கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 29

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 29

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 29

விஜயேந்திரனின் இதயம் வேகமாகத் துடித்தது. கீர்த்தனா கேட்ட கேள்வி, ‘அவ இல்லைன்னு நானா?’ அவன் மனதை நெருடியது. ‘ஆனால்? ‘நான் இவளை இம்ப்ரெஸ் பண்ணறேன்னு நினைப்பாளோ? நான்…’ மேலும் மேலும் அவன் சிந்தனை தறி கெட்டு ஓடியது.

‘இல்லை. நான் செய்த தவற்றை நான் தான் சரி செய்யணும்.’ என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு தைரியமாக அவள் முன்னே அமர்ந்து தான் கொண்டு வந்த பரிசை நீட்டினான் விஜயேந்திரன்.

“கீர்த்தி… கண்ணைத் திறந்து பாரேன்.” என்று விஜயேந்திரன் தயக்கத்தோடு கூற, தன் விழிகளை எதிர்பார்ப்போடு திறந்தாள் கீர்த்தனா. அறையெங்கும் பல வண்ணத்தில் ஒளிக் கீற்று. நீலம், பச்சை, சிவப்பு என சின்ன சின்ன வண்ணப் பூக்கள் அறை எங்கும் வட்டமடிக்க, அந்த வண்ண பூக்களின் அழகில் மயங்கி, அந்த வண்ண பூக்கள் ஓடும் திசை எங்கும் புன்னகையோடு  தன் கண்களை சுழட்டினாள் கீர்த்தனா.

கீர்த்தனாவின் முகத்தில் தெரிந்த ஆச்சரியத்தில், அவள் குழந்தை சிரிப்பில் தன்னை மறந்து அவளைப் பார்த்தான் விஜயேந்திரன். அவள் விழிகள் வட்டமடித்து, அவன் கையிலிருந்த பரிசுப் பொருளில் வந்து நின்றது.

“இந்திரன்…” ஆர்வமாக அழைத்தாள் கீர்த்தனா. “உன்னோடது தான்… உனக்கே திருப்பி கொடுத்துட்டேன்… பிடிச்சிருக்கா?” விஜயேந்திரன் கீர்த்தனாவின் முகத்தை பார்த்தபடி கேட்டான்.

“ம்… எப்படி பண்ணீங்க?” என்று அவள் ஆர்வமாக அவன் கையிலிருந்து, தன் கைகளுக்கு இடம் மாறிய கண்ணாடி மாளிகையைப் பார்த்தபடி கேட்டாள் கீர்த்தனா.

உடைந்திருந்த கண்ணாடி மாளிகை, உடைந்த தடம் தெரியாமல் அலங்கரிக்கப்பட்டு, ஆங்காங்கே வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு பட்டெரியின் உபயத்தில் மின்னிக் கொண்டிருந்தது.

அவள் கேள்விக்கு பதில் சொல்லமால், “உனக்காகத்தான். உறவுகள் கண்ணாடி மாளிகை மாதிரி. பத்திரமா கை ஆளணுமுன்னு நீ சொன்ன. உண்மை தான் பத்திரமா கை ஆளனும். நான் தவறிட்டேன். சில நேரம் நாம செய்ற தப்பில் உறவுகளில் சின்ன சின்ன விரிசல்கள் விழலாம். ஆனால், சரி பண்ணிரலாம் கீர்த்தி.” என்று விஜயேந்திரன் கூற, விழுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் கீர்த்தனா.

“இந்த கண்ணாடி மாளிகை மாதிரி.” என்று புன்னகையோடு சாதுரியமாக கீர்த்தனாவின் கவனத்தைக் கண்ணாடி மாளிகையின் பக்கம் திருப்பினான் விஜயேந்திரன். கீர்த்தனா என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘என்னை தப்பா நினைத்து விடுவாளோ?’ என்ற கேள்வி விஜயேந்திரனை சூழ, படபடவென்று பேச ஆரம்பித்தான்.

