jeevanathiyaaga_nee-30 (Final Episode)

JN_pic-0ad04291

jeevanathiyaaga_nee-30 (Final Episode)

ஜீவநதியாக நீ…

அத்தியாயம் – 30

ரவியின் கால்கள் அவர்களை நோக்கி செல்ல பரபரக்க, கீதா பிடிவாதமாக தன் கணவனை பிடித்தபடி அங்கு நின்றாள். “கீதா, நீ இப்ப பிடிவாதம் பண்ணாத.” ரவி தன் மனைவியை சமாதானம் செய்ய, அவள் பிடிமானம் கூடியது.

“கீது…” அவன் குரல் கெஞ்ச, “நடக்குறதை வேடிக்கை மட்டும் பாருங்க” கீதா அவனிடம் பிடிவாதமே பிடித்தாள். “எல்லாரும் பேசணும். நாம் மட்டும் பேசி ஒன்னுமாகாது கொஞ்சம் பொறுமையா இருந்து இன்னைக்கு இந்த விஷயத்தை முடிச்சிடுவோம்.” கீதா ரவியிடம் மெல்லிய குரலில் கூறினாள்.

“மேம்” யாழினி ஓடி சென்று அவர்கள் வழியை மறித்துக் கொண்டு நின்றாள். “மேம், நான் உங்களை அத்தைன்னு கூப்பிடலாமில்லை. அத்தை, ப்ளீஸ் உள்ள வாங்க. மாமாவையும், கூட்டிகிட்டு உள்ள வாங்க.” யாழினி கெஞ்ச, ஜீவா யாழினியின் கன்னம் தொட்டு அவளை கொஞ்சினான். அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 ‘இவள் காதுகுத்திற்கு நானில்லை. இவளுக்கு நான் தாய்மாமன் சீர் செய்யவில்லை.’ அவன் அடக்கி வைத்திருந்த அத்தனை ஆசைகளும், நிராசைகளும் தன் தங்கை மகளை தீண்டும் பொழுது மேலே எழும்ப அவன் கைகள் நடுங்கியது.

“வருண் உள்ள வா” ஷங்கர் அவனை அழைக்க, “தொழிலில் நீ என்னை விட பலசாலின்னு சொல்லுவியே ஷங்கர் உண்மை தான். தொழில் மட்டுமில்லை, உறவுகளிலும் நீ என்னை விட பலசாலி தான். எங்களுக்கு இருக்கிறது எங்க அம்மா, அப்பா மட்டும் தான் ஷங்கர். அவங்க நல்லாருக்கணுமுன்னா, நாங்க இங்க இருந்து போறது தான் நல்லது ஷங்கர்” வருண் குரலில் கோபம் இருக்க,  “நாங்க எல்லாம் இருக்கும் பொழுது, உனக்கு அம்மா அப்பா மட்டுமுன்னு எப்படி சொல்லுவ வருண். நான் உன்கிட்ட சண்டை போடுவேன் வருண்.” ஷங்கர் அவன் தோள்களில் கை போட, புஷ்பவல்லி முகத்தை மூடி கதறினார்.

“ஷங்கர்” தன் அண்ணன் மகனின் தலை கோதி, கண்களை இறுக மூடினாள் தாரிணி. அவளுக்கு கைகள் நடுங்கியது. வார்த்தைகள் வரவில்லை.

“போதும்ங்க, நாம பிள்ளைகளை தண்டிச்சது போதும்ங்க. என்னால் இந்த கொடுமை எல்லாம் பார்க்க முடியலைங்க. நெஞ்சு வெடிச்சு செத்திருவேனோன்னு தோணுதுங்க” புஷ்பவல்லி கதற, மரகதமும் தன் கணவனிடம் கெஞ்சினாள்.

