Kathalukku Enna Vayathu – 6

வயது – 6

 

“வாத்தி கம்மிங் ஒத்து” என்று காதை கிழிக்கும்‌ அந்த பாடலின்‌ ஓசையில்‌ கூட தன்‌ தூக்கத்தை விடாமல்‌ தொடர்தாள்‌ அனுராதாவின்‌ செல்வப்புதல்வி அனிஷா.

 

‘சரி தான்‌ போடி’ என்று அவள்‌ அலைபேசியும்‌ தொடர்ந்து ஓசை எழுப்பி கலைத்து ஓய்ந்தது.பின்‌ அதன்‌ மேல்‌ இரக்கப்பட்டு என்னவோ மெல்ல கண்‌ திறந்தாள்‌ அவள்‌.பின்‌ தன்னை அழைத்தது யார்‌ என்று அறிய அலைபேசியை எடுத்து பார்த்தவளுக்கு 3 மிஸ்ட் காலும்‌ 7 மெசேஜ்யும்‌ சஞ்சீவிடமிருந்து வந்து இருந்தது .

 

தன்‌ தூக்கம்‌ கெட்டு போன எரிச்சலில்‌ இருந்தவளுக்கு இப்போது கன்னசிவப்பும்‌ , பெரிய சிரிப்பும்‌ அவளை கேக்காமலே வந்து ஒட்டிகொண்டது .

 

சஞ்சீவ்‌ அவளின்‌ முன்னாள்‌ நண்பன்‌ இப்பொழுது காதலனாக உருவெடுத்துள்ளான்‌.அவளின்‌ ஆடை தொழில்நுட்ப துறையில்‌ உள்ள மாடலின்‌ மூலம்‌ அறிமுகமானவன்‌.நட்பு என்ற ரீதியில்‌ வளர்ந்த அவர்களின்‌ உறவு இப்பொழுது ஒரு இரண்டு மாதங்களாக தான்‌ காதல்‌ என்ற நிலையை அடைந்துள்ளது.

 

அவனின்‌ நினைவில்‌ இருந்து வெளிவந்தவள்‌,பின்‌ அவளே அவனுக்கு கால்‌ செய்து அழைத்தாள்.‌ இவள்‌ கூப்பிட்ட முதல்‌ ரிங்கிலே எடுத்த சஞ்சீவ்‌ “என்னோட போன்‌ கூட அட்டெண்ட்‌ பண்ணாம என்ன வேலை உனக்கு” என்க 

 

“சாரி சஞ்சீவ்‌ கொஞ்சம்‌ அசந்து தூங்கிடேன்‌ பா…சாரி” என்றாள் கொஞ்சலுடன்‌

 

“ம்ம்ம்‌ ..ஓகே இன்னைக்கு நீ ப்ரீ தான …ரெண்டு பெரும்‌ சேர்ந்து ஒளடிங்க்‌ போயிட்டு வரலாம்‌”

 

“சஞ்சீவ்‌ இன்னைக்கு ஒரு முக்கியமான வொர்க்‌ இருக்கு…ஆல்ரெடி எனக்கு அல்லாட்‌ பண்ணிட்டாங்க இன்னைக்கு முடியாது …வீக்‌ எண்டு போலாமே”

 

“எப்பவும்‌ இதை  தான்‌ சொல்லுற இன்னைக்கு நோ சாய்ஸ்‌….நீ வர அவ்ளோ தான்‌”

 

“ஐயோ …சஞ்சீவ்‌ ப்ளீஸ்‌…வேணா எவனிங்‌ காபி ஷாப்‌ போயிட்டு பீச் போயிட்டு வரலாம்‌…பட்‌ இன்னைக்கு  ஒளடிங்க்‌ முடியாதுடா”

 

“சே!!! எவ்ளோ பிளான்‌ பண்ணி இருத்தேன்‌ தெரியுமா…இந்த வீக்‌ எண்டு கண்டிப்பா வர இல்ல நான்‌ உன்னோட வீட்டுக்கே வந்துருவேன்‌” என்றான்‌ மிரட்டலுடன்‌ ..

 

“ஐயா சாமி கண்டிப்பா வரேன்‌.அப்படியெல்லாம்  பண்ணிடாத…௭வனிங்‌ மீட்‌ பண்ணலாம்‌ … பைய்” என்று விட்ட தூக்கத்தை மீண்டும்‌ தொடர்ந்தாள்‌

 

அவளுக்கு தெரியவில்லை தானே ஒரு காதல்‌ ஜோடியை சேருவதற்க்கு காரணமாக இருந்து விட்டு  பின் அதே ஜோடி தன்னாலே பிரிந்து திசை மாறி செல்லும்‌ என்று.

