JN_pic-721306e6

jeevanathiyaaga_nee – 26

ஜீவநதியாக நீ…  

அத்தியாயம் – 26

யாழினி தன் தந்தை ரவியின் முன்னே நின்று கொண்டு, “அப்பா, என் பிறந்தநாளுக்கு நான் என் மேம் தாரிணியையும் அவங்க குடும்பத்தையும்  கூப்பிடட்டுமா?” என்று கேட்க, ரவி கீதா இருவரும் ஒரு சேர அதிர்ந்தனர்.

ரவியின் புருவங்கள் சிந்தனையோடு நெளிய, “உன் பிறந்தநாளுக்கு இப்ப என்ன அவசரம்? அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு” கீதா சமாளிக்கும் விதமாக முந்திக்கொண்டாள்.

“மூணு மாசம் தானே இருக்கு அம்மா” அவள் தன் தாயின் கன்னம் தொட்டு கொஞ்சி, “அப்பா, ப்ளீஸ்… ப்ளீஸ்… சரின்னு சொல்லுங்க” அவள் கொஞ்ச, “சரி யாழு…” என்றான் ரவி தன் மகளின் கெஞ்சலுக்கும் கொஞ்சலுக்கும் இறங்கி.

“தேங்க்யூ அப்பா… தேங்க்யூ ஸோ மச் அப்பா. நீங்க அவங்களை சந்திச்சே ஆகணும். எனக்கு அவங்களை பார்க்கும் பொழுது வர்ற உணர்வு உங்களுக்கும் வருதான்னு அன்னைக்கு அவங்களை பார்க்கும் பொழுது சொல்லணும் அப்பா.”  யாழினி தன் தாயையும் தந்தையையும் மீண்டுமொரு முறை கொஞ்சிவிட்டு செல்ல, “எதுக்கு சம்மதம் சொன்னீங்க?” கீதா கேள்வியாக அவன் முன் நிற்க, “எனக்கு என் மனைவியின் சந்தோஷமும் மகளின் சந்தோஷமும் ரொம்ப ரொம்ப முக்கியம் கீது” அவன் முகத்தில் சிந்தனையோடு கூற, கீதாவிடம் மௌனம்.

“நீங்க மனசில் என்ன நினைச்க்கிட்டு?” கீதா ஆரம்பிக்க, “எல்லா உண்மையும் தெரியட்டும் கீதா. எத்தனை நாள் தான் நீயும் இப்படி உள்ளுக்குள்ள மருகுகிட்டே இருப்ப? உங்க அப்பாவுக்கும் கோபம் தணிய போறதேயில்லை. எங்க அப்பாவுக்கும் கோபம் குறைய போறதில்லை. அம்மாக்கள் அப்பாவை மீறப்போறதில்லை. இதில் சங்கர் வேற என்னை மாதிரியே வளர்ந்து நிக்குறான்.  பிள்ளைங்க காலத்துலையாவது எல்லாம் சரியாகுமுன்னு நானும் ஆசைப்பட்டேன். ஒன்னும் நடக்காது போல. நாம பிரச்சனையை முடிச்சி வச்சிட வேண்டியது தான்”  ரவி தன் மனைவியின் அக்கறை கொண்டவனாக அவளை இடைமறித்தான்.

 “கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்குமுன்னா, கலகம் பிறக்கட்டும்.” கீதா சற்று கடுப்பாக கூற, அவன் அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டு, அவள் தோளில்  தட்டி கொடுத்து ஆறுதல் கூறினான், “எல்லாம் சரியாகும்” என்று. ரவி கீதாவுக்கு கூறும் ஆறுதல் புதிதல்ல. பல வருடங்களாக நடப்பது தான். அவன் அணைப்பில் ஆறுதல் கொள்ளும் அவள் மனம் இன்று அவன் பேச்சின் காரணமாக சற்று நம்பிக்கையோடு  ஆறுதல் கொண்டது. 

இரவு உணவு உண்ணும் நேரம்.

