jeevanathiyaaga_nee-6

JN_pic-d7ead6b7
Akila Kannan

ஜீவநதியாக நீ…

அத்தியாயம் – 6

கதவை தட்டும் ஓசையில் ஜீவா அதிர்ந்தாலும் சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டான். தாரிணி மிரண்டு விழித்தாள். அவள் இதயம், ‘தடக்… தடக்…’ என்று எகிற ஆரம்பித்தது.

அவள் அவனை நெருங்கி நின்றாள். அவள் இதயத்தின் ஓசை அவன் செவிகளை தீண்டி அவன் மீதான காதலை சொல்லி அவள் பயத்தையும் எடுத்துரைக்க அவன் கண்களில் கனிவு வந்தமர்ந்து.

அவன் அவள் முன் சற்று சரிந்து அவள் முகமருகே தன் கைகளை வைத்து சுவரை தாங்கியபடி நிற்க, அவன் தோளில் அவள் தன் தாடையை பதித்து கொண்டாள்.

“லவ் யூ ஜீவா…” அவள் குரல் உடைய எத்தனித்து, அவன் மேல் பாரமாக இறங்கியது.

அவன் அவள் தலை கோதி மார்போடு பொதித்து கொண்டான்.

“ஏன் பயப்படுற?” அவன் கேட்க, மீண்டும் கதவு தட்டும் ஓசை.

அவள் தன் மற்றொரு கையை அவன் கழுத்தை சுற்றி வளைத்து இறுக்கி கொண்டாள்.

“இந்த… சீனிமாவில் வர்ற மாதிரி நம்மளை பிரி… பிரிச்சிட்டா…” அவள் இதழ்கள் தந்தியடிக்க, “நான் உயிரோட இருக்கிற வரைக்கும் ஒருத்தன் கூட உன்னை நெருங்க முடியாது. அவன் உன்னை கூட்டிட்டு போகணுமுன்னா…” அவன் உதட்டை, தன் கை கொண்டு மூடி அவன் நெஞ்சத்தில் சாய்ந்து விம்மினாள் தாரிணி.

“நீ என்ன இப்படி எல்லாம் பேசுற ஜீவா? நீ இல்லாமல் நான் உயிரோட இருக்க மாட்டேன்.” அவள் கூற, “இந்த ஜீவா உன்னை ஒரு நாளும் விட மாட்டான். அவன் உள்ளங்ககையில் வைத்து தாங்குவான். நீ இங்க இரு. நான் யாருன்னு போய் பார்க்குறேன்” கூறிக்கொண்டு ஜீவா விலகி செல்ல, அவன் அவளை விட்டு விலகி செல்வது பிடிக்காமல், அவனை தொடுத்துக் கொண்டே போனாள் தாரிணி.

கதவின் துவாரம் வழியாக பார்த்துவிட்டு ஜீவா கதவை திறக்க, அவன் பின்னோடு நின்று வாசலை எட்டி பார்த்தாள் தாரிணி.

ஜீவாவின் நண்பன் உள்ளே நுழைந்தான். பட்டென்று கதவை மூடினான்.

“தாரிணி வீட்டு ஆளுங்க மெட்ராஸ் முழுக்க தேடி நீங்க இல்லைனதும் விழுப்புரம், மேல்மருவத்தூர் இப்படி எல்லா பக்கமும் ஆள் அனுப்பிருக்காங்க. நாம உடனடியா இங்க இருந்து கிளம்பனும். நேரா மெட்ராஸ் போயிடுவோம். அங்க நம்ம ஃபிரெண்ட்ஸ் எல்லா ஏற்பாடும் பண்ணிருக்காங்க. கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணிட்டா கொஞ்சம் பிரச்சனை கம்மியாகிரும்.” ஜீவாவின் நண்பன் கூற, மூவரும் அவன் கொண்டு வந்த காரில் கிளம்பினர்.

***

மருத்துவமனை அறையின் வாசலில் கீதா அமர்ந்திருந்தாள்.

ரவி அவளை நோக்கி வர, “ஏய், நீ எதுக்கு இங்க வந்த? எங்களுக்கு என் அண்ணன் இருக்கிற இடம் தெரியாது. உன் தங்கை இருக்கிற இடமும் தெரியாது. வெளிய போ” அவள் ஆள் காட்டி விரலை நீட்டி அவனை விரட்ட, அவள் ஆள் காட்டி விரலை அவன் பிடித்திருந்தான்.

