jeevanathiyaaga_nee – 11

JN_pic-7b4bca1f
Akila Kannan

ஜீவநதியாக நீ…

அத்தியாயம் – 11

கீதா ரவியின் திருமண விஷயம் கேட்டு, மிகவும் உடைந்துவிட்டான் ஜீவா. தாரிணியின் பேச்சு அதை தொடர்ந்து ரவியின் வருகை அவனை இன்னும் பாதிக்க, அவன் கோபத்தின் உச்சியில் இருந்தான்.

உள்ளே சென்று தாரிணியிடம் இப்பொழுது பேச அவனுக்கு மனம் வரவில்லை. பேசி அவளை காயப்படுத்திவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் ஜீவா.

கீதாவுக்காக அவன் மனம் பரிதவித்தாலும், ‘கீதா சமாளிப்பாள்…’ என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

ஆனால், கீதாவுக்கு இந்த நிலையை உண்டு செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவனை அரித்தது.

ரவி சென்ற திசைக்கு எதிர்பக்கமாக பல வித யோசனைகளோடு தன் நடையை கட்டினான்.

சில நிமிடங்களில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சமையலறையிலிருந்து வெளியே வந்த தாரிணி, ஜீவாவை தேடினாள்.

“சொல்லாமலே போய்ட்டாங்களா?” அவள் இதழ்கள் ஏமாற்றத்தோடு முணுமுணுக்க, ‘நான் என்ன தப்பு பண்ணினேன்?’ என்ற கேள்வியோடு அவள் கண்கள் கண்ணீரை சொரிந்தது.

‘என் அண்ணனை பார்த்தும் என் மேல கோபமா? என் முகத்தை பார்க்க கூட ஜீவாவுக்கு பிடிக்கலையா? ஒரு வார்த்தை சொல்லிட்டு கூட போக முடியலையா?’ அவள் தன் கைகளால் தன் கண்ணீரை துடைத்து கொண்டு கோபமாக ‘தொம்… தொம்…’ என்று நடந்து, தரையில் மொந்தென்று அமர்ந்தாள்.

கண்ணீரும், கோபமும் அவளுக்கு ஒரே நேரம் முட்டிக்கொண்டு வந்தது.

‘நான் இந்த ஜீவாவுக்காகத் தானே எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்தேன். இன்னைக்கு ஒரு நாள், நான் ஒரு வார்த்தை சொன்னால் இவன் இப்படி கோச்சிக்கிட்டு என்கிட்டே சொல்லாமல் போவானா?’ அவள் கோபத்தில், தன் சுடிதார் துப்படாவின் நுனியை திருகியபடி தன் கணவனை தாறுமாறாக திட்டிக் கொண்டிருந்தாள்.

*** *** ***

அதே நேரம், காரை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தான் ரவி. காரில் முன்பகுதியில் அவன் அருகே அமர்ந்திருந்த கீதா முகத்தில் புன்முறுவல்.

“என்னையும், எங்க அண்ணனையும் சமாளிக்கவே முடியலையோ?” அவள் நக்கலாக கேட்க,

“ஏன் முடியாம? உன்னை அடிக்கிற அடியில் உன் நொண்ணன் என் காலில் வந்து விழுவான்” அவன் கூற, அவள் இப்பொழுது கிண்கிணியாக சிரித்தாள்.

“என்ன டீ சிரிப்பு?” அவன் பற்களை நறநறத்து, வண்டியை வேகமாக திருப்ப,

“என்னை அடித்தால் ரெண்டு விஷயம் தான் நடக்கும்.” அவள் கூற, ‘என்ன?’ என்பது போல் அவன் புருவத்தை உயர்த்தினான்.

“முதல் விஷயம். நீங்க என்னை எந்த வகையில் அடிச்சாலும், அதே வகையில் நான் உங்களை திரும்பி அடிப்பேன்” அவள் அவன் பக்கம் திரும்பி கூற, அவள் சவாலில் அவள் தைரியத்தில் அவன் மனம் மயங்கி அவன் இதழ்கள் புன்னகையில் மடிய எத்தனிக்க, அதை மறைத்துக் கொண்டு அவன் தன் உதட்டை நன்றாக மடித்துக் கொண்டான்.