***************************

எங்கிருந்தோ தொடர்ந்து ஒரு சத்தம் கேட்பது போல் தோன்றியது செழியனுக்கு,மெல்ல புருவங்களை சுருக்கி மெல்ல தன் கண்களை திறந்து பார்த்தவனுக்கு  சற்று நேரம் ஒன்றுமே புலப்படவில்லை.மெல்ல எழுந்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.அதன் பிறகே அவனுக்கு தான் இருக்குமிடம் புரிந்தது,தான் எப்படி இங்கு வந்தோம் என்பதும் நினைவுக்கு வந்தது.

 

நேற்று நடந்தவை அனைத்தும் அவனை காயப்படுத்தியதோ இல்லையோ ஆனால் ஏற்கனவே அவன் மனதினுள் புதைந்திருந்த பலவற்றை கிளறி ஆறியதாக அவன் நினைத்த காயத்தை கீறி  இன்னும் வலியை அதிகப்படுத்தியது.

 

அந்த லான் கஃபேயிலிருந்து  வந்தவனின் மனம் பல எண்ணங்களில் சிக்குண்டு,அவனை கொல்லாமல் கொன்றது.ஆராதனா பேசிய அனைத்தும் அவனை குறி தப்பாமல் பலமாக தாக்கியது.

 

வலிகள்,காயங்கள் அது குடுத்த நினைவுகளும் அதோடு அவன் மனசாட்சியின் கொக்கரிப்பும் அவனை விடாமல் துரத்த அதனிலிருந்து தப்பிக்கவே இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பாரின் துணையைத் தேடி வந்தான்.

 

வந்தவன் விடாமல் அருந்திய மதுவினால் பலன் இருந்ததா என்பது அவனுக்கும் அந்த ஆண்டவனுக்கும் தான் வெளிச்சம்.இதை குடித்தாலாவது  தன்னை மறப்போம்,தன்னுடைய வலியை மறப்போம்  என்று எண்ணிதான் செழியன் வந்தது.ஆனால் அதோ பாவம் அவன் மனதில் கொழுந்து  விட்ட வெண்மையுடன், அருந்திய பானத்தின் வெப்பமும் சேர்ந்து அவனை இன்னும் படுத்தியது.

 

மனிதனின் இயல்பே நாம் எதை மறக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுகிறோமோ சில சமயங்களில் அச்செயலே அந்த சம்பவத்தை நமக்கு நினைவூட்டும் அந்நிலையில் தான் செழியன் இருந்தான்.

 

பாரை மூடும் நேரம் வந்தும் அவன் போகாமல் மது அருந்துவதை பார்த்த ஊழியர்கள் தங்கள் நிர்வாகியிடம் சொல்ல,செழியனின் செல்வாக்கை அறிந்த அந்த நிர்வாகி அவனிடம் தன்மையாகவும் ,பவ்யமாகவும்  சொல்லிய பின்னும்  அந்த இடத்தை விட்டு அவன் நகரவில்லை. ஒருவேளை அவன் உடலும் அதற்கு ஒத்துழைக்கவில்லையோ??? 

 

பின் என்ன நினைத்தானோ அவனே செல்ல முற்படும் போது அவன் உடல் கட்டுப்பாட்டை மொத்தமும் இழந்தது.அவனால் நிலையாக நிற்க கூட முடியாத நிலையில் இருந்தான்.இதற்கு மேல் முடியாது என்பது போல் அவன் உடல் சரிய அவனையும்,அவன் பின்புலத்தையும் நன்கு அறிந்த அந்த நிர்வாகி மற்றவர்களின் உதவியுடன் அவனை அந்த ஹோட்டலின் விஐபி அறையில் கொண்டு வந்து சேர்த்தார்.

 

மெல்ல அவன் தன்னிலைக்கு திரும்பும் போது மீண்டும் அவனின் கைப்பேசி சத்தம் செய்து தான் உயிருடன் இருப்பதை காட்டியது.எடுத்து பார்த்தவனுக்கு தன் தமக்கை அழைப்பது தெரிந்தது. இதற்கு முன் எத்தனை முறை அழைத்தாரோ என்று எண்ணியபடி ஆன் செய்து தன் காதில்  வைக்க 

 

இதற்காகவே காத்து கொண்டிருந்தது போல் மறுமுனையில் அவன் அக்கா “டேய்!!! செழியா  எங்கடா இருக்க? உனக்கு தான் நேத்து நைட்ல இருந்து ரொம்ப நேரமா போன் பண்ணிக்கிட்டே இருக்கேன்…நீ எடுக்கவே இல்ல…வீட்டுக்கு பண்ணா  நீ வரலைன்னு சொல்லுறாங்க” என்று அவர் கடிய 

