kiyaa-18

coverpage-3fca1336

kiyaa-18

கிய்யா – 18

இலக்கியா, அவன் முன் முகத்தில் ஆசையை தேக்கி கொண்டு நின்றாள்.

‘இவ, பிறந்தநாளைக்கு அப்படி என்ன கேட்க போறா? முகத்தில் இவ்வளவு ஆர்வம்? என்னவாக இருந்தாலும், கண்டிப்பா செய்யணும்.’ அவன் உறுதிமொழி எடுத்து கொண்டு, “கேளு, கண்டிப்பா செய்யறேன்.” என்றான்.

“உங்களுக்கு சரியாகுற வரைக்கும் என் வீட்டில் வந்து இருக்கீங்களா அத்தான்?” அவள் அவன் பதிலுக்காக ஆர்வமாக காத்து நின்றாள்.

‘இதில் அப்படி என்ன இருக்கிறது?’ அவன் கண்கள் சுருங்கியது.

“உங்களுக்கு தேவையானதை அங்க செட் பண்ணிக்கலாம். கொஞ்சம் சின்ன வீடு தான். ஆனால், வீட்டுக்குள் எல்லா வசதியும் இருக்கும் அத்தான்.” அவள் குரல் இப்பொழுது சற்று இறங்கியது.

“குருவி கூடு மாதிரி இருக்கிற வீட்டுக்கு இவ்வளவு பில்ட்-அப்” அவன் கேலி போல கூற, அவள் முகம் வாடியது.

“சரி. சரி முகத்தை சுருக்காத. நான் உன் வீட்டில் வந்து இருக்கேன்.” அவன் குரல் அவளை சமாதானம் செய்ய, “தேங்க்ஸ் அத்தான்… தேங்க் யூ ஸோ மச் அத்தான்” அவள் துள்ளி குதித்தாள். அவள் மகிழ்ச்சி அவனுக்கு சற்று விசித்திரமாக இருந்தது.

அவனுக்கு தேவையான ஏற்பாடுகள் மளமளவென்று அரங்கேறின. நிர்மலாதேவி அதிதீவிரமாக எதிர்ப்பு தெரிவித்தார்.

“உங்க மகனை உங்க கிட்ட இருந்து பிரிக்கத்தான் இந்த ஏற்பாடு.” இலக்கியா வேண்டும் என்றே பேசி அவரை கடுப்பேற்றினாள்.

நிர்மலாதேவி தன் எதிர்ப்பை அதிகமாக காட்டினார்.

“அம்மா, அவளை பத்தி தெரியாதா? உங்களை கடுப்பேத்தி பார்குறா அம்மா” விஜயபூபதி சமாதானம் பேசினான்.

“நிர்மலா பிள்ளைகளை அவங்க இஷ்டப்படி விடு.” ரங்கநாதபூபதி கட்டளையாக கூறிவிட்டார்.

பாட்டி தன் பேத்தியை பார்த்து கண்களை சுருக்கினார்.

‘இவ எதுக்கு இப்ப விஜயை தனியா கூட்டிட்டு போறா? ஒன்னும் புரியலையே’ அவர் தன் பேத்தியின் செயலின் அர்த்தம் புரியாமல், அவர்கள் விரும்பும் தனிமையையும் கெடுக்க விரும்பாமல் மௌனித்து கொண்டார்.

ஒரு சில நாளில், அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்தன.

இலக்கியா, திருமணத்திற்கு முன் அவள் வசித்து கொண்டிருந்த அவர்கள் தோட்டத்து வீட்டிற்கு அவனை அழைத்து வந்தாள்.

“அத்தான், தம்பி தனி வீட்டில் அந்த பக்கம் தான் இருப்பான். இந்த வீட்டில், நாம மட்டும் தான் இருக்க போறோம். பாட்டி, அங்க அவங்க மருமக கூடயே செட்டில் ஆகிட்டாங்க.” அவள் வீட்டின் முன் அவனை சக்கர நாற்காலியில் அமர்த்திக்கொண்டு சொற்பொழிவு ஆற்ற, “எனக்கு இதெல்லாம் தெரியாது பாரு” அவன் கூற, அவள் பக்கென்று சிரித்துவிட்டாள்.

“உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்லை. ஆனால், என் வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளிக்கு சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா?” அவள் கூற, ‘விருந்தாளி…’ இப்பொழுது சிரிப்பது அவன் முறையாயிற்று.

“ஒரு நிமிஷம்” கூறிக்கொண்டு உள்ளே ஓடினாள் இலக்கியா. அவனுக்கு ஆரத்தி எடுத்தாள்.

“என்ன என்னை மட்டும் தனியா நிறுத்தி வச்சி ஆரத்தி எடுக்குற, வேற யார் கிட்டயாவது சொல்லி நமக்கு சேர்த்து எடுக்க சொல்லலாம் இல்லையா?” அவன் கேட்க, அவள் ஒரு நொடி அசைவற்று நின்றாள்.

அவள் உடலெங்கும் ஒரு மெல்லிய அதிர்வு. அவன் வார்த்தைகள் அவளை எங்கோ அசைத்து பார்த்தது. தன்னை சரி செய்து கொண்டாள் இலக்கியா.

அவள் முகத்தில் அர்த்தம் பொதிந்த புன்னகை. ‘இவ என்ன யோசிக்குறா?’ அவன் நெற்றி சுருங்கியது.

“நீங்க தானே அத்தான் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம வீட்டுக்கு புதுசா வரீங்க. நான் தான் தினமும் இங்க வரேன்னே. தினமும் நான் இங்க வந்து தான் என் கேக் வேலைகளை செய்யறேன்.” அவன் அவள் வீட்டுக்கு வந்த நொடி, அவளறியாமல் ‘என் வீடு…’ என்ற சொல் ‘நம்’ வீடாக மாறிக்கொண்டது.

விஜயபூபதி உள்ளே வந்ததும் தன் கண்களை சுழலவிட்டான். வீடு சிறியதாக இருந்தது. ஆனால், அதை மிக நேர்த்தியாக இலக்கியா பராமரித்து கொண்டிருக்கிறாள், என்று வீட்டின் ஒவ்வொரு மூளை முடுக்கும் கூறியது.

அவன் அந்த பெரிய வீட்டில் பெரும்பாலான நேரம் தனிமையில் இருப்பான். இலக்கியா, அவ்வப்பொழுது வந்து பேசிவிட்டு, உதவிட்டு சென்றாலும், அங்கு தனிமை சூழ்ந்திருக்கும்.

இங்கு ஒரு அறையில் இருந்து அந்த வீட்டையே பார்த்து கொள்ளலாம். ஒருவர் பேசுவதை மற்றவர் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

மொத்தத்தில், இலக்கியா எப்பொழுதும் அவன் கண் பார்வையில் இருப்பாள். அவனும் அவள் விழிகளில் இருப்பான்.

எதுவும் பேசாமல் அவன் சிந்தனையில் ஆழ, “கிய்யா… கிய்யா…” என்று சத்தம் செய்து கொண்டு குருவி வீட்டிற்குள் பறக்க, அவன் முகம் அசூயை காட்டியது.

“ஐயோ அத்தான், குருவிகள் வந்தது உங்களுக்கு பிடிக்கலையா? நான் வேணுமின்னா, ஜன்னல் கதவை சாத்திட்டு ஏ.சி போடட்டுமா?” தன் சேலையை தன் இடையில் சொருகி கொண்டு ஓடி வந்தாள் இலக்கியா.

அவன் அவளை பார்க்க, அவள் சட்டென்று ஜன்னல் கதவுகளை மூடச் செல்ல, அவன் அவள் கைகளை பிடித்து நிறுத்தினான்.

அந்த பிடி, சற்று அழுத்தமாக இருக்க, அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் முன் இருந்த நாற்காலியை இழுத்து போட சொல்லி அவளை அவன் பக்கத்தில் அமர சொன்னான்.

அவள் கைகளை அவன் கைகளுக்குள் பொதித்து கொண்டான்.

