jeevanathiyaaga_nee – 21

JN_pic-10fd5dc2

jeevanathiyaaga_nee – 21

ஜீவநதியாக நீ…  

அத்தியாயம் – 21

கீதா காரில் கோபமாக அமர்ந்திருக்க, ரவி எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினான். அவன் வண்டியை வீட்டிற்கு செலுத்தாமல் ஸ்பென்சர் பிளாசா  பக்கம் செலுத்தினான். எப்படியும் இப்பொழுது வீட்டிற்கு செல்ல முடியாது. சென்றால், ஆயிரம் கேள்விகள் வரும் என்ற எண்ணத்தோடு கீதாவும் அவனோடு சென்றாள்.  அங்கு சற்று தனிமையாக ஓர் இடம் பார்த்து அமர்ந்து, கீதாவையும் கைபிடித்து அமரவைத்தான்.

“தாரிணியை ஏன் அடிச்ச கீது?” என்று மனத்தாங்களோடு கேட்டான். “ஏன் அடிச்சேன் அப்படின்னா, உங்களை அடிக்க முடியலை. அது தான் என் அண்ணன் வீட்டுக்கு போய், உங்க தங்கையை அடிச்சிட்டு வரேன்” அவள் சிடுசிடுக்க, அவள் அவளை கூர்மையாக பார்த்தான்.

“ரவி” உற்சாகமான குரல் வர, இருவரும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினர். ரவியின் தோழன் விக்னேஷ் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் மீது சிகரெட்டின் நெடி. மதுவின் தள்ளாட்டம். “ஹல்லோ…”  அவன் கீதாவிடம் கைகளை நீட்ட, கீதா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். ரவி தன் தோழனிடம் கைகளை குலுக்கி சூழ்நிலையை சமாளித்தான்.

“நீங்க இன்னைக்கு போறதுக்கு நான் உங்களுக்கு தீம் பார்க் டிக்கெட்ஸ் கொடுத்தேனே, நீங்க போகலையா?” விக்னேஷ் கேள்வியாக நிறுத்த, “இல்லை கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வந்தோம்” ரவி மீண்டும் சமாளிக்க, கீதா அவர்களை வெறுப்பாக பார்த்தாள். ரவி ஏதேதோ பேசி அவனை அனுப்பி வைக்க, “இது யாரு?” அவள் முகத்தில் அசூயையோடு கேட்க, “என் நண்பன்” அவன் கூற, ‘இப்படியொரு நட்பா?’ என்பது போல் அவள் அவனை மேலும் கீழும் பார்க்க,

“தாரிணிக்கு நாங்க பார்த்த மாப்பிள்ளை” அவன் கொஞ்சம் கம்மலான குரலில் கூற, “அது தான் தாரிணி ஓடி போய்ட்டா” கீதா பட்டென்று கூற, “கீதா, அவன் நல்லவன் தான். எப்பையாவது ட்ரிங்க்ஸ், ஸ்மோக்கிங் பண்ணுவான். ஃபிரெண்ட்லியா தான் கை கொடுத்தான்” ரவி விளக்க முயற்சிக்க, “பகல் நேரம் கூட போதையில் சுத்துறான். அவன் கை கொடுக்குற லட்சணத்தில் அவன் யோக்கியதை தெரியுது. இனி நான் அவனை உங்களோடு பார்த்தேன். அவனையும் அடிப்பேன்” கீதா உறுமினாள்.

“என்ன நீ எல்லாரையும் அடிப்பேன்னு சொல்லுற? அடிக்கிற?” ரவி சீற, “உங்களை அடிக்க முடியலை, உங்க தங்கையை அடிச்சேன். உங்க அப்பாவை அடிக்க முடியலை. அது தான் உங்க நண்பனை அடிக்கணும்னு சொல்றேன். எனக்கு அவனை பார்க்கவே பிடிக்கலை” கீதா அதிதீவிரமாக கூற, அவள் கைகளை தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டு, “நான் பார்த்துக்குறேன் கீதா.” அவன் அவளை சமாதானம் செய்தான்.

ரவியும் கீதாவும் பொதுவாக பேச ஆரம்பித்தனர். இருவரும் பேசிக் கொண்டாலும், கீதாவின் எண்ணம் அவன் அண்ணனின் குடும்பத்தை சுற்றி வர, ரவியின் சிந்தையோ கீதாவையும் தாரிணியையும் சுற்றி வந்தது. அவனால், ஜீவாவின் மீது கொண்ட கோபத்தையும் வன்மத்தையும் ஒதுக்க முடியலை. அதே நேரம் கீதாவின் வருத்தத்தையும்  தாரிணியின் கஷ்டத்தையும்  ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தவித்தான்.