ரவியும், சண்முகமும், யாழினியும் அமர்ந்திருக்க,  “அத்தை நீங்களும் உட்காருங்க. நான் எல்லாருக்கும் வைக்கிறேன்” கீதா கூற, புஷ்பவல்லியும் அமர்ந்தார். “என் பேரன் எங்க?” சண்முகம் கேட்க, “அவன் யார் கூடவோ பேசிட்டு இருக்கான் மாமா. இப்ப வரேன்னு சொன்னான்” கீதா இரவு உணவுக்கு இட்லியை வைத்தபடியே கூறினாள்.

சில நொடிகளில், “தாத்தா…” அழைத்து கொண்டே அங்கு வந்தான் ஷங்கர். “தாத்தா நீங்க என்னை தேடுவீங்கன்னு எனக்கு தெரியும். அது தான் வந்துட்டேன்” அவன் கூற, அவர் தன் பேரனை தன் அருகில் அமர்த்திக் கொண்டார். “தாத்தா, உங்ககிட்ட ஒரு பிசினெஸ் விஷயம் சொல்லணும்னு நினைச்சேன். அந்த ஜீவா இண்டஸ்ட்ரீஸ்…” ஷங்கர் ஆரம்பிக்க, “இங்கயும் பிசினெஸ் தானா?” யாழினி முகத்தை சுளித்தாள்.  “ஜீவா இண்டஸ்ட்ரீஸ்….” அந்த சொல்லில், மற்ற அனைவரின் கவனமும் ஷங்கர் பக்கமே இருந்தது.

“யாழு, மத்த விஷயத்தில் நான் இதை மறந்திருவேன். நியாபகம் வரும்பொழுது தாத்தா கிட்ட சொல்றேன்” அவன் தன் தங்கையின் முகசுளிப்புக்கு பதில் கொடுத்து தன் தாத்தாவின் பக்கம் திரும்பினான்.

“தாத்தா, உங்களுக்கு அந்த ஜீவா சாரை பிடிக்காது. ஆனால், அவர் கூட பரவாயில்லை. என் வழியில் வர மாட்டார். ஆனால், அவங்க பையன் வருண். ரொம்ப பிரச்சனை கொடுக்கிறான். எங்க பார்த்தாலும், நியாயம் நேர்மைன்னு சட்டம் பேசிக்கிட்டு நமக்கு இடைஞ்சல் கொடுக்கறான். அந்த ஜீவா இண்டஸ்ட்ரீஸ் வளர்ச்சி மட்டுமில்லை. அந்த வருணோட வளர்ச்சி கூட எனக்கு பிடிக்கலை தாத்தா. வருணின் வளர்ச்சி அபரீதமா இருக்கு. அவன் வளர்ச்சி, ஜீவா இண்டஸ்ட்ரிஸ்க்கு பெரிய பலம். அப்பாவும், மகனும் பயங்கர வேகமாவும், புத்திசாலித்தனமாகவும் இருக்காங்க.” ஷங்கர் கூற, “வ… வ….வருண்…” ஷண்முகம் தடுமாறினார்.

“என்ன தாத்தா தடுமாறுறீங்க? ஜீவா இண்டஸ்ட்ரீஸ் அப்படின்னு பெயரை சொல்லும் பொழுது இருக்கும் கோபம். வருண் பெயரை சேர்த்து சொல்லும் பொழுது தடுமாறுது? என்ன பிரச்சனை தாத்தா?” ஷங்கர் சாப்பிடுவதை நிறுத்தி கேட்க, “அதெல்லாம் ஒன்னும் இல்லை ஷங்கர். நீ சொல்றது சரி தான்” அவர் அழுத்தமாக கூறினார். அவர் முகம் சற்று இறுகியது.