 

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தன் இடதுகையை நெற்றியில் அடித்து  அழுத்தியபடி அவன் யோசிக்க 

 

மறுபடியும் அனுராதாவிடமிருந்து “செழியா!!!லைன்ல இருக்கியா?” என்க 

 

“ஆஹ்… இருக்கேன் கா… இல்ல நேத்து கொஞ்சம் பிசி இந்த வீக் ஆடிட்டிங் வராங்க…அதான் கொஞ்சம் வேலை இருந்தது அதான் பார்த்துட்டு இருந்தேன்…மணி போனதே தெரியலை அப்படியே  இங்கேயே நைட் ஆபீஸ்ல தூங்கிட்டேன்” என்று கூசாமல் அவன் பொய் மூட்டையை அவிழ்க்க  

 

“உனக்கு என்னைக்கு தான் வேலை இல்லாமல் இருந்திருக்கு…அது கடக்கு கழுதை,ஆராதனாவை பார்க்க போனியே அதை  பத்தி சொல்லுவேன்னு பார்த்துகிட்டே இருந்தேன்… நீ பண்ணவே இல்ல சரி நம்ம பண்ணி கேப்போம் கால் பண்ணாலும் நைட்ல இருந்து நீ போன் எடுக்கவே இல்லை” என்று வரிசையாக அனுராதா புலம்ப 

 

செழியனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை அவனுள் இருக்கும் மன அழுத்தத்திற்கு பேசாமல் கைபேசி தூக்கி எறிந்து உடைத்து,’ஓஹ்’ என்று கத்த வேண்டும் போல் தோன்றியது.ஆனால் மனதில் உள்ளவற்றை எல்லாம் சொல்லும் நிலையிலோ இல்லை நினைப்பத்தை  எல்லாம் செயல்படுத்தும் நிலையிலோ விதி அவனை நிறுத்தவில்லையே!!!

 

தன் பதிலுக்காக அனுராதா காத்திருப்பதை புரிந்து கொண்டு ,தன் சிந்தனையை ஒதுக்கிவிட்டு “பார்த்தேன் கா”  என்ற ஒற்றை வார்த்தையோடு  நிறுத்தி கொண்டான்.

 

“என்னடா கோடிட்ட இடத்தை நிரப்புக சொல்ற மாதிரி ஒரு வார்த்தையில சொல்லுற…உன்கிட்ட கேட்டது தப்பு தான்.நேத்தே ஆராதனா கால் பண்ணி எல்லாம் சொல்லிட்டா” என்று அவர் கூறி முடிப்பதற்குள் செழியனுக்கு தூக்கி வாரி போட்டது.

 

 ‘எல்லாம்  சொல்லிட்டாளா?? அப்ப நான் இந்த கல்யாணம் வேண்டாம் பேசினது எல்லாம் சொல்லிட்டாளா?!’ என்றுநொடிக்குள் அவன் மனம் குழம்பி தத்தளிக்க,பின் விடை தெரிவதற்காக அவனே முன்வந்து “என்ன என்ன சொன்னா?!”

 

“வேற என்ன சொல்லுவா…நீ அவகிட்ட பொறுமையா நல்லவிதமா பேசின கடைசியா எதோ கால் வந்துருச்சு நீ சீக்கிரம் கிளம்பி போயிட்ட சொன்னா…அப்பறம் உங்க ரெண்டு பேருக்கும் இந்த கல்யாணத்தில் முழு சம்மதம் சொன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு செழியா…சரி இதை உன்னோட வார்த்தைலையும் கேப்போம் கால் பண்ணேன் நீ தான் எடுக்கவே இல்லை” என்று குறைப்பட 

 

செழியனுக்கு கசந்து விட்டது ‘என்ன பெண் இவள்,தான் அவ்ளோ சொல்லியும் புரிந்துகொள்ளாமல்  திமிராக பேசினாள்.இப்பொழுது தன் அக்காவிடம் அனைத்தையும் மறைத்து மாற்றி  கூறி சம்மதமும்  சொல்லி இருக்கிறாள்’ என்று எண்ணினான்.ஏனோ தானும் தமக்கையிடம் பொய்களை தான் அள்ளிவீசி கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விட்டான் போலும்.

