jeevanathiyaaga_nee – 17

JN_pic-08d325eb
Akila Kannan

ஜீவநதியாக நீ…  

அத்தியாயம் – 17

காவல்துறை ஷண்முகத்திற்கு தெரிந்தவர்கள். சட்டென்று ரவியை கண்டுகொண்டனர். அவர்கள் ஜீவாவை கொத்தாக பிடிக்க, அங்கிருந்த கூட்டமோ ஜீவாவிற்கு சாதகமாக நின்றது. ஜீவா அவ்வப்பொழுது தேநீர் கடைக்கு வருவதால் அவனுக்கு அனைவரையும் தெரிந்திருந்தது. ரவி அங்கு வந்து வேண்டுமென்றே வம்பிழுத்ததாக சுற்று வட்டாரம் கூற, காவல்துறையினர் இருவரையும் கண்டிப்பது போல் கண்டித்துவிட்டு விலகும் சூழ்நிலையே உருவாகியது.

காவல்துறை சென்றதும், “அதிகாரமும் அரசியலும் பணம் இருக்கும் பக்கம் சாயலாம். ஆனால், அன்பும் மக்களும் என்னைக்கும் நியாயத்தின் பக்கம் தான்” ஜீவா நக்கலாக ரவியை பார்த்து கூற, ரவி கோபமாக தன் புல்லட்டை எட்டி உதைத்தான். “ஜீவா, நான் அடிக்க மாட்டேன் உன்னை. ஆனால்…” வாக்கியத்தை முடிக்காமல் நக்கலாக சிரித்து தன் புல்லட்டை வேகமாக செலுத்தினான் ரவி.

ரவி சென்றதும், ஜீவாவின் அருகே வந்தார் தேநீர் கடைக்காரர். “இன்னா தம்பி உனக்கு இன்னா கோபம் வருது? கொஞ்சம் கம்முனு இருக்கலாமே?” அவர் கேட்க, ஜீவா மௌனமாக தலை அசைத்தான். “அந்த தம்பி, உனக்கு தெரிஞ்ச தம்பியா?” என்று அவர் வினவ, “அப்படியும் சொல்லலாம்” என்றான் சிரித்த முகமாக.

“இன்னா சொல்ற நீ?” அவர் யோசனையாக கேட்க, “என் தங்கை புருஷன்னு சொல்லலாம். இல்லை, என் மனைவிக்கு அண்ணன்னு சொல்லலாம். அவனுக்கு நான் விரோதின்னும் சொல்லலாம்” ஜீவா கூற, “பெருசா இருக்கும் போலையே உங்க கதை” அவர் இழுக்க, ஜீவா எதுவும் பேசவில்லை. “ரொம்ப சோர்வா இருக்க. இந்தா டீயும், பன்னும் துன்னு” அவர் கொடுக்க, அவனும் வாங்கிக் கொண்டு யோசனையோடு சாப்பிட்டான்.

“ஐயா, நீங்க எனக்கு நிறைய உதவி பண்ணிருக்கீங்க.” ஜீவா ஆரம்பிக்க, “இன்னா தம்பி பெரிய உதவி. நீ எனக்கு வேலை செய்யுற… நான் துட்டு கொடுக்கறேன். அவ்வுளவு தான்” அவர் கூற, “உங்களுக்கு தெரியலை, நீங்க எனக்கு பண்ற உதவி. நானும் என் மனைவியும் வீட்டை வீட்டு வெளிய வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். என் மனைவியோட வீடு ரொம்ப செல்வாக்கான வீடு.” ஜீவா நிறுத்த, “உன் பொஞ்சாதி வூட்டு செல்வாக்குக்கு சமமா கொள்கைகளும் கர்வமும் கொண்டவன் நீ” அவர் சிரிக்க, ஜீவாவும் அந்த சிரிப்பில் சேர்ந்து கொண்டான். “நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.” ஜீவா மீண்டும் சிரித்துக் கொண்டான்.

