ ஒரு நாளும் எனக்கு நட்புக்கரம் நீட்டவும் முடியாது. எனக்கு உறவாகவும் முடியாது. நான் இங்க வந்தது என் கீதாவுக்காக. என் தங்கைக்காக. நீ என்னைக்கும் எனக்கு விரோதி தான். நான் உனக்கு எதிரி மட்டும் தான். உனக்கு நான் ஏன் இப்ப தொந்திரவு கொடுக்கலை தெரியுமா? நான் இப்ப உனக்கு தொந்திரவு கொடுத்தால், என் தங்கையும், மனைவியும் வருத்தப்படுவாங்க. நீ வளரனும். எனக்கு சமமா வளரனும். எனக்கு சமம்மா இருக்கிற ஒரு ஆள் கிட்ட மோதினா தான் எனக்கு மரியாதை. நான் அடிச்சாலும், அது உனக்கு மட்டும் தான் தெரியணும். உன் வழியில் உனக்கு மட்டுமே வலி கொடுக்குற இடைஞ்சல் நான். அதுக்கு நீ வளரணும். உன் வளர்ச்சிக்கு நான் காத்திருக்கேன் ஜீவா.” ரவி அழுத்தமாக கூற, ஜீவா புன்னகைத்தான்.

“நீயும் உன் நண்பர்களும் தப்பு பண்ணலை. ஆனால், நான் எவ்வளவு எச்சரிச்த்தும் தப்புக்கு துணை இருந்தீங்க. அதுக்கு தான் நான் போலீஸ் வரைக்கும் போனேன். அந்த நேரம் உனக்கு வந்த கெட்ட பெயருக்கு, தொழில் நஷ்டத்துக்கு நீ தான் காரணம். ஆனால், என் மேல தப்புனு நீ நினைத்தால் அதுக்கு நான் பொறுப்பு கிடையாது ரவி.” ஜீவா கூற, ரவி அவனை அசட்டையாக பார்த்தான்.

“நீ என்னை எப்படி பார்த்தாலும், நான் உன்னை என் மனசுக்கு நெருக்கமான ஒருத்தரா தான் பார்க்குறேன். என் தங்கையை உள்ளங்கையில் வைத்து தாங்குற ஒருத்தன் என்னை அடித்தே கொன்னாலும் எனக்கு எதிரியாக முடியாது. உன்கிட்ட முதல் நாள்ல இருந்து நான் பொறுமையா போற காரணம் என்ன தெரியுமா?” ஜீவா கேள்வியாக நிறுத்த, ரவி அவனை யோசனையாக பார்த்தான்.

“ம்….” ஜீவா சிரித்துக் கொண்டான். “என் தங்கை கண்டுபிடித்தாளா இல்லையான்னு எனக்கு தெரியலை. ஆனால், உன் கண்ணில் நான் கீதாவுக்கான காதலைப் பார்த்தேன். உன்னை முதல் முறையா கீதாவோட பார்க்கும் பொழுதே அதை கண்டுபிடிச்சிட்டேன். ஆனாலும், உன் மேல சின்ன சின்ன சந்தேகம் இருக்கத்தான் செஞ்சிது. ஆனால், நீ கீதா பத்தி பேசும் பொழுதும், உன்னை ஒவ்வொரு தடவை கீதாவோடு பார்க்கும் பொழுதும் என் சந்தேகம் விலக ஆரம்பிச்சிருச்சு. ஆனால், உன் ஆழம் இவ்வளவுன்னு எனக்கு இது வரைக்கும் தெரியலை. உன் அன்பின் ஆழத்தை உன்னோட இந்த வருகை சொல்லுது.” அவன் கூற, ரவி ஏதோ பேச எத்தனித்தான்.

அதற்குள் கீதா ரவி அருகே வந்துவிட்டாள். “நீங்க என் அண்ணன் கூடவெல்லாம் பேசுவீங்களா?” அவள் உரிமையோடு தன் கணவனிடம் கேட்டாள். ஆனால், அவள் சகோதரனிடம் பேசவில்லை. அவளுக்கு இன்னும் அவன் மேல் கோபமாம். ஜீவா தன் தங்கையின் கோபத்தை எண்ணி சிரித்துக்கொண்டான்.

தன் சட்டை பையிலுள்ள பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினான். கீதா அவனை அதிர்ச்சியாக பார்க்க, “லஞ்சம் வாங்குறது மட்டுமில்லை, கொடுக்கறதும் தப்புத்தான். யாருக்காகவும் உன் பழக்கம் மாற கூடாது கீதா.” ஜீவாவின் கண்டிப்பான குரலில் ரவியின் கைகள் இறுகியது. “நீ இன்னைக்கு வருவேன்னு என் உள் மனசு சொல்லுச்சு. பேச வேண்டிய இடத்தில் பேசி, செய்ய வேண்டியதை செய்து உன் பணத்தை திரும்ப வாங்கிட்டேன். இந்தா…” ஜீவா தன் தங்கையின் கைகளில் பணத்தை கொடுக்க, கீதாவின் பார்வை ரவியின் பக்கம் சென்றது. ரவி தன் மனைவியின் எண்ணத்தை படிக்க முயல, “ரவி…” என்ற அலறல் சத்தத்தில் அனைவரும் வாசல் பக்கம் திரும்பினர்.

