kkavithai02
kkavithai02
கவிதை 02
கொழும்பு விமான நிலையம். ரிஷி தன் உடமைகளோடு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தான். அன்றைக்கு அவன் நல்ல நேரம், சூரிய பகவான் தன் பொற்கதிர்களின் வீரியத்தைக் கொஞ்சம் குறைத்திருந்தார். மழை வரும் அறிகுறிகள் தென்பட்டது. அந்த இதமான வானிலையை அனுபவித்தபடி தனக்காக அமர்த்தப்பட்டிருந்த டாக்சியில் ஏறி உட்கார்ந்தான்.
பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இலங்கை வருகிறான் ரிஷி. அவன் பெற்றோரின் தாய்நாடு. அவர்களுக்குப் பிறகும் தங்கள் தாய்நாட்டோடு ரிஷி தொடர்பில் இருக்க வேண்டும் என்பது அவனது தாயின் ஆசை. அந்த மண்ணில் கால் வைத்த போது தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய திருப்தி உண்டாகவும் மனது நிறைந்தாற் போல உணர்ந்தான் இளையவன். அலைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான். அவனது பெரியம்மாதான் அழைத்துக் கொண்டிருந்தார்.
“அன்னம்மா!”
“ரிஷி கண்ணா!” பெரிய தாயின் அழைப்பில் ரிஷியின் கண்கள் லேசாகக் கலங்கியது.
‘அன்னபூரணி’ அவன் அம்மாவின் தமக்கை. அவருக்கு ஒரேயொரு பெண் குழந்தை மட்டும் இருந்ததால் ரிஷி மேல் எப்போதும் பாசமாக இருப்பார். இவனுக்கும் பெரியம்மா என்றால் அவ்வளவு பிடிக்கும். அன்னம்மா என்றுதான் அழைப்பான்.
“எங்கடா ராஜா இருக்கே இப்போ?”
“இப்போதான் ஏர்போர்ட்டில இருந்து கிளம்புறேன் அன்னம்மா.”
“பயணம் சௌகர்யமா இருந்துச்சா?”
“அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்லை, இன்னைக்கு கொழும்பு வெதர் கூட ரொம்ப கூலா இருக்கு அன்னம்மா.”
“அன்னம்மாவோட ஊருக்கு வந்துட்டா நீ வெதரை பத்திக் கவலையே படவேணாம் கண்ணா, சும்மா ஜில்லுன்னு இருக்கும்.”
“ஹா ஹா… ஞாபகம் இருக்கு அன்னம்மா.” இப்போது ரிஷி சிரித்தான்.
“பொய் சொல்லாதே, பதினைஞ்சு வயசிலே வந்தது நீ, அதுக்கப்புறம் இந்த அன்னம்மாவைப் பார்க்க நீ வரவேயில்லை.”
“அதான் இப்பல்லாம் வாட்சப்ல அடிக்கடி உங்கக்கூடப் பேசுறேனேம்மா.”
“ஃபோன்ல பேசுறது உன்னைப் பக்கத்துலேயே வெச்சுப் பார்க்கிற மாதிரி வருமாடா ரிஷி கண்ணா.” அந்த அன்பான வார்த்தைகளில் ரிஷியின் மனம் நெகிழ்ந்து போனது.
அம்மா உயிரோடு இருக்கும் வரை அன்னபூரணியோடு இந்தளவிற்கு ரிஷி ஒட்டுதலாக இருந்ததில்லை. பாசம்… அது எப்போதும் இருப்பதுதான். ஆனால், அன்னை மறைந்த பிறகு அந்த இடத்தை பெரிய தாய் வெகுவாக இட்டு நிரப்பினார். தன்னை விட வயதில் குறைந்த தன் தங்கையின் இழப்பு அவரையும் வெகுவாக வாட்டி இருக்கும் போலும், ரிஷியோடு அடிக்கடி பேச ஆரம்பித்தார்.
“சரி அன்னம்மா, சீக்கிரமா வந்து சேர்றேன்.”
“சரிடா கண்ணா.”
