emv1

emv1 copy-ed78f763

emv1

எனை மீட்க வருவாயா! – 1

“நிச்சலனம் – பேரமைதி

எழுதாத வெண்தாளைப்போல

மழைக்குப்பின் வெறித்த வானம்போல

வஞ்சியின் தும்பைபூ மனம்!”

வானம் பார்த்த பூமி அது. பசுமைக்கு ஆங்காங்கு கருவேல மரங்கள்.  செடிகளை வைத்துப் பராமரிக்கும் அளவிற்கு போதிய நீராதாரம் அங்கில்லை.  ஆகையினால் அங்கொன்றும், இங்கொன்றுமாய் மரங்கள், விரல் விட்டு எண்ணுமளவிலேயே இருந்தது. இருந்த மரங்களிலும் இலைக்கு பஞ்சம். அதனால் பசுமைக்கும் பஞ்சமே!

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பலனாய் எப்போது வருமென்றே தெரியாத குழாய் நீர். அதுவே அங்குள்ள சொற்ப மக்களின் தாகம் தணிக்கிறது. அதுவும் சமீபமாகத்தான்.  முன்பெல்லாம் குளத்திலுள்ள நீரை மண்பானையில் ஊற்றி, அதில் தேத்தா விதைபோட்டுத் தெளிய வைத்து குடித்தார்கள் அவ்வூர் மக்கள்.

கிணறுகள் வெட்டினாலும் மிக ஆழத்தில் (உவர்ப்பு)சவருத் தன்மையுள்ள நீரே அப்பகுதியில் கிடைக்கும்.  ஆகையால் கிணற்றுக்கு என செலவழிப்பதில்லை. விவசாயம், ஆடு, மாடு மேய்த்தல், கோழி, வாத்து வளர்த்தல் போன்றவை அங்குள்ளவர்களின் தொழில். மழை பெய்தால் குளம், கண்மாய்களில் பெருகும் நீரைக் கொண்டே விவசாயத்தை மேற்கொள்கின்றனர். சேமித்த நீர் வற்றும்வரை வயல்வெளிகளில் பசுமைக்கு பஞ்சமிருக்காது.

பெரும்பாலும் அக்கிராம மக்கள் நகரத்திற்கு புலம் பெயர்ந்திருக்க, இன்னும் பூர்வீகத்தை விட்டுச் செல்ல மனமின்றி வாழ்கிறார்கள்.

பழமையான ஓட்டு வீடுகள் அதிகம்.  வெளிநாடு சென்றிருக்கும் வீடுகளில் வசதி வந்ததும், கான்க்ரீட் வீடுகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இரவு நேரச் சமையல் மட்டுமே அங்குள்ள வீடுகளில்.  அதையே நீர் ஊற்றி, மறுநாள் பழையதை காலை மற்றும் மதியத்திற்கு வைத்துக் கொள்வார்கள்.

விருந்தாளி வந்தாலோ, விசேசங்கள் என்றாலோ மட்டுமே சமையல் தடபுடலாக இருக்கும்.  இன்னும் பழமை மாறாத ஊர்.

அதிகாலையில் எழுந்து விவசாய வேலைகளைப் பார்த்துவிட்டு, உழைப்பின் களைப்பின்றி, வியர்த்து வந்த மகனை நோக்கி, “ஏய்யா செகனு, சீக்கிரமா போயி குளிச்சிட்டு வந்தா, கஞ்சிய ஊத்திக் குடுத்திட்டு, ஆட்டை வெரட்டிக்கிட்டு போவேன்ல!”

“ம்மா, நீ போறதுன்னா போ.  நானே ஊத்திக் குடிச்சிக்குவேன்” தலையில் கட்டிய துண்டோடு இருந்தவன், அங்கு வைத்திருந்த சில்வர் சோப்பு டப்பாவை எடுத்தவாறு கூறினான்.