‘இல்லை. நீ கொடுத்த கண்ணாடி மாளிகை உடைஞ்சிருச்சு. அது ஒரு அபசகுனமா நினைத்து உன் மனசு வருத்தப்பட்டிருக்கும். அது தான்.” என்று விஜயேந்திரன் கூறினான்.   உறவுகளை நாம் மதிக்காத பொழுது என்றும் நாம் செய்யும் செயலை நாம் சிந்திப்பதில்லை. அதுவே, அந்த உறவை நாம் மதிக்கும் பொழுது, நம் செயல், சொல் எல்லாம் பத்திரமாகக் கையாளப்படும் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான் விஜயேந்திரன்.

‘இவங்க என்ன சொல்றாங்க? அவங்க  மனதில் ஒண்ணுமில்லைன்னு சொல்லாமல் சொல்றாங்களா?’ என்ற எண்ணத்தோடு கீர்த்தனா அவனை பார்த்தாள்.

விஜயேந்திரன் இவள் வார்த்தைக்காக காத்திருக்க, “இதுல அபசகுனம் எங்க இருக்கு? நாம்ம தினமும் கிளம்பும் வீட்டிலிருந்து கிளம்பும் பொது அடிபட்டுட்டா, பார்த்து போ நேரம் சரி இல்லை. தண்ணி குடின்னு சொல்லுவாங்க. அது தடங்கலோ, அபசகுனமோ இல்லை. நாம பதட்டம்மா இருக்கோம். இல்லை வேற சிந்தனையில் இருக்கோமுன்னு அர்த்தம். தண்ணீர் குடித்தா நம் கோபமோ, பதட்டமோ குறையுமுன்னு தான் தண்ணீர் குடிக்க சொல்றது.” என்று கீர்த்தனா கூற, ‘இவள் ஏன் சம்மந்தம் இல்லாமல் பேசுறா?’ என்பது போல் விஜயேந்திரன் கீர்த்தனாவை பார்த்தான்.

அவன் சிந்தனையின்  கேள்விக்குப் பதில் போல் மீண்டும் தொடர்ந்தாள் கீர்த்தனா.

“அன்னைக்கு கண்ணாடி மாளிகை உடைந்தது அபசகுனமில்லை. எச்சரிக்கை. முன்னாள், இருப்பவன் மனநிலை தெரியாமல் கனவு காணாதன்னு எனக்கு எச்சரிக்கை. நான் கவனிக்க தவறிட்டேன். உங்க மனநிலையும் குழப்பத்தில் இருந்திருக்கணும். அதன் வெளிப்பாடு தான் நாம அன்னைக்குத் தவற விட்டுட்டோம்.” என்று பொறுமையாகக் கூறினாள் கீர்த்தனா.

தன் பேச்சுக்கு இடையே, பளபளவென்று பிரகாசித்துக் கொண்டிருந்த கண்ணாடி மாளிகையில், அன்று விழுந்த விரிசலைத் தேடினாள் கீர்த்தனா. பலத்த அலங்காரத்தில், அந்த விரிசல் மறைக்கப் பட்டிருந்தது.

“அடிபட்ட இடத்தில் வடுக்கள் இருக்கத் தான் செய்யும்!” என்று கீர்த்தனா, அந்த கண்ணாடி மாளிகையைத் தடவியபடியே கூற, “வலிகள் மறைஞ்சிரும் இல்லையா?” என்று விஜயேந்திரன் தன்மையாகக் கேட்டான்.

‘இவங்க கிட்ட வாதிடலாம். ஆனால், வாக்குவாதத்தில் வென்றவன், உறவுகளிடம் தோற்கிறான். மனிதர்களை இழக்கிறான்.’ என்றோ எங்கோ  படித்தது நினைவு வர, தன் வாயை இறுக மூடிக்கொண்டாள் கீர்த்தனா. அவனுக்கும் அதே எண்ணம் போலும். மேலே பேசவில்லை.

அந்த காலத்தில் பிறந்த பெண்ணை போல, திரும்பி வந்த கணவனை நாதா! பிரபு! அத்தான்! என்று அழைத்துக் கொண்டு காலில் விழ, கீர்த்தனாவின் தன் மானம் இடம் கொடுக்கவில்லை. நவீன யுகதியாக, கழுத்தில் இருக்கும் தாலியைக் கழட்டித் தூர எரிய அவள் கோட்பாடுகளும் சமுதாய அமைப்பும் துணை நிற்க வில்லை.