 

“சரி!!! நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வா…இனிமே சும்மா என்னால இருக்க முடியாது.ஆக,வேண்டிய வேலை நிறைய இருக்கு.நீயும்  ஆஃபீசியே கதினு கிடந்தது  போதும் இன்னும் கொஞ்ச மாசத்துக்கு இதெல்லாம் ஒதுக்கி வைடா…புரியுதா?” என்று ஒரு வழி பாதையாக அவர் மட்டுமே பேச தம்பியி டம்  இருந்து பதில் வராமல் போகவே

 

 “செழியா?” என்று அழைக்க 

 

தன் ஆற்றாமையையும்  துக்கத்தையும் தன்னுள் புதைத்து கொண்டு தொண்டைக்குழியில் விழுங்கிக்கொண்டு “ம்ம்ம் சொல்லுக்கா” என்க 

 

“நேத்து எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா…உன்னை முதல் முதல என் கையில் வாங்கும் போது இருந்த சந்தோஷம் அப்படியே குறையாமல் அதே அளவு நேத்து நான் உணர்ந்தேன் டா…நீ படிச்சு,பட்டம் வாங்கி,கம்பெனி ஆரம்பிச்சு,பேரு புகழ் வாங்கினாலும் என் மனசுல ஏதோ ஒன்னு உறுத்திக்கிட்டே  இருக்கும்…ஆனா இப்போ அது மனப்பூர்வமா  முழுமை அடைஞ்சுடுச்சு செழியா… நான் பயந்துட்டே இருந்தேன் என்னதான் எனக்கு நிறைவாய் இருந்தாலும் எங்க நீ ஆராதனவா  பிடிக்கலை சொல்லிடுவியோன்னு பயந்தேன்… எப்படியோ உனக்கு  முழு சம்மதம் கேட்டோன தான் நிம்மதி” என்று தன் மகிழ்ச்சியை வார்த்தையில் கடத்தி பேசியவர் 

 

“நான் ஒருத்தி பேச ஆரம்பிச்ச பேசிக்கிட்டே இருப்பேன்…நீ முதல்ல வா… நம்ம குடும்ப ஜோசியரை  வர சொல்லி இருக்கேன்.நீயும் அப்போ  இருக்கணும் சீக்கிரமா வாடா”என்று பேசி அவர்  வைக்க  

 

‘ஏன்? எதற்கு?’ என்று எந்த கேள்வியும் செழியன் கேட்கவில்லை.கேட்பதனால் தான் என்ன பயன்?எல்லாம் தன்னை மீறி நடக்கும் போது,தான் கேள்வி கேட்டோ ,பேசியோ எதுவும் மாறப் போவதில்லை என்று தெரிந்து விட்டது.

 

இனிமேல் தான் பேசி இதை நிறுத்தினாலும் அதில் தான் அடைய போவது எதுவுமில்லை. சொல்லப்போனால் வீண் சண்டையும், சச்சரவும் ,மனஸ்தாபமும்  தான்.முக்கியமாக தன் அக்காவின் நிம்மதியையும் சந்தோஷத்தையும் அழித்து கொன்றுவிட்டு தான் நினைத்தது நடக்க வேண்டுமா? அந்த வெற்றியை வைத்து நான் ஒன்றும் மார் தட்டி கொள்ளப் போவதில்லை என்று எண்ணினான் 

 

தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை…சந்தோஷமும் நிம்மதியும் தனக்கு எப்போதும் நிரந்தரமாக அமையாதா? வெளியுலகில்  வெற்றி பெற்றவனாக திகழ்ந்தாலும்,உள்ளுக்குள் என் சொந்த வாழ்க்கையில் ஏன் இப்படி தொடர் தோல்வியை கடவுள் தருகிறான் என்று தன்னுடைய நிலையை நினைத்து சுய பச்சாதாபம் தோன்றி அவனுக்கு தொண்டை அடைக்க,இதற்கு மேல் தான் இங்கே இருந்து  யோசித்தால்,வீண் எண்ணங்கள் தன்னை சூழ்ந்து மூச்சடைக்க செய்யும் என்பதை உணர்ந்து  அங்கிருந்து கிளம்ப ஆயுத்தமானவனின் போனில் தனக்கு ஏதோ செய்தி வந்து இருப்பதை அறிவிக்கும் பொருட்டு சத்தம் செய்ய அதை எடுத்துப் பார்த்தான். 

 

வாட்ஸ் அப்பில் தனக்கு ஏதோ ஒரு பதிவு செய்யாத நம்பரிலிருந்து செய்தி வந்திருப்பதை காட்ட அதைத் திறந்து பார்த்தவனின் புருவம் சுருங்கியது.பின், அதை யார் அனுப்பி இருப்பர் என்பதை அந்த செய்தி பார்த்தவுடன் அவனுக்கு விளங்கியது.அது ஒரு பார்வர்டு மெஸேஜ்,அதிலிருந்த சாராம்சம் இதுதான்

 

‘மற்றவர்களை மாற்ற முயல்வத்தை  நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக தங்களுக்குள் மாற்றத்தைக்  கொண்டுவர முயல்வது தான் உண்மையான மெச்சூரிட்டி!!!!’

