Kalangalil aval vasantham – 3 (2)
Kalangalil aval vasantham – 3 (2)
ஸ்வேதாவின் வீட்டையடைந்த போது மணி பதினொன்றை தொட்டிருந்தது. கடற்கரையோரம் பிரமாண்டமாக, அதிநாகரீகமாக அமைந்த வீடு!
ஸ்வேதா, அவளது தாய் மாயா! அவரது தற்போதைய கணவர் சைலேஷ் அவ்வப்போது வருவதுண்டு! அவரது வீடு மும்பையிலிருப்பதால் மாயா அவ்வப்போது அங்கு போய்விடுவதுமுண்டு. இப்போதும் அவள் ஏதோ வெளியூருக்குத்தான் சென்றிருந்தாள். மும்பையா என்பது அவனுக்குத் தெரியவில்லை. அதுபோன்ற சூழ்நிலைகளில் அவளது தம்பி முறையிலிருக்கும் பிரானேஷ் துணைக்கு தங்குவதாக கூறியிருந்தாள்.
அதற்கு எதற்கு இவ்வளவு பெரிய வீடு என்று தோன்றாமலில்லை.
ஆறு மாதம் முன் இவன் தான் கட்டிக் கொடுத்திருந்தான். அப்போது ஏற்பட்ட பழக்கம் தான், இருவருக்கும். அதற்கும் முன் கிட்டதட்ட எட்டு மாதமாக கட்டிட வேலை இருந்தபோதும் கூட அவ்வளவு நெருக்கமான பழக்கமில்லை. முடிந்தவுடன் தான்!
அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு அவனது ஜாகுவாரை, வாட்ச்மேன் திறந்த கேட் வழியாக உள்ளே விட்டான்.
எப்போதுமே இரண்டு வாட்ச்மென்கள் உண்டு. அவள் வெளியே சென்றால் பாதுகாப்புக்கு ஜிம்பாய்ஸ் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்களில்லாமல், அவளது டிரைவர்கள் கூட அடியாட்களை போலத்தான் இருப்பார்கள். சமையல்காரனும் கூட இரண்டு பேரை அடிப்பது போலத்தான் இருப்பான். அதாவது அவளை பொறுத்தமட்டில் பாதுகாப்பு முக்கியம். அதில் கோட்டை விட மாட்டாள். எல்லோரும் நெருங்கவே பயப்படுவதும் இதனால் தான்!
“எதற்கு இவ்வளவு அலப்பறை?” என்று சிரித்தபடி ஒருமுறை அவளிடம் கேட்டிருக்கிறான்.
“எவனும் ஈன்னு இளிச்சுட்டு பக்கத்துல வந்துட கூடாதுல்ல…” என்று அவள் கூறிய பதிலை இப்போது நினைத்து சிரித்துக் கொண்டான்.
உண்மைதான். அவளை பார்ப்பதே தெய்வத்தை காண்பது போல என்று அவள் மேல் வெறித்தனமாக சுற்றும் ரசிகர்கள் அதிகம்.
பிறந்தது தெலுங்கு தேசம். நம்பர் ஒன் நடிகையாக கோலோச்சுவது தென்னிந்தியா முழுவதும். குறிப்பாக தமிழ், தெலுங்கு இரண்டிலும், ஸ்வேதா நடிக்கிறாள் என்றால், அது நிச்சயமாக சூப்பர் டூப்பர் ஹிட் என்பது எழுதப்படாத விதி.
அதனாலேயே அவளது கடைக் கண் பார்வைக்காக ஏங்கும் ஹீரோக்கள் மிக அதிகம். அவள் தங்களை பார்க்க மாட்டாளா, அவளது தேதி கிடைத்து தன்னோடு நடித்து விட மாட்டாளா, அவளிடம் பேசி விட மாட்டோமா, தொட்டு நடித்து விட மாட்டோமா என்று பகற்கனவு காணும் நாயகர்களின் பட்டியல் மிக அதிகம்.
ஆனால் அவளாக மனம் வைத்தால் தான் அவளை சந்திக்க முடியும். இல்லையென்றால் தலைகீழாக நின்றாலும், அது முடியாது. கதை மிக மிக நன்றாக இருந்து, தயாரிப்பாளர், இயக்குனர் என்று அனைவரும் செட் ஆனால் தான் அவள் ஒரு படத்தில் நடிக்கவே சம்மதிப்பாள். ஆனால் அவள் ஒப்புக்கொண்டு விட்டாலோ, ராட்சசி தான், நடிப்பில்!
இப்போதெல்லாம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டும் தான் அவள் தேர்ந்தெடுத்து நடிப்பது. அவளுக்கும் மனம் ஸ்த்ரப்பட்டு இருந்தது.
கண்ட படங்களையும் ஒப்புக் கொண்டு, அத்தனையும் நடித்து, அதில் பாதி ஓடி, மீதி அவளை ஓட வைத்து என சலித்து விட்டது. எவ்வளவோ ஈட்டியாகி விட்டது. பத்து வருடங்கள், முழு பத்து வருடங்கள் அனைத்து மொழியிலும் அனைத்தையும் பார்த்தாகி விட்டது.