அதை எல்லாம் தாண்டி, அவன் மேல் காதல் கொண்ட கீர்த்தனாவின் மனம், அவள் விரும்பிய கணவன் தன் அருகாமையில் நிற்க, விட்டு விலக ஒத்துக் கொள்ளவில்லை. ஆசைக்கும், சுயமரியாதைக்கும் இடையே கீர்த்தனாவின் மனம் அல்லாட மௌனமாக பால்கனி பக்கம் சென்றாள் கீர்த்தனா.

இருவரும்  பால்கனி செல்ல, அந்த பூப்பந்தல் கண்ணில் பட அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா. கீர்த்தனா  பார்க்கும் திசையைக் கவனித்து, விஜயேந்திரனும் பார்க்க, “நான் அன்னைக்கு அப்படிச் செய்திருக்கக் கூடாது. சாரி.” என்று விஜயேந்திரன் அவன் சொல்லாமல் சென்றதை எண்ணி வருத்தத்தோடு கூறினான்.

‘இவங்க எதை நினைத்து வருத்தப்படுறாங்க? முன்ன நடந்ததையா? இல்ல பின்ன நடந்ததையா?’ என்ற கேள்வி மனதில் வர, ‘ரொம்ப முக்கியம்.’ என்று தனக்கு தானே நொந்து கொண்டு, “பழசைப் பேசி என்னவாகக் போகுது.” என்று சமாதானம் செய்தாள் கீர்த்தனா.

விஜயேந்திரனின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர, “கண்ணாடி மாளிகை முன்னே விட, இப்ப ரொம்ப அழகா பிரகாசமா இருக்கு.” என்று தன் கைகளில் இருக்கும் கண்ணாடி மாளிகையைப் பார்த்து  சிரித்த முகமாகக் கூறி, அவன் சிந்தனையைக் கலைத்தாள் கீர்த்தனா.

“உனக்கு பிடிச்சிருக்கா கீர்த்தி?” என்று அவன் ஆழமான குரலில் கேட்க, அவன் முகம் பார்த்தாள் கீர்த்தனா.

“பிடிச்சிருக்கானு கேட்டேன்?” என்று விஜயேந்திரன் அவன் எதிரே நின்று, உதட்டு வளைவில் புன்னகையோடு கேட்க, “பிடிச்சிருக்கு.” என்று புன்னகையோடு தலை அசைத்தாள் கீர்த்தனா. “நான் கண்ணாடி மாளிகையை கேட்கலை.” என்று அவன் அவளைச் சீண்ட, கீர்த்தனா இமைகள் படபடக்க அவனைப் பார்த்தாள்.

“இப்படி என் கூட நின்னு பேச பிடிச்சிருக்கானு கேட்டேன்.” என்று விஜயேந்திரன் கேலி தொனிக்கக் கூற, “பிடிக்கலை. சுத்தமா பிடிக்கலை. தூக்கம் வருது. எனக்கு இந்த கண்ணாடி மாளிகையைத் தான் ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று கீர்த்தனா படக்கென்று அவனுக்குப் பதில் கூறுவதில் கைகளை ஆர்வமாக  நீட்ட, கண்ணாடி மாளிகை  கீழே விழ, அதை லாவகமாகப் பிடித்தான் விஜயேந்திரன்.

கண்ணாடி மாளிகையைப் பிடிக்க கீர்த்தனாவும் குனிய, இருவர் தலையும் மோதிக்கொண்டது. “பொய் சொன்னா தலை முட்டிக்குமாம்…” என்று விஜயேந்திரன் கீர்த்தனாவின் காதில் கிசுகிசுத்தான்.

“நீங்களும்  பொய் சொன்னீங்களா?” என்று கண்களை விரித்து  அவனை விட, கிசுகிசுப்பாக கேட்டாள் கீர்த்தனா. “மனைவி பொய் சொன்னாலும், கணவனுக்கு தானே கஷ்டம்?” என்று அவளை விட, அவன் மெதுவாகக் கேட்க, அவர்கள் உரையாடல் தோய்ந்து போய் அங்குக் காற்று மட்டுமே வெளிவர, அந்த மூச்சுக் காற்றின் தீண்டலில் அவர்கள் நின்று கொண்டிருந்த நெருக்கம் அறிந்து, கீர்த்தனா விலகி சென்று மெத்தையில் படுத்துக் கொண்டாள்.