“நம்ம பசங்க, நம்ம பேரப்பிள்ளைங்க எதுக்குங்க இவ்வளவு கஷ்டப்படணும்? அவங்க விதி…” என்று மரகதம் அழ,  “விதி காரணம் இல்லை மரகதம். அவங்க படுற கஷ்டத்துக்கு அவங்க தான் காரணம். அவங்க பிள்ளைகள் படுற கஷ்டத்துக்கும் அவங்க அம்மா அப்பா தான் காரணம்” என்றார் நீலகண்டன் அழுத்தமாக.

“ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் நதி போல தான் ஓடும். ஆனால், அந்த நதியின் ஜீவன் விதி இல்லை மரகதம். நாம செய்யற  செயல். நம்ம செயல் நம்ம குடும்பத்தை பாதிச்சு, நம்ம பிள்ளைகளை பாதிச்சு எல்லாரையும் கஷ்டப்படுத்தும். தெளிவான ஓடை போல ஓட வேண்டிய வாழ்க்கையை சிக்கலாகிட்டு இப்ப அழுது என்ன பிரயோஜனம்? இத்தனை வருஷம் கழித்து ஒன்னும் புதுசா மாறாது.” நீலகண்டன் கோபமாக கூற, “அது தான் சரி. அவங்களை கிளம்ப சொல்லலாம்” என்றார் ஷண்முகம்.

“கிளம்ப மாட்டாங்க அப்பா. தாரிணி, நீ உள்ள வா. ஜீவா, நீ உள்ள வா ஜீவா.” ரவி ஜீவாவின் தோள் மேல் கைபோட்டு உள்ளே அழைக்க, “ரவி, பிரச்சனை வேண்டாம். நாங்க போயிடுறோம்” என்றான் ஜீவா தன்மையாக.

“ஜீவா, எனக்கு பழைய ஜீவாவை தான் பிடிக்கும். இப்படி பேசுற ஜீவாவை பிடிக்கலை. என் கூட சண்டை போடு ஜீவா. மகளை, மகனை வேண்டாமுன்னு சொல்ற உரிமை அவங்களுக்கு இருக்கும் பொழுது, என் மகன் கூட்டிகிட்டு வந்த பெண்ணை உள்ள வான்னு சொல்ற உரிமை எனக்கில்லையா?” ரவி கேட்க, “ரவி…” என்று கோபமாக அழைத்தார் ஷண்முகம்.

“மாமா, இதை எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி நாங்க பண்ணிருப்போம் மாமா. ஏன் செய்யலை தெரியுமா மாமா? உங்க மேலையும் அப்பா மேலையும் பயமா?  இல்லை மாமா. இல்லை மரியாதையா? மரியாதைக்காக விட்டுத்தர விஷயம் இது இல்லை மாமா. பாசம் மாமா. பாசம் அப்பா. உங்க மேல நாங்க வச்சிருக்கிற பாசத்துக்கு கட்டுப்பட்டோம். அண்ணா, அப்பாவை காயப்படுத்திட்டான். தாரிணி உங்களை காயப்படுத்திட்டா. நானோ, இவங்களோ உங்களை காயப்படுத்திற கூடாதுன்னு உங்க வார்த்தைக்கு கட்டுப்பட்டோம். ஆனால், நாங்க இழந்ததும், எங்க வருத்தமும் உங்களுக்கு புரியவே இல்லையா?” கீதா கண்ணீர் மல்க கேட்டாள்.

“கீதா…” ரவியும், ஜீவாவும் ஒரு சேர பதற, “இவங்க என்கிட்டே பொறுமையா இரு பொறுமையா இருன்னு எப்படி ஆறுதல் சொல்லுவாங்க தெரியுமா?” கீதா கேட்க, தாரிணி சோர்வாக அவர்களை பார்க்க, இளையவர்கள் கண்களில் கண்ணீர் தேங்கியது.

