kiyaa-19

kiyaa-19
கிய்யா – 19
விஜயபூபதி, இலக்கியா வீட்டிற்கு வந்த மறுநாள் காலை பொழுது. அவனுக்கு விழிப்பு வந்திருந்தது. இலக்கியா தன் வேலைகளை ஐந்து மணிக்கே ஆரம்பித்திருப்பாள் போலும்.
அவள் அங்குமிங்கும் நடக்கும் சத்தம் அவனுக்கு கேட்டு கொண்டு தான் இருந்தது. கொஞ்சம் நேரத்தில் அவன் நாற்காலிக்கு மாற்றப்பட்டான்.
இலக்கியா தலைக்கு குளித்து நீர் சொட்டச்சொட்ட தலை விரித்து முடியின் கீழே ஒரு சின்ன முடிச்சு போட்டிருந்தாள்.
மஞ்சள் நிற சேலை. சற்று அவள் உடல் வாகை அழகாக காட்டியது.
தலையில் இருந்து விழுந்த நீர்த்துளிகள் அந்த சேலையை தாண்டியும் அவள் தேகத்தை வஞ்சனை இல்லாமல் எடுப்பாய் காட்டியது.
ஒரு காலை மடக்கி, இரட்டை கம்பியில் கம்பித்தாமரை கோலமிட்டாள். பளீச்சென்ற வெள்ளை நிறத்தில் அந்த கோலமிருக்க, “எப்படி உன் கோலமாவு மட்டும் இவ்வளவு பளிச்சுன்னு இருக்கு?” பார்வையை அவளிடமிருந்து விலக்கி கோலத்தை பார்த்தபடி அவன் கேள்வியை தொடுத்தான்.
“அது போடுறவங்க மனசை பொறுத்து கோலமாவு கலர் மாறும்.” அவள் குறும்பாய் தலை அசைக்க, அருகே இருந்த சின்ன பொருளை அவள் மீது வீசி, “பொய்… வாயை திறந்தாலே வர்றதெல்லாம் பொய்.” அவன் விளையாட்டாக கோபித்து கொண்டான்.
“அத்தான், பொய் இல்லை. நான் நிரூபிக்கட்டுமா?” என்று அவள் கேட்க, ‘சொல்…’ என்பது போல் அவன் செய்கை காட்டினான்.
“அரிசி மாவில் கோலம் போட்டால் கோலம் வெள்ளையா பளிச்சுனு இருக்கும். நான் கோலம் போடுறதுக்கு ஏதுவா அதை அரைத்து வைப்பேன். குருவிகள் என் கோலமாவை சாப்பிடும் தெரியுமா? எறும்பும் சாப்பிடும் தெரியுமா? நான் நமக்கு காபி, டீ போடுறதுக்கு முன்னாடி அவங்களுக்கு சாப்பாடு போடுறேன். என் நல்ல மனசுக்கு கோலம் பளிச்சுன்னு இருக்கு. எப்புடி?” அவள் இல்லாத, சட்டை காலரை தூக்கி விட்டு கொண்டாள்.
“எதையும் நீ நேரடியா சொல்ல மாட்டியா?” அவன் முகம் சுளிக்க, “அதுல என்ன சுவாரசியம் இருக்கு அத்தான்?” அவள் புருவத்தை உயர்த்தினான்.
“அத்தான், கடவுளும் இப்படி தான். எல்லாத்தையும் இப்படி நேரடியா கொடுத்துட்டா, நம்ம வாழ்க்கையில் சுவாரஸ்யமே இருக்காதே. அதனால் தான் அவர் நம்ம வாழ்க்கையில் விளையாடி பார்க்கிறார். நம்மளால சமாளிக்க முடியுற அளவுக்கு தான் விளையாடுவார் அத்தான். நம்ம, பலம் அவருக்கு தெரியும். நமக்கு தான் தெரியறதில்லை.” அவள் கருத்துக்களை அள்ளி வீசினாள்.
“காலங்காத்தால கிளாஸ் எடுக்காம, எனக்கு குடிக்க ஏதாவது குடு” என்று அவன் கூற, அவள் சமையலறைக்குள் சென்றாள்.