கீர்த்தனாவின் புன்னகை தந்த நிம்மதி, ஆயிரம் அணைப்புகளும், இதழ் ஒற்றல்களும் கூறாத செய்தியை இன்று கீர்த்தனாவின் நெருக்கம் கூற, “வாழ்க்கையில் நான் எப்பயாவது தான் தவற விடுவேன். எப்பையும் இல்லை. இனி எந்த பொருளும் என்னை விட்டு விலகப் போவதில்லை. காத்திருப்பேன். நான் கீர்த்திக்காகக் காத்திருப்பேன். நான் செய்த தவறின் வடுக்கள் மறையும் வரை. அவள் வலிகளை மறக்கும் வரை.” என்று தன் கையில் உள்ள கண்ணாடி மாளிகையைப் பார்த்தபடி அதற்கு மட்டும் கேட்கும்படி, முணுமுணுத்தான் விஜயேந்திரன்.

விஜயேந்திரன் கண்ணாடி மாளிகையைப் பத்திரமாக வைத்துவிட்டு உறங்க, கீர்த்தனா தூக்கம் வராமல் புரண்டு படுத்தாள்.

‘எல்லாம் சரி தான். ஆனால், லீலாவுக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால்? இவங்க எனக்காக ஒன்னும் வரலையே!’ என்ற ஏக்கம் கேள்வியாய் கீர்த்தனாவின் மனதைத் துளைத்தது.

மறுநாள் காலையில், கீர்த்தனா அலுவலகத்திற்குச் செல்ல, மற்ற அனைவரும் மருத்துவமனை நோக்கிச் சென்றனர். நிரஞ்சனா முகத்தில் தெரிந்த சந்தோஷத்தில், முகுந்தன் எதுவும் கூறாமல் அமைதி காக்க, “ஒரு அசைவுக்கே இந்த ஆர்ப்பாட்டமா? ரொம்ப ஓவரா இல்லை?” என்று பூமா நவநீதன், விஜயேந்திரனிடம் முணுமுணுத்தார்.

“அப்படி இருக்கிறதால தான் அம்மா, முகுந்தன் இந்த நிலைமையிலும் நம்பிக்கையோடு இருக்கான்.” என்று விஜயேந்திரன் தாயிடம் கூற, “இருந்தாலும், நீங்க இந்த பொண்ணுக்கு ரொம்ப தான் சப்போர்ட்.” என்று கழுத்தை நொடித்தார் பூமா.

அனைவரும் மருத்துவரிடம் செல்ல, முகுந்தனை பரிசோதித்த மருத்துவர், “முகுந்தன் கிரேட் இம்ப்ரூவ்ன்ட். உங்க மனைவி தான் காரணம். அவங்க குடுக்கிற எக்ஸ்சைஸ்… நம்பிக்கை தான்…  கைகள்ல உணர்ச்சி வர ஆர்மபிச்சிருச்சு. இன் எ வீக், உங்க ஹன்ட்ஸ் வில் பீ பேக் டு நார்மல்.” என்று மருத்துவர் தோழமையுடன் பேச ஆரம்பித்து, தீவிரமாக கூற, அனைவர் முகமும் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்க, நிரஞ்சனா கண்கலங்கினாள்.

வெளியே வந்து, நிரஞ்சனா கண்களைத் துடைத்துக் கொண்டிருக்க, முகுந்தன் எதுவும் பேசாமல் அவளை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நிரஞ்சனா. இப்படி அழலாமா? உன்னை நான் எவ்வளவு தைரியசாலின்னு நினைச்சுகிட்டு இருக்கேன். இப்படி கண்ணை கசக்கிட்டு?” என்று கேலி போல் நிரஞ்சனாவை சமாதானம் செய்தான் விஜயேந்திரன்.