“என்ன ஆச்சு இலக்கியா உனக்கு?” அவன் கேட்க, “ஒண்ணுமில்லையே…” அவள் விழிகளை சிமிட்டினாள்.

“எதுக்கு இந்த பதட்டம்?” அவன் கேட்க, “பதட்டம் எல்லாம் இல்லை. உங்களுக்கு பிடிக்கலையோன்னு…” அவள் இழுக்க, “எனக்கு பிடிக்கலைன்னா மேடம் செய்ய மாட்டீங்களா?” அவன் நக்கலாக கேட்டான்.

அவள் அவனை முறைக்க, “எனக்கு பிடிக்கலைன்னா, ஊருக்கு முந்திக்கிட்டு பண்ணுவ. இப்ப என்ன திடீர் பாசம்?” அவன் பொறுமையாக கேட்டான்.

அவள் பார்வை அவன் கை இருக்கும் இடத்திற்கு சென்றது. ‘அத்தான், இயல்பா தொடுவது உண்டு. ஆனால், இந்த தொடுகை வேற மாதிரி இருக்கே.’ அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் அவன் கைகளை பார்க்க, அவன் கைகளை உருவிக்கொள்ள எத்தனித்தான்.

மனம் அவளிடமிருந்து அவன் கைகளை உருவி கொள்ள சொன்னாலும், அவன் அறிவு, ‘நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?’ அவள் பார்த்ததும் உருவிக் கொள்ளும் அளவுக்கு.

‘என் மனைவியின் கைகளை பிடித்திருக்கிறேன்.’ அவன் சிந்தை அவனை சமாதானம் செய்தது.

‘அத்தான், துர்காவை மறந்துட்டாங்களா?’ அவள் கண்களில் தீவிர யோசனை.

அவன் அவளை சொடக்கிட்டு அழைத்தான்.

“என் மேல என்ன திடீர்ன்னு பாசம். எனக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லைனு தெரிஞ்சி தானே அதை பண்ணின?” கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை என்ற ரீதியில் அவன் வசனம் பேசினான்.

‘ச்… ச்ச… அத்தான் நல்லவங்க. அப்படி எல்லாம் துர்காவை மறக்க மாட்டாங்க.’ தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள்.

“அப்படியே எனக்கு பிடிச்சதை மட்டும் தான் செய்யுற மாதிரி நாடகம் போடுற?” அவன் புருவங்களை உயர்த்த, “அத்தானுகுன்னா செஞ்சிருக்க மாட்டேன்.” அவள் கழுத்தை நொடித்து கொள்ள, “ஓ… அப்படி” அவன் புருவத்தை நெளித்தான்.

“எப்படி?” அவள் புருவத்தை சுருக்கினாள்.

“உன் புருஷனுக்குன்னு செஞ்சிருக்க?” அவன் ஆச்சரியம் காட்ட, “ஹலோ…” அவள் விசுக்கென்று எழுந்தாள்.

“புருஷன்னு சொன்ன உடனே மரியாதையில் எழுந்து நிக்குற?” அவன் கேலியில் இறங்க, அவள் படக்கென்று அமர்ந்தாள்.

அவன், “ஹா… ஹா…” பெருங்குரலில் சிரித்தான்.

“அத்தான், நான் ஒன்னு சொல்லட்டுமா?” அவள் விஷம புன்னகையோடு கேட்க, ‘எதுவோ இடக்குமடக்கா சொல்ல போறா’ கணித்து கொண்டவன் போல் குறும்பாய் தலை அசைத்தான்.

“உங்க அம்மா இல்லைன்னு உங்களுக்கு ரொம்ப தைரியம்.” அவள் கூற, அவன் அவள் காதை திருகினான்.

“விஜய்யபூபதி” அவள் அலற, “பெயரை சொல்லி கூப்பிடாத. அத்தான்னு கூப்பிடு.” அவன் அவளை மிரட்டினான்.

பழைய உற்சாகம் இருவரிடமும்!