“கிய்யா… கிய்யா…” என்று சத்தம் எழுப்பிக்கொண்டு, குருவிகள் பறக்க, “இதோ வரேன். அத்தானுக்கு டீ தான் பிடிக்கும். அத்தானுக்கு டீ போட்டு குடுத்துட்டு வரேன்” அவள் குருவிகளோடு பேசினாள்.
‘இவளுக்கு இந்த குருவி தான் துணையா?’ என்பது போல அவளை பார்த்தான்.
“பிசினெஸ் பத்தி என்ன யோசிச்சிருக்கீங்க?” அவள் கேட்க, “நிறைய ஐடியாஸ் இருக்கு இலக்கியா. வா, நாம உட்கார்ந்து பேசுவோம்.” அவன் கூற, “இதோ கொஞ்ச நேரத்தில் நான் சமையலை முடிச்சிட்டு வந்துடறேன்.” அவள் கூற, அவன் சம்மதமாக தலை அசைத்தான்.
அவள் தன் வேலைகளை முடித்துவிட்டு அவன் அருகே சென்றாள். அவன் கவனம் வேலையில் இருந்தாலும், அவள் இருப்பை அவன் மனது உணர்ந்து கொண்டே இருந்தது.
“என்ன ஐடியா அத்தான்?” அவள் கேட்டு கொண்டே தன் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
அவள் கைகள் கேக்கிற்கு தேவையானவற்றை கலக்கி கொண்டிருக்க, அவள் கவனம் அவனிடம் இருந்தது.
“சினிமா தியேட்டர் இன்னும் கொஞ்சம் நாளைக்கு ஓபன் பண்ண மாட்டாங்க இலக்கியா. மாலும் கஷ்டம் தான்னு நினைக்குறேன். நாம இப்ப மாத்தி யோசிக்கணும்.” அவன் கூற, அவள் முகத்தில் தீவிரம்.
“உங்களால, முடியும் அத்தான். என்னால் முடிந்ததை நான் செய்யறேன். நான் என்ன பண்ணணும்முனு சொல்லுங்க.” அவள் ஆர்வமாக கேட்டாள்.
“இது தான் எள்ளுன்னா எண்ணையா இருக்கிறதா?” அவன் கேலி செய்ய, “ஐயோ, எள்ளுன்னா எண்ணையா இருந்தா செவிடுன்னு சொல்லிருவாங்க. எள்ளுன்னா, எள்ளாகத்தான் இருக்கணும்.” அவள் அப்பாவியாக கண்களை விரித்தாள்.
“வாய்… வாய்…” அவன் அவளை முறைத்து கொண்டான்.
“நீங்க சொல்லுங்க. எதுக்கு தேவையில்லாத பேச்சு” அவள் கூற, அவன் தன் திட்டங்களை தொடர்ந்தான்.
“மால் ஓபன் பண்ண முடியாது. ஆனால், அந்த கடைகளில் இருந்து ஆன்லைன் ஷாப்பிங் பண்ண வழி பண்ண முடியும். டெல்விரி பண்ணறதுக்கு முதலில் கஷ்டப்பட்டாலும், நாம பழகிடுவோம். அப்புறம், குழந்தைகளுக்கு நம்ம மாலில் இருந்து குட்டி குட்டி கேம் ஷோஸ், வீடியோ எல்லாம் போடுவோம். நாம் வீட்டில் கூட ஷூட் செய்து, அனிமேட் செய்து போடுவோம். அதை ஷாப்பிங்க்கு இடையில் போட வைக்கணும்.” அவன் தீவிரமாக கூறினான்.
“சூப்பர் அத்தான். அப்படியே அந்த நேரம் குழந்தைகள் விளையாட்டு பொருளுக்கு விளம்பரம் கொடுப்போம். லேடீஸ் எல்லாரையும் கவர மாதிரி கிட்சேன் ஐட்டம்ஸ், சமையல் புக்ஸ் எல்லாத்துக்கும் விளம்பரம் கொடுத்து, ஒவ்வொரு கடையையும் லிங்க் பண்ணி விடுவோம்.” அவள் ஆர்வமாக தன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டாள்.
“கடையில் வியாபாரம் நடக்க ஆரம்பித்தாலே, ஒரு மாற்றம் வரும்.” அவன் குரலில் நம்பிக்கை வந்திருந்தது.
“அது சரி தான்.” அவள் பேச்சினோடே கேக் தயார் செய்திருந்தாள்.
