Kaadhal Express💘🚉 – 1(1)
Kaadhal Express💘🚉 – 1(1)
எக்ஸ்பிரஸ்💘🚉 – (01)
வானெங்கும் இருளரசன் தன் ஆட்சியை நிலைநாட்டியபடி இருளை பரப்பி கொண்டிருக்க, சென்னையின் புறநகர் பகுதியில் இருக்கும் அந்த கட்டிடத்தின் உள்ளே கலர் கலர் வண்ண விளக்குகளும்.. காது கிழியும் அளவுக்கு ஆங்கில பாடலும் தெறித்துக் கொண்டிருக்க, அதற்கேற்ப ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடியபடி அந்த கிளப்பையே அதிர வைத்துக் கொண்டு இருந்தனர்.
அந்த கூட்டத்தின் நடுவே, உடலை இறுக்கி அணிந்திருந்த ஜீன்ஸூம், “I am a girl” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட வெள்ளை டீசர்ட்டும் அணிந்திருந்தபடி ஆடிக் கொண்டு இருந்தாள் அவள்.
பாப் மியூஸிக்கிற்கு ஏற்றவாறு, லேசாக உடலை குலுக்கி ஆடியபடி இருந்தவளின் போனி டைலும் சேர்ந்து ஆட, ஏதோ புரியாத ஆங்கில பாடலை வாயில் முனுமுனுத்தபடி ஆடியவளின் முகப்பவானை அத்தனை ரசனையாக இருந்தது.
சிறிது நேரத்திலேயே ஆடியது போதும் என்று நினைத்தாலோ என்னவோ, தனது ஆட்டத்தை நிறுத்தியபடி அந்த கூட்டத்தில் யாரையோ தேடிக் கொண்டிருந்த அவளின் கருவிழிகள் தான் தேடிய நபரை கண்டுக் கொண்டதும் தாமரையாக முகம் மலர்ந்திட,
“ஏய் ரம் பேபி கம் டா, இட்ஸ் கெட்டிங் லேட்” என்று தான் நின்ற இடத்தில் இருந்தே கத்தி அழைத்தாள் அவள்…
அவளே நம் நாயகி கமலினி. அவளின் அழைப்பு சத்தம் பலருக்கும் அந்த பாட்டு சத்தத்தில் கேட்டு இருக்க வாய்ப்பில்லை தான் இருந்தும் பலரின் பார்வை இவள் மீது படிந்தது, அதில் அவள் அழைத்தவளும் அடக்கம்.
அவளால் ரம் என்று அழைக்கப்பட்ட ரம்யவர்தினி என்பவளோ, அவளை நெருங்கியபடி “ஏய் கமல்.. எத்தனை முறை சொல்லி இருக்கேன் ரம்னு கூப்பிடாதா பேபி.. பாரு.. நீ கத்தி கூப்பிட்டதால் எல்லாரும் உன்னை தான் பார்க்கிறாங்க” என்று அதட்டியவளை கண்டு கண்சிமிட்டி சிரித்தவள்,
“சில் ரம்.. எனக்கு அப்படி தான் கூப்பிட பிடிக்குது. அழகா இருந்தா பார்க்க தான் செய்வாங்க பேப்.. சோ டேக் இட் ஈஸிடா” என்று கண் சிமிட்டியவளை கண்டு அவளால் அதட்டிட முடியவில்லை. உண்மையில் கமலினி அழகு என்பதை விட பேரழகு என்று சொன்னால் சரியாக இருக்கும்.
வட்ட முகம்.. பிறை போன்ற நெற்றி.. கூர் நாசி.. அதற்கு அழகு சேர்பது போல் மின்னும் குட்டி முக்குத்தி.. கோவை பழ உதடு.. சுண்டி விட்டால் ரத்தம் வரும் என்பார்களே அப்படியொரு நிறம்.. புரியும் படி சொல்ல வேண்டுமானால் “ப்பாஆஆ யாரா இந்த அழகு தேவதை” என்று கேட்க தோன்றும்.