சீட்டில் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்தான் ரிஷி. இன்னும் இரண்டு நாட்களில் அவன் அன்னம்மாவின் மகள் காயத்ரிக்கு கல்யாணம். அதனால்தான் அத்தனை வேலைகளையும் தூக்கித் தூரப் போட்டுவிட்டு இலங்கை கிளம்பிவிட்டான். ஒரு வாரம் பெரியம்மாவின் குடும்பத்தோடு தங்கலாம் என்று முடிவு செய்திருந்தான்.
பெரியம்மா மாத்திரமல்ல, பெரியப்பா பாண்டியனும் மிகவும் நல்ல மனிதர். ரிஷி இந்தப் பயணத்தை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துத்தான் கிளம்பி இருந்தான். அவனது பெரிய தாய் வசிப்பது இலங்கையின் மத்திய மலைப் பகுதியான ‘நுவரெலியா’ வில். இலங்கையின் குளிர்ப்பாங்கான பிரதேசம் அது. நுவரெலியா வில் மிகவும் பிரபலமான தாவரவியல் பூங்கா அமைந்திருக்கும் ‘ஹக்கல’ தான் அன்னபூரணி வசிக்குமிடம்.
நான்கரை மணித்தியாலங்கள் கொழும்பிலிருந்து பயணம் செய்ய வேண்டும் அங்கு செல்ல. A7 பாதையில் கார் வேகமெடுக்க ஒரு புன்னகையோடு அமர்ந்திருந்தான் ரிஷி. மீண்டும் அலைபேசி அவனைக் கலைத்தது. ஒரு சலிப்போடு ஃபோனை பார்த்த ரிஷி நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“ஆலிவர் எதுக்கு இப்போ என்னைக் கூப்பிடுறான்?!” வாய்விட்டே பேசியவன் மீண்டும் அலைபேசியை காதுக்குக் கொடுத்தான்.
“சொல்லு ஆலிவர்.”
“ரிஷி… லேன்ட் ஆகிட்டியா?” நண்பனின் குரலில் இருந்த பேதத்தை ரிஷி சட்டென்று கண்டு கொண்டான்.
“என்னாச்சு ஆலிவர்?”
“ரிஷி…” ஆலிவர் எதையோ பேசத் தயங்க ரிஷியின் தாடை இப்போது இறுகியது.
“எதுவா இருந்தாலும் சொல்லு ஆலிவர்.”
“ரிஷி… கூல் டவுன்.”
“நான் என்னோட ஹாலிடேயை என்னோட ஃபேமிலியோட ஸ்பென்ட் பண்ணுறதுக்காக வந்திருக்கேன், அது உனக்கு நல்லாவேத் தெரியும்.”
“புரியுது ரிஷி, ஆனா உன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியணுமில்லையா? அதனாலதான் இப்போ உன்னைக் கூப்பிட்டேன்.”
“எனக்கு எதுவும் தெரியவேணாம், இப்ப மட்டுமில்லை, இனி எப்பவுமே எதுவுமே தெரிய வேணாம், புரியுதா உனக்கு?” அதற்கு மேல் ஆலிவரை பேச விடாமல் ரிஷி அழைப்பைத் துண்டித்து விட்டான்.
அடுத்த முனையில்… ஆலிவருக்கு என்ன சொல்வதென்றேப் புரியவில்லை. மௌனமாகிப் போயிருந்த தன் அலைபேசியையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். இம்முறை அவனை அணுகியது ஷார்லட் அல்ல. அவள் அழைத்து ஏதாவது பேசி இருந்திருந்தால் ஆலிவர் அதை ரிஷியின் காதுவரைக் கொண்டு போயிருக்க மாட்டான்.
ஆனால்… சற்று நேரத்திற்கு முன்பாக அவனை அழைத்தது ஷார்லட்டின் அம்மா. அந்த வயதான பெண்மணியின் கண்ணீரை ஆலிவரால் புறக்கணிக்க முடியவில்லை. அதனால்தான் ரிஷியை சட்டென்று அழைத்திருந்தான். ஆனால் இப்படிக் கோபப்படுபவனிடம் எதைச் சொல்ல, எப்படிச் சொல்ல? ஆலிவருக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. தலையைத் தன்னிரு கைகளாலும் தாங்கிக் கொண்டான்.
