kiyaa-21

kiyaa-21
கிய்யா – 21
மாதங்கள் அதன் போக்கில் உருண்டோடின. விஜயபூபதியின் பழைய கம்பீரமான நடை கொஞ்சம்கொஞ்சமாக திரும்பி வர ஆரம்பித்தது.
அவனின் ஒவ்வொரு நடைக்கும், அவன் பாதங்களோடு அவள் விழிகளும் நடந்தது. அவன் தடுமாறினால், “அத்தான்…” என்று அவள் அவனை தாங்கினாள். அவன் பாத நடைக்கு ஏற்ப அவள் பாதமும் நடந்தது.
இருவரின் பாதங்களும் அருகாமையில் என்ன பேசிக்கொண்டனவோ என்று அவர்கள் மனம் கொஞ்சம் பரிதவிக்க ஆரம்பித்தது.
சில சமயங்களில்,வலியில் அவன் சிடுசிடுத்தான். அவன் சிடுசிடுப்பை தாங்கி கொண்டாள். பல சமயங்களில் முடியாமல் சோர்ந்து போனான். அவன் சோர்ந்து அமர்கையில், கண்டிப்பை காட்டினாள். அன்பாய், அரவணைப்பாய் அவனுக்கு துணை நின்றாள்.
அன்று!
அவர்கள் தோட்டத்தில் வழக்கம் போல் விஜயபூபதி நடைக்கான பயிற்சி மேற்கொண்டிருந்தான். அவளும் அவனை தான் கவனித்து கொண்டிருந்தாள். சட்டென்று, அவன் எந்த துணையுமின்றி நடக்க ஆரம்பித்தான். “அத்தான்… அத்தான்…” அவள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.
முதல்முதலாக, தன் குழந்தை முதல் அடி எடுத்து வைக்கும் பொழுது அந்த தாயின் உணர்வு எப்படி இருக்கும் என்று அவள் உணர்ந்தாள்.
அவன் கம்பீர நடையை அவள் காணும் பொழுது, சந்தோஷத்தில் அவள் இதயத்தின் துடிப்பு அவள் செவிகளை எட்டியது.
அவள் தன்னை மறந்தாள். இந்த உலகத்தை மறந்தாள். தான் எடுத்து கொண்ட, கதாபாத்திரத்தை மறந்தாள்.
“அத்தான்…. அத்தான்….” ஓடிச்சென்று அவன் மார்பில் சாய்ந்து கதறினாள். அவனுக்கும் ஆசுவாசம் தேவைப்பட்டது என்னவோ, அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான். சந்தோஷத்தில் அவன் இதயத் துடிப்பும் சற்று அதிகமாகவே இருந்தது. அவளின் சந்தோஷமும் அவன் அரவணைப்பில் இன்னும் அதிகமாகவே இருந்தது.
அவளின் இதய துடிப்பு, அவன் செவிகளுக்கு எட்டியது. அவளின் இதய துடிப்பு அவனுக்கு எட்டியது. “இலக்கியா…” அவனின் அழைப்பு சற்று ஆழமாக இருக்க, “அத்தான்…” அவள் அழைப்பு அவனுக்கு நிகராக இருந்தது.
அவன் நெற்றியில் இதழ் பதித்து அவளுக்கு நன்றி நவிழ, அவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
அவன் கைகள் அவள் இடையை சுற்றி வளைக்க, அவன் கண்களில் நீர்த்துளி. அவன் விழிநீர், அவள் விழிகளை தீண்ட, “அத்தான்…” அவன் முகமெங்கும் இதழ் பதித்து, அவனை சமாதானம் செய்தாள்.
அந்த சமாதானத்தோடு, அவள் பேச எத்தனிக்க, அவள் சாமதானமே போதும் என்று கரைந்தவன் போல் அவள் இதழ் பேச்சுக்கு காதலோடு அவன் முற்றுப்புள்ளி வைக்க… “அத்தான்…” அலறிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள் இலக்கியா.