நாட்டு வளர்த்தியில், உழைத்து உரமேறிய இறுகிய தசைகள். கருப்பானாலும் களையான முகம். அவனைக் கண்டதும், இரைக்காக வந்தன, அவர்கள் வளர்க்கும் கோழி, வாத்து, ஆடு போன்றவை.  ஜெகன் அவற்றைக் கண்டதும், கையில் எடுத்ததை ஓரமாக வைத்துவிட்டு, இரை வைக்கும் முயற்சியில் இறங்க

“அதுகளுக்கு காலையிலயே இரை வச்சாச்சு, ஆடுகளுக்கு இப்ப எதுவும் வைச்சிராத” காளியம்மாள் பதறினார்.

“….” தாயை கண்டு கொள்ளாமலேயே அவன் மனம்போலக் கவனித்தான்.

சற்று நேரம் கழித்து, “சீக்கிரமா போயி குளிச்சிட்டு வந்தா, கஞ்சிய  ஊத்திக் குடுத்திட்டே போயிருவேன்”

“…”

“லேட்டு பண்ணிறாதே செகனு”

“…”

மகனின் பதில் நீண்டநேரம் இல்லாமல்போகவே, எட்டிப் பார்த்தார் காளியம்மாள்.

மகன் சற்று தொலைவில் உள்ள குளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெரியவே, “ஏன்யா..” கணவரை அழைக்க

“என்னடீ!” திண்ணையில் ஓரமாய் அமர்ந்து பீடியைப் பிடித்தபடியே அலட்சியமாகக் கேட்டார் வீரபெருமாள்.

“அந்தப் பயலுக்கும் வயசு போகுது. வந்து மூணு மாசம் முடிஞ்சிருச்சு.  ஒரு பொண்ணு பாத்து கட்டி வைக்க நினைக்காம, இப்டி விடிஞ்சா, அடைஞ்சா ஊதிக்கிட்டே, குதிர்மேல உக்காந்திருக்க” வீட்டு வாயிலில் நின்றபடி கேட்க

“அவங்கிட்ட பேசிட்டேன்” சாவகாசமாகப் பதிலளித்தார்.

“என்னத்தையா பேசுன!”

“இன்னொரு பயணம் போயிட்டு வந்தாதான் கல்யாணமுன்னு சொல்லிருக்கேன்” புகையை மூக்கால் விட்டபடியே பேசினார்.

“ஒத்துக்கிட்டானா?”

“ஒத்துக்காம எங்க போகப்போறான்”

“எப்ப போகணுமாம்”

“ம்.. இன்னும் பத்து பதினைஞ்சு நாளுல போயிருவான்”

“உனக்கெல்லாம், உங்கப்பன் இந்த வயசுக்கு முந்தியே என்னை முடிச்சு வச்சி, செகன் பிறந்துட்டான்ல!”

“அதுக்கு!”

“அவனை மட்டும் இன்னும் விரட்டிவிட நினைக்கிற!”

“உன்னை மாதிரித்தான உம்மருமவளும் இருப்பா!”

“ஏன் எனக்கென்ன?”

“என்னை கல்யாணங்கட்டி ரெண்டே மாசத்துல வீட்டை விட்டுப் பிரிச்சிக் கூட்டிட்டு வந்திட்டல்ல.  அதேதான வரவளும் செய்வா!”

“அது எப்படி செய்வா? நானும் வரப்போறவளும் ஒன்னா?”

“வேற எப்டீங்கற?”

“அதெதுக்கு இப்ப… எங்கூட வந்ததுல இப்ப என்ன குறைஞ்சிருச்சு!”

“ஆரம்பிக்கிற பாத்தியா!”

“அந்தப் பேச்சை விடுய்யா.  இன்னும் ரெண்டு வருசம் செண்டுதான வருவான்?”

“அதுக்கு என்ன பண்றது?”