காரில் முகுந்தன் அருகே அமர்ந்த நிரஞ்சனா, முகுந்தன் காதில் எதோ கிசுகிசுத்து அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

“யாருக்கு உடம்பு சரி இல்லைனே தெரியலை. இவன் அவளை தாங்கிட்டே இருக்கான்.” என்று நிரஞ்சனாவை பார்த்தபடி நவநீதன் காதில் முணுமுணுத்தார் பூமா. “உனக்கு வேணுமுன்னா என் மேல சாஞ்சிக்கோ.” என்று நவநீதன் புன்னகையோடு கூற, அதைக் கேட்டும் கேட்காதது போல் நக்கல் சிரிப்போடு காரை செலுத்தினான் விஜயேந்திரன்.

மறுநாள்… விடுமுறை அன்று, அந்த ரோஜாச் செடியைப் பார்த்தபடி முகுந்தனின் கைகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா. அவன் விரல்களுக்கு அசைவுகள் வந்திருக்க, அவன் விரல்களுக்கு இடையில் தன் விரல்களைக் கோர்த்து கதைகள் பேசிக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா. பேச்சு ரோஜாவைச் சுற்றியும், வரப்போகும் அவர்களின் இனிய நாட்களைப் பற்றியும் இருந்தது.

அவர்கள் பேசுவதை, பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் விஜயேந்திரன். “ம்… க்கும்…” என்று கீர்த்தனா குரல் எழுப்ப, அவளைத் திரும்பிப் பார்த்தான் விஜயேந்திரன்.

‘என்ன?’ என்பது போல் விஜயேந்திரன் பார்க்க, “இப்படி ஒரு இளம் ஜோடி பேசுறதை பாக்கிறது தப்பு. அதுவும் உங்க அம்மா செய்ற வேலை இது.” என்று விஜயேந்திரனிடம் கிசுகிசுத்தாள் கீர்த்தனா.

“என்ன? மாமியார் பத்தி குற்றச்சாட்டா?” என்று புருவம் உயர்த்தி நக்கலாகக் கேட்டான் விஜயேந்திரன். “அது சரி. நடப்பைச் சொன்னேன்.” என்று தோள்களைக் குலுக்க,  அவர்கள் கவனத்தைக் கீழே இருந்து வந்த சிரிப்பு சத்தம் ஈர்த்தது.

அவர்களைப் பார்த்தபடி, “முகுந்தனுக்கு எல்லாம் சரி ஆகிரும் தானே?” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்டான் விஜயேந்திரன்.

“இதுல என்ன சந்தேகம்? கண்டிப்பா சரியாகிரும்” என்று கீர்த்தனா கூற, “எனக்கும் அதே நம்பிக்கை தான்.” என்று விஜயேந்திரன் அவர்களைப் பார்த்தபடி கூறினான். அவன் குரல் சற்று பிசிறு தட்டியது.

“இன்னைக்கு என்ன ஆச்சு?” என்று கீர்த்தனா கேட்க, “வெளிய காட்டிக்கலைனாலும், எனக்கு ரொம்ப பயமா இருந்தது கீர்த்தி. முகுந்தன் இப்படி இருந்திருவானோன்னு. நானும் இப்படி ஆனதுக்கு ஓர் காரணம். நான் ஒரு சுயநலவாதி. என்னைப் பத்தி யோசிச்சிட்டு இருந்துட்டேன். நான் அப்பவே முகுந்தனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தா இப்படி ஆகியிருக்காது. அவன் காரில் போயிருப்பான்.” என்று விஜயேந்திரன் புலம்ப, “இந்திரன் உங்களை எவ்வுளவு வீரமுன்னு நினச்சேன். சின்ன புள்ள மாதிரி புலம்பிட்டு இருக்கீங்க. எதோ தெரியமா பண்ணிடீங்க. அதுக்காக நீங்க சுயநலவாதி ஆக முடியுமா? நீங்க செய்ற ஒவ்வொரு செயலும் அத்தைக்காகவும், இந்த வீட்டுக்குக்காகவும் தானே?” என்று கீர்த்தனா கூற, “எல்லாரையும் கஷ்டத்தில் ஆழ்த்தறேன். உன்னை உற்பட.” என்று விஜயேந்திரன் சலிப்பாக கூறினான்.