அதை ஆற வைத்து விட்டு அவள் மீண்டும் மாவு பிசைய, “என்ன பண்ணற?” அவன் அவளிடம் ஆர்வமாக கேட்டான்.
“குக்கீஸ் அத்தான்.” அவள் கவனமாய், வெண்ணையில் மாவு சேர்த்து, கொஞ்சம் பால் விட்டு அதன் பதத்தை சரி பார்த்து கொண்டே, “தியேட்டர் என்ன செய்யறது அத்தான்?” அவள் தன் சந்தேகத்தை கேட்டாள்.
“ஒரு சில விஷயங்களை ஒன்னும் செய்ய முடியாது. ஆனால், சில இடங்களை கொஞ்சம் சரி செய்து ஷூட்டிங் செட் போட சொல்லிருக்கேன். இப்ப எல்லாரும் வெளியூர் ஷூட்டிங் போக முடியறதில்லை. நாம செட் போட்டா, அதுல கொஞ்சம் பணம் வரும். வரும் காலத்தில் அதை பிக்னிக் ஸ்பாட் மாதிரி மாத்திடலாம்.” அவன் கூற, “சரியா வருமா? செலவு ஆகுமே” அவள் கண்களில் அத்தனை திருப்தி இல்லை.
“படுக்கையில் இருக்க அத்தானால் முடியாதுன்னு நினைக்குறியா?” அவன் புருவத்தை உயர்த்தினான்.
அவள் புன்னகையோடு மறுப்பாக தலை அசைத்தாள். “நாளைக்கு நீங்க எழுந்து நடக்கும் பொழுது, இதனால் உங்களுக்கு எந்த கஷ்டமும் வந்திற கூடாதேன்னு யோசிச்சேன் அத்தான்.” அவள் கூற, அவனும் சிரித்து கொண்டான்.
“நான் எழுந்து நடக்க ஆரம்பிச்சதும், எந்த பிரச்சனையும் வராது.” அவன் குரலில் அத்தனை நம்பிக்கை. பாவம், அவனறியவில்லை, அவள் தான் பிரச்சனையாக மாற போகிறாள் என்று.
“கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் இப்பொழுது உள்ளே நுழைய, அவள் அதற்கு உணவிட்டாள்.
அவர்கள் நேரம் சற்று அழகாக நட்போடு நகர்ந்தது. அவள் பேச்சும், கிய்யா கிய்யா சத்தமும், இடம் மாறுதலும் அவனுக்கு பிடித்திருந்தது. அவ்வப்பொழுது வீட்டு பெரியவர்களும் வந்து இவனை பார்த்துவிட்டு செல்லும் வழக்கத்தை வைத்திருந்தனர்.
மாதங்கள் அதன் போக்கில் அழகாக நகர்ந்தன.
அன்று காலை, விஜயபூபதியின் முகத்தில் தீவிர சிந்தனை ரேகைகள். இலக்கியா, வழமை போல் அவன் முன் நிற்க, அவன் இவனை கவனிக்கவில்லை.
“அத்தான்…” அவள் தேனாய் அழைக்க, “எதுக்கு இப்ப இப்படி கூப்பிட்டு என்னை சுத்தி சுத்தி வர?” அவன் வார்த்தைகளை கடித்து துப்பினான்.
அவள் முகம் வாடி விட்டது. “நாளைக்கு எனக்கு ஏதாவது ஆகிருச்சுனா என்ன பண்ணுவ?” அவன் கேள்வி தெறித்து விழுந்தது .
“இல்லை, எனக்கு நடையே வரலைனா? காலம் முழுக்க என்னை இப்படி நீ பார்த்துப்பியா?” அவன் கடுப்பில் கத்தினான்.
‘ஓ! இது தான் பிரச்சனையா?’ அவள் சுதாரித்து கொண்டாள்.
“நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்தீங்க? இன்னைக்கு என்ன டென்ஷன். நாளைக்கு ஆப்ரேஷன் நினைச்சி பயப்படுறீங்களா?” அவள் தன்மையாக கேட்க, “ஆப்பரேஷன் நினைச்சி எனக்கு பயம் இல்லை. உன்னை நினைத்து தான் எனக்கு கவலை. உன்னை நினைத்து தான் எனக்கு பயம். எனக்கு ஏதாவது ஆகிருச்சுனா” அவன் கூற, அவள் அவன் வாயை மூடினாள்.