அதிகாலை கனவு. அவள் நெற்றியில் வியர்வை துளிகள். தன் முந்தானையால் அவள் முகத்தை துடைத்து கொண்டாள் இலக்கியா.
“கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் அதிகாலையில் பறக்க ஆரம்பித்தன.
அவள் சத்தத்தில் எழுந்து அமர்ந்தான் விஜயபூபதி.
“என்ன ஆச்சு இலக்கியா? தண்ணி குடி.” அவன் அருகே இருந்த நீர் குவளையை அவன் நீட்டினான்.
அதை வாங்கி, “மடக்… மடக்…” என்று பருகினாள் அவள்.
“கனவா?” அவன் கேட்க, “…” தண்ணீரோடு வேகமாக தலையை ஆட்டினாள் இலக்கியா.
“நீங்க… நீங்க தனியாகவே நடக்க ஆரம்பிச்சிடீங்க” அவள் குரலில் அப்பொழுது சந்தோசம் மண்டி கிடந்தது.
“அப்புறம்…” அவன் கதை கேட்க, சுவரசியமானான்.
அதன் பின் அவள் கண்ட கனவில் அவள் முகம் குங்குமாய் சிவந்தது. ரகசியமாய் ஒரு மர்ம புன்னகை அவன் கனவில் தீண்டிய இடத்தை அவள் கைகள் இப்பொழுது தீண்ட, அவன் இதழ்கள் புன்னகையில் மடிந்தது.
அவன் புருவங்கள் ஏறி இறங்கியது.
“எதுவும் சுவாரசியமான கனவா?” அவன் குரலில் கேலி இருக்க, ‘ஐயோ…’ அவள் உள்ளம் பதறியது.
‘நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். நான் விலக வேண்டும். இங்கிருந்து விலக வேண்டும்.’ அவள் முகத்தில் இப்பொழுது பயம் தொற்றி கொள்ள, அவள் மிரண்டு விழித்தாள்.
“இலக்கியா…” அவன் குரலில் இப்பொழுது பாசம் மட்டுமே இருக்க, “எதுவும் பிரச்சனையா இலக்கியா?” அவன் கேட்க, “அதெல்லாம் இல்லை அத்தான். எல்லாம் சீக்கிரம் சாரியாகணும்னு ஒரு பயம். அவ்வளவு தான். வேற ஒண்ணுமில்லை.” அவள் சமாளிக்க, அவன் பார்வையில் கூர்மை கூடியது.
சில நாட்களில் அவள் கண்ட கனவு நனவானது.
தோட்டத்தில் அவன் பயிற்சி மேற்கொள்ளும் பொழுது, அவன் எந்த துணையுமின்றி நடக்க ஆரம்பித்தான்.
அவளுள் சந்தோசம். கனவு நனவாகும் பொழுது மட்டற்ற மகிழ்ச்சி.
கனவை போலவே நனவிலும், தன்னை மறந்து உலகத்தை மறந்து, சட்டென்று, அவன் கால்களை தொட்டு, “எல்லாம் சரியாகிருச்சு அத்தான்…” அவள் கூற, “அதுக்காக புருஷன் காலில் விழுந்து கும்பிடறியா?” அவன் அவளை தோள் பிடித்து தூக்கினான்.
அவன் சுவாசம், ‘எல்லாம் சரியாகிவிட்டது’ என்று அவனுக்கு ஆறுதல் கூறியது. அவள் சுவாசமும், அவன் மனநிம்மதியை கூறியது.
“எல்லாம் சரியாகிருச்சில்லை?” அவள் கண்ணீரோடு கேட்க, அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.
“ஐயோ, சரியாகிருச்சேன்னு அழறியா?” அவன் கேலியில் இறங்க, “அழலை ஆனந்த கண்ணீர்” அவள் தோள்களை குலுக்கி சிரித்தாள்.
“உன்னால் தான் இலக்கியா. இவ்வளவு சீக்கிரமா என்னக்கு குணமாச்சு.” அவன் அவளை இரு கைகளால் பிடித்து முன்னே நிறுத்தி கூற, அவனின் தீண்டலில் அவள் கண்ட கனவு நினைவுக்கு வர, அவள் உடல் நடுங்கியது.