“இரெண்டாவது விஷயம். அப்படி என்னால் உங்களை திருப்பி அடிக்க முடியலைனாலும், எங்க அண்ணன் கிட்ட சொல்லி அவனை கஷ்டப்படுத்த மாட்டேன். உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்ட பாவத்துக்கு செத்தாலும் சாவனே தவிர இந்த விஷயத்தை எல்லாம் எங்க அண்ணன் கிட்ட கொண்டு போக மாட்டேன்.” அவள் அவனை பார்த்து தீர்க்கமாக கூறிவிட்டு சாலையை நோக்கி திரும்பி கொண்டாள்.

அவள் சவாலில் மயங்கிய அவன், அவளின் இந்த கூற்றில் கோபத்தின் உச்சிக்கே சென்றான். ‘நான் என்ன இவளை சாவடிக்கவா கல்யாணம் பண்ணிருக்கேன். திமிர்… திமிர் பிடித்தவள். அண்ணனுக்கும் தங்கைக்கும் உடம்பு முழுக்க கொழுப்பு.’ அவன் இவளை கடுப்பாக பார்த்தான்.

“உங்க அண்ணன் கிட்ட நீ கொண்டு போகலைன்னா என்ன? நான் கொண்டு போவேன்” அவன் கூற, “அண்ணன் நம்ப மாட்டான்” அவள் தெனாவட்டாக கூறினாள்.

அவள் கூற்று, ஜீவாவின் சிரிப்பை நினைவு படுத்த, ரவியின் காரின் வேகம் எகிறி அவர்கள் வீட்டின் முன் தான் நின்றது.

இருவரும் ரவியின் வீட்டை அடைந்தனர். ரவி கோபமாக வீட்டிற்குள் நுழைந்து கார் சாவியை விட்டெறிந்தான். மடமடவென்று அவன் அறைக்குள் நுழைந்தான்.

அவன் விட்டெறிந்த கார் சாவியை எடுக்க வந்த வேலையாளை முந்திக்கொண்டு அந்த சாவியை கீதா எடுத்துக் கொண்டாள். அவனை பின் தொடர்ந்து அவர்கள் அறைக்குள் சென்றாள்.

“உங்களுக்கு இப்ப என்ன தான் வேணும்?” கீதா சற்று அதிகாரமாக கேட்டாள்.

‘உங்க அண்ணனை அடிச்சி கொல்லனும்’ அவன் கண்களை இறுக மூடி தனக்குள்ளே கூறிக்கொண்டான்.

“என்னை அடிச்சி கொல்லணும்னு தோணுதா?” இப்பொழுது சட்டமாக மெத்தையில் அமர்ந்து கொண்டு கேட்டாள் கீதா.

அவள் முன்னே வந்து அவள் கன்னங்களை அழுத்தி பிடித்தான் ரவி. “உன்னை அடிச்சி கொல்ல வேண்டாம். உங்க அண்ணனை கொல்லனும்” அவன் கூற,

“இப்ப அங்க தானே போயிட்டு வந்தீங்க? அங்கையே அதை பண்ணிருக்க வேண்டியது தானே? அங்க பண்ண தைரியம் இல்லாமல், இங்க வந்து ஏன் குதிக்கறீங்க ?” அவள் அலட்சியமாக கேட்டாள்.

“யாரை பார்த்து தைரியமில்லைனு சொல்ற?” அவள் சங்கை அவன் பிடிக்க, “வேற யாரை? எங்க அண்ணனையா சொல்ல முடியும்? உங்களை தான்” அவள் சிறிதும் அச்சம் இல்லாமல் தெளிவாக கூறினாள்.

