jeevanathiyaaga_nee-1

JN_pic-b70ff5b2

jeevanathiyaaga_nee-1

அன்பான வாசகர்களுக்கு வணக்கம்,

   “ஜீவநதியாக நீ…” கதையில் வரும் மாந்தர்கள், நிகழ் கால சம்பவங்களை தொட்டுச் சென்றாலும் கற்பனை நிறைந்தது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

 “ஜீவநதியாக நீ…” – கதையைப்பற்றி ஒரு சில வரிகள்.

இது ஒரு காதல் கதை. ஒரு குடும்பத்தின் கதை. அன்பின் கதை. பாசத்தின் கதை. அந்த காதல், அன்பு உங்கள் மதியை மயக்கலாம். உங்கள் மனதை மயிலிறகாய் வருடலாம். சில நேரங்களில் பாசம் உங்கள் முகத்தில் மோதி நிதர்சனத்தை உணர்த்தலாம்.

 வழக்கம் போல், என்னிடம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு, கேள்விகளை தொடுத்து கொண்டு, அன்பாய் சண்டை பிடித்து கொண்டு என்னோடும், ஜீவநதியோடும் பாயுறமாறு அன்புடன் அழைக்கிறேன்.

அத்தியாயம் – 1

வருடம் இரெண்டாயிரத்தி… அட! கதையின் போக்கில் வருடத்தை தெரிந்து கொள்ளலாமே.

“அம்மா… அம்மா… தங்கையை காணும்” அவன் குரலில் பதட்டம்.

மகனின் பதட்டம் தாயை தொற்றி கொண்டது. “வீடு முழுக்க தேடிட்டேன். அவ எங்கையும் இல்லை.” மகனின் பதட்டத்தில், அன்று காலை நடந்த சம்பவமும் அவள் கண்முன் தோன்ற அவள் உறைந்து நின்றாள்.

அவள் வயிற்று பகுதியில் சூடு பரவி ஏதேதோ செய்தது. தன் மகளை சுமந்த வயிற்றுப்பகுதி அல்லவா? வயிற்று பகுதி அதன் பலத்தை இழக்க அவள் கால்கள் தள்ளாடியது. அவள் இதயக்கூடு மேலும் கீழும் ஏறி இறங்கியது. பாசம் வைத்த இதயம் அல்லவா?

அவள் கண்கள் கண்ணீரை சொரிய மறந்து, அவள் ஸ்தம்பித்து நிற்க, அவன் அங்கு வந்தான் அழுத்தமான காலடிகளோடு.

‘எத்தனையோ கஷ்டங்களையும், சவால்களையும், அவமானங்களையும் தாண்டி வந்த பாதை என் பாதை’ என்பது போல் அவன் ஒவ்வொரு காலடியும் அழுத்தத்தை காட்டியது.

பலம் இழந்த அவள் கால்களுக்கு எப்படி தான் அத்தனை வழு வந்ததோ? அவன் காலடி ஓசையில், உறைந்து நின்ற அவள் அவன் மார்பில் சாய்ந்து கதறினாள். அவன் அருகாமையில், அவள் தன்னிலையை உணர முயற்சித்தாள்.

அவன் தன் விரல்களால் அவள் தோள்பட்டையை அழுத்த, சிவந்த அவள் மேனி அவன் விரல் தடத்தை ஏந்திக்கொண்டு நின்றது.

காதல் பேசிய அவன் விரல்கள், பல நேரங்களில் அவள் தேகத்தை வருடி கணவன் என்னும் உரிமையை அவளிடம் நிலை நாட்டிய அவன் கைகள், உனக்கு நான் இருக்கிறேன் என்று அவள் கை பிடித்த அவன் கரங்கள், இன்று வலிப்பது போல் அவளை அழுத்தி, அவன் பாரத்தையும் அவள் மேல் இறக்கி, ‘நான் இருக்கிறேன். ஒன்றும் ஆகாது.’ என்று அவளுக்கு நம்பிக்கை ஊட்டியது.

‘ஆம்… ஒன்றும் ஆகாது. எதுவும் தப்பா நடக்காது.’ அவன் அருகாமையில் அவள் மனம் நிம்மதி அடைந்தாலும், அவள் சிந்தை அலைப்புற்று, அவள் அவன் முகம் பார்த்து தன் விழிகளை விரித்தாள் பாவை.