கணக்கற்ற காதல்கள்… கணக்கற்ற பிரேக் அப்ஸ்! திருமணம் வரை சென்று முறிந்த காதல்களும் கூட உண்டு.
அதில் பெரும்பாலானவற்றை அறிவான் சஷாங்கன். ஆனாலும் ஏதோவொரு விதத்தில் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தாள் ஸ்வேதா, தப்பிக்கவே முடியாதபடி!
வீட்டுக்கும் கார் ஷெட்டுக்குமிடையே கிட்டதட்ட ஒரு பர்லாங்க் தூரமிருந்தது. நெட்டி முறித்தபடி காரை விட்டு இறங்கியவன், தூரத்தில் தெரிந்த கடலை பார்த்தபடி, பேண்ட் பாக்கெட்டில் கை விட்டுக் கொண்டு விஸ்ராந்தையாக நடந்தான்.
அந்த ஏகாந்தம் அவனுக்கு மிகப் பிடித்திருந்தது.
அவனை தழுவிச் சென்ற காற்றும் கூட வன்முறையாக! ஸ்வேதாவின் அன்பைப் போலவே!
கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்தான்.
கணத்தூரின் அந்த வன்மையான அமைதி இப்போதெல்லாம் அவனுக்குப் பிடிக்க ஆரம்பித்து இருந்தது.
செல்பேசி அழைக்க, எடுத்துப் பார்த்தான்!
வைஷ்ணவி!
சங்கடமாக நெளிய வைத்தது அவளது இந்த நேர அழைப்பு!
வேறு வழியில்லை. எடுத்து தானாக வேண்டும்.
என்ன அவசரமோ என்ற எண்ணத்தில் எடுத்தவன், “சொல்லு வைஷு…” என்றான் அவசரமாக!
“எங்கடா தம்பி இருக்க?”
நேரடியாக கேள்விக்கு வந்தாள்.
“ஏன்?”
“இல்ல… இன்னும் வீட்டுக்கு வரலையே?” என்று இழுத்தாள்.
“இல்ல… எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. அதான் வரலை…” என்று கூறினான். தடுமாறினாலும் அதை சற்று புத்திசாலித்தனமாகவே சமாளிக்கப் பழகி இருந்தான்.
“முக்கியமா பேசணும் ஷான்…” என்று முடிக்காமல் இழுத்தாள் வைஷ்ணவி.
“என்ன பேசணும்?”
“நிறைய… உன் மேரேஜ் விஷயமா கூட… நாளைக்காவது வாயேன்.” சற்று தவிப்பாக அவள் கூறியதில் மனதுக்குள் சுருக்!
“மேரேஜ்னா நான் சொன்னதுதான் வைஷு ஃபைனல்…” என்றவன், அதற்கு பதிலை எதிர்பாராமல், அழைப்பை தூண்டித்தான்.
ஸ்விட்ச் ஆஃப் செய்து பாக்கெட்டில் போட்டவனுக்கு அழைப்பு மணியை அழுத்தும் முன்னரே கதவு திறந்தது.
அவசரமாக திறந்தவள், அவனது ஸ்வேதாவேதான்!
மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவள், அவனை கண்டவுடன் ஆயிரம் வாட்ஸ் விளக்காக பளீரென ஒளிர, அதுவரை அவனுக்கிருந்த கோபமேல்லாம் எங்கேயோ போய் ஒளிந்து கொண்டது.
அதிலும் அந்த சீத்ரூ சேலை வேறு, அவனை தாறுமாறாக படுத்த, “பேபி…” என்று சிணுங்கியபடி அவனை நோக்கி கைகளை நீட்டியவளை இழுத்து அணைத்தவன், அவளை வாரியெடுத்துக் கொண்டு, சிரித்தபடி ஹாலிலிருந்த சோபாவில் அவளைக் கிடத்தினான்.
வீட்டில் யாருமில்லை என்ற தைரியம்!
இவ்வளவு நேரம் இவனா அந்தளவு கோபத்தில் பொருமிக் கொண்டிருந்தான் என்ற சந்தேகம் கண்டிப்பாக வரும், பிரீத்திக்கு, இந்த கோலத்தில் அவனைப் பார்த்தால்!
“என் பேபிக்கு இவ்வளவு கோபம் வருமா?” அவனது மீசையை பிடித்து ஆட்ட,
“இஸ்ஸ்… வலிக்குது…”
“அதுக்காகத்தான் இழுக்கறது…” என்றவள், பேசிக் கொண்டே அவனது கன்னத்தை கடித்து வைக்க, அவனுக்கு இப்போது நிஜமாகவே வலித்தது.
“ஹேய்… என்ன பண்ற நீ?” என்று கன்னத்தை தடவினான்.