நண்பர்கள் பலர் அந்தக் குழுவில் இருந்தாலும் ரிஷிக்கும் ஆலிவருக்கும் இடையில் கொஞ்சம் நெருக்கம் அதிகம். இருவரது அலைவரிசையும் பெரும்பாலும் ஒத்துப்போகும். ரிஷி எப்போதுமே தனது சுக, துக்கங்களை தன் நண்பனிடம் ஒளிவு மறைவின்றிப் பகிர்ந்து கொள்வான். ஆலிவருக்கும் ரிஷியை மிகவும் பிடிக்கும். ஒரு பௌர்ணமி நாளன்று ஆலிவரால் ரிஷிக்கு அறிமுகப் படுத்தப்பட்டவள்தான் ஷார்லட். ரிஷி என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
ஆரம்பத்தில் ரிஷிக்கும் அந்தக் கண்மண் தெரியாத ஆசையை, ஆர்வத்தைப் பிடித்துத்தான் இருந்தது. ஆனால் அந்த உறவு கொஞ்சம் நீடிக்க ஆசைப்பட்ட போது சுதாரித்துக் கொண்டான். ரிஷியின் தேவைகள், விருப்பு வெறுப்புகள் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அதற்கு ஈடுகொடுக்க ஷார்லட்டால் முடியாது. அது ஆலிவருக்கு புரிந்திருந்தது, ஆனால் ஷார்லட்டுக்கு தெரியவில்லை.
பெண் கொஞ்சம் ரிஷியோடு விளையாடிப் பார்க்க நினைத்தது. அவள் விளையாட்டிற்கு ரிஷி வளைந்து கொடுக்கவில்லை. இப்போது எல்லாம் கைமீறிப் போயிருந்தது!
***
“அன்னம்மா!” ரிஷியின் குரலில் அன்னபூரணி ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வெளியே ஓடி வந்தார்.
“ரிஷி கண்ணா!” கண்களில் நீர் திரள ஓடி வந்த தன் பெரியன்னையைக் கட்டிக் கொண்டான் ரிஷி.
“இப்பிடித் தனியா வந்து நிக்கிறியேடா ராஜா!” உடல் குலுங்க ஓவென்று அழுத பெரியவரை ரிஷி இன்னும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்.
“விசேஷத்துக்கு வந்திருக்கிற புள்ளைக்கிட்ட எதுக்கு இந்தத் தேவையில்லாத பேச்சு பூரணி.” கணவனின் அதட்டலில் அன்னபூரணி கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“வாப்பா ரிஷி, நல்லா இருக்கியா?”
“நல்லா இருக்கேன் பெரியப்பா.”
“பயணமெல்லாம் சௌகரியமா இருந்துச்சா?”
“ம்… அதெல்லாம் ஒன்னும் ப்ராப்ளம் இல்லை.”
“உள்ள போப்பா, போய் குளிச்சிட்டு முதல்ல நல்லாச் சாப்பிடு, கல்யாண வீட்டுல ஆயிரம் வேலை கிடக்குது, பெரியப்பாக்கு ஆம்பிளைப் புள்ளைன்னு நீதானே இருக்கே, நீதான் எல்லாத்தையும் இழுத்துப் போட்டுப் பண்ணணும்.”
“கண்டிப்பாப் பெரியப்பா.”
இதுதான் பாண்டியன். தன் மைத்துனியின் மகன்தானே வந்திருப்பவன் என்று அவர் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. சொந்த பந்தம் என்று வந்துவிட்டால் அவருக்கு அவர் தரப்பு மனிதர்கள், மனைவி தரப்பு மனிதர்கள் என்ற பாகுபாடு கிடையாது. எல்லோரும் ஒன்றுதான். அதனாலேயே அந்த மனிதரை ரிஷிக்கு பிடிக்கும்.