“ஜீவா சாரும், வருணும் வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் இருந்தா, நாம சாணக்யத்தனோட இருக்கணும் தாத்தா” ஷங்கர் கூற, “என் பேரன் சொன்னால் சரி தான்.” ஷண்முகம் ஆமோதிப்பாக கூற, ரவியும் , புஷ்பவல்லியும் அவரை வருத்தத்தோடு பார்க்க, “மாமா…” கீதா எதுவோ பேச ஆரம்பிக்க, “இன்னைக்கு இட்லியும் சட்னியும் ரொம்ப நல்லாருக்கு மா” அவர் கூற, “தாத்தா, அம்மா ஏதோ சொல்ல வந்தாங்க” யாழினி சற்று பிடிவாதமாக கூறினாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை யாழினி” தன் மாமனாரின் விருப்பமின்மையை புரிந்து கொண்டு முந்திக்கொண்டாள் கீதா. “தாத்தா, ஜீவா அங்கிள் மேல உங்களுக்கு என்ன கோபம்? அவங்க உங்க தொழிலில் ஒரு போட்டியாளர் அவ்வளவு தானே?” யாழினி கேட்க, அங்கு மௌனம். “இதுல என்ன உனக்கு சந்தேகம் யாழு. பிசினெஸ் காம்பெட்டிட்டர் தான். அதுக்காக நட்பு பாராட்ட முடியுமா? ஜீவா சார் முன்னாடி தாத்தா கிட்ட ஏதாவது வம்பு பண்ணிருக்கணும்” ஷங்கர் உறுதியாக கூற, அங்கு மற்ற அனைவர்களிடமும் மௌனம்.

“எனக்கு ஜீவா அங்கிளை பார்த்….” யாழினி பேச ஆரம்பிக்க, “யாழு பேசாம சாப்பிடுமா” ரவி அன்போடு அழுத்தமாக கூறினான். ‘எங்கு கீதாவின் செயல் வெளிப்பட்டுவிடுமோ?’ என்ற அச்சம் தோன்ற, ரவி யாழினியின் பேச்சை தடுத்துவிட்டான். ரவிக்கு அனைத்தையும் சரி செய்ய வேண்டும். ஆனால், கீதாவின் மனம் காயப்படமால் சரி செய்ய வேண்டும்.

தந்தை தடுத்த வேகத்தில் யாழினி சுதாரித்துக் கொண்டாள். ‘ஜீவா யார்? நான் அப்ப தாரிணி மேம் பத்தி சொல்லும் பொழுதும் அம்மா, அப்பா ஷாக் ஆனாங்களே.’ யாழினி சிந்தனையோடு மௌனிக்க, ‘யாழினி கேட்கறதில் ஏதோவொரு நியாயம் இருக்கோ? வெறும் தொழில் எதிரி மேல தாத்தாவுக்கு இவ்வளவு கோபம் இருக்குமா? ஜீவா இண்டஸ்ட்ரீஸ் அப்படின்னு சொன்னாலே தாத்தாவுக்கு கோபம் வருதே. ஜீவா சாரும், அவங்க குடும்பமும் தாத்தாவை ரொம்ப காயப்படுத்திருப்பாங்களோ? அப்படி இருந்தா, அவங்க தாத்தாவுக்கு பதில் சொல்லியே ஆகணும்.’ ஷங்கர் தீவிர சிந்தனையில் மூழ்க, அங்கு அமைதி நிலவியது.

*****

ஜீவாவின் வீட்டில்

 

தாரிணி தோசை வார்க்க, மாவை எடுத்து வெளியே வைத்தாள். “தாரிணி…” அழைப்பினோடு அவன் சமையலறைக்கு சென்றான். அவள் நெற்றியில் வியர்வை துளிகள் இருக்க, அவளை தன் பக்கம் திருப்பி, அவளுக்கு துடைத்து விட்டான்.

“காலேஜ்ல இவ்வளவு நேரம் நின்னு கிளாஸ் எடுத்துட்டு வந்து இங்கயும் இப்படி வந்து நிற்கணுமா? நீ ஏன் தாரிணி செய்யற? வேலை செய்ற அம்மாவை தோசை சுட சொல்லலாமில்லை? நாம் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடலாம்.” அவன் அவளை தோளோடு  அணைத்து கொண்டு மேஜை பக்கம் வர, “ஜீவா, நான் தோசை சுட்டு தரேன். நீங்க எல்லாரும் சாப்பிடுங்க.” அவள் அவனிடமிருந்து விலக, “நீ உட்கார் தாரிணி. நான் சுட்டு தரேன்” அவன் அவளை அமர சொல்ல, “நீங்க ரெண்டு பேரும் செய்ய வேண்டாம். நானும், அண்ணாவும் பாஸ்தா செய்யறோம். எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம்” சத்யா கூற,

“ஆமா அம்மா. உட்காருங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நாங்க சமைத்து கொண்டு வரோம்” அண்ணனும் தங்கையும் உள்ளே செல்ல, ஜீவா அவர்களை பார்த்து புன்னகைத்தான். தாரிணியின் கண்களிலோ கண்ணீர் சூழ, “தாரிணி, என்ன மா ஆச்சு?” அவன் அவள் கைகளை அழுத்தினான்.