“உங்களுக்கு ஒன்னும் ஆகாது.” அவள் நம்பிக்கையோடு கூற, “நான் இன்டெர்ன்ட்டில்….” அவன் ஆரம்பிக்க, “இன்டெர்ன்ட்டில் பிரௌஸ் பண்ணீங்களா?” அவள் கோபமாக கேட்டாள்.
“ஒரு வேனக்கட்டிக்கு அவன் கேன்சர் வரைக்கும் போட்டிருப்பான். முட்டாள்கள் தான் இப்படி எதையாவது அரைகுறையா படிச்சிட்டு பயப்படும்” அவள் குரலை உயர்த்த, “நீ கூப்பிட்டேன்னு குருவி கூடு மாதிரி இருக்கிற உன் வீட்டில் வந்து இருந்தேன் பாரு. என்னை முட்டாள்ன்னு தான் நீ சொல்லுவ” அவன் கூற, அவள் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.
இத்தனை நாள் அவள் பார்த்து கொண்டதும், அவன் காட்டிய அன்பும், நட்புக்கரமும் அவனின் ஒரு சொல்லில் காணாமல் போன உணர்வு அவளுள். படக்கென்று எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.
‘இத்தனை நாட்கள், அத்தான் இங்கு வசதியா இல்லையா?’ அவள் மனம் வருந்தினாள்.
அவர்களுக்கு இடையே சற்று கனமான மௌனம். அவள் எதுவும் பேசாமல், தன் வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்தாள். ‘இன்னைக்கு ஆர்டர் கொடுக்கணும்.’ அவள் கைகள் வேகமாக இயங்கி கொண்டு இருந்தது.
நொடிகளில் ஆரம்பித்த அந்த மௌனம், நிமிடங்களில் பயணித்து, மணி துளிகளாய் நீடித்தது.
அவனுக்கு இந்த வெறுமை பிடிக்கவில்லை. சில மாதங்களாக அவளோடே பேசிக்கொண்டு, சிரித்து கொண்டு அவன் பழகிவிட்டான்.
‘எப்படியும் என் முன்னாடி நின்னு தானே வேலை பார்ப்பா? திமிர் பிடித்தவள், ஒரு வாரத்தை சொன்னால் போய்டுவா.’ அவன் கோபமாக படுத்திருந்தான்.
‘அத்தான், ஏதோ ஆபரேஷன் டென்ஷன்ல பேசிட்டாங்க.’ அவள் அறிவு அவனுக்கு வக்காலத்து வாங்கியது. ‘கூப்பிட்டு சமாதானம் செய்தால் என்னவாம்?’ அவள் மனம் போர்க்கொடி தூக்கியது.
அவளை அழைக்க மனமில்லாமல், அழைக்காமல் இருக்கவும் முடியாமல் அவன் மனம் பரிதவித்தவித்து.
அப்பொழுது குருவிகள் வீட்டுக்குள் பறந்து செல்ல, அவனுக்கு அப்படியொரு யோசனை தோன்றியது. தன் அலைபேசியில் முன்பு பதிந்து வைத்திருந்த, “கிய்யா… கிய்யா…” சத்தத்தை ஒலிக்க செய்தான்.
அவள் கால்கள் தன்னைப்போல் அவன் அறைக்கு வந்தன. ‘இப்ப குருவிக்கு சாப்பாடு போடுற நேரமில்லையே?’ அவள் விழிகளில் சந்தேகம். அவன் எதுவும் அறியாதவன் போல் கண்களை மூடி கொண்டான்.
அவள் மீண்டும் வேலையை தொடர, அவன் “கிய்யா… கிய்யா…” சத்தத்தை மீண்டும் ஒலிக்க செய்தான். அவள் கால்கள் அவன் இருக்கும் அறைக்குள் மீண்டும் சென்றன. அவன் விழி மூடி படுத்திருந்தான்.
அவளுள் சந்தேக பொறி தட்டியது. எதுவும் பேசாமல், சமையலறைக்கு வந்தாள்.
‘அத்தானுக்கு ஏதாவது வேணுமோ?’ அவள் மனம் கோபம் மறைந்து, அவனுக்காக சிந்தித்தது.