 

அதனுடன் காலை வணக்கம் என்ற வாழ்த்தும் இருந்தது.அவன் பார்த்த அடுத்த நிமிடம் அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல் “இப்படிக்கு Mrs.செழியன்” என்று  இன்னொரு அம்பையும் எய்தாள் அவனுடைய நாயகி.

 

இதைப் பார்த்தவுடன் நம் நாயகன் பூரித்துப் போய் இருப்பானா என்ன புடைத்துக் கொண்டு வந்த கோபத்தை பல்லைக் கடித்து கொண்டு அடக்கினான் செழியன்.

*******************************

அதற்கு முற்றிலும் நேர்மாறாக செழியன்,குறுஞ்செய்தியை பார்த்ததற்கான அறிகுறியை தன் இதழில் குறும்புப் புன்னகை இழையோட பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா.

 

 அவள் சிரிப்பதை பார்த்து கொண்டே அவள் அறைக்குள் நுழைந்தார்  சிவராமன்.இப்பொழுது அவளுக்கு துணையாக இருக்கும் ஒரே சொந்தம் அவளின் மாமா,கல்லூரி பேராசிரியர்.

 

“என்ன ஆராதனா மொபைல பார்த்து சிரிச்சுகிட்டே இருக்கே”

 

“அஹ்… ஒன்னும் இல்ல மாமா… சும்மா தான்.நீங்க மார்க்கெட் போயிட்டு நான் சொன்னதெல்லாம் வாங்கிட்டு வந்துட்டீங்களா”

 

“அதெல்லாம் நீ சொன்னது எல்லாம் வாங்கிட்டேன்மா…ஆனா எதுக்கு இப்ப நீ கஷ்டப்பட்டு சமைக்கிற…ஒரு ஒருவேளை உன்னோட அத்தை சாப்பாடு சாப்பிட முடியாமல் நீயே சமைக்கலாம் முடிவு பண்ணிட்டியா என்ன?!”  என்று அவர் கேட்டு வைக்க அதற்காக தக்க பதிலடியுடன்  வந்து சேர்ந்தார்  சிவராமனின் மனைவி பார்வதி.

 

“ஏன் சொல்ல மாட்டீங்க…30 வருஷமா நான் சமைச்சுக் கொட்டுறத நல்லா சாப்பிட்டு…இப்போ  சலிச்சு போச்சா” என்றார்.

 

தேவையில்லாமல் தன் மனைவி வாய்க்கு இன்று அவல் ஆகிவிட்டோமே என்ற கவலையுடன் உண்மையை சொல்லும் பேர்வழியாக “பாரு!!! நீயே சொல்லிட்ட சமைச்சுக் கொட்டுற….நல்லா இல்லை தானே எனக்கு கொட்டுற” என்று அவரை விடாமல் வம்பிழுக்க

 

 இதை அனைத்தையும் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் ஆராதனா “ஏன் மாமா நல்லா இல்லாமத்தான் இப்படி பிள்ளையார் மாதிரி உங்களுக்கு இந்த தொப்பை வந்துச்சா?” என்று கண்களால் சிவராமனின் பானை வயிற்றை சுட்டிக்காட்டி நக்கலுடன் கேட்டாள்.

 

” நல்ல கேள்வி மருமகளே!!! ஆனா இந்த தொப்பைக்கு உன்னோட அத்தை காரணமில்லை இதற்கான பெருமை எல்லாம் நம்ம தெரு காமாச்சி மெஸ்க்கு தான் போய் சேரும்” என்று  அவரும் விடாமல் சிக்சர் அடிக்க 

 

“ஓ…அப்படியா அப்போ இனிமே என்கிட்ட வந்து அந்த பருப்புபாயாசம் பண்ணு பாரு கேட்காதீங்க” என்று ஒரேயடியாக பார்வதி முகத்தை திருப்பிக்கொள்ள,சிவராமனுக்கு தான் விளக்கெண்ணை கொடுத்தது போல் முகம் மாறியது.

 

அதனை பார்த்த ஆராதனாவிற்க்கு சிரிப்பு பொங்கியது.அதனுடனே “விடுங்க மாமா…இன்னைக்கு என் கையாலேயே உங்களுக்கு பருப்பு பாயாசம் பண்ணி தரேன்” என்று சொல்லியும் அவர் பார்வதியை பாவமாக பார்த்தார். 