அவன் பிடித்த பிடியில் அவள் நரம்புகள் வலிக்க, அவள் முகம் வலியில் சுருங்க அவன் பிடி சற்று தளர்ந்தது.

“இந்த கை நீட்டி பேசுற வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம்.” அவன் அதிகாரம் சற்று தூள் பிறந்தது.

“எங்க அண்ணன் இங்க இல்லைன்னு தானே நீ இப்படி எல்லாம் பேசுற. என் அண்ணன் சீக்கிரம் வருவான். வந்தான்ன்னு வை, உனக்கு அவன் கையில் தான் சங்கு.” அவள் கூற, “உன் வாழ்க்கையை பத்தி, உன் குடும்பத்தை பத்தி கொஞ்சம் கூட கண்டுக்காத உன் அண்ணனை நீ இன்னுமா நம்புற?” ரவியின் குரலில் கேலி தொனித்தது.

அவன் வார்த்தையில் இருந்த உண்மை சுட, அவள் கண்கள் ஒரு நொடி வலியை எடுத்து கொண்டது. சட்டென்று தன் சகோதரனின் மீதுள்ள நேசம் அவள் சோகத்தை முந்திக்கொள்ள, “அண்ணனுக்கு என்ன பிரச்சனையோ? அந்த பிரச்சனைக்கு காரணம் கூட உன்னை மாதிரி ஒரு கேடு கெட்டவனா தான் இருக்கணும்” அவள் அவனை நோக்கி சீற,

“ஏய்” அவன் தன் ஆள் காட்டி விரலை உயர்த்த, அவள் தன் ஆள் காட்டி விரலால் அவன் கைகளை கீழே இறக்க சொல்லி செய்கை காட்டி, “எனக்கும் விரலை உயர்த்தி பேசினா பிடிக்காது” தன் உதட்டை பிதுக்கினாள்.

அதற்குள், “ரவி…” என்ற அழைப்பில் அவன் திரும்ப, கீதாவும் குரல் வந்த பக்கம் திரும்பினாள்.

அங்கு ரவியின் தாயும், தந்தையும் நடந்து வர, ‘இவங்க எதுக்கு இங்க வராங்க. அதுவும் குடும்பம் சகிதமா’ கீதாவின் நெற்றி சுருங்கியது.

‘சண்டை போட, குடும்பமாவா வருவாங்க?’ கீதாவின் சிந்தை குழம்பி நின்றது.

“அப்பா உடம்பு பரவாயில்லையா?” சண்முகத்தின் குரல் கனிவாக ஒலித்தது.

“ம்…” கீதா குழப்பத்தோடு தலை அசைத்தாள்.

“ஏன் ரவி? பெண் பிள்ளை கிட்ட வம்பு வளர்த்தியா? முகம் வாடி கிடக்குது?” அவர் குரல் கண்டிப்போடு ஒலிக்க, “அதெல்லாம் இல்லை அப்பா” ரவி மறுப்பாக தலை அசைத்தான்.

புஷ்பவல்லி எதுவும் பேசவில்லை. அவர் கண்கள் கீதாவை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தன.

“அப்பாவை பார்க்க போலாமா?” அவர் கீதாவிடம் கேட்க, அவள் வேகமாக தலை அசைத்து மடமடவென்று உள்ளே சென்று விஷயத்தை கூறி இவர்களை உள்ளே அழைத்து சென்றாள்.

கீதாவும் உள்ளே நின்று கொண்டாள். ‘எதுக்காக வந்திருக்காங்க? நமக்கு தான் அண்ணன் எங்க இருக்கான்னு தெரியாதே? சண்டை போடுவாங்களோ?’ கேள்வியில் ஆரம்பித்து அவள் எண்ணம் அச்சத்தில் வந்து நின்றது.

ஜீவாவின் தந்தையின் உடல் சற்று தேறி இருந்தது. கடினப்பட்டு எழுந்து அமர முயற்சித்தார்.

“இல்லை எழுந்திருக்க வேண்டாம் நீலகண்டன். நீங்க படுத்துகோங்க” ஷண்முகம் மனிதாபிமானத்தோட கூறினார்.

நீலகண்டன் அவரை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.

“என்னை மன்னிச்சிருங்க. என் மகன்… இல்லை அவனை நான் என் மகன்னு சொல்ல மாட்டேன். அவன் செஞ்சது மகாபெரிய பாவம். அவனுக்கு சரியான வேலை கூட கிடையாது. உங்க பொண்ணை நீங்க ராஜகுமாரி மாதிரி வளர்த்தீங்க. இவன் எல்லாத்தையும் கெடுத்துட்டான் பாவி” அவர் முகத்தில் அடித்து கொண்டு அழுதார்.