தன் மனையாளின் சிந்தையை அறிந்தவன் போல், அவன் மறுப்பாக கண்களை அங்குமிங்கும் அசைக்க, ‘உன் கட்டளைக்கு இணங்குபவளும் நானே! உன் கட்டளையை மீறுபவளும் நானே’ என்பது போல் மனம் அவன் பக்கம் சரிந்து, அவள் சிந்தை தன்னவனின் கட்டளையை மீறி பின்னோக்கி சென்று, பழைய நினைவுகள் மேலே எழும்ப எழும்ப அவள் மயங்கி சரிந்தாள்.

*** ***

வருடம் 1998

அழகான மாலை பொழுது. சூரியன் தன் உக்கிரத்தை குறைந்து கொண்டு வெளிச்சத்தை மட்டும் பரப்பி கொண்டிருந்தான்.

   “தாரிணி, பஸ் வந்திருச்சு.” அவள் பக்கத்தில் இருந்த கல்லூரி இளம் பெண் கூற, “இன்னைக்காவது இடம் கிடைக்குமோ என்னவோ?” தாரிணி அலுத்து கொள்ள, அந்த அரசு பேருந்து அங்கு வந்து நின்றது.

“உஸ்….” என்ற அந்த பேருந்து நடத்துனரின் சத்தத்தில் பேருந்து கிளம்பியது.

“இன்னைக்கும் இடம் கிடைக்கலை” தாரிணி தன் தோழியின் காதில் கிசுகிசுக்க, “தாரிணி, உங்க வீட்டில் தான் கார் இருக்கே? அதுல வர வேண்டியது தானே? உனக்கு எதுக்கு எங்களை மாதிரி கஷ்டம்?” அவள் தோழி பேருந்தில் அவள் அருகே நின்றபடி கேட்டாள்.

அப்பொழுது அவர்களை இடிப்பது போல் ஒருவன் அவர்கள் அருகே சென்றுவிட்டு, இவர்களுக்கு போக்கு காட்டிவிட்டு விலகினான். அப்பொழுது பின்பக்கம் அமர்ந்திருந்த ஒருவன் இவர்களை கூர்மையாக பார்த்து கொண்டிருந்தான்.

முழு நீள அடர் நீல சட்டையை மடக்கி விட்டிருந்தான். மாநிறத்திக்கும் கூடுதல் நிறத்தில் இருந்தான். அவன் கண்களில் ரௌத்திரம் பொங்கியது. கைமுஷ்டி இறுக, பேருந்து இருக்கையின் இரும்பு கம்பியை அழுந்த பற்றினான்.

இளம்பெண்கள் யாரையும் கவனிக்கவில்லை. “பஸ் கூட்டம், நிற்கறது இதெல்லாம் கஷ்டமா இருந்தாலும், கொஞ்சம் ஜாலியா இருக்கு டீ. இந்த கொஞ்சம் நேரம் தான் நான் உன்கிட்ட பேச முடியும். நான் இப்படி ஃபிரியா வெளிய சுத்த முடியும். வீட்டுக்கு போய்ட்டா , யார் கிட்ட பேசுறது? என்னை பக்கத்து வீட்டில் கூட விளையாட அனுப்ப மாட்டாங்க.” தாரிணி உதட்டை பிதுக்கினாள்.

“இங்க பாரு. நீ கூட சுடிதார் போட்டிருக்க. ஊரு உலகத்துல எல்லாரும் சுடிதார் போட்டிருக்காங்க. எங்க வீட்ல தாவணி தான். நான் மட்டும் தான் காலேஜ்ஜுக்கு தாவணி போட்டுட்டு வரேன். இதை வீட்டில் சொன்னா, படிக்கவே வேண்டாமுன்னு சொல்லிருவாங்க” தாரிணி கூற, அவளை இடித்து சென்றான் ஒருவன்.

சட்டென்று விலகி, அவள் ஒதுங்க அவர்கள் பேருந்து நிறுத்தமும் வந்திருந்தது.

மடமடவென்று அவர்கள் இறங்கி நடக்க, “ஹலோ…” அவர்களை கைதட்டி அழைத்தான் அந்த நீல சட்டைக்காரன்.

அவன் கையோடு, இவர்களை இடித்து செல்ல முனைத்தவனும்.

இருபெண்களும், இவனை பதட்டமாக பார்க்க, “சாரி சொல்லு…” நீல சட்டைக்காரன், ஒருவனை அறைய அவன் இருபெண்களிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடினான்.

நீல சட்டைக்காரன் அதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்பது போல் அவன் திரும்பி செல்ல, “ஒரு நிமிஷம்” அவனை அழைத்தாள் தாரிணி.