 “ஆனால், அவங்க என்னை ஒவ்வொரு தடவையும் சமாதானம் செய்யும் பொழுது வருத்தப்படுவாங்க மாமா. ஏன், அவங்களுக்கு அண்ணா மேல இல்லாத கோபமா? அவங்க போடாத சண்டையா. ஆனால், அவங்க மனசு மாறலை? கோபம்ம்னா அது மாறி இருக்கும் மாமா. உங்க கிட்ட இருக்கிறது பிடிவாதம். வறட்டு பிடிவாதம். வறட்டு கவுரவம்.” கீதா கூற,

“கீதா, உனக்கு எப்பவும் உன் அண்ணா தானே உசத்தி” நீலகண்டன் கர்ஜிக்க, “ஆமா அப்பா. என் அண்ணா மாதிரி ஒருத்தன் கிடையாதுனு நான் இப்பவும் கர்வமா சொல்லுவேன் அப்பா. அண்ணா தப்பு பண்ணினான். நான் இல்லைனு சொல்லவே இல்லை அப்பா. ஆனால், அண்ணா ஒரு தடவை தான் தப்பு பண்ணினான். நீங்க அதையே சொல்லி சொல்லி இத்தனை வருஷம் அந்த தப்பை மனசில் சுமந்திருக்கீங்க. நான், அவன் கிட்ட இருந்து விலகி நின்னதுக்கு காரணம் அவன் தான் தெரியுமா. நான் அப்பாவை காயப்படுத்திட்டேன். நீ அப்பா கூடவே இரு கீதான்னு என்னை பாசத்தால் கட்டிபோட்டுட்டான் அப்பா.” கீதா  பேசப்பேச, அவளுக்கு தள்ளாடியது. “அம்மா…” யாழினி அவளை தாங்கி பிடிக்க, “கீதா… வேண்டாம் கீதா” ஜீவாவின் உள்ளம் பதறியது.

“கீது…” ரவி அவளை தாங்கினான். “கீதா, விடு. நீயும் பொறுமையா இருந்து, என்னையும் இப்படி மாத்தினது நீ. இன்னைக்கு பேசி, எல்லாத்தையும் கெடுத்திராத. விடு” என்று ரவி அவளை தடுக்க, “இல்லைங்க, நான் கேட்கணும். கெட்டபெயர் வந்தாலும் பரவாயில்லை. யாரவது ஒருத்தர் கேட்டுத்தானே ஆகணும். ஜீவநதி… அது அண்ணாவுக்கு மட்டும் தான் பொருந்துமா உங்களுக்கு பொருந்தாது? கீதா கேட்க,

“கீதா…” ஜீவாவின் குரல் ஓங்கி ஒலிக்க, “நீ சும்மா இரு அண்ணா. உனக்காக நான் வாயை மூடிக்கிட்டு இருந்தது போதும். என் வீட்டுக்கு வந்துட்டு நீ இப்படி அவமான பட்டு போகத்தான் நான் பொறுமையா இருக்கணுமுன்னா என்னால் பொறுமையா இருக்கவே முடியாது அண்ணா” கீதா ஆணித்தரமாக கூறினாள்.

“தாரிணி விஷயத்தில் முதல் தப்பு,  மாமாவோடது. நீங்க செய்த தப்பு தாரிணியை அவசரப்பட்டு முடிவு எடுக்க வச்சி எல்லாம் தப்பா போச்சு. அப்பா, அண்ணா என்ன தப்பு பண்ணினான்? ஆரம்பத்திலிருந்து நீங்க அவனை புரிஞ்சிக்கிட்டதே இல்லை. நேர்மையானவன் என் அண்ணன். வேலைக்கு போகலைனு சொல்லுவீங்க. இன்னைக்கு அண்ணன் எவ்வளவு பெரிய தொழிலதிபர் தெரியுமா உங்களுக்கு?” கீதா பரிதாபமாக கேட்டாள்.

“நீங்க அண்ணனை புரிஞ்சிகிமா பண்ண தப்பு தான் அப்பா இப்படி ஆகிருச்சு. நம்ம நதி ஜீவன் இல்லாம ஓடுது” கீதா ஜீவா மேல் சாய்ந்து அழ, “நாங்க தப்பு பண்ணிருக்கோம் கீதா” அவன் தன் தங்கையின் கண்ணீரை துடைத்து விட, “அதை மன்னிக்கலாமே அண்ணா. மன்னிக்க கூடாதுனு என்ன வீராப்பு?” கீதா முகத்தை சுளித்துக் கொண்டாள்.