அடுத்த முறை “கிய்யா… கிய்யா…” என்ற சத்தம் எழும்ப, அவள் பதறிக்கொண்டு ஓடினாள். அவள் ஓடி வந்த வேகத்தில், அவன் அவளை பார்த்தான். அவள் கண்களில் தெரிந்த அக்கறையில், அன்பில் அவன் நெகிழ அவள் கண்களில் அதையும் தாண்டி தெரிந்த ஏதோவொன்று! அந்த உணர்வில் அவன் கட்டுண்டு போனான்.
“இதுக்கு முன்னாடி உங்க வீட்டில் இருக்கும் பொழுது, நீங்க இப்படி கிய்யா… கிய்யான்னு சத்தம் வர வச்சீங்க தானே?” அவள் அது தான் முக்கியம் என்பது போல கேட்க, “நீ அந்த சத்தத்துக்கு தானே வர? இனி உன்னை அப்படியே கூப்பிடலாமுன்னு இருக்கேன்.” அவன் அவள் கண்களை பார்த்தடி கூறினான்.
‘இவள் கண்களில் இப்பொழுது எதுவும் இல்லை. ஆனால், அவளை அழைத்த நொடி, அவன் வேகமாக இங்கு வந்த நொடியில் அவள் பார்வையில்…’ அவன் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தான்.
“உங்களுக்கு தான் என் வீடு பிடிக்கலையே.” அவள் முறுக்கி கொள்ள, அவள் கைபிடித்து அவளை அவன் அருகே அமர செய்தான்.
“நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லையே” அவன் கூற, “நீங்க சொன்னதுக்கு அது தான் அர்த்தம்.” அவள் கோபித்துக்கொண்டாள்.
“சாரி…” அவன் இறங்க, “ஐயோ… அத்தான். இது என்ன?” அவள் பதறினாள்.
அவள் எழுந்து செல்ல எத்தனிக்க, அவன் அவளை அவனோடு இருத்தி கொண்டான்.
“இங்க வந்து வேலை பாரு.” அவன் குரலில் மெல்லிய அழைப்பு. அவள் அருகாமைக்கான பரிதவிப்பு.
அவன் குரல் ஏதோ ஒன்றை கூற, ‘இன்னைக்கு அத்தான் சரி இல்லை.’ அவள் அறிவு எச்சரித்தது.
“அத்தான், நாளைக்கு எல்லாம் நல்லதா நடக்கும். ” அவன் தலை கோதி அவள் கூற, “ம்…” அவன் தலை அசைத்து கொண்டான்.
“நான்என் வேலைக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்திட்டு வரேன்.” கூறிக்கொண்டு அனைத்தையும் எடுத்து வந்து அவன் அருகாமையில் அமர்ந்து கொண்டாள்.
அவள் க்ரீம் செய்ய, அவனும் அவளோடு இணைந்து கொண்டான்.
க்ரீமால் பூக்களிட, “அத்தான், அப்படி இல்லை நான் சொல்லி தரேன்.” அவள் பின்னோடு அவன் கைகளை பிடித்து பூக்களிட கற்று கொடுத்தாள்.
அவள் கன்னங்கள் அதன் மென்மையை அவனுக்கு உணர்த்திட அவள் கைகள் அதன் லாவகத்தை அவனுக்கு உணர்த்தி கொண்டு இருந்தது.
குட்டி குட்டி பூவாக அடுக்கப்பட்ட பிங்க் நிற பார்பி கேக்கை அவள் செய்து முடித்திருந்தாள். இல்லை, அவர்கள் செய்து முடித்திருந்தார்கள். அவள் விலகி செல்ல, அவன் அவள் கைகளை பிடித்து நிறுத்தினான்.
அவனுக்கு அவள் அருகாமை இன்று பெருத்த பலமாக தோன்றியது. அத்தான், குக்கீஸ், ஐஸ் க்ரீம் இப்படி நிறைய பண்ணனும்.
“நான் எல்லாம் எடுத்துட்டு இங்க வரேன்.” அவள் கூற, அவன் தலை அசைத்தான். அவள் ஸ்பரிசம், அவனை வருடி சென்றது. அரங்கேறும் மாற்றங்களை இருவரும் அறியவில்லை.