“என்ன ஹீரோவா?” அவள் நக்கலாக கேட்க, “இல்லை… ஜீவா” அவன் சுருக்கமாக சொல்லிவிட்டு மடமடவென்று திரும்பி நடந்தான்.

அதற்கு மேல் உங்களிடம் எனக்கு என்ன பேச்சு என்பது போல் இருந்தது அவன் செய்கை.

மடமடவென்று சில எட்டுகள் நடந்து தன் வீட்டிற்குள் நுழைந்தான். “அம்மா, தண்ணீ…” அவன் கொடுத்த சத்தத்தில் அவன் தங்கை தண்ணீரோடு ஓடி வந்தாள்.

“சார் என்ன பண்ணிட்டு வந்திருக்காருன்னு அவருக்கு சேவகம் பண்ணறீங்க?” குத்தலாக வந்தது நீலகண்டனின் குரல்.

“ஏன், நீங்க நாட்டுக்கு என்ன சேவை பண்ணிட்டு வந்திருக்கீங்க உங்களக்கு உபச்சாரம் நடக்கு?” ஜீவாவின் குரலும் குத்தலாக வந்தது அவன் தந்தையை நோக்கி.

“நான் யாரையும் ரோட்டில் அடிச்சிட்டு வீட்டுக்கு வரலை” அவர் அவன் முன் கோபமாக நின்றார்.

“தப்பு செஞ்சான் அடிச்சேன்” அவன் கூற, “அப்படி என்ன தப்பு பண்ணினான் அவன்?” அவர் கேட்க, “பஸ்சில் போற பொண்ணுகளை…” தந்தையின் முன் வார்த்தைகளை கூற முடியாமல் தவித்தான்.

“அந்த பொண்ணுகளே அமைதியா தானே போறாங்க?” அவர் கேட்க, “அது தானே இந்த நாட்டின் தலை எழுத்து. என்ன நடந்தாலும் பொண்ணுங்க இழுத்து மூடிக்கிட்டு போகணும். அந்த பொண்ணு அவனை திருப்பி ஒன்னு செவிட்டில் விட்டிருந்தா, எனக்கு அங்க என்ன வேலை?” அவன் நாற்காலியில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு கேட்டான்.

“எல்லாரும் தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பாங்க. உன்னை மாதிரியா?” என்று அவர் கேட்க, “எல்லாரும் தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருந்திருந்தா சுதந்திர இந்தியா வந்திருக்காது. தெருவில் இறங்கி கோஷம் போட்டதால் தான் நீங்க சுதந்திரமா சுத்திட்டு இருக்கீங்க” அவன் தன் தந்தையின் முன் எழுந்து நின்று கோபமாக கூறினான்.

“சுதந்திரமா மட்டுமில்லை. சுயநலமாவும் இருக்கீங்க. தப்பு நடந்தால் தட்டி கேட்கணும். தப்பை பார்த்தா கோபம் வரணும். அவன் தான் மனுஷன்.” அவன் தந்தைக்கு புத்தி சொல்ல,

“இவன் விளங்க மாட்டான். இவன் ஒரு வேலைக்கும் போக போறதில்லை. இப்படியே ஊரு முழுக்க வம்பு வளர்த்திட்டு தான் இருக்க போறான்.” அவர் புலம்பியபடியே அமர்ந்தார்.

“ஜீவா…” அவன் தாய் அழைத்தபடியே அருகே வர, “ரௌத்திரம் பழகு. இவன் தான் ஜீவா. நான் அப்படித்தான். தப்புன்னா தட்டி கேட்பேன். எங்க நடந்தாலும்… என்னால் கண்டும் காணாமலும் இருக்க முடியாது” அவன் தன் தாயிடம் பொறுமையாக கூறினாலும், அழுத்தமாக கூறினான்.

“சார்… இதனால நீங்க சாதிச்சது என்ன தெரியுமா? காலேஜ்ல இருந்து அடிச்சி பத்திட்டாங்க. நான் பண்ண சிபாரிசுல பரிட்சை எழுத விட்டாங்க.” அவர் நிறுத்த, “காலேஜ் போகமா எழுதினாலும், அவங்க கை வச்ச இன்டெர்னல்ஸ் தவிர நான் நல்ல மார்க்” ஜீவா கெத்தாக கூறினான்.

“உன்னை விட சுமாரா படிக்குற பசங்க, இன்டெர்னல்ல கூட மார்க் வாங்கி இன்னைக்கு வேலைக்கு போய் சுளையா ஆயிரக்கணக்குல சம்பளம் வாங்குறாங்க” அவர் நறுக்கென்று கூறினார்.

