jeevanathiyaage nee – 29 (Prefinal Episode)

JN_pic-1d3f0850

jeevanathiyaage nee – 29 (Prefinal Episode)

ஜீவநதியாக நீ…

அத்தியாயம் – 29

தாரிணியின் கோரிக்கையில் ஜீவா குழம்பிப் போனான். அங்கிருந்த நாற்காலியில் தன் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தான். அவன் முன் மண்டியிட்டு, அவன் மடியில் தலைசாய்த்தாள் தாரிணி. அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவன் பாதத்தை நனைத்தது. அவன் சிந்தனை பலவாறாக ஓடினாலும், அவன் கைகள் அவள் தலையை கோதியது.

அவனுக்கு யோசிக்க சற்று அவகாசம் தேவைப்பட்டது. ‘போனால் பிரச்சனை தான். இத்தனை வருடத்தில் எதுவும் மாறவில்லை. யாரும் எங்களை தேடவில்லை. பிறந்த நாள், காதுகுத்து, சடங்கு என எதற்கும் அழைப்பு வந்ததில்லை. நாங்களும் அங்க போய் நின்றோ, அழைப்பு கொடுத்தோ யாரையும் சங்கடப்படுத்தவில்லை’  அவன் இத்தனை வருட நிகழ்வை அசைப்போட்டான்.

‘போனால், அவமானப்படுத்துவங்க. அதை தாரிணி தாங்குவாளா?’ தலை கோதிய அவன் கைகள் நின்று, தன் மனைவியின் தலையை பாதுகாப்பாக அழுத்தியது. தாரிணி தன் முகத்தை உயர்த்தி, ஜீவாவின் பதிலுக்காக அவனை பார்த்தாள்.

அவள் விழிகள் அனைத்தையும் துடைத்து, ‘சத்யா…’ என்னும் சொல்லை மட்டுமே தேக்கிக்கொண்டு அவனை பார்க்க, ‘சத்யா என் பொண்ணுன்னு தெரிந்து எதுவும் பிரச்சனையாகிட்டா? ஒரு வார்த்தை தப்பா சொன்னாலும் சத்யா தாங்குவாளா?’ அவனுள் அச்சம் கிளம்ப, அவன் படக்கென்று நிமிர்ந்து அமர்ந்தான். அவனுடைய அனைத்து சிந்தகனைகளும் பின்னுக்கு சென்றன.  தன் மகள் மட்டுமே நிறைந்து நின்றாள்.

“கிளம்பு தாரிணி…” என்று அவன் கூற, தாரணி மடமடவென்று செல்ல, “அப்பா…” என்று அழைத்தபடி வருண் வர, ‘எல்லாரும் போகும் பொழுது எதுக்கு மகனை மட்டும்விட வேண்டும்?’ என்ற எண்ணம் தோன்ற, எதுவும் கூறாமல் வருணையும் அவர்களோடு அழைத்து சென்றான் ஜீவா.

***

கீதா ஷங்கரின் வருகைக்காக சற்று பதட்டமாக வாசலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி காத்திருந்தாள். “கீது, ஏன் இவ்வளவு பதட்டம்?” ரவி அருகில் வர, “வேற எதுக்கு? உங்களை நினைத்துதான்” அவள் பட்டென்று கூற, “நான் என்ன செய்தேன் கீது? சிவனேன்னு இருக்கேன்” அவன் கூற, “அது தானே என் பிரச்சனை.” அவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

ரவி அவள் பேசுவது புரிந்து சிரிக்க, “என்ன சிரிப்பு? என்ன பிரச்சனை நடந்தாலும், அப்பா சொன்னது தான் சரின்னு சிவன்னேனு இருப்பீங்க. இப்ப ஷங்கர் ஒரு பெண்ணை கூட்டிகிட்டு வரான். அந்த பொண்ணு யாரு என்ன ஏதுன்னு தெரியலை. மாமா என்ன கேள்வி கேட்பாங்கனு தெரியலை. இவன் என்ன சொல்ல போறான்னு தெரியலை. அப்ப, நான் கவலை பட்டுத்தானே ஆகணும்” அவள் பேசிக்கொண்டே போக, “கீதா…” அவன் அதிர்ச்சியோடு அழைத்தான்.