“அதெல்லாம் இல்லை.” என்று கீர்த்தனா கூற,  பேச்சு செல்லும் திசை கீர்த்தனாவை உலுக்க, ‘அவங்க செய்த தப்புக்கு நான் வக்காலத்து வாங்கிட்டு இருக்கேன். இது சரி இல்லையே.’ என்று தன்னை தானே ஆராய்ந்து கொண்டிருந்தாள் கீர்த்தனா.

‘நான் சற்று தனியாகச் சிந்திக்க வேண்டுமோ?’ என்ற எண்ணம் தோன்ற, “நான் கொஞ்சம் நாளைக்கு எங்க வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா?” என்று அங்கிருந்த ரோஜாவைப் பார்த்தபடி கேட்டாள் கீர்த்தனா.

பதட்டமாக அவளைப் பார்த்தான் விஜயேந்திரன். “எதுக்கு?” என்ற கேள்வி வேகமாக வர, “இல்லை. எனக்கு… நான் எங்க வீட்டில் இருந்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு. அது தான் இரண்டு நாள் அப்பா கூட…” என்று கீர்த்தனா இழுக்க, “ஓ…” என்று விஜயேந்திரனின் குரல் உள்ளே சென்றது.

‘அவ போறான்னு சொன்னா  நீ சரின்னு சொல்லணும். வேண்டாமுன்னு சொல்ல நீ யார்? உனக்கு என்ன உரிமை?’ என்று அவன் அறிவு விஜயேந்திரனை எச்சரிக்க, அவன் உதடுகள் அவன் மனதின் பேச்சைக் கேட்க ஆரம்பித்தது.

“ஆபீஸ்க்கு வரணுமே?” என்று அவன் பேச்சை வளர்க்க, “நான் அங்க இருந்து தான் ஆபீஸ்க்கு வந்திட்டு இருந்தேன்.” என்று அவள் உதடுகள் கூறினாலும், ‘வேணாமுன்னு சொல்ல மாட்டாங்களா? வேண்டாமுன்னு சொன்னா இங்க இருக்க போறேன்.’ அவள் மனம் ஏங்கியது.

‘இவள் எதுக்கு இப்ப அங்க போகணும்? நான் கூடாதுன்னு சொன்னால், இவ எப்படி எடுத்துப்பா?’ என்ற தயக்கத்தோடு, மனதின் எண்ணத்திற்கு நேர்மாறாக  “போயிட்டு வா.” என்று சம்மதமாகத் தலை அசைத்தான் விஜயேந்திரன்.

“ம்…” என்று ஏமாற்றத்தோடு, சம்மதமாகத் தலை அசைத்தாள் கீர்த்தனா. ‘எனக்கு எதுக்கு இந்த ஏமாற்றம், நான் கேட்டவுடன் சம்மதம் சொல்லிட்டாங்க. என் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து. நான் என்ன எதிர்பார்க்கிறேன்?’ என்ற கேள்வியோடு தன் வேலையில் ஈடுபட்டாள் கீர்த்தனா.

அன்று இரவு வேளை.

முகுந்தன் மாத்திரையை உட்கொண்டு நித்திரையில் ஆழ்ந்து விட்டான். தட தட வென்று இடி முழக்கமிட நிரஞ்சனா எழுந்து அமர்ந்தாள். உஸ் என்று சத்தத்தோடு காற்று வேகமாக வீச நிரஞ்சனா வேகமாக ஜன்னல் அருகே சென்றாள். பலத்த காற்றோடு மழை வேகமாக பூமியை வந்தடைய நிரஞ்சனாவின் கண்கள் அந்த ரோஜாச் செடியை நோட்டமிட்டது. அந்த காற்றில் ரோஜா மலர் அங்குமிங்கும் அசைய அந்த ரோஜா இதழ்கள் நடுங்க ஆரம்பித்தது.

நிரஞ்சனா கனமான பிளாஸ்டிக் ஷீட், துண்டு எடுத்துக் கொண்டு அந்த இருட்டில் தோட்டத்தை நோக்கி ஓடினாள்.

மழை சத்தத்தில் கீர்த்தனா எழுந்து பால்கனி செல்ல, அங்கு நிரஞ்சனா ரோஜா செடி அருகே சென்று கொண்டிருந்தாள்.

“நிரஞ்சனா… நிரஞ்சனா…” என்று கீர்த்தனா அழைக்க, மழை நீரின் சத்தத்தில் கீர்த்தனாவின் அழைப்பு நிரஞ்சனானவை சென்றடையவில்லை.