ஆனால் அவளிடம் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும் அவள் ஒரு அடாவடி புயல் என்று!! அப்படியொரு குறும்பு.. அனைத்திலும் விளையாட்டு.. இப்போதும் அங்கு தன்னை பார்த்தபடி இருந்த சிலரை கண்டு கண் சிமிட்டி ஹாய் என்றவளை அதற்கு மேல் அங்கு இருக்க விடாது வெளியே இழுத்து வந்தாள் ரம்.
இதுவரை அவளின் செய்கையை ரசனையாக பார்த்த ஒரு ஜோடி கண்கள், அவர்களை பின் தொடர்ந்து வந்ததை அறியாது இருவரும் எதையோ பேசி சிரித்தபடி வெளி வந்து கொண்டு இருந்தனர்.
அவளை ரசித்த பார்த்திருந்த விழிகளுக்கு சொந்தக்காரனோ, இன்று அவளிடம் பேசியே தீர வேண்டும் என்ற உறுதியோடு கமலினியை நெருங்க நினைக்க, அதற்கு முன்னே அவள் முன் சர்ரென்று வந்து நின்றது உயர்ரக கறுப்பு நிற பென்ஸ் கார்.
அதை கண்டதும் யோசனையாக புருவம் சுருக்கியவள், அதில் இருந்து இறங்குபவனை கண்டு கண்கள் தெறித்து விடும் அளவுக்கு பார்த்தவள் மனமோ, ‘இவன் எப்படி இங்கே’ என்று தனக்கு தானே கேட்டு கொண்டபடி நகத்தை கடித்தாள் கமலினி.
அழுத்தமான நடையோடு, கூரிய பார்வையால் அவளை பார்த்தபடியே வந்தவன், விரலை கடித்து கொண்டு இருப்பவளை கண்டதும், “என்ன பழக்கம் இது” என்றவனின் குரல் அருகில் கேட்க, படபடத்த இமைகளோடு அவளின் விரல் நகம் இன்னும் அவள் இதழால் வதைப்பட்டுக் கொண்டு இருந்தது.
“உன் கிட்ட தானே சொல்றேன் என்ன பழக்கம் இது” என்றவனின் அழுத்தமான அதட்டலில் தானாக அவளின் கரம் தற்போது கீழ் இறங்கியது.
திருதிருவென்று விழித்தபடி என்ன சொல்வது என்று அவள் விழித்துக் கொண்டு இருக்க, அதை கண்டவனுக்கோ எரிச்சல் தான் தோன்றியது. அதை குரலில் மறையாது காட்டியவன்,
“இப்போ என்ன டைம்னு தெரியுதா உனக்கு.. உங்க ஊருல நீ எப்படி வேனும்னாலும் கண்டபடி ஊர் சுத்திட்டு இருக்கலாம்.. ஆனா இங்க அப்படி எல்லாம் இருக்க கூடாது.. அதையும் மீறி மறுபடியும் இப்படி செஞ்ச அடுத்து என்ன செய்வேனு எனக்கே தெரியாது” என்று மெல்லிய குரலில் அழுத்தமாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி அதட்டிக் கொண்டிருந்தான்… அவன் ராகவேந்திரன்.
சில நொடிகள் மட்டுமே அவளின் அதிர்ந்த நிலை.. அதன் பின் தன்னை மீட்டுக் கொண்டவள், அவனின் அதட்டலை எல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டவள் தோளை குலுக்கியபடி,
“பை ரம்.. நாளைக்கு பார்ப்போம்” என்றபடி தன் தோழி ரம்யாவை அணைத்து விடுவிக்க, அதுவரை அங்கு வந்து நின்றிருந்த அந்த புதியவனையே பார்வையால் கபளீகரம் செய்துக் கொண்டிருந்தவள், அப்போது தான் மயக்கம் தெளிந்தாள்.