“என் படிப்புக்கு ஏத்த வேலை இன்னும் கிடைக்கலை. என் இப்போதைய தேவை பணம். அதுக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு. எனக்கு சீக்கிரம் ஒரு பெரிய வேலை கிடைக்கும். அப்ப, நீங்க செய்த உதவிக்கெல்லாம் நான்…” அவன் பேச, தேநீர் கடைக்காரரோ, “இன்னா தம்பி, நான் உன் கைமாறை எதிர்பார்த்தா இந்தாண்ட குந்திக்கின்னு இருக்கேன். நான் பெத்த மகனே என்னை அம்போன்னு விட்டுட்டு போய்ட்டான். நீ சொல்றதே போதும் தம்பி” அவர் தழுதழுத்த குரலோடு உள்ளே எழுந்து செல்ல, ‘நான் என் அம்மா அப்பாவை இப்படி தானே விட்டுட்டு வந்துட்டேன்’ ஜீவாவின் கண்கள் கலங்கியது.

பேருந்தில் கூட ஏற சிந்தை இல்லாமல் தன் தாய் தந்தையை எண்ணி அவன் பொடி நடையோடு வீட்டை நோக்கி சென்றான்.

வீட்டில் தாரிணி வாசலை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ‘ஜீவா இன்னும் வரலையே. மாதம் ஒன்றாம் தேதி முதல் வேலை என்றான். இன்று பக்கத்தில் போய் வருவதாக தானே சொன்னான். ஜீவாவுக்கு என்ன ஆச்சு?’  அவள் விழிகள் அவனை தேடியது. ‘எல்லா தப்பும் என் மேல தான். ஜீவா பாவம். நான் தான் அவசரப்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்து ஜீவாவுக்கு நேரம் கொடுக்காமல் அவனையும் தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டுடேன். என்னால் தான் ஜீவாவும் அவன் வீட்டை விட்டு பிரியுற மாதிரி ஆகிருச்சு’ அவள் எழுந்து வீட்டில் குறுக்கும் நெடுக்கும் நடந்தாள்.

‘ஜீவா அப்படியே நிறைய பரிசுகள் கொடுத்து காதலை புரியும் விடலை பையன் கிடையாது. சராசரி ஆண்களிடமிருந்து மாறுபட்டவன் தான். ஆனால், அவனுக்கு என் மீது ஆசையும், காதலும் உண்டு. ஜீவாவுக்கு என்னை பிடிக்கும்.’  அவ்வப்பொழுது அவன் இதழ் தீண்டி சென்ற இடத்தை நாணத்தோடு தடவிக்கொண்டாள் தாரிணி.

‘ஜீவா, வேலைக்கு போக வேண்டாமுன்னு சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும். நான் ஏன் ஜீவா மீது கோபப்பட்டேன். ஜீவாவின் முதல் லட்சியம் வாழ்வின் முன்னேற்றம் . அதுக்கு நான் உறுதுணையா இருக்கணுமேயொழிய தடங்கலா இருந்திடவே கூடாது.’ அவள் சிந்தை அவசர முடிவு எடுக்க, “தாரிணி, ஜீவா கிட்ட கோபப்படக்கூடாது… தாரிணி, ஜீவா கிட்ட கோபப்படக்கூடாது… தாரிணி, ஜீவா கிட்ட கோபப்படக்கூடாது…” பலமுறை தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டாள் தாரிணி.

ஜீவா பொடி நடையாக வீடு வந்து சேர்ந்தான். “ஜீவா, ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” அவள் கேட்க, “ஒண்ணுமில்லை தாரிணி” அவன் தன் கண்களை இறுக மூடி அமர்ந்தான். அவன் சட்டையை பார்த்தாள். ஏதோ சண்டை என்று அறிந்து கொண்டவள் அவன் முகம் பார்த்து எதுவும் கேட்காமல், அவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தாள். ஜீவாவும் எதையும் சொல்லி தாரிணியை கஷ்டப்படுத்த விரும்பாமல் அமைதி காத்தான்.