ஷண்முகம் நீலகண்டனின் கைகளை பிடித்தார். “பையன் செய்த தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? என் பெண்ணின் சம்பந்தம் இல்லாம இது நடந்திருக்காதே” அவர் வேதனையோடு கூறினார்.

“இல்லை நீங்க பெருந்தன்மையா பேசுறீங்க. ஆனால், இந்த பாவத்துக்கு நான் எப்படி பிராயச்சித்தம் செய்வேன்?” நீலகண்டன் கண்ணீர் மல்க கேட்டார்.

“பிராயச்சித்தம் இல்லை. உதவி கேட்டு வந்திருக்கேன்” ஷண்முகம் கூற, அங்கு ஒரு நொடி அமைதி.

“உங்க தகுதிக்கும், அந்தஸ்துக்கும் நாங்க என்ன உதவி செய்ய முடியும்?” நீலகண்டன் கேட்க, மரகதமும் புஷ்பவல்லியும் அங்கு அமைதியாகவே நின்றனர் மௌனத்தின் சாட்சியாக!

ஜீவாவை நியாயப்படுத்தவும் முடியாமல், அவன் மீது வைத்த பாசத்தை விட்டுக்கொடுக்கவும் முடியாமல் மரகதம் தடுமாற, நடப்பதில் முழு விருப்பமும் இல்லாமல் புஷ்பவல்லி அவர்களை பார்த்து கொண்டிருந்தார்.

ஷண்முகம் அமைதி காக்க, “எங்க தகுதிக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்?” நீலகண்டன் குரலில் வருத்தம்.

“உங்க பெண்ணை, என் பையனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கறீங்களா?” ஷண்முகம் கேட்க, அங்கும் மீண்டும் அமைதி.

அறையிலிருந்த ரவி அசட்டையாக எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். ரவியின் தந்தை ஷண்முகம், தாய் புஷ்பவல்லி இவர்களை பார்க்க, நீலகண்டனும், மரகதமும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

‘இது என்ன புது வித உதவியா இருக்கு?’ கீதா இவர்களை யோசனையாக பார்த்தாள்.

அவர்களை மேலும் குழப்ப விடாமல், “நீலகண்டன், எனக்கு இந்த அந்தஸ்த்து எல்லாம் பெரிய பிரச்சனையே இல்லை. உங்க பையன், சரியா வேலைக்கு போறவனா இருந்திருந்தா, என் பொண்ணு விரும்பிட்டானு நானே வேலை போட்டு கொடுத்து கல்யாணமும் செய்து வைத்திருப்பேன். ஜீவா அப்படி இல்லை” அவர் குரலில் கடினம்.

“ஊரில் நான் என்னவோ அந்தஸ்து பேதம் பார்க்குற மாதிரி எனக்கு கெட்ட பெயர். அந்த பெயர் எனக்கு இருக்க கூடாது. அதுக்கு நீங்க தான் உதவி பண்ணனும். ரவிக்கும், கீதாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டா, இந்த நிலைமை மாறும்.” ஷண்முகம் குரல் இறுதி இருந்தது.

 

சண்முகத்தின் நிலைக்கு அவரை மறுக்க முடியாது என்றும் நீலகண்டனுக்கு புரிய அவர் மௌனித்தார்.

 “அதோட அது ஒரு கண்டிஷன் இருக்கு. நீங்க என்னைக்குமே ஜீவாவை ஏத்துக்க கூடாது. நீங்க அப்படினா, அதில் உங்க குடும்பம் மொத்தமும், கீதாவும் அடக்கம்.” ஷண்முகம் குரலில் கண்டிப்பு இருக்க, மரகதம் ஆடி போய்விட்டார்.

‘இவங்க என்ன திட்டம் போடுறாங்க. எதுவோ சரி இல்லையே’ கீதாவை பயப்பந்து சூழ்ந்தது.

‘ஜீவா செய்தது தப்பு தான். அதுக்காக, அவனை வாழ் நாள் முழுக்க ஒதுக்க முடியுமா? கீதாவை இவங்க வீட்டுக்கு மருமகளா ஆகிட்டா, நான் கீதாவுக்கா வாழுவேனா? இல்லை என் மகன்…’ மரகதத்தின் பதட்டம் அதிகரித்தது.

“உங்க அந்தஸ்து எங்க, நாங்க எங்க? இதெல்லாம்…” மரகதம் பம்மியபடி மறுப்பு தெரிவிக்க ஆரம்பிக்க, “மரகதம்…” நீலகண்டனின் குரல் ஓங்கி ஒலித்தது.