“ஏய் கமல்.. யாரு இந்த ஹேன்ட்சம்.. ப்பா செம ஹாட் பேப்” என்றிட, ‘ஹான் இவன் என்ன அவ்ளோ அழகாவா இருக்கான்’ என்று நினைத்த கமலினி தன் தோழி சொல்லியதன் காரணமாக ராகவேந்திரனை மேலிருந்து கீழ் ஓர் பார்வை பார்த்து அளந்தவள்,
“ரம்.. உனக்கு தூக்க கலக்கமா இருக்கா என்ன.. இவரு அவ்ளோ அழகு எல்லாம் கிடையாது.. என்ன கொஞ்சம் கலர் தூக்கலா இருக்கு.. ஜிம் பாடியா இருக்காரு.. அந்த குறுந்தாடி இன்னும் கொஞ்சம் அழகு கூட்டுது.. அப்புறம் அந்த சார்ப் நோஸ்(sharp nose) ஒரு பிளஸ் பாயின்ட்.. கறுப்பும் இல்லாது சாம்பலும் இல்லாமல் இருக்க அந்த பிரவுன் ஹைஸ்(brown eyes) பர்பேக்ட்.. தென் அந்த செஸ்ட்(chest)..” என்று ஏதோ சொல்ல வந்தவளை அதற்கு மேல் பேச விடாது இழுத்துக் கொண்டு சென்றான் ராகவ்.
அவளும் முரண்டு பிடிக்காமல் அவன் பின்னோடு செல்ல, இதையெல்லாம் வெறித்து பார்த்திருந்த விழிகளுக்கு சொந்தக்காரனோ அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான்.
காரின் சீட்டில் அமர்ந்தவளை கண்டு முறைத்து பார்த்தவன், “இரண்டு கேர்ள்ஸ் சேர்ந்தா என்னவெல்லாம் பேசுறீங்க.. அப்பப்பா.. உங்கக்கிட்ட நாங்களே தோத்துறுவோம் போல” என்றவன் குரலில் இருந்த நக்கலும், அதையும் மீறி அந்த வார்த்தைகளில் வெளிப்பட்ட உஷ்ணமுமே அவனின் கோபத்தை பறைச்சாற்றியது.
“நான் என்ன இல்லாததையா சொன்னேன்.. உங்க தோற்றம் எப்படி இருக்கோ, அப்படி வர்ணிச்சேன் ஜஸ்ட் அவ்ளோ தான், மற்றபடி நீங்க எல்லாம் செய்விங்களே மானே.. தேனே.. பிளா.. பிளானு.. எக்ஸ்டரா பிட்டிங் போடல” என்று உதட்டை சுளித்து கொண்டவள் ஹெட்செட் எடுத்து காதில் பொருத்திக் கொண்டாள் அடுத்து அவன் கூறும் அறிவுரையை கேட்க விரும்பாது.
ராகவோ அவளின் செய்கையை கண்டு கொள்ளாதபடி மீண்டும் காரை விட்டு இறங்கி கிளப்புக்குள் நுழைய, முகமெங்கும் வேர்வை பூத்தபடி, கருநீல வண்ண நிறத்தில் ஸ்லீவ் லெஸ்( கையில்லா ஆடை) டாப்பும்.. அதற்கு ஏற்றபடியான ஜீன்ஸூம் அணிந்தவாரு பதட்டத்தோடு வெளி வந்தாள் மானஸ்வி.
தன்னையே பார்த்தபடி இருந்த ராகவ்வை கண்டவளுக்கோ தொன்டையில் சிக்கிய மீன் முள்ளை போன்று வார்த்தைகள் வர தடுமாறிக் கொண்டிருக்க, முயன்று வரவைத்த குரலில், “அண்ணா.. அது பிரெண்ட்ஸ்” என்று திக்கி திணறி பேசியவளின் கண்களில் நீர் குளம் கட்டிக் கொண்டது.