அவன் கைகளுக்கு இடையில் தன் கைகளை கோர்த்துக்கொண்டு, “உங்க அம்மா அப்பாவை பார்த்திட்டு வரியா ஜீவா?” அவள் கேட்க, அவன் அவளை அதிர்ச்சியாக பார்த்தான். “என்ன அப்படி பார்க்குற ஜீவா?” அவள் புன்னகைக்க, “எப்படி கண்டு…கண்டுபிடிச்ச?” ஜீவா இப்பொழுது தடுமாறினான். “நான் கொஞ்சம் அவசரக்குடுக்கை தான். ஆனால், புத்திசாலி” தாரிணி இப்பொழுது முறுவலித்தாள். “உன் முகம் சொல்லுது ஜீவா, உன் மனசை. நான் உன் முகம் பார்த்து காதலித்தவள் இல்லை. உன் இன்சொற்கள் கேட்டு உன்னை காதலிக்கலை ஜீவா. உன் மனசை பார்த்து, உன் மனசின் நியாயமான பேச்சை கேட்டு உன்னை காதலிச்சவள் ஜீவா” அவள் கூற, “தாரிணி…” அவள் தோள் சாய்ந்து கொண்டான்.

“நான் எங்க அம்மாவை பார்க்கணும். என் அப்பாவை பார்க்கணும். ஒரு ரூபாய் சம்பாதிக்க நான் கஷ்டப்படும் பொழுதுதான் அப்பாவின் அருமை முகத்தில் அடிக்குது.” அவன் குரல் உடைந்திருக்க, “நீ போய் பார்த்திட்டு வா ஜீவா” தாரிணி கூற, “நீ வரலையா தாரிணி?” அவன் கண்கள் இடுங்கியது. “நீ முதலில் போயிட்டு வா ஜீவா. நான் அப்புறம் வரேன்” அவள் முகத்தில் சிந்தனை ரேகைகள். “நான், முதலில் வேலைக்கு போகணும் தாரிணி. நான் வேலைக்கு போன பிறகு தான், அப்பாவை பார்ப்பேன். என்னால், அப்ப தான் அம்மா முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியும். வேலையில் சேர்ந்த பிறகு, நான் அம்மா அப்பாவை பார்த்திட்டு வரேன்” ஜீவா உறுதியாக கூறிவிட தாரிணியும் தலையசைத்துக் கொண்டாள்.

***

ரவி கோபத்தில் எங்கெங்கோ சுற்றிவிட்டு வீடு வந்து சேர்ந்தான். ‘நான் ஜீவா மேல் உள்ள கோபத்தை கீதா மேல காண்பிக்க கூடாது… காண்பிக்க கூடாது… காண்பிக்க கூடாது’ தன் வழி முழுதும் தன்னை அறிவுறுத்திக் கொண்டே வந்தான் ரவி. ‘ஜீவாவின் மேல் உள்ள கோபத்தை கீதா மேல் காட்ட, கீதா என்ன ஜீவாவின் தங்கையா? கீதா என் மனைவி!’ காதல் கொண்ட அவன் மனம், கீதாவுக்கும் அவன் மனதிற்கும் சாதகமாக யோசிக்க ஆரம்பித்தது.

அவன் கோபம் அடங்கவில்லை. தன் புல்லட்டை நிறுத்திவிட்டு, மடமடவென்று மாடி ஏறினான். கீதாவின் கண்கள் அவன் கணவன் மீதே இருந்தது. வேலை கிடைத்த சந்தோஷத்தில் இருந்தாள். அவனுக்கு சூடாக காபி தயாரித்து, இரண்டு பிஸ்கேட்டும் எடுத்து வைத்தாள். அந்த பிஸ்கட்டை எடுத்து வைக்கும் பொழுது, ரவி கூறும், ‘காபி வித் பிஸ்கேட்’ அவள் செவிகளில் எதிரொலிக்க , அவள் முகத்தில் வெட்க புன்னகை வந்தமர்ந்து.