***

கீதா வீட்டிற்கு வந்து சென்றதிலிருந்து தாரிணியின் சிந்தனை ஜீவாவையும் அவன் என்ன வேலை செய்கிறான் என்பதிலே சுற்றியது. ‘என் முகத்தை கூட யாரும் பார்க்க முடியாது. நான் அவ்வளவு பிசி. வெயில் என் உடல் மேல் கூட படாது. பயங்கர பாதுகாப்பான இடம் என்று சொன்னானே ஜீவா’ இப்படி அவன் கூறிய வார்த்தைகளை அசைபோட்ட படி, அவள் நேரத்தை நெட்டி தள்ள மாலை பொழுதும் வந்தது.

 வேலைக்கு சேர்ந்த இடத்தில் கொஞ்சம் முன்பணம் கிடைக்கவே, ஜீவா கொஞ்சம் உல்லாச மனநிலையோடு தாரிணிக்கு பரிசு  பொருளோடு வீட்டிற்கு வந்தான் ஜீவா.

“தாரிணி…” சந்தோஷமாக அழைத்துக்கொண்டு ஜீவா உள்ளே நுழைய, தாரிணி எதுவும் பேசாமல் அவனை கூர்மையாக பார்த்தாள். ஜீவா இருந்த மனநிலையில் அவன் அவள் மனநிலையை கவனிக்கவில்லை. “தாரிணி….” அவளை அணைத்துக்கொண்டு அவள் கன்னத்தில் இதழ் பதிக்க, அவள் எதுவும் பேசவில்லை.

“என்ன தாரிணி பேச மாட்டேங்குற?” அவன் அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை இழைத்து கேட்க, ‘ஜீவா, எப்பொழுதும் இப்படி உல்லாசமாக இருப்பவன் கிடையாதே’ அவள் நிதானித்தாள். “நான் உனக்கு ஒரு கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன். என்னனு சொல்லு பார்ப்போம்” அவன் அவள் இடையை சுற்றி வளைத்து கேட்க, “கிஃப்ட் வாங்க என்ன வேலை பார்த்த ஜீவா?” அவள் கேள்வியில் அவன் சட்டென்று விலகி அவள் முகத்தை கூர்மையாக பார்த்தான்.

அவன் கையிலிருந்த பரிசுப்பொருளை வாங்கி, அதை தூர எரிந்து, “என்ன வேலை பார்க்குற ஜீவா நீ?” அவள் ஆவேசமாக கத்தினாள். அவள் தூக்கி எரிந்ததால் அந்த பரிசு பொருள்கள் சிதறி விழ, அதில் அவள் படிப்பதற்கான புத்தகங்கள் இருக்க, அவள் ஓடி சென்று அந்த புத்தகத்தை எடுத்து அணைத்துக்கொண்டு கதறி அழுதாள். தன் மனைவியை பரிதாபமாக பார்த்தான் ஜீவா.

“என்ன ஆச்சு தாரிணி?” அவள் முன் மண்டியிட்டு, அவள் தலை கோதி பரிவாக கேட்டான். அவன் மடியில் முகம் புதைத்து அவள் அழ, “தாரிணி, ஏண்டா அழற?” அவன் அவள் முகம் நிமிர்த்தி கேட்க, “நீ என்ன வேலை பார்க்குற ஜீவா?” அவள் விம்மலோடு கேட்டாள். ஜீவாவுக்கு பொறி தட்ட, “கீதா இங்க வந்தாளா?” அவன் தன் கண்களை சுருக்கினான். “நீ என் கிட்ட பொய் சொன்னியா ஜீவா?” அவள் வருத்தத்தோடு கேட்க,

“பொம்மையின் முகம் என் முகத்தை மறைத்துவிடும் தாரிணி. அந்த உடை என் உடலை வெயிலில் இருந்து காப்பாற்றிடும். என்னை யாரும் எதுவும் பண்ண முடியாத மாதிரி பாதுகாப்பான இடம் தான் தாரிணி. நான் உன் கிட்ட எந்த பொய்யும் சொல்லலை தாரிணி” அவன் கூற, “உன் கஷ்டத்தை என்கிட்டே சொல்லலை. என் அண்ணன், அப்பா உனக்கு  செய்த கொடுமையை சொல்லலை. நான் யாரோவா ஜீவா?” அவள் அவன் முகத்தை கைகளில் ஏந்தி கண்ணீரோடு கேட்க, அவள் கைகளை தன் கன்னத்தில் அழுத்தி, “என் தாரிணி வருத்தப்பட கூடாதுனு தான் நான் சொல்லலை” அவன் அவள் கண்ணீரை துடைத்துவிட்டபடி கூறினான்.