“நான் என்ன அத்தான் செய்தேன்.” அவள் சுயஉணர்வு பெற்றவள் போல் மேலே எதுவும் நடந்துவிட கூடாது என்று பதட்டத்தோடு விலகி நின்று கொண்டாள்.
“என்ன ஆச்சு?” அவன் கைகள், அவள் கைகளை இறுக பற்றியது. அவன் கைகள் அவளை அவன் அருகே மிக அருகே நிறுத்தி கொண்டது.
அப்பொழுது விஜயபூபதியை பார்க்க துர்கா வர, அவர்கள் கோலத்தை அவள் பார்க்க கூடாது என்று எண்ணினாலும், அவள் பார்வை அவர்கள் கோலத்திலே கூர்மையாக நின்றது.
கைகள் பிடித்திருந்தாலும், அவர்கள் நெருக்கம்.
துர்காவை கண்டதும், “வாங்க… வாங்க…” என்று அழைப்பை விடுத்து கொண்டு இலக்கியா விலகி செல்ல எத்தனிக்க, அவன் கைகள் அவளை இன்னும் இறுக பற்றியது.
அவள் கைகளை நட்போடு தீண்டி கொண்டிருந்த அவன் கைகள், அவள் இடையை சுற்றி பிடித்தது உரிமையாய்! தன் மனைவி என்பது போல்!
அவனின் வெற்றிடை தீண்டலில், இலக்கியா தடுமாறினாள். ‘இது நம்ம லிஸ்டில் இல்லையே’ என்று அவள் மனம் அன்று கண்ட கனவையும் இன்றைய நிகழ்வையும் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்து அச்சம் கொண்டது.
துர்காவின் முன் அவன் செய்கையில், கூனி குறுகி போனாள். அவள் உடல்நிலையை மனதில் கொண்டு, அவனை விலக்க முடியாமல் துடித்தாள் இலக்கியா.
“வா… துர்கா” சிரித்த முகமாக அழைத்தான் விஜயபூபதி.
“ரொம்ப நாள் ஆச்சு உன்னை பார்த்து. எப்படி இருக்க?” அவன் மெல்லிய புன்னகையோடு கேட்டான்.
கம்பீரமான புன்னகை. மெலிதாக, தன் முன்னாள் காதலனின் கம்பீர சிரிப்பில் மயங்க எத்தனித்த தன் மனதை அடக்கி சமநிலைக்கு கொண்டு வந்தாள் துர்கா.
“கொஞ்சம் பிஸி. கொரோனா பேஷண்ட்ஸ்க்கு உதவி செய்யுற குழுவில் இருக்கேன். அது தான் இவ்வளவு நாள் குவாரன்டைன்ல இருந்தேன். உங்களுக்கு ஆப்பரேஷன் முடிஞ்சதுன்னு கேள்வி பட்டேன். அது தான் உங்களை பார்த்திட்டு போலாமுன்னு வந்தேன்.” துர்கா தன் பார்வையை இலக்கியாவிடம் திருப்பினாள்.
அவன் கைவளைவில் இலக்கியாவின் தர்மசங்கடமான பார்வையில் துர்காவின் புருவம் வளைந்தது.
அப்பொழுது குருவிகள், “கிய்யா… கிய்யா…” என்று சத்தம் எழுப்பி கொண்டு பறக்க, தன் அசௌகரியத்தை மீறியும் அவள் கண்கள் விஜயபூபதியை நொடிபொழுது காதலோடு தழுவி மீண்டதை நொடிக்கும் குறைவான பொழுதில் துர்கா கண்டுகொண்டாள்.
துர்காவின் மனம் அதற்கும் குறைவான நேரத்தில் சுருங்கி, சட்டென்று மீண்டது.