 

ஏனோ இவர்களைப் பார்க்கும் பொழுது அவளுக்கு தன்னுடைய கஷ்டமெல்லாம் சற்று தன் நினைவிலிருந்து தள்ளிப் போவது போல் தோன்றும்.இவர்களுக்கு கஷ்டம் இல்லையா என்ன?! செல்வத்திலே பெருஞ் செல்வம் குழந்தைச் செல்வம் அந்த செல்வம் தங்களுக்கு இல்லை என்றாலும் அதை நினைத்து ஒடுங்கிப் போகாமல்,தன் துணையையும் வருந்தாமல்,அதை  பெரும் குறையாக கருதாமல் தங்கள்  முப்பது வருடம் திருமண வாழ்க்கையை அழகாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்  இந்த காதல் தம்பதிகள்.

 

அதை நினைத்துக் கொண்டிருந்தவளின் மனதை திசைதிருப்பியது சிவராமனின் அலைபேசி. அதனை எடுத்து பார்த்தவர்,ஆராதனாவை பார்த்து  “அனுராதா பேசுறாங்க” என்க 

 

“சம்மந்தியா…எடுத்துப் பேசுங்க” என்றார்  பார்வதி.

 

எடுத்து காதில் வைத்தவர்,மறுமுனையில் பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டு “அப்படியா சந்தோஷம்…நீங்க பார்த்து சொல்லுங்க…அது போதும்” என்று பேசி வைத்தார்.பார்வதி,ஆராதனாவை பார்த்து இன்னைக்கு அவங்க  குடும்ப ஜோசியர் கிட்ட சும்மா ஜாதகம் பார்த்து கல்யாணத்துக்கு நல்ல நாள் பார்க்க போறாங்களாம்.அதுக்கு சொல்ல கூப்பிட்டாங்க”

 

 பார்வதி “ரொம்ப நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க…இருங்க நான் முதல்ல ஏதாவது ஸ்வீட் கொண்டு வரேன்”என்று சமையலறையை நோக்கி அவர் செல்ல சிவராமன் ஒருவித யோசனையுடன் ஆராதனாவை பார்த்தார்.

 

அவர் பார்வையை புரிந்து கொண்டவள் “சொல்லுங்க மாமா…ஏதோ கேட்கணும் நினைக்கிறீங்க”

 

“இல்லம்மா…எனக்கு ஏதோ ஒரு மாதிரி உறுத்தலாக இருக்கு…இதெல்லாம் சரிவருமா பின்னாடி உன்னோட வாழ்க்கைய  நினைச்சா பயமா இருக்கும்மா”

 

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது மாமா.இதுதான் எனக்கான வாழ்க்கை நான் முடிவு பண்ணிட்டேன். இல்லன்னா கடவுள் ஏன்  என்னை இந்த மாதிரி ஒரு சூழ்நிலைக்கு கொண்டு வரணும் சொல்லுங்க… சொல்லப்போனா என்னோட சந்தோஷம் எல்லாம் இங்க தான் எனக்கு திரும்ப கிடைக்க போகுது மாமா”

 

” ஆனால் அதே சந்தோஷம் செழியனுக்கு வரனுமே… ரெண்டு கையையும் தட்டுனாத்தான்  ஓசை வரும்…நேத்து அவர் உன்கிட்ட நல்லவிதமாக நடந்து கிட்டதா நீ சொன்ன பொய்யை அனுராதா நம்பலாம் ஆனா நான் நம்ப தயாராக இல்லை” என்று அவளை பார்த்தபடி கூற 

 

அதைக் கேட்டு தலை குனிந்தவள் பின், நிமிர்ந்து அவரை பார்த்தபடி “பொய்தான் பொய் தான் சொன்னேன்…எனக்கு வேற வழி இல்ல மாமா…நான் ஆட்டத்தில் ராஜாக்கு செக் வைக்க  வேண்டிய இடத்தில்  இருக்கேன்…நான் உண்மையைச் சொல்லி ராதா அம்மா மனசு மாறி  அவங்க தம்பிக்காக இதெல்லாம் வேண்டாம் சொல்லிட்டா…இப்போ சரியா?தப்பா? அப்படி  பார்க்கிற நிலைமையில நான் இல்ல மாமா…என்னோட வாழ்க்கைல யாருமே எனக்கு நியாயம்,அநியாயம் பார்க்கலையே?!?!” 