தன் தங்கை இனி தன்னை விடப்போவதில்லை என்றறிந்தவன், “எனக்கு தண்ணீர் கொடு கீதா” ஜீவா உரிமையாக கேட்டான். மடமடவென்று கீதா உள்ளே ஓடி இஞ்சியும் ஏலக்காயும் போட்டு அனைவருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். “உட்கார் ஜீவா” ரவி அவனை கைபிடித்து அமர வைத்தான். ‘இனி இவர்களை கட்டுப்படுத்த முடியாது.’ என்று புரிய பெரியவர்கள் செய்தவறியாமல் அமைதியாக எதிர் பக்கம் அமர, சிறியவர்களோ ‘பெரிய சண்டை வந்திருமோ…’ என்று அச்சத்தோடு நின்றபடி இவர்களை பார்த்து கொண்டிருந்தனர்.

“இப்படி மடமடன்னு வீட்டுக்குள் வந்தா, என் தங்கை கையால் ஜம்முனு ஒரு டீ கிடக்குமுன்னு தெரிஞ்சிருந்தா, நான் என்னைக்கோ வந்திருப்பேன் ரவி” ஜீவா ஆழமான குரலில் கூற, “நீ என் தங்கையை கூட்டிட்டு வந்தா, நாங்க வேண்டாமுன்னா சொல்லிருப்போம். நீ தான் இத்தனை வருஷமா வரவே இல்லையே.” ரவி வருத்தத்தோடு கூற, “எனக்கும் இந்த ரவியை பிடிக்கலை. சண்டை போட்டு, என் சட்டையை பிடிக்கிற ரவியைத் தான் என் மனசு தேடுது.” அவன் வருத்தத்தை குறிப்பிட்டு ஜீவா கூற, ரவி புன்னகைத்து கொண்டான்.

எது மாறியது? எது மாறவில்லை? என்று யாருக்கும் புரியவில்லை. ஜீவா சட்டென்று கிளம்பிவிட்டான். எல்லோருக்கும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரமும் தனிமையும் தேவைப்படுமென்று.

“அண்ணா…” கீதா ஏக்கமாக அழைக்க, “அண்ணன் வீடு பக்கத்தில் தான் இருக்கு கீதா.” அவன் புன்னகையோடு கூற, “இனி தினமும் வந்துருவேன் அண்ணா” அவள் தன் தந்தையை பார்த்தபடி கூறினாள்.

 

“வரேன் அப்பா. காலம் முழுக்க, நீங்க சொல்றதை நான் கேட்க கூடாதுன்னு தான் என் விதி போல அப்பா. விதியோ! நதியோ! உங்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு இத்தனை வருஷம் தனியா இருந்துட்டோம். ஆனால், இன்னைக்கு எல்லாரையும் பார்த்து பேசினத்துக்கு அப்புறம், இனி அப்படி தனியா இருக்க முடியுமுன்னு எனக்கு தோணலை அப்பா” ஜீவா அனைவரிடமும் விடைபெற, தாரிணியும் சத்யாவும் வருணும் அவனை பின் தொடர்ந்தனர்.

ஜீவா அவன் குடும்பத்தோடு சென்றதும் ரவியின் வீட்டில் மௌனம் நிலவியது. பெரியவர்கள் எதுவும் பேசவில்லை. நீலகண்டனும், மரகதமும் அவர்கள் வீட்டுக்கு கிளம்பிவிட்டனர். நீலகண்டனுக்கும் சத்யாவிடமும், வருணிடமும் பேச வேண்டும் என்ற அவா எழுந்தது. இத்தனை வருடம் அவர் கட்டிக்காத்த வைராக்கியத்தை விடவும் முடியவில்லை. மரகதம் அழுகையினோடே வீடு திரும்ப, நீலகண்டன் மௌனத்தை  கடைபிடித்தார்.