“என்ன?” அவள் அவனை பார்க்க, “அங்க பாரு” அவன் கூறும் திசையில் அவள் பார்க்க, “எங்க அம்மா அப்பா ஏன் இன்னைக்கு வராங்க?” கீதா அதிர்ச்சியாக கேட்க, “அது தான் எனக்கும் தெரியலை” ரவி சன்னமான குரலில் கூறினான்.

நீலகண்டனும் மரகதமும் வர, “வாங்க அப்பா… வாங்க அம்மா… என்ன திடீருன்னு சொல்லவே இல்லை?” என்று கீதா நேரடியாகவே கேட்க, “என்ன இப்படி சொல்ற? ஷங்கர் இன்னைக்கு வீட்டுக்கு வாங்கன்னு சொல்லிருந்தானே” நீலகண்டன் தன் பேரன் அழைத்ததை பெருமையாக கூற, “ஓ…” என்றாள் கீதா.

“வாங்க மாமா… வாங்க அத்தை…” ரவி அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு, “உன் மகன் இன்னைக்கு ஒரு முடிவோட தான் இருக்கான் போல.” ரவி கீதாவின் காதில் கிசுகிசுக்க,  “உங்க அப்பா மட்டும் போதாதா பிரச்சனை பண்ண? எங்க அப்பா வேற வேணுமா?” கீதா நொந்து கொள்ள, ஷங்கரின் கார் வந்தது.

ரவியும், கீதாவும் சத்யாவை பார்த்திருக்கிறார்கள். ஆனால், பேசியதில்லை. ஷங்கரோடு இறங்கிய சத்யாவை பார்த்த ரவியும், கீதாவும் உறைந்து நின்றனர்.

“கீதா…” ரவி சுதாரித்துக் கொள்ள, “அ…” அவளும் அவன் அழைப்பில் சுதாரித்து  கொண்டாள்.  ஷங்கர் சத்யாவை உள்ளே அழைக்க, “வாம்மா சத்யா” கீதா, ஓடி சென்று அவள் கைகளை பிடித்து அழைக்க, “அம்மா, உங்களுக்கு எப்படி சத்யா பெயர் தெரியும்?” ஷங்கர் ஆச்சரியமாக கேட்க, “நீ தான் சொன்ன” ரவி சமாளித்தான்.

“நான் பெயரை சொன்னேனா?” ஷங்கர் குழம்பி போனாலும், ‘இதுவா இப்ப முக்கியம்?’ என்பது போல் வீட்டிற்குள் வந்தான். ஷங்கர் அழைத்ததால், வந்துவிட்டாலும் புது இடம் என்பதால் சத்யாவுக்கு சற்று சங்கடமாக இருந்தது.

வீட்டிற்குள் நுழைந்தும், “பாட்டி தாத்தாவும் வந்தாச்சா?” கேட்டபடி அவர்கள் அருகே அமர்ந்தான் ஷங்கர். ஒரு பக்கம் நீலகண்டம் மரகதமும் அமர்ந்திருக்க, மறுப்பக்கம் சண்முகமும் புஷ்பவல்லியும் அமர்ந்திருந்தனர். ரவி அவர்களோடு அமர, “சத்யா, வா உட்கார்” ஷங்கர் அவளை உபசரித்தான்.

“இவங்க என் ஃபிரண்ட். நம்ம கம்பனி ஒரு காலேஜ் ப்ராஜெக்ட் பண்றோமில்லை தாத்தா. அதுக்கு இவங்க காலேஜிலிருந்து ஸ்டுடென்ட்ஸ் சார்பில் இவங்களை தான் அனுப்பினாங்க. பயங்கர திறமைசாலி. ரொம்ப நல்ல பேசுவாங்க. அந்த ப்ராஜெக்ட் வெற்றிகரமா முடிஞ்சதுக்கு காரணம் சத்யா தான். அது தான் உங்க எல்லார் கிட்டயும்  அறிமுக படுத்தலாமுன்னு கூட்டிகிட்டு வந்தேன்.” ஷங்கர் கூற, “அம்மா, இப்படிலாமா அறிமுக படுத்துவாங்க?” யாழினி தன் தாயின் காதில் கிசுகிசுக்க, கீதா தன் மகளை முறைத்தாள்.