“என்ன பண்ற?” அவன் கண்களை விரிக்க, “இன்னக்கி பிங் தீம் பர்த்டே பார்ட்டி. அதுவும் அந்த குழந்தைக்கு பார்பீ ரொம்ப பிடிக்குமாம். அதனால், பார்பீ கேக், பார்பி குக்கிஸ், பிங்க் மஃப்பின்ஸ், பிங்க் ஐஸ் கிரீம்…” அவள் அடுக்கி கொண்டே போனாள்.
“எல்லாம் நீயே செய்யறீயா?” அவள் இத்தனை நாள் செய்றதை பார்த்திருந்தாலும், அவன் மொத்த பொருள்களையும் பார்த்ததில்லை.
“அத்தான், நான் செய்றது மட்டுமில்லை. நம்ம கிட்ட என்ன ஸ்பஷல்ன்னா மைதா இல்லாமல் செய்வேன், எதிலும் முட்டை சேர்க்க மாட்டேன். எப்படி செய்யறதுன்னு கத்துக்கிட்டா போதும். அப்புறம் நம்ம மூளையில் கற்பனை திறனை தட்டிவிட வேண்டியது தான்.” அவள் கூற, அவன் அவள் செய்வதை பார்த்து கொண்டிருந்தான்.
அவள் பார்பி வடிவத்தில் வெட்ட எத்தனிக்க, “குக்கீஸ், நான் கட் பண்றேன்.” அவன் அவளிடம் வாங்கி செய்ய, அவளும் அவனுக்கு வாகாக பிடித்து கற்று கொடுத்தாள்.
“அத்தான், உங்களுக்கு இந்த வீடு கஷ்டமா இருந்ததா? நான் உங்களை இங்க இருக்க வச்சி கஷ்டப்படுத்திட்டேனா?” அவள் குரலில் வருத்தம் இருக்க, அவன் அவளை இழுத்து தன்னோடு சேர்த்து கொண்டான்.
“லூசு… நான் ஏதோவொரு டென்ஷன்ல, அப்படி சொல்லிட்டேன்.” அவன் கூற, “அங்க வீடு பெருசு, நீங்க எங்கையோ நான் எங்கையோ இருக்கிற மாதிரி இருக்கும். இங்க இந்த வீடு குருவி கூடு மாதிரி இருந்தாலும், நாம பக்கத்தில் இருக்கிற மாதிரி இருக்கும். உங்களுக்கு தனிமை தெரிய கூடாதுனு.” அவள் அவன் தோள் மீது சாய்ந்து கொண்டு கூற, அவன் கைகள் அவளை ஆறுதலாக தட்டி கொடுத்தது.
“இது தான் அந்த கிய்யா… கிய்யா மேஜிக்கா? மக்களை பக்கத்துலயே வச்சிக்குற மேஜிக்?” அவன் கேட்க, “…” அவளிடம் மௌனம்.
“இலக்கியா…” அவன் அழைக்க, “…” அவளிடம் மௌனம்.
அவன் அவளை பிரித்து எடுக்க, அவள் கண்களில் கண்ணீர்.
“இலக்கியா?” அவன் நொடிப்பொழுதில் குழைந்து போனான்.
“அத்தான், உங்களுக்கு ஒன்னும் ஆகாது. நீங்களே நெகட்டிவா பேசினா எப்படி?” அவள் குரல் விம்மியது.
“சரி, எனக்கு எதுவும் ஆகாது.” அவன் குரலில் உறுதி இருக்க, அவன் கைகள் அவளை ஆதரவாக தட்டி கொடுக்க, அவளுக்கும் அவன் ஆறுதல் தேவைப்படுவது போல அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவன் கைகள் அவள் வெற்றிடையை உரிமையோடு அணைத்து கொண்டது. அவன் தீண்டலில் அவளுள் மெல்லிய மாற்றம். விலகச் சொல்லி அவள் அறிவு சொல்லவில்லை. மனமோ, அவன் தீண்டலை ரசிக்க ஆரம்பித்தது.
அவன் அறிவு விழித்து கொண்டு தான் இருந்தது. ‘நான் என்ன செய்கிறேன்?’
‘தன் மேல் சாய்ந்திருக்கும், தன்னையே நம்பி இருக்கும், தனக்காகவே வாழ்வை அர்பணித்திற்கும் என் மனைவியின் மீது என் நேசத்தை காட்டுவதில் என்ன தவறு?’ அவன் மனம் வாதிட்டு கொண்டது.