“உங்க அண்ணனை மாதிரி எடுத்தும் கவுத்தோமுனு செய்ய சொல்றியா. அவனை அடிச்சி தூக்கி போட்டு மிதிக்க, எனக்கு எவ்வளவு நேரமாகும். ஆனால், தாரிணி அவன் பக்கம் முழுசா போய்டுவா. என் தங்கை, அவன் கிட்ட இருந்து பிரிஞ்சி இங்க வரணும். அந்த ஒற்றை அறை வீட்டில் அவள் கஷ்டப்படக் கூடாது. தாரிணி, இங்க வருவா. சீக்கிரம் வருவா” அவன் அழுத்தமாக கூற,

“வந்த பிறகு?” கீதா கேட்க, ரவியிடம் மௌனம்.

“இல்லை, வந்த பிறகு? என்ன பண்ணுவீங்கன்னு கேட்குறேன்?” அவள் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.

“தாரிணியை எங்க அண்ணாவை மறக்க சொல்லுவீங்களா? இல்லை, தாரிணிக்கு வேற மாப்பிள்ளை பார்ப்பீங்களா?” கீதா இப்பொழுது கழுத்தை சரித்து சந்தேகம் கேட்க, அவனிடம் மீண்டும் மௌனம்.

“இப்படி பேசாமலே இருந்தால் என்ன அர்த்தம். நான் தப்பா எதுமே கேட்கலை. அண்ணனும் தாரிணியும் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே உங்களால் இது எதையும் கிழிக்க முடியலை.” அவள் பேச, “கீதா…” அவன் அலறினான்.

“உண்மை சுடத்தான் செய்யும். வலிக்க தான் செய்யும்.” கூறும் பொழுதே அவள் கைகள் அவள் காலை மென்மையாக வருடியது. காலின் வலியை உணர்த்துவது போல் அவள் முகம் சுருங்கியது.

அவன் கண்கள் அவளை சற்று கூர்மையாக பார்த்தன. அவள் பேசிய பேச்சில், ஜீவாவின் செயலில் அவன் கோபம் பன்மடங்காக உயர்ந்திருந்தது.

‘இவள் ஜீவாவின் தங்கை. இவளுக்காக நான் இறங்க கூடாது’ தன் மனதை கல்லாகி, எங்கோ பார்த்தபடி “எனக்கு ஜூஸ் வேணும்”  என்றான் கட்டளை போல்.

சம்பந்தமில்லாமல் அவன் பேச்சின் திசை மாற, அவள் எதுவும் எதிர்த்து பேசவில்லை. கீதாவும் கெந்தி கெந்தி நடந்து படி இறங்கி ஏறி அவனுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.

“ம்… ச்…. ஆப்பிள் ஜுஸா? எனக்கு வேண்டாம். ஆரஞ்சு ஜூஸ் தான் வேணும்” ஜூஸை பார்த்துவிட்டு அவள் முகம் பார்க்காமல் கூற, அவள் கண்கள் சுருங்கியது.

எதுவும் பேசாமல், அவள் மீண்டும் வலியோடு படி இறங்க, ‘மற்ற நேரம் எல்லாம் பேசுவா. இப்ப பேசினா என்ன? என்கிட்டே முடியலைன்னு சொன்னால் என்ன?’  அவன் மனம் அவளுக்காக சிந்தித்தது.

அவன் கோபம் சற்று தணிய ஆரம்பித்தது.

அவள் முடியாமல் ஏறி அவன் கேட்டதை கொடுக்க, அதை வாங்கி வைத்தவன் அவள் தோள்களை தொட்டு, அவளை ஆழமாக பார்த்தான்.

அவன் கண்கள் மட்டுமின்றி அவன் மனம் முழுதும் அவளே நிறைந்து நின்றாள்.

“எனக்கு காபி சாப்பிடணும் போல இருக்கு. காபி கொண்டு வரியா?” அவன் ஆழமான குரலில் கேட்டான்.

சின்ன சிகரெட் சூட்டில் ஏற்பட்ட கொப்பளம் தான். ஆனால், நடந்து நடந்து அது சற்று பழுத்து வலியோடு இருந்தது.

அந்த வலியின் தாக்கத்தில் அவள் கால்களும் துவண்டு போயிருந்தன.