“இங்க பாரு மனு.. சும்மா இப்படி கண்ணுல வாட்டர் வைச்சிட்டு இருக்காத.. இட்ஸ் இரிட்டேட்டிங்.. உன்னை வெளியே போக வேண்டாம்னு எப்போவாது நான் சொல்லி இருக்கேனா” என்ற அழுத்தமான கேள்வியில் இல்லை எனும்படியாக மண்டையை ஆட்டிட, “தென் எனக்கிட்ட ஏன் சொல்லிட்டு வரல” என்று கேள்விக்கு பதில் சொல்ல இயலாது தலையை குனிந்து கொண்டாள் மானஸ்வி.
அதற்கு மேலும் அவளை அதட்ட விரும்பாது, “போ.. போய் காரில் உட்காரு” என்றிட வேகமாக காரின் அருகில் சென்றவள் விழிகள் உள் இருப்பவளை கண்டு இன்னும் பெரிதாக விரிந்தது. “இவங்க எப்படி இங்க” என்று யோசித்தாலும், காரினி பின் இருக்கையில் அமர்ந்து கொள்ள, அதன் பின் அவர்களின் பயணம் மௌனத்திலேயே கழிந்தது.
தனது பென்ஸ் காரை இயக்க, சீரான வேகத்தில் சாலையில் ஊர்ந்து சென்றது அந்த நாற்சக்கர வாகனம். சாலையில் ஓர் பார்வையும் காரில் அமர்ந்து இருப்பவர்களின் மீது ஓர் பார்வையும் வைத்து இருந்தவனின் பார்வை எல்லாம் உணராத கமலினி பாட்டில் லயித்தபடி இருக்க, அவளின் தலையோ மேலும் கீழும் ஆடியது பாட்டை ரசித்து கொண்டு இருப்பதை பறைச்சாற்றுவதாக!
அதை கண்டவனுக்கோ “இது என்ன பழக்கம்” என்றபடி தான் கோபம் கிளர்ந்தெழுந்தது. அவன் ரசிக்க தெரியாதவனாக இருக்கலாம்.. ஆனால் அவள் அப்படி அல்லவே!!
வீட்டை நெருங்கியதும் ஒரு பெரிய இரும்பு கேட்டை காவலாளி திறந்து விட, அவருக்கு தலையசைத்தபடி உள் நுழைந்தவன் காரை நிறுத்த, மானஸியோ வேகமாக உள் நுழைந்து கொள்ள, கமலினியோ இன்னும் பாட்டில் லயித்து இருந்தாள். அதை கண்டு சலித்தவன், அவளின் ஹேட்சட்டை பிடுங்க.. சட்டென்று அவன் பறித்ததில் விழித்தவள், பின் அவனை முறைத்தபடி உள்ளே சென்று விட்டாள்.
இரவு பதினொன்றை நெருங்கி கொண்டிருக்க, கடிகாரத்தையும் வாசலையும் பார்ப்பதாக இருந்தார் மகேஸ்வரி. முதலில் வரும் மானஸ்வியை கண்டதும் முகம் மலர்ந்தவராக, “அப்பாடா அவன் வரதுக்குள்ள வந்துட்டியா.. இப்போ தான் எனக்கு மூச்சே வருது” எனும் போதே,
“அப்போ அவ வெளியே இவ்ளோ நேரம் சுத்துறது உங்களுக்கு தெரிஞ்சிருக்கு ரைட்..” என்றபடி வந்த ராகவ்வை கண்டு அதிர்ந்தார் என்றால், அவன் பின்னே வரும் தன் அண்ணன் மகனை கண்டு பெரிதும் அதிர, “போதும்டா டேய்.. எத்தனை அதிர்ச்சி தான் கொடுப்பிங்க” என்று மனதிலே நொந்தபடி,