அவள் கண்ணீர் அவன் தோள்களை தொட்டது, அவள் தேகம் அவன் அரவணைப்பில் ஆறுதல் கொண்டது. அவள் மனம், அவன் மனதை தொட்டது.
அவன் மனதில், துர்கா? அவள் நினைவில் இருக்கிறாளா? இல்லை நினைவலைகள் ஆகி போனாளா? அவர்கள் அறியவில்லை.
இருவரும் தன்னை மறந்து ஒருவர் தோளில் மற்றோருவர் ஆறுதலாய்! அரவணைப்பாய் !நொடிகள் நிமிடங்களாக நீடித்து கொண்டிருந்தது.
அப்பொழுது அலைபேசி ஒலிக்க, உணர்வு வந்தவளாய் பதறிக்கொண்டு இலக்கியா சட்டென்று விலகினாள். அவன் அலைபேசியில் பெயரை பார்த்ததும் அதை ஒதுக்கி வைத்தான்.
“சாரி அத்தான்… சாரி… நான் கலவரப்பட்டு… உங்களையும்…” அவள் அவனிடம் நெருங்கியதை எண்ணி வெட்கி, விலகி கொள்ள, அவன் முகத்தில் மர்ம புன்னகை.
‘அத்தான், ஏன் இப்படி சிரிக்குறாங்க?’ அவள் புரியாமல் விழிக்க, “கிய்யா… கிய்யா.. மேஜிக்” என்றான் அவன் குறும்பு புன்னகையோடு.
“அத்தான், அந்த மேஜிக் உங்களுக்கு தெரியாது. எனக்கு மட்டும் தான் தெரியும்.” அவள் உதடுகள் இப்பொழுது பதட்டத்தை காட்ட, “கிழிக்கும்… உனக்கு நான் கற்று தரேன் கிய்யா… கிய்யா… மேஜிக்” அவன் சற்றுமுன் உணர்ந்த அவள் ஸ்பரிசத்தை ரசித்தபடி கூற, அவன் கண்கள் இப்பொழுது பல பாவனைகள் பேசியது.
‘அத்தான் சரி இல்லை. ஓடிரு இலக்கியா’ எங்கு என்று அறியாமல் அவன் மனதோடு பேசிக்கொண்டு விலகினாள் இலக்கியா.
“பார்பீ கேக், பார்பீ குக்கீஸ், பிங்க் ஐஸ் க்ரீம் எல்லாம் பண்ணனும்.” அது தான் வாழ்க்கையில் முக்கியம் என்பது போல் ஓடியவள், “ஃபோனில் யாரு?” அவள் நின்று கேட்டாள்.
“துர்கா…” அவன் அவளை கூர்மையாக பார்த்தபடி கூறினான்.
‘நான் சற்றுமுன் என்ன செய்தேன்? துர்கா. அத்தானின் உயிர்.’ அவள் முகம் அவமானத்தில் வெட்கி சிவந்தது.
“இனி நம்ம கிட்ட வேலைக்கு வரலைன்னு சொல்ல தான் கூப்பிட்டிருக்கா போல. இப்ப மெஸேஜ் பண்ணிருக்கா” அவன் சாதராணமாக கூற, அவள் முகத்தில் சிந்தனை ரேகைகைகள்.
சற்று முன் இருந்த துள்ளல், உற்சாகம் அனைத்தும் வடிந்தவளாய் தன் வேலையை தொடர்ந்தாள் இலக்கியா.
மறுநாள் மருத்துவமனையில், அவன் அனுமதிக்கப்பட்டான்.
“எங்களால் முடிந்ததை நாங்க பண்றோம். எதுவும் உறுதி கிடையாது.” என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். கையெழுத்து வாங்க வேண்டிய இடத்தில எல்லாம் அவர்கள் கையெழுத்து வாங்கி விட்டனர்.
மருத்துவமனை அறுவை சிகிச்சைக்கு வெளியே, இலக்கியா, அவன் தந்தை , தாய், இருவரும் இருந்தனர். வீட்டில், பாட்டியும், இலக்கியாவின் தம்பியும் காத்திருந்தனர்.
வெளியே காத்திருந்த நேரத்தில், ‘அத்தானுக்கு எல்லாம் சரியாகுமா?’ என்ற பதைபதைப்பு அவளுள் அதிகரித்து கொண்டே இருந்தது.
சிறகுகள் விரியும்…