ஆசுவாசமாக அமர வேண்டும் என்ற எண்ணத்தோடு அவள் மேலே வந்திருந்தாள். அவன் காபி கேட்கவும், கீதா அவனை பரிதாபமாக பார்த்தாள்.

வெடுவெடுக்கென்று பேசும் அவளும் , அவன் கோபம் கொள்ளும் சில சமயங்களில் பொறுத்து போக வேண்டும் என்றே எண்ணினாள்.

அவன் அவள் கைகளை எடுத்து அவன் கன்னத்தில் வைத்தான்.

” என்னை கன்னத்தில் பளார் பளார்ன்னு அறையணுமுன்னு தோணுதா?” அவன் கேட்க, “…” அவள் மறுப்பாக தலை அசைத்தாள்.

“நான்  அடிக்கணுமுன்னா என் அண்ணனை தான் அடிக்கணும். அவன் கிட்ட தான் எனக்கு உரிமையும் இருக்கு. நான் அவனை அடிச்சிட்டேன். உங்க இழப்பின் வலியை என்னால் புரிஞ்சிக்க முடியும்” அவள் பதிலில் அவன் பல வித உணர்ச்சிகளுக்கு ஆளானான்.

அவள் புரிதலில் அவள் மீது பரிவு, அதே நேர அவன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தின் நினைவு கூர்த்தலாய் ஒரு தகிப்பு.

அவள் இடையை சுற்றி இருந்த அவன் கை அவள் மீது அழுத்தத்தையே காட்டியது.

“எனக்கு காபி வேணும்” அவன் குரலில் கோபத்தின் மீதி.

அவள் இப்பொழுது எகிறவில்லை. “எடுத்துட்டு வரேன்…” அவள் பொறுமையாக கூற, அவனுக்கு அவள் மீதே பரிவே உண்டானது.

பரிவோடு அவளை தீண்டிய நொடி அவன் கோபத்தை மறக்க செய்து, அவனை காதல் ஆட்கொண்டது.

“காபி வித் பிஸ்கேட்” என்றான் கண்களை சிமிட்டி கொண்டு, அவன் கண்கள் அவன் இதழ்கள் தீண்டிய இடத்தை வருடியது. அவளையும் மீறி கீதாவின் முகத்தில் வெட்கம் மையல் கொண்டது.

நொடிபொழுதில் அவள் முகத்தில் தனக்கான மயக்கத்தை கண்டுகொண்ட அவன் கைகள் அவளை உரிமையோடு தீண்டியது.

அவள் அவனிடமிருந்து விலகி, காபி எடுத்து வர பரபரக்க, காலில் ஏற்பட்ட வலியில் அவள் கெந்தி கெந்தி நடக்கையில் அவள் சரிய, அவளை அவன் தாங்கி பிடித்தான்.

அவள் சுதாரிப்பதற்குள், அவளை கைகளில் ஏந்தினான் ரவி.

அவன் தூக்கிய வேகத்தில் அவள் சற்று பதறிப்போனாள். அவள் அலற எத்தனிக்க, அவள் இதழ்களுக்கு அவன் முற்றுப்புள்ளி வைத்தான்.

அவள் தொண்டை ஏறி இறங்க, சொல்லில் வடிக்க முடியாத அவன் தீண்டலில் அவள் தேகம் நாணம் கொண்டது.

அவள் படுத்திருக்கும் அறையில் இல்லாமல், அவன் அறையை நோக்கி நடக்க, பிடிமானம் இல்லாமல் அவள் அவன் கழுத்தையே பிடித்துக் கொண்டாள்.

அவன் கோபம் அவளுக்கு தெரிந்தாலும், அவன் காலையில் கற்றுக்கொடுத்த காபி பிஸ்கெட் விளையாட்டில் அவளுக்கு சற்று அதிகமாகவே தைரியம் வந்திருந்தது.