“எங்களுக்கு கல்யாணத்தில் சம்மதம்.” அவர் கூற, “பொண்ணு கிட்ட ஒரு வார்த்தை” ஷண்முகம் கேட்க, “நான் என் மகளை என் மகன் மாதிரி வளர்க்கலை” அவர் குரலில் உறுதி இருந்தது.

‘அண்ணா…’ கீதாவின் உள்ளம் கதறியது. ‘அண்ணன் பார்த்துக் கொள்வான். இந்த சொல்லுக்கு இனி என் வாழ்வில் அர்த்தம் இல்லை.’ என்ற எண்ணம் மேலோங்க அவள் இதயம் துடிப்பை நிறுத்தி கொள்ளவே விழைந்தது.

தன் கண்களை இறுக மூடி நின்றாள் கீதா. ரவியின் கண்கள் இப்பொழுது கீதாவின் பக்கம் திரும்பியது.

‘திமிர் பிடித்தவள். என்னை பார்க்க கூட பிடிக்காமல் கண்ணை மூடிக்குறளா? நானும் இவளை விரும்பி கல்யாணம் செய்யலை. விதியேன்னு தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.’ அவன் இவளை வன்மத்தோடு பார்த்தான்.

“இந்த மருந்தை வாங்கிட்டு வாங்க.” செவிலியர் ஒருவர் வந்து கூற, கீதா சுயநினைவுக்கு வந்து அவர் கொடுத்த மருத்துவ சீட்டை வாங்கி கொண்டாள்.

“நீங்க வருத்தப்பட்டு பிபி ஏறி இப்படி படுத்திட்டா, உங்க பொண்ணை யார் பார்க்கிறது?” ஷண்முகம் இப்பொழுது நட்போடு கேட்டார்.

“நடந்ததை மறப்போம். இனி எல்லாமே நல்லதாவே நடக்கும்” ஷண்முகம் கூற, “நான் அப்பாவுக்கு மருந்தை வாங்கிட்டு வந்துடறேன்” கீதா, அவர்களிடமிருந்து விலகி ஓட எத்தனித்தாள்.

“ரவி, நீயும் கூட போ” ஷண்முகம் கட்டளையிட, ரவி கீதாவோடு சென்றான்.

கீதா இந்த திருமண பேச்சை எதிர்பார்க்கவில்லை. அவளிடம் அதிர்ச்சி. அவள் இப்பொழுது எதுவும் பேசவில்லை.

ரவி அவளை பார்வையிட்டான். அவள் அவனின் காதலி. ஒரு வருடமாக அவளை தொடர்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், இப்பொழுது அந்த காதல் இருக்கிறதா என்று கேட்டால், ‘இல்லை…’ என்று அடித்துச் சொல்வான்.

தன்னை மதிக்காத ஒரு பெண் மேல் அவனுக்கு எப்படி காதல் வரும்.

கீதா மருந்து சீட்டை கொடுத்தாள். அவள் பணம் கொடுக்க அவன் முந்திக்கொண்டு பணத்தை நீட்டினான். அவன் கரங்கள் அவள் கரங்களை தெரியாமல் தீண்டிவிட அவள் சரேலென்று விலகினாள்.

அவள் விலகலை விட, அவள் விலகலின் வேகம் அவனை சீண்ட, அவள் கையை விலக விடமால் அவள் கை மீது தன் கையை வைத்து அழுத்தினான்.

அவள் வலியில் தன் கைகளை உறுவிக்கொள்ள முயல, அவன் சாவகாசமாக மருந்தை வாங்கி கொண்டு தன் கைகளை எடுத்தான்.

வலி தாளாமல் அவள் கைகளை தடவ, அவன் அவள் கைகளை பற்றினான். மென்மையாக மிகவும் மென்மையாக பற்றினான். அவள் உறுவிக்கொள்ள முயல அவன் பிடி இறுகியது.

“உன்னை கஷ்டப்படுத்தணுமுன்னு நான் நினைக்கவே மாட்டேன். ஆனால், நீ அப்படி நினைக்க வைக்குற. இனி அப்படி நினைக்க வைக்காத.” அவன் அழுத்தி சிவந்த அவள் விரல்களை தன்மையாக நீவியபடி கூறினான்.