“அம்மா, நீங்க அண்ணனை தான் இப்ப முறைக்கணும். என்னை இல்லை” யாழினி உதட்டை பிதுக்கினாள்.  சத்யாவின் கண்கள் நீலகண்டனையும், மரகதத்தையும், ஷண்முகத்தையும், புஷ்பவல்லியையும் ஏக்கமாக பார்க்க, “என்னம்மா பார்க்குற?” என்று புஷ்பவல்லி கேட்க, “உங்க குடும்பம் ரொம்ப அழகா இருக்கு. பாட்டி தாத்தா அப்படின்னு” சத்யாவின் குரல் ஏக்கமாக ஒலித்தது.

“ஏம்மா, உனக்கு பாட்டி தாத்தா எல்லாம் இல்லையா?” புஷ்பவல்லி கேட்க, “யாரும் இல்லை…” மேலும் ஏதோ பேச ஆரம்பித்து நிறுத்திக் கொண்டாள். “அம்மா வழி, அப்பா வழி இப்படி யார் வழியிலும் இல்லையா?” என்று மரகதம் கேட்க, “…” சத்யா மறுப்பாக தலையசைத்தாள்.

அதற்கு மேல் தோண்டித்துருவி அவளை சங்கடப்படுத்த விரும்பாமல், அங்கு மௌனம் நிலவ, ‘தாரிணிக்கு ரோஸ்மில்க் பிடிக்கும்னு சொல்லுவாங்க. அண்ணனுக்கு இஞ்சி ஏலக்காய் போட்டு டீ போட்டா  பிடிக்கும். சத்யாவுக்கு என்ன பிடிக்கும்னு தெரியலையே?’ கீதா சிந்தித்தபடி “ரோஸ்மில்க் தரவா? இல்லை இஞ்சி ஏலாக்காய் போட்டு டீ தரவா சத்யா?” கீதா தன் விழிகளை கூர்மையாக்கி கேட்க,

“ஆண்ட்டி, எப்படி இப்படி எனக்கு பிடித்ததை கேட்கறீங்க? எனக்கு ரெண்டுமே  ரொம்ப பிடிக்கும். எதுனாலும் ஓகே ஆண்ட்டி” சத்யா தலையசைக்க, தன் மகள் கேட்ட தொனியில் இஞ்சி ஏலக்காய் டீ என்ற சொல்லில்  நீலகண்டன் தன் மகளை கூர்மையாக பார்க்க, சண்முகமோ சத்யாவின் உடல் அசைவில், முகவடிவில் ஏதேதோ எண்ணம் தோன்ற, அவளை கூர்மையாக பார்த்தார்.

சில நிமிட மௌனத்திற்கு பின். “அப்பா பெயர் என்ன? என்ன செய்யறாங்க?” என்று கேள்வியை ஷண்முகம் தொடுக்கவும், ஜீவாவும் தாரிணியும் வருணும் அவர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

“அப்பா, சத்யா ஏன் இவங்க வீட்டுக்கு வந்திருக்கா?” வருண் தந்தையிடம் கேட்க, “வருண் நீ அமைதியா இருக்கனும். யார் என்ன பேசினாலும்? என்ன நடந்தாலும்” ஜீவா தன் மகனிடம் அழுத்தமாக கூறிவிட்டு உள்ளே செல்ல, அங்கு அனைவருக்கும் அதிர்ச்சி. யாரும் எதுவும் பேசவில்லை.

“அப்பா, நீங்க எப்படி இங்க?” சத்யா தன் தந்தையிடம் ஓடி வர, “வீட்டுக்கு போகலாம் சத்யா. வா… உன்னை கூட்டிகிட்டு போகத்தான் வந்தோம்.” ஜீவா கூற, சத்யா தன் தந்தையை புரியாமல் பார்க்க, “நான் உங்க பிசினெஸ் காம்பெட்டிட்டார் தான். நமக்கு தொழிலில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம் சார். ஆனால், சத்யா உங்க பொண்ணுன்னு எனக்கு தெரியாது. உங்க பெண்ணை வைத்து சீப்பான வேலை செய்யற ஆள் நான் கிடையாது.  என் மேல இந்தளவுக்கு கூட  நம்பிக்கை இல்லையா ஜீவா சார்?” ஷங்கர் பேசிக்கொண்டே போக, “ஷங்கர்…” கீதாவின் குரல் வீடெங்கும் எதிரொலித்தது.