‘இவனால் என்னை அதிகமாக வருத்தம் செய்ய முடியாது. இவன் என்னை கொடுமை செய்யும் அளவுக்கு மோசமானவனும் இல்லை.’ என்றும் கணித்திருந்தாள் கீதா.

“என்னை இறக்கி விடுங்க. எங்க தூக்கிட்டு போறீங்க?” அவள் வாகாக அவன் கைப்பிடியில் இருந்து கொண்டு, இரு கைகளாலும் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கேட்டாள். அவள் அவ்வாறு அமர்ந்திருந்த விதத்தில் இலவசமாக அவள் இதழ்களும், அவள் கன்னமும் அவன் முகத்தோடு உரசிக் கொண்டது.

தன் மனையாளின் உரிமையில் அவன் சற்று கிரங்கித்தான் போனான்!

“உன்னை பார்த்தா உண்மையில் இறக்கி விட சொல்ற மாதிரி தெரியலியே. இறக்கி விட சொல்றவங்க, இப்படி தான் ஜாலியா என் கழுத்தில் கை போட்டுப்பாங்களா?” அவள் அருகாமையை ரசித்தபடி அவன் கேலியாக கேட்டான்.

“உங்களை பார்த்தா கூடத்தான் என் அண்ணனை பழிவாங்க என்னை கல்யாணம் செய்த ஆள் மாதிரி இல்லை. நான் உங்களை ஏதாவது கேட்டேனா?” அவள் முறுக்கிக் கொண்டாள்.

“உன் அண்ணனை பழிவாங்க நான் ஏன் சாமியார் வாழ்க்கை வாழனும் கீது?” அவன் குரலில்  பலவித பாவனைகள் தெரிய கீதா சற்று சுதாரித்துக் கொண்டாள்.

அவன் தோள் மீதிருந்த அவள் கைகள் லகுத்தன்மையை விடுத்து இறுகி நின்றது.

தன் பேச்சை தொடர்ந்த அவள் செய்கையை அவன் மனமும் குறித்து கொண்டது.

“நான் உங்களை பிடிக்காமல் வந்தா, நீங்க என்னை டம்முனு கீழ போட்டுட்டா என் இடுப்பு தானே உடையும்? ஆபத்துக்கு பாவம் இல்லை” அவள் கூற, “என் மேல அவ்வளவு நம்பிக்கையா?” அவன் குரலில் கேலி இருந்தாலும், அழுத்தமும் இருந்தது.

“என் அண்ணன் நியாபகம் வந்தா, நீங்க என்னை கீழே போட்டு மிதிக்க கூட செய்வீங்க” அவளும் அழுத்தமாகவே கூறினாள்.

அவள் கூற்றில் இப்பொழுது அவன் கலகலவென்று சிரித்தான்.

“ஆமா, உங்க அண்ணன் செய்த வேலைக்கு உனக்கு தான் தண்டனை. உன்னை என் ரூமில் கொண்டு போய் பயங்கரமான தண்டனை கொடுக்க போறேன். என் ரூமிலிருந்து கத்தினால் யாருக்கும் வெளிய கூட கேட்காது. யாரும் உன்னை காப்பாற்ற வர மாட்டாங்க.” அவன் கண்களில் கேலியோடு அவளை மிரட்ட,

“தண்டனை கொடுங்க, அப்புறம் பயங்கரமா இல்லையான்னு நான் சொல்றேன்” அவனுக்கு சிறிதும் அஞ்சாமல் அவள் உரைக்க, அவளை அவன் மெத்தையில் மென்மையாக இறக்கி விட்டான்.

“எ…” அவள் எதுவோ பேச ஆரம்பிக்க, “ஷ்… என் ரூம் நான் பேச சொன்னால் தான் பேசணும். அதுவும் உன்னை இங்க தான் அடைச்சு வைக்கலாமுன்னு இருக்கேன்” அவன் கூற,

 அவள் அந்த அறையை நோட்டமிட்டு, “நல்ல வசதியா தான் இருக்கு. உங்களுக்கு அடிக்கடி ஜூஸ் எடுத்திட்டு வர வேண்டாம். இப்படியே அடைச்சு வச்சிருங்க.” அவள் கூற, “ஓய்ய்ய்…” அவன் அவளை கடுப்பாக பார்ப்பது போல் பார்த்துவிட்டு தன் அலமாரியை திறந்தான்.