“உள்ள வா ரிஷி.” பெரியம்மா அழைக்கத் தன் உடமைகளோடு உள்ளே போனான் ரிஷி.
“காயத்ரி எங்க அன்னம்மா?”
“மேல ரூம்லதான் இருக்கா, நீ வா.” அன்னபூரணி அழைக்கவும் அவரைப் பின் தொடர்ந்தபடி படிகளில் ஏறினான் இளையவன்.
“காயத்ரியோட ரூம் எது அன்னம்மா?”
“அந்த ரூம்தான், இது உனக்கு.” சொல்லிவிட்டு அவர் ஒரு ரூம் கதவைத் திறக்க அதைக் கருத்திற் கொள்ளாது தங்கையின் அறையை நோக்கிப் போனான் ரிஷி.
மாடியிலும் வீடு நல்ல பெரிதாக, விசாலமாக இருந்தது. ரிஷி சிறுவனாக வந்த போது இருந்த பெரியம்மாவின் வீடு இது இல்லை. காயத்ரியின் திருமணத்திற்காக வீட்டைப் பெரிதுபடுத்திக் கட்டியிருப்பார்கள் போலும். இவனது அறை என்று அன்னபூரணி காட்டிய ரூமிற்கு நேர் எதிராக இருந்தது காயத்ரியின் ரூம்.
“ஃபேஷியல் நடக்குது ரிஷி.” அன்னம்மா சொன்னதை ரிஷி காதில் வாங்கவில்லை. சட்டென்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கதவைத் திறந்தான்.
“காயத்ரீ…” என்று வேண்டுமென்றே சத்தமிட்டபடி.
“யாரது?!” ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன் அமர்ந்து முகம் முழுவதும் எதையோ அப்பிக் கொண்டு திடுக்கிட்டுத் திரும்பிய தங்கையை ரிஷி எதிர்பார்த்ததுதான். ஆனால்… தங்கைக்கு அருகே இன்னொரு பெண் கையில் ஏதோ ஒரு கிண்ணத்தை வைத்துக்கொண்டு பதறியபடி திரும்புவாள் என்று ரிஷி கொஞ்சமும் எதிர் பார்த்திருக்கவில்லை.
“அண்ணா!” ஃபேஷியலை மறந்து விட்டு காயத்ரி சட்டென்று ஓடி வந்து ரிஷியை அணைத்துக் கொண்டாள்.
“ஏய் காயத்ரி, ரிஷியோட ஷர்ட் ல உன்னோட முகத்துல இருக்கிறது எல்லாம் படப்போகுது.”
“நல்லாப் படட்டும்மா, இவ்வளவு காலம் கழிச்சு இந்த ரிஷிண்ணாக்கு இப்போதான் என்னோட ஞாபகம் வந்திருக்கா!” குறைப்பட்ட தங்கையைப் பார்த்துச் சிரித்தாலும் ரிஷியின் கவனம் முழுவதும் அந்தப் பெண்ணையே வட்டமிட்டது. சாதாரண சுடிதாரில் இருந்தாள். ஒப்பனை எதுவுமில்லாத முகம். ஆனாலும் அவனை மிகவும் வசீகரித்தது பெண்.
“ரிஷி, இது பவித்ரா, பெரியப்பாவோட சொந்தக்காரப் பொண்ணு.” அன்னபூரணி சட்டென்று தன்னை அந்த வாலிபனுக்கு அறிமுகம் செய்து வைக்கவும் பவித்ரா திணறிவிட்டாள். ஆனால் அவன் அவளுக்கு இலகுவாக,
“ஹாய்.” என்றான்.
“ஹாய்.” அவளும் ரிஷிக்கு பதில் சொன்னாலும் அவன் பார்வையில் இருந்த சுவாரஸ்யம் அவளுக்கு அசௌகரியமாக இருந்தது.
“போய் ஃபேஷியலை முடி, அதுக்கப்புறமா எங்கூடத் தாராளமாச் சண்டைப் போடலாம்.” தங்கையின் தோள்கள் இரண்டையும் பிடித்துத் தள்ளி அவளை மீண்டும் ட்ரெஸ்ஸிங் டேபிளின் ஸ்டூலில் உட்கார வைத்தான் ரிஷி.