“கீர்த்தி என்ன ஆச்சு?” என்று கேட்டுக் கொண்டே வந்த விஜயேந்திரன் நிரஞ்சனவை பார்த்து, “இப்ப அங்க என்ன பண்ரா?” என்று கேட்க, இருவரும் நிரஞ்சனவை நோக்கி ஓடினர்.

அவள் இரு கைகளால் அவள் கொண்டு வந்த பிளாஸ்டிக் ஷீட் வைத்து  அந்த ரோஜா செடியை மறைத்து நிற்க, “நிரஞ்சனா என்ன பண்ற?” என்று கீர்த்தனா கேட்டாள்.

“முகுந்தன் கை சரியானதும் இந்த பூவை என் கூந்தலில் வைக்கறேன்னு சொல்லிருக்கான். இப்படி காத்து அடிச்சி எல்லா இதழும் கீழ விழுந்திரும்  அது தான் பூவை காப்பாத்துறேன்.” என்று நிரஞ்சனா தீவிரமாக  கூற, “நிரஞ்சனா… என்ன இது சின்ன குழந்தை மாதிரி. இந்த பூ இல்லைனா வேற பூ.” என்று விஜயேந்திரன் சற்று கோபத்தோடு கூறினான்.

“இது பூ இல்லை அத்தான். முகுந்த்தோட நம்பிக்கை.” என்று மூச்சு வாங்கியபடியே, மழை நீர் அவள் முகமெங்கும் வடிய, நிரஞ்சனா கூற, “இந்த பூ போனால், நம்பிக்கை இழக்குற அளவுக்கு முகுந்தன் கோழை இல்லை. நீ உள்ள போ.” என்று விஜயேந்திரன் கண்டிப்போடு கூறினான்.

மறுப்பாகத் தலை அசைத்து, “அவன் வருத்தப்படுவான். இந்த பூ இருக்கனும். முகுந்த் கொஞ்சம் கூட வருத்தப்பட கூடாது.” என்று நிரஞ்சனா பிடிவாதமாகக் கூற, விஜயேந்திரன் பேச ஆரம்பிக்க, அவன் கைகளைப் பிடித்து மறுப்பாகத் தலை அசைத்தாள் கீர்த்தனா.

“நிரஞ்சனா, நீ மட்டும் பிடித்தால் கை வலிக்கும். தா நானும் ஒரு பக்கம் பிடிக்கறேன்.” என்று கீர்த்தனா, கைகளை நீட்ட, “அக்கா…” என்று அவள் தயங்கினாள்.

“எப்படியும் நெனச்சிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை விட்டரும். அது வரை நானும் இங்க நிக்கறேன். உன்னை எப்படி தனியா விட்டுட்டு போறது?” என்று அவள் மறுபக்கத்தை பிடிக்க அந்த ரோஜா செடியின் ஆட்டம் சற்று குறைந்திருந்தது.

வேறுவழின்றி விஜயேந்திரன் கீர்த்தனாவின் பக்கம் நிற்க, நிரஞ்சனாவின் தவிப்பு, பிடிவாதம் இவற்றை பார்த்துக் கொண்டே, “காதல் அவ்வுளவு தப்பிலையோ?” என்று விஜயேந்திரனுக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுத்தாள்.

“அது காதலிப்பவர்களைப் பொறுத்து.” என்று இருள் நிறைந்த வானத்தை பார்த்தபடி கூறினான் விஜயேந்திரன்.

கீர்த்தனாவின் கேள்விக்குப் பதில் கிடைக்க, அவள் இரவு நேர மழையை ரசிக்க ஆரம்பித்தாள்.

மழை சற்று குறைந்து, பின் நின்றது.

நிரஞ்சனா அந்த பிளாஸ்டிக் ஷீட்டை திறந்து ரோஜாவை ஆர்வமாகப் பார்க்க, அந்த ஆர்வம் விஜயேந்திரன், கீர்த்தனா இருவரையும் தொற்றிக் கொள்ள, இருவரும் அந்த செடியை நோக்கித் திரும்பினர்.

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்.

 

error: Content is protected !!