மருந்தை எடுத்து, அவள் கால்களுக்கு மருந்திட, அவள் படக்கென்று தன் கால்களை உருவிக் கொள்ள முயல அவன் அவள் கால்களை இறுக பற்றினான்.

அவன் பிடிக்க, அவள் விலக அவள் சேலை சற்று விலகி அவள் கணுக்கால் தெரிய ஆரம்பித்தது.

சட்டென்று அவள் கால்களை அசைக்காமல், அவன் சொற்படி நீட்டிக்கொண்டாள்.

அவன் மருந்திட, அவள் வலியில் முகம் சுளித்தாள்.

“வலிக்குதா கீதா?” அவன் அக்கறையோடு கேட்டான்.

“வலிக்கணும்னு தானே அத்தனை தடவை ஜூஸ் எடுத்துட்டு வர சொன்னீங்க?” அவள் கண்கள் இப்பொழுது வலியில் கண்ணீரை விட எத்தனித்து அதை உள்ளிழுத்து கொண்டது.

அவன் இப்பொழுது அவள் பாதங்களை மெல்ல நீவிவிட்டான்.

அவன் ஆள்காட்டி விரல் அவள் பாதங்களை மென்மையாக வருட, அவளுள் மின்சாரம் பாய்வது போன்ற மெல்லிய உணர்வு. அவன் மென்மையில், அவ்வப்பொழுது அவன் காட்டும் நட்பில் அவள் கரைய எத்தனிக்க, அவள் விழித்துக் கொண்டாள்.

‘இவன் என் அண்ணனை பழி வாங்க, என்னை பயன்படுத்தி கொண்டிருக்கிறான். என்னை என்று வேணும்ன்னாலும் தூக்கி எரிவான்  இந்த ரவி.’ அவனை பற்றிய எண்ணம் மேலோங்க, “மருந்து போட்டது போதும்” அவள் தன் பாதங்களை சட்டென்று உருவிக் கொள்ள, அவன் அவள் போக்கிற்கு இசைந்து கொடுத்தான்.

சோர்வான அவள் முகம் அவனை தாக்கியது.

“ஜூஸ் குடி” அவன் நீட்ட, “இந்தா ஆப்பிள் ஜூஸ். அது தானே உனக்கு பிடிக்கும்” அவன் அவளுக்கு இயல்பாக நீட்ட, அதை வாங்கி அவள் குடித்தாள்.

அவன் அவளை பார்த்தபடி, ஆரஞ்சு ஜூஸை பருகினான்.

ஆப்பிள் ஜூஸை பருகியவள் சட்டென்று நிறுத்தினாள்.

“எனக்கு ஆப்பிள் ஜூஸ் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” ஜூஸ் உள்ளே சென்ற தெம்பில் அவள் கேட்க, அவன் அகப்பட்டு கொண்டவன் போல் விழித்தான்.

உன்னை பின் தொடர்ந்து காதலித்த காலத்தில் உன்னை பற்றி அறிந்தவை என்று சொல்லவா முடியும்?

 அவன் அவள் கன்னம் தட்டி, “உன்னை கடத்தி கொடுமை பண்ண இதெல்லாம்  தெரிந்திருக்க வேண்டாமா?” அவன் கேட்க,

“நம்புற மாதிரி இல்லையே” அவள் எதையும் கண்டுபிடிக்க முடியாமல், குத்து மதிப்பாக கூறினாள்

“இப்ப இவ்வளவு பேசுறல்ல? அப்ப ஜூஸ் எடுத்துட்டு வரும் பொழுதே என்னால் முடியாது. கால் வலிக்குதுன்னு சொல்ல வேண்டியது தானே?” அவனிடம் அவள் கேட்காத விதத்தில் ஒரே நாளில் உரிமை பெற்ற கணவனாய் அவன் சீறினான்.