“இப்டி பொறுப்பில்லாம பேசாதய்யா” 

“வரவளும் உன்ன மாதிரினா நமக்குத்தான கஷ்டம். அதுக்குத்தான் ஒரு வீடு கட்டிட்டு, அப்புறம் கல்யாணத்தை வச்சிக்கலாங்கறேன். சின்னவன் ஒத்து வரமாட்டீங்கறான்.  இவனை வச்சு சவரட்டனை எதாவது செஞ்சிகிட்டாத்தான் ஆச்சு. நம்ம குடிசையில உள்ள ஓடெல்லாம் வீணாப் போயிருச்சு. ரெண்டு வருசத்துக்கு ஒருக்கா மாத்தினாலும் தாங்கமாட்டுது.  மொத்தமா மாத்தறதுக்கு புது வீடே எடுத்தறலாம்.  இவனுங்களையே இன்னும் எவ்வளவு காலத்துக்கு தொன்னாந்துட்டு நிக்க முடியும்? சொல்லு.  அதுக்குத்தான் யோசிச்சேன்” என்றவர்

அத்தோடு விடாமல்,  “இப்ப இருக்கற ஓட்டு வீட்டைக் காட்டிலாம் பொண்ணு கேக்க முடியாது.  அதான் புதுவீடு கட்டணும்னு பெரியவங்கிட்ட சொல்லியிருக்கேன்.  நீயா போயி எதாவது உளறி, காரியத்த கெடுத்திராதே!”

“தட்டியில தடுத்த வீட்டுக்கே, நானெல்லாம் வாக்கப்பட்டு வரலையா? இந்த ஓட்டு வீட்டுக்கு என்னாங்குறேன்!”

“வீட்டப் பாத்தா வாக்கப்பட்ட, உண்மையச் சொல்லு” சிருங்காரமாய் சிரித்தபடி வீரப்பெருமாள் கேட்க

“உன்னையப் பாத்து…., அப்டியே நான் மயங்கிட்டாலும்…. நினப்புதான்!”

“மயங்காமயாடீ, மாணிக்கமா ரெண்டு மயனுங்களைப் பெத்த!”

“எந்த நேரத்தில என்ன பேச்சுப் பேசிகிட்டிருக்க… புள்ளையில்லாத வீட்டுல, துள்ளிக் குதிச்சானாம் கிழவங்கறது, சரியாவுல இருக்கு”

“நான் கிழவனாடீ?”

“பின்ன, கொஞ்சு குமரனாக்கும்” முகத்தை தோளில் இடித்து கணவனை அலட்சியப்படுத்தியதோடு, “இப்ப இந்த ஓட்டு வீட்டுக்கு என்னாங்குறேன்? இல்லை செகனைப் பாத்து எவளாவது வேணானு சொல்லுவாளா?” பேச்சைத் துவங்க

“போடீ போக்கெத்தவளே.  புரியாம எதாவது பேசாம…”

“இந்த வீட்டைக் காட்டியே, எம்மகனுக்கு வரிசையில பொண்ணை நிப்பாட்டுவேனே!”

“கிழிச்ச…! போடீ கிறுக்குச் சிறுக்கி!  எல்லாம் யோசிச்சுத்தான் பண்ணிருக்கேன்.  ஓட்டவாய வச்சிட்டு, லொடலொடங்காம.. சும்மாயிரு” வீரபெருமாள் கூறவும், வீட்டருகே கேட்ட அரவத்தில் பேச்சை நிறுத்தி காளியம்மாள் எட்டிப் பார்க்க, ஜெகன் வந்து கொண்டிருந்தான்.

அத்தோடு இருவரும் அமைதியாகியிருக்க, துணியை உதறி, காய வைக்கும் முயற்சியில் மகன் இருப்பதை உணர்ந்து, அடுக்களைப் பகுதிக்குள் சென்றார் காளியம்மாள்.

மகனுக்கு, சட்டியில் கஞ்சியையும், சின்ன கிண்ணத்தில் முந்தைய நாள் இரவு செய்த சுண்ட வைத்த மொச்சை பயறுடன் வைத்த கருவாட்டுக் குழம்பையும் கொண்டு வந்து, திண்ணையில் வைத்தபடியே, “என்னைக்குய்யா ஊருக்கு போவணும்”

“ரெண்டு நாள்ல கிளம்பணும்மா” என்றபடியே தனது வேலைகளை முடித்து வந்தவன், கஞ்சியைக் குடிக்க அமர்ந்தான்.