“நான் சாகுறதுக்கு முன்னாடி, நம்ம குழந்தைகளுக்கு , நமக்குன்னு சொந்தம் இருக்குனு தெரியணும்.” அவள் குரல் நடுங்கியது. “தாரிணி, என்ன பேச்சு இது? அப்படி என்ன வயசாகிருச்சு உனக்கு?” அவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி கேட்க, “தலை நரைக்குற வயசாகிருச்சு” அவள் கூற, “என் கண்ணுக்கு, நீ அப்படியே இருக்க தாரிணி. கொஞ்சம் பக்குவம் வந்திருக்கு. அவ்வளவு தான் வித்தியாசம்.” அவன் வழிந்து கொண்டிருந்த அவள் கண்ணீரை துடைக்க, அவன் கைகளை தன் கன்னத்தோடு பொதித்து, “அந்த பக்குவம் அன்னைக்கு இருந்திருந்தா, நீயும் நானும் இப்படி யாரும் இல்லாத அனாதையா வாழ வேண்டிய கட்டாயம் வந்திருக்காதே ஜீவா.” அவள் அவன் முகம் பார்த்து கேட்டாள்.

“நான் இல்லாம வாழ்ந்திருப்பியா தாரிணி?” அவன் கேட்க, “நான்…” அவள் ஆரம்பிக்க, “பழசை மறக்க கூடாதா தாரிணி?” அவன் கேட்க, “இந்த சுற்றமும் சூழலும், நம்மை மறக்க விட மாட்டேங்குதே ஜீவா” அவள் கூற, அங்கு அலைபேசி ஒலிக்க, அனைவரின் கவனமும் அங்கு திரும்பியது. சமையலறையிலிருந்து ஓடி வந்தாள் சத்யா.

‘சங்கர்…’ அலைபேசியில் அவன் பெயரை பார்த்ததும் அவள் முகத்தில் மலர்ச்சி. மடமடவென்று  தன் அறைக்குள் ஓடினாள் சத்யா. “சங்கர், என்ன இந்த நேரம் கூப்பிட்டிருக்கீங்க?” சத்யா கேட்க, “தெரியலை சத்யா, உன் கிட்ட பேசணும் போல இருந்தது.” அவன் குரலில் குழைவு.கொஞ்சம் தடுமாற்றம்.  “பழகிய கொஞ்ச நாளில் உங்களுக்கு இப்படி எல்லாம் தோணுதா?” அவள் குரலில் வெட்கம்.

“சத்யா, நான் உன்னை உன் காலேஜுக்கு ஒரு ப்ராஜெக்ட்க்காக வந்தப்ப பார்த்தேன். உன்னை பார்த்த நொடி என் மனதில் நீ எனக்காக பிறந்திருக்கன்னு எனக்கு தோணுச்சு. உங்க குடும்பம் பத்தி கூட, நான் உன் கிட்ட இது வரைக்கும் கேட்டதே இல்லை. கேட்கணும்னு தோணுதே இல்லை. காலேஜ் ப்ரொஜெக்ட்க்கு தேவையான டீடெயில்ஸ் கேட்டப்ப, ஸ்டுடென்ட் லீடர்ன்னு நீ தான் என்கிட்டே பேச வந்த. உன் ஒவ்வொவொரு செயலிலும், நான் என் தாத்தாவை பார்க்குறேன்.” ஷங்கர் தன் வீட்டில் மெத்தையில் படுத்தபடி அலைபேசி வழியாக கூற, சத்யா கிண்கிணியாக சிரித்தாள்.

“என்ன சிரிப்பு?” அவன் கேட்க, “எல்லாரும் அம்மா மாதிரின்னு சொல்லுவாங்க. அது என்ன தாத்தா மாதிரி? நான் அவ்வளவு வயசான மாதிரி இருக்கேனா ஷங்கர்?” அவள் சிணுங்க, “ஹா…ஹா…” அவன் பெருங்குரலில் சிரித்தான்.