“கால் வலின்னு தெரிந்து தானே எடுத்துட்டு வர சொல்லறீங்க. என் அண்ணனை எதுவும் செய்ய முடியாத கோபத்தை என் மீது காட்டறீங்க? நான் உங்க கிட்ட கெஞ்சணுமா?” அவளும் சீறினாள்.

“மேடம் என் கிட்ட கெஞ்ச மாட்டீங்க?” அவன் கோபமாக கேட்க, “கெஞ்ச என்ன? உங்க கிட்ட கேட்க கூட மாட்டேன்.” அவள் நிமிர்வாக கூற, அவன் அவளை கோபமாக முறைத்து பார்த்தான்.

‘நீ என்னிடம் கெஞ்ச வேண்டாம். கேட்டாலே போதும்.’ அவன் மனம் அவளுக்காக இளகினாலும், அதை வெளிப்படுத்த அவன் விரும்பவில்லை.

அவன் மெத்தையிலிருந்து எழுந்து அவள் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் கீதா.

வாசல் வரை சென்றவள், அவனை திரும்பி பார்த்தாள். “சாதாரணமா கூட உங்க கிட்ட எதிர்த்து நிற்பேன். என்னை நீங்க வலிக்க வைக்கணும்னு நினைச்சா, துடிக்க துடிக்க அந்த வலியை நான் அனுபவிப்பேன். அது என் அண்ணன் செய்த தப்புக்கு நான் ஏத்துக்குற தண்டனை. அதே நேரத்தில், உங்களால் என் அண்ணன் கிட்ட காட்ட முடியாத உங்க வீரத்தின் இயலாமைன்னு நான் நினைப்பேன்.” கூறி கொண்டு அவள் மெத்தையில் படுத்துக் கொண்டாள்.

அவள் சாமர்த்தியசாலித்தனத்தில் அவன் உதடு வளைந்தது.

‘கேட்க மாட்டியா? கெஞ்ச வைப்பேன். அவன் தங்கையா நீயும், அவன் மனைவியா தாரிணியும் என் காலில் விழுந்து கதறணும். உங்க அண்ணனை தேடி கதறுவீங்க. நாளைக்கே அது நடக்கும்’ அவன் தன் நெற்றியை தடவிக் கொண்டான்.

***

மணி இரவு பத்தை தாண்டி இருந்தது.

தாரணி வாசல் கதவு மேல் சாய்ந்து ஜீவாவுக்காக காத்திருந்தாள்.

‘மதியானமும் சாப்பிடலை. ராத்திரி சாப்பாட்டுக்காவது ஜீவா வந்திருவான்னு பார்த்தேன் இன்னும் வரலையே.’ அவள் யோசனையோடு காத்திருந்தாள்.

‘வேலை தேடி போன இடத்தில இவ்வளவு நேரமா ஆகும்? யாரிடம் கேட்க?’ அவள் குழம்பி நின்றாள்.

‘நம்ம வீட்லையாவது டெலிபோன் இருக்கும். இங்க எங்க இருக்கும். முனை கடையில் இருக்கலாம். ஆனால், யாருக்கு அழைத்து கேட்க, ஜீவா நண்பர்கள் வீட்டுக்கு தான் கூப்பிடனும். அதுவும் இந்த நேரத்தில் எந்த கடைக்கு போய் ஃபோன் செய்ய?’ தாரிணி செய்வதறியாமல் அந்த வீட்டிற்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

‘கோபத்தில் கொஞ்ச நேரம் ஜீவா வெளிய இருப்பான். இவ்வளவு நேரமா?’ அவள் மனம் பரிதவித்தது.

‘ஜீவாவுக்கு எதுவும் ஆபத்தா?’ அவள் இதய துடிப்பு எகிறியது.

‘ஜீவா எங்கே? ஏன் இன்னும் வீடு திரும்பவில்லை?’ என்ற கேள்வி அவள் மண்டையை குடைய செய்வதறியாமல் திகைத்தாள் தாரிணி.

 நதி பாயும்…