மகனைப் பார்த்தபடியே, “போயிட்டு வந்து எவ்வளவு நாளுல கிளம்பற மாதிரி இருக்கும்”

“பத்து நாள்ல போற மாதிரி இருக்கும்மா”

“இன்னிக்கு டவுனுக்கு போவியா?”

“இல்ல இங்கன பக்கத்துலதான் வேலை”

“டவுனுக்குப் போகும்போது சொல்லு.  நானும் வரேன்”

“ம்” என்றபடியே உண்டு முடித்ததும், அனைத்தையும் எடுத்து கழுவி, வீட்டை ஒதுக்கி வைத்துவிட்டு, ஆடுகளை பத்திக் கொண்டு கிளம்பிவிட்டார் காளியம்மாள்.

ஜெகன், தனது டூவிலரில் கிளம்ப எத்தனிக்க, “சாயந்திரம் எத்தனை மணிக்கு திரும்புவ” வீரபெருமாள்

“என்ன வேணும்?” ஜெகன்

“பீடி தீரப்போவுது”

“இதைக் குடிச்சிட்டே உக்காந்து, ஒரே இடத்தில பொழுதைக் கழிக்கற”

“வேற என்ன செய்யச் சொல்ற.  வயசாகுதுலப்பு”

“எல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்டியா.  நா வந்ததுல இருந்து இப்டிக் குதிருல உக்காந்து ஏமாத்திட்டுருக்கனு”

“பெரிய வார்த்தை பேசாதய்யா”

“பெரிய மனுசங்கனக்காவா நீ நடந்துக்கற”

“…” மகன் தன்னைத் தெரிந்து கொண்டாலும், அதனைப்பற்றிய கிலேசமும் வருத்தமின்றி அமர்ந்திருந்தார்.

மகன்கள் வேலைக்குச் செல்லத் துவங்கியது முதல், பெரும்பாலும் ஓய்வெடுக்கத் துவங்கியிருந்தார் வீரபெருமாள். ஆனாலும், காளியம்மாள் ஜெகன் ஊருக்கு வந்தது முதல் அமைதியாக இருக்கிறார்.  இல்லையெனில் வேலைக்குச் சென்று வந்தால்தான் சாப்பாடு என்றுவிடுவார். வீரபெருமாளுக்கும் அனைத்தும் தெரியும்.  மகன் வெளிநாடு சென்றதும், பழையபடி வேலைக்குச் சென்றே ஆகவேண்டும் என்றாலும், அதற்கான வருத்தமெல்லாம் அவரிடம் இல்லை. கிடைக்கும் தருணத்தை பயன்படுத்திக் கொள்கிறார், அவ்வளவே.

ஜெகன், ஐடிஐயில் எலெக்ட்ரிகல் சார்ந்த டிப்ளமோ படித்து முடித்ததுமே, மின்சாதன கட்டமைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்தான்.  தினக்கூலியாக ஆரம்பத்தில் முந்நூறு எனத் துவங்கி, வெளிநாடு செல்லும்போது ஐநூறு வரை வாங்கினான்.  மழை காலங்களில் தினசரி வருவாய் பொய்த்திட, அதைச் சாக்கிட்டு வெளிநாட்டிற்கு அனுப்ப உத்தேசித்தனர் பெற்றோர்.

கடனை வாங்கி வெளிநாட்டிற்கு அனுப்பிட, கருத்தாய் தனது பணியினைச் செய்து மாதந்தோறும் ஆரம்பத்தில் பத்தாயிரம் எனத் துவங்கி, திரும்பும்போது இருபதாயிரம்வரை பெற்றோருக்கு அனுப்பினான்.