அங்கு ஷண்முகம், கோபமகா நின்று கொண்டிருந்தார்.

“உன்னை நான் எதுக்கு கீதாவை கல்யாணம் பண்ணிக்க சொன்னேன். நீ என்ன பன்னிட்டு இருக்க?” அவர் கோபமாக கேட்க, “அப்பா, நான் நம்ம தாரிணிக்காக..” ரவி தடுமாற, “போதும் நிறுத்து. உனக்கு புதுப் பொண்டாட்டி மயக்கம்” அவர் எகிற, “அப்பா…” ரவி கர்ஜித்தான். குடும்ப சண்டை என்று நண்பர்கள் உள்ளே ஒதுங்க, தாரிணி ஓடி வந்தாள்.

“என்ன இவனை வைத்து வாழ முடியலையா? உன் அண்ணனை வைத்து சொத்தில் பங்கு கேட்கலாமுன்னு வரியா?” ஷண்முகம் தாரிணியை பார்த்து கேட்க, “உங்க உறவு வேணும்னு நினைத்து தான் உங்களை கூப்பிட்டோமே ஒழிய, உங்க பணத்துக்காக இல்லை அப்பா” தாரிணி திட்டவட்டமாக அறிவித்தாள்.

“என்ன மாத்தி மாத்தி பேசுற? எங்க உறவு வேண்டாமுன்னு சொல்லிட்டு தானே போன? அன்னைக்கு கூட வீடு வரைக்கும் வந்து அதைத்தானே சொன்ன?” அவர் கேட்க, தாரிணி பதில் கூற முடியாமல் நிற்க, “மாமா…” கீதா உள்ளே நுழைய, “என்னம்மா? உங்க அண்ணனுக்கு பணஉதவி எல்லாம் பலமா இருக்கு போல?” அவர் கீதாவின் கையிலிருந்த பணத்தை பார்த்து கேட்க, ஜீவா ரவி இருவரும் முதல் முறையாக ஒருசேர வருந்தினர். 

“அப்பா, நாங்க பணம் வாங்கலை. ஜீவா அதை திருப்பி கொடுத்துட்டான்.” தாரிணி விளக்க முற்பட, அவர் அவள் முன் ஒரு பத்திரத்தை நீட்டினார். அனவைரும் அதிர்ந்து நோக்க, “எங்க சொத்துக்கும், எங்க வீட்டுக்கும் உனக்கு உரிமை இல்லைன்னு எழுதியிருக்கேன். கையெழுத்து போடு” அவர் நீட்ட, தாரிணி அதை வாங்கி ஆவேசமாக கையெழுத்து போட எத்தனிக்க, ஷண்முகம் சிரித்தார்.

“உனக்கு முக்கியமில்லாதது தான். இருந்தாலும் முழுசா சொல்ல வேண்டியது என் கடமை. வீட்டுக்கு அப்படினா, வீட்டில் உள்ள உறவுகளும் அடக்கம். உனக்கு, அம்மா, அப்பா, அண்ணன் இப்படி யாரும் கிடையாது. அது மட்டும் இல்லை. நாளை பின்ன, பாட்டி தாத்தா  மாமா அத்தைன்னு உன் குழந்தைகளும் எங்க வீட்டுக்கு வர கூடாது. அதாவது நாங்க இருக்கிறதே அவங்களுக்கு தெரிய கூடாது.” அவர் கூற, “அப்பா…” தாரிணி தரையில் சரிந்து விழுந்தாள்.

“தாரிணி…” ரவி அவளை தாங்குமுன் ஜீவா அவளை பிடித்திருந்தான். “கையெழுத்து போட முடியுமா முடியாதா? போடணும்னு அவசியமில்லை. இந்த ஜீவா வேண்டாமுன்னு கிளம்பி வந்திரு” அவர் அசட்டையாக கூற, தாரிணி விருட்டென்று எழுந்தாள். மடமடவென்று கையெழுத்திட எத்தனிக்க, “தாரிணி…” ஜீவா அவளை தடுக்க முயன்றான்.

“உன்னை விட்டு போக சொல்றியா ஜீவா?” அவன் சட்டையை பிடித்து அவள் கதறி அழ, ஜீவாவின் கண்கள் கலங்கியது. தாரிணி கையெழுத்திட்டு அந்த காகிதத்தை தன் தந்தை முன் வீசி எறிந்தாள். “எங்களுக்கு வரப்போகும் குழந்தைகளுக்கு யாரும் இல்லை. அது தானே. நான் அவங்க கிட்ட நாங்க அனாதைன்னே சொல்லி வளர்த்திக்குறேன்” தாரிணி பேச, “மாமா…” கீதா இடையில் பேச எத்தனிக்க, “கீதா, உனக்கும் இது பொருத்தம். உங்கள் வீட்டில் நீ ஒரே பொண்ணு. எங்க வீட்டில் ரவி ஒரே பையன். இது தான் உனக்கும். எனக்கு வரப்போகும் பேரக் குழந்தைகளுக்கும்…” அவர் கூற, இளைஞர்கள் சூழ்நிலை கைதியாகினர்.

பெரியவர்களின் பிடிவாதமும் இளைஞர்களின் அவசரமும் கோபமும் அவர்கள் வாழ்வை நிர்ணயிக்க ஆரம்பிக்க, வருடங்கள் பல அதன் போக்கில் பறந்தன.

நதி பாயும்…                  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!