கீதா, அவனுக்கு காபியையும் சிற்றுண்டியையும் எடுத்துக்கொண்டு அவர்கள் அறை நோக்கி செல்ல, தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டு, முகத்தை கழுவி சட்டையை கழற்றினான் ரவி. சூடான டீ விழுந்த இடம் சிவந்திருந்தது. “ம்… க்கும்…” கீதா குரல் கொடுக்க, அவன் துண்டை போர்த்தியபடி வெளியே வந்தான்.

“காபி வித் பிஸ்கேட்” கீதா பிஸ்கட்டை நீட்ட, அவன் முகத்திலும் புன்னகை வந்தமர்ந்து அவள் உற்சாகம் அவனையும் தொற்றிக் கொண்டது. “என்ன மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்கு?” அவன் புருவங்களை  உயர்த்த, “இன்னைக்கு ஸ்கூலில் குழந்தைகள் ரொம்ப சேட்டை செய்தா, ரொம்ப பேசினா அடிக்க பிரம்பு தருவேன்னு சொன்னாங்க. அதை வீட்டுக்கும் எடுத்திட்டு வர அனுமதி உண்டுன்னு சொன்னாங்க. இனி, நீங்க ரொம்ப பேசினால் அந்த பிரம்பு உதவும்னு ஒரு ஆனந்தம் தான்.” அவள் நீட்டி முழுக்க அவன், “ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தான்.

“வேலை கிடைத்ததை இதை விட யாரும் தெளிவா, அழகா சொல்ல முடியாது” அவனும் கேலியாகவே மெச்சி மீண்டும் முன்னும் பின்னும் அசைந்து சிரித்தான். அவன் சிரிக்க, அவன் உடல் அசைய அவன் போர்த்தியிருந்த துண்டு விலகியது. பரந்து விரிந்த அவன் மார்பையும், கட்டான அவன் தோற்பட்டையும் பார்க்க நாணம் கொண்டு அவள் விழிகள் படபடவென்று இமைத்துக்கொண்டு கீழே குனிய, அவன் கண்கள் அவளை ரசனையோடு பார்த்தன.

அவள் இமைகள் படபடப்புக்கு இடையே, சிவந்திருந்த அவன் தேகத்தை பார்த்ததும் அனைத்தையும் மறந்து படபடப்போடு அவனை நெருங்கின. அவள் கைகள் அவன் இதயத்தை உரிமையோடு வருடின. “என்ன ஆச்சு?” அவள் பதட்டமாக கேட்க, அவன் உருகி நின்றான். ‘இவள் என் மனைவி. இவளுக்கு என்  மேல் அக்கறை உண்டு. இவளுக்கு என்னை பிடிக்கும்.’ அவள் கைபட்ட அவன் இதயம் அவளை கிரகித்து கொள்ள ஆரம்பித்தது.

“என்ன ஆச்சுன்னு கேட்குறேனில்லை?” அவள் குரல் இப்பொழுது உயர்ந்தது. “அதெல்லாம் ஒன்னும் இல்லை கீதா” அவன் மறுப்பாக தலையசைக்க, “நிறைய காயம் இருக்கு. இது சூடு பட்ட மாதிரி இருக்கு?” அவள் பதட்டத்தில் சத்தமாக பேச, “உஷ்…” அவன் அவள் இதழ்களை தன் ஆள்காட்டி விரலால் மூடினான். “சத்தம் போடாத. வீட்டில் எல்லாருக்கும் தெரிஞ்சிடும்” அவன் அவள் செவியோரமாக கிசுகிசுத்தான்.

“நான் மருந்து போடறேன்” அவள் மருந்தை எடுத்துவந்து அவனுக்கு மென்மையாக  தடவினாள். ‘மச்சான்… அப்பப்ப இந்த மாதிரி ஏதாவது கவனி. உன் தங்கையும் என்னை நல்லா கவனிக்குறா. எனக்கும் கொஞ்சம் கிக்கா இருக்கும்…’ அன்று ஜீவா கடுப்பேற்ற கூறியது இன்று கீதாவின் அருகாமையில் அவள் விரல் தீண்டலில் அவள் சுவாச வெப்பத்தில் அவனுக்கு நினைவு வந்தது.