இருவரும் மகன் அனுப்பிய பணத்தைக் கொண்டு, ஜெகனை வெளிநாடு அனுப்ப வாங்கிய கடனை முதலில் அடைத்தனர்.  பிறகு விவசாய நிலங்களை மேலும் விரிவுபடுத்தினர்.  விளைச்சல் ஓரளவிற்கு நன்றாக இருக்கவே, வருடத்திற்கு வேண்டிய, அரிசி, மிளகாய், தனியா, வெங்காயம், பருத்தி, எள்ளு போன்றவற்றை உற்பத்தி செய்து, தங்களது வருடாந்திர தேவைக்குபோக, மீதமுள்ளதை விலைக்கு விற்பர். அதில் வரும் பணத்தை நகையாக மாற்றியிருந்தனர்.

ஆடுகள் அதிகம்.  அதை விசேசங்களின்போது மொத்தமாக விற்பர்.  அதிலிருந்து வரும் வருவாயும், பொன், பொருளாக மாறும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கோழி, சேவல், வாத்து என விற்பதிலும் நல்ல வருவாய்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பைவிட, தற்போது பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தது அக்குடும்பம்.  ஜெகனுக்கு இளையவன் ஒருவன். அருண், சென்னையில் வேலையாக இருந்தான். அடுத்து வரும் காலங்களில் இரண்டு ஆண்பிள்ளைகளது குடும்பம் மற்றும் அவர்கள் இருவரும் இணைந்து வசிக்க ஏதுவாக, அந்த ஊரிலேயே பெரிய வீடு கட்ட உத்தேசித்தார் வீரபெருமாள். 

இளையவனிடம் பெற்றோர் கேட்டதும், “எனக்கு இங்கனைக்குள்ள செட்டாகாது.  வந்தா, போனா ரெண்டு நாளு இருப்பேன்.  அதுக்குமேல இங்க முடியாது.  அதனால வீடெல்லாம் புதுசா எதுக்கு.  இந்த ஓட்டு வீடே போதும்” தாயிடம் மறுத்திட, மூத்த மகன் எதற்கும் மறுக்காதிருக்கவே, அவனைக் கொண்டு சாதித்துக் கொள்ள எண்ணினர்.

……………………………………..

நகரத்தில் அமைந்திருக்கும் இருபாலர் பயிலும் தனியார் கல்லூரி.

மூன்றாவது பருவத் தேர்விற்கான பாடத்திட்டங்களை தற்போதுதான் நடத்தத் துவங்கியிருந்தனர்.

இளஅறிவியல் கணினி இரண்டாமாண்டு வகுப்பறை. 

உதவிப் பேராசிரியர் டேட்டா ஸ்ட்ரக்சர் அண்ட் கம்ப்யூட்டர் அல்காரிதம் பாடத்தில் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார்.

இருபிரிவாக அமர்ந்திருந்த மாணாக்கர்களில், பதினைந்து சதவீதம் மட்டும் சிரத்தையோடு நோட்டுகளில் குறிப்பெடுத்தபடி இருந்தனர்.  நாற்பத்தைந்து சதவீதம் புரிந்தும், புரியாமலும் பலகையில் எழுதி, பேராசிரியர் விளக்குவதையே பார்த்திருந்தனர்.  மீதமுள்ள நாற்பது சதவீதத்தில் அவரவர் சிந்தனையைத் துரத்திக்கொண்டு வேறு இடங்களில் மனதோடு பயணித்திருந்தனர்.

திவ்யதர்ஷினி, முதல் பதினைந்து சதவீதத்தில் ஒருத்தி.  அவளருகே அதே பென்ஞ்சில் அமர்ந்திருந்த அனைவருமே சிரத்தையோடு கவனிப்பதாக பாவணையில் இருந்தனர்.

திவ்யாவின் அருகே இருந்த கயல், “ஒழுங்கா கவனிச்சுட்டு, மேம் போனதும் எனக்கு திரும்ப எக்ஸ்பிளைன் பண்ற” பேராசிரியர் பலகையில் எழுதும் வேளையில் திவ்யாவிடம் கிசுகிசுத்தாள்.