“அப்படி கூழை கும்பிடு போட்டு எனக்கு மார்க்கும் வேண்டாம். அப்படி கூழை கும்பிட்டு போட்டு வாங்குற வேலையையும் எனக்கு வேண்டாம்” அவன் நிமிர்வாக கூறினான்.

“ஐயோ… இவன் உருப்படவே மாட்டான். உருப்படவே மாட்டான்.” அவர் மீண்டும் சத்தம் செய்ய, “அண்ணா…” அவன் முன் பாவமாக நின்றாள் அவன் தங்கை.

“கீதா, என்னவாம் உன் அப்பாவுக்கு?” கால்களை ஆட்டியபடி அவன் கேட்க, “அப்பா, உனக்கு ஒரு இடத்தில் வேலை சிபாரிசு செய்திருக்கார்.” அவள் கம்மலான குரலில் கூற,

“எங்க, அவர் கணக்கு வேலை பார்க்குற இடத்தில் எனக்கு மேனேஜர் வேலையா?” அவன் கேட்க, “அங்க இல்லை பா… இது வேற இடத்தில். நான் பக்கத்தில் கூட வராத இடத்தில்” தன் மகனிடமிருந்து விலகி நின்றே விளக்கம் கொடுத்தார் நீலகண்டன்.

“யார் சிபாரிசும் எனக்கு தேவை இல்லை.” அவன் உறுதியாக கூற, “நான் சிபாரிசு கொடுத்தும் உன்னை பல இடத்தில் வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க. உன்னை பார்த்து பயபடுறாங்க” அவர் கூற, அவன் அசட்டையாக அமர்ந்திருந்தான்.

“கம்ப்யூட்டர் கோர்ஸ் சொல்லி தர இடத்துல ஒருத்தன் பல்லை உடைச்சிருக்க?” அவர் கடுப்பாக கேட்க, “வேலை கிடைக்காம இங்க வந்து உட்காந்திருக்கியான்னு என்னை பார்த்து நக்கலாக கேட்டான். விட்டேன் ஒன்னு. நான் கொடுத்த ஒன்னுல அவன் பல் உடைஞ்சிருச்சு அதுக்கு நானா பொறுப்பு?” அவன் தோள்களை குலுக்கினான்.

“சரி விடு. இது ஒரு பிரைவேட் கம்பனி.” அவர் கூற, “குமாஸ்தா வேலையா?” அவன் புருவம் உயர்த்த, “ஏன் சார் மானேஜர் வேலைக்கு தான் போவீங்களா?” அவர் கோபம் மீண்டும் சர்ரென்று ஏறியது.

“நான் அப்படி சொல்லலை. தப்பு நடக்காதா, என்னை மனுஷனா நடத்துற எந்த வேலைக்கும் நான் போக தயார்.” அவன் கூற, அவர் அவன் முகத்தில் ஒரு காகிதத்தை வீசினார்.

“கம்பனி தான் உனக்கு கண்டிஷன் போடணும். நீ போட கூடாது. என்னவோ போ” அவர் மடமடவென்று வெளியே சென்றார்.

“அண்ணா, கொஞ்சம் பொறுமையா நடந்துக்கோ. இந்த வேலை கிடைச்சா அப்பா ரொம்ப சந்தோஷப்படுவாங்கள்ள?” அவள் கேட்க,

“ஏன் கீதா, அண்ணாவுக்கு வேலை கிடைச்சா நீ சந்தோஷ பட மாட்டியா?” அவன் தன் சகோதரியின் தலையை வாஞ்சையோடு தடவினான்.

“என் சந்தோஷத்தை விட அப்பா சந்தோசம் முக்கியம் அண்ணா” அவள் கூற, “அப்படி இல்லை கீதா. அவங்க அவங்களுக்கு அவங்க சந்தோசம் முக்கியமா இருக்கணும். அப்பாவுக்கு பிடிக்கும், அண்ணாவுக்கு பிடிக்கும், புருஷனுக்கு பிடிக்கும், பிள்ளை பிடிக்கும் அப்படின்னு இருக்க கூடாது. உன் வாழ்க்கை உனக்கு பிடிக்கணும்” அவன் கூற,

“டேய், ஏண்டா நீ ஒருத்தன் இப்படி தறுதலையா அலையறது போதாதா?” ஜீவாவின் தாய் அவனை கேலி போல் கண்டிக்க, “ஹா… ஹா…” அவன் பெருங்குரலில் சிரித்தான்.