“கீதா, என் பேரனை ஏன் திட்டற? அவன் கேட்டதில் என்ன தப்பு.” தன் மருமகளிடம் கேட்டு, தன் பேரன் பக்கம் திரும்பினார் ஷண்முகம். “அவங்களுக்கு உன் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை ஷங்கர். அவங்க பெண் மேல் நம்பிக்கை இல்லை. அவங்களை மாதிரியே இருந்துட்டா? எங்கையும் ஓடி…” அவர் பேச ஆரம்பிக்க, “அப்பா…” தாரிணியின் குரல் உயர்ந்தது.

“என் மகளை பத்தி ஒரு வார்த்தை…” அவள் விரல் உயர்த்தி எச்சரித்தாள். தாரிணி, ‘அப்பா…’ என்று அழைத்ததில் இளைய தலைமுறையினர் அதிர்ந்து நிற்க, “தாரிணி கிளம்புவோம்” ஜீவா பேச்சை முடிக்கவே முற்பட்டான். புஷ்பவல்லியும், மரகதமும் தன் பேரன் பேத்தியை ஆசையாக பார்த்தனர்.

“என்ன குரல் உயர்த்திட்டா, நீ யோக்கியமா? மகளை முன்னே அனுப்பிட்டு, அவள் மூலமா வந்து ஒட்டிக்கலாமுன்னு பார்க்குறியா?” ஷண்முகம் கேட்க, தாரிணி தன் தந்தையின் காலில் விழுந்தாள். “அப்பா, நான் பழசை பேச விரும்பலை. உங்களை எதிர்த்து பேசவும் விரும்பலை. ஆனால், எனக்கு என் பொண்ணு இங்க வந்த விஷயம் தெரிந்ததும்  கூட்டிகிட்டு போகத்தான் வந்தோம். என் பெண்ணுன்னு தெரிந்தால் அவளுக்கு இங்க அவமானம் தான் மிஞ்சுமுனு தெரிஞ்சி தான் கூட்டிகிட்டு போக வந்தோம். நீங்க காயப்படுத்தறதா இருந்தா அதை என்னை மட்டும் பண்ணுங்க அப்பா. உங்க வாயால் என் பெண்ணை எதுவும் சொல்லாதீங்க” யாழினி அவர் பாதம் தொட்டு கண்ணீர் வடிக்க,

“உன் பொண்ணு அப்படினா, வலிக்குதில்லை தாரிணி? எனக்கும் என் பெண்ணை இப்படி எல்லாம் பேசும் பொழுது இப்படி தான் வலித்தது தாரிணி” புஷ்பவல்லி கூற, “அம்மா…” யாழினி கதறினாள். பல வருடங்களானாலும் ஆறாத வலியோடு புஷ்பவல்லி தன் புடவையின் முந்தானையில் முகத்தை மூடிக்கொண்டு விம்ம, “இப்ப அழுது என்ன பிரயோஜனம். அன்னைக்கு நீங்க ரெண்டு அவசரப்பட்டு பண்ண காரியத்தால், இன்னைக்கு உங்க குழந்தைகள் வாழ்க்கை வரைக்கும் பாதிச்சிருக்கு” நீலகண்டன் அழுத்தமாக கூறினார்.

நீலகண்டன் அருகே மரகதம் நின்று கொண்டிருக்க,  ஜீவா, தாரிணியை இழுத்து கொண்டு அவர் காலில் படாரென்று விழுந்தான். அவர் அசையாமல் நிற்க, “நான் என் வாழ்க்கையில் உங்கள் மன்னிப்பை கூட எதிர்பார்க்கலை அப்பா. ஆனால், என் மனைவியோடு உங்க காலில் விழுந்து கும்பிடணும்ங்கிறது தான் என் பல வருட ஆசை. உங்களை பார்க்குற பாக்கியத்தை கூட நீங்க எனக்கு தரலை அப்பா. அம்மாவை கூட நீங்க பார்க்க விடலை அப்பா.” அவன் கூற, அங்கு மௌனம்.