“ஆமா, பதினைஞ்சு வருஷம் கழிச்சு எங்களையெல்லாம் பார்க்க வந்துட்டு இப்பப் பெருசாப் பேச வந்துட்டீங்க! இவ்வளவு காலமும் என்னப் பண்ணினீங்களாம் அந்த லண்டனை கட்டிக்கிட்டு?”
“பிஸினஸ் பண்ணினேன் காயத்ரி.”
“ஆமா, மத்தவங்க எல்லாரும் மாடு மேய்க்குறாங்க, எங்கண்ணா மட்டுந்தான் பிஸினஸ் பண்ணுறான், கேட்டுக்கோங்க பவி.” சட்டென்று காயத்ரி தன்னைப் பேச்சில் இழுக்கவும் பவித்ரா என்ன சொல்வது என்று தெரியாமல் சிரித்து வைத்தாள்.
ஏற்கனவே காயத்ரி பழையபடி இருந்த இடத்தில் வந்து உட்கார்ந்திருந்ததால் அவள் கை பாதியில் விட்ட ஃபேஷியலை இப்போது மீண்டும் ஆரம்பித்திருந்தது. வேலையைத் தொடர்ந்த படியே அண்ணன், தங்கை இருவரது உரையாடலையும் ரசித்துக் கேட்டுக் கொண்டாள். தன் புன்னகைத் தோய்ந்த முகத்தை அங்கிருப்பவன் ரசிப்பதை அவள் அறியவில்லை. ஆனால் அன்னபூரணி கண்டு கொண்டார்.
“ரிஷிக்கு பசிக்கும், நீ வாடா கண்ணா சாப்பிடலாம், இந்த வாயாடி கூட அப்புறமாச் சண்டைப் போட்டுக்கலாம்.”
“ஆமா, நாங்க சண்டைப் போடுறோமா? என் தங்கைப் பையன் வரலியே… இத்தனைக் காலத்துல அவன் என்னை மறந்தே போயிட்டானேன்னு ஒவ்வொரு நாளும் இங்க ஒப்பாரி வெக்குறது யாராம்?” காயத்ரி தன் அம்மாவைப் பார்த்து முறைக்க பவித்ராவிற்கும் சிரிப்பு வந்தது. வாய்க்குள் சிரிப்பை அடக்கிய படி கடைக்கண்ணால் அவள் அன்னபூரணியை திரும்பிப் பார்க்க… பெரிய தாய்க்குப் பக்கத்தில் நின்றிருந்த ரிஷி அந்த நொடி வீழ்ந்தே போனான். அந்தப் பார்வை என்னவோ அவனை நோக்கி வந்தது போலவே இருந்தது.
“ஆமா… அழுதேன்தான், அதுக்காக… நீ இப்போ வந்த புள்ளையை நிக்க வெச்சுச் சண்டைப் போடுவியா?”
“ஆமா, நல்லாச் சண்டைப் போடுவேன், ஒன்னு ரெண்டு இல்லை, பதினைஞ்சு வருஷம்! ஏன் பவி, நீங்களே சொல்லுங்க, இது நியாயமா? எங்களாலதான் அங்க போக முடியாது, இந்த அண்ணா எங்களையெல்லாம் வந்து பார்த்திருக்கலாம் இல்லை?” வேலையில் கவனமாக இருந்த பவித்ரா இப்போது ரிஷியை பார்த்துப் புன்னகைத்தாள்.
‘உன் தங்கை கேட்பது நியாயம்தானே?’ என்று சொல்லாமல் சொல்வது போல இருந்தது அந்தச் சிரிப்பு. கொஞ்ச நஞ்சம் மீதமிருந்த ரிஷி இப்போது முழுதாக வீழ்ந்து போனான்.
“சரி சரி, போனது போகட்டும்… இப்போ இந்தக் கல்யாணப் பொண்ணுக்கு அண்ணா என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க?” கெத்தாக காயத்ரி கேட்க அன்னபூரணி அவள் தலையில் மெதுவாகக் கொட்டினார்.