“…” சத்தம் வராமல் உதட்டில் விரல் வைத்து அமைதியாகக் கவனி என எதிரில் நின்றிருந்த பேராசிரியரைக் காட்டி சைகையிலேயே கூறினாள் திவ்யா.

அதேநேரம் ஆடவர்களின் புறம் சின்ன சலசலப்பு.

“வாட்ஸ் ஹேப்பனிங்க் தேர்” என்றபடியே பேராசிரியர் திரும்பி ஆடவர் புறத்தினை நோக்கிக் கேட்க, தாங்கள் சத்தமே எழுப்பவில்லை என்பதுபோல கவனிப்பதான தோற்றத்தை உண்டுசெய்து, அமைதியாக இருந்தனர்.

“டூ யு ஹேவ் எனி டவுட்?” இருபுறத்திலும் பார்வையை செலுத்திவிட்டு, ஆண்களின் பக்கம் மீண்டும் திரும்ப, யாரும் எதுவும் பதில் பேசவில்லை.

“யு வில் ஹேவ் டு கேர்ஃபுல்லி லிசன் இட் ஃப்பிரம் தி பிகினிங் டு எண்ட். இஃப் நாட், திஸ் சப்ஜெக்ட் வில் பி வெரி டிஃபிகல்ட் டூ யூ” பாடத்தின் தன்மையைப் பற்றிக் கூறிவிட்டு, மீண்டும் அவர் விட்ட நிலையிலிருந்து விளக்கத் துவங்கியிருந்தார்.

வகுப்பெடுப்பதற்கான கால அவகாசம் நிறைவடைய, பேராசிரியர் கிளம்பி வாயிலைத் தாண்டியதும், வகுப்பில் சலசலப்பு சிறிது சிறிதாக மேலெழுந்தது.

காலை வகுப்புகளுக்கு இடையேயான இடைவேளை நேரம். ஆகையால் கல்லூரி வளாகத்தினுள் இருக்கும் கேண்டீனை நோக்கி சிலர் வெளியே போவதும், வருவதுமாய் இருந்தனர்.

திவ்யா மட்டும் தனது புத்தகத்தை எடுத்து பேராசிரியர் நடத்திய பகுதியினை மனதிற்குள் வாசித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். முதலாமாண்டின் இரண்டு பருவத் தேர்வுகளிலும், எண்பது சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தாள்.

கயல் அதுவரை தனக்கு இடதுபக்கமாக இருந்தவளிடம் பேசியபடி, எடுத்து வந்த திண்பண்டத்தை பங்கு வைத்து, தானும் உண்டபின் திரும்பினாள்.

திவ்யா பெரும்பாலும் எதையும் எடுத்து வரவும் மாட்டாள்.  அதேசமயம் யார் கொடுத்தாலும், எதுவும் வாங்கி உண்ண மாட்டாள்.   திவ்யாவை நோக்க, அவள் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, “படிச்சுப் பாத்திட்டினா, எனக்கு எக்ஸ்பிளைன் பண்ணு திவ்யா”

“மேம்தான் நல்லா தெளிவா எடுத்தாங்களே.  அப்பவே கவனிக்கறதுக்கென்ன?”

“என்னவோ தெரியலைடீ.  நீ சொல்றது டக்குனு புரியுது.  மேம் சொல்றது பாதி புரிஞ்சு, மீதி புரிய மாட்டுது” நமுட்டுத்தனமாகச் சிரிக்க

திவ்யா அடுத்த வகுப்பு துவங்கும்வரை கயலுக்கு அப்பாடம் பற்றி விளக்கத் துவங்கினாள்.

பேராசிரியர் அவரின் நிலையில், கற்றுணர்ந்ததை உலகளாவிய சில எடுத்துக்காட்டுகளோடு ஆங்கிலத்தில் விளக்கினால், திவ்யா நடைமுறையில் உள்ள சில விசயங்களைக் கொண்டு தமிழில் எளிமையாகப் புரியும்படி கயலுக்கு விளக்குவாள். அதனால்தான் கயல் எப்போதும் திவ்யாவை நச்சரித்து காரியம் சாதிப்பது.