இளைய தலைமுறையினர், கடந்த காலத்தில் நடந்ததை புரிந்து கொண்டனர்.

“இன்னைக்கும் உங்களை பார்த்ததும், உங்கள் கண்ணில் பட்டு, உங்களை காயப்படுத்த கூடாதுனு உடனே வெளிய போய்டலாமுன்னு தான் நான் நினச்சேன். ஆனால், என்னால முடியலை அப்பா” அவன் கூற, வருணும் சத்யாவும் கண்களில் கண்ணீரோடு அவர்களை பார்க்க, ஷங்கரும் யாழினியும் அதிர்ச்சியில் அவர்களை பார்த்து கொண்டிருந்தனர்.

மரகதம் படபடவென்று அவர்களிடமிருந்து விலகி, வருணையும் சத்யாவையும் உச்சி முகர்ந்தார். “எனக்கு என் மகன் தான் உயிர். ஆனால், அந்த உயிர் இல்லாமல் நான் இத்தனை வருஷம் இருக்கேன். ஏன் தெரியுமா? என்னைக்காவது ஒரு நாள் எல்லாம் சரியாகும். நான் எல்லாத்தையும் பார்த்துட்டு கண்ணை மூடணும்னு தான்.” அவர் கூற, வருணும், சத்யாவும் செய்வதறியாமல் நின்றனர்.

புஷ்பவல்லியும்  தன் பேரக் குழந்தைகளை தொட்டு தடவி, “உங்களை என்னால் தூக்கி வளர்க்க முடியலையே.” என்று கதறி அழுதார். நடப்பவற்றை கீதாவும் ரவியும் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர்.

நீலகண்டனும், சண்முகமும் அழுத்தமாக நிற்க, “எங்களை ஏத்துக்க வேண்டாம். எங்க காலம் முடிஞ்சி போச்சு. ஆனால், எங்க குழந்தைங்க தாத்தா பாட்டி அன்புக்காக ஏங்கி இருக்காங்க. அவங்க கூட பேசுங்க. அவங்களை ஏத்துக்கோங்க. நானும் தாரிணியும் வரவே மாட்டோம். நாங்க செய்த தப்புக்கு அவங்களை அவமான படுத்த வேண்டாம். அவங்களை ஒதுக்க வேண்டாமே” ஜீவா கையெடுத்து கும்பிட, “அப்பா…” வருணும் சத்யாவும் தன் தந்தைக்கு அருகே வந்து அவனை கைகளை தட்டிவிட்டனர்.

“அப்பா, எங்களுக்கு யாரும் வேண்டாம். எங்களுக்காக நீ யார்கிட்டையும் கையெடுத்து கும்பிட வேண்டாம்” வருண் கோபமாக கூற, “அப்பா, எங்களுக்கு பாட்டி, தாத்தா எல்லாம் வேண்டாம் அப்பா. உங்களை வேண்டாமுன்னு சொல்றவங்க எங்களுக்கும் வேண்டாம் அப்பா. எங்களுக்கு நீங்களும், அம்மாவும் மட்டும் போதும் அப்பா. அப்பா, உங்களுக்கு அம்மா அழுதா பிடிக்காதில்லை. இங்க வந்ததிலிருந்து அம்மா, அழுதுகிட்டே இருக்காங்க அப்பா. இங்க இருக்க வேண்டாம் அப்பா. அம்மா, வாங்க அம்மா. எல்லா தப்பும் என் மேல தான். நான் உங்க கிட்ட கேட்காம வந்தது தான் முதல் தப்பு. நான் ஷங்கர் கிட்ட தெரியாம பேசிட்டேன் அம்மா. இனி பேச மாட்டேன் அம்மா.” சத்யா தன் தாயை அழைக்க, ரவி ஒரு எட்டு முன்னே எடுத்து  வைக்க, கீதா அவன் கைகளை பிடித்து மறுப்பாக தலை அசைத்தாள்.

வருணும் சத்யாவும் அனைவரையும் விலகல் தன்மையோடு பார்க்க, ஜீவாவும், தாரிணியும், வருணையும் சத்யாவையும் அழைத்து கொண்டு வாசற்படி நோக்கி நடந்தனர்.

நதி பாயும்…                  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!