‘என்னோட வாழ்க்கை ஒரு காதல் தோல்வியில் முடியாது. இந்த பூபதி என் வாழ்வின் முடிவல்ல. ஓடி ஒதுங்க கூடாதுன்னு, நிமிர்வா நிற்க தான் இங்க வந்திருக்கோம்’ தன்னை தானே தட்டி கொடுத்து, “உங்க ஹஸ்பண்டுக்கு வாங்கிட்டு வந்தேன்.” கையிலிருந்த பொருள்களை இலக்கியாவிடம் நீட்டினாள் துர்கா.
“இலக்கியா, இன்னைக்கு நீ செய்த நுங்கு ஜெல்லி கேக் துர்காவுக்கு பிடிக்குமே. கொடு.” அவன் கூற, இலக்கியா தலை அசைத்து உள்ளே சென்றாள்.
அவர்களுக்கு இடையே மௌனம்.
“உடம்பு இப்ப பரவாலையா?” துர்கா மௌனத்தை கலைத்தாள்.
“ம்… எல்லாம் என் மனைவியின் கவனிப்பில் தான்.” அவன் பார்வை இலக்கியாவை பெருமிதத்தோடு தொட்டு மீள, துர்கா இப்பொழுது, “ம்…” கொட்டி கொண்டாள்.
“அம்மா, அப்பா எப்படி இருக்காங்க?” அவன் இயல்பாக பேசினான்.
“ம்… நல்லாருக்காங்க.” அவள் குறைவாக பேசினாள்.
“கல்யாணம் பண்ணிக்கலாமே துர்கா” அவளை கூர்மையாக பார்த்தபடி கேட்டான் விஜயபூபதி.
அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் பறந்து கொண்டிருந்த பறவைகளை பார்த்தாள். சில நொடிகள் அங்கு அமைதி.
“கூண்டுக்குள் அடைந்து கொள்பவள் அல்ல பெண். இந்த பறைவைகளுக்கு இருக்கிற சுதந்திரம் ஒரு பொண்ணுக்கு கிடையாதா என்ன?” அவள் புருவத்தை உயர்த்தினாள்.
“நாங்க ஏன் கல்யாணம், குழந்தை அப்படின்னு எங்க வாழ்க்கையை சுருக்கிக்கணும்? எப்பவும் சமைத்து, பாத்திரம் கழுவி எங்க வாழ்க்கை இப்படியே போகணுமா என்ன?” துர்கா இப்பொழுது கேள்வியாக நிறுத்த, அவன் கண்கள் சுருங்கியது.
“எனக்கான வாழ்க்கை வேறன்னு எனக்கு தோணுது. நான் சந்தோஷமா இருக்கேன்.” அவள் கூற, எதுவும் பேசி அவள் மனதை கஷடப்படுத்திவிட கூடாது என்று கவனம் கொண்டு மௌனித்து கொண்டான் விஜயபூபதி.
சில நிமிடங்கள் இலக்கியாவிடம் பேசிவிட்டு துர்கா கிளம்பிவிட்டாள்.
இலக்கியாவின் கவனிப்பில் விஜயபூபதியின் உடலில் நல்ல முன்னேற்றம். அவர்களுக்கு இடையிலான அன்பிலும் தான். உடல் முன்னேற்றம் வெளிப்படையாக தெரிந்தது. அவர்கள் அன்பின் முன்னேற்றம் யார் கண்களுக்கும் புலப்படவில்லை.
சில மாதங்களில்.
“இலக்கியா, நாம இன்னைக்கு ஹாஸ்பிடல் போகணும். இன்னைக்கு தான் லாஸ்ட் செக்கப். இனி போக வேண்டியது இருக்காது. கார் எடுக்கலாமா? பைக் ஓட்டலாமா இப்படி எல்லாம் கேட்கணும். கிளம்பு. சீக்கிரம் கிளம்பு.” அவன் அவசரப்படுத்தினான்.
அவன் வேக நடையை ரசித்தபடி, “அத்தான், நான் வரலை” அவள் மறுப்பு கூற, அவன் அவளை யோசனையாக பார்த்தான்.
“எனக்கு இன்னைக்கு வேலை இருக்கு அத்தான். ஒரு ஆர்டர் எடுக்க போகணும். சில விஷயங்கள் நேரில் பேசணும். ப்ளீஸ் அத்தான், என் உதவி உங்களுக்கு இனி தேவை இருக்காது” அவள் கூற, அவன் கண்கள் இடுங்கியது.