மறுநாள் காலையில்,

 ஜீவா நேர்காணலுக்கு கிளம்பி கொண்டிருந்தான். அவன் கைகளில் கோப்புகள்.

“கடவுளே, என் மகன் கண்முன்னாடி எந்த தப்பு நடக்காம நீ பார்த்துக்கோ. அவன் கிட்ட யாரும் வம்பு வளர்க்காம நீ பார்த்துக்கோ. மத்ததெல்லாம் அவன் பார்த்துப்பான்” மரகதம் ஜாதி மத வேறுபாடினின்றி அனைத்து இறைவனிடமும் வேண்டுதலை வைத்தார்.

ஜீவா தன் அலுவலை நோக்கி, செல்ல அவன் மீது ஒருவன் மோதி நின்றான்.

“டேய்…” அவன் சட்டையை கொத்தாக பிடிக்க, “பொண்ணு முன்னாடி ஆள் இல்லைன்னு ஹீரோயிசமா காட்டுற” அவனை இருவர் அடிக்க, அவன் அவர்கள் இருவரையும் அடித்து அவர்கள் நெஞ்சில் கால்களை வைத்தான்.

“எத்தனை பேர் வந்தாலும் கூட்டிட்டு வாடா. நேருக்கு நேரா மோதி பார்த்திருவோம்.” அவன் தன் கோப்புகளை ஒரு கையில் பிடித்தபடி, தன் சட்டையை மடக்கிவிட்டு, அவர்களை மிதிமிதியென்று மிதித்தான்.

அவர்களை அவன் அடித்ததில் அவன் சற்று தடுமாற, அவன் கோப்புக்கள் கீழே விழுந்தது.

அவன் சண்டையை முடித்து கொண்டு வர, அங்கு கோப்புகள் இல்லை. அங்கு தாரிணி நின்று கொண்டிருந்தாள்.

“நீ இங்க என்ன பண்ற?” அவன் கேட்க, “நான் பஸில் தான் காலேஜ் போவேன். உங்க கிட்ட சண்டை போடலாமுன்னு வந்தேன். நீங்க யார் கிட்டயோ சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க” அவள் அவனிடம் பேச,, அவன் தன் கண்களை சுழலவிட்டான்.

“என்ன தேடுறீங்க? இதையா?” என்று அவள் அவனுடைய கோப்புகளை நீட்டினாள்.

“ம்…” பெற்றுக்கொண்டு அவன் முன்னே நடக்க, “நேத்து நீங்க பொறுமையா போயிருந்தா, இன்னைக்கு அவன் உங்க கிட்ட சண்டைக்கு வந்திருக்க மாட்டேன் தானே?” அவள் துடுக்காக கேட்க, “ஏய்…” அவன் நாக்கை மடக்கி தன் ஆள் காட்டி விரலை உயர்த்தினான்.

“இந்த அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம். புரியுதா?” அவன் கேட்க, “எனக்கு உங்களால் பிரச்சனை வர போக தானே நான் உங்க முன்னாடி வந்து நிற்கறேன்” அவள் கூற,

“என்ன?” என்றான் அவன் வேக நடையோடு கண்களை சுருக்கி.

அதற்குள் ஒருவர் எதிரே வந்து விட, “ஐயோ, அவங்க என் அப்பாவுக்கு தெரிஞ்சவங்க, நான் உங்க கூட வரதை பார்த்தா அவ்வுளவு தான்” அவள் மடமடவென்று சிட்டாக பறந்துவிட்டாள்.

‘இவளுக்கு என்னால் என்ன பிரச்சனை?’ அவன் அசூயையோடு உதட்டை சுளித்து கொண்டான்.

அவள் எண்ணங்களை ஒதுக்கிவிட்டு நேர்காணல் நடக்கும் இடத்திற்கு சென்றான் ஜீவா.

‘அண்ணாவுக்கு வேலை கிடைக்கணும். கிடைத்தால் பெருமாள் கோவிலை நூற்றியெட்டு தடவை சுற்றுவேன்’ என்று வேண்டிக்கொண்டாள் அவன் தங்கை.

‘வேலை கிடைத்து ஜீவாவுக்கு பொறுப்பு வந்துவிட்டால்…’ பிள்ளையார் கோவில், மாதா கோவில் பள்ளிவாசல் என் அனைத்து இடங்களிலும் தன் வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக தன் மகனுக்காக வேண்டிக் கொண்டார் மரகதம்.

நதி பாயும்…

ஜீவநதியாக நீ – Episode 2 Link

https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80-2.19031/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!