“ஆமாண்டி, இவ்வளவு நேரமும் பெரிய இவமாதிரிப் பேசிட்டு இப்போ எம்புள்ளை என்ன வாங்கிட்டு வந்தான்னு கேட்கிறியா? உனக்கு அவன் ஒன்னுமே வாங்கலை, பேசாம உன்னோட வேலையைப் பாரு.”
“கொஞ்சம் பொறுங்க அன்னம்மா.” பெரிய தாயை அடக்கிய ரிஷி சட்டென்று ரூமிற்கு வெளியே போனான். அவன் திரும்பி வரும் போது அவன் கையில் அவனது ப்ரீஃப்கேஸ் இருந்தது.
“முதல்ல குளி ரிஷி, உனக்குப் பசிக்கும்டா.”
“அதெல்லாம் இல்லை அன்னம்மா.” பேசிய படியே அவசர அவசரமாகத் தனது பையைத் திறந்தவன் அதிலிருந்த ஒரு வெல்வெட் பெட்டியை காயத்ரியிடம் நீட்டினான்.
“ஐயோ அண்ணா, நான் சும்மாக் கேட்டேன்.”
“நீ சும்மாதான் கேட்டே, ஆனா நான் என்னோட காயத்ரிக்காக ஆசையாசையா வாங்கினேன்.” ரிஷி சொன்னதுதான் தாமதம், கண்கள் இரண்டும் குளமாகத் தன் அண்ணனை எழுந்து கட்டிக் கொண்டாள் காயத்ரி.
“பிரிச்சுப் பாருடா, உனக்குப் பிடிச்சிருக்கா இல்லையான்னு பார்த்துச் சொல்லு.”
“நீ எது குடுத்தாலும் எனக்கு ஓகேதான் ண்ணா, இப்போவாவது எங்களையெல்லாம் பார்க்கணும்னு உனக்குத் தோணியிருக்கே, அதுவே எனக்குப் போதும்.”
“ஃபேஷியலை இன்னைக்குள்ள எப்பிடியும் முடிச்சிருவோமா காயத்ரி?” குறும்பாக இப்போது கேட்டது பவித்ரா.
“சாரி பவி, இதோ…” மன்னிப்பு வேண்டிக் கொண்டு மீண்டும் சட்டென்று ஸ்டூலில் வந்து காயத்ரி உட்கார,
“ஒரு நிமிஷம்.” என்றான் ரிஷி. பெண்கள் மூவரும் அவனையே பார்த்திருக்க, அந்த நகைப் பெட்டியைத் திறந்தவன் அதிலிருந்த ‘நெக்லஸ்’ ஸை தங்கையின் கழுத்தில் அணிவித்தான்.
“வாவ்!” காயத்ரி வாயைப் பிளந்தாள். இரட்டை வரிசையில் வெண் கற்கள் பதித்த நெக்லஸ். நடுவில் கொஞ்சம் பெரிதாக ஒரு நீலக் கல் பதிக்கப்பட்டிருந்தது.
“பிடிச்சிருக்கா காயத்ரி?”
“பிடிச்சிருக்காவா?! சூப்பர் ண்ணா. காயத்ரி பொங்கி ஆர்ப்பரிக்க, சட்டென்று அந்த முகத்தைத் திரும்பிப் பார்த்தான் ரிஷி. பொறாமை, ஏக்கம் என எந்த உணர்வையும் பிரதிபலிக்காது அந்த முகம் மெச்சுதலை மட்டுமே காட்டியது.
“இது டைமண்ட் இல்லை ண்ணா?” நெக்லஸில் இருந்த நீலக் கல்லைத் தொட்டுப் பார்த்துக் கேட்டாள் காயத்ரி.
“ம்… சஃபையர்.”