வகுப்பறை வாசலில் அந்நேரம் புதியதாய் ஒருவன் வந்து நிற்க, சலசலப்பு சட்டென அடங்கியது. அனைவரது பார்வையும் வாசலிலேயே இருக்க, “இது செகண்ட் சிஎஸ்தான” வந்தவன் கேட்க

மாணவர்களில் ஒருவன் எழுந்து வந்தவனை நோக்கிச் சென்று, சில  நிமிடப் பேச்சுகளுக்குப்பின் புதியவனுடன் கைகுலுக்கல் நிகழ்ந்தது.  அதன்பின் தோளோடு அரவணைத்தபடியே புதியவனை வகுப்பினுள்ளே அழைத்து வந்தான்.

புதியவன் உட்கார ஏதுவாய் இடம் பார்க்க, ‘இங்க வாங்க புரோ’ ‘இங்க வா மச்சான்’ என அழைப்புகள் தொடர்ந்தது. சிலர் அமைதியாய் நடப்பதைப் பார்த்திருந்தார்கள்.

அனைவரிடமும் இன்முகத்தோடு நன்றியுரைத்தவன், முதல் பென்ஞ்சில் அமருவதாகக் கூறிட, அங்கிருந்தவர்கள் தயை புரிந்தனர்.

ஒவ்வொருவராக புதியவனிடம் சென்று அவனைப்பற்றிய விசாரிப்புகளுக்குப்பின், ஆண்களின் ரெப்ரெசன்டேடிவ் வினோத் எழுந்து முன்வந்து, “கிருபா, லேட்டரல் நியூ அட்மிசன் ஸ்டூடன்ட்” புதியவனை முறையாக அறிமுகம் செய்திட, கோரசாக “வெல்கம் கிருபா” இருபக்கமும் வரவேற்பு சத்தம் பலமாகக் கேட்டது.

அந்த நேரத்திலும் ஒருத்தி, எதிலும் ஈடுபாடின்றி கடனே என புத்தகத்தோடு மூழ்கியிருந்தாள்.

கிருபா முன்வந்து, அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்திட, “அட்மிசனானதுக்கு ட்ரீட் தந்திரு கிருபா” ஆண்களின் புறமிருந்து ஒருமித்த சத்தமாக எழுந்திட,  அதேநேரம் பெண்கள் புறமிருந்தும் அதை ஆமோதித்து சத்தம் எழுந்தது.

“கண்டிப்பா, எப்ப எங்கனாலும் எனக்கு ஓகேதான்” பெருந்தன்மையாய் இதழில் நகைப்போடு இனிமையான உணர்வு தாக்க புதியவன் கூறிட

“ஓஓ….. ஓ” குதூகலமான சத்தம் அறையெங்கும் வியாபித்தது. விரைவில் லிஸ்ட் ரெடி செய்ய வேண்டி,  யாருக்கு என்ன வேண்டுமெனக் கேட்டதுமே, வள்ளலாக பேனா, பேப்பர் என ஒவ்வொருவராக எடுத்து நீட்ட, அட்டெண்டன்ஸ் ஆர்டரில் அனைவரின் பெயரையும் எழுதி, அதற்குநேரே அவரவர் வேண்டுவது என்ன என்பதையும் உடனே குறிப்பிட்டு, ஏழே நிமிடத்தில் கிருபாவின் கையில் லிஸ்ட் ஒப்படைக்கப்பட்டது.

கிருபா அதை கையில் பெற்றுக்கொண்டு, குறிப்பிட்டுள்ளதை ஒவ்வொன்றாக பார்வையிட, அடுத்த வகுப்பிற்கான பேராசிரியர் வந்ததும், சலசலப்பு நின்று அமைதியாயிருந்தது வகுப்பு.

அனைத்திற்கும் இடையில் ஒருத்தியின் ஒதுக்கம், ஒருவனால் கண்டுகொள்ளப்பட்டிருந்தது.

…………………………………………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!