வீட்டுவாசல் வரை சென்றவன், மீண்டும் அவளருகில் வந்து, “ஒன்னும் பிரச்சனை இல்லையே?” அவன் அக்கறையாக கேட்டான்.
“ஒன்னும் இல்லை அத்தான். இருந்தாலும், கிய்யா… கிய்யா… மேஜிக் சரி பண்ணிடாது?” அவள் கண்சிமிட்ட, அந்த கண்சிமிட்டலில் அவன் தலை அசைத்து கிளம்பினான்.
“ரொம்ப யோசிக்காதீங்க. செக்கப் கிளம்புங்க” இலக்கியா கூற, ‘வந்து இவளை கவனித்து கொள்ளலாம்.’ அவன் மருத்துவமனைக்கு கிளம்பினான்.
மருத்துவமனைக்கு தன் தாய் தந்தையோடு சென்றான் விஜயபூபதி.
“இலக்கியாவுக்கு உன் மேல அக்கறையே இல்லை. இன்னைக்கு அவ கூட வரணுமா வேண்டாமா?” நிர்மலாதேவி குற்றப்பத்திரிக்கை படித்து கொண்டே வந்தார்.
விஜயபூபதியின் எண்ணம் முழுக்க எப்பொழுது மருத்துவரை சிந்திப்போம் என்பதிலே இருந்தது. சில நிமிடங்களில், அவனை பரிசோதித்தார் மருத்துவர்.
அவன் உடல்நிலை பரிபூரணமாக குணமடைந்துவிட்டது என்று மருத்துவர் கூற, அவன் முகத்தில் அலாதி மகிழ்ச்சி. முன்பு போல் அவன் அனைத்து செயல்களும் செய்யலாம் என்று மருத்துவர் கூற, அவன் அதே இடத்தில் துள்ளி குதிக்காத குறை தான்.
அனைவர் முகத்திலும் மலர்ச்சி. அவன் பாதங்கள் நேரடியாக அவர்கள் தங்கியிருந்த தோட்டத்து வீட்டை நோக்கி சென்றது.
“இலக்கியா… இலக்கியா…” அவன் அழைக்க அங்கு மௌனம். அவன் முகத்தில் குறும்பு புன்னகை எட்டி பார்த்தது.
“கிய்யா… கிய்யா…” அவன் அலைபேசியில் சத்தம் எழ செய்ய, அவன் கண்கள் ஆவலோடு அன்பில் விரிய போகும் அவள் விழிகளை ஆர்வமாக எதிர்பார்த்தன.
அவள் காலடி ஓசைக்காக அவன் செவிகள் காத்திருக்க அங்கு மீண்டும் நிசப்தம் மட்டுமே.
அவன் இதயத்துடிப்பு இப்பொழுது அதிகரிக்க, “கிய்யா… கிய்யா…” என்ற சத்தம் மட்டுமே எழும்ப அவன் வீட்டுக்குள் சென்றான். அவன் பலமணி நேரம் தேடுவதற்கெல்லாம் அது பெரிய வீடில்லை.
அங்கு அவள் இல்லை. உண்மை உரைக்க, அவன் ஸ்தம்பித்து நிற்க, அங்கு ஓர் காகிதம்.
‘அத்தான், என் பணி முடிந்துவிட்டது. உங்கள் வாழ்வில் என் அத்தியாயாமும் இத்தோடு முடிகிறது. தன்னை கூண்டிற்குள்ளும் அடைத்து கொள்வாள் பெண்’ என்ற முகமனோடு ஆரம்பித்த கடித்ததை படித்த அவன் நிலைகுலைந்து போனான்.
உறவுகளுக்காக
சிறகுகளை விரித்து பறப்பவளும் பெண்!
கூண்டிற்குள் அடைந்து கொள்பவளும் பெண்!
சிறகுகளை வெட்டி கொள்பவளும் பெண்!
சிறகுகள் விரியும்…