 

” என்னோட வாழ்க்கையில எனக்கு கிடைச்சிருக்க கடைசி நம்பிக்கை செழியன் மட்டும் தான்…என்னோட ஆசை,பாசம்,அன்பு,சிரிப்பு,அழுகை,கோபம்,வெறுப்பு எல்லாத்துக்கும் வடிகால் அவர் மட்டும் தான்.நானும் ரத்தமும் சதையும் உள்ள மனுஷி தான்…எல்லாரும் மாதிரி  நானும் சந்தோஷமா வாழனும்,மனசுக்குள்ள சின்ன சின்ன ஆசைகள்  இருக்கிற சராசரி மனுஷி” என்று அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்க நிறுத்தினாள்.அவள் படும் கஷ்டத்தை உணர்ந்தவராக அவள் தலையை ஆறுதலாக தடவினார் சிவராமன்.

 

“எல்லாமே ஒரு நாள் சரி ஆகும்…நம்பிக்கை வை மா” என்று சொல்லும் போது கையில் இனிப்பு வகையுடன் வந்தார் பார்வதி.”என்ன ஆச்சு?ஏன் ஆராதனா  ஒரு மாதிரி இருக்கா?” என்று வினவ 

 

சிவராமன் “பின்ன நீ பாட்டுக்கு கிச்சன் போயிட்டா…உன்கிட்ட இருந்து தப்பிக்கத்தான் அவ சமைக்கிறேன் சொன்னா இப்ப மறுபடியும் மாட்டிகிட்டோம் அழுக்குறா அவ்ளோ தான்” என்று சொன்னவுடன் ஆராதனாவுக்கு சிரிப்பு எட்டிப்பார்க்க 

 

“உங்களா…” என்று அவர் மனைவி முறைப்புடன் பார்க்க 

 

“என்னை முறைச்சது போதும்…இப்போ வாயை தொற”  என்று அவரே இனிப்பை எடுத்து பார்வதிக்கும் ஆராதனாவிற்கும் ஊட்டிவிட அவரின் மனமோ  கடவுளிடம் பல வேண்டுதலை வைத்தது.

*******************************

  இதோடு மூன்றாவது முறையாக தன் சொலிகளை உருட்டி விட்டு ஒருவித யோசனையுடன் பஞ்சாங்கத்தையும்  பார்த்துக்கொண்டிருந்தார் அனுராதாவின் ஆஸ்தான குடும்ப ஜோசியர்.

 

 அவர் சொல்லும் வார்த்தைகாக  அவரையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் அனுராதா. அவருக்கு நூற்றுக்கு நூறு பொருத்தம் இல்லாவிட்டாலும் எதிர்மறையாக எதுவும் இல்லை என்றாலே போதும் என்ற எண்ணத்துடன் இருந்தார்.அப்படியே ஏதாவது சின்ன பிரச்சனை இருந்தாலும் பரிகாரம் செய்து கொள்ளலாம் என்று அவரே  நினைத்துக் கொண்டிருந்தார்.

 

அதற்கு நேர்மாறாக யாருக்கு வந்த விருந்தோ என்பது போல தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்ற ரீதியில் தன் மொபைலில் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தான் செழியன்.

 

திவாகர்க்கு இந்தமாதிரியான நம்பிக்கைகள் சுத்தமாக இருப்பதில்லை என்பதால் எதையும் யோசிக்காமல் தன் மனைவியும் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்,அவரின் கையைப் பற்றிக் கொஞ்சம் பொறுமையாக இருக்குமாறு சைகை செய்தார்.

 

ஒருவழியாக அனைத்தையும் பார்த்து முடித்த ஜோசியர் அனைவரையும் பார்க்க, அனுராதா ஆவலாக “என்ன சாமி…எல்லாம் நல்லா இருக்குதானே…நான் ஜாதகம் பெருசா பார்க்கலை… எங்களுக்கு பொண்ணு ரொம்ப புடிச்சு போச்சு…வேற எதுவும் என் மனசுக்கு பொருந்தலை” என்று கூற 

 

அனுராதாவை பார்த்து ஒரு மென் புன்னகையுடன் “அதான் நீங்களே வேற எதுவும் பொருந்தாது சொல்லிட்டீங்களே…ரெண்டு பேரு ஜாதகமும் பொருந்தி போகுது…நீங்க கேட்ட மாதிரி அடுத்த மாசத்துல நல்ல முகூர்த்தம் குறிச்சி தரேன்” 

 

“ரொம்ப சந்தோஷம் சாமி அடுத்த மாசத்துல முதல் முகூர்த்தத்தையே  கொடுங்க”

 

இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த செழியனுக்கு எங்கேயாவது முட்டி கொள்ளலாம் போல் தோன்றியது.தன்னுடைய பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தான்.