ஷண்முகம் எதுவும் பேசவில்லை. புஷ்பவல்லி அறைக்குள் முடங்கிக்கொள்ள, ஷங்கர் தோட்டத்தை பார்த்தபடி பால்கனியில் நின்று கொண்டிருந்தான். “அண்ணா…” அவன் தோள்களை பிடித்தாள் யாழினி.  “சொல்லு யாழு…” ஷங்கர் அவள் பக்கம் திரும்ப, “நீ சத்யாவை லவ் பண்ற தானே?” யாழினி கேட்க,”ஃபிரெண்ட்ன்னு கூட்டிகிட்டு வந்ததுக்கே இவ்வளவு பெரிய கலவரமாகிருச்சு. இதுல எனக்கு லவ் ஒன்னு தான் கேடு” ஷங்கர் கூற, “சும்மா சொல்லு அண்ணா. அதெல்லாம் அப்பாவும், மாமாவும் பார்த்துப்பாங்க. அம்மா கிட்ட நான் பெர்மிஸ்ஸின் வாங்கி தரேன்” யாழினி கண்சிமிட்ட, “இல்லை  யாழினி. சத்யா பாவம். நான் லவுன்னு சொன்னாலும், தாத்தா சத்யாவை தான் குறை சொல்லுவாங்க.” அவன் குரலில் வருத்தம் இருந்தது.

“அது சரி வருக்கால மனைவிக்கு பாவம் பார்க்குறது நியாயம் தான்” யாழினி நாக்கை துருத்த, “யாழு…” அவன் குரலில் கண்டிப்போடு இருக்க, “நடிக்காத டா. அது தான் எல்லாம் சரியாகுற மாதிரி சூழ்நிலை வந்திருக்கே” யாழினி கூற, “யாழு, ஷங்கர் சாப்பிட வாங்க” கீதா குரல் கொடுத்தாள்.

“அம்மா, என்ன சாப்பாடெல்லாம் மணக்குது?” யாழினி வந்து அமர, “ம்… தேங்காய் பர்பி பண்ணினேன். ரவா பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார்” கீதா உற்சாகமாக கூற, “அம்மா, முகத்தில் பயங்கர சிரிப்பு இருக்கே.” ஷங்கர் கேலி பேச, “கீதா, நான் உனக்கு எடுத்து வர உதவி பண்றேன்” ரவி சமையலறைக்கு செல்ல, அங்கு கீதா எதையோ எடுத்துக் கொண்டிருந்தாள். “கீது…” அவன் குரலில், அவள் கண்கள் கலங்கியது. “தேங்க்ஸ்ங்க” அவள் அவன் தோளில் சாய, “இத்தனை வருஷம் லேட் பண்ணதுக்கு நான் சாரி சொல்லணும் கீது.” அவன் கூற, “காயங்கள் ஆற வருஷங்கள் ஆகத்தானே செய்யும்” அவள் அவன் முகம் பார்த்து கூறினாள்.

“இது என்ன சினிமாவா, காதலர்கள் ஒன்று கூடியதும் சுபம் போட? இல்லை, குழந்தை பிறந்ததும் பழசை மறக்க?” கீதா கேட்க, ரவி புன்னகைத்தான்.

 “அம்மா, நாங்க வரணுமா? அங்க என்ன நடக்குது?” யாழினி குரல் கொடுக்க, “வரேன் டீ…” என்று கூற, புஷ்பவல்லியை யாழினி அழைத்து வந்திருந்தாள்.

“எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்றார் ஷண்முகம் திட்டவட்டமாக. ஷங்கர், யாழினியின் முகம் வாட, இதை எதிர்பார்த்தது போல் ரவியின் கீதாவும் அவரை பார்த்தனர். “கீதா, மனுஷன் சாப்பிட்டா சாப்பிடுறார் இல்லைனா பட்டினியாக  இருக்கட்டும். எத்தனை நாளைக்கு சாப்பிடாம இருக்க முடியும்? எனக்கு ஒரு தேங்காய் பர்பியை கொடு” புஷ்பவல்லி கூற, யாழினி வந்த சிரிப்பை அடக்க அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தாள்.