“வாவ்!” கொஞ்சம் வசதியான வீட்டுப் பெண்ணான காயத்ரிக்கு வைரத்தை இனங்கண்டு கொள்ளும் திறமை இருந்தது. ஆனால் சாதாரண வீட்டுப் பெண்ணான பவித்ராவிற்கு அது புரியவில்லை. காயத்ரி சொன்ன பிற்பாடு அந்த நீலக்கல்லை இன்னுமொரு முறை பார்த்துக் கொண்டாள். கண்கள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டாற் போலத் தெரிந்தது.
ரிஷிக்கு எதையோ சாதித்தது போல இருந்தது. தங்கைக்கான பரிசை அப்போதே கொடுத்திருக்கத் தேவையில்லை. ஆனால் அந்தப் பெண்ணிற்கு முன்னால் அதைக் கொடுக்க வேண்டும் போலத் தோன்றவே கொடுத்து விட்டான்.
“பார்த்தியா… இந்த அன்னம்மாவை மறந்துட்டே! காயத்ரிக்கு மட்டுந்தான் நகையா? எனக்கில்லையா?” வேண்டுமென்றே உதடு பிதுக்கினார் அன்னபூரணி. இப்போது பவித்ராவே சிரித்து விட்டாள்.
“ஆமா, எனக்கு மட்டுந்தான் கிஃப்ட், ஏன்னா நான்தானே கல்யாணப் பொண்ணு.”
“ரிஷி கண்ணா, இது நியாயமே இல்லைடா.” குறும்பாகச் சொன்ன தன் பெரிய தாயைத் தோளோடு சேர்த்துக் கட்டிக் கொண்டான் ரிஷி.
“என்னோட அன்னம்மாவை நான் மறப்பேனா? நிச்சயமா இல்லை.” சொன்னவன் சட்டென்று இன்னொரு வெல்வெட் கவரை ப்ரீஃப்கேஸிலிருந்து எடுத்தான்.
“இது என்னோட செல்ல அன்னம்மாக்கு.” பெரிய தாயைச் செல்லம் கொஞ்சியபடி நகையை வெளியே எடுத்த போதுதான் அந்த ரூமில் மூன்று பெண்கள் இருப்பது ரிஷிக்கு உறைத்தது. இருவருக்கு நகையைப் பரிசாகக் கொடுத்துவிட்டு ஒருத்தியை எப்படி விட்டுவிடுவது? அதுவும்… முதல் பார்வையிலேயே அவனை ஈர்த்த அந்தப் பெண்ணை?!
அவன் கையில் இருந்த நெடிய தங்க ஆரம் மினுமினுத்தது. ஆரத்தைப் பெரியம்மாவிடம் கொடுக்காமல் தன் கையிலேயே வைத்திருந்தான் ரிஷி. காயத்ரிக்கு சட்டென்று எதுவும் புரியவில்லை என்றாலும் அன்னபூரணி தன் தங்கை மகனின் மனதை அழகாகப் புரிந்து கொண்டார்.
“ஆமா… இந்தக் கிழவிக்கு இப்போ நகை ஒன்னுதான் குறை! சின்னஞ் சிறுசுங்க போட்டு அழகு பார்க்க வேண்டியது, பேசாம இதை நம்ம பவித்ராக்கு நீ குடு கண்ணா.” சுலபமாக அன்னபூரணி சொல்ல அங்கிருந்த மற்றைய மூவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.
“அத்தை! என்னப் பேசுறீங்க நீங்க? இதுலெல்லாமா விளையாடுவீங்க?” ஒரு திடுக்கிடலோடு ஆரம்பித்துப் பின் ஒரு சிரிப்போடு சொல்லிவிட்டு அங்கிருந்த பாத்ரூமிற்குள் போய் விட்டாள் பவித்ரா.
அங்கே அப்போது நிலவிய மௌனம் லேசாகக் கனக்க ரிஷி தன் பெரிய தாயைக் கூர்ந்து பார்த்தான். அவர் முகத்தில் வினோதமான ஒரு சிரிப்பு இருந்தது. தன் அம்மா இது போல விளையாட்டாக சில பொழுதுகளில் பேசுபவரே என்றாலும், இது கொஞ்சம் அதிகப்படியாகத் தோன்ற பிரமித்து நின்றிருந்தாள் காயத்ரி!