“அத்தான்… நொத்தானு எல்லாம் கூப்பிட முடியாது” அவளும் முறுக்கி கொண்டாள். “உனக்கும் உங்க மாமியார் பக்கத்துல இல்லைன்னு ரொம்ப கொழுப்பு ஏறி போச்சு. இரு என் அம்மாவை வர சொல்றேன்.” அவன் அவளை மிரட்ட, “அய்யயோ…” அவள் அலறினாள்.

அவள் அலறலில் அவன் கைகளை எடுக்க, “ஒரு விருந்தாளியை மட்டும் தான் என்னால் சமாளிக்க முடியும். உங்களுக்கும் நம்ம வீட்டில் கொஞ்சம் நாள் தான் இடம். உங்க கால் சரியானதும் காலி பண்ணிட்டு போய்டணும்.” அவள் மிரட்ட, ‘வீட்டை விட்டு போக சொல்வாளா? இல்லை அவள் வாழ்க்கையை விட்டா?’ அவன் மூளை அந்த நொடி சந்தேக பொறியை தட்டியது

* * *

அதே நேரம் துர்கா அவள் அறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

அவள் முகத்தில் நிம்மதி. சற்றுமுன் அரங்கேறிய சம்பவம் அவள் கண்முன் தோன்றியது. அவளை பார்த்து அந்த முதியவர், ‘நீ மட்டும் சரியான நேரத்தில் வந்து எங்களை கூப்பிட்டுட்டு போகலைனா, நான் என் மனைவியை இழந்திருப்பேன்.’ அவர் கையெடுத்து கும்பிட்டு கூறிய பொழுது, தானும் இந்த பிரபஞ்சத்தில் ஏதோவொரு ஓரத்தில் நல்லது பண்ணிருக்கோம் என்ற இதமான உணர்வு அவள் மனதில் பரவியது.

“துர்கா…” குமரனின் அலறலில், “என்ன அப்பா?” அவள் நிதானமாக அவள் அறையில் இருந்து கேட்டாள்.

அவர் அவள் அறைக்குள் நுழைய எத்தனிக்க, “வராதீங்க அப்பா. நான் குவாரன்டைன்ல இருக்கேன்.” என்று அவள் கூற, “எதுக்கு இந்த தேவை இல்லாத காரியம்?” அவர் அறைக்கு வெளியே நின்று கொண்டு வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்.

“எனக்கு பிடிச்சிருக்கு அப்பா.” அவள் பதிலில் தெளிவு இருந்தது.

“உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்” அவரும் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

“நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லவே இல்லை.” அவளும் நேரடியாக பதில் சொன்னாள்.

“காதல் தோல்வின்னு யார் வாழ்க்கையும் முடங்கி போயிடறதில்லை. காதல் தோல்விக்கு பின்னும் வாழ்க்கை இருக்கு” அவர் அழுத்தமாக கூறி தன் மகளுக்கு புரிய வைக்க முயன்றார்.

“நானும், அதையே தான் அப்பா சொல்றேன். காதல் தோல்விக்கு அப்புறம், வாழ்க்கை இருக்கு.” அவள் கூற, “உன் செயல் அப்படி சொல்லலை.” துர்காவின் தாய் கலைச்செல்வி இப்பொழுது கோபமாக கூறினார்.

“ஏன்? ஊர்ல அத்தனை பேர் கொத்துகொத்தா சாகுறாங்க. எத்தனையோ அமைப்புக்கள் பொது சேவை செய்யறாங்க. நானும் என் நண்பர்கள் மூலமா ஒரு சமூக சேவை மையத்தில் சேர்ந்திருக்கேன். மருத்துவமனைக்கு கஷ்டப்படுறவங்களுக்கு நான் என்னால் முடிந்த உதவியை செய்யறேன். என்னால், எத்தனை உயிர் பிழைக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா?” அவள் நிறுத்த, பதில் பேச தெரியாமல் அவள் பெற்றோர் இப்பொழுது விழித்தனர்.

“நான், பூபதி கிட்ட பார்த்திட்டு இருக்கிற இந்த வேலையை கொஞ்ச நாளில் விட போறேன். வேற இடத்தில வேலைக்கு போக போறேன்.” அவள் கூற, “வேலையை விடு. நாங்க கேட்டுட்டு இருக்கிறது உன் வாழ்க்கையை பத்தி. உன் வாழ்க்கை?” இருவரும் ஒரு சேர கேட்டனர்.