“தாத்தா, நீங்க சாப்பிடலைனா நானும் சாப்பிட மாட்டேன் தாத்தா.” ஷங்கர் தன் தாத்தாவின் கைகளை பிடித்துக்கொண்டு கூற, “ஷங்கர் நான் தான் கெட்டவனா இந்த வீட்டில்” அவர் சோகமாக கேட்க, “தாத்தா நீங்க மட்டுமில்லை, நீலகண்டன் தாத்தாவும் கெட்டவங்க மாதிரி தான் தெரியுது” யாழினி கூற, “யாழு…” கீதா யாழினியை பார்த்து முறைக்க, “எப்பவும் தப்பு பண்ணவங்களை விட்டுட்டு என்னை பார்த்தே முறைங்க” முணுமுணுத்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள் யாழினி.

“அப்படி எல்லாம் இல்லை தாத்தா. அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயங்கள். கோபத்தை விட்டுடலாமே தாத்தா” ஷங்கர் கெஞ்ச, அவர் சாப்பிட ஆரம்பித்தார்.

***

ஜீவாவின் வீட்டில்.

தாரிணி எதுவும் பேசாமல் அவர்கள் அறையில் சோபாவில் அமர்ந்திருந்தாள். “தாரிணி” ஜீவா அருகே வர, ” எனக்கு ஒரு ஆசை ஜீவா” அவள் கூற, ‘என்ன?’ என்பது போல் அவன் புருவத்தை உயர்த்தினான்.”அடுத்த ஜென்மத்தில், நம்ம கல்யாணம் அம்மா, அப்பா சம்மதத்தோட நடக்கணும். நான் எல்லார் பாசத்தையும் அனுபவிக்கனும்” அவள் கூற, “ஒருவேளை அடுத்த ஜென்மத்தில், நான் மோசமான புருஷனா இருந்துட்டா?” ஜீவா புருவத்தை உயர்த்த, “நீ இந்த ஜென்மத்திலே அப்படித்தானே?” தாரிணி கண்சிமிட்டி சிரித்தாள்.

“அடிப்பாவி, ஒரே ஒரு நாள் உங்க வீட்டுக்கு போயிட்டு வந்ததும் ஆளே மாறிட்ட?” அவன் அவள் காதை திருக, அவள் வாயை மூடி சிரித்தாள்.  “ஜீவா, எல்லாம் சாரியாகிரும் தானே, அண்ணாவும் கீதாவும் எல்லாம் சரி செய்யணும்னு நினைக்குறாங்க. அம்மா, அத்தை எல்லாரும் நம்ம வேணுமுன்னு தான் நினைக்குறாங்க. அப்பாவும் மாமாவும் முன்ன மாதிரி கோபப்படலை. எல்லாம் சரியாகிரும் தானே ஜீவா?” அவள் கண்களில் பரிதவிப்போடு கேட்க, “எல்லாம் சரியாகிரும் தாரிணி. நீ எதுவும் யோசிக்காத” அவன் கூற, “லவ் யூ ஜீவா” அவன் மேல் சாய்ந்துக் கொண்டாள்.

அவன் கண்களில் கண்ணீர் சூழ்ந்தது. அவனுக்கும் ஆசுவாசம் தேவைப்பட்டது.  தன் மனையாளின் ஸ்பரிசத்தில் அதை எடுத்துக்கொண்டான் ஜீவா.