“யார் கூட சண்டை? என்ன பிரச்சனை?” கீதா குறியாக நிற்க, “உங்க அண்ணன் கூடத்தான் பிரச்சனை” என்றான் சுருக்கமாக. “அதை ஏன் நீங்க வந்ததும் சொல்லலை?” ஏதோ வழமையாக உரிமை கொண்டாடும் மனைவி போல் கீதா சற்று கோபமாக பேச ஆரம்பித்தாள். அந்த உரிமையான கோபம் அவனை மயிலிறகால் வருடியது. “உன் அண்ணன் பிரச்னையை உன் வரை கொண்டு வர கூடாதுன்னு நினைச்சேன்” அவன் அசட்டையாக கூறினான். அவன் பேசப்பேச அவள் விரல்களில் மென்மை குறைந்து கடினம் வந்தமர்ந்து.

“என் அண்ணன் கிட்ட சண்டைக்கு போனீங்களா?” அவள் கேட்க, அவனிடம் மௌனம். அவள் கைகள் அவனுக்கு கோபமாக மருந்திட, “வலிக்குது கீதா” அவன் தன்மையாக கூறினான். “என் அண்ணனை அடிசீங்களா?” அவள் விரல்கள் இன்னும் அழுத்தத்தை கூட்ட, அவன் முகம் வலியில் சுருங்கியது.

“ஆமா…” அவன் குரல் வலியோடு அழுத்தமாக வர, அவள் விரல் கோபத்தோடு அவன் தேகத்தில் படபடவென்று மருந்தை தடவ, அவன் அவள் கைகளை பிடித்தான். அவன் பிடித்ததும் அவள் சட்டென்று அவன் முகம் பார்த்தாள். அவன் பிடியில் கோபம் இல்லை. அவன் கண்களில் கோபம் இல்லை.

“உங்க அண்ணன் என்ன பண்ணானு நீ கேட்கவே மாட்டியா கீதா?” அவன் கண்கள் அவளை கூர்மையாக பார்த்து கேட்டன. “எங்க அண்ணன் நியாமானவன். அவன் தப்பு பண்ணிருக்க மாட்டான்” அவளும் அவன் முகம் பார்த்து கூறினாள். அவன் தேகம் இறுகியது. அவள் தீண்டலில் அவன் நெஞ்சோரம் பெய்த மாமழை இப்பொழுது வறட்சி காண ஆரம்பித்தது. ஜீவாவின் மேல் எழும் கோபத்தை கீதாவின் மேல் காட்ட அவன் உடல் அணுக்கள்  அனைத்தும் துடித்தது.

தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். அவள் கைகளை தன் இதயத்தின் மேல் வைத்து அதன் மீது அவன் கைகளை வைத்தான். அவன் இதயத்தின் துடிப்பை அவள் கைகள் உணர, அவள் உடல் எங்கும் சொல்லில் வடிக்க முடியாத உணர்வு.

“கீது…” அவன் குரல் ஆழமாக வெளிவந்தது. “உனக்கு என்னை பிடிச்சிருக்கு.” அவன் கூற, அவள் பதிலேதும் பேசவில்லை. “ஆனால், உங்க அண்ணனுக்கு அப்புறம் தான் நான் இல்லையா?” அவன் கேட்க, அவள் தன் கைகளை உருவிக்கொள்ள முயன்று தோற்று போனாள். காலத்தின் போக்கில் அவனிடம் அவள் வீராப்பும் தோற்றுப்போகும் என்பது போல் இருந்தது அந்த செய்கை.

“கீதா, நீயாவது என் பக்கத்தில் இருந்து யோசிக்க கூடாதா?” அவள் குரல் ஏக்கமாக ஒலிக்க, அவன் கேள்வியும் அவன் கேட்ட விதமும் அவளை ஏதோ செய்ய, அவள் அவனை அதிர்ச்சியாக பார்க்க, அவன் அவளின் பதிலுக்காக காத்து நின்றான்.

நதி பாயும்…