“காதல் தோல்விக்கு பின் நிச்சயம் வாழ்க்கை இருக்கு. ஆனால், அதில் கல்யாணம் இருக்கணுமுன்னு அவசியம் இல்லையே” அவள் நிதானமாக கூற, அவள் பெற்றோர் அவளை அதிர்ச்சியாக பார்த்தனர்.

“உன்னால் விஜயபூபதியை மறக்க முடியலை?” அவள் தந்தை இப்பொழுது கேட்க, அவன் பெயர் அவள் முகத்தில் இருந்த நிதானத்தை அசைத்தது.

அவள் மறக்க முயற்சி செய்து முடியாமல் அவளை தவிக்க செய்யும் பெயர் அல்லவா?

தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். சுவரின் மேல் சாய்ந்து நின்றாள். நடுங்கும் உடலை, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவகாசம் எடுத்து கொண்டாள்.

“ஆமா, அப்படியும் சொல்லலாம்” துர்கா பொய்யுரைக்க விரும்பவில்லை.

“நீ இப்படியே இருந்து, அவனை கஷ்டப்படுத்த போற? அவனை குற்ற உணர்சியில் வைத்து அவனை தண்டிக்க போற?” அவள் தந்தை குதர்க்கமாக கேட்க, “அப்பா…” தன் காதுகளை மூடி கொண்டு அலறினாள்.

“நான் ஒரு நாளும் என் பூபதிக்கு எதிராக நினைக்க மாட்டேன்.” அவள் பதட்டத்தில் உரைத்துவிட்டு, “விஜயபூபதிக்கு எதிராக நினைக்க மாட்டேன்.” நிதானமாக கூறினாள் ‘என் பூபதி’ என்ற சொல்லை நிதானமாக ஒதுக்கிவிட்டு.

“அப்ப, யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கும் எல்லாம் மறந்து போகும்” அவர் ஆணையாக கூற, அவரை பார்த்து ஏளனமாக சிரித்தாள் துர்கா.

“பூபதி யாரையோ கல்யாணம் செய்துகிட்டான். அவன் வாழ்க்கையை அழித்தே தீரணும்னு கங்கணம் கட்டிட்டு அலைய, நான் கெட்டவ இல்லை அப்பா. இது சீரியலும் இல்லை. நான் சீரியல் வில்லியும் இல்லை. என் வாழ்க்கை. இது நிதர்சனம்.” அவள் ஆழ மூச்சு எடுத்து கொண்டாள்.

 “அதே நேரம், அவன் நல்லாருக்கணும்னு என் வாழ்க்கையை தியாகம் செய்யற அளவுக்கு நான் ரொம்ப நல்லவளும் இல்லை அப்பா. எனக்கு பிடித்த மாதிரி தான் என் வாழ்க்கை இருக்கும்.”

“துர்கா…” அவள் தாய் அழைக்க, கை உயர்த்தி தன் பேச்சை தொடர்ந்தாள் துர்கா.

“அப்பா, அப்ப நான் சொல்றதை நீங்க கேட்கலை. இப்ப, நீங்க சொல்றதை என்னாலும் கேட்க முடியாது.” அவள் தீர்க்கமாக கூற, “இது நான் உன் பதிலா?” அவர் கேட்க, “சினிமாவில் வர்ற மாதிரி உங்களுக்கு தெரிந்தாலும், இது தான் என் முடிவு.” அவள் புன்னகையோடு கூறிவிட்டு தன் அலைபேசியில் அழைப்பு வர, கடமை அழைக்கிறது என்பது போல் கிளம்பிவிட்டாள் துர்கா.

‘தப்பு பண்ணிட்டமோ? இனி என்ன செய்வது?’ என்று அறியாமல் அவள் பெற்றோர் அவள் செல்லும் பாதையை யோசனையோடு பார்த்து கொண்டிருந்தனர்.

சிறகுகள் விரியும்…

Leave a Reply

error: Content is protected !!