 

அனுராதா கேட்டதை போலவே வரும் மாதத்தில் இருந்த முதல் முகூர்த்தத்தை குறித்துக் கொடுத்தவர்,அவர்கள் குடுத்த தஞ்சனையை வாங்கிக் கொண்டு வெளியே செல்ல,அவரை தங்கள் காரிலேயே அனுப்பி விட்டு வருவதாக திவாகர் அவருடன் வெளியே வர, காரில் ஏறுவதற்கு முன் ஜோசியர் அவரை தனியாக அழைத்து “உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”எனக் கூறினார். 

 

“சொல்லுங்க சாமி”

 

 “பொண்ணோட ஜாதகமும் ,செழியன் ஜாதகமும் ஒன்னுக்கொன்னு பொருந்திப் போகுது  தான். ஆனா…” என்று அவர்  இழுக்க 

 

“ஆனா…என்ன சாமி  சொல்லுங்க?”

 

“பொண்ணோட ஜாதகப்படி கல்யாண வாழ்க்கை பொண்ணுக்கு நிலைக்கனும்னா கண்டிப்பா ஒரு உயிரை காவு வாங்கி தான் நிலைக்கும்…அப்படித்தான் ஜாதக கட்டம்  சொல்லுது” என்று அவர் முடிக்க 

 

ஜாதகத்தில் பெரும் நம்பிக்கை இல்லாத திவாகருக்கு இதைக் கேட்டு ஒரு நிமிடம் திகைத்தார். பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு “என்ன சொல்றீங்க சாமி… அப்போ இத முன்னாடியே சொல்லி இருக்க வேண்டியதுதானே” 

 

“அங்க தான் இன்னொரு நல்ல விஷயம் இருக்கு செழியனோட  ஜாதகப்படி இனிமே தான் அவனுக்கு போதாத பெரிய சோதனை காலம்…அவனை இந்த பொல்லாத கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற எல்லா பலனும் பொண்ணு இருக்கு…அதனாலதான் நான் எதுவும் உங்க மனைவிகிட்ட சொல்லலை.கடவுள் மேல நம்பிக்கை வைத்து கல்யாணத்தை நடத்துங்க” என்று கூறியவர் பின் காரில் ஏறி சென்றார்.

 

இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று சுத்தமாகப் புரியவில்லை.அனுராதாவிடம் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வார் என்பதும் தெரியவில்லை.தனக்கு இது போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை என்றாலும் தன் வீட்டிற்கு,தனக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு என்று வரும்போது மனம் கலங்கி குழம்ப தான் செய்தது.

 

கெட்டதிலும் நல்லதாக  செழியனுக்கு இதனால் அவன் கஷ்டத்திலிருந்து பெரிதும் விடுபடுவான் என்றது அவருக்கு  நிம்மதியாக இருந்தது.ஆனால் ஜோசியர் சொன்ன உயிர்பலி என்று எண்ணியபடி வீட்டிற்குள் அவர் வர 

 

முகம் முழுக்க சந்தோஷத்தை பூசிக்கொண்டு யாரிடமோ தன் அலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார் அனுராதா.தம்பியின் கல்யாணம் உறுதி செய்யப்பட்டு தேதி குறிக்கப்பட்டத்தால் அவர் மகிழ்ச்சி கடலில் மூழ்கி இருந்தார்.அதற்கு முற்றிலும் மாறாக எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தான் அவரின் தம்பி.

 

தன்னை  திவாகர் பார்ப்பதை உணர்ந்து அவரை யோசனையுடன் புருவம் உயர்த்தி என்ன என்பது போல் கேட்க,அவரும் மனதில் உள்ள  எதையும் வெளிக்காட்டாமல் ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை  மறுப்பாக ஆட்டினார்.

 

அவருக்கு தெரியாது உயிர்பலி என்றால் அது தங்களுக்கு சம்பந்தப்பட்ட வகையில் இருக்குமோ என்று எண்ணி குழம்ப விதியோ அது பத்து  அடி அருகில் உள்ளவராகவும்  இருக்கலாம் ஆயிரம் மைல் தூரம் உள்ளவராகவும் இருக்கலாம் என்று கட்டம் கட்டியது.

 

 ஆட்டத்தில் செழியனுக்கு செக்-மேட் !!!

 

” யாத்தே இது சரியா இல்ல தவறா

நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி!

ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி

கெட்ட விதி வந்து சிரிக்குதடி

 

ஒ…காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி

 

யாரோ எவளோ யாரோ எவளோ

யார் காட்டுச் சிறுக்கி இவ?

மழை கொடுப்பாளோ?

இடி இடிப்பாளோ?

மாயமாய் போவாளோ? “