“எனக்காக தான் நீ இவ்வளவு கஷ்டப்படுறியா ஜீவா?” அவள் விசும்பலோடு கேட்க, “நமக்காக தாரிணி.” அவன் புன்முறுவலோடு கூறினான். “நாம வேற ஊருக்கு போயிடலாம் ஜீவா. இவங்க தொந்திரவு கொடுக்க முடியாத மாதிரி” தாரிணி தீவிரமாக கூற,  “எல்லாருக்கும் பயந்து ஓட சொல்றியா தாரிணி?” அவன் அழுத்தமாக கேட்டான்.

“ஜீவா…” அவள் தடுமாற, “நாம ஏற்கனவே அந்த தப்பை பண்ணிட்டோம் தாரிணி. ஓடி வந்தது முதல் தப்பு. அதை நம்மால் இனி சரி செய்யவே முடியாது. ஆனால், இனி நாம ஓட கூடாது தாரிணி. ” அவன் குரலில் உறுதி இருக்க, “அதுக்கு நான் தானே காரணம். நம்ம காதல் விஷயம் தெரிந்ததும், என் படிப்பை திடீருன்னு நிறுத்தி ஒரு மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்றேன்னு சொன்னதும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை ஜீவா. அது தான் நான் உன்னை தேடி வந்து, உன்னையும் சங்கடத்தில் ஆழ்த்திட்டேன்” அவள் குற்ற உணர்ச்சியில் தவிக்க,

“முடிந்ததை பேச கூடாது தாரிணி. நீ படிக்கணும். அதுக்கு தான் நான் உன்னை வேலைக்கு போக வேண்டாமுன்னு சொன்னேன். படிப்பை நிறுத்தி வேலைக்கு போய் பணத்தை கையில் பார்த்துட்டா , அப்புறம் படிக்க முடியாது தாரிணி. உன் படிப்பு தான் என் மனசில் முதலில் ஓடிய விஷயம்.” அவன் கூற, “இந்த காரணத்தை அன்னைக்கே சொல்லி என்னை வேலைக்கு போக வேண்டாமுன்னு சொல்லிருக்கலாமே ஜீவா. சொல்லாமல் ஏன் கோபப்பட்ட?” அவள் கேட்க, “நான் உன்னை படிக்க வைக்கணும்னு நினைக்குறேன். ஆனால், நாம சாப்பிடவே வழி இல்லாமல் இருந்தோம். உனக்கு பொய்யான ஆசை காட்ட கூடாதுன்னு தான் சொல்லலை தாரிணி.” ஜீவா கூற, “நான் படிக்கறேன் ஜீவா. ஆனால், படிப்புக்கு இடையில் வேலையும் பார்ப்பேன். நாம வாழ்ந்து காட்டணும் ஜீவா” அவள் குரலில் உறுதி இருக்க,

“ஆமா தாரிணி. நம்ம முன்னேற்றம் சிலரின் இடைஞ்சலால் தள்ளி போயிருக்கு. அவ்வுளவு தான். ஒரேடியா நின்னு போகலை. யாரோட வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது. நமக்கு தடங்களை உருவாக்க முடியுமேயொழிய, தவிடுபொடியாக்க முடியாது.” ஜீவா கூற, தாரிணி தலையசைத்தாள்.

“நாம இந்த  ஊரில் தான் இருக்கனும் தாரிணி. இவங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும். நான் இப்ப பார்க்கிற வேலை, என் படிப்புக்கு ஏற்ற வேலையா இல்லாமல் இருக்கலாம்.  ஆனால், தப்பான வேலையோ, கேவலமான வேலையோ கிடையாது. நம் தேவைக்கான பணம் கிடைக்கும். நீ முதலில் காலேஜ் போ. நான் அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன். சீக்கிரம் நான் அடுத்ததா என்ன செய்யணும்னு திட்டமிடுறேன்” ஜீவா கூற, “தேங்க்ஸ் ஜீவா…” அவள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு  கன்னத்தில் இதழ் பதித்து நன்றி நவிழ்ந்தாள்.