“இது பனிஷ்மெண்ட். என்னை எவ்வளவு அழ வெச்சுட்ட!” என்று இன்னொரு கன்னத்தையும் கடிக்க, இப்போது அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.
“ஆஹா… இந்த பனிஷ்மெண்ட் நல்லாருக்கே…” என்று சிரித்தவன், அவனது பங்குக்கு, அவளது கன்னத்தை பதம் பார்க்க வர, அவசரமாக விலகினாள் ஸ்வேதா.
“ஓ மை கடவுளே… நாளைக்கு ஷூட் இருக்கு. பைட் மார்க் அப்படியே கன்னத்துல இருக்கும்…” என்றவளை ஒரு மார்கமாக பார்த்தான்.
“ஓகே. அங்க கடிச்சாத்தானே பைட் மார்க் வெளிய தெரியும்…” என்றவன், அவளுக்கு மட்டும் கேட்பதை போல மீதத்தை கிசுகிசுக்க,
“யூ நாட்டி… டர்ட்டி…” என்றவளால் வெட்கத்தை மறைக்க முடியவில்லை.
“ஓகே பிரெஷ் அப் ஆகிட்டு வர்றேன்…” என்றவனை தொங்கிக் கொண்டே மாடிப்படியில் ஏறினாள், அவனோடே!
அறைக்குள் நுழைந்தவன், சற்று அதிர்ந்து போனான் இனிமையாக!
அது அவர்களது படுக்கையறை தான்! சேர்ந்து வாழ ஆரம்பித்த போதிலிருந்து இருவரும் தான் உபயோகப்படுத்துவது! ஆனால் இப்போது அது பூலோக சுவர்க்கமோ என்று தோன்றியது.
அவ்வளவு பெரிய பிரம்மாண்ட படுக்கையறை முழுக்க வாசனை மெழுகுவர்த்திகள் சிறு சிறு ஷாட் கிளாஸில் ஏற்றப் பட்டிருக்க, அந்த இதமான லெவண்டர் நறுமணம், அறை முழுக்க பரவி வியாபித்து இருந்தது.
சட்டென்று மனதுக்குள் ஏதோவொரு குளிர்ச்சி பரவியது!
“ஜஸ்ட் டென் மினிட்ஸ் ப்ளீஸ்…” என்றவன், குளியலறையில் புகுந்து கொண்டான்.
அவன் கூறியதை போல பத்தே நிமிடத்தில் குளித்து விட்டு, பெர்முடாஸ், கையில்லாத டிஷார்ட் அணிந்து வெளியே வர, அவனது வியப்பு இன்னும் விரிந்தது.
இந்த முறை லேவன்டரோடு மல்லிகையின் மனமும் அவனது மெடுல்லா ஆப்லாங்கெட்டாவை தாக்கியிருந்தது. இருளை மிதமாக்கியிருந்த அந்த வாசனை மெழுகுவர்த்திகள், மெல்லிய இசை… ஓடையில் தண்ணீர் ஓடுவதை போல… மிதமான ஏசி காற்றில், அந்த சூழ்நிலை, நிச்சயம் சுவர்க்கத்தின் முகவரி தான்!
அந்த அபாயகரமான மஞ்சள் நிற சேலையில், தோளின் இருபுறமும் மல்லிகை வழிய, ஒரு துளி கூட மேக் அப் இல்லாமலே மெழுகு சிற்பமாக கையில் பாலோடு அவனை நோக்கி வந்தாள் ஸ்வேதா.
அவனது மூளை வேலை நிறுத்தத்தை துவக்கி இருந்தது.
தேவதை… தேவதை… தேவதை… அவள் வதை தேவதை…!
தேவதையை கண்டேன், காதலில் விழுந்தேன்,
என் உயிருடன் கலந்துவிட்டாள்!
நெஞ்சுக்குள் நுழைந்தாள், மூச்சினில் நிறைந்தாள்,
என் முகவரி மாற்றி வைத்தாள்!
ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது…
அதன் வண்ணங்கள் மட்டும் இங்கு விரலோடு உள்ளது!
தீக்குள்ளே விரல் வைத்தேன்!
தனித்தீவில் கடை வைத்தேன்!
மணல் வீடு கட்டி வைத்தேன்!
“கல்யாணம் பண்ணிக்கலாம் ஸ்வேத்தா…” என்றான் ஸ்வேதாவின் காதில், கிசுகிசுப்பாக!
“ஹும்ம்…” என்றவள், ஸிலீவ்லெஸ் டி ஷர்ட்டில் திமிறிய தோளை வருடி, அவனது பின் கழுத்தில் முத்தமிட்டாள்.
“எப்ப பண்ணிக்…” என்று ஆரம்பித்தவனால் அதற்கும் மேல் பேச முடியவில்லை. முத்தமிட்டு முத்தமிட்டு அவனது வாயை அடைத்து இருந்தாள் ஸ்வேதா!
அவளுக்குள் மூழ்கி, தன்னை மறக்கத் துவங்கிருந்தான் சஷாங்கன்.