“ஷங்கர், நான் வைக்கிறேன்” சத்யா கோபம் கொள்ள, “இதைத்தான் சொல்றேன் சத்யா. என் தாத்தா கிட்ட இருக்கிற கோபம். பிடிவாதம். அழுத்தம். என் தாத்தா ரொம்ப பாசக்காரர். அதையும் நான் உன் செயலில் பார்த்திருக்கேன். ஒருவேளை உன்னை சட்டுனு பிடித்து போனதுக்கு இதுவெல்லாம் தான் காரணமோ?” அவன் கேட்க, “உங்க காரணம் பத்தி அப்புறம் பேசுவோம். நான் பாஸ்தா செய்யறேன்னு எங்க அம்மா, அப்பா கிட்ட சொன்னேன். நான் போகணும். அப்புறம் பேசலாமா?” அவள் கேட்க,

“என்னை எப்படி பிடித்ததுனு நீ சொல்லவே இல்லையே சத்யா?” அவன் குரல் கொஞ்ச, “ஷங்கர், எனக்கு உங்களை மாதிரி காரணம் எல்லா சொல்ல தெரியலை. உங்களை யாரோன்னு எனக்கு தோணவே இல்லை.” அவள் குரலில்  நெருக்கம். “சத்யா, உங்க அம்மா அப்பா நம்ம காதலுக்கு சம்மதம் சொல்லுவாங்களா?” அவன் கேட்க, “எங்க அம்மா,அப்பாவே லவ் மேரேஜ் தான். ஸோ, கண்டிப்பா சம்மதம் சொல்லுவாங்க ” அவள் குரலில் உறுதி இருந்தது.

“சத்யா….” வருணின் குரலில், “எங்க அண்ணா கூப்பிடுறான். நான் வரேன். நான் வரேன்… வரேன்..” அவள் அழைப்பை துண்டித்துவிட்டு பறக்க, ஷங்கரின் முகத்தில் புன்னகை. “சத்யா, சாப்பிட வா. நான் தனியா செய்து முடிச்சிட்டேன்” அவன் கூற, “அண்ணான்னா அண்ணா தான்” அவள் அவனை செல்லம் கொஞ்சி மேஜையில் அமர்ந்தாள்.

“சத்யா, யார் போன்ல?” தாரிணியின் குரலில் கண்டிப்பு. “அம்மா, இது காலேஜ் இல்லை.” சத்யா சிரிக்க, “நான் யாருனு கேட்டேன்?” அவள் குரலில் அழுத்தம். “அம்மா, நான் உங்க ஸ்டுடென்ட் இல்லை.” அவள் கூற, “ஃபிரென்ட் கிட்ட பேசுறதை எங்க முன்னாடியே பேச வேண்டியது தானே?” தாரிணி கேட்க, “நான் ஃபிரெண்டுனு சொல்லவே இல்லையே அம்மா.” சத்யா தைரியமாக சொல்ல, தாரிணி அதிர்ந்து விழித்தாள்.

“சத்யா சாப்பிட உட்காரும்மா” ஜீவா கூற, “ஜீவா, அவ பேசுறதுக்கு என்ன அர்த்தம்?” தாரிணி பிடிவாதமாக கேட்க, “தாரிணி விடேன்.” ஜீவா தன்மையாக  கூறினான். “அம்மா, நான் அப்படி யாரையாவது விரும்பினாலும் என்ன அம்மா தப்பு? சொல்ல வேண்டிய நேரத்தில் கண்டிப்பா நான் உங்க கிட்ட சொல்லுவேன் அம்மா. ” கூறிவிட்டு அவள் பாஸ்தா, சாப்பிட வருணும், ஜீவாவும் சத்யாவை ஆழமாக பார்க்க, தாரிணி தன் மகளை அதிர்ச்சியாக பார்த்தாள்.

தாரிணி எதுவோ பேச எத்தனிக்க, ஜீவா தன் மனைவியை பார்த்து மறுப்பாக தலை அசைத்தான். என்ன பேசுவதென்று தெரியாமல் நால்வரும் அமைதியாக சாப்பிட்டனர்.

நதி பாயும்…                  


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!