அவள் அவனை யோசனையாக பார்த்தாள். “உனக்கு கஷ்டத்தை கொடுத்தது உங்க அண்ணன். பொறுப்பில்லாமல் உங்க அண்ணன் உனக்கு கொடுத்த கஷ்டத்தை நான் உனக்கு கொடுக்கவே மாட்டேன். அண்ணன், அப்படிங்குற பொறுப்பிலிருந்து உன் அண்ணன் விலகிட்டான். கணவன் அப்படிங்குற பொறுப்பிலிருந்து நான் ஒருநாளும் விலகவே மாட்டேன்” அவன் தன்னை அவளிடம் விளக்கவே முயற்சித்தான்.

“எங்க அண்ணா ஒன்னும் விலகி போகலை. ஏதோ காதலிச்சிட்டான். இப்ப அவன் இங்க இல்லை. அவ்வுளவு தான். அவன் வருவான். அதுக்குள்ளே, உங்க குடும்பம் தான் அவனை எங்க கிட்ட இருந்து பிரிக்க பார்க்கறீங்க” அவள் சீறினாள்.

“ஏய், லூசா நீ?” அவன் வார்த்தைகளை கடித்து துப்ப, “நீங்க தான் லூசு. உங்களுக்கு தான் மனசில்லை. காதலை பத்தி தெரியலை. ஜீவா அண்ணா, செய்த முறை தப்பு தான். ஆனால், அவன் அன்பு என்னைக்கும் நிஜம்.. உங்களுக்கு அன்பு இல்லை. உங்களுக்கு காதலை புரியுற மனசில்லை. அது தான் உங்க தங்கை உங்களை நம்பாம எங்க அண்ணனோட போய்ட்டா.” கீதா பேசிக் கொண்டே போக,

“யாருக்கு காதல் புரியாது? எனக்கா… யாருக்கு மனசில்லை? எனக்கா… நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.” அவன் கூற, இப்பொழுது நடந்த திருமண பேச்சில்… அவன் கூறிய சொல்லில்… அவனின் செய்கையில்… மொத்தத்தில் அவனை கேவலமாக பார்த்தாள் கீதா.

ரவி சட்டென்று சுதாரித்துக் கொண்டான். ‘நான் இவளை காதிலிக்கிறேனா? ச்சீ… இல்லை… இல்லை…’ “காதலிக்கிறேன் இல்லை காதலிச்சேன். எனக்கும் மனசிருக்கு… எங்களுக்கும் எல்லாம் புரியும். என் தங்கை உங்க அண்ணன் மாதிரி ஒரு ஆளை காதலிக்காம, உருப்பிடியா யாரையாவது காதலிச்சிருந்தா நானே கல்யாணம் செய்து வைத்திருப்பேன்” அவன் கூற,

“எங்க அண்ணனை பத்தி நீ பேச வேண்டாம். நீ கெட்டவன்னு தெரியும். காதலிச்சு பெண்ணை கழட்டி விடுற ஆளுன்னு இப்ப தான் தெரியுது. காதலிக்கிறேன்… காதலிச்சேன்… இதுல நயம்பட இலக்கணம் வேற?” வெறுப்பாக கூறிவிட்டு, மடமடவென்று சென்றாள் கீதா.

அவள் செய்கைகள், அவள் பேச்சு அவனை கோபப்படுத்தினாலும் அவள் அருகாமை ஒரு ஓரத்தில் அவனுக்கு பிடித்திருப்பதை அவனால் மறுக்க முடியவில்லை.

அவர்கள் அறைக்குள் திரும்பி வருவதற்குள் இரு நாட்களிலே திருமணம் வைத்துக்கொள்வதாகவும், சென்னையிலே வைத்துக் கொள்வதாகவும் முடிவு செய்தனர்.

பதிவாளர் அலுவலகத்தில் இருநாட்களில் ஜீவா, தாரிணிக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்வதாக ஜீவாவின் நண்பர்கள் முடிவு செய்திருந்தனர்.

ரவி கீதா திருமணத்தின் வேலைகளை அவர்கள் குடும்பத்தார் கவனிக்க, ஜீவா தாரிணியின் திருமண வேலைகளை அவன் நண்பர்கள் கவனித்தார்கள்.

‘தன் குடும்பத்தினரால் தன் திருமணம் நின்று விட கூடாது’ என்று தாரிணி ஒருபக்கம் தன் வேண்டுதலை வைக்க, ‘தன் அண்ணனிடமிருந்து தன்னை பிரிக்க போகும் திருமணத்தை யாராவது நிறுத்த மாட்டார்களா?’ என்று தன் வேண்டுதலை வைத்தாள் கீதா.

நதி பாயும்…