“தாரிணி, பசங்க பயந்து போயிருப்பாங்க. சமையலம்மா  சாப்பாடு செஞ்சி வச்சிட்டாங்க. நீ என்னனு போய் பாரு. நான் பசங்களை கூட்டிட்டு வரேன்” ஜீவா, வருண் அறைக்கு செல்ல, அவன் அங்கு இல்லை. அவன் சத்யா அறைக்கு செல்ல, சத்யா அழுது கொண்டிருக்க, வருண் அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

“சத்யா…” ஜீவாவின் குரலில், “அப்பா, சாரி அப்பா… சாரி… சாரி… எல்லாம் என்னால் தான்.” சத்யா தன் தந்தையின் தோளில் சாய்ந்து விசும்ப, “சத்யா, ஒண்ணுமில்லை. நீ அப்பாவை பாரு” அவன் கூற, “அப்பா…” அவள் அழுகையோடு  தந்தையை பார்க்க, “நீ நல்லது தான் பண்ணிருக்க சத்யா.  அது நம்ம வீடு தான். நம்ம சொந்தம் தான். ஆனால், அவங்களை பார்க்குற தைரியம் எங்களுக்கு இல்லை. நீ என் கிட்ட கேட்டுட்டு தானே போன? நீ போனால் நல்லது நடக்கும்னு எனக்கு தோணுச்சு சத்யா” அவன் கூற, “நல்லது நடந்திருக்கா அப்பா? அம்மா அழுதாங்க. நீங்களும்…” அவள் குரல் உடைய, “சில வலிகள் காலத்திலும் கண்ணீரிலும் தான் கரையும் சத்யா.” ஜீவா கூற, வருண் தன் தந்தையின் அருகே வந்து கட்டிக்கொண்டான்.

“என்ன அப்பாவும் பொண்ணும் கொஞ்சிட்டு இருக்கீங்க?” தாரிணியின் குரலில் பிள்ளைகள் அவள் பக்கம் திரும்ப, “பொறாமையா?” ஜீவா அவளை பார்த்து கண்சிமிட்டினான்.

*** *** ***

மறுநாள் காலை ஆறுமணி.

     “காலிங் பெல் சத்தம் கேட்குது ஜீவா” தாரிணி குரலில் ஜீவா வாசல் பக்கம் செல்ல, “தாரிணி, எல்லாரும் வந்திருக்காங்க” அவன் குரலில் பதட்டமா சந்தோஷமா புரியாமல் தாரிணி அங்கு வர, அங்கு நீலகண்டன், மரகதம், ஷண்முகம், புஷ்பவல்லி, ரவி, கீதா, ஷங்கர், யாழினி என அனைவரும் நிற்க, ஜீவாவும் தாரிணியும் சற்று தடுமாறினர்.

“என்ன ஜீவா? இப்பவும் நீ திருந்தலை. காலையில் ஆறு மணி வரைக்கும் தூக்கம்?” நீலகண்டன் குரலில் கண்டிப்பு இருக்க, தன் தந்தையின் கண்டிப்பில், கோபத்தில் அவனுக்கு அத்தனை ஆனந்தம். ‘அப்பா…’ ஜீவாவின் இதழ்கள் மூடிக்கொண்டன. இமைகள் மட்டுமே பேசின. ஷண்முகம் எதுவும் பேசவில்லை. தாரிணி, தன் தாயை கட்டிக்கொண்டாள்.

“ஜீவா, உன் தங்கை என்னை தூங்கவே விடலை.” ரவி குற்ற பத்திரிக்கை வாசிக்க, “இங்க மட்டும் என்னவாம்?” நீலகண்டனும், சண்முகமும் ஒரு சேர கூற, அங்கு சிரிப்பலை பரவியது. “நல்லது நடக்கும்னு நேத்து எனக்கு தோணுச்சு. ஆனால், இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நான் நினைக்கலை.” ஜீவா கூற, “அப்பாவும், மாமாவும் யோசிச்சிகிட்டே இருக்கும் பொழுது அண்ணா வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவோம். திரும்பவும் கோபத்தை மனசில வச்சிக்கிட்டு இருந்து, தீராக் கோபம் போராய் முடியும் மாதிரி ஆகிரும்முன்னு பாடம் எடுக்க ஆரம்பிச்சிட்டா கீதா” ரவி கூறி சிரிக்க, அங்கு மீண்டும் சிரிப்பலை.