“சீக்கிரம், நீ வேலை மாறிடு ஜீவா. நானும் உனக்கு உதவியா கிளாஸ் எடுக்கறேன். படிச்சிகிட்டே வேலையும் பார்க்குறேன் ஜீவா” அவன் அவள் மேல் மாலையாக தொங்கி கொண்டு கூற, அவளை இடையோடு அணைத்துக்கொண்டு, தலையில் மோதி, “முதலில் காலேஜ் போ. அப்புறம் இதெல்லாம் பேசுவோம். நானும் நிதானமா திட்டமிடனும்” அவள் அவனிடம் புத்தகங்களை நீட்டினான்.

புத்தங்களை கைகளில் அணைத்துக்கொண்டு அவனை காதலோடு பார்த்தாள். “இப்படி எல்லாம் பார்க்க கூடாது தாரிணி” அவன் அவள் கன்னம் தட்டி கண்சிமிட்ட, “ஏன்?” அவளும் கண்சிமிட்டினாள். “படிக்கணும்…” அவன் அவள் காதை திருக, “அதெல்லாம் நாங்க நல்லாவே படிப்போம். நல்ல வேலைக்கும் போவோம்” அவள் தலை சாய்த்து அவன் மார்பில் உரிமையோடு சாய்ந்து கூறினாள்.

“நம்மளை பார்த்து எல்லாரும் வியந்து நிற்கிற அளவுக்கு நாம உயரணும் ஜீவா. எத்தனை தடங்கல் வந்தாலும் நம்ம காதல் எல்லாத்தையும் தாண்டி நம்மளை ஜெயிக்க வைக்கும் ஜீவா” அவள் அவனுக்கு நம்பிக்கை தரும் விதமாக பேச,  “என்கிட்டையும் ஒரு யோசனை இருக்கு. சீக்கிரம் செயல்படுத்துற வழியை பார்த்திட்டு இருக்கேன். நம்மால் முடியும் தாரிணி.” அவனும் நம்பிக்கையோடு பேசினான். வேலை கிடைத்து பணமும் கிடைத்த உற்சாகத்தில் இருவரும் நம்பிக்கையோடு பேசினர்.

சில மாதங்கள் கழித்து,

ஜீவா சில மாதங்கள் சம்பளம் வாங்கி இருக்க, கொஞ்சம் முன் பணம் கடன் வாங்கி இருசக்கர வாகனம் வாங்கினான். தாரிணி அவள் படிப்பை தொடர கல்லூரியில் சேர்த்தான்.  தாரிணி அவள் முழு கவனத்தை படிப்பில் மட்டுமே செலுத்த ஆரம்பித்தாள். வழமையாக  அவளே வீடு திரும்பிவிடுவாள். அன்று ஜீவாவுக்கு விடுப்பு இருக்கவே, அவளை அழைத்துச் செல்ல கல்லூரிக்கு வந்திருந்தான்.

கல்லூரியில் படிப்பில் அவள் கவனம் முழுதாக இருந்தாலும், தன்னவனை பார்த்ததும் அவள் கண்களில் மின்னல். அவன் பின்னே ஏறி அமர்ந்துக்கொண்டு, அவனை அணைத்துக்கொண்டு உரிமையாக அவன் மீது சாய்ந்துக் கொண்டாள்.

அவன் புன்னகையோடு வண்டியை கிளப்பினான். “ஜீவா…” அவள் குரல் கெஞ்சலோடு, கொஞ்சியது. அவன் புன்னகை விரிந்தது. “என்ன வேணும் தாரிணி?” அவள் எதையோ கேட்க விழைகிறாள் என்பதை அவள் அழைப்பிலே புரிந்து கொண்டு கேட்டான் கணவனாக.”ஜீவா, என்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்றாள் தாரிணி.

“வேண்டாம் தாரிணி” என்றான் அவன் தன்மையாக. “இல்லை, ஜீவா நான் போகணும். நான் தனியா போகவிரும்பாலை. நீயும் வா. தீர்க்கப்பட வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு.” அவள் பிடிவாதமாக அவனை அவள் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

நதி பாயும்…                  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!