பெரியவர்கள் தன் பேரன் பேத்திகளை அருகே வைத்துக்கொண்டு பேசியபடி இளையவர்கள் பேச்சை ரசித்து கொண்டிருந்தனர்.

ஜீவா, தன் தங்கையை வாஞ்சையோடு பார்க்க, “உன் தங்கை, கல்யாணமாகி இத்தனை வருஷத்தில் நேத்து தான் எனக்கு நல்ல சாப்பாடு போட்டா” ரவி கீதாவை வம்பிழுக்க, கீதா ரவியை முறைத்து பார்த்தாள். “என் தங்கையாவது என்னை பார்த்த சந்தோஷத்தில் உங்களுக்கு நல்ல சாப்பாடு போட்டா. உன் தங்கை, அவ அப்பாவை பார்த்த சந்தோஷத்தில் என்னை மோசமான புருஷன்னு சொல்லிட்டா” ஜீவா அப்பாவியாக கூற, “ஜீவா…” தாரிணியின் குரலில் கோபம் இருக்க, “மாப்பிள்ளையை பெயர் சொல்லி தான் கூப்பிடுவியா தாரிணி?” ஷண்முகம் கண்டிப்போடு கேட்க, “அப்பா…” தன் மகனை மகளை தள்ளிவிட்டு தன் தந்தை அருகே அமர்ந்து அவர் தோள் சாய்ந்து கொண்டாள் தாரிணி. ஜீவாவின் கண்களில் பெருநிம்மதி. 

அங்கு அன்பும் பாசமும் நிறைந்திருக்க, “நதி போல் ஓடிக்கொண்டிருக்கும் நம் வாழ்வின் ஜீவன் நாம் தான். அதை தெளிவாக ஓட வைப்பதும் குழப்பத்தில் தத்தளிக்க வைப்பதும் நாம் தான்.” என்று நீலகண்டன் தன்னையும் சேர்த்துக்கொண்டு கூற, “ஒரு மனுஷன் செய்யற தப்பு அவன் கூடப்பிறந்தவங்க, அவன் பிள்ளைகள் அவன் பேரப்பிள்ளைகள் அப்படின்னு எல்லாரையும் பாதிக்கும். முடிந்த அளவுக்கு தப்பு பண்ணாம இருக்கணும். சில சமயங்களில் தப்பு பண்றது இயல்பு தான். ஆனால், அதை மன்னிக்குற மனமும், திருத்திக்குற குணமும் இருந்தால் நம்ம வாழ்வு வற்றாத ஜீவநதிதான்” ஷண்முகம் தன் பேரக்குழந்தைகளிடம் கூற, நால்வரும் தாத்தாக்கள் கூறுவதை ஏற்றுக்கொள்வது போல் தலையசைத்தனர்.

சொந்தங்கள் கூடியதும் தாயின் பரிவும் தந்தையின் பாசமும் சகோதரனின் அரவணைப்பும் தம்பதியரின் அன்பும் தாத்தா பாட்டியின் செல்லமும் என அனைத்தும் அவர்கள் இல்லத்தில் வற்றாத ஜீவநதியாக கரைபுரள ஆரம்பித்தது. இத்தனை இருக்கும் பொழுது காதல் இல்லாமலா? ஷங்கரின் விழிகளும் சத்யாவின் விழிகளும் ரகசியமாக சம்பாஷித்துக் கொண்டன என்ன பேசிக்கொள்கின்றன என்றறியாமலே.

நம் வாழ்வின் ஜீவநதி நாம் தான். அதை வற்றவிடாமல் திசைமாறாமல் செழிப்பாக ஓட வைப்போமே!

ஜீவநதி செழிப்பாக பாயட்டும்!

                                      பாயட்டும்!

                                      பாயட்டுமே!

அன்புடன்,

அகிலா கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!